Saturday, July 4, 2015

குறும்(பட) பயண அனுபவம்!!

Posted by பால கணேஷ் Saturday, July 04, 2015
வனைச் சேர்ந்தவர்கள் குறும்படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் ரசித்துப் பார்த்துக் கொண்டும், இயன்ற சமயங்களில் பங்களிப்புச் செய்து கொண்டும் இருந்த இவனுக்குக்கூட குறும்படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார் துளசிதரன். (என்னா தெகிரியம்!) சரி, அவரே துணிஞ்சப்பறம் நமக்கு என்ன வந்தது என்கிற அசட்டுத் துணிச்சலில் இவன் சம்மதித்தான். சேரநன்நாட்டின் வளமையை, செழுமையை …ஹலோ, இயற்கையைக் குறிப்பிடுகிறேன்… ரசிக்கலாமென்கிற சபலம்தான் இவனுக்கு. சம் என்று சொல்லி மதம் என்று முடிப்பதற்கு முன்னேயே பாலக்காடுக்கு போக, வர மின்வண்டி பயணச்சீட்டை புக் செய்து தந்து அசத்தினார் சகோதரி கீதா ரங்கன். (என்னா திட்டமிடல்!!). சரி, நமக்கு சின்னப் பாத்திரம், இரண்டே வசனங்கள்தானே, சமாளிச்சிரலாம்னு இவனும் புறப்பட்டு சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு வந்தாயிற்று.

மின்வண்டிப் பயணங்களில் மேல் இருக்கைதான் பெரும்பாலும் கிடைக்கும் இவனுக்கு. அருகிலேயே மின்விசிறி இருப்பதால் அது வசதி என்றும் தோன்றும். ஆனால் பக்க மேல் படுக்கை வாய்க்கப் பெறுபவர்கள் அபாக்கியவான்கள் என்றொரு திடமான நம்பிக்கை இவனிடம் உண்டு. கால் நீட்டவும் வசதிக் குறைவாய், மின்விசிறிக் காற்றும் எட்டாமல், கழிவறைக்குப் போகிற வருகிற பயணிகள் சத்தத்தையும் சகித்துக் கொண்டு… பெருந்துன்பம்! துரதிர்ஷ்டவசமாக அன்று இவன் அபாக்கியவானாக ஆனான். பக்க மேல் படுக்கையா.. என்று நொந்து கொண்டே கட்டையைச் சாய்த்தால் உறக்கமும் வரவில்லை, மின்வண்டி கிளம்பியும் எதிர் இரண்டு மேல் படுக்கைகளுக்கு ஆட்களும் வரவில்லை.

கட்பாடி.. ஸாரி, காட்பாடி ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது இரண்டு சேரநன்நாட்டிளம் பெண்கள் வந்து மேல் படுக்கைகளை ஆக்ரமித்தனர். இவன் கண்படும்படி எதிரே இருந்தவளின் பெயர் ஆஷா என்று மற்றவள் அழைத்ததிலிருந்து தெரிந்தது. மலையாளத்தில் அம்சா என்றால் அம்சை, உஷா என்றால் உஷை என்று அழைப்பார்கள். அப்படிப் பார்த்தால் ஆஷை!!! ஹா.. ஹா… ஹா.. இரண்டு மனோஹரமாய பெண்குட்டிகளும் நான்ஸ்டாப் மலையாளத்தில் மூக்கால் சம்சாரித்துக் கொண்டிருக்க, இவன் ரசித்து, பின் சற்றே யோசித்து, நிங்ஙள் எவிட இறங்குன்னது? என்று கேட்க, ஒரு மாதிரியாகப் பார்த்தபடி ட்ரிவாண்ட்ரம் அங்கிள் என்றது ஆஷை. எனிக்கு ஒரு சகாயம் வேண்டே. சப்போஸ் ஞான் உறங்கிட்டெங்கில் என்னை பாலக்காட்டில் இறப்பிக்குமோ..? இதானு பர்ஸ்ட் டைம் ட்ராவல் என்றான் இவன். கண்டிப்பாச் சொல்றேன் அங்கிள்.. அதுக்காக தயவுபண்ணி மலையாளத்தைக் கொல்லாதீங்க ப்ளீஸ் என்று ஆஷை ஸ்பஷ்டமாகத் தமிழில் சொன்னதும் முகத்தில் லிட்டர் கணக்கில் அசடு வழியப் படுத்துறங்கி விட்டான் இவன்.

வாக்குத் தவறாத அந்த வனிதை, சரியாக காலை நான்கு மணிக்கு எழுப்பி விட்டாள் - இதான் பாலக்காடு ரயில்நிலையம் அங்கிள் என்று. நன்றி சொல்லி இறங்கி வெளியே வந்தால், பாலக்காடு இவன் நினைத்த மாதிரி பெரிய ஸ்டேஷன் இல்லை. தம்மாத்தூண்டாக இருந்தது. (ஊரே பெரிய சைஸ் கிராமம் போல்தான் என்று பிறகு சொன்னார்கள்). ஸ்டேஷனை விட்டு இறங்கியதும் கோவை ஆவியின் தொலைபேசிக்கு அழைத்தான் இவன். அவன்தான் வந்து இவனை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. எங்கே அவன் நம் ‘இலக்கியக் காட்டாறு போல ஒலிக்கும் தொலைபேசியைக் கவனிக்காமல் விட்டால் என்ன செய்வது என்றொரு பயம் இவனுள் இருந்தது. நல்லவேளையாக ஆவி, உடனே எடுத்துப் பேசினான். இதோ கிளம்பிட்டன் என்றான். பொழுதைப் போக்க எதிரிலிருந்த கடையில் ஒரு குளம்பி பருகினான் இவன்.

பத்து நிமிடங்களின் இறப்பில் இவனின் கைபேசி ஆவி அழைப்பதாகச் சொல்ல, உயிர்ப்பித்தான் இணைப்பை. சார், நான் வந்துட்டேன். எங்க இருக்கீங்க? என்றான் ஆவி. ஸ்டேஷன் வாசல்லயேதானடா இருக்கேன்.. என்றான் இவன். ஓ… அந்தப் பக்க கேட்ல எறங்கிட்டீங்க போல.. இருங்க, சுத்தி வரேன் என்றான் ஆவி. காத்திருப்பில் கழிந்த இரண்டு நிமிடங்களின் பின் இவன் ஆவியை அழைத்து, எங்கடா இருக்க..? இவ்ளவு நேரமா இந்த கேட்டுக்கு வர..? என்று கேட்க, ஸார், இங்க இருக்கற ரெண்டு கேட்டையும் பாத்தாச்சு. நீங்க இல்ல… பக்கத்துல எதாவது லாண்ட் மார்க் சொல்லுங்க.. என்று ஆவி சலித்துக் கொள்ள, இவன் கண்ணில் பட்ட அருகாமை லாட்ஜ் பெயரைச் சொல்லி, அழைப்பைத் துண்டித்தான். இரு நிமிடத்தில் மீண்டும் ஆவியின் அழைப்பு. ஸார், அப்டி ஒரு லாட்ஜே இங்க இல்லங்கறாங்க. நான் ஆலுக்காஸ் ஜ்வல்லரி பக்கத்துல நிக்கறேன். விசாரிச்சு வாங்க.. என்று வைத்துவிட்டான்.

என்னடா இது..? நாம்தான் ராங்சைடில் இறங்கிட்டோமோ என்று இவன் பயந்து நிலையத்தின் படிகளில் ஏறி மறுபுறம் சென்று பார்க்க, அங்கே ஒரு மைதானமும் முட்டுச் சந்தும் போல இருக்க, சாலையே இல்லை. நொந்து கொண்டே மீண்டும் படிகளேறி இந்தப் புறம் மீண்டும் வந்து ஆலுக்காஸை விசாரித்தால் அவிட அந்தக் கடை இல்லையென்றனர். இந்தச் செயல்பாடுகளில் மேலும் ஐந்து நிமிங்கள் கரைந்திருக்க, இந்தத் தடியன் இப்படிப் படுத்தறானே..? என்று சலித்துக் கொண்டான் இவன். எலேய்… நீரென்ன நாகேஷ் மாதிரி ஒடம்புன்னு நெனப்பா..? இந்நேரம் அவனும் உம்மை தடியர்னு திட்டிட்டிருப்பான் வேய் என்று மனஸ் கொக்கரிக்க, அதன் தலையில் பலமாகத் தட்டி அடக்கினான் இவன்.


இப்போது மீண்டும் கைபேசியை எடுத்து ஆவியை அழைத்தான். அழைப்பு போய்க் கொண்டிருக்க, தான் குளம்பி பருகிய கடையின் போர்டை எதேச்சையாக நிமிர்ந்து அப்போதுதான் கவனித்த (வழக்கமாக சம்சாரத் தாக்குதல் பெறும்) இவன் இப்போது மின்சாரத் தாக்குதல் பெற்றான். போர்டில் ‘ஒலவக்கோடு’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அழைப்பை ஏற்ற ஆவியிடம், என்னவோ தப்பு நடந்திருக்குடா. இங்க ஸ்டேஷன் வாசல் கடைல போர்டுல ஒலவக்கோடுன்னு இருக்கு. தப்பான ஸ்டேஷன்ல எறங்கிட்டனோ? என்று புலம்பவாரம்பித்தான் இவன். இல்ல ஸார். நானும் இங்க டவுட் வந்து விசாரிச்சேன். கோவைலருந்து வர்ற ரயில்லாம்தான் நான் இருக்கற ஸ்டேஷன்ல நிக்குமாம். இது சிட்டி ஸ்டேஷனாம். சென்னைல இருந்து வர்ற வண்டிங்க ஒலவக்கோட்லதான் நிக்கும்னாங்க. இப்ப அங்கதான் வந்துட்டிருக்கேன். என்றான் ஆவி.

அடப்பாவிகளா… இப்படி இரண்டு நிலையங்களை வைத்துக் கொண்டு ஏனடா படுத்துகிறீர்கள்..? என்று சலித்துக் கொண்டு இவன் காத்திருக்க மேலும் ஏழு நிமிடங்கள் கழித்து ஆவியானவன் வந்து சேர்ந்தான். நடந்த கூத்துகளை இருவரும் பரிமாறிக் கொண்டு, சிரித்து, மேலும் ஒரு குளம்பி பருகி, தங்க வேண்டிய விடுதியை அடைந்தபோது மணி ஐந்தரையை நெருங்கி இருந்தது. கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் கண்ணாமூச்சு விளையாட்டில் பலியாகி இருந்தன. அறையில் ஒரு குட்டி உறக்கம் போட்டுப் பின் கிளம்பலாம் என்றிருந்த இவன் திட்டத்தில் மண். அவ்வ்வ்வ்… நடந்ததை கீதாவிடமும், இவர்களின் இயக்குனர் துளசியிடமும் விவரிக்க துளசியின் சிரிப்பைப் பார்க்க வேண்டுமே… தெய்வீகச் சிரிப்பையா அவருடையது. படப்பிடிப்பிற்குச் சென்ற இடங்களையும், அங்கே நடந்த சுவாரஸ்யங்களையும் துளசி அவரின் தளத்தில் விரிவாக எழுதிவிட்டார்.

குறும்படத்தில் இவனை நடிக்க வைக்க அவர் பட்ட பாட்டைத்தான் எழுதவில்லை அவர். இவன் சிகையைக் குறுக்கில் சீவி, அதில் சற்றே நீட்சியாக சிறுமுடிகளை இணைத்து நம்பூதிரி ஸ்டைலில் கொண்டையிட்டு, வாளைக் கையில் தந்து குடந்தையாரைக் கொல்லடா என்றால் வசனத்தைச் சரியாகத்தான் பேசிவிட்டு, வாளைச் செருகினான் இவன். கோபமாப் பாத்து கத்தியால குத்துங்க சார். முகத்துல சிரிப்பு வந்துடுது. அது இருக்கக் கூடாது என்றார் துளசி. சிரித்த முகமாகவே வாழ்ந்து பழகிவிட்ட இவனுக்கு முகத்தில் சினத்தை வரவழைப்பது பெரும்பாடாக ஆயிற்று. இப்படியாக இரண்டு மூன்று டேக்குகள் எடுத்தபின் ஓகே சொன்னார். மறுதினமும் ஒருமுறை அதே ஷாட்டை எடுத்துப் பார்க்கலாம் என்று ட்ரை பண்ண, அப்போது செய்தது தான் சரியாக ஓகே ஆனது. (அதன் காரணம் ஆவிக்கு மட்டுமே தெரியும். ஹா.. ஹா.. ஹா..)

பாலக்காட்டில் துளசி படப்பிடிப்பை நடத்திய இடங்கள் யாவும் பசுமை போர்த்தியிருந்தன. இயற்கையின் வனப்பை ரசித்தபடி இரு தினங்கள்!! இரண்டாவது தினத்தில் இரவுப் படப்பிடிப்பை நடத்தித்தான் முடிக்க வேண்டிய நிலையை மழை உண்டாக்கிவிட, சென்னை திரும்ப வேண்டிய கட்டாயத்தினால் குடந்தையூரானும் இவனும் மட்டும் குழுவினரிடம் விடைபெற்று விடுதி அறைக்குத் திரும்பினார்கள். சரவணர் ரயிலுக்கு நேரம் குறைவாக இருந்ததால் உடனே கிளம்பிவிட, இவன் சற்று சிரமபரிகாரம் செய்து கொண்டு, ஒன்றரை மணி நேரம் கழித்து ஒலவக்கோடு சென்று மின்வண்டியைப் பிடித்தான். இரண்டு நாள் வேலை செய்த அசதியில் கண்கள் சொக்க, தன் இருக்கையைத் தேடி இவன் அடைந்தபோது, இப்போதும் நீ அபாக்கியவான் தானடா என்று கூறி உரக்கச் சிரித்தது விதி. எதிர் மேல் இருக்கையில் இப்போது ஆஷைக்குப் பதிலாக ஒரு ட்ராக்டர் படுத்துக் கொண்டு மூன்றாவது கியரில் ஓடிக் கொண்டிருக்க, விதியின் கூற்றை ஆமோதித்து அவ்வ்வ்வ்வியபடி சென்னை திரும்பினான் இவன்.

POET THE GREAT என்கிற அந்தக் குறும்படம் காண… இங்கே க்ளிக்குக.26 comments:

 1. சிரித்த முகமாகவே வாழ்ந்து பழகிவிட்ட இவனுக்கு முகத்தில் சினத்தை வரவழைப்பது பெரும்பாடாக ஆயிற்று.

  கொடுத்து வைத்தவர் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. முதல் நபராய் ரசித்துக் கருத்திட்டு வாக்கும் தந்த நண்பருக்கு மகிழ்வான நன்றி.

   Delete
 2. //பாலக்காட்டில் இறப்பிக்குமோ..?//செம்ம மலையாளம் சார். பின்னீட்டீங்க

  ReplyDelete
 3. பாலக்காடு டவுன் ஸ்டேஷனோட ரெண்டு வாசலுக்கும் ஷன்ட் அடிச்சத நினைச்சா இப்பவும் சிப்பு சிப்பா வருது..

  ReplyDelete
  Replies
  1. சென்னை வந்து வாரங்கள் தாண்டியும் நான் ரசிச்சு சிரிச்சுட்டிருக்கற ஒரு சமாச்சாரம். பகிர்ந்தா மத்தவங்களும் ரசிப்பாங்களா பாக்கலாம்னு தோணிணதால இங்க...

   Delete
 4. //ஆஷைக்குப் பதிலாக ஒரு ட்ராக்டர்/// ஹிஹிஹி வாத்தியார் டச்.

  ReplyDelete
 5. வாத்தியாரே... அந்த ரகசியத்தை ஆவிடம் கேட்டுக் கொள்கிறேன்...!

  ReplyDelete
  Replies
  1. ஆவி அதச் சொல்ல மாட்டாப்புடி... அதான் தெகிரியமா எழுதுனேன். முயன்று பாருங்க வலைச்சித்தரே. ஹா... ஹா.. ஹா...

   Delete
 6. கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்... எழுதியே விட்டீர்கள்... சூப்பர் வாத்தியாரே...

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்திட்டமைக்கு என் மகிழ்வான நன்றி.

   Delete
 7. இரசித்தேன்! நாளை சந்திப்போமா!

  ReplyDelete
 8. சிறந்த சுவையான அனுபவங்களை பகிர்ந்துள்ளீர்கள்
  குறும்படத் தொழில்நுட்ப அலசல் நன்று

  ReplyDelete
 9. So you are trying your luck in acting field also. All the best.

  ReplyDelete
 10. எவ்வளவு அழகாக நடிச்சு இருக்கீங்க. இதற்காகவே ரஜினி அல்லது கமல் கூட நடிக்கிற சான்ஸ் கிடைக்கலாம்.
  சுப்பு தாத்தா.
  in case u forgot tamil after acting in palakkaadu,
  നിങ്ങൾ എത്ര മനോഹരമായ Naticcu. ചാൻസ് കൂടാതെ, രജനി, കമൽ അവതരിപ്പിക്കുന്നത് ഒന്നുകിൽ ഈ ആവശ്യത്തിനായി ലഭ്യമാണ്.
  Suppu മുത്തച്ഛൻ.

  ReplyDelete
 11. சூப்பர் சார் அனுபவத்தை நகைச்சுவையாய் எழுதி இருக்கீங்க.....ஹஹஹா...ஹா ரசித்து படித்தேன்... சிரிப்புத்தான் அடங்கவில்லைஹிஹிஹி....நடிப்பும் நன்னாயிட்டுண்டு...ஏதோ எனக்கு தெரிந்த மலையாளத்தில் பறையனுமில்ல...

  ReplyDelete
 12. பக்கவாட்டு படுக்கை - ஒரு மகா அவஸ்தை. அதிலும் என்னைப் போன்று சற்றே அதிகமாக வளர்ந்திருந்தால் இன்னும் அதிக அவஸ்தை - காலை அடுத்தவன் தலையில் வைத்து தூங்க வேண்டியிருக்கும்! :(

  உங்கள் பாணியில் உங்கள் பயண அனுபவங்கள். ரசித்தேன் நண்பரே.

  ReplyDelete
 13. இரசித்து எழுதியிருக்கீங்க அண்ணா...
  டிராக்டர் மூன்றாவது கியரில் பயணித்ததை ரசித்தேன்...
  இங்கே எங்கள் அறையில் இரவில் உறக்கமின்றி முழித்தால் சின்ன வயதில் ஊரில் மழைநாளில் வீட்டைச் சுற்றி வயல்வெளிகளில் கிடக்கும் நீரில் இருந்து தவளைகள் கத்துமே அப்படி ஒரு சத்தத்தை தினமும் அனுபவிக்கிறேன்...
  அருமை.

  ReplyDelete
 14. ஹாஹா அருமை அண்ணா... வாழ்க்கைல நடக்குற எல்லா விசையங்களையும் இப்படியே சிரிப்போடையே கடந்து போய்ட்டிருந்தா சங்கடமே இல்லணா

  ReplyDelete
 15. பதினைந்து நிமிடத்துக்குள் மூணு காபி!! அண்ணா!! உடலுக்கு நல்லதல்ல. மத்தபடி பல இடத்தில் வெடிச்சு சிரிச்சேன்:)))

  ReplyDelete
 16. ஹஹஹஹஹஹஹ் ஆஹ எப்படி இந்த இடுகையை மிஸ் பண்ணினோம்...சே..சரி அத விடுங்க...அது என்ன இறப்பிக்குமோ....அஹஹ்ஹ தமிழ்மலை மிக்ஸ் ....ஹஹஹ்

  ஐயோ நாங்க நீங்க ரெண்டு பேரும் கண்ணாம்மூச்சி ஏனடா ந்னு ஆடின ஆட்டத்தைச் சொல்லிச் சிரிச்சோம்....

  (அதன் காரணம் ஆவிக்கு மட்டுமே தெரியும். ஹா.. ஹா.. ஹா..) அட இதென்ன ரகசியமப்பா எங்களுக்கும் தெரியாம...கேட்டுருவோம்ல...ஆவி சொல்லாமலா இருப்பாரு....

  தங்களது இனியநினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்.

  இங்கு உங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். உங்கள் பெயர் மிஸ் ஆகிவிட்டது. அதையும் ஆவி கீதாவிடம் சொல்ல கீதா என்னிடம் சொல்ல...பின்னர் பார்த்தால் இன்னும் 3 பெயர்கள் விடுப்பட்டுள்ளது தெரியவர அதை மலையாளம் சப்டைட்டில் வெர்ஷனில் சேர்க்க முயற்சி செய்கின்றோம். மன்னித்து விடுங்கள் சார். கவனிக்காமல் விட்டது எங்கள் தவறு தான் சார். எடிட்டிங்க் போது கொஞ்சம் அசந்து கவனக் குறைவாக இருந்துவிட்டோம் சார்...


  ReplyDelete
 17. ஹாஹா மலையாளத்தக் கொன்னதுனால தப்பான இடத்துல இறக்கி விட்டுட்டாங்கன்னு நினைச்சேன் :)

  ReplyDelete
 18. வணக்கம்,
  அவன் இவன் அய்யோ பதிவைப் படித்ததில் இந்த உளரல்,,,,,,,,,
  அழகாக சொல்லியிருக்கிறீர்கள்,
  இயல்பை மாற்றுதல் என்பது கொஞ்சம் கடினமே,
  நன்றி.

  ReplyDelete
 19. ஹஹ்ஹா. நான் கூட அந்த பெண்கள் செய்த சதியோன்னு நினைச்சேன்..பயண அனுபவமும் , ரயில் அனுபவமும் , இவன் எழுதுகையில் சிரித்துப்படிக்க , பிரமாதம் ..

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube