Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts

Thursday, February 13, 2014

மீபத்தில் ‘கரைசேரா அலை' அரசனின் த்ங்கை திருமணத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு பஞ்ச(த்தில் அடிபடாத)பாண்டவர்களாக நான், சீனு, ஸ்.பை., கோவை ஆவி மற்றும் ரூபக் (கார் கொணர்ந்த வள்ளல்) ஆகியோர் குடுமியான் மலை, நார்த்தா மலை, சித்தன்ன வாசல், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஸ்தலங்களுக்கு விசிட் அடித்தோம். இவை பற்றிய பய(ண)க்குறிபுகளை சீனு தன் தளத்தில் திடங்கொண்டு விளக்கி வருவதால் இங்கே சில சிப்ஸ்களை மட்டும் நான் தூவுகிறேன்.

* மதியம் 2 மணிக்குப் புறப்படுவதாக நிச்சயித்து, பங்ச்சுவலாக 3 மணிக்கு எங்கள் கார் புறப்பட்டதால், ஸ்.பை.யும், ஆவியும், சீனுவும் மதிய உணவு அதுவரை சாப்பிடாததால் நந்திவரத்துக்குச் சற்று முன்னால் ‘காரைக்குடில்' என்ற உணவகத்தின் முன் காரை நிறுத்தினார் ரூபக். உணவகத்தின் வாசலில் அருவி கொட்டுவதைப் போல் அமைத்து, அருவியின் அருகில் குகையின் வாசல் போல அமைத்திருந்தார்கள். உள்ளே போய்ப் பார்த்தால், மரத்தை வெட்டித் தள்ளியபின் அதன் அடிப்பாகம் இருக்குமில்லையா... அதைப் போல சேர்களை அமைத்திருந்தார்கள். கை கழுவ வாஷ் பேஸினுக்குப் போனால்... ஒரு பீப்பாயைக் கவிழ்த்து வைத்து அதிலிருந்து தண்ணீர் கொட்டுகிற மாதிரி செட்டப். சரிதான்... உடம்பில் இலை தழைகளைச் சுற்றி அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொண்டு ‘ஜிம்பாரே ஜிம்பாரே ஜிம்பக ஜிம்பா' என்றபடி வெயிட்டர் (வெயிட்டி வந்தால் நல்லா இருக்குமேன்னு ஜொள்ளு விட்டது ஒருபக்க மனசு) வருவாரோ என்று எதிர்பார்த்தேன். கையில் கால்குலேடடர் போன்ற வஸ்துவுடன் நாகரீக யுவர்கள்தான் வந்தார்கள்... சரி, நாம் ‘கிவ்'வி வெச்சது அவ்வளவுதான் என்று மனதைத் தேற்றிக் கொண்டு ஆர்டர் பண்ணினோம். உணவு வகைகள் ஏமாற்றாத நல்ல ருசியில் இருந்தது ஒரு பெரும் ஆறுதல்.

* ‘ரூபக்கின் கார் வலிமையானதா, இல்லை நாங்கள் வலிமையானவர்களா தெரிந்து கொள்கிறோம்’ என்று அஃறிணைகள் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன போலிருக்கிறது! திடீரென்று ஒரு பைரவர் ரூபக்கின் காரில் மோதி, ரூபக்கைத் திடுக்கிட வைத்து, ‘உன் கார்தான் பெரிசு, எனக்கு வலிக்குதுப்பா' என்று தன் பாஷையில் கத்தியபடி ஓட்டமெடுத்தார். பிறிதொரு ஏரியாவில் அசால்ட்டாக ஒரு ரிஷபர் குறுக்கிட்டு ரூபக்கின் பொறுமையைச் சோதித்தார். தலைநகரம் தவிர மற்றப் பகுதிகளில் தமிழ்நாடெங்கும் மிருகங்களின் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது போலும்! எதிர்பாராத இந்த நிகழ்வுகளெல்லாம் எங்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது - ரூபக்கைத் தவிர! ஹி... ஹி...!

* பல பத்திரிகைக்காரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ‘இணையத்தில் எழுதுபவர்கள்' என்றால் ஒரு எள்ளல் இருப்பதைக் கவனித்ததுண்டு நான். என்னைப் பொறுத்தவரையில் இணையத்தில் எழுதுகிற ஒருவனாக நான் இருப்பதில் மிகவும் சந்தோஷமும், பெருமையும் அடைகிறேன். ஏனென்றால்... மாமனாகவோ, மச்சானாகவோ இல்லாமல்... இணைய நண்பர்கள் என்பதற்காக எங்களை வரவேற்று, உபசரித்து நட்பைக் கொட்டிய ‘சிவகாசிக்காரன்’ ராம்குமார் போன்றவர்கள் எமக்குக் கிடைப்பது இணையத்தின் வலிமையாலன்றோ...! உண்மையில் சிவகாசிக்காரனை முதன்முறையாகச் சந்திக்கப் போவதால் எனக்குள் ஒரு பயம் இருந்தது. ஏனெனில் நண்பர்கள் அனைவருக்கும் அவரின் எழுத்து பரிச்சயமாகியிருக்க, நான் அவரின் எழுத்துக்களில் ‘நாய்' பற்றி எழுதிய ஒரு பதிவு தவிர வேறெதுவும் படித்ததில்லை. இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்ற தயக்கம் எனக்குள். ‘‘மின்னல் வரிகள் படிச்சதுண்டா நீங்கள்?" என்று நான் ராம்குமாரிடம் கேட்க, ‘‘எதுவுமே படிசசதில்ல..." என்று பதிலிறுத்து என் வயிற்றில் பாலை வார்த்தார் அவர். ‘நண்பேன்டா' என்று அவரை கை குலுக்கி கட்டிக் கொண்டேன். ஹா... ஹா... ஹா...!

* நார்த்தா மலையை நாங்கள் அடைந்தபோது நடுப்பகல் ஒன்றரை மணி இருக்கும். அந்த படைபடைக்கும் வெயிலில் மலையேற விரும்பவில்லை என்று நானும் ஆவியும் காரிலேயே தங்கிவிட முடிவு செய்ய.. மற்ற மூவரும் மேலே போய்ப் பார்த்து வந்தார்கள். வந்ததும் ‘‘ச்சே...! மிஸ் பண்ணிட்டிங்க நீங்க. அருமையான இடம். வந்திருக்கணும்..." என்றெல்லாம் பசங்க (எங்க வ.எரிச்சலை கிளப்பணும்னே) செம பில்டப் கொடுத்தார்கள். ‘ஹி... ஹி... ஹி... இதுமாதிரி நெறைய பில்டப்பப் பாத்திருக்கோம்ல நாங்க' என்று நானும் ஆவியும் சிரித்துக் கொண்டோம். உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பதை சீனுவின் பதிவில் படிக்க அவலுடன்... ஸாரி, ஆவலுடன் காத்திருக்கிறேன்!

* கங்கைகொண்ட சோழபுரம் நிறையவே பிரமிப்பைத் தந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்கதாக, சோழர் காலத்தியதாக இருந்த போதிலும் நேற்றுச் செதுக்கியவை போல சிற்பங்கள் அப்படி அழகாக இருக்கின்றன. ஆலயம், கோட்டையைச் சுற்றிலும் அழகாக புல்வெளி வளர்த்திருப்பதால் வெயிலின் கடுமை தெரியவில்லை. நாங்கள் சென்றது முகூர்த்த தினமாக இருந்ததால் கல்யாண ஜோடிகளும், துணையாக வந்த நிறைய ‘அம்மணி’களும் பார்வைக்குக் குளிர்ச்சி தந்தார்கள். ஹி... ஹி...! ஒவ்வொருவரின் காமிராக்களிலும் சலிக்கும் வரை புகைப்படங்களைச் சுட்டுத் தள்ளிவிட்டு (அட, கோயிலை, சிற்பங்களைத் தாங்க...) புறப்பட்டோம்.

* வார்த்தைகளை உபயோகிப்பதில் படுசிக்கனத்தைக் கையாளும் ஸ்கூல் பையன்(ர்?) இந்தப் பயணத்தில் கொஞ்சம் பேசியும், என்னை தூங்கும் சமயத்திலும், டைஐஐஐட் குளோசப்பிலும் தன் காமிராவால் சுட்டு, அராஜகனாக அவதாரமெடுத்து அசர வைத்தார். (எலேய்... தப்பித் தவறி எதையும் பப்ளிஷ் பண்ணித் தொலைச்சிராத... இங்க கொள்ளைப் பேருக்கு உன்னால ஹார்ட் அட்டாக் வந்துரும்டியோய்...!) மணிரத்னத்தின் பட ஹீரோக்கள் மாதிரி பேசுகிற ரூபக்கிடமும் இப்போது சற்று முன்னேற்றம் - பேசுவதில்! இவையெல்லாம் பயணம் எங்களுக்குத் தந்த அனுகூலங்கள்!

* ஆவி என்றால் மிருகங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் போலிருக்கிறது. சித்தன்னவாசலில் ஆவியின் மீது பாசம் கொண்டு அவரைத் துரத்தியது ஒரு ஆஞ்சநேயர் அம்சம்! அரியலூரிலோ தனிமையானதொரு தோப்பில் இயற்கையன்னையின் மடியில்(?) அரசன் எங்களுக்கு மதிய விருந்து படைக்க, தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சமயம், ஆவியின் முதுகுக்கு வெகு பின்னால், ஏதோ நீண்டநாள் நண்பர் போல நாக்கைத் தொங்கப் போட்டபடி வந்து அமர்ந்தார் ஒரு பைரவர். நாங்கள் அதைக் கவனித்துச் சொல்ல, திரும்பிய ஆவி அத்தனை அருகில் ‘நண்பரை’(!) எதிர்பார்க்காததால் ஜெர்க் ஆனார். ஹா... ஹா... ஹா...!

* புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி, பைபாஸ் ரோடைப் பிடித்த சமயத்தில் அரியலூருக்கு எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்ற குழப்பம் வந்தது. அப்போது சிவகாசிக்காரன், ‘‘அங்க ரெண்டு பொண்ணுங்க போவுது, அவங்ககிட்ட கேளுங்கப்பா..." என்று தூண்ட, முன் இருக்கையிலிருந்த ஆவி, ஜன்னலின் வெளியே தலைநீட்டி வழி கேட்க, ‘‘தெரியாது" என்ற அந்தப் பெண்களில் ஒருத்தி, ‘‘நமக்கே இங்க ஒரு மண்ணும் தெரியாது. இதுங்க நம்மகிட்டப் போயி வழி கேக்குது பாரு..." என்று தன் தோழியிடம் சொன்னது காருக்குள்ளிருந்த எங்களுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்க, சிவகாசிக்காரரின் திருமுகத்தில் சற்றே அசடு வழிய, படுகுஷி எனக்குள்! மத்தவங்க பல்பு வாங்கினா, நமக்கு எப்பவும் குஷிதானே..! அப்புறம் சற்றுத் தொலைவு சென்றதும் எதிர்பட்ட ஒரு ஆட்டோக்காரர் ஆபத்பாந்தவனாக வழிசொல்லி உதவினார்.

மொத்தத்தில்.... மொபைல் பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல என்னை ரீசார்ஜ் செய்துகொண்டு உற்சாகத்துடன் ஊர் திரும்ப வைத்தது இந்தப் பயணம். ஊருக்குத் திரும்பியதுமே ஆவியின் ‘ஆவிப்பா’ வெளியீட்டு விழா நடந்தது. அதைப் பற்றி பின்னர் ஆவி விரிவாக எழுதுவார் (என்று நம்புகிறேன்).

Monday, May 6, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 7

Posted by பால கணேஷ் Monday, May 06, 2013
போட்டிங் போக முடியாத ஏமாற்றத்தை மறைத்து, அரட்டையடித்தபடி ஏரியைச் சுற்றி நடந்தோம். இருபது ரூபாய் வாடகையில் சைக்கிள் கொடுத்துக் கொண்டிருந்தனர். நல்ல குளிர் காற்றில் சைக்கிள் மிதித்தபடி ஏரியைச் சுற்றி வ்ந்தது (ஐந்தரை கிலோமீட்டர் தூரம்) மிக ஆனந்தமாக இருந்தது. இரவு காட்டேஜுக்குத் திரும்பியதும், காட்டேஜுக்கு முன்பு இருந்த புல்வெளியில் விறகுக் கட்டைகளை அடுக்கி, வைத்திருந்தனர். அவற்றைக் கொளுத்தி குளிர்காய்ந்தபடி இரவு உணவும், அதன்பின் பாட்டும், கவிதைகளுமாக சுவாரஸ்யமாக இரண்டாம் தினம் முடிந்தது.

ஏரியைச் சுற்றிய வாலிபன்(?)
மூன்றாம் தினம் காலையில் அனைவரும் தயாராகி வேன் புறப்பட்டதும்தான் தலைவர் விஷயத்தைச் சொன்னார். ‘‘நாம இப்ப பெரியகுளத்துக்குப் போறோம். அங்க டிபன் முடிச்சுட்டு, பக்கத்துல சோத்துப்பாறைங்கற மலையில ஏர்றோம். அங்க பரதேசி படத்தோட ஷுட்டிங் ஸ்பாட்டைப் பாத்துட்டு, மலை அருவில குளிக்கறதுதான் இன்னிக்கு ப்ளான்’’.பெரியகுளத்தில் சில சமையல் பாத்திரங்களையும், சமையல் நபர் ஒருவரையும், மற்றொருவரையும் ஏற்றிக் கொண்டதும்,  கொஞ்ச தூரம் சென்றதும் ஏறிய அந்த மலைப்பாதை மிகக் குறுகலான பாதையாக இருந்தது. இங்கேயும் வனத்துறையின் அனுமதி பெற்றால்தான் பயணிகள் உள்ளே செல்ல முடியும். தலைவருடன் புதிதாய் சேர்ந்திருந்த நபர் அனுமதி வாங்கி வைத்திருந்ததால் (அவர் பெரியகுளம் கவுன்சிலர் என்பது பின்னால்தான் தெரிந்தது) எளிதாக இருந்தது.

‘சூடான’ பாட்டும், கவிதைகளும்1
மலைச்சரிவின் பாதியில் வேன் நிறுத்தப்பட்ட இடம் பரதேசி படத்துக்காகப் போடப்பட்ட குடிசைகளின் செட். இன்னும் அப்படியே கலைக்காமல் இருந்தது. அந்த இடம் இயக்குனர் பாலா அவர்களின் சொந்த இடம் என்பதாகச் ‌சொன்னார்கள். நாங்களனைவரும் அங்கே சுற்றிவந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். அதன்பின் அந்த மலைச்சரிவில் இன்னும் கொஞ்ச தூரம் பயணித்துச் சென்றதும் ‘ஹோ’வென்ற நீரின் இரைச்சல் காதில் விழுந்தது. அங்கே வேனை நிறுத்தினார் ஓட்டுனர். சரிவிலிருந்து இறங்கி உள்ளே சென்றால் வனம் தனக்குள் ஒரு அபூர்வப் பொக்கிஷத்தை ஒளித்து வைத்திருந்தது.

‘பரதேசி’க் குடிசைகள்
வனத்துறையினரின் அனுமதி பெற்று வரவேண்டிய இடமாதலால் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவது குறைவே என்பதால் அருவியும் சுற்றுப்புறங்களும் அதிகம் மாசடையாமல் இருந்தன. நீர் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் அத்தனை தெள்ளியதாக இருந்தது. பாறைகள் சூழ்ந்த பகுதியில் மெல்லிய ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது. அங்கேயிருந்து கொஞச தூரம் பாறைகளைத் தாவி ஏறி மேலேறிச் சென்றால் குற்றாலம் போல அருவியாக வீழ்ந்து கொண்டிருந்தது. பாறைகளில் ஏறிச் செல்வதுதான் கொஞ்சம் கஷ்டமான விஷயமாக இருந்தது. காரணம்... நாங்கள் அங்கே சென்றடைந்த நேரம் நடுமதியம் என்பதால் வெயில் தகித்ததும், பூச்சிகள் சில தென்பட்டதும்தான்.

பின்னே பரதேசி குடிசைகள்! முன்னே இந்தப்..!
இவை தவிர நமக்கு முன்னே வந்த நல்லவர்கள் குடித்து விட்டு வீசியெறிந்திருந்த பீர் பாட்டில்களிலிருந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததால் மிக கவனமாகச் செல்லும்படி ஆயிற்று. மற்றவரைப் பற்றித் துளியளவும் கவலைப்படாமல் தன் சந்தோஷத்தையே பெரிதாக நினைக்கும் தமிழினத்தின் அருங்குணத்தை வாழ்த்திய(?)படி உஷ்ணமாக அருவியை அடைந்த எங்களை குளிர்வித்தது அருவி நீர். நீண்ட நேரம் அருவியில் ஆடிவிட்டு கரைக்கு வந்தால், சாப்பாடு தயாராக சிறிது நேரமாகும், அதுவரை இதை டேஸ்ட் பாருங்கள் என்று பொரித்த மீனை பல தட்டுகளில் அள்ளித் தந்தார் சமையற் கலைஞர். நேற்று கொடையில் சாப்பிட்ட மீனின் சுவையை‌ எல்லாம் சாதாரணமப்பா என்று ‌சொல்ல வைத்தது இன்று இந்த அருவிக் கரையில் இவர் தந்தது. பிறகென்ன... மீண்டும் அருவிக் குளியல், வெயிட்டான மதிய உணவு. சிலுசிலுவென்ற காற்றினை ரசித்தபடியே சற்று நேரம் அரட்டை + சிலர் குட்டித் தூக்கம். மீண்டும் அருவிக் குளியல் என்று பொழுது போனதே தெரியவி்‌ல்லை.

அருவி ஓடையான இடத்தில்....!
மாலை ஆறு மணி சுமாருக்கு அங்கிருந்து புறப்பட்டு, பெரியகுளம் வந்த உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு எங்கள் வாகனம் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டது. திண்டுக்கல் மற்றும் மதுரையில் கொஞ்சம் கேப் கிடைத்தால் நண்பர்களைச் சந்தித்து வரலாம் என்று நினைத்திருந்த என் திட்டம் நடைபெறவில்லை என்றாலும், மூன்று முழு தினங்கள் கணிப் பொறியையும், புத்தக வடிவமைப்பையும், வலைத்தளங்கள், முகப்புத்தகம், இமெயில் என யாவற்றையும் நினைக்காமல், முக்கியமாக... அலுவலக விஷயங்களை பயணத்தின் போது பேசாமல் மகிழ்வுடன் சுற்றி வந்தது டோட்டலாக பேட்டரி ரீசார்ஜ் செய்தது மாதிரி எங்களை ரெஃப்ரெஷ் ஆக்கியிருந்தது. இனி வருடம் ஒரு முறையேனும் இப்படி குழுவாக ஊர் சுற்ற வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்தேன். நிறைவேறமா என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியும்.

பொரித்த மீன் - நாங்க சாப்பிடும் முன்!
இவ்வளவு சுருக்கமாக(!) நான் விவரித்தும் ஏழு பகுதிகள் நீண்டுவிட்ட இந்த கொடைக்கானல் பயணத்தை ரசித்தும், ரசிக்காமலும் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கு்ம் என் இதயம் நிறைந்த நன்றி! பயணக் கட்டுரை என்கிற புதிய க(கு)ளத்துக்குள் நாமெல்லாம் எழுதினால் சரியாக வருமா என்று தயங்கிய என்னை பிடித்துத் தள்ளி விட்ட தி.கொ.போ. சீனுவுக்கும், வி.ஓ. சுடர்விழிக்கும் ஸ்பெஷல் நன்றிகள்! (இந்த ‘நல்ல’ காரியத்தப் பண்ணினது இவங்கதானான்னு யாரோ பல்லை நறநறக்கறது இங்க கேக்குது!)

Tuesday, April 30, 2013

கொ(கோ)டைக் கா(ண)ல் - 6

Posted by பால கணேஷ் Tuesday, April 30, 2013
வேனிலிருந்து இறங்கியதும் எதிரே பசும் புல்வெளி சூழ்ந்த ஒரு மேடான பிரதேசமும், அங்கே ஒரு கோயிலும தெரிந்தது. ‘‘இதான் பூம்பாறையா பாஸு’’ என்று நண்பரிடம் நான் கேட்டதற்கு, வேனிலிருந்து அப்போதுதான் இறங்கி வந்து கொண்டிருந்த ஓட்டுனரிடமிருந்து பதில் வந்தது. ‘‘இல்ல ஸார். பூம்பாறைக்கு பாதி தூரம்தான் வந்திருக்கோம். இங்க நீங்க பாக்கறது மகாலக்ஷ்மி கோயில். அழகா இருக்கும், எல்லாரும் போய்ப் பாத்துட்டு வரட்டுமேன்னுதான் நிறுத்தினேன்’’ என்றார். ‘‘ரைட்டுங்க. பூம்பாறைல என்ன விசேஷம்?’’ என்று கேட்க, ‘‘அங்க ஒரு முருகன் கோயில் இருக்குது சார். குழந்தை வேலப்பர்னு பேரு. ரொம்ப அழகா இருக்கும் சாமி...’’ என்றார் சக்தி. அட, இன்னிக்கு ஆலய தரிசனம் வரிசையா அமையுதே என்ற வியப்புடன் மேலேறினோம்.

வேனிலிருந்து மஹாலக்ஷ்மி கோயில் வ்யூ!
மேலேறிச் சென்று பார்க்கையில் அவர் சொன்னது போலவே சிறிய கோயிலாக இருந்தாலும் அழகாக இருந்தது. புகைப்படக் கருவியை எங்கள் கைகளில் கண்டதுமே, ‘‘ஸார் கோயிலையும், கோயிலச் சுத்தியும் படமெடுத்துக்குங்க. அம்மனை படம் எடுக்கக் கூடாது’’ என்றார் அங்கிருந்த ஊழியர். அவர் அப்படிச் சொல்லாவிட்டால், சிறியதாக இருந்தாலும் அழகாக புன்னகை முகத்துடன் இருந்த அம்மனின் சிலையை நாங்கள் படம் எடுத்து விட்டிருப்போம். சொல்லி விட்டதால் வேறு வழியின்றி ஆலயத்தைச் சுற்றியிருந்த இயற்கையை ரசித்து, படங்களை சுட்டுக் கொண்டு கிளம்பினோம் அங்கிருந்து.

ஞானும் பின்னே  இயற்கையெனும் இளையகன்னியும்!
இதுவரை ஏற்றப் பாதையாய் இருந்தது மகாலக்ஷ்மி கோயில் தாண்டி சற்று தூரம் சென்றதுமே இறங்கு பாதையாக மாறியது. சுற்றிச் சுற்றி இறங்கி சுமார் 10 கி.மீ. தூரம் போனதும் பூம்பாறை கிராமம் வந்தது. வேனிலிருந்தபடியே அந்த கிராமத்தைப் பார்க்கையில் மதுரை நகர அமைப்பு மாதிரி குழந்தை வேலப்பர் ஆலயமும் அதைச் சுற்றிய சில தெருக்களும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. குழந்தை வேலப்பர் ஆலய வாசலில் வேனை நிறுத்தி உட்செல்ல, அங்கே கூட்டம் அதிகம் இல்லை. சிறிய ஆலயம். ஆனால் சுற்றிலும் நிறைய இடப்பரப்பு இருந்ததால் பார்க்க ரம்யமாகவே இருந்தது. உள்ளே சென்று முருகப் பெருமானை தரிசித்தோம். என்ன அழகு! ராஜ அலங்காரத்தில் அம்சமாய் நின்றிருந்தார். இங்கே எப்போதுமே ராஜ அலங்கார தரிசனம்தான் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நகருங்க, நகருங்க என்று விரட்ட யாரும் இல்லாமல் நிம்மதியான தெய்வதரிசனம் கிட்டியது மனதுக்கு மகிழ்வாக இருந்தது.

ஆலய வாசலில் இவர் விற்பது அசல் மலைப்பூண்டுங்க!
வழக்கம் போல கேமராவைக் கையிலெடுத்தால் உதை விழும் என்று எச்சரிக்கப்பட்டதால் படம் எடுக்க முடியாமல் போயிற்று.ஆனாலும் சென்னை வந்ததும் கூகிளாண்டவரிடம் வேண்டித் தேடியதில் நான் அங்கு கண்ட முருகப் பெருமானின் ராஜ அலங்காரப் படம் கிடைத்தது. அது இங்கே உங்கள் பார்வைக்கு. சிறிது நேரம் அந்தக் கிராமத்துத் தெருக்களில் நடந்து, தாக சாந்தி (ஐமீன்... கூல்ட்ரிங்ஸ்) செய்து கொண்டு, கொஞ்சம் ஸ்னாக்ஸும் வாங்கிக் கொண்டு வேனில் ஏறினோம். மீண்டும் ஏற்றம் மறுபடி இறக்கம் என்று வாழ்க்கையின் தத்துவத்தைப் போதித்தது பூம்பாறையிலிருந்து கொடைக்குச் செல்லும் சாலை.

மனசைக் கவர்ந்த குழந்தை!
 கொடைக்கு வந்ததும், ‘‘சார், சாக்லெட்ஸ், தைலம்லாம் வாங்கணும்னு சொல்லிடிருந்தீங்களே... எனக்குத் தெரிஞ்ச நல்ல கடை இருக்கு. போலாமா?’’ என்றார் ஓட்டுனர். காலையிலிருந்து இரண்டு முறை இந்த விஷயத்தைக் கேட்டுவிட்டார். ஏனென்றுதான் தெரியலை. தலைவர் ‘‘ஓ.கே. போங்க’’ என்க, வேன் சிலபல தெருக்கள் கடந்து, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றின் வாயிலில் நின்றது.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்றால் பெரிய மல்ட்டிஸ்டோரி பில்டிங்குகளை நினைத்துவிட வேண்டாம். ‘ப’ வடிவத்தில் வரிசையாகக் கடைகள் இருந்த தரைத்தள காம்பளக்ஸ்தான் அது. கடைக்குள் போனதுமே அங்கிருந்தவர்கள் அருமையாக கேன்வாஸ் செய்ய ஆரம்பித்தார்கள். சுத்தமான மலைத்தேன் பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்ததை சாம்பிள் காண்பித்தார்கள். தேனின் விலைதான் திகிடுதம்பாக இருந்தது. தலைவலித் தைலம், மூட்டுவலிக்கான தைலம், மூலிகை ஹேர் ஆயில் என இன்ன பிறவற்றின் விலையும் அப்படியே. சாக்லெட்தான் விலை குறைவாக இருந்தது. ‘‘எப்பவோ ஒரு தரம் வர்றோம். வாங்கலாம் பாஸ்!’’ என்றபடி நண்பர்கள் நிறைய வாங்கிக் குவித்தார்கள். (நாங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்த ஒரே இடம் இதுதானே!) நான் கொஞ்சம் வாங்கிவிட்டு வேனுக்கு வந்துவிட்டேன்.

ஷாப்பிங் செய்வதற்கு முன்! (லிஸ்ட் போடுகிறார் சீனியர்)
அனைவரும் ஷாப்பிங் முடித்துவிட்டு வேனுக்கு வர நீண்ட நேரமாயிற்று. எல்லோரும் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தும் ஓட்டுனரைக் காணவில்லை. அவர் சற்றுப்‌ பொறுத்தே கடையிலிருந்து வந்து வேனைக் கிளப்பினார். இதற்குள் மதிய உணவு நேரம் தாண்டியிருக்க, காட்டேஜ் சென்று உணவருந்தலாம் என்ற குரல் அனைவரிடமிருந்தும் வந்தது. மதிய உணவாக இன்று மீன் குழம்பும், சிக்கன் ப்ரையும் செய்திருந்தார்கள். மீன் குழம்புடன் சேர்த்து ஒரு மீனையும் சாப்பிட்டுப் பார்த்தேன். வெகு பிரமாதம்! இன்னுமிரண்டு பீஸ் ஃபிஷ்‌ஷை விழுங்கிவிட்டு காட்டேஜ் பொறுப்பாளரை பார்த்துப் பாராட்டினால், அவர் முன்பு ஒரு நட்சத்திர ஓட்டலில் தான் செஃப் ஆக இருந்ததாகக் கூறினார். அட்றா சக்க.. அட்றா சக்க... அதான் இவ்வளவு சூப்பர் சமையலாவென்று வியந்து பாராட்டிவிட்டு, அவரவர் அறைகளுக்குள் நுழையுமுன், ‘‘ஈவ்னிங் போட்டிங் போகணும். எல்லாரும் ரெடியாகி வந்திருங்க’’ என்றார் தலைவர்.

குழுவாகச் செல்கையில் எப்போதும் நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். (குழுவாக இல்லாவிட்டாலும் நேரத்தைக் கடைப்பிடிப்பதே உத்தமமானது என்பது வேறு விஷயம்). ஆனாலும் 12 பேர் வெவ்வேறு அறைகளில் உறங்கிய பின், மீண்டும் எழுந்து, தயாராகி வருவது என்கிற நடைமுறை விஷயத்தில் யாரேனும் ஒருவர் தாமதம் செய்தாலும் அனைவரின் நேரமும் வீணாகத்தான் போய் விடுகிறது. அன்று மாலையிலும் இதே விஷயம்தான் நடந்தது. அனைவரும் கிளம்புகையில் மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வேன் ஏரியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தலைவருக்கு போன் வந்தது. ‘‘அப்படியா? சரி... சரி... அப்ப நாளைக்கு காலைலயே ஆறு, ஆறரைக்கெல்லாம் கிளம்பி அங்க வந்துடறேன். நீங்க மத்த எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடுங்க’’ என்று பேசிவிட்டு வைத்தார். அவர் மெதுவான குரலில்தான் போன் பேசுவார் என்றாலும் இந்த ஏரிப் பயணத்தின்போது நான் அவர் அருகாமை சீட்டில் இருந்ததால் அவர் பேசியது கேட்டது. பின் உரத்த குரலில் அறிவித்தார்- ‘‘ஃப்ரண்ட்ஸ்1 இப்ப ஏரியில சுத்தறதோட நம்ம கொடை ட்ரிப் முடியுது. நாளைக்குக் காலையில ஆறு மணிக்கெல்லாம் எல்லாரும் எழுந்து ரெடியாயிடுங்க. நாம இங்கருந்து கிளம்பறோம்’’ என்று!

எல்லாரும் கசமுசவென்று பேசிக் கொள்ளத் துவங்க, ‘‘காலையில எங்க கிளம்பிப் போறோம் தலைவரே?’’ என்று மெல்லப் போட்டு வாங்க முயன்றேன். தலைவர் க.மீனில் ந. மீன்! ‘‘கொஞ்சம் சர்ப்ரைஸா இருக்கட்டும் ஸார்! காலையில சொல்றேன்’’ என்றார். அதற்கு மேல் அவரிடமிருந்து விஷயத்தை உரிக்க முடியாது என்பது எனக்கு அனுபவப் பாடம் என்பதால் எதுவும் கேட்கவில்லை. ஏரிக்கரை அருகில் வேனை பார்க் செய்ததும், அங்கே வரிசையாக ஸ்வெட்டர் விற்றுக் கொண்டிருந்த வியாபாரிகளிடம் பேரம் பேசி ஆளுக்கொரு ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டோம். இதில் சற்று நேரம் ஓடிவிட, ஏரிக்குச் சென்றால், படகு சவாரிக்கான நேரம் முடிந்து விட்டது என்றார்கள். அடடா... என்னவொரு ஏமாற்றம்!

                                                                                                                     -தொடர்கிறேன்....

Thursday, April 25, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 5

Posted by பால கணேஷ் Thursday, April 25, 2013
சென்னையில் தினம் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் செல்லும் பழக்கம் இருப்பதால், இரவு தாமதமாகப் படுத்தபோதிலும், நல்ல அசதி இருந்தபோதிலும் காலை 6 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. மற்ற ரூம்மேட்கள் எழாத வண்ணம் கதவு திறந்து சோம்பல் முறித்தவாறு ஸிட்டவுட்டில் வந்து பார்த்தால்... ஸர்ப்ரைஸ் விசிட்டாக நேற்றெல்லாம் காணாமல் போயிருந்த மிஸ்டர் சூரியபகவான் தரிசனம் தந்தார்! உற்சாகமாய் அறையினுள் சென்று பல் துலக்கி முகம் கழுவி வெளியே வர, பக்கத்து அறை நண்பர்கள் இருவர் எழுந்து வெளியில் நின்றபடி சூரிய வெப்பத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். மூவருமாக காபி அருந்தும் உத்தேசத்தில் காலை வாக் கிளம்பினோம். டீக்கடை நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி இருந்தது.

நேற்று சூரியன் இல்லாததாலும், இரவு மழையினாலும் சரியாகக் கவனிக்காத பாதையை இப்போது நன்றாகப் பார்க்க முடிய... பகீரென்றது!. குறுகிய வளைவுகள், இரண்டு ஹேர்பின் திருப்பங்கள், அருகிலேயே சரிவான பள்ளத்தாக்கு! வேன் டிரைவர் கொஞ்ச்சம் அசந்திருந்தாலும் வேன் உருண்டு.... நினைக்கவே மலைப்பாக இருந்தது. ஓட்டுனர் ‘சக்தி’யை வாழ்த்தியபடி காபி குடித்துத் திரும்பினோம். மற்றவர்கள் நிதானமாக எழுந்து தயாரானது, நாங்கள் டிபன் சாப்பிட்டது போன்ற ரிபீட் விஷயங்களைத் தவிர்ததால்... காலை எங்கள் வேன் கிளம்பியபோது மணி ஒன்பதரை.

‘கோக்கர்ஸ் வாக்’கில் எங்களின் வாக்!œ
தசாரதி தலைவரிடம், ‘‘கோக்கர்ஸ் வாக் முதல்ல போயிரலாம்’’ என்றார். ‘‘‌கோக்கர்ஸ் வாக்ன்னா கையில ‘கோக்’ வெச்சுட்டு வாக் பண்ணனுமா தலைவா? போற வழியில வாங்கிட்டுப் போயிரலாமா?’’ என்று ‘கடி’த்தேன். முறைத்தார் தலைவர்! ‘‘ஏங்க இப்புடி? 1872ம் வருஷத்துல கோக்கர்ங்கற ஆளு உருவாக்கினது இந்த நடைபாதை. இ‌தோட நீளம் சுமார் ஒரு கிலோமீட்டர். நேத்து மாதிரி மேகமூட்டமா இல்லாம இன்னிக்கு சூரிய வெளிச்சம் இருக்கறதால அங்கருந்து பெரியகுளம், மதுரை மாதிரி ஊருங்களை பறவைப் பார்வைல நம்மால பாக்க முடியும்’’ அப்படின்னாரு.  கொடைக்கானல் பஸ் ஸ்டாணட்லருந்து அரை கிலோமீட்டர் தூரத்துலயே ‘கோக்கர்ஸ் வாக்’ இருக்கறதால நாங்க பேசிட்டிருக்கற நிமிஷங்கள்ல வேன் அதை அடைந்து விட்டது.

கோ.வா. புல்வெளியில் சற்றே ஓய்வு!
நாங்கள் அனைவரும் வேனிலிருந்து இறங்கியதும், ஓட்டுனர் வேனைச் செலுத்திக் கொண்டு போயே போய்விட்டார். ‘‘என்ன தலைவா?’’ என்று கேட்க, ‘‘இந்த நடைபாதையோட எண்ட்ல செயின்ட் பீட்டர்ஸ் சர்ச் வரும். அங்க வேனை நிறுத்திட்டு வெயிட் பண்ணுவார். வாங்க, நாம நடககலாம்’’ என்றார். சிமெண்ட் தளம் போடப்பட்டு, ஓரங்களில் புல்வெளி வளர்க்கப்பட்டிருந்த கோக்கர்ஸ் வாக் ரம்மியமாக இருந்தது. நிறையக் கடைகள் வழி நிறைய. கண்ணில் பட்ட இயற்கை அழகையும், அவற்றி்ன் பின்னணியில் எங்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். தலைவர் ‌சொன்னது மிகச் சரி! மேலேயிருந்தபடி கீழே தூஊஊஊரத்தில் தெரியும் நகரங்களைப் பார்க்கையில் பிரமிப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

தடுப்புக் கம்பிகளைத் தாண்டிப் பார்ததால்.. தன்னிகரற்ற இயற்கை எழில்!

நடைபாதையிலிருந்து வெளிவந்ததும் தலைவர் சொன்னது போலவே வேன் தயாராக இருந்தது. ‘‘அடுத்து எங்க போறோம் தலைவரே?’’ என்று கேட்க, ‘‘பேரிஜம் ஏரின்னு 24 ஹெக்டேர் பரப்பளவுள்ள பெரிய ஏரி ஒண்ணு இருக்கு. அதை உள்ள போய் பாக்கறதுக்கு கவர்மென்ட் பர்மிஷன் வாங்கணும். பேசி வெச்சிருக்கேன். அதனால அங்கயே போலாம்’’ என்றார். வேனில் ஏறியதும் வழக்கம் போல எங்களின் பாட்டும் கூத்தும் நடந்து கொண்டிருக்க... வழியில் ‘குணா குகை’ அருகில் டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் வண்டி தேங்கி நின்றது. ‘‘குணா குகைக்குள்ள போய்ப் பாத்துட்டு வரலாமா?’’ என்று குழுவின் இளையவன் கேட்க, ‘‘குகையில கமல் மாதிரி நின்னுக்கிட்டு கத்தலாம்னு நினைச்சா ஏமாந்துடுவடா. அந்த இடத்துக்குல்லாம் போக அலவ்ட் இல்ல. தள்ளியே நின்னு பாத்துட்டு வரலாம். அதுக்குத்தான டிக்கெட்’’ என்றார் உதவி ஆசிரிய நண்பர்.

குகையப் பாக்காம போயிட்டாங்களே அபிராமி!
‘‘சினிமாப் புகழ்‌ பெற்ற ஸ்தலம்ங்கறதால டிக்கெட் போடறாங்களா இங்க?’’ என்றேன் நான். ‘‘ஆமா.... இதென்ன பெரிய காசி, ராமேஸ்வரமா ஸ்தலம்னு சொல்ல? உமக்குன்னு வார்த்தை கிடைக்குது பாரு...!‘‘ என்று கிண்டலித்த உ.ஆ. தொடர்ந்து, ‘‘இந்த இடத்துக்கு ஆக்சுவலா பழைய பேரு ‘டெவில்ஸ் கிச்சன்’ங்கறதுதான். பிசாசின் சமையலறையா இருந்த இந்த இடம், கமல்ஹாசனால இப்ப குணா குகைன்னு பேர் வாங்கிருச்சு...’’ என்று மற்றொரு தகவலை அவிழ்த்தார். ‘‘தூரத்துல நின்னு இடத்தை வெறுமனே தரிசனம் பண்றதுல என்ன த்ரில் இருக்கு. நான் வரலை’’ என்று நானும் மற்றும் மூவரும பின்வாங்க, தலைவரும் எங்கள் அணியில் சேர, மெஜாரிட்டியின் காரணத்தால் குணா குகையைப் புறக்கணித்து மேலே பயணத்தைத் தொடர்ந்தோம்.

‘‘என் பக்தன் குணாவோட குகையப் பாக்காம வந்துட்டீங்களேடா பாவிங்களா...’’ அப்படீன்னு அபிராமி எங்க மேல கோவிச்சுக்கிட்டிருப்பாங்க போலருக்கு.... பேரிஜம் ஏரியின் நுழைவு வாயில்ல வேன் போய் நின்னதும், தலைவரும், பயணப் பொறுப்பாளரும் போய் கேட் கிட்ட பேசறாங்க. செல்லுல போன் பண்றாங்க. மறுபடி பேசறாங்க... என்னவோ நடந்துச்சு. பின்ன பேசாம திரும்பி வந்துட்டாங்க. தலைவர் முன் அனுமதி வாங்கியிருந்தும் ஏதோ குழப்பம் காரணமாக ‘பர்மிஷன் கிடைககல’ என்பதுதான் நெட் ரிசல்ட். அடுத்து எங்க போகலாம்னு அவங்கல்லாம் கூடி யோசிச்சுட்டிருக்க, நாங்க அங்க வித்துட்டிருந்த சூடான வேர்க்கடலைகளை வாங்கிச் சுவைத்தோம். பெரிய பாக்கெட்டாக இருந்ததால், ‘‘மிஸ்டர் சுடலை! இந்தாங்க, கடலை’’ என்று நண்பரின் கையில் பாதியைக் கொட்டினேன். ‘‘சுடலையாவது...! செமத்தியா சுடுதுங்க’’ என்று அலறினார் நண்பர் சுடலை.

பாறை லேசாச் சுட்டாலும், அதுவும் நல்லாத்தேன் இருந்துச்சுங்க!

இதற்குள் ‘‘எல்லாரும் வேன்ல ஏறுங்க. கிளம்பலாம்...’’ என்றார் ப.பொறுப்பாளர். ‘‘எங்க சார்?’’ என்று கேட்டோம். அருகில் இருந்த வழிகாட்டிப் பலகையைக் காட்டினார். ‘‘பூம்பாறை 23 கி.மீ.’’ என்றது அந்த போர்டு. வேனில் ஏறியதும், ‘‘பூம்பாறைங்கற இடத்துல என்ன விசேஷம்? அதப்பத்தி உங்களுக்குத் தெரியுமா?’’ என்று நான் கேட்க, அனைவரும் ஒருவரையொருவர் கேட்க, யாருக்கும் அதைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. வேன் செல்லும் வழியில் அழகான பாறைச் சரிவு ஒன்று அனைவர் கவனத்தையும் இழுக்க, எங்களின் மொத்த கோஷ்டியும், அந்தப் பாறைச் சரிவில் சாய்ந்து நின்று (வைட்லென்ஸ் எதுவும் போடாமலே) படம் எடுத்துக் கொண்டோம்.

 வேன் புறப்பட... முன்னால் சென்ற கல்லூரி பஸ்ஸை முந்த... நாங்கள் கூச்சலிட... அவர்கள் விரைவெடுத்து முந்த... அவர்கள் கூச்சலிட... இப்படி மாற்றி மாற்றி கூச்சலும் விரைவுமாகச் சென்ற பயணம் சட்டென்று முடிவுககு வந்தது போல வேன் நின்றது. ‘‘இறங்குங்க எல்லாரும்...’’ என்றார் தலைவர். ‘‘என்னது...? அதுக்குள்ள 23 கிலோமீட்டர் வந்துட்டமா?’’ என்று வியந்தபடியே வேனிலிருந்து இறங்கினேன் நான்.

                                                                                                   -தொடர்கிறேன்....

Monday, April 15, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 4

Posted by பால கணேஷ் Monday, April 15, 2013
ங்கள் குழுவில் ஒருவர் பார்ட்டைமாக இசைக் குழுவில் வாசிப்பவர்/பாடுபவர் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன். அந்த ஆசாமி இரண்டு சிறிய டிரம்ஸையும் குச்சிகளையும் கொண்டு வந்திருந்தார். தலைவர் அவரைப் பார்த்து, ‘‘டேனியல்! நீங்க பீட் அடிங்க. நம்ம ஆளுங்க ஒவ்வொருத்தரா டான்ஸ் பண்ணுவாங்க இப்ப...’’ என்றார். என்னது...? டான்ஸா, நாமளா? பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு. தலைவரிடம் ‘அப்ஜெக்ஷன் மை லார்ட்’ என்று கை உயர்த்தி மறுக்க நான் முயல்வதற்குமுன் நண்பர் ட்ரம்ஸை அடிக்க ஆரம்பிக்க, ஸ்டெப்ஸ் வைத்து ஆட ஆரம்பித்து விட்டான் குழுவில் இருந்த ஒரு இளைய ப(பு)யல்! அதை நியாயப்படி டான்ஸ் என்று சொல்லுதல் தகாது. சவ ஊர்வலங்களுக்கு முன்னால் ‘ஃபுல்’லாக ஒரு கோஷ்டி ஆடிவருவதை கவனித்ததுண்டா நீங்கள்? அதைப் போன்ற ஸ்டெப்ஸ்கள் அவை. பார்த்ததுமே வயிற்றைக் கலக்கியது எனக்கு.

அவன் நிறுத்த... அடுத்து யார் ஆடுவது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க... சட்டென்று முன் வந்த உதவி ஆசிரிய நண்பர் ஒருவர் செம குத்து குத்தினார். பின் ஒவ்வொருவராக ஆட (குதிக்க...?) ஆரம்பித்தனர். கடைசியாக தலைவர் என் முகத்தைப் பார்க்க பலி பீடத்தின் முன் நிறுத்தப்பட்ட ஆடு போல, (அல்லது) கேப்டனின் முன்னால் நிற்கும் பத்திரிகையாளர் போல பேய்முழி முழித்தேன். ‘‘இல்ல தலைவரே... என்னாலல்லாம் ஆட முடியாது’’ என்று நான் சொல்ல, ‘‘இவங்கல்லாம் கத்துட்டா வந்து ஆடினாங்க. சும்மா வாங்க... கமான் கணேஷ்... கமான்...’’ என்று கிண்டியில் ஓடிய குதிரைகளைக் கூப்பிடுவது மாதிரி உற்சாகமாகக் கூப்பிட்டார் தலைவர். ‘‘இல்ல தலைவா... நாம இருக்கறது ஃபர்ஸ்ட் ப்ளோர். நான் ஆடி பில்டிங் ஏதாவது டாமேஜ் ஆயிட்டுதுன்னா... இன்சார்ஜ் சும்மா விடமாட்டாருங்களே..’’ என்றேன் நான். நான் சொன்னதற்கு அவர் பயந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், நான் மிகத் தயங்கியது அவரை யோசிக்க வைத்ததோ என்னவோ... ‘‘சரி, நீங்க ஆட வேணாம், ஏதாவது பாடுங்க...’’ என்றார்.

2ம் நாள் காலை என் அறையிலிருந்து. ‘என்ன பண்றாங்க இவங்க?’

அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று உடனே அஸ் யூஷுவல் மக்கள் திலகத்தின் பாடல் ஒன்றைப் பாடினேன். பல்லவி பாடி முடிப்பதற்குள்ளேயே... ‘‘கணேஷ் பாடச் சொன்னா பாடணும், ஒப்பிக்கக் கூடாது’’ என்று கலாய்த்தார் உ.ஆ. நண்பர். அதற்குள் ட்ரம்ஸ் டேனியல், ‘‘ஃபாஸ்ட் பீட்டா ஒண்ணு பாடுங்க தலைவா...’’ என்றார். சட்டென்று ரெண்டுக்கும் ஏத்த மாதிரி ரூட்டைமாத்தி, ‘‘ஒரு Girlஐப் பார்த்து Moonஐப் பார்த்தேன். Moonல் Chilness இல்லை, அவள் Eyesஐப் பார்த்து Flowerஐப் பார்த்தேன். Flowerல் Brightness இல்லை’’ என்று வேகமான பீட்டில் வாத்யார் பாட்டைப் பாட, ட்ரம்மர் செம தட்டுத் தட்ட, அனைவரும் கைகளைத் தட்ட, உற்சாகம் தூள் பறந்தது. இந்த இடை நேரத்தில் அப்படி இப்படியென்று ஒரு மணி நேரம் ஓடிவிட்டிருக்க, ‘‘சரி, புறப்படலாம்’’ என்றார் தலைவர். ஹப்பாடா!

ஆறே முக்காலுக்கு வேன் தியேட்டரை நோக்கிச் செல்ல, நானும் மற்றொருவரும் காபி குடிக்க வேண்டும் என்க, அனைவரும் ஆமோதிக்க ஒரு டீக்கடை அருகில் வேன் நிறுத்தப்பட்டது. காபியும், டீயும் ஆர்டர் செய்யப்பட்டு, கிடைதததும் குடிக்க ஆரம்பித்தோம். என்னுடன் காபி குடித்த நண்பன், ‘‘காபில பால் ரொம்ப கம்மியா ஊத்திட்டார். ஒரே டிகாஷனா இருக்கு’’ என்றான். ‘‘கடைக்காரரைப் பாத்தயில்ல... மலையாளி. பாலக்காட்டுக்காரரா இருப்பார்..’’ என்றேன். ‘‘எப்படிச் சொல்றீங்க?’’ என்று அவன் கேட்க, ‘‘பாலக்காட்டார் என்பதால தான் காபிலகூட பாலக் காட்டாம குடுத்துட்டாரு...’’ என்றேன். இந்த வார்த்தையை நான் முனைவர் கு.ஞானசம்பந்தனின் புத்தகத்திலிருந்து உருவினேன் என்பது தெரியாததால் சுற்றியிருந்த மூன்று நண்பர்களும் சிரித்தனர்.

கொடைக்கானலின் ஒரே தியேட்டர் மிகப் புராதனமாயிருந்தது. டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கியதும், டிக்கெட் கிழிப்பவர் அதைப் பெற்றுக் கொண்டு உள்ளே அனுமதிக்கிறார். வேறு உள்நுழைவு வாயில் கிடையாதாம். தியேட்டரின் உள்ளே போனதும் அது சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது. அவ்வளவு பழமை! ‘பரதேசி’ படம் ஓடத் துவங்கி பத்து நிமிஷங்கள் கழித்து அந்தத் தியேட்டரின் ஸ்பீக்கர்களின் சவுண்ட் சிஸ்டம் காதுக்குப் பழகிய பிறகுதான் என்ன வசனம் பேசுகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடிந்தது. அதுவரை ஏதோ வழவழா கொழகொழாவென்று ஏதோ பேசுவதாகத்தான் புரிந்ததே தவிர, என்ன பேசுகிறார்கள் என்பதே புரியலையே...! கொடுமைடா சாமி!

‘பரதேசி’ படத்தின் விமர்சனத்தைப் பலரும் எழுதியதை பல தளங்களில் படித்திருப்பீர்கள் என்பதால் நான் அதிகம் சொல்லப் போவதில்லை. பாலாவின் ‘நான் கடவுள்’ படம் பார்த்தபின் என்னுள் எழுந்த ஒருவிதமான ‘அவெர்ஷன்’ நீங்கவே பலநாள் ஆனது என்பதால் நானாக விரும்பி பரதேசிக்குப் போயிருக்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் கூட்டிச் சென்ற தலைவருக்கு நன்றி. பாலா வழக்கமாக தன் படங்களில் காமெடி வைக்கிறேன் என்று அபத்தமாக ஏதாவது காட்சி அல்லது பாடல் வைத்து சோதிப்பார். இந்தப் படத்தில் அந்த சமரசம் கூட இல்லாமல் மிக அருமையாகச் செய்திருந்தார். A Neat Film! என்னைப் பொறுத்தவர‌ை பாலாவின் படங்களில் இதுதான் ‘தி பெஸ்ட்!’ கொரிய நாட்டுத் திரைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், ‘‘என்னமா ஃபீலிங்ஸை காட்சிப்படுத்தறாங்க. மனசைப் பாதிச்சிடுது இந்தப் படங்கள். தமிழ்ல யாரும் இப்படி ட்ரை பண்றதில்லையே’’என்று ஒரு வருத்தம் என்னுள் எழும். அந்தக் குறையைப்‌ போக்கிய, உலக சினிமாக்களுக்கு ஒரு மாற்றும் குறையாத தமிழ்த் திரைப்படம் ‘பரதேசி’ என்பேன்.

நம்ம மனஸ் இருக்கே...  அதுக்கு எப்பவுமே புத்திசாலித்தனமா படத்தை க்ரிட்டிசைஸ் பண்ணி ஆழமா கேள்வில்லாம் கேக்கத் தெரியாது. ரொம்ப பாமரத்தனமா கேக்கும் கேள்விகளை... உதாரணத்துக்கு ரெண்டு இங்க. 1) இந்த பாலா ஏன் எந்தப் படமா இருந்தாலும் ஹீரோவோட தலையை மாடு மேஞ்ச மாதிரி ஒரு கிராப் பண்ணி வெக்கறாரு? 2) அந்த வெள்ளைக்கார துரை எஸ்டேட்ல ஒரு பொண்ணை கை வெக்கறாரு- கணவனாக காப்பாத்த முடியாத நிலையில - ஆக்சுவலி அந்தப் பொண்ணைவிட கூட நிக்கற தன்ஷிகாவே அழகா இருக்கா. அவ மேல கை வைக்கணும்னு ஏன் வெள்ளக்காரனுக்குத் தோணலை? பாத்தீங்களா ஸார்/மேடம்... இந்த சின்னப்புள்ள மனஸை என்ன சொல்லி அடக்கறது? ‘‘இ‌‌தோபாரு...சின்னச் சின்னதா நிறைய குறை கண்டுபிடிக்கறதையெல்லாம் இந்த மாதிரி நல்ல படங்களைப் பொறுத்தவரை நிறுத்திக்க. பாஸிடிவ் பாயிண்ட்டை மட்டும் பாத்து படத்தை ஓடவெச்சாதான் நிறையப் பேருக்கு இதுமாதிரி முயற்சிக்க தைரியம் வரும்’’ன்னேன்.

தியேட்டரை விட்டு வெளியே வந்தால் மெல்லிய சாரல் மழை பொழிந்து கொண்டிருந்தது. ஆளாளுக்கு கிடைத்த ஷெல்டரில் ஒண்டிக் கொள்ள... தொலைவில் நிறுத்தியிரு்ந்த எங்கள் ரதத்தை எடுத்துவர ஓடினார் ரதசாரதி! அப்போது எங்களைக கடந்து சென்றவர்கள் பேசியதைக் கவனித்தேன். இரண்டு கான்ட்ராஸ்டான விமர்சனங்கள் காதில் விழுந்தது. 1) ‘‘பாலா இந்தப் படத்தை எடுத்ததுக்கு்ப் பதிலா பேசாம ஒரு குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புறப் படுத்துத் தூங்கியிருக்கலாம்டா...’’ 2) ‘‘மனசை உலுக்கிடுச்சு மாப்ளே... இன்னிக்கு நைட்டு சுத்தமாத் தூக்கம் வராது...!’’ இந்த இரண்டில் விமர்சனங்களில் உங்களின் ஓட்டை எந்த விமர்சனத்திற்குப் போடுவீர்கள்?

ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த எங்கள் காட்டேஜுக்குச் செல்ல, குறுகிய பாதைகள்/ வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். மெயின் ரோடுகளைத் தாண்டியதும் பார்த்தால் மழை + பனியில் கண்ணாடிக்கு வெளியே சாலையே தெரியவில்லை. டிரைவர் மிக மெதுவாக வண்டியை ஓட்டியபடி துணி மற்றும் பேப்பர்களை வைத்துத் துடைத்தும் மிக மங்கலாகத் தெரிந்தது. வேனுக்கு வெளியே தலையை நீட்டி... ஸாரி, பாதி உடம்பையே நீட்டி சாலையைக் கவனி்த்தபடி வாகனத்தை மிக மெதுவாக ஓட்டிச் சென்று எங்களை காட்டேஜில் சேர்த்தார் டிரைவர். ‘ஹப்பாடா... ஒரு வழியா வந்தாச்சுப்பா...’’ என்று ஆசுவாசப்படுத்தியபடி முதல் தின நிகழ்ச்சிகளின் முடிவாக, அவரவர் அறையில் சென்று இரண்டு கம்பளிகளைப் போர்த்திக் கொண்டு உறங்கத் துவங்கினோம்.

                                                                                                                  -தொடர்கிறேன்...

Wednesday, April 10, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 3

Posted by பால கணேஷ் Wednesday, April 10, 2013
வேன் சற்று தூரம் வந்ததும் தூண்பாறைக்கு 8 கிலோமீட்டர் இருப்பதாகச் சொல்லியது போர்டு. வழக்கம் போல பாட்டுக் கச்சேரியுடன் வேன் செல்ல, சற்று நேரத்திலேயே வேனை நிறுத்தினார் ஓட்டுனர். ‘‘இந்த இடத்துக்கு பைன் மரக் காடுகள்னு பேரு ஸார்! இறங்கிப் பாத்துட்டு வாங்க’’ என்றார். ‘‘இந்த ஊசியிலைக் காட்டை 1906ம் ஆணடில் பிரயண்ட் என்பவர் உருவாக்கினார். கொடைக்கானலைப் பசுமையாக்கும் முயற்சியில் மலைப் பகுதியில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்‌த்தார். இது இப்போது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது’’ என்று நான் படித்தது நினைவில் வர... அனைவருடனும் வேனை விட்டு இறங்கினோம்.

ஊசியிலைக் காடுகளே, முத்துமழை மேகங்களே!
மலைச்சரிவில் சீரான இடைவெளி விட்டு வளர்க்கப் பட்டிருந்த பைன் மரங்களுக்கிடையில் இறங்கிக் கீழே சென்றால் ஒரு சமதளம் வருகிறது. அங்கே வந்திருந்த பல குழுக்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சரி, நாமும் இறங்கலாம் என்று நாங்களும் இறங்கத் தொடங்கினோம். கால்களை அழுந்த வைத்து மிக ஜாக்கிரதையாக இறங்க வேண்டிய சரிவு. சற்று அசந்தால் கால் ஸ்கேட்டிங் செய்து, கீழே ‘மூன்றாம் பிறை’ கமல் மாதிரி உருண்டே போய் விடுவோம். கையில் காமிரா வேறு இருந்ததால் மிக உஷாராகவே இறங்கினேன். ஒவ்வொரு மரத்தையும் நிமிர்ந்து பார்த்து வியக்க வேண்டியிருந்தது! என்ன அழகு! ‘தேடும் கண் பாவை தவிக்க’ என்று சிங்கப்பல் மைக் மோகன் போல மரங்களிடையே தாவித் தாவிப் பாடலாம் போல இருந்தது. உடன் அமலா இல்லாததால், மரத்தின் மேல் சாய்ந்து ஒரு படம் மட்டும் எடுத்துக் கொண்டேன்.

நானாவது பரவாயில்லை... எங்களுடன் வந்திருந்த ஒரு உதவி ஆசிரியர் - அவர் ஒரு கவிஞர் - இந்த ‌ஊசியிலைக் காட்டைக கண்டதும் உற்சாகத்தின் எல்லைக்கே போய்விட்டார். கடகடவென்று மரத்தில் ஏற ஆரம்பித்து விட்டார். நாங்களும், சுற்றிப் பார்க்க வந்திருந்த மற்றவர்களும் வியந்து பார்க்க... எங்களைப் போலவே மற்ற குழுவினரும் அவரைப் போட்டோ எடுத்தனர். 

‘முன்னோர்’களை விட வேகமாக மரமேறியவர்!
 நல்லவேளையாக... பாதி மரம் வரை ஏறிவிட்டு, கீழே குதித்தார். சின்ன வயதில் கிராமத்தில் வசித்த காலங்களில் மரம் ஏறுதலும், நீந்திக் குளித்தலும் நிறைய இருந்தது என்றும், நகர வாழ்க்கையில் மறந்து போனது இப்போது நினைவு வந்தது என்றும் சொன்னார். சில்லென்ற காற்றை நுகர்ந்தவாறே கீழே இறங்கி, பின் மேலேறி வந்தது தனி உற்சாகம் தந்தது. மேலே வந்தால்... அங்கே நின்றிருந்த வேன்களிலும், அருகாமை மரங்களிலும் ஏராளமான ராமதூதர்கள் குடும்பம் குடும்பமாக புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் ‘க்ளிக்’கிக் கொண்டதும் வேன் புறப்பட்டது.

எங்க ராஜ்யத்துல குறுக்க வந்தது நீங்கதானே மக்காஸ்! என்கின்றன...

தூண் பாறையை அடைந்து வேனைவிட்டு இறங்கியதும் பார்த்தால், அந்தப் பகுதியே மஞ்சு(மேக) மூட்டமாக இருக்க... ஐஸ் காற்று சில்லென்று வருடிச் சென்றது.

இப்படி மஞ்சு மூடியிருந்தா எப்படி ஸைட் ஸீயிங்? ஒன்லி ஸீயிங் மஞ்சு!

இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது உபரித் தகவல்.

மார்த்./மஞ். வண்டியில் வந்த மைனாக்கள்!
வேனை விட்டு இறங்கிய நேரத்தில் மார்த்தாண்டத்திலிருந்து வந்த ஒரு மஞ்சள் பஸ் சற்றுத் தொலைவில் வந்து நிற்க, ‘‘ஏ, அதோட ஹாரனை கேட்டியளா? படுபாவி!’’ என்றார் நண்பர். ‘‘கவனிக்கலையே...’’ என்றேன். என் கவனம் எங்கே இருந்தது என்பதை நான சொல்ல மாட்டேன்பா...! அவன் மீண்டும் வண்டியை நகர்த்த ஹாரன் அடித்த போது கவனித்தேன்... பாம்புப் பிடாரர்கள் வாசிக்கும் மகுடி சத்தத்தை ஹாரனாக வைத்திருந்தான்!

மேக மூட்டத்தை அனுபவித்தபடி தூண் பாறையின் அருகில் சென்று கையருகில் நகரும் மேகத்தை ரசித்தபடி பசுமையான அந்தப் பின்னணியில் படங்கள் எடுத்துக் கொண்டோம். சற்றுத் தூரத்தில் டவர் அருகில் தங்களை மறந்து இருந்தது ஒரு ஜோடி அருகில் சிலர் வந்து தங்களைப் படமெடுக்க முற்பட்டதையும் பொருட்படுத்தாமல், ‘எவன் வேணாலும் க்ளிக்கிக்க’ என்று உலகை மறந்து இருந்தனர். யாவற்றையும் பார்த்தபடியே வர... அங்கே இருந்த ஒரு பாறையின் மேல் சாய்ந்தபடி நான் போஸ் கொடுக்க... அந்த என் அழகை(?) ரசித்து இந்தப் பெண் தன் காமிராவில் சிறைப்படுத்துகிறாள் பாருங்கள்... ஹி... ஹி...!

என்னமா ரசிக்குதுய்யா இந்தப் புள்ள... நம்ம ரசிகையா இருக்குமோ!
தூண் பாறையருகில் நிறைய நேரம் செலவழித்துவிட்டு வெளியே வர... வரிசையாக இருந்த கடைகள் எங்கள் குழுவை ஈர்த்தன. நான் ‘கொடை ஸ்பெஷல்’ சாக்லெட் கால்கிலோவும், கீசெயின் போன்ற சில பொருட்களும் வாங்க, உடன் வந்தவர்கள் விளையாட்டு பொருட்கள், துணி வகைகள் என்று பெரிய பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்தார்கள். அதிலும் நீண்ட நேரம் செலவாகி விட... தூண் பாறையிலிருந்து கிளம்பலாம் என்று நினைத்த போது மணி இரண்டரை ஆகிவிட்டிருந்தது. காட்டேஜ் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு சிறு ஓய்விற்குப் பின் ஏரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் தலைவர்.

வாழ வைக்கும் காதலுக்கு ஜே! தாராளமா க்ளிக்கிக்குங்க!
மதிய உணவாக மட்டன் குழம்பு வைத்திருந்தார்கள். நான் மட்டன் சாப்பிடுவதில்லையாதலால், ரசம் சாதம், மோர் சாதம் ஆகியவற்றை உருளைக்கிழங்கு பொறியல் மற்றும் அப்பளத்தின் உதவியுடன் சாப்பிட்டேன். ‘‘கொஞ்ச நேரம் ரெஸ்‌ட் எடுத்துட்டு, நாலு மணிக்கு ரெடியாயிடுங்க. போட்டிங் போகணும்’’ என்று தலைவர் சொல்ல, அவரவர் அறைகளில் சென்று படுக்கையில் விழுந்தனர். முதல்தினம் இரவு முழுவதும் பயணித்த அலுப்பு.... ஆளாளுக்கு குட்டித் தூக்கத்‌தைப் பெருந்தூககமாகப் போட்டுவிட, அனைவரும் தயாராகி வந்தபோது மணி ஐந்தேகாலைக் கடந்து விட்டிருந்தது.

இரவு உணவு்க்கு என்ன தயாரிக்கலாம் என்று கேட்டுப்போக வந்திருந்த விடுதிப் பொறுப்பாளர், ஐந்தரைக்கு மேல் படகுகளைத் தர மாட்டார்கள் என்றும், இனி ஏரிக்குப் போவது வேஸ்ட் என்றும் கருத்து தெரிவித்தார். அடடா... இனி என்ன செய்வது என்று அனைவரும் யோசித்த வேளையில் ‘‘சினிமாவுக்குப் போகலாம்’’ என்றார் தலைவர். அனைவரும் ஆமோதித்து ‘பாலா’வின் ‘பரதேசி’ திரைப்படத்திற்குச் செல்வதென்று ஏகமனதாக முடிவெடுத்தோம் - காரணம்.... கொடைக்கானலி்ல இருந்தது ஒரே தியேட்டர், அங்கே ஓடியது பரதேசி படம் என்பதால்! ஹி.... ஹி...!

‘‘தியேட்டர்ல நீங்க ஏழு மணிக்கு இருந்தாப் போதும் ஸார். அதிகம் கூட்டம் இருக்காது. ஏழு மணிக்குத்தான் டிககெட் கொடுக்கவே ஆரம்பிப்பாங்க’’ என்றுவிட்டுப்‌ போய்விட்டார் வி.பொ. அப்போது மணி ஐந்தரைதான் ஆகியிருந்தது. ஏழு மணிக்குத் தியேட்டருககுப் போனால் போதும் என்றால் ஆறே முக்காலுக்குப் புறப்பட்டால் போதும், இன்னும் ஒன்றேகால் மணி நேரத்தை ஓட்ட வேண்டுமே... என்ன செய்யலாம் என்றார் ஒரு நண்பர். அப்போதுதான் தலைவர் அந்த வார்த்தைகளைச் சொன்னார் அனைவரையும் பார்த்து...! அதுவரை சந்தோஷமாக பொழுது கழிந்ததை ரசித்து வந்த எனக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் (நான் முன்பு குறிப்பிட்டிருந்த) பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, வயிற்றைக் கலக்கியது. அது...?

                                                                                                           -தொடர்கிறேன்...!

Friday, April 5, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 2

Posted by பால கணேஷ் Friday, April 05, 2013
மு.கு.1 : சென்ற பகுதியில் இரவில் ஒரு அதிர்ச்சி என்று நான் குறிப்பிட்டதை மாலையில் என்று திருத்தி வாசிக்கவும்.

மு.கு.2 : இது நான் நிஜமாகவே பயணம் போய் வந்து எழுதுவதா, இல்லை கற்பனையூரில் பயணித்து எழுதுவதா என்று தாய்க்குலங்கள் சந்தேகிக்கிற காரணத்தால்... நான் எழுதுவது முழுவதும் பொய்க்கலப்பற்ற நிஜம் என்பதை சூடம் அணைக்காமலும், வேட்டியைப் போட்டுத் தாண்டாமலும் சத்தியம் செய்கிறேன்.

மு.கு.3 : அப்படி அவர்கள் சந்தேகப்பட்டதால் கொடைக்கானல் படங்களை மட்டும் போடலாம் என்றிருந்த நான், அங்கே என்னை எடு்த்த படங்களையும் போட முடிவு செய்துவிட்டேன். மனதை திடப்படுத்திக் கொள்க. ஹி... ஹி...!

 
காலை 5.45 மணிக்கு காற்றில் குளிர் இருந்தது. பனிப் படலம் கண் முன்னால் அசைந்தது. ஸ்வெட்டர் எதுவும் அணியாததால் உடல் சற்றே நடுங்கியது. ‘‘என்னா குளிர் பாருய்யா!’’ என்றேன் உடன் நடந்த நண்பரிடம். ‘‘கரெக்ட் சார்’’ என்று அவர் சொல்ல... ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகணேஷா?’’ என்றது மனஸ். வெள்ளி அருவியில் தண்ணீர் சீஸன் இல்லாத காலங்களில பணக்காரன் விடும் கண்ணீர் போல மிக மெல்லிய கோடாக விழும் என்றும், சீஸன் சமயங்களில் அடர்த்தியான கூந்தலுள்ள பெண்ணின் பின்னல் போல தடித்து விழும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் நான். நாங்கள் சென்ற சமயம் சீஸனின் மிகத் துவக்கம் என்றாலும், அருவியில் துல்லிய வெள்ளியை உருக்கி ஊற்றிய மாதிரி நன்றாகத் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.

வெள்ளி அருவியின் நுழைவாயில்!

‘‘ஹையா! சிலுசிலுன்னு காத்துல, அருவி விழறதைப் பாக்கும் போது பாடலாம் போல இருக்கு. இந்த மலையில எங்கருந்துதான் தண்ணி உற்பத்தியாகுதோ...?’’ என்றார் நண்பர்-2. (அவர் பார்ட்டைமாக இசைக்குழு ஒன்றில் பாடவும், வாத்தியம் இசைக்கவும் செய்கிறார்). ‘‘ஊற்றுலருந்து வர்ற நீர்வீழ்ச்சி இல்ல நண்பா இது. கொடைக்கானல் ஏரியில இருந்து வர்ற தண்ணீர்தான் இந்த நீர்வீழ்ச்சியோட துவக்கம். கடல்மட்டத்துல இருந்து 5900 அடி உயரத்துல இருக்கறதால மிகத் துல்லியமான சுத்தமான தண்ணீர் இது. பாக்கறதுக்கு வெள்ளியை உருக்கி ஊத்தின மாதிரி இருக்குல்ல... அதான் ‘வெள்ளி நீர்வீழ்ச்சி’ன்னுபேரு...’’ என்றேன் நான். ‘‘யப்பா! எப்படி இப்படி தகவலாக் கொட்டறீங்க? என்னா மெமரி உங்களுக்கு!’’ என்றார் நண்பர் ஆச்சரியமாக. ‘‘அதெல்லாம் ஒரு மண்ணுமில்லய்யா. டூர் கிளம்பறதுன்னு முடிவானதுமே எந்தெந்த இடங்கள் சுத்திப் பாக்க இருக்கு? அதோட விசேஷங்கள் என்னன்னு கூகிள்ல சர்ச் பண்ணி குறிப்பெடுத்துக்கிட்டேன். அவ்வளவுதான்!’’ என்றேன்.

பார்க்கவே பிரசவம்... ச்சே, பரவசம் தரும் நீர்வீழ்‌ச்சிœ!
வெள்ளி அருவியை சற்று நேரம் ரசித்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் வேனுக்குத் திரும்பலாம் என்று வந்த எங்களை அங்கிருந்த கடைகள் வரவேற்றன. தைலம், சாக்லெட்டுகள் போன்றவற்றை விற்கும் கடைகளும், அருகிலேயே டீ மற்றும் டிபன் கிடைக்கும் கடைகளும் இருந்தன. ‘‘நமக்கு புக் பண்ணியிருக்கற காட்டேஜ்ல டிபன் காத்துட்டிருக்கும். அதனால ஒரு காப்பி மட்டும் குடிச்சுட்டு போயிரலாம்’’ என்றார் தலைவர். டீக்கடையில் அருகில் வந்தால்... அங்கே ஃப்ரெஷ்ஷாக செடியிலிருந்து பறித்த கேரட்டுகளை வைத்திருந்தார்கள். பார்க்கவே அவ்வளவு அழகாக, ஆசையாக இருந்தது. மூன்று கொத்து கேரட்டை வாங்கி அனைவரும் ஷேர் பண்ணிக் கொண்டு, காபி குடித்தபின் வேன் ஏறினோம்.

பச்சைப்‌ பசேலென்று... ஸாரி, செக்கச்செவேல் கேரட்!
நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த காட்டேஜ் மிக அழகாகவே இருந்தது. தரைமட்டத்திலிருந்த உயர்த்திக் கட்டப்பட்டிருந்த அதில் முதல் தளத்தில் இரு பெரிய அறைகளும் இரண்டாம் தளத்தில் மூன்று சிறிய அறைகளும் இருந்தன. கீழே 3 + 3 = 6 பேரும், மேலே 2+2+2 ஆக 6 பேரும் அவரவருக்கான அறைகளை முடிவு செய்ததும் தலைவர், ‘‘இப்ப மணி ஏழரை. ஒன்பது மணிக்கு குளிச்சு ரெடியாகி கீழ்தளத்துக்கு வந்துடு்ஙக. டிபன் ரெடியாயிருக்கும். சாப்டுட்டு புறப்படலாம்’’ என்றார். அறைக்குச் சென்று குளிக்கலாம் என்று ஹீட்டரைப் போட்டால், தண்ணீர் சூடாக வரவில்லை. ‌மிக வெதுவெதுவெனத் தான் வந்தது. ‘‘இப்பத்தான் கரண்ட் வந்துச்சுங்க...’’ என்றார் விடுதிப் பராமரிப்பாளர். அப்போதுதான் நாம் சென்னையிலில்லை, தென்தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பது உறைத்தது. தமிழக அரசை வாழ்த்தியபடி குளித்துத் தயாரானேன்.

காட்டேஜிலிருந்து என்னை எடுத்தது!
மணி 8.30 தானே ஆகுது, நாம வந்துட்ட தகவலை வீட்டுக்குச் சொல்லலாம் என்று செல்லைக் கையிலெடுத்தபடி அறையை விட்டு வெளியே வந்தேன். காலைப்பனியில் எதிரில் தென்பட்ட மலையின் அழகை க்ளிக்கியபடி டயல் செய்ய, பக்கத்து அறையில், மேல் தளத்தில் இருந்தெல்லாம், ‘‘ம்ம்ம்... வந்துட்டேம்மா. குளிச்சாச்சு. இனிதான் சாப்பிடப் போறேன்’’ என்று குரல்கள் கேட்டன. எல்லாருமே அவரவர் வீணையை விட்டுப் பிரிந்து வந்த காரணத்தால் (சம்சாரம் என்பது வீணை - கண்ணதாசன்) ஆளாளுக்கு பேசறாங்கன்னு புரிஞ்சதும் சிரிப்பு வந்துடுச்சு. ம்... Houseக்கு ஹவுஸ் Door Steps!

போன் பேசி முடிச்ச நேரம் காலை டிபன் வந்துசேர, அதன்பேரில் பாய்ந்தோம் அனைவரும். காரணம்... நேற்று இரவு உணவுக்காக நிறுத்தப்பட வழிநடை ஓட்டல் கழிசடை ஓட்டலாக இருந்ததும், அங்கே வறட்டி மாதிரி காய்ந்துபோன சப்பாத்தியும், ஆஃப்பாயில்டு தோசையும் மட்டுமே கிடைத்ததால் யாரும் சரியாகச் சாப்பிடாததும்தான்! சும்மா சொல்லப்படாது. டிபன் அருமையான ப்ரிப்பரேஷன்! மெதுமெது இட்லி, க்ரிஸ்பி வடை, கமகம பொங்கல், காரமான சட்னியும், வெங்காய சாம்பாருமாக... ஆஹா...!  டிவைன்! (சாப்பாட்டைப் பத்தி எழுதினா இந்த வார்த்தையும் வரணும்ல...? ஹி... ஹி....)

குறிஞ்சியாண்டவர் ஆலய முகப்பு!
ம்பிரதாயப்படி முதலில் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு வேனை செலுத்தச் சொன்னார் தலைவர். கோயிலை அடைந்ததும் அதன் முகப்பில் படங்கள் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே கேமரா அனுமதி இல்லையாம்! குறிஞ்சியாண்டவர் கோயில் சிறியதாக இருந்தாலும் அழகாக இருந்தது. முருகப் பெருமானும் அப்படியே... சிறிய மூலவராக இருந்தாலும் கொள்ளையழகாக இருந்தார். பிராகாரத்தில் நாங்கள் நடக்க, ‘‘தலைவா! இந்தக் கோயிலப் பத்தி என்ன குறிச்சு வெச்சீங்க/’’ என்று மறக்காமல் கேட்டார் நண்பர். ‘‘அதுவா..? 1934ம் ஆண்டுல ஐரோப்பாவுலருந்து வந்த லீலாவதிங்கற அம்மையார் கட்டினது இந்தக் கோயில். இப்ப பழநி கோயிலோட கட்டுப்பாட்டுல இது இருக்குது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கற குறிஞ்சிப் பூவை அது பூக்கற வருஷத்துல வந்தா இங்க பாத்து மகிழ முடியும்’’ என்றேன் நான்.

‘‘லாஸ்ட்டா எப்ப அந்தப் பூ பூத்தது? இனிமே எப்பப் பூக்கும்?’’ மற்றொரு நண்பர் கேட்க, ‘ழே’யெனறு விழித்தேன் நான்.‘‘ஸாரிப்பா... அதை நோட் பண்ணிக்கணும்னு தோணாமப் போச்சே...’’ என்றபடி தரிசனம் முடித்து பிராகாரத்தில் சற்று நேரம் அமர்ந்தோம். ஆலயத்தின் தரையை கிரானைட்டால் அமைத்தது ராமசுப்பையரின் குடும்பத்தினர் என்று தங்களின் சரித்திர சாதனை(!)யை கல்வெட்டாக பிராகாரத்தில் பொறித்திருந்தது தினமலர் நாளிதழ். ஆலயத்தை விட்டு வெளியே வந்து அங்கிருந்த கடைகளில் ஒரு ரவுண்ட் அடித்தோம்.

ஆலய வாசலில் எங்கள் குழுவின் ஒரு பகுதி!
அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். ஸ்டைல் தொப்பிகள் (பாடும்போது நான் தென்றல்காற்று) அழகாக இருக்கவே அதில் ஒன்றை எடுத்து, ‘‘என்ன விலைங்க?’’ என்றேன். ‘‘130 ரூபாய்ங்க...!‘‘ என்றார் கடைக்காரர். ‘யப்பா!’ என்று பின்வாங்கி வேனுக்குப் பாய்ந்து விட்டேன். வேன் டிரைவர் வேனைக் கிளப்ப, ‘‘அடுத்து எங்க போறோம் தலைவா?’’ என்று கேட்டேன். ‘‘தூண் பாறைக்குப் போலாம் சார்!’’ என்றார் அந்த மலைப் பிரதேசத்தின் விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்த வாகன ஓட்டுனர்!

                                                                                                                 -தொடர்கிறேன்....

மே.மை. இப்போது : இருபதாண்டுகளுக்குப்பின்-2

Monday, April 1, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 1

Posted by பால கணேஷ் Monday, April 01, 2013
னவரி மாதம் புத்தகக் கண்காட்சி முடிந்த பின்னர் அலுவலகத்தில் அந்தத் தகவல் சொல்லப்பட்டது. டிசம்பர் மாதம் முழுவதும் பு.கண்காட்சிக்குள் நிறைய ப்ராஜக்ட்களை முடிப்பதற்காக அனைவரும் இரவு பகலாக விடுமுறை எடுக்காமல் பணி செய்ததற்குப் பரிசாக ஒரு உல்லாசப் பயணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று. இருப்பினும் எப்போது என்பது தெரியாமலேயே இருந்தது. இதற்கிடையில் மற்ற துறைகளில் இருந்தவர்கள் தங்கள் தங்கள் குழுவுடன் சென்று வந்துவிட, நாங்கள் அதைப் பார்த்து ‘ழே’யென்று விழித்துக் கொண்டுதான் இருந்தோம்.

ஒருவருக்கொருவர் ஆர்வமாக அதைப் பற்றிப் பிரஸ்தாபித்து, எப்போது எப்போது என்று ஆர்வக் கேள்விகள் எழுப்பி ஓய்ந்து, சரி... இனி நடந்தா நடக்கட்டும்பா என்று ஓய்ந்திருந்த வேளையில் திடீரென்று அனைவரையும் அழைத்து டூர் ஓகே ஆகிவிட்டது என்றும், வரும் வாரத்திலேயே மூன்று நாள் டூராக கொடைக்கானல் சென்று வரலாம் என்றும் பிரிவுத் தலைவர் அறிவித்தார். ரயில் டிக்கெட்டுகள் புக் பண்ணலாம் என்று பார்த்தால் எல்லாம் ஒரு மாதத்திற்கு ஃபுல் என்றது இணையம். பஸ்ஸில் போவது சரிப்பட்டு வருகிற விஷயமாகத் தெரியவில்லையே... என்ன செய்வது என்றெல்லாம் ஆலோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

சென்னையிலிருந்து மதுரை வரை ஃப்ளைட்டில் சென்று, அங்கிருந்து வேன் வைத்துச் செல்லலாம் என்று நான் சொன்னதற்கு என் சகாக்கள் ஏன் அப்படி முறைத்தார்கள் என்றுதான் சத்தியமாக எனக்குப் புரியவில்லை. இப்படி ஆளாளுக்கு யோசனைகள் சொல்லியபின், ஒரு டெம்போ டிராவலர் வேன் ஏற்பாடு செய்யப்பட்டு அதிலேயே மூன்று தினங்களும் சென்று சுற்றி வரலாம் என்று முடிவானது. வெள்ளி இரவு கிளம்பி சனி, ஞாயிறு, திங்கள் மூன்று தினங்கள் சுற்றிவிட்டு செவ்வாய் காலை சென்னை வந்து ஊர் சுற்றிய களைப்பு நீங்க ஓய்வெடுத்தபின் புதன் கிழமை வேலைக்கு வந்தால் போதும் என்று முடிவாக சொல்லப்பட்டது புதன்கிழமையன்று. அனைவரும் மகிழ்ச்சியுடன் மீதமிருககும் இரண்டு நாட்களில் பயணத்துக்கு எங்களை தயார்படுத்திக கொண்டோம்.

நான் மட்டும் பயணத்துக்கு தயார்படுத்துவதுடன் பார்க்கிற விஷயங்களை எழுதி உங்களையும் படுத்தலாம் என்று முடிவெடுத்திருந்த காரணத்தால் கூடுதல் மகிழ்வுடன் தயாரானேன். எழுதினால் மட்டும் போதாதே... அங்கங்கே விஷுவலாகப் புகைப்படங்கள் வைக்கா விட்டால் சுவாரஸ்யம் வராதே என்று எண்ணம் எழுந்தது. நான் அதிகம் கேமராவைக் கையாண்டு படங்கள் எடுத்தவனில்லை. எடுத்த ஒன்றிரண்டு சமயங்களிலும் க்ளிக் செய்யும் போது கை ஷேக் ஆனதால் ப்ளர் ஆன படங்களாக அமைய, திட்டுதான் வாங்கியிருக்கிறேன். இருந்தாலும் ஆசை யாரை விட்டது...? உறவினர்கள் ஒவ்வொருவருக்காக போன் செய்ய, ‘என் கேமரா ரிப்பேர்’, ‘என் கேமரா திருட்டுப் போயிடுச்சு’ என்பதான பதில்கள்தான் வந்து ஏமாற்றமடையச் செய்தன.

‘உறவுகள் ஒத்துவராது. நட்புகள்தான் கைகொடுக்கும்’ என்பதை (வழக்கம்போல்) உணர்ந்து நண்பர்களிடம் கேட்கலாம் என்று முடிவு செய்‌ததும் முதலில் நினைவுக்கு வந்தவர் நண்பர் ’தல’, ‘அடையாறு அஜீத்’ என்றெல்லாம் அ‌னைவரும் அன்போடு அழைக்கும் சென்னைப்பித்தன் அவர்கள்! பதிவர் சந்திப்பு உள்ளிட்ட விழாக்களில் அவர் புகைப்படங்கள் சுடு‌வதைக் கண்டதுண்டு. அந்தக் கேமராவையும் வியந்ததுண்டு. அவரிடம் கேட்டதும் ஒரு கணமும் யோசிக்காமல் தயக்கமின்றி, ‘‘வந்து வாங்கிக்கங்க’’ என்றார். மிகமிக மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொல்லி (நம்மளையும் நம்பிட்டாரேய்யா...) கேமராவை பெற்றுக் கொண்டு புறப்படத் தயாரானேன். நாமல்லாம் ராமலக்ஷ்மி மேடம் அளவுக்கு சூப்பரா எடுக்காட்டியும், ஏதோ சுமாராவாவது எடுத்துரலாம்னு மனசுல நம்பிககையிருந்தது. இங்க நீங்க இனி பார்க்கப்போற படங்கள் 90 சதவீதம் நாஆஆஆனே சுட்டவை. அவை நன்றாக வ்நதிருக்கின்றன என்பதில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி. அதற்குக் காரணமான நண்பர் சென்னைப்பித்தனுக்கு இங்கு மீண்டும் ஒரு முறை மனம் நிறைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘மலைகளின் இளவரசி’யிலிருந்து நான் சிறைபிடித்த இயற்கை எழில்!

வெள்ளி மாலை வேன் வந்ததும் அனைவரும் ஏறி அவரவர் இடத்தைப் பிடித்தோம். வேன் ஓட்டுனர் இளைஞராக இருந்தது மற்றொரு பெரும் ஆறுதல். அதனால் அவர் வேனிலிருந்த டிவியில் படம் போட்டுப் பார்க்க வைத்ததுடன் பகல் நேரங்களில் டிவிடியில் அவர் வைத்திருந்த MP3 பாட்டுக்களின் கலெக்ஷனையும் போட்டு பயணத்தை .உற்சாகமாக வைத்திருக்கப் பெருமளவு உதவினார். (அவர் படம் போட்டதால் வந்த உபத்திரவம் கீழே..) நான் வேலை பார்க்கும் பிரிவில் தலைவர் மற்றும் மேல்நிலை,  கீழ்நிலை எல்லாருமாகச் சேர்த்து புறப்பட்டவர்கள் மொத்தம் பன்னிரண்டு பேர். இந்த வித்தியாசமெல்லாம் கிளம்பும் முன் வரைதான். அந்த மூன்று தினங்களும் அனைவரும் ஒரே நிலையில் நண்பர்களாக மட்டுமே இருந்தது மிகமிக வித்தியாசமான அனுபவம்.

வேனில் தலைவர் மற்றும் ஒருவர் தவிர அனைவரும் ஏறிட அலுவலகத்திலிருந்து பெப்ஸிகலமாகப் (எப்பவும் கோலாகலம்னுதான் சொல்லணுமா?) புறப்பட்டோம். தலைவர் + மற்றொருவரை கிண்டியில் பிக்கப் செய்து கொள்ள வேண்டும் என்றார்கள். கிண்டியில் அவர்கள் ஏறியபோது கூடவே இரண்டு அட்டைப்பெட்டிகள் வந்தன. அட்டைப் பெட்டிகளில் டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் சூடான(டேற்றும்) பானங்கள் இருந்தன. அவரவர் தங்களுக்குப் பிரியமானதை எடுத்துக் கொண்டு உறிஞ்ச ஆரம்பிக்க, ஸ்பீக்கர்களில் பாடல்கள் ஒலிக்க, உற்சாகக் கூச்சல்களுடன் பயணம் இனிதே துவங்கியது. மாலை ஆறரை மணிக்குத் துவங்கிய பயணத்தில் இரவு உணவு முடிந்தபின், ஆரம்ப ஆர்ப்பாட்டக் கூச்சல்கள் ஓய்ந்த வேளையில், ‘‘படம் போடச் சொல்லுப்பா பாக்கலாம்’’ என்றார் தலைவர். வேனை ஓட்டியபடியே ஓட்டுனர் டிவிடியைப் போட, ஓடத் துவங்கியது ‘ஆதிபகவன்’ திரைப்படம். ஐயோ, மறுபடியுமா? அதிர்ச்சியில் மயக்கமானேன் நான்.

இடையில் கண் விழித்தபோது ‘அட, அதுக்குள்ள விழுப்புரமா?’ மீண்டும் கண்ணயர்ந்து, விழிக்க, ‘அட, திருச்சிகிட்ட வந்தாச்சா?’ (நல்ல ஸ்பீட் ஓட்டுனர்) இப்படி பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாகப் பயணம் தொடர, அதிகாலை நல்ல உறக்கத்திற்குப் போய் மீண்டும் கண் விழித்தபோது காலை மணி ஐந்து. அப்போது வேன் ‘மலைகளின் இளவரசி’யின் அடிவாரத்தைத் தொட்டு அவள் மடியில் தவழ்ந்து மேலேறிக் கொண்டிருந்தது. 

அதிகாலை ஐந்தே முக்கால் மணிக்கு வெள்ளி அருவியை வேன் அடைய,  எங்களி்ன் சுற்றுப் பயணத்தின் முதல் ரசிப்பிடம் வந்தது. அன்றைய இரவு எனக்காகக் காத்திருந்த அதிர்ச்சியை சற்றும் அறியாதவனாய் மற்றவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிக் குரலெழுப்பியபடி வெள்ளி அருவியை ரசிப்பதற்காக வேனை விட்டு இறங்கினேன் நான்.
                                                                                                                          -தொடர்கிறேன்..!

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : இருபதாண்டுகளுக்குப் பின்..1

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube