Friday, November 25, 2011

சரிதா செய்த ஷாப்பிங்!

Posted by பால கணேஷ் Friday, November 25, 2011
“என்னங்க...” என்றபடி அருகில் வந்தாள் என் தர்மபத்தினி. அவளை ஏறிட்டபடி, “சொல்லும்மா யெஸ்கிவ்!” (சரி-தா என்பதை ஆங்கிலப்படுத்திப் பாருங்கள்) என்றேன். அப்படி நான் அழைத்தாலே நான் குஷியான மூடில் இருப்பதை அறிந்து கொள்ளும் அந்தக் கள்ளி, “ஈவினிங் சீக்கிரம் வந்துடுங்க... ஷாப்பிங் போகலாம்” என்று ஒரு அஸ்திரத்தைப் பிரயோகித்தாள். எனக்கு பகீர் என்றது.

நோ... நோ... இதானே வேணாங்கறது... உடனே நான் கஞ்சன் என்றோ, சரிதா வெட்டிச் செலவு செய்பவள் என்றோ கற்பனையை ஓடவிடக் கூடாது சார் / மேடம்! அப்படி எதுவும் இல்லை. பின் ஏன் சரிதா ஷாப்பிங் என்றால் நீ பயப்படுகிறாய் என்றுதானே கேட்கிறீர்கள்? காரணம்... சரிதாவின் வீக்னெஸ்!

அது என்ன வீக்னஸ் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா..? உங்கள் மானிட்டரைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்... ஒரு கொசுவர்த்திச் சுருள் ஹைஸ்பீடில் சுற்றுவது தெரிகிறதா..? கரெக்ட்... நாம் ஒரு ப்ளாஷ்பேக்கிற்குள் போகிறோம்...

முன்பொரு முறை நாங்கள் ஷாப்பிங் கிளம்பிய ஒரு (அ)சுபதினத்தில்... “என்னங்க... ஜவுளிக்கடைக்குப் போற வழியில ஹோட்டல்ல ஏதாவது கொறிச்சுட்டுப் போலாமா?” என்றாள். அவள் அடிக்கடி ஹோட்டலுக்குப் போக வேண்டும் என்று தொந்தரவு செய்யும் ரகமல்ல என்பதால் சம்மதித்தேன். ‘உயர்தர உணவகம்’ என்று போர்டிலேயே மிரட்டிய அந்த பெரிய ஹோட்டலின் காம்பவுண்டில் வண்டியை நிறுத்தி உள்ளேறினோம்.

சப்ளையர் கொண்டு வந்த வைத்த மெனு கார்டில் (புக்கில்?) இருந்து ஒரு அயிட்டத்தைத் தேர்ந்தெடுத்தாள் சரிதா. “என்னங்க... இதை ஆர்டர் பண்ணலாமா..?”

அதைப் பார்த்தேன். ஹூக்குவெஜி-ட்ரைமா என்று இருந்தது. “ஐயையோ... பேரைப் பார்த்தாலே உதறுது சரி... எனக்கு பேப்பர் தோசை போதும்...” என்றேன்.

“விட்டா நீங்க பேப்பரையேகூட தின்னுவீங்க... வீட்லதான் எப்பப் பாரு தோசை, இட்லின்னு சாப்பிடறோம்.. இங்கயாவது புது டிபன் ஏதாவது சாப்பிடலாமே... இது என்னப்பா..?” என்று கேட்டாள் சப்ளையரிடம்.

“நம்ம ஹோட்டல்ல புதுசா அறிமுகப் படுத்தியிருக்கற வெரைட்டி மேடம்...” என்றான் அவன்.
 “புது ஐட்டமா? ரெண்டு பிளேட் கொண்டு வா...” என்று உடனே ஆர்டர் செய்தாள். 

“சரி, நீ பாட்டுக்கு ஆர்டர் பண்ணிட்டே... அவன் பாம்பு குடல், தவளை கால்ன்னு எதையாவது கொண்டு வந்துடப் போறான்...”

“அட சமர்த்தே... இது சைவ ஹோட்டல்! பயப்படாம இருங்க...” என்றாள். இருந்தாலும் அவன் என்னத்தைக் கொண்டுவரப் போகிறானோ என்று உள்ளே சற்று உதறலுடன்தான் காத்திருந்தேன். வெயிட்டர் கொண்டு வந்து வைத்ததைப் பார்த்ததும் சரிதா ‘ஙே’ என்று விழித்தாள். நான் குபீரென்று சிரித்து விட்டேன்.  காரணம்...

ரத, கஜ, துரக, பதாதிகள் போல ஃபோர்க்குகளும் ஸ்பூன்களும் அணிவகுத்து நிற்க, சுற்றிலும் ஏதேதோ கீரைகளால் பாத்தி கட்டி, கொஞ்சம் ட்ரை ப்ரூட்ஸ் கொஞ்சம் கேரட், வெள்ளரித் துண்டுகள்... இவற்றுக்கிடையில் காட்சி அளித்தது... (வீட்டில் சரிதா அடிக்கடி செய்யும்) ரவை உப்புமா!

“என்னப்பா இது?” என்று வெயிட்டரிடம் (தாமதமாக) கேட்டாள் சரிதா. “இது தாய்லாந்து ஸ்டைல் ஃபுட் மேடம். இந்தியாவுல நாங்கதான் அறிமுகப் படுத்தியிருக்கோம். இந்த அயிட்டம்தான் எங்க ஹோட்டல்ல ஹாட் சேல்” என்றான் பெருமையாக. சங்ககால ரிஷிகள் போல சரிதாவின் பார்வைக்குச் சக்தி இருந்திருந்தால் பஸ்பமாகியிருப்பான்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாசலில் இருந்த பீடா ஸ்டாலில் பீடா வாங்கி இருவரும் போட்டோம். காரில் அவள் பின்சீட்டில் அமர்ந்ததும், கதவைச் சாத்திவிட்டு முன்புறம் வந்து டிரைவிங் சீட்டில் அமர்ந்தேன். 

“என்னங்க... துப்பட்டா...” என்றாள் சரிதா.

“ஹோட்டல் செக்யூரிட்டி திட்டுவான்மா. காம்பவுண்டு தாண்டினதும் ரோட்டோரமா நிறுத்தறேன். ஜன்னலை இறக்கிட்டுத் துப்பு” என்றேன்.
 
“அதில்லீங்க... கார்க் கதவுல துப்பட்டா...”

“கதவு நாறிப் போயிடும் சரிதா. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருக்க முடியாதா? ஏன் உன் புத்தி இப்படிப் போகுது?” சற்றுக் கோபமாகவே கேட்டேன்.

“ஐயோ என் அறிவே... கார்க் கதவுல துப்பட்டா மாட்டிக்கிச்சுன்னு என்னை முழுசாச் சொல்ல விட்டாதானே...” என்றாள். “ஹி... ஹி... ஹி...” என்று அசடு வழிந்தவாறு கதவில் மாட்டியிருந்த அவள் துப்பட்டாவை எடுத்துவிட்டு மீண்டும் கதவைச் சாத்தி காரைக் கிளப்பினேன்.

புடவைக் கடையில்... 

நாங்கள் நுழைந்ததும், “வாங்க சார்... வாங்க...” என்று வரவேற்றாள் புடவை கவுண்ட்டரில் இருந்த, நாகேஷ் போல ஒல்லியாக இருந்த பெண். அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த அந்தப் பெண், நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாகப் பார்த்து பெருமூச்சு விட்டாள். நல்லவேளை... சரிதா பதிலுக்குப் பெருமூச்சு விடவில்லை... விட்டிருந்தால், அவள் கடைக்கு வெளியே பறந்திருப்பாள்!

அந்தப் பெண் சரிதாவிடம், “என்ன வேணும் மேடம்?” என்க, “உன்கிட்ட வந்து இட்லி, சாம்பாரா கேப்பாங்க... அந்த ஸாரியை எடும்மா...” என்று சற்றுக் காரமாகவே பேசி, கை காட்டினாள் என் துணைவி. ‘வாங்க மேடம்’ என்று அவள் வரவேற்காததால் வந்த கோபம்! புடவையை எடுத்தபடி, “ஹன்ஸிகா ஸாரி இருக்கு மேடம்.. பாக்கறீங்களா?” என்றாள் அந்த நாகேஷி.

ஹன்ஸிகா எங்க புடவை கட்டறா? அப்படியே கட்டி னாலும் அவ புடவை எனக்கு வேணாம்... நான் சொல்றதை மட்டும் எடு...” என்றாள் சரிதா. 
   அடுத்த நிமிடம் நான் எதற்கு பயந்தேனோ, அது நடந்து விட்டது. “இந்த டிசைன் புதுசா வந்திருக்கு மேடம். நேத்துத் தான் வந்துச்சு” என்றபடி ஒரு புடவையைக் காட்டினாள். உடனே, “ஓக்கே, இது இருக்கட்டும்..” என்றாள் சரிதா. 

இதுதாங்க சரிதாவோட வீக்னஸ்! ‘புதுசு’ என்றோ ‘புது மாடல்’ என்றோ யாராவது சொல்லி விட்டால் போதும்... அதை வாங்காவிட்டால் அவளுக்கு மண்டையே வெடித்து விடும். புதிய ஐட்டம் என்று ஒரு (சாமர்த்திய) கடைக்காரர் இவள் தலையில் கட்டிய அம்மிக் கல்லைக் கூட வாங்கிவந்து மிக்ஸியைப் பயன்படுத்தாமல் அதில் சட்னி அரைத்தாள் என்றால் பாருங்களேன்... இப்படி அவள் ‘புதுசு’ என்று வாங்கி, பின்னர் பயன்படுத்தாமல் வீட்டில் கிடக்கும் ஐட்டங்களை வைத்து ரிடையர் மென்ட்டுக்குப் பின் ஒரு கடை வைக்கலாம் என்றிருக்கிறேன்.

அந்த நாகேஷி சரியான சாமர்த்தியக்காரி. சில நிமிடங்களிலேயே சரிதாவின் வீக்னஸைப் புரிந்து கொண்டு அவள் தலையில் ஐந்து புடவைகளைக் கட்டி விட்டாள். கையில் புடவைக்கடை பார்சலையும், அவள் வாங்கிய இதர ‘புது’ ஐட்டங்களையும் சுமந்து வந்ததில் என் முகமே வெளியில் தெரியாதபடி அவைகள் மறைத்திருந்தன. திருப்தியாக ஷாப்பிங் செய்த சந்தோஷத்தில் சரிதா ஒரு சுற்று பெருத்திருந்தாள். என் பேண்ட்டிலிருந்த பர்ஸைப் பார்த்தேன்... அது நான்கு சுற்று இளைத்திருந்தது! 

கொசுவர்த்தி ஓவர்! -- இப்ப உங்களுக்குப் புரியுதா... ’ஷாப்பிங் போகணும்’னு சரிதா சொன்னா நான் ஏன் பயப்படறேன்னு...

‘பின் குறிப்பு : குத்தினால் வலிக்கும்!


பின்குறிப்பு : நான் ஐந்து நாட்கள் வெளியூர் செல்வதால் நெட் பக்கம் வர இயலாது. (கமெண்ட் மாடரேஷனை எடுத்து விட்டேன்). ஆகவே நண்பர்களின் தளங்களுக்கு வந்து படித்து ரசிப்பதும், கருத்துச் சொல்வதும், உங்கள் கருத்துக்களுக்குப் பதிலளிப்பதும் டிச.1ல்தான். பொறுத்தருளுங்கள் அன்பர்களே...

Wednesday, November 23, 2011

கல்லுக்குள் ஈரம்!

Posted by பால கணேஷ் Wednesday, November 23, 2011
சென்ற வருடம் ஸ்ரீரங்கத்தி்ல் இருக்கும் என் நண்பனின் வீட்டில் மூன்று தினங்கள் சென்று தங்கியிருந்து திருச்சியைச் சுற்றி வந்தேன். அப்போது பள்ளி ஆசிரியராக இருந்து ரிடையரான அவன் சித்தப்பா இரவில் வராண்டாவில் அமர்ந்து என்னுடன் நிறையப் பேசினார். ஒரு பள்ளி ஆசிரியராக, தான் சந்தித்த பல சுவாரஸ்ய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு அவர் வாழ்வில் நடந்ததாக அவர் சொன்ன ஒரு சம்பவத்தை தன்மை ஒருமையில் சிறுகதையாக இங்கே தந்துள்ளேன்...
 

‘‘அப்பா... ஜேம்ஸ் என்னை அடிச்சு, என்னோட பேனாவைப் புடுங்கிக்கிட்டான்ப்பா...’’ ஆசிரியர் ஓய்வு அறையிலிருந்த என்முன் அழுதபடி வந்து நின்றான்... நான் வேலை பார்க்கும் அதேபள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கும் என் மகன் செல்வம்.

‘‘என்னடா... போன வாரம்தானே அவனைக் கூப்பிட்டு அவ்வளவு அட்வைஸ் பண்ணினேன். இன்னிக்கு என்ன தகராறு?’’

‘‘என்னோட பேனாவை எழுதிப் பாக்கறேன்னு கேட்டான்ப்பா. குடுத்தேன். எழுதிப் பாத்துட்டுத் தரவேயில்லை. கேட்டதுக்கு எனக்குப் பிடிச்சிருக்கு, நானே வச்சுக்கறேன்னான். குடுடான்னு பிடுங்கப் பாத்தேன்... அடிச்சுட்டான்ப்பா...’’

‘‘க்ளாஸ் டீச்சர்கிட்டச் சொல்ல வேண்டியது‌தானேடா?’’

‘‘சொன்னேன்ப்பா... சரி விடு, வேற பேனா வாங்கிக்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாருப்பா...’’

 வாயால் பேசுவதை விட அதிகமாக ஆயுதத்தால் பேசும் ஜேம்ஸின் அப்பா ‌அலெக்ஸை நினைத்துப் பயந்திருப்பார் போலிருக்கிறது. ஏரியாவையே அலற வைக்கும் தாதாவாயிற்றே... உண்மையில் பயத்தால்தான் நானும் இதற்கு முன் பல தடவை என் மகன் புகார் சொன்ன போதெல்லாம் அவனுக்கு பொறுமையைப் போதித்தேன். ஜேம்சுக்கு அட்வைஸ் பண்ணியும் பார்த்தாயிற்று.

‘‘சரி, இனிமே இப்படி நடக்காது. நான் சரி பண்றேன். போடா...’’ என்று செல்வத்தை சமாதானப்படுத்தி அனுப்பினேன். ஒரு முடிவுக்கு வந்தவனாக கிளம்பினேன்.


லெக்ஸை அணுகுவது அவ்வளவு சுலபமாக இல்லை. அவன் மகனின் பள்ளி ஆசிரியர் என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் எடுத்துச் சொன்னபின்தான் அவனிடம் பேச முடிந்தது. அவன் மகனைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னதும் எதுவும் பேசாமல் முறைத்தான் என்னை. அமர்ந்திருந்த சேரை விட்டு எழுந்தான்.

ஆஜானுபாகுவான அவன் உருவமும், முறுக்கிய மீசையும், குடியினால் சிவந்து கிடந்த கண்களும்... சத்தியமாக எனக்குள் பயத்தைத் தோற்றுவித்தது. ‘‘தோ...டா... புகார் சொல்ல வந்துட்டாரு. அண்ணனுக்கு வேற வேலையில்லைன்னு நெனச்சியா வாத்தியாரே...’’ என்று அடியாட்களில் ஒருவன் முஷ்டியை மடக்கி என்னை நோக்கிவர, அவனை ஒரு கையசைவில் தடுத்துவிட்டு என் அருகில் வந்தான் அலெக்ஸ்.

‘‘வாங்க சார்...’’ என்று என் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று காரில் அமர வைத்தான். உடன் கிளம்பிய அடியாட்களை ஒரு கையசைவில் தடுத்துவிட்டு தானே காரை ஓட்டத் தொடங்கினான். அப்படி ஒரு வேகத்தில் அதுவரை நான் காரில் பயணித்ததில்லை. எங்கள் பள்ளியை அடையும் வரை எதுவும் பேசாமல் வெறித்த பார்வையுடன் காரோட்டிய அவனும், காரின் அசுர வேகமும் என்னுள் பீதியை விதைத்தது.

 
டதடவென கிளாஸ் ரூமுக்குள் அலெக்ஸ் பிரவேசித்த வேகத்தில் கிளாஸ் டீச்சர் சந்தானம் சார் பயந்துதான் போனார். மூக்குக் கண்ணாடியை நெற்றிக்கு ஏற்றி விட்டுக் கொண்டு மிரண்ட பார்வையுடன் எங்களை ஏறிட்டார்.

‘‘சார், இவர் சொல்றது நிஜமா? என் பையன் முரட்டுத்தனமா நடந்துக்கறதாகவும், நீங்க எதுவும் கண்டிக்கறதில்லைன்னும் சொல்றாரே... அப்படியா?’’ உறுமினான் அவன். ‘‘இல்ல சார்... ஆமாம் சார்... உங்க பையனாச்சேன்னு...’’ உளறிக் கொட்டினார் சந்தானம். அவரை ஒரு கணம் வெறித்த அலெக்ஸ், கையைச் சொடுக்கி தன் மகனை அழைத்தான். பளார்! அறையின் சப்தத்தில் அருகில் நின்றிருந்த எனக்கே வலித்தது. விக்கித்து நின்றான் ஜேம்ஸ்.

‘‘ராஸ்கல்! படிச்சு நல்ல நிலைமைக்கு வருவேன்னு ஸ்கூலுக்கு அனுப்பினா, இப்படியா அடங்காம நடந்துக்கற? இன்னொரு தடவை உன்னைப் பத்திப் புகார் வந்துச்சோ... வெட்டி பொலி போட்ருவேன். போடா...’’ அலெக்ஸின் கர்ஜனையில் சப்தநாடியும் ஒடுங்கியவனாய் அழுதபடி தன் இடத்தில் சென்று அமர்ந்தான் ஜேம்ஸ். “உங்கம்மாட்டயும் இன்னிக்கே சொல்லி வக்கிறேன். உன்னைப் பத்தி ஏதாவது தப்பா ரிப்போர்ட் வந்துச்சோ... உன்னோட சேத்து புள்ளையச் சரியா வளக்காத அவளையும் வெட்டிருவேன். ஜாக்கிரதை...”

மகனை எச்சரித்த அதே வேகத்தில் சந்தானம் சாரை நோக்கித் திரும்பிய அவன், பயந்திருந்த அவரைப் பார்த்து கோபமாகப் பேசினான்.

‘‘யோவ் வாத்தியாரே... நானும் படிக்கிற காலத்துல இவனைப் போல இருந்தவன்தான். அப்ப என்னைக் கண்டிக்கிறதுக்கு ஆளில்லாமதான் இப்ப இப்படி ஒரு தாதாவா உம்ம முன்னாடி நிக்கிறேன்...  இன்னிக்கு அவன் மத்த பசங்களை அடிக்கிறான்னு கண்டிக்காம விட்டயின்னா, நாளைக்கு உன்னையே அடிக்கிற அளவுக்கு வந்துருவான்யா...  எந்தப் பையன் தப்புப் பண்ணாலும் வாத்தியார்தான்யா அடிச்சுத் திருத்தணும். (25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதை நினைவில் கொள்க. இன்னிக்கு பசங்க மேல வாத்தியார் கை வச்சா நிலைமையே வேற...)  இப்படி ஆரம்பிச்சு நான் ஒரு தாதாவாகி இன்னிக்கு புலிவாலைப் புடிச்சவன் கதையா விடமுடியாம நிக்கிறேன். இன்னொருத்தன் இப்படி ஆவக் கூடாது. இவன் படிச்சு நல்லா வரணும். (என்னைக் கை காட்டி) இந்த சார் எவ்வளவு தைரியமா என்கிட்ட வந்து பேசினாரு. இவரைப் போல எல்லாரும் நேர்மையா, துணிச்சலா இருக்கணும்யா... இந்த நிமிஷத்துலருந்து இவனை உங்களோட முழுப்பொறுப்புல விடறேன். நல்லபடியா பாத்துக்கங்க...’’ ஏ.கே.47 வேகத்தில் கடகடவெனப் பேசியவன், அதிரடியாய் அதே வேகத்தில் வெளியேறிப் போய் விட்டான்.

முரட்டுத்தனமான உருவம் படைத்த அந்தக் கொலைகாரனுக்குள்ளேயும் ஒரு நல்ல இதயத்தைத் தரிசித்து விட்ட மகிழ்ச்சியில், பிரமிப்பில் அசையாமல் பார்த்தபடி இருந்தேன் நான்.

Monday, November 21, 2011

தந்தைக்கு உபதேசித்த ஸ்வாமிநாதன்!

Posted by பால கணேஷ் Monday, November 21, 2011
கைலாய மலை. ‘‘சர்வேஸ்வரா... அபயம்...’’ ‘‘நீங்கள்தான் எங்களைக் காத்தருள வேண்டும்...’’ என்று பலவிதமாகக் கூக்குரலிட்டபடி கூப்பிய கரங்களுடன் எதிர்வந்து நின்றனர் தேவர்கள். கண் மூடியிருந்த பரமசிவன் கண்களைத் திறந்து புன்னகை புரிந்தார். ‘‘‌தேவேந்திரா! ஏனிந்தப் பதட்டம்? என்ன நடந்தது?’’

தேவேந்திரன் முன்னால் வந்தான். ‘‘பிரபு! பூலோகத்தில் பிருகு முனிவர் கடுந்தவம் புரிந்து வருகிறார். அவரது தவத்தின் எண்ண அலைகள் தேவலோகத்தையும் எட்டி விட்டது. அவரது தவ அலைகளைத் தடுப்பவர் எவராயினும் தன் அறிவு முழுவதையும் இழந்துவிட வேண்டும் என்று வரமும் பெற்றிருக்கிறார். அகில உலகங்களுக்கும் நாயகனாகிய தாங்கள்தான் இதைத் தடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று வேண்டினான்.

சிவபெருமான் புன்னகைத்தார். தன் இரு கரங்களையும் நீ்ட்டி முனிவரின் சிரசை மூடினார். முனிவரின் எண்ண அலைகள் தடை பட்டதன் காரணமாக, சிவன் தன் நினைவி லிருந்த வேத மந்திரங்கள் அனைத்தையும் மறந்தார். பிருகு முனிவர் கண் விழித்தார். கைலாயபதியைக் கண்டதும் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து வருந்தினார். “பரமேஸ்வரா... தாங்களே ஆனாலும் நான் பெற்ற வரத்திற்கு விதிவிலக்கல்ல. என் தவத்தைக் கெடுத்ததின் விளைவை அனுப வித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், உங்களின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றும் புதல்வனிடம் நீங்கள் பிரணவ மந்திரத்தைக் கேட்டறிந்தால் இழந்ததை திரும்பப் பெறுவீர்கள்’’ என்றார்.

பின்னாளில் சூரபத்மனை அழிப்பதற்காக பரமேஸ்வரன் தன் நெற்றிக் கண்ணி லிருந்து உருவாக்கிய குழந்தை முருகன், அளவில்லாத சுட்டித்தனமும், அளப்பரிய வீரமும் பெற்றிருந்தான். ஒருமுறை பிரம்ம தேவன், சிவபெருமானைத் தரிசிக்க வேண்டி கைலாயம் வந்திருந்தார். சிறுவன் குமரன் அவரிடம் ஓடி வந்தான்.

‘‘ஓ... பிரம்ம‌ தேவரே! நில்லுங்கள்... நில்லுங்கள்...’’

‘‘என்ன வேலவா! எதற்கு இவ்வளவு வேகமாக ஓடி வருகிறீர்கள்? என்ன வேண்டும்?’’

‘‘பிரம்ம தேவரே... ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளை நீங்கள் எனக்கு விளக்கமாகக் கூறியருள வேண்டும். கணபதிக்கும் இது தெரியாதென்கிறார்...’’

பிரணவ மந்திரத்தை மறந்து விட்டிருந்த பிரம்மன் திருதிருவென்று விழித்தார். தன் இயலாமையை வேலவனிடம் தெரிவித்தார். கடுஞ்சினம் கொண்டான் கார்த்திகேயன். ‘‘பிரணவ மந்திரத்திற்குப் பொருள்கூறத் தெரியாத நீர் படைக்கும் உயிர்கள் ஞான சூன்யங்களாக அல்லவோ விளங்கும்? நீர் படைப்புத் தொழிலைத் தொடர்வது நியாயமில்லை. இனி படைப்புத் தொழிலை யாமே மேற் கொள்வோம்...’’ என்று அவரை பூவுலகில் ஓர் உயர்ந்த மலையில் சிறை யிலிட்டான். சரஸ்வதி தேவியும், தேவர்களும் ஈஸ்வரனை அணுகி, பிரம்மனைக் காப்பாற்றும்படி வேண்டினர்.

‘‘கந்தா... பிரம்ம தேவனை விடுவித்து படைப்புத் தொழில் செம்மையாக நடைபெற வழி செய்..’’’ என்று மகனிடம் ஆணையிட்டார் சர்வேஸ்வரன். ‘‘முடியாது தந்தையே. பிரணவ மந்திரத்தின் பொருளையே மறந்துவிட்ட அவரை எப்படி விட்டுவிட இயலும்?’’ என்றான்.

‘‘குமரா... பிரணவ மந்திரத்தின் உட்‌பொருள் இன்னதென்று நீ அறிவாயா?’’ என்று வினவினார் வெள்ளியங்கிரிவாசன்.

‘‘நன்றாக அறிவேன் தந் தையே...’’ என்று வேலவன் கூற, ‘‘அப்படியானால் அதை எனக்கு உபதேசம் செய்...’’ என்று வேண்டுகோள் விடுத் தார் சிவபெருமான். குறும்புக் கடவுளான சிவகுமரன் புன்முறு வல் பூத்தான். ‘‘தந்தையே... உபதேசம் என்று வந்துவிட்ட பின்னர் நான் குரு. நீங்கள் சிஷ்யன். இதுதான் உறவு. நீங்கள் கை கட்டி, வாய் புதைத்துக் கேட்டால் நான் சொல்லித் தருகிறேன்’’ என்றான்.

சிவபெருமான் கை கட்டியபடி குமரனைத் தன் மடியில் வைத்துக் கொள்ள, சிவனின் காதில் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தான் குமரன். பிருகு முனிவரின் சாபத்தால் சிவன் இழந்திருந்த மந்திர சக்திகள் அனைத்தும் அந்த உபதேசத்தின் மூலம் பரமேஸ்வரனுக்குத் திரும்பக் கிடைத்தன. தன் சக்திகள் முழுவதையும் திரும்பப் பெற்ற ஈசன், மகனை உவப்புடன் அணைத்து, ‘‘தந்தைக்கு உபதேசம் செய்த நீ இன்று முதல் ‘ஸ்வாமிநாதன்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவாய். நீ உபதேசம் செய்த இந்த மலையும் இன்று முதல் ‘ஸ்வாமி மலை’ என்ற பெயரில் வழங்கப்படும்’’ என்று வரம் அளித்தருளினார்.

ஸ்வாமி மலை திருத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. முருகனின் ஆறு படை வீடுகளில் நான்காவது படை வீடாகச் சொல்லப்படுகிறது இத்தலம். ஏனைய முருகனுறை மலைக்கோவில் களைப் போலன்றி, இந்த ஆலயம் செயற்கையான உருவமைக்கப்பட்ட ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. அறுபது அடி உயரமுள்ள இந்த மலையில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அறுபது படிக்கட்டுகளையும் ஏறிச் சென்றால் தமிழ்க் கடவுளான ஸ்வாமிநாதனைத் தரிசித்து அவனருள் பெறலாம். மலைக்குக் கீழே சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.

அருணகிரிநாதரால் திருப்புக ழிலும், நக்கீரரால் திருமுருகாற் றுப் படையிலும் பாடல் பெற்ற ஸ்தலம் இது. தினம் ஆறுகால பூஜைகள் நடக்கின்றன. 7 கிலோ தங்கத்திலும், 85 கிலோ வெள் ளியிலும் அழகுற வடிவமைக் கப்பட்ட தங்கத் தேரில் வலம் வரும் முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

பக்தர்கள் ஸ்வாமி மலையில் தங்கி இறைவனைத் தரிசிப்பதற்கு வசதியாக அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்படும் தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கின்றன. மாதந்தோறும் கிருத்திகை, ஏப்ரல் மாதத்தில் தேர்த் திருவிழா, மே மாதத்தில் விசாகத் திருவிழா மற்றும் நவராத்திரி விழா,  அக்‌டோபர் மாதத்தில் கந்தசஷ்டிப் பெருவிழா, நவம்பர், டிசம்பர் மாதங்களில் கார்த்திகைத் திருவிழா, ஜனவரி மாதம் தைப்பூசத் திருவிழா, மாதத்தில் பங்குனி உத்திரத் திருவிழா என்று இங்கே ஆண்டு முழுவதும் விழாக்கள் நடப்பதால் குமரனைத் தரிசித்து அருள் பெறுவதற்கு உகந்த இடமாக விளங்குகிறது.

சுவாமிமலைக்கு திருவேரகம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. கவிகாளமேகம் எழுதிய...

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை-மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே


-என்ற தனிப்பாடல் கூட இந்தத் திருவேரகத்தை (ஏரகத்துச் செட்டியாரே) குறிப்பதுதான் எனச் சொல்வார்கள். குமரக் கடவுள் அருள் மழை பொழியும் ஆலயமான ஸ்வாமி மலையை நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்து அவனருளுக்குப் பாத்திரமாகுங்கள்..!

Friday, November 18, 2011

‘எங்கள் ப்ளாக்’கில் ‘சவடால் சிறுகதைப் போட்டி’ அறிவித்து பாதிக் கதையைத் தந்து விட்ட இடத்திலிருந்து தொடரச் சொல்லியிருந்தபடி, கதையைத் தொடர்கிறேன். கதையின் துவக்கத்தைப் படிக்கவும் போட்டி பற்றி அறியவும் விரும்புபவர்கள் இங்கே சென்று அதைப் படித்துவிட்டு வரும்படி வேண்டுகிறேன்.

=================================================

ந்தப் பொன்னிற மங்கை, புங்கவர்மனிடம் சொன்னாள்: "மன்னா உங்களிடமிருந்து எனக்கு ஓர் உதவி தேவை. அந்த உதவியை உங்களால் மட்டுமே செய்ய இயலும். நான் பக்கத்து நாட்டு இளவரசி. என் கணவனுடன் இங்கு உல்லாசப் பயணம் வந்தேன். என் கணவரை ஓர் அரக்கன் பிடித்துப் போய், இங்கிருந்து மேற்கே ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி, ஓரிடத்தில் சிறை வைத்திருக்கின்றான். அடுத்த பௌர்ணமிக்குள் அவரை மீட்டு வந்துவிட்டால் அந்த அரக்கன் எங்கள் இருவரையும் ஆசீர்வதித்து, இந்தப் பக்கம் மீண்டும் வராமல் சென்றுவிடுவான். வருகின்ற பௌர்ணமிக்குள் அவரை யாராலும் மீட்க முடியாவிட்டால், அரக்கன் என் கணவனைக் கொன்று, என்னைக் கடத்திச்  சென்றுவிடுவான். மன்னா நீங்கதான் எப்பாடு பட்டாவது அவரை மீட்டுத்தர வேண்டும்...”

“என் வீரதீர பராக்கிரமங்களை(?) நீ அறிய மாட்டாய் பெண்ணே... வரும் பௌர்ணமிக்குள் உன் கணவனுடன் வருகிறேன்...” என்று வாக்களித்துவிட்டு நாடு திரும்பினான் புங்கவர்மன்.

=================================================

“என்ன அமைச்சரே... தக்க யோசனை கூறுவீர் என்று பார்த்தால் அப்போதிலிருந்து தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறீர்... அங்கே ஏதாவது யோசனை ஒளிந்து கொண்டிருக்கிறதா...?” கோபமாகக் கேட்டான் புங்கவர்மன்.

‘இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை. பட்டத்து யானையை பக்கத்து நாட்டு மன்னனிடம் வாடகைக்கு விட்டு நமக்கு மூன்று மாதம் முன் சம்பளம் கொடுத்ததுதான். கேள்வியப் பாரு...‘ என்று மனதிற்குள் நினைத்தபடி, “மன்னா... ஒரே வழிதான் உள்ளது. அண்டரண்டப் பறவை என்ற ஒன்றில் ஏறி விக்கிரமாதித்தன் என்ற மன்னர் ஏழு கடல், ஏழு மலை தாண்டியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பறவையைப் பிடித்தால் போதும்...” என்றார் மந்திரி மங்குணிப் பாண்டியர்.

“நீர் என்ன செய்வீரோ தெரியாது. உடனே காட்டிற்கு வீரர்களுடன் சென்று அந்தப் பறவையைப் பிடித்து வாரும்...” என்றான் புங்கவர்மன். ‘விக்கிரமாதித்தன் வீரத்தால் பறவையைப் பிடித்தான். நீர் போரில் தோக்கிரமாதித்தர். என்னைத் தான் ஏவுவீர்...’ மனதிற்குள் முனகியபடி சென்றார் மந்திரி.

=================================================

ரு வாரத்திற்குப் பின்...
 
“மன்னா... மிகுந்த சிரமத்தின் பேரில் அந்தப் பறவையைப் பிடித்து விட்டேன்...” என்று பறவையுடன் வந்தார் மன்னர். பறவையைப் பார்த்த மன்னன் வியந்து போனான். இரண்டு ஆள் உயரத்திற்கு பிரம்மாண்ட மாக இருந்தது அது. “இது வயதான பறவையாக உள்ளதே அமைச்சரே...?“ என்றான் மன்னன். “விக்கிரமாதித்தன் சென்ற அதே பறவை மன்னா.. வயதாகாமல் இருக்குமா...“ என்றான் மந்திரி மங்குணி.

“பறவையே... ஏழு கடல், ஏழு மலை தாண்டி உள்ள தீவில் என்னைக் கொண்டுவிட வேண்டும். மறுத்தால் உன்னை வெட்டி இப்போதே சூப் வைக்கச் சொல்லி விடுவேன். என் வீரர்கள் அனைவரும் ஒரு வாரம் உட்கார்ந்து சாப்பிடுவார்கள்...” என்றான் புங்கவர்மன் ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் திணித்தபடி.

“இது வேறயா... என் மேல் இருக்கும் போது பொடி போடாதீர் மன்னா. நான் தும்மினால் அப்புறம் நீர் கடலில் விழுந்து ஜலசமாதியாக வேண்டியதுதான்...” என்றது பறவை. மன்னன் ஏறி அமரவும் பறக்கத் துவங்கியது. “என்ன சாப்பிடுகிறீர் மன்னா? விக்கிரமாதித்தனை விட இரண்டு பங்கு கனமாக இருக்கிறீரே...” என்று முனகியபடியே பறந்தது.

=================================================

ரண்டு நாட்கள் பறந்தபின் ஒரு தீவில் கரை இறங்கியது பறவை. “ஏன் இங்கே இறங்கினாய்?” என்று கோபமுடன் கேட்டான் மன்னன். “விடாமல் பறக்க நான் என்ன நான்ஸ்டாப் பேருந்தா? கொஞ்சம் ஓய்வு தேவை மன்னா. நான் ஒரு தூக்கம் போடுகிறேன். அதோ இருக்கும் குகையில் நிறைய மதுபானங்கள் உள்ளன. நீரும் சற்று அருந்தி ஓய்வெடும்...” என்றபடி படுத்தது பறவை.
 
இரண்டு மணி நேரத்திற்குப் பின் பறவையைத் தட்டி எழுப்பினான் புங்கவர்மன். “ம்... புறப்படு...”. ஆச்சரியமாக அவனைப் பார்த்தது பறவை. “என்ன பார்க்கிறாய்? அதுசரி... மது இருக்கும் குகையில் ஒருவன் மட்டையாகிக் கிடக்கிறானே... யார் அவன்?” என்று கேட்டான்.

“அவன் வில்லவ நாட்டு இளவரசன் போதைதிருமன். உமக்கு முன்பே இளவரசிக்காக என்னைப் பிடித்து பறந்து வந்தான். இங்கே விட்டதும் மது அருந்திவிட்டு மட்டையானவன்தான். இன்னும் எழுந்திருக்கவில்லை. நீரும் அப்படி ஆகிவிடுவீரென நினைத்தேன்” என்றது பறவை. “யாரு... நானா? குடிப்பதில் எமக்கு எத்தனை வருட சர்வீஸ்...” என்றபடியே பறவை மீது மீண்டும் ஏறினான். “என்ன மன்னா... திடீரென்று பிணகனம் கனக்கிறீர்?” என்று முனகியது பறவை. “அதுவா... அங்கே மதுவுடன் நிறைய தின்பண்டங்களும் இருந்தன. ஒரு வெட்டு வெட்டினேன். அதான்...” என்றபடியே பறவையின் மீது மட்டையானான் புங்கவர்மன்.

=================================================

முகத்தின் மீது யாரோ அடிப்பது போல் உணர்ந்து விழித்தான் புங்கவர்மன். பறவை தன் பெரிய இறக்கைகளால் அவன் முகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. “மன்னா.. தீவு வந்து விட்டது. அதோ அரக்கன் தவம் செய்து கொண்டிருக்கிறான் பாரும்... அவன் அருகில் அமர்ந்திருக்கும் இளவரசரை நீர் தூக்கி வந்தால் நாம் புறப்படலாம்...” என்றது பறவை.

புங்கவர்மன் சப்தம் எழும்பாமல் மெல்ல அடி எடுத்து வைத்து இளவரசன் அருகில் சென்ற நேரம் பார்த்தா அரக்கன் விழிக்க வேண்டும்? “அடேய் மானிடா... என்ன துணிச்சலில் வந்தாய்? இப்போதே சபிக்கிறேன் உன்னை“ என்று ஆரம்பித்த நேரம்... பறவை அருகில் வந்து “ஒரு நிமிடம் பொறுங்கள் அரக்கரே...” என்றது. “என்ன?” என்றான் அவன்.

“நீர் பாட்டுக்கு மன்னனை குரங்காக வேண்டும், கரடியாக வேண்டும் என்று சபித்து விடாதீரும். என்னால் இவரைச் சுமக்க முடியாது. எலும்பும் தோலுமாக மன்னன் வடிவம் மாறவேண்டும் என்று சாபமிடும்” என்று வேண்டியது பறவை. “அப்படியே ஆகட்டும்...” என்று அரக்கன் சபிக்கவும் மன்னன் ஓமக்குச்சி போலாக, தகர டப்பா போலிருந்த அவன் முகம் நசுங்கிய தகர டப்பா போலானது. அரக்கன் அட்டகாசமாகச் சிரிக்கத் தொடங்கினான். பறவை சும்மாயிராமல் ஒரு தகளியை எடுத்துவந்து மன்னன் முன் காட்டியது. (என்னா வில்லத்தனம்?)

தன் முகத்தைத் தகளியில் கண்ட மன்னன் கடுஞ்சினமடைந்து, கச்சையிலிருந்து ஒரு கை மூக்குப் பொடியை எடுத்து சிரித்துக் கொண்டிருந்த அரக்கன் முகத்தில் அடித்தான். அவன் கண்ணை மூடிக்கொண்டு அலற, “உன்னை மாதிரி கேனை அரக்கனை நான் பார்த்ததே இல்லை...” என்றபடி இளவரசனுடன் பறவை மீது பாய்ந்தேறினான் மன்னன். பாரம் குறைந்ததால் விரைந்து பறந்தது பறவை.

=================================================

புங்கவர்மன் வேட்டையாடிய காட்டில் அவர்களை இறக்கி விட்ட அடுத்த கணம் மன்னன் கையில் சிக்காமல் விரைந்து பறந்து தப்பிவிட்டது பறவை. இளவரசனைக் கண்டதும் தத்திவந்த தவளை இளவரசியாக உருமாறி அவனை அணைத்துக் கொண்டது. அருகில் நின்றிருந்த புங்கவர்மனின் காதில் புகை வந்தது. “மன்னா... இனி நாளை பௌர்ணமியன்று அந்த அரக்கன் வந்தாலும் நிபந்தனையை மீறாமல் எங்களை ஆசீர்வதித்துத்தான் செல்வான். நானும் இனி தவளையாக மாற வேண்டியதில்லை. கொடுத்த வாக்கிற்காக இத்தனை கஷ்டப்பட்ட உமக்கு எங்கள் ராஜ்யத்தில் பாதியைத் தருகிறோம்...” என்றாள்.

“மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். ஏதோ பார்த்து போட்டுக் குடும்மா... இப்போதைக்கு ஒரு புரவியைக் கொடு. என் நாட்டிற்குச் செல்ல வேண்டும்..” என்று புரவியில் பாய்ந்தேறி தன் நாட்டிற்கு வந்த புங்கவர்மனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமைச்சர் மங்குணி பாண்டியர் மன்னனாக சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். “அடேய் மங்குணி... நான் இரண்டு மாதம் இல்லாவிட்டால் நீ மன்னனாகி விடுவதா? இறங்குடா சிம்மாசனத்தை விட்டு...” என்று கத்தினான் புங்கவர்மன்.

“யாரோ பைத்தியம் போலிருக்கிறது. இவனை அரண்மனைக்கு வெளியே எறியுங்கள்” என்று மங்குணி மன்னன் (மாஜி அமைச்சர்) உத்தரவிட, புங்கவர்மன் வீரர்களால் வெளியில் இழுத்துத் தள்ளப்பட்டான். பாவம் மன்னன். அங்கே யாருக்குமே அடையாளம் தெரியவில்லை அவரை.

Thursday, November 17, 2011

எனக்கொரு மகன் பிறப்பான்!

Posted by பால கணேஷ் Thursday, November 17, 2011
விஸ்வநாதனின் கண்கள் சிவந்திருந்தன. ‘‘விளையாடறியா ராஜா? என்ட்ரன்ஸ் எக்ஸாம்லாம் எழுதி பாஸ் பண்ணிட்டு இப்ப மெடிக்கல் காலேஜ்ல சீட் வேற வாங்கியாச்சு. இப்ப வந்து ‘எனக்கு டாக்டருக்குப் படிக்கறதுல இஷ்டமில்லை. கேட்டரிங் டெக்னாலஜிதான் படிக்க ஆசைப்படறேன்’னு சொன்னா என்னடா அர்த்தம்? இதெல்லாம் முன்னாடியே சொல்லியிருக்கணும்...’’

‘‘சொன்னேன்ப்பா... நீங்கதான்...’’

‘‘ஆமாண்டா. நான்தான் கூடாதுன்னு சொன்னேன். உன்னோட எதிர்காலத்துக்கு ஏத்தது எதுன்னு பெத்தவங்க எங்களுக்குத்தான்டா நல்லாத் தெரியும். நீ டாக்டராகணும்ங்கறது என்னோட எத்தனை வருஷத்துக் கனவு தெரியுமா? இன்னும் ஒரு தடவை இந்த மாதிரிப் பேசினே... அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது...’’ -கோபமாகச் சொல்லி (கத்தி) விட்டு வெளியேறினார் விஸ்வநாதன்.

விஸ்வநாதன் தன் மனைவிக்கோ, மகனுக்கோ ஏதும் குறை வைத்தவரில்லை. அவர்கள் கேட்காமலேயே தேவையானவற்றைச் செய்து விடுவார். டாக்டராக வேண்டுமென்ற அவரது கனவு பலிக்காமல் ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் நடத்துவதிலேயே தன் திறமை முடங்கிப் போனதில் அவருக்கு மிகவும் வருத்தம். அதனால் மகன் ராஜாவை ஒரு டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என்பதையே லட்சியமாக வைத்துக் கொண்டு, அதற்காக ராஜாவைச் சிறு வயது முதலே தயார்படுத்தத் தொடங்கி விட்டார் விஸ்வநாதன். இதனால் ராஜா இழந்தது நிறைய.

முகம் சுண்டிச் சுருங்கியிருக்க, கலங்கிய கண்களுடன் நின்றிருந்தான் ராஜா. மெல்ல அவன் அருகில் வந்த அம்மா அருணா, அவன் தோளைத் தொட்டாள். ‘‘அவரைப் பத்தித்தான் உனக்கு நல்லாத் தெரியுமேடா. தெரிஞ்சும் வீணா ஏண்டா அவர் வாயைக் கிளர்ற?’’

‘‘அம்மா... இதுவரைக்கும் அவரோட விருப் பத்துக்கு மாறா எந்த விஷயத்துலயாவது நீயோ, நானோ நடந்திருக்கோமா? அவர் ஒரு சர்வாதிகாரி மாதிரிதானே நடந்துக்கறார்? குடும்பத்துல எதுன்னாலும் அவர் இஷ்டப் படிதான் நடக்கணும்கறது சரி. ஆனா இது என்னோட எதிர்காலமாச்சே... இதுலயாவது என் இஷ்டத்துக்கு விடக் கூடாதா?’’

‘‘சரி... சரி... அப்புறமா அவர் நல்ல மூட்ல இருக்கறப்ப பேசிப் பார்க்கலாம். இப்ப இதை விட்டுடு...’’ என்றாள் அம்மா. ராஜாவுக்கோ மனதில் பதிந்துவிட்ட சில காட்சிகள் மறுஒளிபரப்பாகத் தொடங்கின.

சோஃபா. சோபாவில் சாய்ந்தபடி பேப்பர் படிக்கும் விஸ்வநாதன். அருகில் தயங்கியபடி ராஜா. நிமிர்ந்தார். ‘‘என்னடா?’’

‘‘வந்துப்பா... ஸ்கூல் கிரிக்கெட் டீம்ல என்னைச் சேர்த்திருக்காங்க. நா‌ளைலேர்ந்து பிராக்டிஸ் போகணும். அதுக்குக் கொஞ்சம் பணம்...’’

‘‘ஸில்லி! யாரைக் கேட்டு சம்மதிச்சே? நாளைலேர்ந்து உனக்கு ஸ்பெஷல் ட்யூஷன் கிளாஸ் அரேஞ்ச் பண்ணியிருக்கேன். கிரிக்கெட் டீம்ல உன்னால விளையாட முடியாதுன்னு சொல்லிடு...’’

‘‘அப்பா... எனக்கு இது நல்ல சான்ஸ்ப்பா... நான் டியூஷனையும் மிஸ் பண்ணாம படிச்சுடறேன்ப்பா...’’

‘‘நத்திங் டூயிங்! நாளைக்கு மாஸ்டர்கிட்ட சொல்லிட்டு நீ விலகிக்கற. இல்லேன்னா, நான் ஸ்கூல்ல வந்து பேசறேன்...’’

ஸ்கூட்டர். ஸ்கூட்டரை குனிந்து துடைத்துக் கொண்டிருக்கும் விஸ்வநாதன். அருகில் தயங்கியபடி ராஜா. நிமிர்ந்தார். ‘‘என்னடா?’’

‘‘வந்துப்பா... வர்ற வாரம் ஸ்கூல்ல பெங்களூர், மைசூர்க்கெல்லாம் டூர் கூட்டிட்டுப் போறாங்க. நானும் போயிட்டு...’’

‘‘வேண்டாம் ராஜா. உன்னோட ட்யூஷன் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் எல்லாம் ஒரு வாரம் போகாட்டி பிக்அப் பண்றது ரொம்பக் கஷ்டம். நீ போக வேண்டாம்...’’

‘‘ஒரு வாரம் போனாலும் நான் அதிக டைம் ஸ்பெண்ட் பண்ணி கஷ்டப்பட்டு படிச்சு பிக்கப் பண்ணிடுவேன்ப்பா. ஸ்கூல்ல நிறையப் பேரு பேர் குடுத்திருக்காங்க. எனக்கும் ஆசையா...’’

‘‘இடியட்! நல்லவிதமா சொன்னாப் புரியாது? போடா... அதெல்லாம் நடக்கிற காரியமில்லை...’’ சொல்லிவிட்டு வீட்டினுள் சென்ற விஸ்வநாதனை கண்ணீருடன் பார்த்தான் ராஜா.

டையிலிருந்து வந்து ரிலாக்ஸ்டாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்த விஸ்வநாதனை நெருங்கினாள் அருணா. ‘என்னங்க...’’

‘‘என்ன அருணா..?’’

‘‘நம்ம பையன் ராஜா இன்னிக்குப் பூரா சாப்பிடவே இல்லிங்க. எதையோ பறி கொடுத்தவனாட்டம் ரொம்ப சோகமா இருக்கான். நமக்கிருக்கறதோ ஒரே பையன். அதனால...’’

 
மேலே பேச விடாமல் அருணாவைக் கையமர்த்தினார் விஸ்வநாதன். ‘‘நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குப் புரியுது அருணா. இதோபார்... அவன் விளையாட கேரம் போர்ட் வேணும்னு கேட்டப்ப அன்னிக்கே வாங்கித் தந்தேன். ‘புதுசா ஸ்போர்ட்ஸ் மாடல் சைக்கிள் வந்திருக்குப்பா. எனக்கு வாங்கித் தாங்க’ன்னு அவன் கேட்டதுக்காக அடுத்த நாளே வாங்கித் தந்தவன் நான். இப்படி எல்லா விஷயத்துலயும் நான் ஒரு நல்ல தகப்பனாதான் நடந்துட்டு வர்றேன். அவனும் ஒரு நல்ல மகனா நடந்துக்கிட்டு என்னோட விருப்பத்தை நிறைவேத்துவான்கற ஒரே எதிர்பார்ப்பு மட்டும்தான் எனக்கு. அதனால இந்த விஷயத்துல என்னோட விருப்பத்துக்கே விட்டுடு. ‌ப்ளீஸ்... மேற்கொண்டு எதுவும் பேசாத...’’ திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு மீண்டும் டி.வி.யின் பக்கம் பார்வையைத் திருப்பிய கணவனைப் பார்த்தபடி திகைப்புடன் நின்றாள் அருணா.

ரவு. சாப்பிடக்கூட வெளியில் வராத ராஜாவை அழைப்பதற்காகச் சென்ற சுந்தரம், உள்ளே தாயும் மகனும் பேசுவதைக் கேட்டதும் வெளியிலேயே நின்று விட்டார். உள்ளே அருணா சொல்லிக் கொண்டிருந்தாள்: ‘‘என்னால ஒண்ணும் பண்ண முடியலைடா. உங்கப்பாவோட முகத்தைப் பார்த்தாலும் பாவமாத்தான் இருக்குது ராஜா. நான் என்னதான் பண்ணட்டும் சொல்லு...’’

‘‘பரவாயில்லம்மா... நான் டாக்டருக்கே படிச்சு, ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி அப்பாவோட விருப்பத்தைக் கண்டிப்பா நிறைவேத்துவேன். கவலைப்படாதே...’’

‘‘இதுல உனக்கு ஒண்ணும் வருத்தமில்லையே...?’’

‘‘இருக்கும்மா. நிறையவே இருக்கு. ஆனா என்னாலதான் என்ன பண்ண முடியும்? அப்பாவை எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியாத நிலையில அவர் விருப்பப்படிதான் நான் படிச்சாகணும். ஆனா வருங்காலத்துல எனக்கு ஒரு மகன் பிறப்பான். அப்ப அவனை கேட்டரிங் டெக்னாலஜி படிக்க வெச்சு, உலகம் பூரா பேசப்படற கலைஞனாக்கி என்னோட விருப்பத்தை நிறைவேத்திக்குவேன். இது நிச்சயமா நடக்கும்மா...’’ தீவிரமாக முகத்தில் ஒருவித ஒளிவீச தன் மகன் சொல்வதை வாசல் அருகிலிருந்து கேட்ட விஸ்வநாதனுக்கு வெற்று முதுகில் சாட்டையடி பட்டதுபோல் மிக வலித்தது.

‘நான் டாக்டருக்குப் படிக்க முடியவில்லை என்பதற்காக என் விருப்பத்தை மகனின் முதுகில் ஏற்றி வைக்கிறேன். அவனோ தன் விருப்பத்தை தன் வாரிசின் முதுகில் ஏற்ற இப்போதே நினைக்கிறான். ஆக, தான் விரும்புவதைச் செய்யும் உரிமை பறிபோவது ஒன்றுதான் மிச்சம். இதனால் நான் என்ன சாதித்துவிடப் போகிறேன். தலைமுறை தலைமுறைகளாக இப்படி சுமைதாங்கிகளை உருவாக்கத்தான் வேண்டுமா?. ராஜா அவன் விரும்பிய வழியிலேயே செல்லட்டும்...’ -இப்படி ஓடியது விஸ்வநாதனின் எண்ணங்கள்.

ராஜாவும், அருணாவும் டைனிங் ஹாலுக்கு வந்து அமர்ந்தனர். மகனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த விஸ்வநாதன் சொன்னார்: ‘‘ராஜா! உனக்குப் பிடிச்ச மாதிரி கேட்டரி்ங் டெக்னாலஜி கோர்ஸ்லயே சேர்த்து விடறேன். நீ அதையே படிடா...’’

சிரித்தபடி சொல்லும் விஸ்வநாதனை, எது அவர் மனதை மாற்றியது என்பது புரியாமல் வியப்போடு பார்த்தனர் அருணாவும், ராஜாவும்.

=====================================================================

பின்குறிப்பு : ‘மழலை உலகம் மகத்தானது’ பதிவில் நான் வெளியிட்டிருந்த ‘இலக்கிய விருந்து’ எம்.பி.3. ஃபைலில் குழந்தைகள் தின உரை ஆற்றியவர் : எழுத்தாளர் ஷைலஜா அவர்கள். சரியான விடையை நண்பர்‌கள் யாரும் தரவில்லை.

Monday, November 14, 2011

மழலை உலகம் மகத்தானது..!

Posted by பால கணேஷ் Monday, November 14, 2011
வ.20 அன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நேருஜியின் பிறந்த தினமான இன்றைய தினத்தை (நவ.14) நாம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். குழந்தைகள் நம் வாழ்க்கையை அழகாக்குபவர்கள், அர்த்தமுள்ளதாக்குபவர்கள்.  அந்தக் குழந்தைகளை நாம்தான் சரியான முறையில் உருவாக்கி எதிர்கால சமுதாயத்திற்குப் பயனுள்ளவர்களாக அளிக்க வேண்டும். இந்தக் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் எனக்குள் நிறைய மனக் குமுறல்கள் உண்டு.
 
தன் தாயிடம் கதை கேட்டுக் கேட்டு வீரனாக வளர்ந்தவர் சத்ரபதி சிவாஜி என்று பாடப் புத்தகங்களில் மட்டும்தான் படிககிறோம். நம் குழந்தைகளுக்கு அறிவை வளர்க்கும் கதைகள் சொல்லி வளர்க்கிறோமா..? அதற்கென, அவர்களுக்காக நேரம் ஒதுக்குகிறோமா? நான் சிறுவனாக இருந்தபோது ‘குழந்தை இலக்கியம்’ என்று ஒரு பிரிவு இருந்தது. அழ. வள்ளியப்பா, வாண்டு மாமா போன்றவர்கள் குழந்தைகளுக்காகவே கதைகள் எழுதுவார்கள்.

அம்புலிமாமா, ரத்னபாலா, லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் போன்று பல காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சிறுவயதில் அவற்றையெல்லாம் படித்து இன்புற்றதுண்டு. இப்போது அவையெல்லாம் எங்கே போயின? இப்போதைய குழந்தைகளுக்கு படிப்பதில் ஆர்வமில்லை; நாமும் ஊக்குவிப்பதில்லை. அவர்கள் பொழுதுகள் எல்லாம் போகோ சேனலில் பார்ப்பதிலேயே போய் விடுகின்றன.

எழுத்தாளர் என்.சொக்கன் ‘மனம் போன போக்கில்’ என்ற தன் வலைத்தளத்தில் ‘உலகத்தோடு சுருங்குதல்’ என்ற கட்டுரையில் இப்படிக் குறிப்பிட் டிருந்தார் : 

கடந்த மாதம், என்னுடைய மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தினம். அப்போது அங்கே ஒரு தாய் வீராவேசமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. ‘என் பையனுக்கு நீங்க ரொம்ப ஹோம்வொர்க் தர்றீங்க மேடம், அவன் பாவம், கையெல்லாம் வலிக்குதுன்னு அழறான்!’

‘ஸாரிங்க. மத்த பாடத்திலெல்லாம் அவனுக்கு ஹோம்வொர்க் அதிகம் தர்றதில்லை’ என்றார் ஆசிரியை. ‘இங்க்லீஷ்லமட்டும்தான். அதுவும் குறிப்பா ஹேண்ட்ரைட்டிங்க்குமட்டும்தான் நிறைய வீட்டுப்பாடம் தர்றோம்.’

‘அதான் ஏன்?’

‘இதென்ன கேள்வி?’ என்பதுபோல் ஆசிரியை அந்தத் தாயை விநோதமாகப் பார்த்தார். ‘உங்க பையன் ரெண்டாங்கிளாஸ் படிக்கறான். ஆனா அவனுக்குக் கையெழுத்து இன்னும் சரியா வரலைங்க. முதல் வரியில எழுத ஆரம்பிச்சா மூணாவது வரியில போய் நிக்கறான். எழுத்து எதுவும் நாலு வரியில நிக்காம ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சைஸ்ல ஏத்தியும் தாழ்த்தியும் இருக்கு. இதையெல்லாம் சரி செஞ்சாதானே நாளைக்கு அவன் சரியா எழுதமுடியும்? அதுக்காகதான் எக்ஸ்ட்ரா ஹோம்வொர்க் தர்றோம். தப்புகளைத் திருத்தறோம். எல்லாம் அவனோட நல்லதுக்குதானே?’

‘நான்சென்ஸ்’ என்றார் அந்தத் தாய். ‘இந்தக் காலத்துல யார் பேனா பிடிச்சு எழுதறாங்க மேடம்? முந்தின தலைமுறையில எல்லோரும் ஏ, பி, சி, டி எழுதினாங்கங்கறதுக்காக இவங்களுக்கும் சொல்லித்தர்றீங்க, அவ்ளோதான். மத்தபடி படிப்பை முடிச்சு வெளியே வந்தப்புறம் அவன் பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத் தனம். அதையெல்லாம் நிறுத்திட்டு ஒழுங்காப் பாடத்தைமட்டும் சொல்லிக்கொடுங்க. புரியுதா?’
 
 -என்ன கொடுமை இது! நம் சந்ததிகளுக்கு கையெழுத்து மட்டும் போடத் தெரிந்தால் போதுமா? கடிதம் எழுதுவது என்றொரு பழக்கத்தை நாம் இன்று தொலைத்துக் கொண்டி ருக்கிறோம். எம்.எம்.எஸ்., இமெயில் என்றுதான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. குழந்தை களைக் குறை சொல்லி என்ன பயன்? கடிதம் எழுதுவது, டைரி எழுதுவது போன்றவற்றைக் குழந்தைகளுக்குப் பழக்கினால் தானே அவர்கள் கையெழுத்தும் சீரடையும், கற்பனைத் திறனும் வளரும்.

இவற்றையெல்லாம்விட என்னை வேதனை யடையச் செய்யும் விஷயம்... ஒருநாள் தொலைக்காட்சி பார்த்தபோது கவுன் போட்ட சின்னப் பெண், ‘நான் ஆளான தாமரை’ என்ற பாடலைப் பாடி, அப்பாடலில் கதாநாயகி செய்த (விரச) நடன அசைவுகளையெல்லாம் செய்து ஆடிக் கொண்டிருந்தது. கேலரியில் அமர்ந்து அந்தச் சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளைக் கண்டு (வாயெல்லாம் பல்லாக) ரசித்துக் கொண்டிருந்தனர். இப்படித்தான் உங்கள் வீட்டுக் குழந்தைகளின் திறமை(?)யை வளர்க்க வேண்டுமா? தான் பாடி ஆடும் பாடலின் பொருள் இன்னதென்று அறியாத (ஒருவேளை அறிந்திருக்குமோ என்னமோ... இக்காலக் குழந்தைகள்...) வயதுடைய அந்தச் சிறுமியை இப்படி ஆடிப்பாட விடுவது என்ன வளர்ச்சியில் சேர்த்தி?

 இன்றைய மாணவச் செல்வங்களிடம் நல்ல விஷயங்கள் எதுவும் உன் கண்ணில் படவில்லையா என்று என் மீது பாய வேண்டாம். அற்புதமான பேச்சாளர்களாகவும், சாதிக்கும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களும் பல குழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சில விதிவிலக்குகளைக் கண்டு மகிழ்ந்துவிட்டு, பெரும்பான்மையை ஒருபோதும் புறந்தள்ளலாகாது.  

தொலைக்காட்சியின் ஆதிக்கத்தையும், நல்லறிவு(?) புகட்டும் சினிமாக்களையும் தாண்டித்தான் நல்ல விஷயங்களை நம் வருங்கால சந்ததியினருக்குப் போதித்து ஆளாக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம். அதற்கான முயற்சிகளை அனைத்துப் பெற்றோரும் முன்னெடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவுதான் இந்தக் கட்டுரை.
 
குழந்தைகள் நலன் என்ற விஷயத்தில் நான் சொல்ல விட்டுப் போன கருத்துக்கள் ஏதாவது இருக்கலாம். அல்லது மாற்றுக் கருத்துக்களும் வரலாம். அதனால் இதை ஒரு தொடர் பதிவாக செய்தால் நலமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. 

குழந்தைகளை நல்லவிதமாக வளர்த்து ஆளாக்குவதில் குடும்பத் தலைவி, குடும்பத் தலைவர் இருவருக்குமே சம பங்குண்டு. இருகை எழும்பினால்தானே ஓசை..? இங்கே நான் நான்கு கரங்களை ஓசை எழுப்ப அழைக்கிறேன்.

எழுத்தாளர் ஷைலஜா (எண்ணிய முடிதல் வேண்டும்) 

ஸாதிகா (எல்லாப் புகழும் இறைவனுக்கே) 

சென்னைப் பித்தன் (நான் பேச நினைப்பதெல்லாம்) 

பிரகாஷ் (தமிழ்வாசி)

இந்த நால்வரையும் தொடர்ந்து எடுத்துச் செல்லும்படி வேண்டுகிறேன். என்னைப் போல் உங்களைப் பாதித்த விஷயங்களைப் பகிரலாம். அல்லது உங்கள்  குழந்தைப் பருவ இனிய அனுபவங்கள், படங்கள் என உங்கள் விருப்பப்படி மழலையர் உலகத்தைத் தொடரலாம். இதே தலைப்‌பில் தொடர்ந்தால் நலம். உங்கள் பதிவைத் தொடர நீங்கள் நால்வரை அழைத்து தொடர் பதிவாக்கும் படி வேண்டுகிறேன்.

பி.கு.: ஒரு பிரபல பதிவர் குழந்தைகள் தினத்தன்று நிகழ்த்திய உரையின் எம்.பி.3 ஃபைலை இங்கே இணைத்துள்ளேன். கேட்டுவிட்டு அவர் யாரென்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம். விடையை என் அடுத்த பதிவின் துவக்கத்தில் சொல்கிறேன். சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு மின்னூல் பரிசாக அனுப்புகிறேன்.

Thursday, November 10, 2011

சரிதாவின் சங்கீதம்!

Posted by பால கணேஷ் Thursday, November 10, 2011
‘‘என்னங்க... என்னங்க...?’’ வரும்போதே பரபரப்பாக வந்தாள் சரிதா.

‘‘என்ன சரி, மாதர் சங்கத்துக்குப் போறேன்னுட்டுப் போன உடனேயே வந்துட்டியே... சங்கத்தைக் கலைச்சுட்டாங்களா?’’

‘‘வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? அடுத்த வாரம் எங்க மாதர் சங்கத்தோட ஆண்டு விழா வருதுல்ல... அதுக்கு அமலா பாலை சீஃப் கெஸ்ட்டா கூப்பிட்டிருக்காங்களாம். எங்க செகரட்டரி சொன்னா?’’

‘‘யாரு..? ‘எட்ட சார், எட்ட வன்டிங்க’ன்னு மூக்காலயே பேசுவாளே... அந்த சளிமூக்கு சுந்தரியா?’’

‘‘சுந்தரி மேடத்துக்கு சைனஸ் டிரபிள். அதுக்காக இப்படியா சொல்வீங்க? வரவர உங்க சேட்டை ரொம்ப ஓவராப் போயிட்டிருக்கு...’’

‘‘நானா? அதுக்குன்னே சேட்டைக்காரன்னு ஒருத்தர் இருக்காரு. நான் சாது...’’

‘‘எதையாவது பேசி சொல்ல வந்ததையே மறக்கடிச்சுடுவீங்க. எங்க செகரட்டரி விழாவன்னிக்கு என்னைத்தான் கடவுள் வாழ்த்துப் பாடணும்னு சொல்லி யிருக்காங்க. நான் பாடினா சித்ரா பாடற மாதிரியே இருக்காம்...’’

‘‘யாரு? ‘கொஞ்சம் வெட்டிப் பேச்சு’ சித்ரா மாதிரியா?’’

‘‘எப்பப் பாரு இன்டர்நெட் நினைப்புலயே இருங்க... வீடு வெளங்கிடும்! அவங்க சொன்னது ‘சின்னக்குயில்’ சித்ரா...’’

‘‘பாடவந்த புதுசுலதான் அவங்க‘சின்னக்குயில்’ சித்ரா. இப்ப ரொம்பப் பெரிய குயில். உங்க செகரட்டரிக்கு காதுகூட மந்தம் போலருக்கு. சித்ராவோட குரலை சரியாக் கேட்டிருக்க மாட்டாங்க...’’ சரிதா என்னை நிஷ்டூரமாக முறைக்க, ‌நான் தொடர்ந்தேன்: ‘‘விழாவுல உன்னை ஏன் அவங்க பாடச் சொன்னாங்கன்னு எனக்குத் தெரியும்...’’

‘‘ஏனாம்?’’

‘‘இன்னிக்கு தேதிக்கு ஆவின் பால், ஆரோக்யா பாலை விட அமலா பாலுக்குத்தான் டிமாண்டு. அமலாபால் வர்றாங்கன்னு சொன்னா கூட்டம் நிறைய வரும்ல... அதைக் கலைக்கத்தான்...’’ என்றேன்.

‘‘உங்க வாயிலருந்து என்னிக்கு நல்ல வார்த்தை வந்திருக்கு?’’ என்று முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு கோபமாக வீட்டினுள் சென்றாள்.


றுநாள் காலையில்...

எனக்கு காஃபி கொடுத்து விட்டு, தானும் குடித்த கையோடு, சரிதா தன் ‘ராக ஆலாபனை’யைத் துவங்க, நான் கையில் நியூஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு வாசல் பக்கம் நின்றபடி படிக்கத் துவங்கினேன்.

பாடுவதை நிறுத்தினாள். ‘‘என்னங்க... உங்களைத்தானே... அப்படி என்னதான் வாசல்ல கொள்ளை போறது? பேப்பரை இங்க இருந்து படிக்கக் கூடாதா?’’

‘‘அக்கம்பக்கத்துல இருக்கறவங்க யாரும் உன்னை தப்பா நினைச்சுடக் கூடா தேன்னுதான் சரி, வாசல்ல நின்னு படிக்கிறேன்...’’

‘‘என்னையா? என்ன தப்பா நினைக்கப் போறாங்க..?’’

‘‘ஏதோ நான் அடிச்சுட்டதாலதான் நீ அழறேன்னு நினைச்சுடக் கூடாது பாரு...’’ என்றேன். அடுத்த கணம் சரிதா தன் அருகிலிருந்த கப் அண்ட் சாஸரை ஃப்ளையிங் சாஸராக மாற்றினாள். நானா... சிக்குவேனா...? எஸ்கேப்!

 
மாலையில்...

‘‘என்னங்க... இங்க வாங்க... பரண் மேல எங்கம்மாவோட ஹார்மோனியத்தை சும்மாத்தானே போட்டு வெச்சிருக்கேன். அதை எடுத்தக் குடுங்க...’’ என்றாள் சரிதா.

‘‘அது ரொம்பப் பழசாச்சே... அதை வெச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்?’’

‘‘ஓல்ட் இஸ் கோல்டுன்னு சொல்வாங்க. அதை வெச்சுத்தான் நான் சாதகம் பண்ணப் போறேன்...’’

‘‘கிழிஞ்சுது போ... உங்கம்மாவே ஓல்டு... அந்த ஹார்மோனியம் அவங்களை விட ஓல்டு... அதை வெச்சு நீ...’’

‘‘எங்கம்மாவை வம்புக்கு இழுக்காட்டா உங்களுக்கு மண்டை வெடிச்சுடுமே... பேசாம எடுங்க...’’ என்று சீறினாள்.

‘‘உங்கம்மா ஏறி நின்னா எடை மிஷின்லயே முள் மூணு சுத்து சுத்திட்டு அப்புறம்தான் நிக்கும். அவங்க வி(உ)ரலை வெச்சு, அமுக்கித் தேச்ச ஹார்மோனியத்துல நீ வாசிச்சு...’’

‘‘ஏய்... இப்ப பேசாம எடுத்துத் தரப் போறியா இல்லையா?’’

இதற்கு மேலும் தாமதித்தால் ‘மரியாதை’ கூடி விடுமே என்ற அச்சத்தில் ஏணியைப் போட்டு நின்றேன். ‘‘சரிதா, இது ரொம்ப ஆடறது. கொஞ்சம் பிடிச்சுக்கோ...’’ என்க, அவள் கீழே நின்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மேலே ஏறி பரணில் பார்த்தேன். ஏகப்பட்ட தட்டுமுட்டு சாமான்கள் (அவள் உபயம்தான்) நிறைந்து கிடந்தன. சற்று உள்ளே தள்ளி அவள் அம்மாவின் ஹார்மோனியம் இருந்தது.

‘‘பாத்துட்டிங்களா? எடுங்க சீக்கிரம்...’’ என்றாள்.

‘‘கொஞ்சம் இரு... முன்னால பழைய ஈயச்சொம்பு ஒண்ணு இருக்கு. அதை எடுத்தாத்தான் ஹார்மோனியத்த எடுக்க முடியும். இதை வாங்கிக் கீழ வையி...’’ என்று ஏணி மேலிருந்தபடி அந்தப் பெரிய சொம்பை நீட்டினேன். அந்த நேரம் பார்த்துத்தானா அதனுள் குடியிருந்த எலி ஒன்று சரிதாவை ஸ்விம்மிங் பூலாகக் கருதி டைவ் அடிக்க வேண்டும்...?

‘சக்கரம்’ என்று ஆங்கிலத்தில் அலறி, ஏணியை விட்டுத் தள்ளிக் குதித்தாள். பாலன்ஸ் இழந்த ஏணி ஆட, என் கையிலிருந்த சொம்பு தவறிக் கீழே நின்றிருந்த சரிதாவின் காலில் விழுந்தது. அவள் ஆவென்று அலறி எகிறிக் குதித்து, கைகளை உதறுவதற்கும் சரிதாவின் மாமா உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. (சரியாக இல்லாவிட்டால் என்ன கெட்டுவிடும்?)

‘‘அடடே... நம்ம சரிதா டான்ஸ்லாம் கத்துக்கிட்டாளா? சொல்லவே இல்லையே மாப்ளே...’’ என்று தன் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்தார். அவருக்கு கல்யாணசுந்தரம் என்று யார்தான் பெயர் வைத்தார்களோ..? ‘பல்’யாணசுந்தரம் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

‘‘ஆமாம் மாமா. இப்பத்தான் கத்துக்கிட்டா... அடுத்த வாரம் அரங்கேற்றம்’’ என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு, சரிதா என்மீது பாய்வதற்குள் கம்ப்யூட்டர் ரூமில் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டேன்.

 
‘‘என்னமோ மாதர் சங்கத்தோட ஆண்டு விழாவுல நான் பாடினாக் கூட்டம் கலைஞ்சுடும்னீங்களே... பாத்தீங்கல்ல... சில பேர் எழுந்து போயிட்டாலும் 100 பேருக்கு மேல அசையாம உக்காந்து  கேட்டாங்கதானே...?’’ என்றாள் சரிதா.

‘‘கரெக்ட்.ரொம்பப் பிரமாதமாப் பாடினே... நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. அசத்திட்டே...’’ என்றேன். (‘‘விட்டா மாதர் சங்க வாசல்ல சின்னக் கோயில்ல இருக்கற பிள்ளையாரே ஓடியிருப்பார். நான் ஓடவா முடியும்? அதுசரி... நூறு பேர்தானா? உன்னோட மத்த ப்ரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் வரல்லையா’’ என்று நான் மனதில் நினைத்தது சந்திரமுகி ரஜினி மாதிரி நல்லவேளையாக அவளுக்குக் கேட்கவில்லை...)

Wednesday, November 9, 2011

கேப்ஸ்யூல் நாவல்-2

Posted by பால கணேஷ் Wednesday, November 09, 2011
மிழின் குறிப்பிடத்தக்க நாவல்களை ரத்தினச் சுருக்கமாகத் தரும் முயற்சியாக ‘சிவகாமியின் சபதம்’ நாவலை உங்களுக்கு ‘கேப்ஸ்யூல் நாவல்’ என்ற பெயரில் முன்பு வழங்கியிருந்தேன். அதைப் போலவே தமிழில் குறிப்பிடத்தக்க புத்தகங்களின் லிஸ்ட் போட்டால் அதில் தவறாமல் இடம் பெறத் தக்க அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற அரிய நாவலின் சுருக்கம் இப்போது உங்களுக்காக இங்கே! இந்த நாவல் சென்னைத் தொலைக்காட்சியில் 13 வாரத் தொடராக திரு.மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
குறிஞ்சி மலர் : நா.பார்த்தசாரதி

    தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் மகள் பூரணி. சமீபத்தில் காலமான அவர், தம்பிகள் நாவுக்கரசனையும், சம்பந்தனையும், தங்கை மங்கையர்க்கரசியையும் காப்பாற்றும் பொறுப்பை பூரணியின் இளம் தோள்களில் சுமத்தி விட்டுப் போயிருந்தார். செல்வம் எதையும் சேகரித்து வைக்காவிட்டாலும் ஒழுக்கத்தையும், தமிழறிவையும் பூரணிக்கு சொத்துக்களாக விட்டுப் போயிருந்தார்.

    வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டுக் காலி செய்யும்படி வீட்டுக்காரர் சொல்லிவிட, அப்பாவுக்கு வர வேண்டிய பணத்தைக் கல்லூரியில் கேட்பதற்காக பூரணி தான் வசிக்கும் திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை வருகிறாள். கல்லூரியிலும் சரியான பதிலின்றி, அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளரும் பணம் தராமல் ஏமாற்றிவிட வெயிலில் நடந்து வரும் பூரணி நடுச்சாலையில் கார் ஒன்றின் முன் மயங்கி விழுகிறாள்.

    காரை ஓட்டிவந்த மங்களேசுவரி என்ற அம்மாள் அவளைத் தன் வீட்டிற்குக் கொண்டு சென்று மயக்கம் தெளிவிக்கிறார். பூரணியின் அழகும் பேச்சும் அவரைக் கவர்ந்து விடுகிறது. இலங்கையிலிருந்து வந்த செல்வம் மிகுந்த அந்த அம்மாள், நாகரீக மங்கையான தன் மூத்த மகள் வசந்தாவையும், அடக்கமான இளைய பெண் செல்லத்தையும் பூரணிக்கு அறிமுகப்படுத்துகிறார்.

    பூரணி மயங்கி விழுந்ததையம், எவரும் கவனிக்காமல் செல்வதையும் கண்ட அரவிந்தன் என்ற இளைஞன் தன் டைரியில் அதைக் கவிதையாக எழுதி வைக்கிறான். அரவிந்தன் அழகன்; கவிஞன்; ஏழைகளுக்கு உதவும் லட்சிய ிளைஞன். தானே வேலை செய்து படித்து வளர்ந்தவன். மீனாட்சி அச்சகத்தின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் அவனுக்கு சிறு வயதிலிருந்து ஆதரவளித்தவர். பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் நூல்களை வெளியிட உரிமை வாங்கி வருமாறு அரவிந்தனை அனுப்புகிறார். அப்பாவின் பதிப்பாளர் ஏமாற்றிய கோபத்தில் பூரணி அரவிந்தனைத் திட்டிவிட, அரவிந்தன் போய் விடுகிறான். அவன் விட்டுச் சென்ற டைரியைப் படிக்கும் பூரணி, அவனைப் புரிந்து கொண்டு அப்பாவின் நூல்களை வெளியிட அனுமதி தருகிறாள்.

    மங்களேசுவரி அம்மாள் பூரணிக்கு ‘மங்கையர் கழக’த்தில் பாடம் சொல்லித் தரும் வேலையை வாங்கித் தருகிறார். புத்தகம் வெளியிடுவதற்காக அடிக்கடி சந்திக்க நேரும் அரவிந்தனும் பூரணியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கின்றனர். பேராசிரியரின் நூல்களை வெளியிட்ட புதுமண்டபப் பதிப்பாளர் பூரணியின் வீட்டுக்கு வந்து, அவள் மீனாட்சி அச்சகத்துக்கு உரிமை அளித்ததற்காக சண்டை போடுகிறார். அப்போது அங்கு வரும் அரவிந்தனையும் அறைந்துவிட்டு, கருவியபடி சென்று விடுகிறார்.

    அரவிந்தன் முருகானந்தம் என்ற ஒரு முரட்டு இளைஞனை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறான். பார்வைக்கு முரடனாகத் தெரியும் அவன் உண்மையில் நல்ல மனம் படைத்தவன் என்பதை உணர்கிறாள் பூரணி. அரவிந்தன், மீனாட்சி அச்சகத்திலுள்ள புத்தகங்களை எரிப்பதற்கு நள்ளிரவில் நடக்கும் ஒரு முயற்சியை முறியடிக்கிறான். அதை முருகானந்தத்திடம் கூறும்போது பூரணியை அழைத்துக் கொண்டு மங்களேசுவரி அம்மாள் பதறியபடி அங்கு வருகிறார். அவர் மகள் வசந்தா நிறையப் பணத்துடன் வீட்டை விட்டுச் சென்று விட்டதாகவும், எங்கே என்று தெரியவில்லை என்றும் பதறுகிறார். போலீஸ் மூலம் மறுநாள் நடவடிக்கை எடுக்கலாம் என அவர்களுக்கு ஆறுதல்கூறி அனுப்பி வைக்கிறான் அரவிந்தன்.

    வசந்தாவின் போட்டோவைப் பார்க்கும் முருகானந்தம் தன் கஸ்டமர் விட்டுச் சென்ற பர்ஸிலிருந்த அவள் போட்டோவைக் காட்டுகிறான். பர்ஸிலிருந்த லெட்டர் மூலம் வசந்தா சினிமாவில் நடிக்கும் ஆசையில் வீட்டை விட்டு ஓடியதை அறிகிறார்கள். தான் திருச்சியில் இருப்பதாகவும், தன்னை அழைத்துச் செல்லுமாறும் வசந்தா கொடுத்த தந்தி அடுத்தநாள் மங்களேசுவரி அம்மாளுக்கு வருகிறது. பணம், நகைகளைப் பறிகொடுத்து ஏமாந்த அவளை முருகானந்தத்துடன் சென்று அழைத்து வருகிறார் அவர்.

    தீய சகவாசத்தால் ‌கெட்ட வழியில் செல்லும் பூரணியின் தம்பி நாவுக்கரசைத் திருத்தி தன் அச்சகத்திலேயே வேலைக்குச் சேர்க்கிறான் அரவிந்தன். வசந்தாவை ஏமாற்றியவனை முருகானந்தம் போலீசில் பிடித்துக் கொடுக்கிறான். இதற்கிடையில் பூரணி மேடைச் சொற்பொழிவாற்றுவதில் நல்ல புகழ் பெற்று, தொடர்ந்து சொற்பொழிவுகள் செய்த வண்ணமிருக்கிறாள். அவ்வாண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட பூரணியின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்கிறான் அரவிந்தன். சொற்பொழிவில் உணர்ச்சிவசப்பட்டு பேசும் பூரணி வாயிலிருந்து ரத்தம் வர மயங்கி விழுகிறாள். தொடர்ந்த சொற்பொழிவால் தொண்டை பாதிக்கப் பட்டிருக்கும் அவளுக்கு ஓய்வு ‌தேவை ‌என டாக்டர் சொல்ல, ஓய்வுக்காக வசந்தாவுடன் அவளை கொடைக்கானலுக்கு அனுப்புகிறார் மங்களேசுவரி.

    முருகானந்தத்துக்கு கொடைக்கானலிலிருந்து வந்த கடிதத்திலிருந்து அவனும் வசந்தாவும் காதலிப்பதை அறிகிறான் அரவிந்தன். மீனாட்சிசுந்தரம் அவனிடம் பூரணியை தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைக் கூறி, பூரணியை சம்மதிக்க வைக்குமாறு கேட்கிறார். அரவிந்தனுக்கு அதில் விருப்பமின்றி அரை மனதுடன் சம்மதி்கிறான். அவனால் கொடைக்கானல் போக இயலாதபடி சித்தப்பாவின் மரணம் குறுக்கிட, தானே முருகானந்தத்துடன் கொடைக்கானல் போகிறார் மீனாட்சிசுந்தரம்.

    சித்தப்பாவின் ஈமச்சடங்கில் அரவிந்தனைச் சந்திக்கும் பர்மாக்காரர் என்றழைக்கப்படும் அவன் உறவினர், புதுமண்டப பதிப்பாளர் தேர்தலில் நிற்கப் போவதாகவும், பூரணியை அரவிந்தன் நிறுத்தக் கூடாதென்றும் மிரட்டுகிறார். விளைவாக, அரவிந்தன் பூரணியை வேட்பாளராக நிறுத்துவதென்று முடிவெடுத்து, அவள் சம்மதத்தையும் பெற்று விடுகிறான்.

    மங்களேசுவரி அம்மாளிடம் பேசி முருகானந்தம்-வசந்தாவுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் அரவிந்தன். அவனுக்கும் பூரணிக்கும் மணம் செய்து வைக்க மங்களேசுவரி அம்மாவும், மீனாட்சிசுந்தரமும் விரும்ப, மனம் ஒன்றுபட்ட வாழ்க்கையே போதும் என மறுத்து விடுகிறான் அரவிந்தன். பூரணிக்கு பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பேச அழைப்பு வர, வெளிநாடு செல்கிறாள்.

     தன் நபர் தேர்தலில் ஜெயிப்பதற்காக அரவிந்தனுக்கு பல தொல்லைகள் தரும் பர்மாக்காரர், மீனாட்சிசுந்தரம் விற்க விரும்பிய சொத்தை விற்க விடாமல் செய்து அவரை பணக்கஷ்டத்தில் ஆழ்த்துகிறார். அந்தக் கவலையில் மீனாட்சிசுந்தரம் இறந்து விடுகிறார். தேர்தல் வேலையில் ஈடுபட்ட நாவுக்கரசை பர்மாக்காரரின் ஆட்கள் அடித்துவிட, கோபமாக நியாயம் கேட்கப் போகும் அரவிந்தனையும் அடித்துத் துன்புறுத்தி புதுமண்டப குடோனில் அடைத்து விடுகிறார்கள். விபரமறியும் முருகானந்தம், தன் நண்பர்களுடன் சென்று பர்மாக்காரரின் ஆட்களை உதைத்து, குடோன் பூட்டை உடைத்து அரவிந்தனை மீட்டு வருகிறான்.

    நாடு திரும்பும் பூரணி, நடந்ததையெல்லாம் அறிந்து வருந்துகிறாள். முருகானந்தம் தன் ஆட்களை அடித்ததில் கோபமான பர்மாக்காரர் மேலும் சூழ்ச்சி செய்து மீனாட்சிசுந்தரத்தின் மனைவி மற்றும் மருமகன்களின் மனதைக் கலைத்து அச்சகப் பொறுப்பை அவர்களே ஏற்று நடத்தும்படியும், அரவிந்தனை வெளியேற்றும்படியும் செய்கிறார். மனமுடைந்த அரவிந்தனை முருகானந்தமும், வசந்தாவும் வற்புறுத்தி தங்கள் வீட்டுக்கு அழைத்துவர, மங்களேசுவரி அம்மாள் ஆறுதல் சொல்கிறார்.

    மதுரை மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்தில் கொடும் விஷக்காய்ச்சல் ஒன்று பரவி, பலர் இறந்து கொண்டிருப்பதை செய்திகளில் படிக்கும் அரவிந்தன் கடிதம் எழுதி வைத்துவிட்டு மக்களுக்கு உதவ அங்கு சென்று விடுகிறான். தேர்தல் வேலையை வெறியுடன் கவனிக்கும் முருகானந்தத்திடம், அரவிந்தன் சென்ற நாளிலிருந்து பூரணி சோகமாக இருப்பதைக் கூறி அவனை அழைத்து வரும்படி விரட்டுகிறாள் வசந்தா. அரவிந்தன் அங்கு தொண்டு செய்து நிறையப் பேரைக் காப்பாற்றி, தான் விஷக்காய்ச்சலைப் பெற்றுக் கொண்டு களை இழந்தவனாக வருகிறான். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

    தேர்தலில் பூரணி வெற்றி பெற்ற செய்தியுடன், மேளதாளத்துடன் அவளை அழைத்துவர வருகிறான் முருகானந்தம். அங்கே அரவிந்தன் இறந்த செய்தி அவனுக்குக் கிடைக்கிறது. அரவிந்தனை இழந்து கதறி அழும் பூரணி, ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு வெள்ளை ஆடையுடன், திலகம், வளையல் அணியாமல் விதவைக் கோலம் பூணுகிறாள். தனக்குக் கிடைத்த பதவியையும் துறந்துவிட்டு பெண்கள் முன்னேற்றத்துக்காகத் தன் சொற்பொழிவுகளைத் தொடர்கிறாள். அந்தக் குறிஞ்சி மலர் என்றும் வாடாமல் அரவிந்தன் நினைவுடன் தன்சேவையைத் தொடர்கிறது.

நாவலில் ஆங்காங்கே திரு.நா.பார்த்தசாரதி அள்ளித் தெளித்திருக்கும் தத்துவ முத்துக்களையும், அநாயாசமாக வந்து விழும் அவருடைய உவமைகளையும், அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்களை அவர் வார்த்திருக்கும் அழகையும் இந்தக் ‘கேப்ஸ்யூல் நாவல்’ உங்களுக்குத் தந்துவிட இயலாது. புத்தகத்தை முழுமையாகப் படித்தால் மட்டுமே இந்தக் ‘குறிஞ்சி மல’ரின் மணத்தை நன்கு நு்கர முடியும். குறிஞ்சி மலர் 800 பக்கத்திற்கும் மேற்பட்ட கடல். இந்த கேப்ஸ்யூல் நாவல் அந்தக் கடலிலிருந்து அள்ளிக் கொட்டிய ஒரே ஒரு ஸ்பூன்தான்!

Monday, November 7, 2011

ராஜேஷ்குமாரும், நகைச்சுவையும்!

Posted by பால கணேஷ் Monday, November 07, 2011
ராஜேஷ்குமாருக்கு அறிமுகம் தேவையில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட க்ரைம் நாவல்களை எழுதி க்ரைம் கதை மன்னன் என்று பெயர் வாங்கியிருக்கும் இவர் அவ்வப்போது சமூக நாவல்களையும் எழுதுவதுண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வு பலர் அறியாதது. ஊஞ்சல் இதழின் உதவி ஆசிரியராக நான் இருந்தபோது, ராஜேஷ்குமார் தன் வாழ்வில் நடந்த நகைச்சுவை அனுபவங்களை ஒரு மினி தொடராக எழுதியதை வெளியிட்டோம். அதில் எனக்குப் பிடித்த ஒரு அத்தியாயத்தை, அவரின் அனுமதியோடு இங்கே வழங்குகிறேன்.

============================================================
1971ம் வருடம். நான் பி.எட். படிப்பைப் படித்து வாங்கிய டிகிரி கையில் சூடு ஆறுவதற்கு முன்பே எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்து விட்டது. பிரித்துப் பார்த்தேன். பவானிசாகர்க்கு பக்கத்தில் உள்ள பேஸிக் ட்ரெய்னிங் ஸ்கூலில் உள்ள மாணவர்களுக்கு கல்விக் கண்ணைத் திறக்கச் சொல்லி உத்தரவு போட்டிருந்தார்கள். பெட்டி படுக்கையோடு உடனே புறப்பட்டு விட்டேன்.

நல்ல பகல் நேரத்தில் பஸ்ஸில் போய் இறங்கினேன். கிராமம் பொட்டலாய் இருந்தது. சுற்றிலும் ஆள் நடமாட்டம் இல்லை. எங்கோ ஒரு தலை தெரிந்தது.

‘‘வாங்க.. வாங்க...’’

குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். நடுத்தர வயதில் அந்த நபர் தெரிந்தார். வேஷ்டி சட்டையில் பட்டை பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியோடு வாயில் வெற்றிலைச் சீவலோடு நிரம்ப ஜாக்கிரதையாய்ப் பேசினார்.

‘‘என்ன... பேஸிக் ட்ரெய்னிங் ஸ்கூல்ல டீச்சர் போஸ்டிங்கா..?’’

‘‘ஆமா...’’ தலையாட்டினேன்.

‘‘நான் ராகவமூர்த்தி. அதோ தெரியுதே ஓட்டு வீடு. அதுதான் இந்த கிராமத்தோட போஸ்ட் ஆபீஸ்! நான் போஸ்ட் மாஸ்டர். ஏதாவது போன் போடணும்னா ட்ரங்க்கால் புக் பண்ண நீங்க அங்கேதான் வரணும்...’’

நான் அவரோடு நடந்தேன். ‘‘தம்பி! இதுக்கு முன்னாடி ஏதாவது கிராமத்துல தங்கியிருந்து வேலை பார்த்த அனுபவம் இருக்கா?’’ என்று கேட்டபடி, ஏதோதோ சொல்லிக் கொண்டே வந்தார்.

============================================================

நான் வேலைக்குச் சேர்ந்து ஆசிரியராய் பணிபுரிய ஆரம்பித்து ஐந்து மாத காலம் ஓடி விட்டது. இந்த ஐந்து மாத காலத்தில் கிராமம் எனக்கு வெகுவாய்ப் பிடித்துப் போயி்ற்று. பள்ளி இல்லாத நாட்களில் போஸ்ட் ஆபீஸில் உட்கார்ந்து போஸ்ட் மாஸ்டரோடு அரசியல், சினிமா என்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன்.
ஒரு நாள் சனிக்கிழமை. பகல் பதினோரு மணி. அன்று பள்ளி இல்லாத காரணத்தால் நான் போஸ்ட் ஆபீசில் உட்கார்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டிய படி போஸ்ட் மாஸ்டரோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது வெளியூரிலிருந்து டெலிபோனுக்கு அழைப்பு வந்தது.

போஸ்ட் மாஸ்டர் எடுத்துப் பேசினார். ‘‘பேர் என்ன சொன்னீங்க..? நடராஜனா? அட்ரஸ் சொல்லுங்க... பி.பி. கால்ன்னா அவரை மட்டுந்தான் கூப்பிடுவோம்...’’

போஸ்ட் மாஸ்டர் ரிஸீவரை வைத்துவிட்டு உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய அலுவலக ஊழியரைக் கூப்பிட்டார்.  ‘‘புதுக்கிணறு தெருவில 34ம் நம்பர் வீட்டில நடராஜன்னு ஒருத்தர் இருப்பார். அவரைப் போய் கூட்டிட்டு வா. பி.பி. கால் வந்திருக்குன்னு சொல்லு. திருச்சியிலிருந்து அவரோட மாமா மாணிக்கவாசகம் பேசறார்ன்னு சொல்லு...’’

‘‘ஸார்... அவர் வீட்ல இல்லேன்னா... வேற யாரையாவது கூட்டி வரவா?’’

‘‘வேண்டாம். இது பி.பி. கால். அவர் வீட்ல இல்லேன்னா வந்துடு...’’

‘‘சரி ஸார்...’’ ஊழியர் வெளியில் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போய்விட நான் போஸ்ட் மாஸ்டரிடம் கேட்டேன். ‘‘அது என்ன பி.பி. கால்?’’

‘‘அதுவா..? PARTICULAR PERSON என்கிற வார்த்தையைத்தான் சுருக்கி பி.பி.ன்னு கூப்பிடறோம். வீட்ல இருக்கிற ஒரு குறிப்பிட்ட நபரோட மட்டும் சில பேர் பேச விருப்பப்படுவாங்க. அவர் வீட்ல இருந்தா கூட்டி வந்து பேச வைப்போம்...’’

ஒரு பொதுஅறிவு விஷயத்தைத் தெரிந்து கொண்ட சந்தோஷத்தோடு கையில் இருந்த நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தேன். பதினைந்து நிமிஷம் கரைந்து போயிருக்கும். தபால் ஊழியர் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை உள்ளே கூட்டி வந்தார்.

‘‘பி.பி. வந்துட்டாரா..? அப்படி உட்கார வை. இன்னும் பத்து நிமிஷத்துல கால் வந்துடும்...’’

அழைத்து வரப்பட்ட அந்த நபர் இறுக்கமான முகத்தோடு அங்கே போடப்பட்டு இருந்த பெஞ்சில் அமர்ந்தார். ஊழியர் போஸ்ட் மாஸ்டரிடம், ‘‘சார், காபி வாங்கிட்டு வரட்டுமா?’’ என்று கேட்டார். ‘‘பி.பி.க்கு காபி வேணுமான்னு கேட்டுட்டு மூணு காப்பியா வாங்கிட்டு வா. இல்லன்னா, ரெண்டு காபி வாங்கிட்டு வந்துடு.’’ என்றார் போஸ்ட் மாஸ்டர்.

அடுத்த பத்து நிமிஷங்களில் திருச்சியிலிருந்து அந்தக் கால் வந்து விட்டது. போஸ்ட் மாஸ்டர் உரக்கக் குரல் கொடுத்தார். ‘‘பி.பி.யைக் கூப்பிடுய்யா... கால் வந்தாச்சு...’’

அந்த நபர் இறுக்கம் குறையாத முகத்தோடு அறைக்கு வந்து ரிஸீவரை எடுத்துப் பேசினார். மூன்று நிமிஷத்தில் பேச்சை முடித்துக் கொண்டவர் பிறகு ரிஸீவரை கோபமாய் லொட்டென்று வைத்து விட்டு வெளியேறினார்.

நானும போஸ்ட் மாஸ்டரும் திகைப்போடு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டோம். ‘‘என்ன ஸார், பி.பி. இவ்வளவு கோபமாய்ப் போறார்?’’

‘‘ஏதாவது எமோஷனல் நியூஸாய் இருக்கும். இல்லேன்னா... அங்கிருந்து பேசின நபர் பணம் ஏதாவது கேட்டிருப்பார்...’’

============================================================


மேலும் ஒரு பதினைந்து நிமிஷம் போஸ்ட் ஆபீசில் இருந்துவிட்டு நான் என்னுடைய அறைக்குத் திரும்புவதற்காக நாற்காலியினின்றும் எழுந்த விநாடி வாசலில் அந்தச் சத்தம் கேட்டது. கோபமான பேச்சுச் சத்தம்.

நானும் போஸ்ட் மாஸ்டரும் திரும்பிப் பார்த்தோம். போஸ்ட் ஆபீஸ் வாசலில் ஒரு கும்பல் நின்றிருந்தது. பத்துப் பதினைந்து பேர்கள் இருக்கலாம். அதில் பாதிப் பேர் பெண்கள். நான்கைந்து ஆண்களிடம் உருட்டுக் கட்டைகள் தெரிந்தன. ஒருவன் கத்தினான்.

‘‘யோவ் போஸ்ட் மாஸ்டர்! வாய்யா வெளியே...’’

இரண்டு பேரும் வந்தோம். அந்தக் கோபமான கும்பலுக்கு முன்பாய் சற்று நேரத்திற்கு முன்னால் போஸ்ட் ஆபீஸுக்கு வந்து போன் பேசிவிட்டுப் போன அந்த பி.பி. நபரும் நின்றிருந்தார். எங்களைப் பார்த்ததும் கும்பலைத் திரும்பிப் பார்த்து, அங்கேயிருந்த பெரியவரிடம் கோபமாயச் சொன்னார்.

‘‘இவஙகதான்...’’

அந்தப் பெரியவர் வேகமாய் முன்னால் வந்து நின்றார். ‘‘ஏன்ய்யா.,.. நடராஜன் பெரிய நாதஸ்வர வித்வானாய் இல்லாவிட்டாலும் ஏதோ அவனோட திறமைக்கு ஏத்த மாதிரி கல்யாணம், திருவிழான்னு போய் நாதஸ்வரம் வாசிச்சிட்டு வர்றான். அவனுக்கு பரம்பரைத் தொழிலே நாதஸ்வரம் வாசிக்கிறதுதான். அவனையும், அவனோட தொழிலையும் கேவலப்படுத்தற மாதிரி பீப்பி வந்தாச்சு, பீப்பி வந்தாச்சுன்னு சொல்றது என்னய்யா நியாயம்? சின்னப்பசங்க மாதிரி பீப்பின்னு சொல்றதுக்குப் பதிலா நாதஸ்வரம் வாசிக்கிறவர்ன்னு சொல்லியிருக்கலாமே...’’

எங்களுக்குப் புரிந்து விட்டது. போஸ்ட் மாஸ்டர் அவசரமாய்ச் சொன்னார். ‘‘அய்யா... அது பீப்பி இல்லே... பி.பி.’’

‘‘ரெண்டும் ஒண்ணு தானே..?’’

நான் குறுக்கிட்டேன். ‘‘அய்யா... இது அந்த பீப்பி இல்ல. இங்கிலீஷ்ல வர்ற எழுத்தான பி.பி. ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் போன்ல பேசணும்னு போன் பண்ணினவர் ஆசைப்பட்டா பி.பி.ன்னு சொல்லுவாங்க...’’ என்று சொல்லி, எழுதிக் காண்பித்து, அவர்களைச் சமாதானம் செய்வதற்குள் எனக்கும் போஸ்ட் மாஸ்டருக்கும் வியர்த்துப் போய் விட்டது.

கூட்டம் எங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு கலைந்து போனாலும், அதில் ஒருவன் திரும்பிச் சொன்னான்: ‘‘இந்த வாட்டி எதையோ சொல்லித் தப்பிச்சுட்டீங்க... இன்னொரு வாட்டி சொன்னா... நடக்கிற கதையே வேற!’’

==================================================

Saturday, November 5, 2011

அன்பு நெஞ்சம் கொண்ட அனைவருக்கும் வணக்கம்!

மகிழ்ச்சியான செய்தி ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். தற்போது கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ‘பாக்யா’ வார இதழில் என்னுடைய சிறுகதை வெளியாகி உள்ளது. இது என்னுடைய முதல் சிறுகதை அல்ல. என்றாலும் வலையுலகில் புகுந்து பதிவுகள் எழுதத் தொடங்கிய பின்னர் அச்சில் வெளியாகும் என் முதல் சிறுகதை என்பதும், அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நிறையப் பேர் இருக்கிறீர்கள் என்பதும் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது.



 ============================================================
வம்பர் 2ம் தேதியன்று முபீன் சாதிகா எழுதிய ‘அன்பின் ஆறாமொழி’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். நூலை மூத்த எழுத்தாளர் திரு.இந்திரா பார்த்தசாரதி வெளியிட, திரு.ஜமாலன் பெற்றுக் கொண்டார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நல்ல உரையைக் கேட்கக் கிடைத்த இனிய மாலைப் பொழுதாக அமைந்தது.

செய்தி வாசிப்பாளர் திரு.நிஜந்தனை அங்கு சந்தித்தேன். முதல் முறை சந்திக்கிறோம் என்ற உணர்வே எழாத வண்ணம் நட்புடன் பழகினார். அவர் சிறந்த பண்பாளர் என்பது நிஜந்தான்!  ஸாதிகாவின் கவிதைகள் படித்ததும் உடனே புரியக் கூடியவை அல்ல. அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள நாம் சற்று மெனக்கெட வேண்டும். முதன் முதலில் அவரது ப்ளாக்கிற்குச் சென்றபோது நானும் எதற்குக் கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தாண்டி வந்து விட்டேன். பின்னொரு நாளில் என்னதான் சொல்ல வருகிறார் பார்ப்போமே என்றெண்ணி, பொறுமையாக மீண்டும் படித்துப் புரிந்து கொண்டபோது மிகவும் பிடித்தது. அதன்பின் விடாமல் படித்து வருகிறேன். என்போல நீங்களும் படித்துப் புரிந்து கொண்டால் கலைடாஸ்கோப் வர்ணச் சிதறல்கள் போல பல வண்ணங்கள் காட்டும் கவிதைகள் அவருடையவை.

ஸாம்பிளுக்கு நான் ரசித்த அவருடைய இரண்டு கவிதைகளை இங்கே தந்துள்ளேன்...

மேகப் பறல்

நீலப் பறலின்
காந்தச் சிறகும்
மண்ணுள் முகிழ்த்த
வெள்ளி இறக்கை
தூவும் புகையில்
முடங்கும் வாசம்
தொகை பெருக்கி
விசிறிய வானம்
சிவந்த மூங்கில்
கீற்று மேகமாய்
கீழிறங்கும் சிதறி.

வானினது மானினிது

வானினது அதுநின்வானினிதினிதுவானிதுஇதுவான்
மானினது அதுநின்மானினிதினிதுமானிதுஇதுமான்
மீனினது அதுநின்மீனினிதினிதுமீனிதுஇதுமீன்
கானினது அதுநின்கானினிதினிதுகானிதுஇதுகான்
தேனினது அதுநின்தேனினிதினிதுதேனிதுஇதுதேன்
ஊனினது அதுநின்ஊனினிதினிதூனிதுஇதுஊன்
பொன்னினது அதுநின்பொன்னிதினிதுபொன்னிதுஇதுபொன்
நானினது அதுநின்நானினிதினிதுநானிதுஇதுநான்.

கவிதை என்ன சொல்கிறது என்று யோசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் வேளச்சேரி தண்டீஸ்வரர் நகரில் 3வது பிரதான சாலையில் 25ம் எண்ணில் அபிராமி அபார்ட்மெண்ட்ஸில் உள்ள பாலம் பதிப்பகத்தை அணுகி நூலினைப் பெறுங்கள்.

Wednesday, November 2, 2011

தங்கந்தான்டி ஆம்பளை சிங்கம் தான்டி!

Posted by பால கணேஷ் Wednesday, November 02, 2011
ன் மனைவி சரிதா கார் ஓட்டக் கற்றுக் கொண்ட அழகை(!) நான் வர்ணித்த பதிவையும், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் சரிதாவிடம் காட்டினேன். ‘‘இவ்வளவு எழுதினது பத்தாதுன்னு சரிதாவப் பத்தி இன்னும் எழுதுவேன்னும் சொல்லியிருக்கீங்க. நீங்க மட்டும்தான் எழுதுவீங்களா? எனக்கும் எழுதத் தெரியும். உங்களைப் புகழ்ந்து(!) எழுதறதுக்கு எனக்கும் ஒரு சான்ஸ் தந்தே ஆகணும்...’’ என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.

‘‘சரி, சரி...’’ என்றேன்.

‘‘அதுக்கு எதுக்கு ரெண்டு தடவை சலிப்பா சரி சொல்றீங்க?’’ என்று கேட்டாள்.

‘‘முதல்ல சொன்னது உன்னோட பேரு’’ என்றேன்.

இனி, ஓவர் டூ சரிதா...
 
ன் அருமைக் கணவர் சமையலில் கெட்டிக்காரர்(?). எப்படி என்பதைச் சொல் கிறேன், கேளுங்கள்... ‘‘இன்னிக்கு நான் டிபன் பண்றேன் சரிதா. நீ பேசாம டி.வி. பாத்துட்டிரு. சமையல்ரூம் பக்கமே வரக் கூடாது’’ என்றார் ஒரு நாள்.

‘‘என்ன பண்ணப் போறீங்க?’’ என்று கேட்டதற்கு, ‘‘ரவா உப்புமா’’ என்றார். (இந்த ஆண்களுக்கு சமைப்பதென்றாலே இதுதான் முதல் சாய்ஸ் போலிருக்கிறது). ‘‘சரிங்க... நான் ஹெல்ப் பண்றேன்’’ என்றேன். ‘‘ஹும்! நீயெல்லாம் பண்றது ஒரு உப்புமாவா? வெறுமனே வெங்காயத்த நறுக்கிப் போட்டுட்டா ஆச்சா? கேரட், பட்டாணி, முந்திரிப் பருப்பு எல்லாம் போட்டுப் பண்ணணும்டி. எப்படிப் பண்றேன் பாரு. நீ சாப்பிடறதுக்கு மட்டும் வந்தாப் போதும்’’ என்று என்னை ஹாலில் உட்கார‌ வைத்து விட்டுச் சென்றார்.

சரியென்று சிரிப்பொலி சேனலில் வந்த வடிவேலுவின் காமெடியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை... நிமிர்ந்து பார்த்தால் அரை மணி நேரம் ஓடியிருந்தது. ஒரு உப்புமா பண்ண இவ்வளவு நேரம் ஆகாதே. இந்த மனுஷன் இன்னும் என்ன பண்ணுகிறார் என்று சமையலறைக்குப் போனால்... இவர் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு அடுப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பாத்திரத்தி்ல் தண்ணீரானால் கொதித்துக் கொண்டிருக்கிறது.

‘‘என்னாச்சுங்க?’’ என்று குரல் கொடுக்கவும், திடுக்கிட்டுத் திரும்பினார். ‘‘எனக்கும் என்னன்னே புரியலை சரிதா... ரவையைப் போட்டு இருபது நிமிஷமாக் கிளர்றேன். கெட்டியாகவே மாட்டேங்கறது...’’ என்றார் குழப்பமாக. ‘‘சான்‌‌ஸே இல்லையே...’’ என்றபடி அருகில் நெருங்கிய எனக்கு ‘திக்’கென்றது. அவர் அருகில் இருந்த சம்புடம்!?

எப்போதாவது கோபத்தையும், சிரிப்பையும் சேர்‌ந்தாற்போல் அனுபவித்திருக்கிறீர்களா? நான் அனுபவித்தேன். ‘‘அடப்பாவி மனுஷா! இது நான் இன்னிக்குக் காலைலதான் வாங்கி வச்சிருந்த கோலப்பொடி. இதையா கொட்டினீங்க? நீங்க அள்ளிப் போட்டிருக்கற கேரட்டையும், பட்டாணியையும், முந்திரிப் பருப்பையும் வெறுமன வறுத்துத் தின்னிருந்தாக் கூட அதுவே சூப்பர் டிஃபனாகியிருக்கும். அதுசரி... நீங்க என்ன பண்ணுவீங்க..? ரவைக்கும் கோலப்பொடிக்கும்கூட வித்தியாசம் தெரியாம உங்கம்மா உங்களை வளர்த்திருக்காங்க...’’ என்றேன் சிரிப்பும், கோபமுமாக.

‘‘ஹி... ஹி... ஸாரிம்மா....’’ என்றபடி வெளியேறி வி்ட்டார். அவர் அம்மாவைப் பற்றிப் பேச்செடுத்தாலே மனுஷன் எஸ்கேப்தான்!

=================================================================

ன் அருமைக் கணவர் ஒரு சிக்கனத் திலகம்! ஒருமுறை என் அறையில் டேபிள் ஃபேன் ரிப்பேர் ஆகி, சுவிட்ச் போட்டால் ஓடாமல் கம்மென்று நின்றது. ‘‘என்னங்க.. மெக்கானிக் கிட்ட குடுத்து இதைச் சரி பாத்துட்டு வாங்க...’’ என்றேன்.

‘‘அவன் கைய வெச்சாலே நூத்தம்பது ரூபா கேப்பான். இன்னிக்கு ஞாயித்துக்கிழமை தானே... நானே ரிப்பேர் பண்ணிடுறேன்...’’ என்றார். அதைக் குப்புறப் படுக்கப் போட்டு மண்டையைத் திறந்தார். காயிலை அவர் கழற்றி எடுக்க, ஒன்றிரண்டு ஸ்க்ரூக்களும், ஸ்பிரிங்குகளும் எகிறி விழுந்தன. பொறுமையாக பொறுக்கிக் கொடுத்தேன். ஏதேதோ செய்தபின், மீண்டும் மாட்டினார். ‘‘இப்ப போட்டுப் பாரு... எப்படி ஓடுதுன்னு?’’ என்றார். சுவிட்ச்சைப் போட்டால் ‘ரும்... ரும்...’’ என்று சத்தம் மட்டும்தான் வந்தது. பிளேடு அசையக் காணோம். வேறு வழியின்றி மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்றோம்.

அவன் திறந்து பார்த்துவிட்டு, ‘‘செம வேலை வெக்கும் சார். யாரோ கத்துக்குட்டி மெக்கானிக் கழட்டி நோண்டியிருக்கான். வேலை தெரியாத மூதேவிட்டல்லாம் ஏன் சார் ரிப்பேருக்குக் குடுக்கறீங்க?’’ என்றான். நான் சிரிப்பை அடக்க, தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிரித்து வைத்தால் அதற்கும் வீட்டில் வந்து ருத்ரதாண்டவம் ஆடுவார் இந்த மனுஷன்!

கடைசியில் 150 ரூபாய் செலவில் சரியாகியிருக்க வேண்டிய அந்த டேபிள் ஃபேனுக்கு 250 ரூபாய் (அவர் வார்த்தையில் சொன்னால்...) மூக்கால் அழுதபடி கொடுத்தார்.

=================================================================

நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டதை அவ்வளவு கலாய்த்தாரே... நானாவது ஒரு கற்றுக் குட்டியிடம் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். இவர் டிரைவிங் ஸ்கூல் எல்லாம் போய்ப் படித்துவிட்டு வந்த மனுஷன்! ‌எழும்பூரி்ல் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் நடந்த ரிசப்ஷனுக்கு என்னை பந்தாவாக காரில் கூட்டிப் போனார். ரிசப்ஷன் முடிந்து வரும்போது, பின் வாசல் வழியாக வெளியேறும்படி இருந்தது. ‘‘நான் இறங்கி பின்னால யாரும் வர்றாங்களான்னு பாக்கறேன். ரிவர்ஸ் எடுங்க... ’’ என்றேன்.

‘‘அ‌‌‌தெல்லாம் வேண்டாம். நானே பாத்துக்குவேன்...’’ என்று அவர் ரிவர்ஸ் எடுத்தபோது பின்னால் யாரும் இல்லாதது போல்தான் இருந்தது. காரைத் திருப்பியபோது பார்த்தால், மண்டப வாசலையொட்டி கடை போட்டிருந்த தக்காளி விற்கும் பெண்ணின் கூடையில் கார் இடித்துவிட, தெருவெங்கும் தக்காளி உருண்டோட... தக்காளி, பத்ரகாளியாக மாறி இவரை சென்னைத் தமிழில் அர்ச்சிக்க ஆரம்பித்தாள். நான் வாயைக் கர்ச்சீப்பால் பொத்தியபடி அவர் பார்வையில் படாமல் காரின் இந்தப் பக்கம் வந்துவிட்டேன். பணத்தைக் காட்டி அவள் வாயை அடைப்பதற்குள் இவர் திணறிப் போனார் மனுஷன்!

‘‘அப்புறம் ஒருநாள் இவர் என்ன செய்தார், தெரியுமா...’’

நான்: ‘‘சரி... நீ நான் ஸ்டாப்பாத் திட்டினா நான் கேட்டுட்டிருந்தே யாகணும். இப்படி நான் ஸ்டாப்பா எழுதிட்டிருந்த யின்னா, இவங்க பதிவைக் க்ளோஸ் பண்ணிட்டு வேற பதிவைப் படிக்கப் போயிடு வாங்க. முடிச்சுக்கம்மா...’’

‘‘சரிங்க... இப்பக் கொஞ்ச நாளா பதிவுகள் எழுத ஆரம்பிச்சதும் இவர் ஜம்பம் தாங்க முடியலை. வலையுலகில நிறைய நண்பர்களும், சிஸ்டர்களும் கிடைச்சிருக்கறதா சொல்றாரு. (பெண்கள் பேர்ல எழுதறது நிறையப் பேர் ஆண்கள்தான்ங்கற விஷயம்கூடத் தெரியாத அப்பாவி!) இவர் மனைவியக் கிண்டலடிச்சு பதிவு போட்டது ஆணாதிக்க மனப்பான்மையோட வெளிப்பாடுதானே... நீங்க என்ன நினைக்கறீங்க..? பை...’’

நான்: ‘‘என் இனிய நண்பர்களே... என்னோட ப்ளாக்ல என்னையே மட்டம்தட்டி எழுதறதுக்கு இந்தம்மாவுக்கு இடம் கொடுத்திருக்கேனே. பெண்ணுக்கும் சம உரிமை கொடுக்கற நானா ஆணாதிக்கவாதி? நியாயமாப் பாத்தா நாமதான் ஆணுரிமைக்காகப் போராடணும். நான் சொல்றது சரிதானே நண்பர்களே...’’
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube