Wednesday, April 18, 2018

பேரா சார் முக்கியம்..?

Posted by பால கணேஷ் Wednesday, April 18, 2018

பேருல என்ன சார் இருக்கு..? எல்லாம் எழுதி வெச்சபடிதான் நடக்கும்” என்கிற நம்பிக்கைவாதிகளும் சரி, “பேர்ல ஒண்ணுமே இல்ல, எல்லாம் நம்ம திறமைலயும் செயல்பாட்டுலயும்தான் இருக்கு“ என்கிற தன்னம்பிக்கை வாதிகளும் சரி... பெயரில்தான் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு நண்பர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தகவல் வந்தது. பார்க்கச் சென்றேன். தலையிலும் கையிலும் பெரிய கட்டுக்களோடு படுத்திருந்தார். “என்னய்யா வரதராஜன், எப்டி இப்டி அடிபட்டுது..?” என்றேன். “என் பேராலதான்யா இவ்ளவு பெரிய அடி...” என்றார்.

பேராலயா..? என்னய்யா சொல்ற..?”

அதை ஏன்யா கேக்கற..?” என்று அவர் இழுத்தார்.

சரி, கேக்கலை விடு”

அட, கேளுய்யான்னா...” என்றார் எரிச்சலாக. “நேத்து ஈவினிங் வாக் வந்துட்டிருந்தேன். கைல மொபைல வெச்சுகிட்டு ஃபேஸ்புக்க ஓபன் பண்ணிகிட்டே என் தெருவுல நொழைஞ்சப்ப எதிர்வீட்டு பரந்தாமன் எதிர்ல வந்தான். திடீர்னு என்னைப் பார்த்து, ‘எருமை வரது’ அப்டின்னு கத்தினான். கடுப்பாய்ட்டேன் நான். ‘என்னய்யா திமிரா.? மரியாதையாப் பேசு’ அப்டின்னேன் கோபத்தோட. அவனானா கொஞ்சமும் அசராம கைய வேற நீட்டி, “யோவ், எருமை வரது”ங்கறான் மறுபடி.

இன்னொரு தடவை வாயத் தொறந்த, தொலைச்சுடுவேன்’ அப்டின்னு விரல் காட்டி வார்ன் பண்ணேன். அவ்ளவுதான்யா தெரியும். திடீர்னு பின்னால மலை மோதின மாதிரி ஒரு பீலிங். நாலடி முன்னால பறந்து அங்கருந்த ஒரு ஆட்டோல இடிச்சுகிட்டு கீழ விழறேன். தலை தரைல மோதி ரத்தம் வருது. நிமிர்ந்து பாத்தா, ஒரு எருமை என்னைத்தாண்டி ஓடுது. அந்தப் படுபாவியானா மெதுவா பக்கத்துல வந்து, ‘எருமை வரதுன்னு நான்தான் கத்தினேனேய்யா. இப்டியா கவனிக்காம எருமை மாதிரியே வருவ.?’ அப்டிங்கறான். வேற பேர் வெச்சுக்கலாமான்னு யோசனை பண்ணிட்டிருக்கேன் இப்போ.” என்று பாண்டியராஜன் ஸ்பெஷல் விழி விழித்தபடி அவர் கூற என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ண்பரொருவரின் (ஒரு நண்பர் இல்லை, இவர் வேறு) அனுபவம் வேறுவிதமானது. பைக்கில் வந்த இவரை ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் வழிமறித்திருக்கிறார். டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் எல்லாம் சோதித்துவிட்டு “இன்சூரன்ஸ் புதுப்பிக்கலை. ஃபைன் போடணும்” என்றிருக்கிறார். “அடாடா, கவனிக்கலை சார். நாளைக்கே ரின்யூ பண்ணிடறேன். ஸாரி சார்..” என்று இவர் விதவிதமாகக் கெஞ்சியும் பிரயோஜனம் இல்லை. பைன் கட்டியே தீரணும் என்று அடம்பிடித்த கான்ஸ், ரசீது புக்கை எடுத்து வண்டி நம்பர் எழுதிவிட்டு, பேரைச் சொல்லுங்க என்றிருக்கிறார். இவர் சொன்னார் : ‘ஸ்தலசயனப் பெருமாள்’.

என்னது..? என்ன பேர் சொன்னீங்க..?”

ஸ்தலசயனப் பெருமாள்..”

அவர் தமிழில் எழுதிப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுத முயன்றிருக்கிறார். இந்தப் பெயரை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை. பேய்விழி விழித்தபடி, “சரி, சரி, கிளம்புங்க. உடனே சரி ரின்யூ பண்ணிடுங்க. போங்க.” என்று விட்டு விட்டாராம். நண்பரொருவர் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் அடுத்த ஒரு வாரத்துக்கு.

சிலபேர் தங்கள் பிள்ளைகளுக்கு மாடர்னாகப் பெயர் வைப்பதாக எண்ணிக் கொண்டு, தாங்கள் அறியாமலேயே விசித்திரமான பெயர்களை வைப்பதும் நடப்பதுண்டு. உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது, அவரின் பெயரன் துறுதுறுவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடியாடிக் கொண்டிருந்தான். “பெயரென்ன?” என்று கேட்டதற்கு “ரேவந்த்” என்றார். “இப்டில்லாமா பேரு இருக்கு..?” என்று விழித்தேன். “இது நார்த்சைட்ல வெக்கப்படற பேர்தான்யா. நல்லாருக்குல்ல சொல்றதுக்கு..” என்றார். தலையாட்டிவிட்டு வந்த நான், பெயரகராதியில் இப்படி ஒரு பெயர் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தபோது இருந்தது. பெயருக்கான விளக்கம் இப்படி.... ‘ரேவந்த் - குதிரைகளைப் பராமரிப்பவன்’ ஹா.. ஹா.. ஹா...

இதேபோல மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘தேனுகா’ என்ற பெயரைக் கேள்விப்பட்டு நான் (வழக்கம்போல்) அகராதியைக் கேட்டதில் வந்த பதிலானது... ’தேனுகா - மாட்டுமந்தை’. , என் கடவுளே, அர்த்தம் புரிந்தால் இப்படிப் பெயர் வைப்பார்களோ... கலைவாணி என்று பெற்றோரால் ரசனையுடன் வைக்கப்பட்ட பெயரைப் பெரும்பாலோர் உச்சரிப்பு வழக்கில் களவாணி என்றே அழைப்பதால் பெயரையே கெஜட்டில் மாற்றிக் கொண்ட பெண்ணையும் நான் சந்தித்திருக்கிறேன்.

ஆக, கயல், யாழிசை போன்ற இனிய தமிழ்ப் பெயர்களும், ராமன், கிருஷ்ணன், சரஸ்வதி போன்ற தெய்வப் பெயர்களுமே வைப்பதற்கு உகந்தவை. எந்தக் குழப்பமும் பிரச்சினையும் வராதவை என்பதை அறிந்து தான் நம் முந்தைய தலைமுறை அத்தகைய பெயர்களைச் சூட்டியிருக்கிறது.

நம் வாத்யார் எம்ஜிஆர் கூட தன் படங்களில் கதாநாயகர்களுக்கு முருகன், ராமு, கண்ணன் என்றெல்லாம் எளிய பெயர் வைத்ததற்குக் காரணமும் அதுவே. ஆதலினால் உலகத்தீரே... உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சுத்தத் தமிழ்ப் பெயரையே வைப்பீராக.

(ஹப்பாடா, சந்தடிசாக்குல ஒரு மெசேஜும் சொல்லியாச்சுப்பா. நல்ல எழுத்தாளர்ன்னுடுவாங்க. ஹி... ஹி.. ஹி...)

-‘சிருஷ்டி’ இணைய இதழில் வெளியானது.

14 comments:

 1. அருமையான பதிவு
  உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் தளத்தில் பகிர்ந்துமுள்ளேன்.

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஹா ஆமாம் பேர் பல சமயங்கள்ல படு பேஜாரா போயிடுது..

  கீதா: ஹா ஹா ஹா..செம...

  பத்மநாபன் அமெரிக்காகாரனுக்கு paddy நு எனக்கு முதல்ல ஒன்னுமே புரியலை. paddy said நு சொன்னா இதென்னா நெல்லு என்ன சொல்லப் போகுதுனு..அது போல மாதவன் maddy ...ஏதோ ஒரு படத்த பார்த்துட்டு இது யாரு நு கேக்க "maddy" என் கஸின் சொல்லவும் ஹேய் என்ன என்ன பைத்தியம்னு நினைச்சியானு நான் சொல்ல ஹா ஹா அப்புறம் தான் தெரிஞ்சுச்சு...அடப் பாவிங்களா மாதவனப் போயி 'mad' dy இப்படிச் சொல்லலாமோனு சிரிச்சுருக்கேன்..எங்க ஊர்ல நம்பி நு ஒருத்தர் உண்டு..நம்பியை நம்பி பணம் கொடுத்தவர் "நம்பி பணம் கொடுத்தா" என்று அலுத்துக் கொள்ள அவரோ ஆமாம் நான் நம்பிதான் என்று சொல்ல கொடுத்தவர் டெரர் ஆக...இப்படி நிறைய...

  ReplyDelete
 3. இப்பொதெல்லாம் ஷ் -ல முடிஞ்சாதான் அது நல்ல பேருன்னு சொல்லுறாங்களே...

  ReplyDelete
 4. நல்ல ஆராய்ச்சி. சுவாரஸ்யம். தேனுகா என்றொரு எழுத்தாளர் இருந்தாரே... அந்தப் பெயரில் ஒரு ராகம் வேறு இருப்பதாக நினைவு. ஸ்தலசயனபெருமாள்தான் ரொம்ப சுவாரஸ்யம்!

  ReplyDelete
 5. சில பெயர்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு ஐ சேர்த்துக் கூறுவதும் கேரள வழக்கம் உ-ம் கமலா =கமலை வத்சலா = வத்சலை சுஜாதா =சுஜாதை எட்ஸ் எட்ஸ்

  ReplyDelete
 6. செம்ம கலாட்டா..
  பெயர் சரியாக உச்சரிக்கப்படாவிட்டால் வரும் குழப்பமும் அதிகம்.
  சூப்பர்

  ReplyDelete
 7. ஹலோ உங்க பெயர் பாதி தமிழிலும் மீதி வட இந்திய பெயராக வே இருக்கிறதே கணேஷ் வட இந்திய பெயர்தானே? தமிழில் பால பிள்ளையாருன்னுதானே கூப்பிடனும்

  ReplyDelete
 8. இங்கே என் குழந்தையின் தோழியை (அந்த பெண் தமிழ் பெண் ) எல்லோரும் கர்ட் என்றுதான் கூப்பிடுவார்கள் அப்படி ஒரு பெயர் இருக்கிறதா அதற்கு அர்த்தம் என்னவென்று தேடி ஆராய்ய்சியில் இறங்க வேண்டாம் . நானே சொல்லிவிடுகிறேன் அந்த பெண்ணின் பெயர் கீர்த்தனா அந்த பெயர்தான் கர்ட் ஆக மாறி இருக்கிறது

  ReplyDelete
 9. எருமை வரது! ஹாஹா.. சிரிப்பாக இருந்தாலு அடி பட்டவருக்குத் தானே வலி தெரியும்.

  பெயர் குழப்பங்கள் - என் முழுப்பெயரை தில்லியில் நான் சொல்வதே இல்லை - விதம் விதமாக கூப்பிட்டு தொல்லை!

  ReplyDelete
 10. தேனுகா என்றால் ஒரு ராகத்தையும் குறிக்கும். கும்பகோணத்தில் தேனுகா என்ற என் நண்பர் இலக்கிய ஆர்வலர் இருந்தார். அவரது எழுத்துப்பணிகளை தமிழ் விக்கிபீடியாவில் தேனுகா என்ற பக்கத்தினை ஆரம்பித்து, பதிந்துள்ளேன்.

  ReplyDelete
 11. பெயர் ஆராய்ச்சிப் பதிவு சுவாரஸ்யம் மிக்கது.தேனுகா கர்நாடக இசையில் இடம்பெறும் ஒரு மேளகர்த்தா இராகம் என்று தெரிகிறது. தேனுகா (இயற்பெயர்: மு.சீனிவாசன்) என்ற எழுத்தாளர் மற்றும் விமரிசகர் இருந்தார். தற்போது இல்லை.

  ReplyDelete
 12. Varadhu joke's source: http://settaikkaran.blogspot.com/2013/09/blog-post_26.html

  ReplyDelete
  Replies
  1. அடடே... நாகேஷ் காமெடி ஒண்ணுலருந்து கிடைச்ச பொறியை வெச்சுல்ல அதைச் செஞ்சேன். இவரோட ப்ளாக்ல எழுதிருக்காருன்னு தெரிஞ்சா பர்மிஷன் வாங்கியே சுட்ருப்பனே... ரியல்லி திஸ் இஸ் வொண்டர் டு மீ.

   Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube