சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருக்கிறது. ஓரிரண்டு தினங்கள் தவிர, தினம் ஒரு முறை விசிட் அடிக்கும் படி அமைந்தது எனக்கு. கடந்த இரண்டு ஆண்டுகளைவிட, இவ்வாண்டில் நான் வடிவமைத்த புத்தகங்களையும் எனக்குப் பிடித்த புத்தகங்களையும் வாங்கிக் குவித்ததில் மனதிற்கு மிக நிறைவானதொரு பு.கண்காட்சியாக அமைந்தது இந்த வருடம்.
இந்த ஆண்டு சிறுவர்களுக்கான புத்தகங்கள் அதிகம் விற்றதாக என் கணிப்பில் தெரிகிறது. முத்து-லயன் காமிக்ஸ் ஸ்டாலில் இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் வருகிறதென்று தெரிந்ததும் சிறுவயது நினைவுகள் உந்த, மறுபடி படிக்கும் (பார்க்கும்?) ஆவல் மீதூற, முதல் தினமே போய் விசாரிக்க, வந்த புத்தகம் அனைத்தும் விற்று விட்டது என்றார்கள். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று மறுதினம் போய்ப் பிடித்து விட்டேன். பௌன்ஸர் என்கிற அற்புதமான புதிய காமிக்ஸ் புதுவருடத்தில் வெளியிட்டும் கூட இந்த ஆண்டு காமிக்ஸ் ஸ்டாலில் அதிகம் புத்தகங்கள் விற்றது மாயாவிதான் என்கிறார் எடிட்டர் எஸ்.விஜயன். இ.கை.மாயாவிதான் காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்!
இதைத் தவிரவும் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் காமிக்ஸ் புத்தகங்கள், தமிழில் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறை படக் கதை புத்தகங்களாக ஒரு ஸ்டாலில் பார்த்தேன். இவை போன்ற புத்தகங்களை நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தந்ததையும் கவனித்தேன். இத்தகைய புத்தகங்கள் விற்பனையாவதன் மூலம் குழந்தைகளின் படிக்கும் ஆர்வம் வளர்ந்து பின்னாளில் இலக்கியத்துக்கு வருவார்கள் - தமிழ்வாணனில் ஆரம்பித்த நான் லா.ச.ரா.வையும் படிப்பதைப் போல..! இது ஒரு நல்ல விஷயமாக மகிழ்வு தந்தது!
என் கண்ணில்பட்ட மற்றொரு பரபரப்பான விற்பனைப் புத்தகம் ‘மாதொருபாகன்’. ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் அதை எடுத்து பில் போட நின்றதை டிஸ்கவரி ஸ்டாலிலும், மற்ற இரு ஸ்டாலிலும் காண நேர்ந்தது. ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் எத்தனையோ குரல்கள் ஒலித்தாலும், சர்ச்சையின் மகத்துவம் புத்தக விற்பனையை எகிற வைப்பதே என்பது நிதர்சனம். ‘ஹும்... சரிதாயணத்தைக் கூட யாரை விட்டாவது எரிக்கச் சொல்லியிருக்கலாம்டா’ என்றது மனஸ். ஹி... ஹி... ஹி...
பாரதி புத்தகலாயத்தில்... ச்சே... பாரதி புத்தகாலயத்தில் சத்யஜித் ரேயின் ‘பெலூடா’ கதைகள் மொத்தத்தையும் தனித்தனி புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த இந்த ஆண்டின் பொக்கிஷம்! நோ.. நோ.. ஃபலூடா இல்லீங்க.. பெலூடா. ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரியான கேரக்டராக அதைப் படைத்து அசத்தலாக துப்பறியும் கதைகள் எழுதியிருக்காரு சத்யஜித் ரே. சிறுவர்களுக்கான கதைகள்னு போட்டிருந்தாலும் கூட எல்லா வயதுக்காரர்களும் சுவாரஸ்யமாப் படிக்கற மாதிரி ஆபாசமில்லாத, சஸ்பென்ஸை மெயின்டைன் பண்ற சூப்பரான கதைகள் ஒவ்வொண்ணும்.
கிராமத்து திருவிழாவுல வண்டி கட்டிட்டு வர்ற ஜனம் கம்பளத்தை விரிச்சு உக்கார்ந்து கட்டுச்சோறு திங்கற மாதிரி புத்தகக் கண்காட்சிக்கு வெளியில் இருக்கற பரந்த வெளியில ஜனங்க உட்கார்ந்து ஸ்னாக்ஸையும், காபியையும், டிபனையும் ஒரு கை பாத்துட்டு, குஷியா பேசிட்டு இருந்தாங்க. அந்தக் கடைகள்ல சேல்ஸைப் பார்த்தா, உள்ள வித்த புத்தகங்களின் விலையவிட அதிகமா வசூலை அள்ளியிருப்பாங்கன்றது நிச்சயம். அனேகமா சில பப்ளிஷர்கள் அடுத்த தடவை உள்ள புத்தகக் கடை வெக்கறதைவிட வெளில ஸ்னாக்ஸ் ஷாப் வெச்சா லாபம்னு இங்க மாறிருவாங்களோன்னு தோணிச்சு எனக்கு. ஹி... ஹி... ஹி...
--------------------------------------------------------------
டிசம்பர் மாத இறுதியில் நம்ம கோவை ஆவி இயக்கிய ‘காதல் போயின் காதல்’ குறும்படத்தின் ஷூட்டிங் நடந்துச்சு. அதோட திரைக்கதைய ஆவி அனுப்பி வெச்சப்ப, நல்லா இருக்கறதாப் பட்டாலும்கூட கதாநாயகி பாத்திரத்துல ஒரு உறுத்தல் இருந்தது எனக்கு. ஆவியின் கதாநாயகி ஒரு Down to Earth கேரக்டர். நிஜவாழ்க்கைல அவளை மாதிரி ஒருத்திய நான் சந்திச்சிருந்தாலும்கூட நிழல்ல அப்படிக் காட்டாம வேறவிதமா பெட்டரா காட்டினா நல்லாருக்கும்னு தோணிச்சு. ஆவிகிட்ட என் கருத்தைச் சொன்னேன். அந்தக் கதையோட பெரும்பகுதி ஒரு காபி ஷாப்ல நடக்கற மாதிரி எழுதியிருந்தாரு ஆவி.
“காபி ஷாப்ல ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டா பத்தாயிரம் ரூபா கேக்கறாங்க ஸார்”ன்னாரு ஆவி. “அவ்வளவா..? ஒரு நாளைக்கு அது அதிகம்பா..”ன்னேன். “நீங்க வேற... ஒரு மணி நேரத்துக்கு அந்த ரேட் கேக்கறாங்க ஸார்”ன்னாரு ஆவி. தலை சுத்தி மயக்கமே வந்துருச்சு எனக்கு. அப்பறமென்ன... ஆவி, தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஸ்க்ரீன் ப்ளேல எறக்கி, கதைக் களத்தையும் நாயகி பாத்திரத்தையும் மாத்தி மோல்ட் பண்ணி வேற ஒரு திரைக்கதை அனுப்பினாரு. படிச்சதுமே இது நிச்சயம் ரசிக்கப்படும்ங்கறது புரிஞ்சிருச்சு. ஆவிக்கு வாழ்த்து சொன்னேன். அவரும், நாங்களும் விரும்பியபடி அந்தப் படைப்பு வந்திருக்கறது கூடுதல் மகிழ்ச்சி.
படத்துக்கு நாயகன், நாயகி தேட ஆவி பட்ட பாட்டை தனிக் கட்டுரையாவே எழுதலாம். (மே..பி... ஆவி எழுதுவாரு பின்னால...) பதிவர் திருவிழா சமயத்துல சீனுவை க்ளோஸப், மிட் ஷாட்னு பல ஆங்கிள்ல பாத்துட்டு, ‘கண்டேன் கதாநாயகனை’ன்னு குதிச்சாரு ஆவி. முதலில் நடிக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்த சீனுப்பயலை ஆவி பேசிப் பேசி, துப்பாக்கியை நீட்டாத குறையாய் மிரட்டி தன் குறும்படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்தார். இப்போ என்னடான்னா... முதல் (குறும்)படம் வர்றதுக்கு முன்னாலயே ‘ஷைனிங் ஸ்டார்’னு பட்டமும் நிறைய ரசிகர் பட்டாளத்தையும் சேத்துக்கிட்டான் அம்ம பய...
நாயகியா நடிக்க பலரை யோசிச்சும், முயற்சிச்சும் யாரும் செட்டாகாம ஏதேதோ காரணங்களால தள்ளிப் போனதால கொஞ்சம் வெக்ஸானாரு ஆவி. இப்படிப்பட்ட நிலையில நம்ம பதிவர் சிஸ்டர் கீதாரங்கன், கதாநாயகியைத் தந்தாங்க. மதுவந்தி! கீதாவின் உறவான இந்தப் பொண்ணு நாட்டியமும் தெரிஞ்சவளா இருந்தது கூடுதல் ப்ளஸ். முழு உற்சாகத்தோட உருவாக்கத்துக்கு ஒத்துழைப்புத் தந்து, நாங்க எதிர்பாராத பர்பாமென்ஸ்ம் தந்து அசத்திருச்சு பொண்ணு.
அதே மாதிரி இந்த ப்ராஜக்ட்ல அசத்தின இன்னும் மூணு பேரு 1) மாஸ்டர் ரக்ஷித்! நிஜ ஸ்கூல்பையனான இவன் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்டா சொல்றதை அப்படியே கிரகிச்சுக்கிட்டு சூப்பரான பெர்பாமன்ஸ் தந்து அசத்தினான். 2) துளசிதரன்! கதையில ஒரு கேரக்டருக்காக இவர் உருமாறி வந்ததைப் பாத்ததும் அசந்து போனேன். சின்ன கேரக்டர்னாலும் (படமே சின்னதுதானடா..!) அசத்தியிருக்காரு மனுஷன். 3) கீதா ரங்கன்! ஆவிக்கு துணை இயக்குனரா செயல்பட்டு ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து செஞ்சு... என்னத்தச் சொல்ல... ஆவி சொல்லுவாரு மீதிய...!
ஷூட்டிங்குக்கு பர்மிஷன் வாங்கலைன்னு போலீஸ்காரங்க சத்தாய்ச்சதையும், சரியான லைட்டிங் தராம மிஸ்டர் சூரியபகவான் படுத்தினதையும் மீறி, மொத்தமாப் பாக்கறப்ப ரிசல்ட் நல்லா, திருப்திகரமா வந்திருக்குது. இன்னும் சில மேம்படுத்தற வேலைகள் பாக்கி இருக்கறதால பிப்ரவரி 14ல டிரெய்லரும், அந்த மாத இறுதியில வெளியிடவும் ப்ளான் பண்ணிருக்காரு ஆவி. பாத்துட்டு வாழ்த்துங்க அவரை.
--------------------------------------------------------------
‘டெக்கமரான்’ங்கற இத்தாலியப் படம் பார்த்தேன் சமீபத்துல. கதைய விரிவாச் சொல்லப் போறதில்ல. ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்துக்க விருப்பம். கன்னியாஸ்திரீ மடத்துல செவிட்டு ஊமைன்னு பொய் சொல்லி தோட்டக்காரனா வேலைக்குச் சேர்றான் ஒருத்தன். அவனை அங்கருக்கற கன்னியா(?)ஸ்திரீகள் கையாளறாங்க. இது மதர் சுபீரியருக்குத் தெரியவர, அவங்க தன்னையும் கையாளச் சொல்ல... வெறுப்புல அவன் பேச, அவன் பேசக்கூடியவன்ங்கறது தெரியவர... உடனே வேகமா ஓடி... சர்ச் மேலருக்கற கண்டாமணிய அடிச்சு, எல்லாரையும் கூட்டி... (நீங்க நினைக்கற மாதிரி இல்ல...) ஜீசஸின் கருணையால இவனுக்குப் பேசவும் கேக்கவும் வந்துருச்சுன்னு எல்லார்கிட்டயும் அனவுன்ஸ் பண்றாங்க... ஹா.. ஹா... ஹா..! இந்துமத சாமியார்களை மோசமான காமாதூரர்களா காட்டினதைப் பல படங்கள்ல பாத்திருக்கேன். (நிஜத்துலயும் சிலர் அதைவிடக் கேவலப்பட்டாச்சு சமீப வருஷங்கள்ல)
ஆனா.. கிறிஸ்டியானிட்டிய இவ்வளவு போல்டா விமர்சிக்கற இப்படியொரு படத்தை இப்பதான் பாக்கறேன். அவங்க மதகுருமார்கள் எப்படி விட்டு வெச்சாங்கன்னு தெரியல. வொண்டர்..! ஆங்... நானும் பாத்தாகணுமே படத்தைன்னு அடம் பிடிக்கற ஆசாமிகள் ‘நீ குழாய்’ல தேடவும். கிடைக்கிறது. ‘விசேஷமான’ காட்சிகள் படத்தில் ஆங்காங்கு கதைக்குத் தேவை(!)யென்பதால் வருவதால் நீங்கள் நல்லவராயின் பார்க்காமல் தவிர்க்கும் படியும், வல்லவராயின் தனிமையில் பார்க்கும் படியும் கோரப்படுகிறீர்கள். (இதனாலயே முதல்ல பாக்க ஓடிருவாங்களோ... -மைண்ட் வாய்ஸ். ஹி... ஹி... ஹி...)
--------------------------------------------------------------
இடியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை. சண்டை போலவே சமரஸத்திலும் அவள்தான் முதல். ஆனால், பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் தொத்தி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம் கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டை வழி நிறைவு. காணாத வஞ்சம் சதை மூலம் தேடும் வடிகால். ஊண் வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி என்னும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புதான்!
-‘அபிதா’ நாவலில் லா.ச.ராமாமிர்தம்.
கடைசியில் எல்லாப் பணமும் செலவழிந்து போய் செல்லாத ரூபாய்தான் மிஞ்சிற்று. அப்பொழுதுதான் செல்லாத ரூபாயாலும் ஒரு சௌகரியம் இருக்கிறது ஏன்று தோன்றிற்று. தெருவில் காய்கறிக்காரி போனால் நாலரையணாவுக்குக் கறிகாய் வாங்குகிறது. செல்லாத ரூபாயைக் கொடுத்து, “நாலரையணா எடுத்துக் கொண்டு பாக்கியைக் கொடு” என்கிறது. அவள், “செல்லாது, வேறு கொடுங்கள்” என்று திருப்பி விடுவாள். “வேறு ரூபாயில்லையே, நாளைக்கு வந்து வாங்கிக் கொள்ளேன்” என்கிறது. “சரி, அப்படித்தான் கொடுங்கள்” என்று போய் விடுவாள். ரூபாயில்லாமல் கடன் கொடு என்றால் கொஞ்சம் அவமானமாகத் தோன்றும். ரூபாயைக் கையில் வைத்துக் கொண்டு கடன் சொன்னால் அதில் ஒரு கௌரவம் இல்லையோ...? அதே மாதிரி அந்த ஒற்றை ரூபாயைக் காட்டியே பத்து ரூபாய்க்குச் சாமான்கள் கடனாய் வாங்கி விட்டோம். அந்த ரூபாய் இல்லாவிட்டால் முடியுமா..? கடன் வாங்கினாலும் அவ்வளவு கண்ணியமாய்ச் செய்திருக்க முடியுமா..?
-‘செல்லாத ரூபாய்’ சிறுகதையில் எஸ்.வி.வி.
....புதிய புத்தகங்களைப் படிப்பதை விட இப்படிப் பழைய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிப்பதில் தனி சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. புதுவரவுகளை படிக்க ஆரம்பித்து விட்டேன். என் ராசிக்கு நல்ல பலன்தான். இனி இந்த வருஷம் தொடர்ந்து இங்க செயல்படறதுன்னு முடிவும் பண்ணிட்டேன். உங்க ராசிக்கு.... ஹி... ஹி... ஹி....


































