Tuesday, October 4, 2011

கேப்ஸ்யூல் நாவல்-1

Posted by பால கணேஷ் Tuesday, October 04, 2011
து பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் (என்னைப் போன்ற) இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அப்படி சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக உங்களுக்குத் தரவிருக்கிறேன்.  முதலில் அமரர் கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ நாவல். அவர் இறந்து 58 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுகிறது இந்தக் கதை. அதனுள் கொட்டிக் கிடக்கும் வீரம், காதல், ஹாஸ்யம் உள்ளிட்ட பல உணர்ச்சிகள் படிப்பவர்களுக்குள் இறங்கிச் செல்லும். அவற்றை இந்த கேப்ஸ்யூல் வடிவத்தில் உங்களால் பெற இயலாது என்பதுதான் குறை.

சிவகாமியின் சபதம்: முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

ல்லவ மன்னர் வம்சத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த மகேந்திர பல்லவரின் ஆட்சிக் காலம். திருவெண்காட்டிலிருந்து காஞ்சியிலுள்ள நாவுக்கரசர் மடத்தில் சேர்ந்து படிப்பதற்காக வருகிறான் பரஞ்சோதி என்ற வாலிபன். வழியில் அவன் தூங்கும் போது அவனைக் கடிக்க இருந்த பாம்பைக் கொன்று அவனைக் காப்பாற்றுகிறார் கொடூர முகமுடைய நாகநந்தி என்னும் புத்தபிட்சு. இருவரும் காஞ்சிக்கு வரும் போது கோட்டைக் கதவுகள் சாத்தப்பட்டு நகரெங்கும் பெரும் பரபரப்பு இருக்கிறது. பிட்சு போய்விட, தனியே வரும் பரஞ்சோதி ஒரு முதியவரும் இளம் பெண்ணும் மதம் பிடித்த யானையிடம் சிக்க இருந்த நிலையில் வேலை எறிந்து யானையை காயப்படுத்த, அது பரஞ்சோதியைத் துரத்துகிறது. ஓடுகிறான்.

அந்த முதியவர் அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய சிற்பி ஆயனர். இளம்பெண் அவர் மகள் சிவகாமி. அன்று நடந்த சிவகாமியின் நாட்டிய அரங்கேற்றத்தின் பாதியில் அவசரத் தகவல் காரணமாக மகேந்திர பல்லவர் சென்றுவிட, அரங்கேற்றம் தடைபட்டு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் பரஞ்சோதியால் காப்பாற்றப்பட்டனர். அவர்களைக் காப்பாற்ற வந்த மகேந்திர பல்லவர், சாளுக்கிய மன்னன் புலிகேசி பெரும் சைன்னியத்துடன் பல்லவ எல்லைக்குள் பிரவேசித்துவிட்ட தடகவல் வந்ததால்தான் செல்ல நேர்ந்தது என்று ஆயனரிடம் கூற, அவர் மகன் - மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட - நரசிம்ம வர்மனின் கண்களும் சிவகாமியின் கண்களும் சந்தித்து கதை பேசுகின்றன. 

யானையிடமிருந்து தப்பி தன் பயண மூட்டையைத் தேடிவரும் பரஞ்சோதியை ஒற்றன் என சந்தேகப்பட்டு, பல்லவ வீரர்கள் சிறையிலிடுகின்றனர். இரவில் நாகநந்தி பிட்சு அவனைக் காப்பாற்றி கோட்டையைத் தாண்டி நகருக்கு வெளியே அழைத்துச் செல்கிறார். ஆயனச் சிற்பியிடம், ‘உங்கள் நண்பரின் மகன்’ என்று அறிமுகப் படுத்துகிறார். அழியாத அஜந்தா வர்ணக் கலவையை அறிய வேண்டு மென்ற ஆயனரின் ஆர்வத்தைப் பயன்படுத்தி பரஞ்சோதியை நாகார்ஜுன மலைக்கு அனுப்பும்படி ஆலோசனை சொல்கிறார். அவனிடம் கபடமாக புலிகேசிக்கு ஒரு ஓலை கொடுத்து விடுகிறார்.

மாமல்லரிடம் போருக்கு வர வேண்டாம் என்றும், கோட்டையை பாதுகாக்கும்படியும் பணித்து விட்டு ஒற்றர் தலைவன் வீரபாகு என்ற வேடத்தில் வரும் மகேந்திர பல்லவர் வழியில் பரஞ்சோதியை சந்திக்கிறார். இரவில் அவனை மயக்கப் புகையால் தூங்கச் செய்து அவன் கொண்டுவந்த ஓலையை மாற்றி விடுகிறார். சாளுக்கிய வீரர்களிடம் சிக்கி சக்கரவர்த்தி புலிகேசியின் முன் நிறுத்தப்படும் பரஞ்சோதியை சாமர்த்தியமாகக் காப்பாற்றி, ஆற்றின் அக்கரையிலுள்ள பல்லவர் பாசறைக்கு அழைத்து வருகிறார் மகேந்திரர். அங்கே வந்த பின்புதான் அவர்தான் மகேந்திர சக்கரவர்த்தி என்பதை அறிந்து வியக்கிறான் பரஞ்சோதி.

சிவகாமியின் சபதம்: இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

எட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் செய்து அனுபவம் பெற்ற படைத் தளபதியாக காஞ்சிக்கு வரும் பரஞ்சோதியை மாமல்லர் வரவேற்று தன் உயிர்த் தோழனாக்கிக் கொள்கிறார். வாதாபிப் படைகள் முற்றுகையிட வருவதால் காஞ்சிக் கோட்டையை ஆயத்தப்படுத்தும் பணியை இருவரும் செய்கின்றனர். ஆயனச் சிற்பியையும், சிவகாமியையும் காஞ்சிக்குள் வரும்படியும் இல்லாவிட்டால் சோழநாடு செல்லும்படியும் பரஞ்சோதி தெரிவிக்கிறார். இதற்கிடையில் மாமல்லரும் சிவகாமியும் எழுதிக் கொண்ட காதல் ஓலைகளை ஒற்றர் தலைவன் சத்ருக்னன், போர்முனையிலிருக்கும் மகேந்திரரிடம் சேர்ப்பிக்கிறான். கங்கநாட்டரசன் துர்விநீதன் காஞ்சியை நோக்கி படையுடன் வருவதாகவும், அவனை எதிர்கொண்டு முறியடிக்கும் படியும் சத்ருக்னனிடம் அவசர ஓலை கொடுத்து காஞ்சிக்கு அனுப்புகிறார் மகேந்திரர்.

ஆயனரையும், சிவகாமியையும் சந்திக்கும் நாகநந்தியடிகள் தன்னுடன் வரும்படி அழைத்துச் செல்கிறார். போருக்குமுன் அங்கு வரும் மாமல்லரும் பரஞ்சோதியும் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைகின்றனர். அசோகபுரம் என்னும் ஊரில் ஆயனரையும், சிவகாமியையும் தங்க வைக்கும் நாகநந்தியடிகள் மகேந்திரரின் சாமர்த்தியத்தால் புள்ளலூரில் நடந்த போரில் துர்விநீதன் தோல்வியுற்றதையும், பல்லவர் படைகள் அவனைத் துரத்திச் செல்வதையும் அறிகிறார். அதேசமயம் சிவகாமியும், ஆயனரும் அங்கே இருப்பதை துரத்திச் செல்லும் படையின் முன்னணியில் இருக்கும் மாமல்லர் பார்த்து விடுகிறார்.

அன்றிரவு திருப்பாற்கடல் என்ற பெரிய ஏரியின் கரையை நாகநந்தி உடைத்துவிட, பெருவெள்ளம் ஊரைச் சூழ்கிறது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயனரையும், சிவகாமியையும் மாமல்லர் வந்து காப்பாற்றுகிறார். வெள்ளம் வடியும் வரை அவர்கள் ஒரு கிராமத்தில் தங்க நேரிடுகிறது. அங்கே நாகநந்தி மறைந்திருந்து விஷக்கத்தி எறிந்து மாமல்லரைக் கொல்ல முயல்கிறார். பல்லவ ஒற்றனான குண்டோதரன் அவரது முயற்சியை முறியடிக்கிறான். மாமல்லரை பரஞ்சோதி சந்தித்து காஞ்சிக்கு உடன் வரும்படி சக்கரவர்த்தியின் ஆணை என்று கூறி அழைத்துப் போகிறான்.

பின் அங்கு வரும் மகேந்திரர், சிவகாமியிடம், மாமல்லனை மறந்து விடும்படி வேண்டுகிறார். பாண்டியனும் காஞ்சி மீது படையெடுத்து வருவதால் அவன் மகளை மாமல்லருக்குத் திருமணம் செய்ய இருப்பதாகச் சொல்கிறார். ஆயனரிடம் பல்லவ இலச்சினை தந்து செல்கிறார். அதைத் திருடிவிடும் நாகநந்தி, காஞ்சிக் கோட்டையினுள் புகுந்து குழப்பம் விளைவிக்க முயன்று மகேந்திரரால் சிறைப்படுகிறார். காஞ்சி நகரை வாதாபிப் படைகள் சூழ்ந்து கொள்ள, முற்றுகை ஆரம்பமாகிறது.

சிவகாமியின் சபதம்: மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

புலிகேசியின் படைகள் காஞ்சியின் அகழியையும், கோட்டைச் சுவரையும் உடைக்க முயன்று  தோல்வியடைகின்றன. முற்றுகைக்கு முன்பே மகேந்திரர் எல்லா அணைகளையும் உடைத்து விட்டதால் மூன்று மாத முற்றுகைக்குப் பின்னர் புலிகேசியின் படைகள் உணவும், தண்ணீருமின்றித் தவிக்க நேரிடுகிறது. வடநாட்டு சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து வரப்போகிறார் என்ற வதந்தியை மகேந்திரர், ஒற்றர் படை மூலம் புலிகேசியின் படையில் பரவவிட, புலிகேசி சமாதானத் தூது அனுப்புகிறார். மகேந்திரர் அதனை ஏற்றுக் கொண்டு புலிகேசியிடம் நட்பு பாராட்ட விரும்ப, மாமல்லருக்கு அதில் சம்மதமில்லை. அவரை, பரஞ்சோதியுடன் சென்று பாண்டியனைத் தோற்கடித்து புத்தி புகட்டும்படி அனுப்பி விடுகிறார் மகேந்திரர்.

காஞ்சி வரும் புலிகேசிக்கு பலத்த வரவேற்பு கிடைக்கிறது. அவரது விருப்பத்தின் பேரில் சிவகாமியை வரவழைத்து அரசவையில் நடனமாடும்படி செய்கிறார் மகேந்திரர். புலிகேசி புறப்படும் தருவாயில் அவரைத் தாம் வென்ற விதத்தை விரிவாக மகேந்திரர் சொல்ல, ஒவ்வொரு கட்டத்திலும் தான் ஏமாற்றப்பட்டதை உணரும் புலிகேசியின் மனம் எரிமலையாகிறது. தன் படைப் பிரிவின் ஒரு பகுதியை நிறுத்தி பல்லவ நாட்டின் சுற்றுப்புற கிராமங்களை சூறையாடி எரித்து அழிக்கும்படி கூறிவிட்டு வாதாபி நோக்கிச் செல்கிறான். காஞ்சியிலிருந்து சிவகாமியும் ஆயனரும் சுரங்கப்பாதை மூலம் க‌ோட்டையை விட்டு வெளியேறி வாதாபிப் படைகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

இதற்கிடையில் சிறையிலிருந்த நாகநந்தி பிட்சு தப்பித்து விடுகிறார். புலிகேசியைப் போலவே இருக்கும் தன் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, புலிகேசி வேடம் தாங்கி மாமல்லபுரத்து கலைச் செல்வங்கள் அழியாமலும், ஆயனர் கொல்லப்படாமலும் காப்பாற்றுகிறார். சிவகாமி வாதாபிப் படைகளிடம் சிக்கி விட்டதை அறிந்த மகேந்திரர் படையுடன் வர, அவருடன் போரிடுகிறார் புலிகேசியாக இருக்கும் நாகநந்தி. போரில் விஷக்கத்தியால் மகேந்திரரைத் தாக்கி விட்டு சிவகாமியை வாதாபிக்குக் கொண்டு செல்கிறார். விஷக்கத்தி தாக்கிய மகேந்திரர் நோய்வாய்ப்படுகிறார்.

வாதாபி சென்றதும்தான் புலிகேசியும், நாகநந்தியும் இரட்டையர்கள் என்பதை சிவகாமி அறிகிறாள். அவள் மீது தான் கொண்ட காதலைச் சொல்கிறார் நாகநந்தி. வேங்கியில் ஏற்பட்ட அரசியல் சிக்கல் காரணமாக பிட்சுவை அங்கே அனுப்பும் புலிகேசி, சிவகாமியை தன் சபையில் நடனமாடும்படி கேட்கிறான். அவள் மறுக்கவே பல்லவ கைதிகளை சாட்டையால் அடித்தே கொல்வதாக அச்சுறுத்தி வாதாபியின் நாற்சந்திகளில் நடனமாடும்படி செய்கிறான். நாடு திரும்பும் பிட்சு, இதைக் கண்டு சினம் கொண்டு புலிகேசியிடம் வாதாடி சிவகாமியை காஞ்சிக்கே திரும்ப அனுப்ப அனுமதி பெற்று வருகிறார். அவளிடம் அதைச் சொல்ல, மாமல்ல நரசிம்மர் படையுடன் வந்து வாதாபியை எரிப்பதையும், வாதாபி மக்கள் மடிவதையும் கண்ணால் கண்ட பின்னரே தான் விடுதலை பெறுவேன் என்று சிவகாமி சபதம் செய்கிறாள்.

மாமல்லர், மகேந்திரரின் அனுமதியின்பேரில் பரஞ்சோதி, சத்ருக்னன் ஆகியோருடன் மாறுவேடத்தில் வாதாபி வருகிறார். சிவகாமியைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல அவர்கள் முற்பட, அவள் வரமறுத்து தன் சபதத்தைக் கூறுகிறாள். அவர்கள் வாக்குவாதத்தில் இருக்கும் போது நாகநந்தி வந்துவிட, மாமல்லர் மட்டும் கோபத்துடன் தப்பிச் சென்று விடுகிறார். காஞ்சி வரும் மாமல்லரிடம் குலம் தழைக்க பாண்டியன் மகளை மணக்கும்படி வற்புறுத்தி சம்மதம் பெறுகிறார் நோயுற்றிருக்கும் மகேந்திரவர்ம பல்லவர்.

சிவகாமியின் சபதம்: நான்காம் பாகம்: சிதைந்த கனவு

ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட, மாமல்லருக்கு பாண்டியகுமாரியுடன் திருமணமாகி மகேந்திரன் என்ற மகனும், குந்தவி என்ற மகளும் பிறந்திருக்கிறார்கள். மாமல்லர், ஆயனரைச் சந்தித்து தாம் திரட்டியிருக்கும் பெரும் படையுடன் வாதாபி நோக்கிச் செல்வதைச் சொல்ல, தாமும் வருவதாகக் கூறுகிறார் ஆயனர். தன் அரசையிழந்து நரசிம்மரிடம் உதவிகோரி வந்திருக்கும் இளவரசன் மானவர்மன் தானும் மாமல்லருடன் யுத்தத்துக்கு வருவதாகச் சொல்கிறான்.

தன் ஒற்றர் படை மூலம் சில ஆண்டுகளாகவே பல்லவர் படையெடுத்து வருவதாக வதந்தியைக் கிளப்பி, படையெடுக்காமல் புலிகேசியை ஏமாற்றியிருந்தார் மாமல்லர். இப்போது பல்லவர் படையை புலிகேசி எதிர்பார்க்கவில்லை. அஜந்தா மலைச் சித்திரங்களை அவரும் நாகநந்தியடிகளும் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது பல்லவர் படை கிளம்பிய செய்தி வருகிறது. இத்தகவல் முன்பே தெரிந்திருந்தும் தன்னுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக பிட்சு மறைத்துவிட்டார் என்பதை அறியும் புலிகேசி, கோபமாகி அவரைவிட்டுப் பிரிந்து செல்கிறார்.

புலிகேசி தன் படைகளுடன் வாதாபி வரும்முன் வாதாபியை முற்றுகையிட்ட பல்லவர் படையின் ஒரு பிரிவு அவரை எதிர்கொள்கிறது. போரில் சாளக்கிய வீரர்கள் தோல்வியுற, புலிகேசி மாயமாகிறார். நாகநந்தி பிட்சுவை காதலித்து அவரால் காபாலிகையாக்கப்பட்ட ரஞ்சனி என்ற கொடூரமான பெண் தோளில் ஒரு பிணத்துடன் வர, நாகநந்தி எதிர்ப்படுகிறார். அவர் இறந்து விட்டதாகவும், பிணத்தைத்தான் தோளில் சுமந்து கொண்டிருப்பதாகவும் அவள் வியப்புடன் கூற, இறந்தது புலிகேசி என்பதை அறிகிறார். சகோதரனைத் தகனம் செய்து விட்டு, வெறியுடன் வாதாபிக்குள் சுரங்கப்பாதை மூலம் வருகிறார்.

இதற்கிடையே முற்றுகையிலிருக்கும் வாதாபி மக்கள் சமாதானத் தூது அனுப்ப, பரஞ்சோதி ஒப்புக் கொள்ளலாம் என்க, மாமல்லர் மறுக்கிறார். அதற்குள் கோட்டையில் வெள்ளைக் கொடி இறக்கப்பட்டு, புலிகேசி தென்படவே போர் துவங்குகிறது. வாதாபியைத் தீக்கிரையாக்குகிறார் நரசிம்மர். புலிகேசியின் வேடத்தைத் துறந்து நாகநந்தியாகி, சிவகாமியைத் தூக்கிக் கொண்டு சுரங்க வழியாக தப்பிக்கப் பார்க்கிறார் பிட்சு. ஒரு புறம் சத்ருக்னனாலும், மறுபுறம் பரஞ்சோதியாலும் மடக்கப்பட, விஷக்கத்தியை எறிந்து சிவகாமியைக் கொல்லப் பார்க்கிறார். ஆத்திரமாகும் பரஞ்சோதி முந்திக் கொண்டு பிட்சுவின் கையைத் துண்டித்து அவரைப் பிழைத்துப் போகும்படி கூற, பிட்சு இருளில் மறைகிறார்.

தன்னை மீட்ட மாமல்லர் தன்னிடம் கடுமையாகப் பேசுவதன் காரணம் அறியாமல் தவி்க்கிறாள் சிவகாமி. தளபதி பரஞ்சோதி, மாமல்லரிடம், தாம் இனி சைவத் துறவியாக சிறுத்தொண்டர் என்ற பெயர் பூண்டு விளங்கப் போவதாகக் கூறி வி‌டைபெற்றுச் செல்கிறார். சிவகாமி காஞ்சி திரும்பியதும்தான் மாமல்லருக்கு திருமணமானதையும், இரண்டு குழந்தைகள் இருப்பதையும் அறிகிறாள். இறைவனையே கணவனாகத் தேர்ந்தெடுத்து தன் வாழ்வை இறைத் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டு ஆலயத்தில் நாட்டியமாடுகிறாள் சிவகாமி. சிவகாமியின் நாட்டியப் பணி தொடர்கிறது.

6 comments:

  1. தமிழ்மணம் இம்முறை தகராறு செய்கிறது. யாரேனும் இணைத்தால் மிக்க நன்றி.

    ReplyDelete
  2. தமிழ்மணத்துலே இணைச்சு ஓட்டும் போட்டுட்டொமில்லே...?
    :-)

    அப்பாலிக்கா வரேன்! ஆணிமயம்..!

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. நாவலின் ரத்தினச் சுருக்கம்!நன்றி.

    ReplyDelete
  5. நாவல்கள் கதை சுருக்கம் அருமை சார்..(எங்க குழந்தைகள் அவர்கள் படிக்கும் பாடத்தை இதுபோல கொடுத்தால் சுலபமாக இருக்கும் என்கின்றார்கள்)
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. உங்கள் கருத்துக்களும் பாராட்டும்தான் எனக்கு உந்துசக்தி. வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube