Friday, February 6, 2015

இவனும் ‘இசை’யும்..!!

Posted by பால கணேஷ் Friday, February 06, 2015
ர்ப்பாட்டமில்லாத மென்மையான இசை என்றால் இவனுக்கு ரொம்பவே பிடிக்கும். முதன் முதலில் இவன் இசை ரசனையில் ஈடுபட்டது ஏழு, எட்டு வயதில்தான். இவன் அத்தை வீட்டில் அப்போது ஒரு ரெக்கார்ட் பிளேயர் இருந்தது. அதன் சைடில் இருக்கும் கைப்பிடியைச் சுற்றி விட்டால் ரெகார்டு சுழன்று அது பாடும். அதை ஒரு நிதானமான வேகத்தில் சுற்றுகிற அளவுக்குத்தான் கைப்பிடியை லயம் பிசகாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் ‘எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே’ என்று பாடும்.

இவனுக்கு லயமாவது, புண்ணாக்காவது... வேகமாகச் சுற்றி விடுவான். ‘எணி எணி பாக மம் இபம் கொடாதே’ என்று விசித்திரமான கீச்சுக் குரலில் அது பாடுவதை ரசித்துச் சிரிப்பான். அப்படியே லீவரைச் சுற்றாமல் விட்டு விட்டால்... போதையில் தள்ளாடுகிறவனின் குரலில் ‘எ...ண்...ணி... எ...ண்...ணி... பா...ர்...க்...க...’ என்று இழுத்துப் பாடிக் கொண்டே சென்று நின்று விடும். அதையும் ரசித்து சிரித்துக் கொண்டிருப்பான் இவன். அத்தை வீட்டுக்காரர்தான் காண்டாகி இவன் புடனியில் தட்டி, ‘‘இப்டில்லாம் இ(ம்)சை பண்ணிணா அது ரிப்பேராயிடும். அதுவுமில்லாம அதுல இருக்கற ஊசி ரெக்கார்டுல ஸ்க்ராட்ச் பண்ணிரும். ஒழுங்கா ஹேண்டில் பண்றா’ என்பார்.

“என்னது...? இதுல ஊசி இருக்கா..? எங்கே?” என்று செந்தில், கவுண்டமணியிடம் கேட்கிற மாதிரி இவன் கேட்பதற்கு பொறுமையாக விடை சொன்வார். “இதோ பாரு... இதான் ஊசி. ரெக்கார்டு சுத்தும்போது தட்டையா சுத்தாம கொஞ்சம் மேடு பள்ளமா சுத்துது பாத்தியா...? அதுல ஊசி உரசறப்ப அதுலருந்து சத்தம் வந்துதான் நமக்கு மியூசிக்கா கேக்குது...”. இவனுக்கு ஒரு எழவும் புரியாட்டியும், எல்லாம் புரிஞ்சுட்ட மாதிரி கெத்தா மண்டையாட்டி வெப்பான். (அப்பவே பந்தா!)

அதன்பின் இவன் அப்பா தவறிவிட, கன்னாபின்னாவென வாழ்க்கை அலைக்கழித்ததில் சில ஆண்டுகள் நோ இசை. பின்னர் சற்று ஸ்டெடியான காலகட்டத்தில் சித்தப்பாவின் வீட்டில் ஒரு ரெக்கார்ட் ப்ளேயரைப் பார்த்தான். இப்போது விஞ்ஞானம் முன்னேறி, மின்சாரத்தால் அதுவே ஸ்ருதி பிசகாமல் சுற்றுகிற அளவிற்கு முன்னேறியிருந்தது. கூடவே ஸ்பீக்கரும் அட்வான்ஸ்டாகியிருந்தது. பாட்டைக் கேட்டல் இனிய அனுபவமாகியிருந்தது இப்போது. 

ஆனால் என்ன கொடுமை...! சித்தப்பா வைத்திருந்தது வெகுசில தமிழ்  இசைத்தட்டுகளே.. பெரும்பாலும் இந்திப்பட இசைத் தட்டுகளாகவே வைத்திருந்தார். ‘வீ டோண்ட் ஹியர் தமிழ் மியூசிக்... ஒன்லி இந்தி மியூசிக்’ என்று கா.நே. செல்லப்பா நாகேஷின் லேட்டஸ்ட் வர்ஷன் போலத் தோற்றமளித்தார் சித்தப்பா இவனுக்கு. கேட்டுப் பார்த்ததில் ஒரு வரி புரியவில்லை. ஆனாலும் விடாப்பிடியாய் ஒவ்வொன்றையும் பலமுறை கேட்டதில் ஆர்.டி.பர்மன் ரொம்பவே மனசுக்குப் பிடித்தவராகிப் போனார். 

அதுவும் ஓராண்டுதான்... மதுரையிலிருந்து கோவை, விக்கிரவாண்டி என்று அண்ணனின் உத்யோக நிமித்தம் ஊர்களும் பள்ளிகளும் மாற, ரெக்கார்ட் ப்ளேயர் பிரியாவிடை பெற்றது. இவன் ப்ளஸ் டூ படித்த சமயம் அண்ணா அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த டேப்ரெகார்டர் ஒன்றை வாங்கி வந்தார். நேஷனல் பானாஸோனிக் கம்பெனியின் ஒரிஜினல் மோனோ டேப் ரெகார்டர் அது. ஒற்றை ஸ்பீக்கரில் இசையை இரைக்கும். பின்னாளில் வரப்போகிற விஞ்ஞான விந்தைகளை அந்நாளில் ஊகிக்கிற அறிவை இவன் படைத்திருக்கவில்லை என்பதால் (‘இப்ப மட்டும் படைச்சிருக்கானா’ன்ற உங்க மைண்ட் வாய்ஸ் இங்க கேக்குது... அடங்குங்க... ஹி... ஹி...) அதை மிகவே ஆச்சரியித்து ரசித்தான் இவன் அப்போதிலிருந்து கேஸட்டுகளை வாங்கிக் குவிக்கிற காலம் ஆரம்பமானது. 

அடுத்த சில ஆண்டுகளில் டபுள் ஸ்பீக்கர்கள் வைத்து ஸ்டீரியோ இசை கேட்கிற வசதியுடன் டேப் ரிக்கார்டர்கள் வர ஆரம்பிக்க... மோனோ சவுண்டில் பக்கத்தில் வந்து நின்றிருந்த இளையராஜா ஸ்டீரியோ சவுண்டில் மனசுக்குள்ளேயே சேர் போட்டு உட்கார்ந்து விட்டார். என்னா க்ளாரிட்டி... என்னா சவுண்டு...! அதுல பாதி சத்தம் வைச்சாலே அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சண்டைக்கு வர்ற அளவுக்கு சும்மா அதிர்ந்துச்சுல்ல...

அதை ரசித்துக் கொண்டிருந்த அடுத்த இரண்டாண்டுகளில் அண்ணாவை (பேரறிஞர் அண்ணா இல்லீங்க... இவனோட அண்ணா) அவர் அலுவலகம் சிங்கப்பூருக்கு ஒரு பயிற்சிக்காக அனுப்பி வைத்தது. அவர் வரும்போது ஸோனி வாக்மேன்கள் இரண்டு வாங்கி வந்திருந்தார். ஆஹா... அதில் கேஸட்டைப் போட்டு, இயர்போனினால் ரசித்தபோது... சொர்க்கம்! அத்தனை துல்லிய இசையை அதற்கு முன் இவன் வாழ்நாளில் கேட்டதே இல்லை. வெளியுலகச் சத்தம் எதுவும் இடறாமல். இவனும் வெளியுலகத்தை சத்தத்தால் இடறாமல் நிம்மதியாகக்  கேட்க முடிந்ததில் அத்தனை ஆனந்தம்.

பிற்காலத்தில் இவன் தினமலரில் வேலைக்குச் சேர்ந்து அவர்கள் ஊர் ஊராக இவனை மாற்றல் செய்து பந்தாடிய சமயங்களில் எல்லாம் வாக்மேன் தான் இவனுக்கு உற்ற தோழன். மதுரையில் எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் கிடைக்கும் இடமொன்றில் தேடிப்பிடித்து குட்டி ஸ்பீக்கர்கள் ரெண்டு வாங்கியிருந்தான் இவன். அதை வாக்மேனுடன் இணைத்து இயர்போனுக்கு விடுதலை தந்து மெல்லிய சத்தத்தில் (அந்த ஸ்பீக்கரோட அவுட்புட்டே அவ்ளவ்தான்) இசை கேட்பது இவனுக்கும் அறை நண்பர்களுக்கும் வாடிக்கையாகிப் போனது.

அந்த ரிகார்ட் ப்ளேயர்களும், டேப் ரெகார்டர்களும், வாக்மேனும் இப்போது எங்கே போயின என்றெண்ணி பல சமயம் வியப்பதுண்டு இவன். வெறிகொண்டு வாங்கிக் குவித்த கேஸட்டுகள் எல்லாம் ஒரு ஓரமாக ஷெல்ப் நிறையக் குவிந்து கிடப்பதையும், தூசி படிந்து டேப் ரிகார்டர் தூங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கையில் பலசமயம் பரிதாப உணர்வு எழும் இவன் மனதில். ஆனாலும் என்ன செய்வது...? பணத்தைத் துரத்த வேண்டியிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், கம்ப்யூட்டரும் ஸ்பீக்கர்களும் இணைந்து எம்பி3 இசைதர வீட்டிலும், வெளியில் செல்கிற தருணங்களில் பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டு அதைத் தவிர மற்ற வேலைகளுக்கெல்லாம் இன்று பயன்படுத்தப்படுகிற செல்போனும் இயர்போனும் இசையை மட்டற்ற அளவில் வழங்குகிற சூழ்நிலைக்கு ஆட்பட்டுத்தானே இவனும் வாழ வேண்டி இருக்கிறது.

இவன் ரசித்த வயலின் இசை

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி என்கிற ஊர் உங்களுக்கு பரிச்சயமாகி இருக்கும். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும்போதோ, சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் போகிற போதோ பெரும்பாலும் பஸ்கள் பாடாவதி ஹோட்டல்களின் முன்பாக நிறுத்தப்படுவது விக்கிரவாண்டிக்கருகில் உள்ள மோட்டல்களில்தான். இன்றைக்கு ஊரின் முகமே மாறிவிட்டிருக்கிறது. இவன் வாழ்ந்த காலத்தில் ஊருக்கு சற்றுத் தள்ளி நிறைய வயல்வெளிகள் உண்டு. வயல் வரப்பில் உட்கார்ந்து காற்றில் நெல் கதிர்கள் தலையாட்டுதையும், காற்று அதை ஊடறுக்கிற சமயங்களில் எழும் மெல்லிய இசையையும் ரசிப்பது இவனுக்கு மிகப் பிடித்த ஒரு விஷயம். அந்த வயலின் இசைமேல் இவனுக்கு அப்படியொரு காதல். இந்நாட்களில்தான் வயலின் இசையை இவனால் கேட்கவே முடிவதில்லை. அந்த வயலின் இசையைப் பற்றி நிறையச் சொல்லலாம். ஆனா அங்க ஒருத்தங்க பல்லை நறநறன்னு கடிக்கறது இங்க இவனுக்குக் கேக்கறதால உடனே இவன் அப்பீட்டு...!

18 comments:

 1. விக்கிரவாண்டி மோட்டல் "நறநற" தான்...

  எத்தனை மாற்றங்கள்... ஆனால் பாடல் ரசனை என்றும் மாறவில்லை... மனசுக்குள்ளேயே சேர் போட்டு உட்கார்ந்து விட்டீர்கள் வாத்தியாரே...

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா.
  .இசையை எப்படியான கருவிகள் மூலம் கேட்டார்கள் என்பதை அழகாக படங்கள் வாயிலாக விளக்கியுள்ளீர்கள் அத்தோடு சொல்லிச்சென்ற விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி.த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. விக்கிரவாண்டியில நெல்வயல் இருந்துச்சா ? இருந்துச்சுனு ஒரு போர்டு எழுதிவச்சாக்கூட யாரும் நம்பமாட்டாங்கனு நினைக்கிறேன் ப்ரோ . இப்போ எல்லாம் ப்ளாட் போட்டுட்டானுங்க . விவசாயமே வேண்டாம்னு நிறையபேரு வித்துட்டு போய்ட்டதா கேள்விபட்டேன் . இந்தமாதிரி அனுபவத்த ரசிக்கறதுக்காகவாது அந்தக்காலத்துல பிறந்துருக்கனும்னு தோனுது . கிராம்போன் , எம்ஜிஆர் , நெல்வயலில் கதிரைத்திருடும் சிட்டுக்குருவி , புகை,ஒலிமாசுபாடற்ற சூழ்நிலை , காலில் 100 கி.மி வேகத்தில் சக்கரத்தைக்கட்டிக்கொண்டு ஓடாத மக்கள் , ம்க்கும் இதெல்லாம் நினச்சிகிட்டே கற்பனை பண்ணிக்கவேண்டியதுதான் போல .

  நன்றி அண்ணா

  ReplyDelete
 4. வார்த்தைக்கு, வார்த்தை இவண், இவண் அப்டினு எழுதினது நம்ம ..... வா த் தி யா ரை....... த்தானே... ஹி ஹி ஹி..

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா அந்த விக்கிரவாண்டி அனுபவத்தை எல்லாரும் பெறனும்... அது ஒரு தெய்வீக அனுபவம்... :-)

  இசைத்தட்டு ரெகார்ட் ப்ளேயர கைகளாதான் சுற்றிவிடனுமா... அந்தோ பரிதாபம் நான் அதை பார்த்தது கூட கிடையாது.. சில சினிமா தவிர

  ReplyDelete
 6. Very nice post. Even today I preserve the tape recorder which I purchased after joining the Bank. The same one which is in the picture - Panasonic mono sound tape recorder.
  Yeah I also enjoyed the Vikravandi Bus stand while going to Thanjavour at midnight. Athu oru Sugamana Anubavam. Varthaikalil Sollida (adakida)
  Mudiyathu.

  ReplyDelete
 7. அருமை.
  //சூழ்நிலைக்கு ஆட்பட்டுத்தானே இவனும் வாழ வேண்டி இருக்கிறது.//

  சில விஷயங்களை தவிர்க்க முடியாது.
  (necessary evil என்று என் அப்பா சொல்லுவர்)

  ReplyDelete
 8. இசையோடு உள்ள பந்தத்தை சொல்லிச் சென்ற விதம் அழகாக இருந்தது. ரிக்கார்ட் ப்ளேயரை சிறுவயதில் உறவினரில் வீட்டில் பார்த்திருக்கிறேன்....:)

  நானும் இரண்டு நாட்களாகவே இதைப் பற்றி எழுத நினைத்திருந்தேன்....:)

  ReplyDelete
 9. பால கணேஷ். உங்கள் ஆதங்கங்களை நானும் பகிர்கிறேன் எனக்கு ஒரு குணம். இசையாக வழங்கப் படுவதை ரசித்ததுபோல் நண்பர்கள் உறவினர்கள் வேண்டியவர்கள் என்று ஏறத்தாழப் பலருடைய குரல்களையும் பதிவு செய்து பிறிதொரு நாளில் கேட்டு ரசிப்பது வழக்கம் ஆனால்விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. நான் பதி வு செய்திருந்த குரல்களைப் போட்டுக் கேட்க முடிவதில்லை. டேப் ரெகார்ட் ப்ளாயெர் பழுது பட்டு விட்டது. சரி பார்க்க முடியவில்லை. அவுட் டேட்டெட் ஆகிவிட்டது என்கிறார்கள், என் ஒரு பதிவிலும் பகிர்ந்திருக்கிறேன். நீங்கள் வாசித்து இருக்க மாட்டீர்கள். நீங்கள் என் வலைப் பக்கமே வருவதில்லை. எனக்குக் கொடுத்திருந்த உறுதி மொழியும் மறந்து விட்டீர்கள். நினைவுக்கு வருகிறதா.?

  ReplyDelete
 10. அருமையான நினைவுப் பெட்டகம்! நீங்கள் சொல்லியிருக்கும் இசைத் தட்டு ரெக்கார்டர்கள் ம்ம்ம் எல்லாம் பார்த்து...பெருமூச்சு விட்டதோடு சரி...அது எல்லாமே பெரியவர்கள் மட்டுமே கை வைக்க முடியும்...சிறுவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இசை மட்டும் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டது. நீங்களும்.....

  ReplyDelete
 11. How can we ever show our gratitude to the inventors of these gadgets and improve the experience of enjoying the soulful music of - MSV, KVM, TMS, PS, SPB, Janki, PBS, AMRaja, Jikki, Chithra, Yesudas, LR Eswari and occasionally Sirkazhi, Jeyaraman, Chandrababu, Ghantasala! And of course, Hindi greats SDBurman, RD Burman, Lakshmikanth Pyarelal, Sankar Jaikishan, Kalyanji Anandji, Mohd. Rafi, Lata, Asha, Suman Kalyanpur, Kishore and others! What a wonderful time we had! Thanks for taking me down the memory lane!

  ReplyDelete
 12. கையில் சுழற்றும் எல் பி ரெகார்ட் ப்ளேயரில் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா? பொறாமையாக இருக்கிறது.

  ReplyDelete
 13. எங்க வீட்டுலேயும் ரெகார்ட் ப்ளேயர் இருந்தது! இப்போ சில ரெகார்ட்கள் மட்டும் இருக்குது! ஒரு காலத்தில் கேசட்களாக வாங்கி குவித்தவன் நான் இப்போது பாடல்களே சரியாக கேட்பதில்லை என்பது வேறு விஷயம்! பழைய நினைவலைகளை கிளப்பிய பதிவு! விக்கிரவாண்டி இரைச்சல் இசை தூங்குபவர்களை எழுப்பத்தான் என்பது என் கணிப்பு!

  ReplyDelete
 14. பாடல்கேட்கும் வழிமுறைகள் இன்று மாறிவிட்டாளும் இன்னும் ரெக்கோட்பிளேயர் வரம் இரு தனிச்சுகம்.மீண்டும் பழைய நினைவை ஆசைபோட வைக்கின்ற பகிர்வு அண்ணாச்சி.

  ReplyDelete
 15. உங்கள் சுயபுராணம் (லேபிளில் உள்ளதுதான்) என்னை பழைய நினைவுகளுக்கு அப்படியே இழுத்துச் சென்றது. நீங்கள் சொல்லும் விக்கிரவாண்டி மோட்டல்கள் என்றால், பஸ்ஸில் தூக்கத்தில் இருப்பவர்களை அலறி அடித்துக் கொண்டு எழச் செய்யும் காதை அடைக்கும் பாட்டுக்கள்தான் எனக்கு ஞாபகம் வரும்.
  த.ம.8

  ReplyDelete
 16. இசைப்பயணம் - படித்து ரசித்தேன் வாத்யாரே.....

  Panasonic Tape Recorder-ல் இருந்து ஆரம்பித்து நானும் ரசித்திருக்கிறேன். அதற்கு முன்னால் வால்வு ரேடியோ.....

  ReplyDelete
 17. அந்த கிராமபோன் கருவியை காஞ்சிபுரம் அண்ணாதுரை நினைவு இல்லத்தில் காட்சிப்பொருளாக வைத்திருந்ததை பார்த்தேன்
  நோக்கியா 1108 மாடல் இன்னும் எங்கள் வீட்டில் பயன்படுத்துகிறோம்

  ReplyDelete
 18. வலைப்பக்கம் மின்னல்போல் வந்து செல்லாமல் நின்று செல்லவும்

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube