Sunday, December 2, 2012

நான் ரசித்த நகைச்சுவை காட்சிகள்

Posted by பால கணேஷ் Sunday, December 02, 2012

அன்பார்ந்த நண்பர்களே...

தீபஒளித் திருநாள் முடிந்ததும் 3 தினங்கள் கோவை சுற்றுப்பயணம் சென்று வந்தேன். வந்ததும் புதிய வேலை கிடைத்து அலுவலகம் மாறினேன். புதிய அலுகலகத்தில் இணைய பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிற செய்தி எனக்கு மிகமிகக் கடினமாக இருக்கிறது. இதுநாள் வரை அலுகலகத்திலிருந்து கொண்டுதான் இணையத்தில் உலாவி வந்ததால் கடந்த 15 தினங்களாக இணையத்திற்கு அன்னியன் ஆக்கப்பட்டேன். வீட்டில் இணைய இணைப்பு பெற்று இன்னும் ஓரிரு தினங்களில் அம்பியாகவோ ரெமோவாகவோ வந்து விடுவேன் என்ற (எனக்கு) மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவை வெளியிட்ட தங்கைக்கு என் நன்றி.

                                       
                                                           

தமிழ் சினிமா தோன்றிய நாளிலிருந்து எத்தனையோ காமெடியன்களைப் பார்த்திருப்பீர்கள். ரசித்துச் சிரித்திருப்பீர்கள். நானும் அப்படியே. ஆனால் காமெடியன்களை விட சில கதாநாயகர்கள் நடிக்கும் காட்சிகள் காமெடியன்களை மிஞ்சி விடுவதுண்டு. என்னை மிகவும் ரசித்துச் சிரிக்க வைத்ததுண்டு. அப்படி இரண்டு கதாநாயகர்கள் நடித்த காமெடிக் காட்சிகளைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.


செங்கோட்டை என்று ஒரு படம். ஆக்ஷன் கிங் அர்ஜுன்தான் கதாநாயகன். படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் குரூப் அடியாட்கள் அவர் மனைவி மீனாவையும் அப்பா விஜயகுமாரையும் தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு ஒரு அடியாளுடன் அவரை ப்ளைட்டில் போகச் சொல்வார்கள். விமானம் கிளம்பிய பின் அவர் அடியாளின் கழுத்தில் அடித்து மயக்கமடையச் செய்துவிட்டு விமானத்தின் டாய்லெட்டைத் தாண்டி பின்னால் வந்து டயர் வழியாக வங்கக் கடலில் குதிப்பார். பொதுவாக விமானம் ஆகாயத்தில் ஏறியதுமே மூடிக் கொள்ளும் டயர் அர்ஜுனுக்கு வசதியாக மீனம்பாக்கத்திலிருந்து வங்கக் கடலை அடையும் வரை அரை மணி நேரமாகியும் மேலே ஏறாமலேயே பறந்து கொண்டிருக்கும். ஹா... ஹா... சூப்பர் காமெடி என்கிறீர்களா... இல்லை, இனிதான் காமெடியே...


கடலில் குதித்த அவர் நீந்திக் கரையேறி, தன் வீட்டிற்கு வந்து வில்லன் அடியாட்களை வீழ்த்திவிட்டு பிரதமரைக் கொல்ல நடக்கும் சதியைத் தடுக்க செங்கோட்டைக்கு வருவார். சுதந்திர தின விழா நடந்து கொண்டிருக்க, பிரதமரைக் கொல்ல வரும் கொலையாளியை அவர் தேடுவார். கொலையாளி நாம் யாருமே எதிர்பாராத வண்ணம் மேலே பறந்து கொண்டிருக்கும் பெரிய ஹீலியம் பலூனுக்குள் இருப்பான். அவனுக்கு பலூனுக்குள் சுவாசிக்க ஏதய்யா ஆக்சிஜன், ஹீலியம் வாயுவை சுவாசிக்க முடியாதே என்று யாராவது கேட்டீங்களோ... கொன்டேபுட்டேன்!


அது மட்டுமா... பலூனுக்குள்ளிருந்து ஏதோ பால்கனிக் கதவைத் திறந்து நாம் வேடிக்கை பார்ப்பது மாதிரி ஒரு கதவைத் திறந்து பிரதமரைக் குறி பார்ப்பான். பலூனிலிருக்கும் காற்றெல்லாம் வெளியேறி விட்டால் அது எப்படிப் பறக்கும் என்று பகுத்தறிவுக் கேள்வி யாராவது கேட்டீங்களோ... சரி, அவன்தான் அப்படியென்றால் நம்ம ஆக்ஷன் கிங் சும்மா இருப்பாரா... நிழலில் இருந்தே கொலையாளி பலூனில் இருப்பதைக் கண்டுபிடித்து அப்படியே மல்லாக்கப் படுத்து சுடுவார். பலூன் வெடித்து கொலையாளியும் பரலோகத்துக்கு பார்சல்.


அவ்வளவுதான்... அங்கே இருக்கும், கொலையாளியை ஏவிய மெயின் வில்லன் பிரதமரைச் சுடுவார். துப்பாக்கிக் குண்டு ஸ்லோமோஷனில் வந்து கொண்டிருக்க, அதை குறுக்கிட்டு நம்ம ஆக்ஷன் கிங் தோளில் வாங்கிக் கொள்வார். வில்லனின் அடுத்த குண்டு தேசியக் கொடிக் கம்பத்தை சாய்க்க, அர்ஜுன் இன்னொரு குண்‌டை ஏற்றுக் கொண்டு கொடியைத் தாங்கிப் பிடிப்பார். (தேசபக்தி சார்!) பாதுகாப்புப் படை வீரர்கள் பிரதமரை பாதுகாப்பாக இதற்குள் கூட்டிப் போக மற்ற வீரர்கள் எல்லாம் வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் வில்லனை அழித்து விட்டால் ஆக்ஷன் கிங்குக்கு என்ன மதிப்பு? அத்தனைக்கும் பின்னால் அவரே வில்லனுடன் மோதி சம்ஹாரம் பண்ணுவார்.


அடாடா... அந்தப் படத்தின் கடைசி அரை மணி‌ நேரத்தில் சிரித்துச் சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்து விட்டது.  இதை மிஞ்சுகிற மாதிரி காமெடி வேறு எந்தப் படத்திலும் வராது என்றுதான் எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டார் ஆர்.சுந்தரராஜன்.


நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தூக்கு மேடைக்கே கொண்டு வந்து விடுவார்கள். அதே நேரம் கட் ஷாட்டில் இன்னொரு ரஜினிகாந்த் இவரைக் காப்பாற்ற ஒரு அம்பாஸடர் காரில் வந்து கொண்டிருப்பதைக் காட்டுவார்கள். இங்கே இவர் கழுத்தில் கறுப்புத் துணி கூட மாட்டி விடுவார்கள். அவர் பரபரப்பாக அதிவேகத்தில் காரில் வந்து கொண்டிருப்பார். லீவரை இழுக்க சைகை காட்டும் நேரம்... ஜெயிலின் கருங்கல் சுவரை அம்பாஸிடர் காரினால(?) இடித்து தூளாக்கிக் கொண்டு அதகளமாக வருவார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா...


அது மட்டும் காமெடியில்லை... வந்தவர் நேராக அங்கிருக்கும் அதிகாரிகளிடம் வந்து, ‘‘இவன் கொலை பண்ணலை. ஆதாரம் இந்த கேஸட்ல இருக்கு...’’ என்பார். உடனே அனைவரும் தூக்குப் போடுவதை நிறுத்திவிட்டு கேஸட் கேட்கப் போய் விடுவார்கள்.


அட, ஞானசூனியங்களா... தூக்கு மேடைக்குப் போய்விட்ட ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமானால் ஜனாதிபதியிடமிருந்து போனோ கடிதமோ வந்தால்தானே முடியும், ஆடியோ கேஸட்டை ஒரு ஆதாரமாக எந்த நீதிபதியும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே... என்றெல்லாம் யாரும் கேட்டுவிடக் கூடாது.


 ரஜினி மற்றொரு ரஜினியின் கழுத்தில் இருக்கும் கறுப்புத் துணியை எடுக்க, அவர் கூலாக, ‘‘நீ எப்படியும் வருவேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா, நான் தப்பே பண்ணலையே’’ என்க இருவரும் சிரிப்பதைப் பார்த்துக் கை தட்டி ரசிக்க வேண்டும். அப்படி ரசித்துத் தான் ‘ராஜாதி ராஜா’ படத்தை 200 நாட்கள் ஓட வைத்தனர் நம் ரசிகர்கள். இந்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்க்கும் போதெல்லாம் என்னை ரசித்துச் சிரிக்க வைக்கிறது.


‘போய்யாங்க... இதென்ன ஜுஜுபி! இதைப் போய் பெரிசா காமெடின்னு சொல்ல வந்துட்டே... இதைவிடப் பெரிய காமெடில்லாம் நாங்க பார்த்திருக்கோம்’ என்கிறீர்களா? சொல்லுங்களேன்... நானும் தெரிந்து கொள்கிறேன். பார்த்து ரசிக்கிறேன்.



  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube