Tuesday, January 29, 2013

ச்சும்மா.... கொஞ்சம் ஜாலியா...!

Posted by பால கணேஷ் Tuesday, January 29, 2013
ஹாய்,,, ஹாய்,... ஹாய்.... நான் நல்ல சந்தோஷமான மூட்ல இருக்கேன்றதால... இன்னிக்கு எந்த மேட்டரையும் எழுதி உங்களைத் துன்புறுத்த வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். (காரணம் கடைசியில சொல்லப்படும்.) இங்க நான் தந்திருக்கற புகைப்படங்களைப் பார்த்து மெல்லிய புன்னகை சிந்திட்டுப் போங்க.

டைமே இல்லப்பா... பிஸி(னஸ்)மேன் நான்!

குழந்தை எங்க போயிரப் போவுது? ‘விஸ்வரூபம்’ எப்ப ரீலீஸ்னு மெசேஜ் வந்திருக்கு... பாத்துடறேன் முதல்ல...

என் கிட்டருந்து பந்தை தட்டிப் பறிக்க எந்தக் கொம்பனாலயும் முடியாது...!

இப்படி டெய்லி காசு போட்டு பணம் சேத்தா தான் குட் பாய்!

‘‘இதான் விஸ்வரூபம் ரிலீஸாகாம இருக்கறதுக்கு நிஜக் காரணம். நான் சொன்னேன்னு கமல்கிட்ட சொல்லிடாதீங்க, சரியா...?’’

லண்டன்ல எங்க நல்ல சாப்பாடு கிடைக்கும்னு தெரிஞ்சுக்காம எப்படி அங்க பறக்கறதாம்...?
‘‘உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே கிடையாதாடா...?’’



வலையுலகில் 500 அடிச்சுட்டு அசால்ட்டா பல பேர் அடிச்சு ஆடிட்டிருக்கறப்ப வெறும் 200 அடிச்சுட்டு நான் ‘ஆடக்’கூடாதுதான்! ஆனா சற்று பின்னோக்கி்ப் பார்த்தால் நான்தான் எழுதினேனா என்று எனக்கே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. அப்படி நான் தொடர்ந்து எழுதிட்டு வர்றதுக்கு காரணம் நீங்க... நீங்க... நீங்க மட்டும்தான். அதனால என்னை செயல்பட வைக்கிற உங்களுக்கு மிகமிக மகிழ்வோடயும், மன நெகிழ்வோடயும் என் நன்றி!

Sunday, January 27, 2013

‘காலா’வின் ‘ரணகளம்!’

Posted by பால கணேஷ் Sunday, January 27, 2013

டைரக்டர் காலா சிந்தனையுடன் மோட்டுவளையைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, நடிகர் குஜய் தன் அப்பா பந்திரசேகருடன் உள்ளே நுழைகிறார்.

காலா, ‘‘வாங்க குஜய்! ‘கீனந்த சகடன்’ பத்திரிகைல என் இயக்கத்தில நடிக்க விருப்பம்னு பேட்டி குடுத்திருந்தீங்க. படத்தை எப்ப ஆரம்பிக்கலாம்’’ என்க, ‘‘நான் ரெடி காலா ஸார். ஸ்டோரி ரெடி பண்ணிட்டீங்களா?’’ என்று கேட்கிறார் குஜய். அவரை மேலும் கீழும் அழுத்தமாகப் பார்த்தபடி சொல்கிறார் காலா: ‘‘ஸ்டோரிக்கென்ன.... அது எப்பவோ ரெடி. ‘ரணகளம்’ங்கறது படத்தோட பேரு. ஆனா என் ஹீரோ கேரக்டர்ல நீங்க செட்டாகணும்னா அதுக்கு நீங்க இப்பருந்தே தயாராகணும். அப்பத்தான் ஆறு மாசம் கழிச்சு ஷுட்டிங் போக முடியும்...’’ என்று அவர் சொன்னதும், ‘‘என்ன பண்ணனும் சொல்லுங்க. அசத்திரலாம்’’ என்று குஷியாகிறார் குஜய்.

‘‘முதல்ல இதைப் பிடிங்க...’’ என்று காலா ஒரு டப்பாவை நீட்ட, அதில் மூன்று எலிகள் இருக்கின்றன. குஜய், ‘‘என்னங்ணா இது?’’ என்று குழப்பமாகப் பார்க்க, ‘‘இந்த எலிங்களை .உங்க பெட்ரூம்ல விட்டுட்டு தூங்கணும். பயப்படாதீங்க. நல்லா ட்ரெய்னிங் கொடுத்திருக்கு. நைட் உங்க தலைமுடிய அங்கங்க கடிச்சுக் குதறிடும். மார்னிங் பாத்தா டிஃபரன்ட்டா ஒரு ஹேர்ஸ்டைலோட இருப்பீங்க. அதான் நம்ம ஹீரோ கேரக்டருக்கு தேவை...’’ என்க, இம்சை அரசன் வடிவேலு மாதிரி ‘உவ்’ என்று வாயைப் பொத்திக் கொள்கிறார் குஜய். பந்திரசேகர், ‘‘போலாமா?’’ என்கிறார். சுதாரித்துக கொண்டு ‘‘சரி... டைட்டிலைப் பாத்தா, ஆக்ஷன் சப்ஜெக்ட் மாதிரி இருக்கு. இப்பவே சிக்ஸ் பேக்குக்கு ரெடியாயிடவா?’’ என்கிறார் குஜய்.

‘‘சிக்ஸ் பேககா...? நோ... நோ... என் படத்துக்கு சிங்கிள் பேக் இருந்தாப் போதும்! இன்னும் ஆறு மாசத்துக்கு நீங்க தண்ணி மட்டும்தான் குடிக்கணும். நோஞ்சான் பாடிய உண்டாக்கிக்கணும்...’’ என்கிறார் காலா. குஜய் பரிதாபமாக பந்திரசேகரைப் பர்க்க, ‘‘ஆனா படத்துல ஆக்ஷன் சீன்லாம் உண்டு. க்ளைமாக்ஸ்ல வில்லன் டவர்ஸ்டார் கோனிவாசனோட உக்கிரமா சண்டை போடறீங்க...’’ என்று காலா சொல்ல, அதிர்ச்சியாகிறார் குஜய்.

‘‘என்னது...? டவர்ஸ்டார் கோனிவாசன் வில்லனா? என்னங்ணா இது?’’ என்க, ‘‘அவரும் உங்க மாதிரி என் படத்துல நடிக்க விருப்பம்னாரு. வில்லனாக்கி்ட்டேன். அவர்மேல கரியப் பூசி கருப்பு கலராக்கிட்டு, முகத்துல ரெண்டு பல்லு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா பொருத்தப் போறேன். ஸ்க்ரீ்ன்ல வந்து அவர் சிரிச்சாலே டெரரா இருக்காது...?’’ என்று சிரிக்கிறார் காலா.

‘‘ண்ணா..! அவர் சாதாரணமா வந்து சிரிச்சாலே டெரராத்தாங்ணா இருக்கும்... இதுவேற தேவையாங்ணா?’’ என்று குஜய் பம்ம, ‘‘தியேட்டரை விட்டு ஜனங்க தெறிச்சு ஓடிடும் மை ஸன்’’ என்று மெல்லிய குரலில் சொல்கிறார் பந்திரசேகர்.

‘சரி, விடுங்க... ஹீரோயின் கேரக்டர் பத்திச சொல்லுங்க...’’ என்று குஜய் ஆர்வமாகக் கேட்க, ‘‘கூஜான்ற பொண்ணுதான் ஹீரோயின். எப்பவும் வெத்தலை மென்னு துப்பறதால வாய் மட்டும் செவப்பா இருக்கும் அவளுக்கு. கொஞ்சம் லூசு மாதிரி ஒரு கேரக்டர்...’’ என்று காலா சொல்ல, ‘‘ஏன் சார்... நார்மலா ஒரு கேரக்டர்கூட உங்க படத்துல வெக்க மாட்டீங்களா?’’ என்கிறார் பந்திரசேகர். ‘‘அப்டில்லாம் வெச்சா அது காலா படமே இல்லன்னு சொல்லிடுவாங்க ஸார். ஆனாலும் காமெடியன் பஞ்சா பருப்பு இல்லாட்டி கிருணாஸ கேரக்டரை குஜய்க்கு ஃப்ரெண்டாப் போட்டு அவங்களை நார்மல் கேரக்டரா வெச்சிடுவேன்’’ என்று சிரிக்கிறார் காலா.

‘‘அந்த க்ளைமாக்ஸ் ‌ஃபைட்டைப் பத்திக் கேளுங்க... உக்கிரமான கோபத்தோட நீங்க வந்து டவர்ஸ்டார் மண்டையில உங்க கையால அடிக்கறீங்க. நோஞ்சானோட எலும்புக் கைங்கறதால அவர் மயக்கமாயிடறாரு. நீங்க அவரை மடியில போட்டுக்கிட்டு, நீளமான நகத்தால அவர் வயித்தைக் கிழிச்சு குடலை உருவி கழுத்துல போட்டுக்கறீங்க. ரத்தத்தைக் குடிச்சுட்டு, ஸ்க்ரீனைப் பார்த்து சிங்கம் மாதிரி உறுமறீங்க. உங்க முகத்துல ஃப்ரீஸ் பண்ணி, ‘எ ஃபிலிம் பை காலா’ன்னு டைட்டில் போடறோம். எப்பூடி?’’ என்று பெருமையாய்ப் பார்க்கிறார் காலா. ‘உவ்’ என்று மறுபடி குஜய் வாயைப் பொத்திக் கொள்ள, ‘‘கன்ஃபர்ம்ட்! தியேட்டர்ல இதைப் பாக்க ஒரு பய இருக்க மாட்டான் மை ஸன்’’ என்கிறார் பந்திரசேகர் மெதுவாக.

‘‘படத்தோட ஸ்டோரி லைன் என்னன்னா...’’ என்று காலா ஆரம்பிக்க, குறுக்கிடுகிறார் குஜய். ‘‘ண்ணா...! எனக்கு வயித்தைக் கலக்கிடுச்சு. போய்ட்டு அப்புறம் ஃபோன் பண்ணிட்டு வர்றேங்ணா... அடுத்த டிஸ்கஷன்ல இதைப் பத்தி பேசிக்கலாம்ங்ணா...’’ என்று அவசரமாக எழுந்து பந்திரசேகருடன் வெளியே வருகிறார். அங்கே ஜீன்ஸ், டிஷர்ட்டில் நின்றிருக்கிறார் இயக்குனர் ஊரரசு.

‘‘வாங்க குஜய் ஸார்... இதெல்லாம் ஒர்க்கவுட் ஆகாதுன்னு எனக்குத் தெரியும். என்கிட்ட அதிரிபுதிரியா ஒரு ஆக்ஷன் சப்ஜெக்ட் இருக்கு. நாம பண்ணலாம்... படத்தோட பேரு பட்டிவீரன் பட்டி. நீங்க பட்டி வீரனா நடிக்கறீங்க. நான் பட்டியா நடிக்கிறேன். ஓகேவா?’’ என்கிறார். ‘‘ஏன்யா? டைட்டில் வைக்க ஊர்ப் பேரை விட்டா உனக்கு எதும் தோணாதா?’’ என்று பந்திரசேகர் சிரிக்கிறார்.

‘‘அதாங்க நம்ம அடையாளமே... ஓப்பனிங் ஷாட்ல ஒரு கிராமத்தையே ஒரு ரவுடிக் கூட்டம் வளைச்சு அட்ராசிட்டி பணணிட்டிருக்கு அப்ப காத்துல ஒரு அருவாள் பறந்து வந்து தரையில விழாம அந்தரத்துலயே சுத்திச் சுத்தி வட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. வில்லன்கள் மிரண்டு ‌போய்ப் பார்க்கறாங்க. அப்ப ஆகாயத்துல ஒரு உருவம பறந்து வந்து, அருவாளைக் கேட்ச் பண்ணிட்டு பூமிக்கு லேண்ட் ஆகுது க்ளோஸ் அப் வெச்சா.. அது குஜய் ஸார்... கைல அருவாளோட நம்ம கூப்பர் ஸ்டார் கஜினி மாதிரி ஒரு கையால சல்யூட் அடிக்கிறீங்க... அப்ப நீங்க பஞ்ச் டயலாக் பேசுவீங்கன்னு ஜனங்க நினைப்பாங்க. ஆனா நீங்க பேச மாட்டீங்க. உங்க முதுகுக்குப் பின்னால இருந்து நான் வந்து பன்ச் டயலாக் பேசுவேன்.. அது என்னன்னா....’’ என்று ஊரரசு நான் ஸ்டாப்பாகப் பேச, கையமர்த்துகிறார் பந்திரசேகர்.

‘‘யோவ்... இதுக்கு என் டைரக்ஷன்லயே குஜய் நடிச்சிரலாம்யா. என் ஸ்டோரில ஹீரோ, நடுரோட்ல வெச்சு போலீஸ் கமிஷனரைக் கொல்றான். ஆனா அவனை சட்டத்தால அரெஸ்ட் பண்ண முடியலை அது ஏன்கறதுதான் ட்விஸ்டே’’ என்று அவர் சொல்ல, ‘‘இன்னும் நீங்க சட்டத்தை விடலையா? அதெல்லாம் ஓல்ட் ட்ரெண்ட் ஸார். என் படம் அப்படியில்ல... நீங்க கேளுங்க குஜய் ஸார் அந்த பன்ச் டயலாக்கை...’’ என்று கையை டைரக்டர் டச்சுடன் அசைத்து, ஊரரசு திரும்ப, குஜய் நின்றிருந்த இடம் காலியாக இருக்கிறது. 

‘‘எங்கே போனாரு குஜய்?’’ என்றபடி பந்திரசேகரும், ஊரரசுவும் நிமிர்ந்து பார்க்க... சற்றுத் தொலைவில் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார் குஜய்!

==================================

திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ‘பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்’ (ஸ்டால் : 90)ல் என் ‘சரிதாயணம்’ புத்தகம் கிடைககும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

==================================

Friday, January 25, 2013

‘முகில்’ கிளப்பிய ‘திகில்’!

Posted by பால கணேஷ் Friday, January 25, 2013

ந்த ஒரு புத்தகத்தையும் முழுதாகப் படிக்காமல் அதுகுறித்து அறிமுகம் தருவது எனக்கு வழக்கமில்லை. இந்தமுறை நான் பாதியளவு படித்திருக்கும் இந்த ‘வெளிச்சத்தின் நிறம் கறுப்பு’ புத்தகம் பற்றிச் சொல்கிறேன் என்றால் புத்தகத்தின் சுவாரஸ்யத்தை உங்களால் உணர முடியும். புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இந்த மெகாசைஸ் புத்தகத்தை முதலில் படிக்க ஆரம்பித்ததன் காரணம்...

 1) நூலாசிரியர் ‘முகில்’ நான் கிழக்குப் பதிப்பகத்தில் வேலை செய்தபோது அங்கு உதவியாசிரியராக இருந்தவர். 2) நான் மிக ரசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். 3) அவர் எதுபற்றி எழுதினாலும் அதில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிராது -ஆகியவை தான். நூலாசிரியர் முகில் இப்போது முழுநேர எழுத்தாளர். புத்தகம், சினிமா, தொலைக்காட்சி என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். இவர் எழுதிய சந்திரபாபு பற்றிய நூல், முகலாயர்கள், செங்கிஸ்கான், அகம்புறம் அந்தப்புரம், கிளியோபாட்ரா என்று பல சுவாரஸ்யமான  நூல்களைப் பலர் படித்து அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இப்போது அறிக.

பர்முடா முக்கோணத்தின் மேல் மிதந்த கப்பல்களும், பறந்த விமானங்களும் ஏன் காணாமல் ‌போயின என்பதை ஆராய்ச்சி செய்து பல புத்தகங்கள் வந்துவிட்டாலும் தீராத ஒரு புதிராக நீடிக்கிறது அது. அதைப் போல இந்த பூமிப் பந்தின் மேல் நிகழும் பல விஷயங்களின் பின்னே மறைந்துறையும் மர்மங்கள் விடுவிக்கப்படாதவைகளாகவே இருக்கின்றன. அத்தகைய இருட்டான பல கேஸ்களை தன் சுவாரஸ்யமான எழுத்து நடையில் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் முகில். நான் சொல்லிப் புரிய வைப்பதைவிட, முன்னுரையில் முகில் சொல்லியிருப்பதன் ஒரு பகுதியை இங்கே தருவது ஏற்புடையதாயிருக்கும் :

‘உலகம் மர்மங்களால் ஆனது’ என்று பறைசாற்றும்படியாக, மனித அறிவுக்கும் அறிவியலுக்கும் பிடிபடாத, விடை தெரியாத மர்மங்கள் காலந்தோறும் பெருகிக் கொண்டேதான் செல்கின்றன. இந்தப் புததகம் எதைப் பற்றியெல்லாம் பேசப்போகிறது என்று பட்டியலிடுவது சற்றுக் கடினம். ஆனால் குண்டலினி வித்தையால் பறக்க வைக்கும் சாமியார், சிவலிங்கத்தைக் கக்கும் ஆன்மீகவாதி, கூனர்களையும் குருடர்களையும் குணமாக்கும் மதகுரு போன்ற டுபாக்கூர்களை நாம் சீண்டப் போவதில்லை. ஸ்பைகேமரா வைக்கப்படாத அறையில் அவர்கள் சுபிட்சமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். தவிர ஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம், கண்கட்டு வித்தை என்ற மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நாம் சுற்றிவரப் போவதில்லை.

நமக்கான தளம் மிக மிகப் பெரியது. நாம் ஏற்கப்போகும் பாத்திரங்கள் (தசாவதாரம் கமலைக் காட்டிலும்) ஏராளம். ஓர் அத்தியாயத்தில் நாம் அறிவியல் ஆராய்ச்சியாளராக மாற வேண்டியதிருக்கும். அடுத்ததில் உளவியல் மருத்துவராக, அதற்கடுத்த அத்தியாயங்களில் தொல்லியல் வல்லுநர், வரலாற்று ஆய்வாளர், வானியல் அறிஞர், துப்பறியும் அதிகாரி, விலங்கியல் நிபுணர், இயற்கை ஆர்வலர், அவசியப்பட்டால் பேய் ஓட்டுகிற மநதிரவாதியாகவும் மாற வேண்டியது வரலாம். பகுத்தறிவைப் பக்கத்துத் தெரு சேட்டிடம் அடகுவைத்துவிட்டு இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தேவையில்லை. உலகில் விடைகாண முடியாத மர்மங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்தப் புத்தகம். நம் அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட மர்மங்கள், விநோதங்கள், விசித்திரங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். எனில் அந்தத் தீராத புதிர்களுக்கு இதில் விடை கிடைக்குமா என்றால் என் பதில் - அந்த வெளிச்சத்தின் நிறம் கருப்பு!


என்ன... அப்படியென்ன விடைகாண முடியாத மர்மங்களின் மேல் முகில் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் என்று அறியும் சுவாரஸ்யம் எழுகிறது தானே... நூலின் முடிவில் இதற்கு உதவிய புத்தகங்கள், ஆவணப் படங்கள், இணைய தளங்கள் என்று முகில் தந்திருக்கும் லிஸ்ட் மட்டுமே ஏழு பக்கங்ள் நீள்கிறது. அத்தனை ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பதில் பிரமித்துப் போனேன். நான் ரசித்த ஒரு சுவாரஸ்ய கட்டுரையின் சில பகுதிகள் உங்களின் ஒரு சோறு பதத்திற்காய் இங்கே:

                                              நாய்களின் தற்‌கொலை முனை

தை நீங்கள் படிக்க ஆரம்பித்திருக்கும் நேரத்தில் அங்கே அந்தப் பாலத்தில் ஏதோ ஒரு நாய் தற்கொலை செய்து கொள்ளலாம். அதன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொண்டு தொடருங்கள். ஒரு நாய் எதற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? தேர்வுத் தோல்வி, காதல் தோல்வி, பிஸினஸ் தோல்வி, தேர்தல் தோல்வி உள்ளிட்ட மனிதனுக்கான காரணங்கள் எதுவும் நாய்களுக்கு இருக்கப் போவதில்லை. தனது பாசத்துக்குரிய எஜமானரை இழந்து வாடிய சில நாய்கள், நாள்கணக்கில் எதுவும் உண்ணாமல் செத்தப்போன சம்பவங்கள் உண்டு. ஆனால் தற்கொலை எல்லாம் செய்து கொள்ளாது என்கிறீர்களா... உறுதியாகச் சொல்வதற்குமுன் ஒருமுறை ஸ்காட்லாந்துவரை சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். அதுவும் அங்கேயுள்ள மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்திலுள்ள ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கு- அதிலும் முக்கியமாக எஸ்டேட்டில் அமைந்துள்ள மர்மமான அந்தப் பாலத்துக்கு வாருங்கள்.

-இப்படி நம்மை அழைத்துச் சென்று, தோ்ட்டத்தின் அழகை வர்ணித்தபின்.. கருங்கற்களாலும் கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் அதிக அகலமோ, பெரும் நீளமோ கிடையாது. சுமார் இரண்டடி உயர தடிமனான கைப்பிடிச் சுவர், சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதான அரைவட்ட வளைவுகள். இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். ஒரு நாய் தன் பின்னங்கால்களை தரையில் ஊன்றி, முன்னங்கால்களை சுவர்மேல் வைத்துக் கொண்டு கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கலாம். சுற்றியிருக்கும் இயற்கையில் திளைக்கலாம். அப்படியே பின்னங்கால்களை உந்தித் தாவி, சுமார் 50 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலையும் செய்து கொள்ளலாம். அக்டோபர் 2005ல் அப்படித்தான் குதித்து விட்டது பென்..

என்று மர்மத்தை ஆரம்பித்து, பென்னின் உரிமையாளரிடம் வரும் நண்பர் தன் நாய் அதேபோல் இறந்ததைச் சொல்லும் போது வியப்பை ஏற்படு்ததி, அடுத்தடுத்து தற்செயலாகவும், சோதனைக்காகவும் அங்கு அழைத்துச் செல்லப்பட்ட நாய்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டதை விவரிக்கிறார். அங்கே மட்டும் நாய்கள் எல்லாம் ஏன் குதித்து உயிர் விட வேண்டும் என்று கண்டறிய ஆன்மீகத்தின் வழியிலும், விஞ்ஞான ரீதியாகவும் நடந்த பல ஆராய்ச்சிகளை விரிவாக விவரித்திரு்க்கிறார் முகில். முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார்.

இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய் மர்மம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று ஏதாவது ஒரு நாய் தற்கொலை செய்வதற்கு முன்பாக ‘என் சாவுக்குக் காரணம்....’ என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சாக வேண்டும். அல்லது நாமே நாயாக மாறி, ஓவர்டவுன் பாலத்திற்குச் சென்று....

அலுவலகப் பணி, வெளி வேலைகள் இவற்றுக்கிடையில் கிடைக்கும் சமயங்களையெல்லாம் ‘என்னை உடனே படித்துமுடி’ என்று திருடிக் கொண்டு தொல்லை தந்து கொண்டிருக்கிறது இந்தப் புத்தகம். இத்தனைக்கு மேலும் விரிவாக நான் என்னத்தைச் சொல்ல...? ‘தமிழக அரசியல்’ இதழில் ஏறத்தாழ 35 வாரங்கள் முகில் எழுதிய இந்தத் தொடரை 320 பக்கங்களில், 200 ரூபாய் விலையில், 10/2 (8/2), போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை-17ல் இருக்கும் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். (தொ.பே.2423 2771, 65279654).

=====================================

ன் ‘சரிதாயணம்’ நூலுக்கு இந்தப் பதிவில் அழகான அறிமுகம் தந்த வெங்கட் நாகராஜ், இந்தப் பதிவின் மூலம் அழகான ஒரு திறனாய்வைச் செய்த சீனு, இந்தப் பதிவின் மூலம் மனமகிழும் மதிப்புரை தந்த ஸ்ரவாணி, இந்தப் பதிவின் மூலம் என்னைப் பெருமைப்படுத்திய ‘எங்கள் ப்ளாக்’ மற்றும் இந்தப் பதிவின் மூலம் இனி படிக்கப் போவதாகச் சொன்ன ஹாரி ஆகிய என் நட்புகளுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. இன்னும் இந்தப் புத்தகம் பற்றி எழுதவிருக்கும் உங்களில் பலருக்கும், இவற்றையெல்லாம் படி்த்து எனக்கு தெம்பூட்டும் கருத்தைத் தந்த அனைத்து நல்இதயங்களுக்கும் மனநெகிழ்வுடன் என் நன்றி!

Wednesday, January 23, 2013

மொறு மொறு மிக்ஸர் - 15

Posted by பால கணேஷ் Wednesday, January 23, 2013

மீபத்தில் புத்தகக் கண்காட்சிக்குப் போகும் வழியில் பல இடங்களில் ‘வைரமுத்துவின் 37 புத்தகங்கள்’ என்று போட்டு ஸ்டால் எண்களைத் தெரிவித்த போஸ்டர்கள் கண்ணில் பட்டன. சிந்தனை முகமாய் புத்தகத்தைப் புரட்டியபடி கவிஞர் ‌வைரமுத்துவின் புகைப்படம் அச்சிட்டிருந்த அந்த போஸ்டர்களில் ‘தமிழின் நிகழ்காலம்’ என்று வைரமுத்துவைப் புகழ்ந்திரு்ந்தார்கள். ‘‘அடாடா... வைரமுத்து ஸார் தமிழின் நிகழ்காலம்னா, ‘அவர்’ கடந்த காலம்னு இவங்களே ஒத்துக்கறாங்களா...?’’ என்று கேட்டது மனஸ். ‘‘தெரியலையேப்பா... தெரியலையே...’’ என்று சிவாஜி குரலில் பதிலளித்தேன் நான்.

=======================================

மீபத்தில் ரசித்த சர்தார்ஜி ஜோக்: ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. திடீரென்று எட்டு சர்தார்ஜிகள் ரயில் வரும் சமயம் பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் மீது ரயில் ஏறிவிட்டது. மற்றவர்களை கைது செய்திருக்கிறார்கள். செய்தி சேகரிக்க வந்த பத்திரிகை நிருபர், பிளாட்பாரத்தில் குப்புறப் படுத்திருந்த ஒரு சர்தார்ஜியை எழுப்பிக் கேட்டான். ‘‘அவங்க ஏன் தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க?’’

‘‘தற்கொலையா? அதெல்லாம் ஒண்ணுமில்ல... ரயிலுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்ப, அனவுன்ஸ்மென்ட்ல ‘ரயில் முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும்’னு சொன்னதும், இவங்க பயந்து போய் பி்ளாட்பாரத்துல இருந்தா ரயில் மோதி செத்துருவோமேன்னு தண்டவாளத்துக்கு பாய்‌ஞ்சுட்டாங்க...’’ என்றார்.

நிருபர் வியப்புடன், ‘‘அவங்க எல்லாம் முட்டாள்களா இருந்தாலும் நீங்க ஒருத்தராவது புத்திசாலியா நடந்துக்கிடடீங்களே...’’ என்றார். சர்தார்ஜி சோகமாக, ‘‘நீங்க வேற ஸார்... நான்தான் உண்மையில தற்கொலை பண்ணிக்க வந்தவன். அனவுன்ஸ்மென்டை கேட்டதும் ரயில் என்மேல ஏறட்டும்னு குப்புறப் படுத்துட்டேன். அந்த பாழாப் போன ரயில் அவுங்க சொன்னபடி பிளாட்பாரத்துல வராம, தண்டவாளத்துல வந்து ஏமாத்திடுச்சு...’’

=======================================

மீப்த்தில் டீக்கடையில் கேட்ட உரையாடல்:

‘‘ஹும்! சேவை வரியை ரத்து செய்யணும்னு கோரி சினிமா உலகத்தைச் சேர்ந்தவங்க உண்ணாவிரதம் இருக்காங்களாம். அவங்க ப்ளாக் மணி வெச்சுக்காம இருந்தாலே அரசாங்கத்துக்கு நிறைய வரி கட்டலாமே...’’

‘‘நானும் அந்த நூஸைப் பட்ச்சேம்ப்பா. ஒரு விஸ்யம் புரில எனுக்கு.,.. அதின்னாது அது சேவை வரி?’’

‘‘அது ஒண்ணுமில்ல தம்பி. படம் பாக்கற நாமல்லாம் கேளிக்கைய அனுபவிக்கறோம்கறது்க்காக டிக்கெட்லயே கேளிக்கை வரி செலுத்தறோம்ல. அதுமாதிரி... அவங்க சேவை வரின்னு ஒண்ணு அரசாங்கத்துக்க கட்டணு்ம். அதை விதிக்கக் கூடாதுன்ற கோரிக்கைகாகத்தான் உண்ணாவிரதம்.’’

‘‘நான் ஒண்ணும் கேளிக்கை வரி கட்டறதில்லையேப்பா...’’

‘‘நீ தனியா கட்ட வேணாம். படம் பாக்கற ஒவ்வொருத்தரையும் தேடிப் பிடிச்சு வரி வசூலிக்க முடியாதுன்னுதான் அரசாங்கம் சினிமா டிக்கெட்லயே அதைச் சேர்த்திருக்கு. டிக்கெட் விற்பனைலருந்து தியேட்டர்காரங்க அதைக் கட்டிருவாங்க...’’

‘‘ஓ... அப்படியா விஸ்யம்? ஆனா ஒண்ணு புரியலப்பா... நாம கேளிக்கைய அனுபவிக்கறோம், அதனால கேளிக்கை வரி செலுத்தணும். அதான் ஞாயம். ஆனா இவங்கதான் யாருக்கும் எந்த சேவையும் செய்யலையே... அப்புறம் இன்னாத்துக்கு இவுங்க மேல சேவை வரி? அதான் நீக்கச் சொல்லிப் போராடறாங்க அல்லாரும். ரொம்பக் கரீக்டுப்பா...’’

=======================================

மீபத்தில் படித்ததில் ரசித்தது:

ந்த விமானத்தில் வந்தவர்களனைவரும் வெளியே போய் விட்டார்கள்- ஒரே ஒருவரைத் தவிர. நாலு கெளண்ட்டர் தள்ளி ராஜீவ்காந்தியின் இரு பெரிய பெட்டிகள், கைப்பைகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்த துணிமணிகள், சாமான்களெல்லாம் வெளியே வாரியிறைக்கப்பட்டிருந்தன. அங்கே இருந்த சோதனை அதிகாரி பெட்டியில் இன்னும் ‘எதையோ’ தேடிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேர வதக்கலுக்கப்புறமும் ராஜீவின் முகத்தில் புன்னக‌ை மாறவில்லை. ஆபீஸர் பார்த்த சாமான்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு ராஜீவ் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.

கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை. ‘‘என்னடா இது... இரண்டு மணி நேரமா அவர் பொட்டியில எனு்னடா தேடறீங்க. அவர் யாரு தெரியுமில்ல...? முன்னாள் பிரதமரின் மகன்! அவரென்ன கடத்தல்காரரா? ஏண்டா இப்படிப் படுத்தறீங்க? உண்மையான கடத்தல்காரனைக் கண்டுபிடிக்கறதில்லே...’’ என்று பொரிந்து தள்ளினேன். அதற்கு ரஙகராஜன், ‘‘எங்களுக்கும் டூட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போகணும். ஆனா மேலிடத்திலிருந்து ஆர்டர்- குறைந்தது ரெண்டு மூணு மணி நேரமாவது அவரைத் ‘தாளித்து’ அனுப்ப வேண்டுமென்று நார்த் பிளாக்கிலிருந்து உத்தரவு. எங்களுக்கும் கஷ்டமாத்தான் ஸார் இருக்கு. ஆனா நாளைக்கு போன் வ்ந்தா நாங்க பதில் சொல்லியாகணும்’’.

எனக்கு கோபம் தாளவில்லை. ஆனால் ராஜீவ்காந்தியோ தனக்கு ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அவர் காத்த பொறுமையை என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை. எப்படி அவரால் அந்தச் சமயத்தில் கடுப்பின்றிச் சிரிக்க முடிந்தது? உண்மையிலேயே பெரிய மனிதர். கடைசியில் மூன்று மணி நேர சித்ரவதைக்குப் பிறகு வெளியில் வாரியிறைத்த துணிகளை பெட்டியில் அடைக்க முயன்று, அது முடியாமல் ஒரு பெட்ஷீட்டில் தனி மூட்டையாகக் கட்டி அதை சுமந்து கொண்டு புன்சிரிப்பு மாறாமல் ஏர்போர்ட்டுக்க வெளியே காத்திருந்த காருக்கு நடந்து போனார்- பிற்காலத்தில் பிரதமராகப் போகும் அந்த முன்னாள் பிரதமரின் மகன்.

இந்தச் சம்பவம் சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வாரிசு ஒருவருக்கு நேர்ந்தால் என்னாகும் என்று ஒரே ஒரு கணம் நினைத்தப் பாருங்கள். தன் ஓட்டை மோட்டார் பைக்கல் தப்பாக ஓன்வேயில் ‌போய் போலீஸ்காரரிடம் மாட்டிக் கொண்ட என்னைப் போன்ற பொதுஜனம், ‘‘நான் யாரு தெரியுமில்லே... 17வது வார்டு கெளன்சிலருக்கு ஒண்ணுவிட்ட மாமனோட சித்தப்பா எனக்கு மச்சான் முறை. கமிஷனருக்கு போன் போடுய்யா’’ என்று சொல்கிற இந்தக் காலத்தில் ஒரு வித்தியாசமான உண்மைக் காட்சிக்கு நான் ஒரு சாட்சி.

-‘பல நேரங்ளில் பல மனிதர்கள்’ புத்தகத்திலிருந்து. எழுதியவர்: பாரதி மணி.

=======================================

‘‘சமீபத்துல தொடர்ந்து ஹாலிடேவா வந்துச்சா... ஃபுல்லா வாங்கிவச்சு சரக்கு இன்னும் தீரலப்பா... மப்பும் இன்னும் தெளிய மாட்டங்குதுப்பா...!’’



=======================================

கரு்த்துப் பெட்டிக்கு சமீபத்தில் இருக்கீங்க. புடிச்சிருந்துச்சான்னு சொல்லிட்டுப் போங்க. ஹி... ஹி...

Monday, January 21, 2013

மூ்ன்று சந்தோஷ நிகழ்வுகள்!

Posted by பால கணேஷ் Monday, January 21, 2013

19.01.2013 சனி்க்கிழமை அன்று கவிஞர் சத்ரியன் புத்தகக் கண்காட்சிக்கு வருவதாகச் சொல்லியிருந்ததால் மதியம் 2 மணிக்கு ‌அங்கு சென்றேன்.நான் கிளம்புவதற்கு முன்பே செல்வி சமீரா போன் செய்து தான் பு.க.வில் இருப்பதாகச் சொல்ல, அவரை ‘டிஸ்கவரி’க்கு வரச் சொல்லியிருந்தேன். தம்பி சத்ரியனைச் சந்தித்து பேசி மகிழ்ந்தபோது சமீரா வர, அவரை அறிமுகம் செய்தேன். அப்‌போது ‘தென்றல்’ வீசியது. சசிகலா வந்தாங்க. பேசிக்கிட்டே ஸ்டாலை விட்டு வெளில வந்தா... நம்ம ‘மூவர் குழு’. அதாங்க... மெட்ராஸ்பவன் சிவகுமார், அஞ்சாஸிங்கம் செல்வின், பிலாசபி பிரபாகரன். மூவர் அணியோடவே பு.க.வுல வாஙகின புத்தகங்களோட கனமான பல பைகளைச் சுமந்துக்கிட்டு ‘கனமான’ மனிதர் ஆரூர் மூனா செந்தில்! (பதிவர் திருவிழா சமயத்துல இவரை வெச்சு ஒரு சர்ச்சைக் கிளப்புனவங்க, ஆர்வமா இத்தனை புத்தகங்களைப் வாஙகிப் படித்து ரசிக்கற அவரோட நல்ல பழக்கங்களை பாராட்டி கொஞ்சம் கை குலுக்குங்கப்பா). பட்டிக்காட்டான் ஜெய் வந்திருந்தார்.

இந்த நேரத்துல கேபிள் சங்கர் வந்து சேர ஜமா களை கட்டிருச்சு. அடுத்த நபரா வந்து கை குலுக்கினாரு நம்ம டி.என்.முரளிதரன். எங்க சுவாரஸ்யமான பேச்சு சத்தத்தோட டெஸிபல் கொஞ்சம் கூடினப்ப முதுகி்ல் தட்டியது ஒரு கை. திரும்பினால்... கவியாழி கண்ணதாசனும், புலவர் இராமானுசம் ஐயாவும்! அவங்களைப் பாத்த சந்தோஷத்துல எல்லாரும் பேசிட்டருக்கறப்ப அதகளமா என்ட்ரி குடுத்தாரு கவிஞர் மதுமதி. அப்புறம் தமிழ்ராஜா,. கவிஞர் பத்மஜா, தமிழரசின்னு எல்லாரும் வந்து சேரவும் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கோட வாசல்ல ஏதோ தனி பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணாமலேயே தன்னிச்சையா நடந்துடுச்சுங்க.

 சட்டுன்னு ‘எக்ஸ்பிரஸ்’ ஐடியாவா, தம்பி சத்ரியனோட ‘‌கண்கொத்திப் பறவை’ புத்தகத்தை புலவர் ஐயா வெளியிட, என் ‘சரிதாயணம்’ புத்தகத்தை நண்பர் கேபிள் சங்கர் வெளியிட வெச்சு புகைப்படங்கள் எடுத்து சந்தோஷப்பட்டுக்கிட்டோம். ரெண்டு மூணு பதிவர் சந்திச்சாலே பேச்சும், சிரிப்பும், கேலியும் கிண்டலும் அமர்க்களப்படும். இத்தனை பேர் சந்திச்சா அந்த இடம் எப்படி இருந்திருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிக்குங்க.

மாலை 5.30 மணிக்கு நான் நண்பர்களிடமிருந்து (பிரிய மனமின்றி) வி‌டைபெற்றுக் கிளம்பினேன்- மற்றொரு முக்கிய நிகழ்வுக்குச் செல்ல வேண்டியிருந்ததால். அப்படி‌ என்ன முக்கிய நிகழ்வுன்னு கேக்கறீங்களா? ‘பாட்டி சொன்ன கதை’ ருக்மணி சேஷசாயி அவர்களை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அவங்களோட 75வது பிறந்ததினமான அன்று மா‌லை 5.30க்கு ‘ஒரு ஃபேமிலி கெட்டுகெதர்’ அரேன்ஜ் பண்ணியிருந்தாங்க. அந்த ஃபங்ஷனை அட்டெண்ட் பண்ணத்தான் அவசரமா போக வேண்டியதாயிடுச்சு. அது மற்றோர் ஆனந்த நிகழ்வு. அவங்களோட பல பரிணாமங்களை மேடையில் ஒவ்வொருவரும் அவரைப் பத்திப் பேசறப்ப புரிஞ்சக்கிட்டேன்.

ஏழு சகோதரர்களுக்கிடையில பிறந்த இவங்க, கல்யாணத்துக்கு அப்புறம்தான் தீவிரமா, படிப்பு எழுத்துல ஈடுபட்டிருக்காங்க. இளங்கலை பட்டம், முதுகலைப் பட்டம் பெற்று, ஆசிரியர் பயிற்சியும் முடிச்சு ஆசிரியப் பணி. 27 நூல்கள் இதுவரை எழுதி வெளியிட்டிருக்காங்க. எப்படியும் 50 ஆக அதை உயர்த்திவிட வேண்டும்னு ஒரு லட்சியம் இருக்காம். இப்பவே என் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்மா! ஆன்மீகத்துல தீவிர ஈடுபாடு உள்ளவங்க இவங்க. விழாவை அவரோட சகோதரர் பாண்டுரங்கன் தொகுத்து வழங்க, இடையிடையே நகைச்சுவையா பேசி கலகலப்பூட்டினார் ருக்மணியம்மாவோட மகன் ரங்கநாதன். கலகலப்பான அந்தக் குடும்ப விழாவுல கலந்துக்கிட்டு திரும்பி வருகையில் மனசெல்லாம் மகிழ்ச்சியால நிறைஞ்சிருந்தது. இந்த விழாவை எனக்கு நினைவூட்டி, அவசியம் செல்லும்படி உந்துதல் கொடுத்த ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மனசு நிறைய நன்றி!

20.1.2013 ஞாயிற்றுக்கிழமை- ‘டிஸ்கவரி’ல வெச்சிருந்த ‘சரிதாயணம்’ புத்தகம் விற்றுத் தீர்ந்து விட்டதால் மேலும் பிரதிகளைக் கொண்டு வைப்பதற்காக காலையில் புத்தகக் கண்காட்சிக்கு (மறுபடி) போக வேண்டியிருந்துச்சு. புத்தகங்களைக் ‌கொடுத்துட்டு, ரெண்டாவது ரவுண்ட் பர்ச்சேஸ் பண்ணினப்ப, குடந்தையூரார் ஆர்.வி.சரவணன் வந்தார். அவரோட பேசிக்கிட்டே பர்ச்சேஸிங் முடிச்சுட்டு லன்ச் டயத்துல வீட்டுக்குக் கிளம்பினேன். ஒரு சிறு ஓய்வுக்குப் பின் தயாராகி மாலையில் நண்பர் திரு.பாலஹனுமான் (என்கிற ஸ்ரீனிவாசன்) அவர்களின் மகள் மீராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டேன். துளசி டீச்சரின் ஃபங்ஷன் நடந்த அதே உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல லான்லயே அரேன்ஜ் பண்ணியிருந்தாங்க. நண்பர் மோகன்குமார் ‌நேரே அங்கே வந்துடறதாச் சொல்லியிருந்தார்.

உள்ளே நுழைஞ்சதுமே அருமையான கர்நாடக சங்கீத நிகழ்ச்சி நடந்துக்கிட்டிருந்துச்சு. நண்பர் ஸ்ரீனிவாசன் மகிழ்வாய் கை குலுக்கி வரவேற்றார். நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களான்னு கண்ணால ஸ்கேன் பண்ணிட்டே வந்தா... மு்ன் வரிசையில உக்காந்து சங்கீதத்தை ரசிச்சுக்கிட்டிருந்தாரு ‘பாட்டையா’ பாரதி மணி ஐயா. அவர் பக்கத்துல போய் உக்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தேன். என் முதல் புத்தகத்தை அவரிடம் கொடுத்து ஆசி பெற்றேன். கொஞ்‌ச நேரத்தில் கடுகு ஸாரும், கமலா அம்மாவும் வந்தாங்க. கடுகு ஸார்ட்ட பேசிட்டிருக்கறப்ப, எழுத்தாளர் என்.சொக்கன் தன்னுடன் வந்ததா சொன்னார். அவ்வளவுதான்... சொக்கன் ஸாரை எனக்கு அறிமுகம் பண்ணி வைங்கன்னு அவரைப் போட்டு தொணப்ப ஆரம்பிச்சுட்டேன். கடுகு ஸார் எழுந்து அவரே சொக்கன் ஸாரைத் தேடி அழைத்து வருவதாகச் சொல்லி எனக்காக மண்டபம் பூராவும் நடந்தார். சிறிது நேரத்தில் கண்டேன் என்.சொக்கன் அவர்களை!

சொக்கன் ஸார்கூட இமெயில், ட்விட்டர், பேஸ்புக் மாதிரி விஷயங்கள் மூலமா நல்ல அறிமுகம் உண்டு என்றாலும் நேரில் சந்திக்கற மகிழ்ச்சியே தனிதான் இல்லையா...! நான் ரசித்த அவர் எழுத்துக்களைச் சொல்லி, ‘சரிதாயணம்’ அவரிடம் தந்து (அவரை மட்டும் தப்பிக்க விட்ரலாமா? ஹி... ஹி...) நேரம் போவதே தெரியாமல் உரையாடிக் கொண்டிருந்தோம். பாலஹனுமான் மூலமாக மற்றொரு நல்லறிமுகம் நேற்று கிடைத்தது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தென்றல்‘ இதழின் ஆசிரியர் திரு.அரவிந்த் ஸ்வாமிநாதனை அறிமுகப்படுத்தினார். சமீபத்தில்தான் சில ‘தென்றல்’ இதழ்களைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்ததால் அவற்றைப் பற்றி அவருடன் பேசினேன்.

‘தென்றல்’ இதழை ஆன்லைனிலும் படிக்கலாம் என்று அதற்கான வழி சொல்லித் தந்தார் அரவிந்த். சிறந்த பத்திரிகை ஆசிரியர் மட்டுமின்றி ஆன்மீக ஈடுபாடு கொண்டவர், பல புத்தகங்கள் எழுதியவர் என்பதால் நாங்களனைவரும் சேர்ந்து பேச்சு சுவாரஸ்யமாகவே சென்றது. புகைப்படங்களை என்.சொக்கன் ஸாரின் (நல்ல) மொபைலில் எடுத்துக் கொண்டோம். (அவர் படங்ளை மடலிட்டதும் அவையும் பகிரப்படும்.) சற்று நேரத்தில் நண்பர் மோகன்குமாரும் வந்து சேர்ந்து கொண்டார். மேடையில் சங்கீதக் கச்சேரி முடிந்த பின்னும் இங்கே அரட்டைக் க்ச்சேரி நடந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டு, உணவருந்திவிட்டுக் கிளம்புகையில் வாட்ச்சில் மணி 9.45. ‘வீடு திரும்பல்’ பொருட்டு மோகன்குமாரை தி.நகரில் ட்ராப் செய்து விட்டு வீடு திரும்பினேன்.

-ஆக...கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து மூன்று சந்தோஷ நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில் பூரிக்க வைத்தன. (‘‘ஏற்கனவே எனக்குப் போட்டியா உப்பிட்டு வர்றீங்க. பாத்து... வெடிச்சுடாம...’’  என்று சிரிக்கிறாள் சரிதா. ஹி... ஹி...) உடனே உங்க எல்லார் கிட்டயும் ஷேர் பண்ணிக்கணும்னு ஆசை வந்துச்சு. டைரி எழுதற பழக்கத்தை உண்டாக்கிக்கணும்னும் எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு. ஸோ.... டூ இன் ஒன் பதிவா இந்த என் டைரிக் குறிப்பை உங்களுக்குத் தந்துட்டேன். பொறுமையாப் படிச்ச உங்களுக்கு ஸ்‌பெஷல் தாங்க்ஸ்!

Friday, January 18, 2013

நாடோடி, மன்னனான கதை!

Posted by பால கணேஷ் Friday, January 18, 2013
 
னவரி 17 - மக்கள் திலகத்தின் பிறந்த தினமான நேற்று வெளியிட்டிருக்க வேண்டிய இப்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் எம்.ஜி.ஆர். இந்தப் புத்தகத்தில் நாடோடி மன்னன் படத்தில் திரைக்குப் பின்னும், திரைக்கு முன்னும் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களைப் பற்றியும் படம் உருவானதைப் பற்றியும் அழகாகச் சொல்லியிருக்கிறார். 88 பக்கங்கள் கொண்ட, 50 ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகம் நாதன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு நான் டிஸ்கவரி புக் ஸ்டாலில் (43, 44) வாங்கினேன். ஒரே மூ்ச்சில் படிக்க வைத்த இந்த சுவாரஸ்ய புத்தகத்தில் எனக்குப் பிடி்த்த சந்திரபாபுவைப் பற்றி வாத்யார் சொல்லியிருப்பதில் ஒரு பகுதி இங்கே:

                       சகாயமாக சாதித்த சந்திரபாபு

காயம்! இந்தப் பெயரின் கருத்தே உதவி என்பதுதான். உதவியில் பல வகையுண்டு. ஆனால் இந்தப் பெயரினால் கிடைத்திருக்கும் உதவி சாமான்யமானதல்ல. கதையின் குறிப்பிடத்தக்க பாத்திரமாக இருக்கும் நாடோடிக்கு உதவி செய்வதில் சில நேரங்களில் ஆபத்தையே ஏற்படுத்திக் கொடுப்பவர் சகாயம். ஆனால் அதனால் ஏற்படும் விளைவு நன்மையாகவே இருக்கும். தனது தேவை முதலில், அதே நேரதத்தில் பிறரைக் கண்டு அனுதாபம். எதைக் கண்டாலும் திகைப்பு; ஆனால் எதனைப் பற்றியும் அலட்சியம், எதிலும் பயம்; ஆனால் எதிலும் விருப்பம், காதலும் வேண்டும், அது கஷ்டமின்றியும் கிடைக்க வேண்டும். இப்படி குழப்பமான குணம் படைத்த பாத்திரம்தான் சகாயம். இதை ஏற்று நடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. சந்திரபாபு அவர்களின் திறமைக்கு இதுபோன்ற எந்தப் பாத்திரமும் மிகச் சாதாரணம் என்ற வகையில் நிறைவேற்றியிருக்கிறார்.

நடிகர்கள் பாத்திரத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் செய்கைகளை புதிய விதமாகச் செய்ய வேண்டும், நடிக்க வேண்டும் என்றுதான் டைரக்டரோ, கதையாசிரியரோ விரும்புவார்கள். ஆனால் சந்திரபாபு அவர்கள் நடிக்கும் போது மட்டும் புது மாதிரியாகச் செய்கிறேனென்று சந்திரபாப அவர்கள் சொல்லாமலிருக்க வேண்டும் என்பதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். அவ்வளவு ஆர்வத்தோடு நடிப்பவர் சந்திரபாபு அவர்கள். நடிப்பதில் (எத்தகையதாயிருந்தாலும்) தனக்கெனத் தனிச் சிறப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தயங்காதவர். அதற்காகத் தனக்கு எந்த ஆபத்து வரினும் பொருட்படுத்தாதவர். இதனால்தான் இவரைப் பற்றி நாங்களெல்லோரும் பயந்து கொண்டேயிருப்போம்.

ஆனால் என்னோடு பழகிய வரையில் அவருக்குத்‌ தன் விருப்பத்தைத் தடுப்பது பிரியமில்லாததாயிருப்பினும் மறுத்துக் கூறாமல் நடித்துக் கொடுத்தார் அவர். மேலேயிருந்து குதிப்பேன் என்பார். எனக்கு நன்கு தெரியும்- அவரால் சரிவரக் குதிக்க முடியும் என்று. ஆனால் சிலசமயம் புதுவிதமாக குதிப்பதாகச் சொலலி திடீரென்று ஆபத்து நேரும் விதத்தில் குதித்து விடுவார். மரக்கிளை ஒடிந்து விழும் காட்சியில் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தார். கடைசியில் அந்தக் காட்‌சியே வேண்டாமென்று சொல்லிவிடலாமா என்ற நிலைக்கு வந்த பிறகு மெள்ள விழுவதாக ஒப்புக் கொண்டார். ஆயினும் எனக்குப் பயம்தான்.

இப்படி அவரைப் பொறுத்தவரையில் பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுவாரோ என்ற அச்சத்திற்கு மாறாக, பொறுப்பை நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டுமென்ற கடமை உணர்ச்சியினால் அவருக்கு ஆபதப்து ஏற்பட்டு விடக் கூடாதே என்று கலங்கியபடியே இருக்க வேண்டும்.

ருநாள் வெளிக்காட்சி எடுத்துக் கொண்டிருந்தேன். சந்திரபாபு அவர்களும் நடிக்க வேண்டிய கட்டம். குதிரைகள் போகும் காட்சியைப் படமாக்கும் போது ஒரு குதிரை சொன்னபடி கேட்காமல் தொல்லை கொடுத்தது. சிறிது நேரம் அதை ஓட்டி, ஒழுங்குக்குக் கொண்டு வந்து குறிப்பிட்ட நடிகரிடம் கொடுத்து ஓட்டச் செய்து படப்பிடிப்பை முடித்தேன். அதற்குள் சந்திரபாபு அவர்கள் தயாராகி விட்டதால், அவர் சம்பந்தப்பட்ட ஷாட்டுக்கு ஏற்பாடு‌ செய்து கொண்டிருந்தேன்.  பாபுவும் வந்தார்; ஏற்பாட்டைக் கண்டார். பத்து நிமிடங்களாவது ஆகும் என்றறிந்தார். முரட்டுத்தனம் செய்து அடக்கியிருந்த குதிரையின் மீது ஏறப் போனார். நான் தடுத்தேன்- அந்தக் குதிரை சரியில்ல என்று. ‘சிறிது நேரம் இங்கேயே சுற்றுகிறேன்’ என்றார். நான் குதிரைக்காரனிடம் எச்சரித்து, குதிரையுடனேயே லகானைப் பிடித்தபடி போகச் சொல்லிவிட்டு வந்தேன். ஐந்து நிமிடங்கள்கூட ஆகியிராது. சிலர் ஓடிவந்து சந்திரபாபு அடிபட்டுக் கீழே விழுந்து விட்டார். எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி மயக்கமடைந்து விட்டார் என்றனர். என்னால் எதுவும் கற்பனை செய்யவே முடியவில்லை. எப்படியோ... பழைய சந்திரபாபு அவர்களாகவே இருக்கிறார் நலனோடு.

அவரிடம் ஒருநாள் என் மனம்விட்டுச் சொன்னேன். இந்த வார்த்தை அவருக்கு மட்டுமல்ல, தென்னகக் கலைஞர்களுக்கு, குறிப்பாகத் தமிழகக் கலைஞர்களுக்கு மிகமிகத் தேவையான விளக்கம் என்று கருதுவதால் அதை இங்கே குறிப்பிடுவது சரியென்று கருதுகிறேன்.

‘‘சந்திரபாபுவின் திறமையை மக்கள் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள் என்றால் அந்தச் சந்திரபாபு தன்னிடமிருக்கும் கலைத்திறனை எத்தனை தொல்லைகளுக்கிடையில், எத்தகைய எதிர்பார்ப்புகளுக்கிடையில் தெரிந்து கொண்டிருப்பார். அதற்காகப் பாடுபட்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள் எத்தனை? எத்தனையோ... அவைகளை எல்லாம் ஒரே நாளில் நினைத்ததும் பெறமுடியாத அந்த மகத்தான கலைத் திறமையையெல்லாம் ஒரே வினாடியில் இழந்து விடும் நிலைக்கு மக்களைக் கொண்டு வருவது மக்களுக்குச் செய்யும் மகத்தான துரோகமாகும்’’
என்றேன். மக்களுக்கு மகிழ்ச்சியை மட்டும்தான் கொடுக்கிறோம்; அறிவைக் கூட அல்ல என்று வாதிப்பவர்கள் கூட இந்த இழப்பை விரும்ப மாட்டார்கள்.

‘‘கலைஞர்கள் இல்லையே என்று ஏங்கும் மக்களுக்கு இருக்கும் கலைஞர்களையும் இல்லாமற் செய்வது சரியல்ல’’ என்றேன். இதை அவர் நன்குணர்ந்தார் என்பதற்கு அவர் விட்ட கண்ணீரே சாட்சியாக இருந்தது. ‘‘எனக்கு நீ என்ன உபதேசம் செய்வது?’’ என்று அவரால் கேட்க முடியும். கேட்கக் கூடியவரும் கூட. ஆனால் என்னிடம் கேட்கவில்லை. இதில் மட்டும் என்று எண்ணி விடாதீர்கள்; தொழிலிலும் கூட.

-இதன்பின் வாத்யார் வேண்டாமென வற்புறுத்தியும் கேளாமல் வாயிலிருந்து கோழிக்குஞ்சை வரவழைப்பதபற்காக சந்திரபாபு பட்ட கஷ்டங்களையும் அவரின் தீவிர ஈடுபாடு மிக்க கலைத்திறன் பற்றியும் மக்கள் திலகம் புகழ்‌ந்து எழுதியிருப்பதையும் மற்ற சுவாரஸ்ய விவரங்களையும் விவரித்தால் பதிவு நீண்டுவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

Wednesday, January 16, 2013


ன்னுடைய ‘சரிதாயணம் @ சிரிதாயணம்’ புத்தகததிற்கு நூல் வெளியீட்டு விழா நடத்த இயலாமல் போய் விட்டதே என்று ஒரு ஏக்கம் மனதுக்குள் இருக்கத்தான் செய்தது. அந்தக் குறையை நிவர்த்தி செய்து மகிழ்ச்சியைத் தந்தார் ‘சிரிப்பானந்தா’ என்ற பெயரில் அறியப்படும் திரு.சம்பத்குமார். நான் அவரிடம் ‘சரிதாயணம்’ புத்தகத்தை அளித்து, படித்துக் கருத்துக் கூறும்படி கேட்டிருந்தேன். ‘‘ஜோக்ன்ற வார்த்தைய ‌சொன்னாலே சிரிக்கற ஆசாமி நான். நகைச்சுவை கதைகள்னு வேற சொல்றீங்க. அவசியம் படிக்கறேன்’’ என்று சொல்லிச் சென்ற அவர், கதைகளை படித்து ரசித்து, என்னைத் தொடர்பு கொண்டு புத்தகக் கண்காட்சியின் மூன்றாவது தினமான ஞாயிறன்று (போகியன்று) அம்பத்தூரில் மாலையில் நடைபெறவிருந்த சிரிப்பரங்கத்தின் மாதாந்தரக் கூட்டத்திற்கு என்னை அழைத்தார். அங்கே அவரது சிரிப்பரங்க உறுப்பினர்களுக்கு என் புத்தகம் பற்றிப் பேசி அறிமுகம் செய்யவிருப்பதாகச் சொன்னார்.

காலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். கோவையிலிருந்து தங்கள் புத்தகங்களுடன் வந்திருந்த நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு மதியம் 2.45க்கு அங்கிருந்து கிளம்பினேன்- நண்பர்கள் சீனுவையும், அரசனையும் உடனழைத்துக் கொண்டு. என் பதி்ப்பாளர் பிரகாஷ், வடபழனியிலிருந்து நேராக அம்பத்தூர் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார். நாங்கள் பேருந்தில் ஏறிச் சென்று கொண்டிருந்தபோது, தொலைபேசியில் அழைததார் ஸ்ரீராம். தான் புத்தகக் கண்காட்சியில் இருப்பதாக அவர் கூற, நாங்கள் விழாவுக்குச் சென்று கொண்டிருப்பதை அவரிடம் ‌சொன்னேன். நேரில் சந்தித்து அளவளாவி மகிழும் வாய்ப்பு போய்விட்டதே என்று ரொம்பவே வருத்தமாக இருந்தது.

ஏற்கனவே சிரிப்பரங்கத்தி்ன் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனுபவசாலியான சீனு, எங்களை சரியாக வழிநடத்திச் சென்றார். சிரிப்பரங்கம் துவங்குவதற்கு முன்பு, தலைமை ஏற்பவரை மேடைக்கு அழைத்த சிரிப்பானந்தா, அடுத்து, ‘‘எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களையும், பதிப்பாளர் பிரகாஷ் அவர்களையும் சிறப்பு விருந்தினராக மேடைக்கு அழைக்கிறேன்’’ என்றார். ஆனந்த அதிர்ச்சியாகிப் போனது எனக்கு. ‘‘என்னை நல்லவேன்னு சொல்லிட்டாங்கம்மா...’’ என்று வடிவேலு புலம்புகிற தினுசில், ‘‘என்னை எழுத்தாளர்ன்னு சொல்லிட்டாங்கய்யா...’’ என்று மனஸ் உள்ளே குதியாட்டம் போட்டது. பாவம்...! ஆட்டுக்கு எப்பவுமே முதலில் அலங்காரம் பண்ணி மாலை போடுவார்கள் என்பது அதற்குத் தெரிந்தால் தானே...

சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த ஜோக்குகளை சொல்லி சபையைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பது வழக்கமான ஒன்றாம். உறுப்பினர்கள் ‌அழைக்கப்பட்ட வரிசையில் வந்து சொல்லத் தொடங்கினர். சில ஜோக்குகள் பழையவையாக இருந்தன. சில புதிதாகச் சொல்லப்பட்டவையாக இருந்தன. இருந்தாலும் அனைவரும் எல்லா ஜோக்குகளுக்கும் சிரித்து உற்சாகப்படுத்தினார்கள். (ஒருவேளை சிரிக்காவிட்டால் சிரிக்கும்வரை இவர் ஜோக் சொல்லிக் கொண்டே இருப்பாரோ என்பதாலும் இருக்குமோ? ஹி... ஹி....)

மேடையில் அமர்ந்து கொண்டு ஜாலியாக ஜோக்குகள் கேட்டு சிரித்துக கொண்டிருந்த எனக்கு பாக்ஸிங் புலி முகம்மது அலி போல ஒரு ‘பன்ச்’ கொடுத்தார் சிரிப்பானந்தா.  நான்கைந்து உறுப்பினர்கள் ‌பேசியதும், ‘‘இப்போது ‘சரிதாயணம்’ங்கற புத்தகத்தைப் பத்தி சொல்லப் போறேன். அது முடிந்ததும் தலைவர் உரையாற்றுவார். பின் சிறப்பு விருந்தினர்கள் உரை நிகழத்துவார்கள். பின் மற்ற உறுப்பினர்களின் சிரிப்பைத் தொடரலாம்’’ என்றதும் நான் ‘ழே’ என்று விழிக்க ஆரம்பித்தேன். ‘‘ம்மே... ம்மே...’’ என்று மிரண்டு போய் அலறியது மனஸ்!

ஸ்கூல்ல படிக்கறப்பவே பேச்சுப் போட்டிக்கு பேர் கொடுத்துட்டு, ஸ்டேஜுக்குப் ‌போனதும் மைக்கையும், எதிர்லருக்கற மக்களையும் பார்த்து கை, கால் உதறி, பேச்சே வராம ‘திருதிரு’ன்னு முழிச்சுட்டு பேசாமலேயே எஸ்கேப்பான மாவீரன்(!) நான். என்னைப் போய் சிறப்பு உரை ஆத்துவாருன்னு சொல்லிட்டாரே... என்னத்தை ஆத்தறது?ன்னு புரியலையே... என்று எண்ணியபடி பதிபபாளர் பிரகாஷைப் பார்த்தேன். அவர் வாழ்க்கையைப் படித்தவர், மனிதர்களைப் படித்தவர், ஆனால் பள்ளிக்குச் சென்று அதிகம் படிக்காதவர் என்பதால் அவர் என்னைவிட மோசமாக விழித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அங்கே சிரிப்பானந்தா புத்தகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். என் கதைகளைப் புகழ்ந்து தள்ளினார். கதையில் வரும் பல (எனக்கே தெரியாத) நல்ல அம்சங்களை ரசித்து,  நுணுக்கமாக அவர் விவரித்தபோது, சற்றே கூச்சத்தால் நெளிய வேண்டியிருந்தது. அவர் பேசினதும் வந்திருந்த உறுப்பினர்களில் பெரும்பாலானவங்க புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கிக்கிட்டாங்க. சிரிப்பரங்க உறுப்பினர்கள் எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லவங்க. ஹி... ஹி.... அதன்பின் தலைமையுரை நடக்க ஆரம்பித்தது.

என் மனசுக்குள் நாம என்ன பேசி ஒப்பேத்தப் போறோம் என்கிற சிந்தனை ஓடிட்டிருந்தது. தலைமையுரைக்குப் பின் பதிப்பாளர் பிரகாஷைப் பேசச் சொல்ல, ‘‘நான் ரொம்ப வருஷமா நிறைய புத்தகங்கள் போட்டுக்கிட்டிருக்கேன். ஒரு நகைச்சுவைப் புத்தகம் வெளியிடணும்னு ரொம்ப நாள் எண்ணம். பாலகணேஷ் எனக்கு நீண்டகால நண்பர். இவர் நகைச்சுவைச் சிறுகதைகள்னதும் உடனே வெளியிட்டுட்டேன். உங்க எல்லாருக்கும் நன்றி’’ அப்படின்னு நம்ம பிலாசபி பிரபாகரன் பேசற மாதிரி நாலே வார்த்தை பேசிட்டு ‘எஸ்’ஸாயிட்டாரு.

இவங்க பேசற நேரத்துக்குள்ள யோசிச்சு ஒரு மாதிரியா தயாராயிருந்தேன். நான் முன்ன எழுதின ‘இரட்டைப் புலவர்கள்’ மேட்டர்லருந்து ஒண்ணையும், ‘சிலேடைச் சிதறல்கள்’லருந்து ஒண்ணையும், ரெண்டு நாள் முன்னாடி படிச்ச முனைவர் கு.ஞானசம்பந்தன் புத்தகத்திலிருந்த மூணு ஜோக்குகளையும் எடுத்து, அந்த உதிரி ஜோக்குகளை வார்த்தைப் பூக்களால இணைச்சு ஒரு மாலையா மனசுக்குள்ள தயாரிச்சு வெச்சிருந்தேன். அதை கடகடன்னு மைக் முன்னாடி ஒப்பிச்சேன். குரல்ல கொஞசம் தடுமாற்றம் வேற.

நான் பேசி முடிச்சு மேடைய விட்டு இறங்கினதும், சற்றே பருமனான ஒரு பெண்மணி என்னை‌ நோக்கி அடிக்க வருபவர் போல வேகமாக வந்தார். முன்பே மேடைக்கு வந்து, பிஸ்கட், காபி எல்லாம் கொடுத்து ‘கவனித்தது’ அவர்தான் -இப்போது வரும் வேகத்தைப் பார்த்தால் நம் பேச்சுக்காக ‘கவனித்து’ விடுவாரோ என்று உதறல் எனக்கு. அருகில் வந்தவர், ‘‘மேடையில பேசினதே இல்லை, முதல் அனுபவம்னு சொல்லிட்டு அருமையாப் பேசி அசத்திட்டீங்க. சூப்பர்’’ என்று கை கொடுத்தாரே பார்க்கலாம்! ஹப்பாடா...! ‘‘அட... நமக்கும் ஒரு ரசிகையா... அவ்வ்வ்வ!’’ என்று மனஸ் குட்டிக்கரணமடிக்க, சந்தோஷமாகக் நன்றி சொன்னேன்.

விழாவுக்குக் கிளம்புகையில், பு.கண்காட்சியில் அன்று கூடியிருந்த நண்பர்கள் படையுடன் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், திரும்புகையில் பல பிரதிகள் புத்தகம் விற்று பலரைச் சென்றடைந்து விட்ட சந்தோஷமும், ‌ஜோக்குகள் கேட்டு மகிழ்ந்த அனுபவமும் சேர்ந்து கொள்ள, திரும்புகையில் மனஸ் மகிழ்ச்சியில் நிரம்பியிருந்தது. இந்த மகிழ்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணமான சிரிப்பானநதா அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. (நிச்சயம் இந்த வார்த்தை என் உணர்வுகளை வெளிக்காட்டுவதாகாது. அதற்கும் மேல் மனஸ் தளும்பிக் கொண்டிருக்கிறது).

சிரிப்பரங்கத்துக்கு எனக்கு வழிகாட்டியா செயல்பட்டதோட இல்லாம, விழாவு்க்கு அழைச்சுட்டுப் போய் அங்கருந்து நான் புறப்படற வரைக்கும் என்கூடவே இருந்து உதவின, திடங்கொண்டு போராடும் ‘சீனு’, பொங்கலுக்கு ஊருக்குப் புறப்படற அவசரத்தில புத்தகக் கண்காட்சில சுற்றுவதைப் புறக்கணித்து எனக்காக என்னுடன் வந்து விழா முழுவதும் உடனிருந்த ‘கரைசேரா அலை’ அரசன் இருவருக்கும் என் மனம் நிறைய நன்றி!

Saturday, January 12, 2013

அலிபாபாவும் 40 திருடர்களும்!

Posted by பால கணேஷ் Saturday, January 12, 2013
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.

டத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)

அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார். 

அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் ‌சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).

உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)

அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க.  பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.

அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு ‌ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு  வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட,  பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.

சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.

திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.

அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்‌சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின ‌பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)

பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்‌சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.


படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு. 

படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?

‘‘த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை’’ என்றேன் நான். ‘‘அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது’’ என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!

====================================================
அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
====================================================

Friday, January 11, 2013

அப்பாவிப் பதிவர் வாங்கிய பல்புகள்!

Posted by பால கணேஷ் Friday, January 11, 2013

ந்தப் பதிவரை எனக்கு நீஈஈஈண்ட காலமாகப் பழக்கம். அவர் பதிவுலகிற்கு வந்தபின் ரொம்பவே விவரமானவராயிட்டார். பதிவுகள் எழுத ஆரம்பிக்கறதுக்கு முன்னால அவர் வாங்கின ரெண்டு பல்புகளை இப்ப உங்களுக்குச் சொல்லப் போறேன்.

சம்பவம் : 1

து 2000ம் ஆண்டு. அவர் அப்ப திருநெல்வேலியில வேலை பாத்துட்டிருந்தார். அவருக்கு மிக நெருங்கிய நண்பன் போன் பண்ணி (இருவரும் ஒரே அலுவலகம்தான்- நண்பனுக்கு வெளியில் சுற்றும் உத்தியோகம்) ‘‘லேய், தினேஷ் நெல்லைக்கு வந்திருக்காம்லே. பேசியே நாளாச்சுன்னு சொன்னியே... உடனே போன் பண்ணிப் பேசிட்டுப் போய்ப் பாருலே. இன்னிக்கு ராத்திரி ஊருக்குப் போறானாம்...’’ என்றான். ‘‘நம்பர் சொல்றா, குறிச்சுக்கறேன்’’ என்று இவர் பேப்பருடன் தயாராக, நண்பன் சொன்னான்: ‘‘மூணு ரெண்டு நாலு ஜீரோ மூணு ரெண்டு’’ என்று. நம்ம அ.ப. பேப்பர்ல இப்படி எழுதிக்கிட்டாரு: 324032.

அலுவலகத்திலிருந்து வெளியே வந்து பப்ளிக் டெலிபோன் பூத்தில பல தடவை அந்த நம்பரை ட்ரை பண்ணினாரு. அவருக்குக் கிடைச்ச பதில்: "This number does not exist."ங்கறதுதான். ‌கடைசில வெறுத்துப் போய் டயல் பண்றதை விட்டுட்டாரு. மாலையில டூர்லருந்து அந்த நண்பன் வந்ததும், ‘‘என்னலே, பேசினியா?’’ என்று கேட்க, இவர், ‘‘பல தடவை ட்ரை பண்ணேன்டா. நம்பர் டஸ்நாட் எக்ஸிஸ்ட்ன்னே வருது’’ என்றிருக்கிறார். அவன் உடனே இவரை பூத்துக்கு அழைத்துப் போய் நம்பரை டயல் பண்ண, இவர் டிஸ்ப்ளேயில் பார்த்திருக்கிறார்- 32000032 என்பது சரியான நம்பர்.

தினேஷிடம் பேசிமுடித்து வெளியே வந்ததும், நண்பர் மீது பாய்ந்தார் இவர். ‘‘ஏலே மூதி! நம்பரை ஒழுங்காச் சொல்ல மாட்டியாலே... மூணு ரெண்டு டபுள் ஜீரோ டபுள் ஜீரோ மூணு ரெண்டுன்னு நீ சொல்லியிருந்தா அப்பவே பேசியிருபேன்ல..’’ என்று சொல்லி தான் எழுதி வைத்திருந்த நம்பரைக் காட்ட, அவன் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறான். ‘‘எலே, கோட்டிக்காரப் பயலே! எங்கயாச்சும் ஆறு டிஜிட்ல டெலிபோன் நம்பர் வருமாலே...? அப்பவே நீ சுதாரிச்சிருக்க வேணாமா? நீ தப்புப் பண்ணிட்டு என்னைக் கேக்க?’’ என்று அவன் விடாமல் சிரிக்க, இவர் ‌‘ழ‌‌ே’ என்று விழித்திருக்கிறார்.

சம்பவம் : 2

ம்ம அ.ப.வை ஒரு அவசர வேலையா பெங்களூர்ல இருக்கற அவர் நண்பன் உடனே வரச் சொல்லி, டிக்கெட்டும் அனுப்பினதால புறப்பட்டுப் போனார். அவர் முன்னப்பின்ன பெங்களூரு போனதில்ல. கண்டோன்மென்ட் ஸ்டேஷன் நெருங்கறப்ப நண்பனுக்கு போன் பண்றார். அவன், ‘‘நான் ஒன்வேல சுத்திட்டு வர்றதுக்கு லேட்டாயிடும். ஸ்டேஷன் பக்கத்துல ரெண்டு நிமிஷ நடை தூரத்துல காரோட வெயிட் பண்ணிட்டிருக்கேன். ஸ்டேஷனை விட்டு வெளிய வந்ததும் கூப்பிடு’’ என்றிருக்கிறான் நண்பன். இவர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், அவனைக் கூப்பிட்டு, ‘‘நான் ஸ்டேஷனுக்கு வெளில நிக்கறேன்’’ என்க, அவன், ‘‘எதிர்ல ஒரு யானை தெரியுதா?’’ என்று கேட்டிருக்கிறான். இவர் பார்‌க்க, எதிரில் ஒரு யானை நடந்து சென்று கொண்டிருந்தது. ‘‘ஆமா, தெரியுது’’ என்று இவர் பதிலளித்ததும், ‘‘அந்த யானை திசையிலயே வந்தா ஒரு சர்க்கிள் வரும். அதுல இடது பக்கம் திரும்பினா, காரோட நான் நிக்கறது தெரியும்’’ என்றிருக்கிறான்.

இவரும் யானை சென்ற  திசையிலேயே அதைப் பின்தொடர்ந்து நடந்திருக்கிறார். சிறிது தொலைவு சென்றதும், பாதை இரண்டாகப் பிரிய, யானை இடதுபுறப் பாதையில் சென்று விட்டது. சர்க்கிள் எதையும் காணோமே என்று இவர் ‘ழே’ என்று விழித்து, மீண்டும் நண்பனுக்கு டயல் செய்து, ‘‘டேய், நீ சொன்னபடி யானை வழியா வந்ததுல ரோடுதான் ரெண்டாப் பிரியுது. சர்க்கிள் எதையும் காணமேடா’’ என்று கேட்க, ‘‘நீ இடது பக்கம் போயிட்ட போலருக்கு. அப்படியே திரும்பி ஸ்டேஷனுக்கு வந்து வலதுபுறமா வா’’ என்று நண்பன் பதிலுரைக்க, விதியே என்று இவர் மீண்டும் ஸ்டேஷனை நோக்கி நடந்து, அதைத் தாண்டி கொஞ்சம் தூரம் நடந்தார்.

அங்கே சற்று தூரம் சென்றதும் ஒரு யானை சிலை இருக்க, அதைச் சுற்றி ஒரு சர்க்கிள் இருந்தது. அதில் இடதுபுறம் செல்லும் பாதையில் பார்க்க, காரின் வெளியி்ல் நின்றிருந்த நண்பன் கையாட்டி அழைத்திருக்கிறான். நண்பனின் அருகில் சென்றதும், ‘‘ஏன் இத்தனை லேட்?’’ என்று அவன் கேட்க, ‘‘நீ யானை தெரியுதான்னு கேட்டப்ப, என் எதிர்ல ஒரு யானை நடந்துட்டிருந்தது. நீ எங்கருந்தோ என்னைப் பாத்துட்டுதான் பேசறேன்னு நான் நினைச்சு, யானை திசையில நீ போகச் சொன்னதால அது பின்னால போய்ட்டேன். இப்பத்தான் புரியுது நீ யானை சிலையச் சொல்லியிருக்கேன்னு. ஏண்டா பாவி... யானை சிலைன்னு தெளிவாச் சொல்லித் தொலையக் கூடாதா?’’ என்று இவர் வருத்தம் பாதி, கோபம் பாதியாகக் கேட்க, நெல்லை நண்பனைப் போலவே இந்த பெங்களூர் நண்பனும் ரசித்து வாய்விட்டுச் சிரித்திருக்கிறான். ‘‘ஏண்டா நான் பேசற நேரம் நிஜ யானை நேர்ல போகும்னு கனாவா கண்டேன்?’’ என்று அவன் சிரிக்க, இவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

இப்படி இரண்டு பல்புகள் வாங்கிய அந்த அ.ப. யாருன்னு கேக்கறீங்களா? ஜன்னல் வரிகள் ஜாலடணேஷ் தவிர வேற யாரு அவ்வளவு புத்திசாலி(?)யா இருக்க முடியும்? ஹி... ஹி...

======================================

ப்ப புத்தகக் கண்காட்சி அப்டேட்ஸ்: என்னுடைய ‘சரிதாயணம்’ புத்தகம் டிஸ்கவரி புக் பேலஸ் -- ஸ்டால்: 43,44 தவிர, மயிலவன் பதிப்பகம் ---ஸ்டால் 295, 296 ஸ்டாலிலும் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நம் பதிவர் புத்தகங்களுள் எனக்குத் தெரிந்த மேலும் இரண்டு.

அகிலா - ரசனை மிகுந்த கவிதைகளையும், அழகான எழுத்து நடையில் கட்டுரைகளையும் படைக்கும் இவரது படைப்புகள் இப்போது ‘சின்னச் சின்னச் சிதறல்கள்’ (இவர் எழுதும் தளத்தின் பெயரும் அதுவே) நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

ஜீவா என்று விரிவாக நண்பர்களால் அழைக்கப்படும் இவரின் சுருக்கப் பெயர் ஜீவானந்தம். ‘கோவை நேரம்’ என்ற தன் தளத்தி்ல பல அரிய ஆலயங்களைப் பற்றியும், நல்ல உணவகங்களைப் பற்றியும், இவர் சென்று சுற்றுலா தலங்களைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி வருகிறார். அவை இப்பொழுது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன- ‘கோவை நேரம்’ என்ற பெயரிலேயே.

இவை தவிர கடுகு (அகஸ்தியன்) அவர்கள் எழுதிய ‘கமலாவும் நானும்’ என்ற நகைச்சுவைக் கதைகளும், அனுபவக் கட்டுரைகளும் அடங்கிய பொக்கிஷப் புத்தகமும் இம்முறை பு.க.வில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.

இந்த மூன்று புத்தகங்களும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலிலேயே கிடைக்கும் என்று பட்சி சொல்கிறது. (பஜ்ஜி இல்லீங்க, பட்சி!) உங்கள் புத்தகக் கண்காட்சி விசிட்டில் தவறாமல் டிஸ்கவரிக்கு ஒரு விசிட் அடித்து நம் பதிவர்களின் புத்தகங்களை வாங்கிப் படித்து மகிழ்வீர்கள்.. சரிதானே...!

Wednesday, January 9, 2013

சரித்திரக் கதை எழுதுவது எப்படி?

Posted by பால கணேஷ் Wednesday, January 09, 2013

ரித்திரக் கதையில ரெண்டு டைப் இருக்குங்க. ஒண்ணு கல்கி, சாண்டில்யன், விக்ரமன் மாதிரி எழுத்தாளர்கள் எழுதிய அக்கால பாணிக் கதைகள். இன்னொண்ணு சுஜாதா, சுபா மாதிரி எழுத்தாளர்கள் எழுதின நவீனபாணி சரித்திரக் கதைகள். ரெண்டையும் பார்க்கலாம் இப்ப. முதல்ல பழைய பாணி...

முதல்ல கதாபாத்திரங்களை உருவாக்கிக்குங்க. சரித்திரக் கதைகள்ல நிறையக் கற்பனையக் கலந்து சரடு விடலாம் நீங்க. ஆனா, அதுல வர்ற மன்னர்கள் பேரு மட்டும் சரியானதா இருக்கணும். அதுக்கு பழைய சரித்திர புத்தகங்கள் ஏதாவது படிச்சு ரெஃபரன்ஸ் எடுத்துக்கணும். எடுத்தாச்சா... ரைட்டு, இப்ப ஹீரோ கேரக்டர். ஹீரோங்கறதால அவன் பெரிய வீரனாகவும் புத்திசாலியாகவும் இருத்தல் அவசியம். மன்னனோட படைத் தளபதியாவோ, இல்ல மன்னர் மரபில வந்து இப்ப செல்லாக்காசா இருக்கறவனாவோ உருவாக்கிக்கங்க. அடுத்தது கதாநாயகி. கதாநாயகிங்கறதால அவ ஒரு இளவரசியாகவும், அதியற்புத அழகியாகவும் இருக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

அப்புறம்... சரித்திரக் கதைகள்ல ஒரு துறவி கேரக்டர் இருக்க வேண்டியது அவசியம். அவர் துறவிக்குரிய பணியைத் தவிர மத்த எல்லா அரசியல் பணியையும் செய்யறவரா அமைச்சுக்கறது மிக முக்கியமான விஷயமுங்க. இன்னொண்ணு... அந்தக் காலத்து மன்னர்கள் மாறு வேஷத்துல நகர் வலம் வர்றதும், மக்களை சந்திக்கறதும் வழக்கம்கறதால ஒரு மர்ம கதாபாத்திரத்தை அமைச்சுக்கணும். கடைசி சீன்லதான் அது மன்னர்தான்கற சஸ்பென்ஸை உடைக்கணும். -அது சஸ்பென்ஸா இல்லாம பாதியிலயே வாசகர்களுக்குத் தெரிஞ்சிட்டாலும் கூட. இவங்களுக்குத் துணையா இன்னும் எத்தனை கேரக்டர்களை வேணுமுன்னாலும் நீங்க சேத்துக்கலாம்.

ரைட். இப்ப இந்த எல்லா கதாபாத்திரங்களையும் உங்க மனக்குடுவைல போட்டு, அதை நல்லாக் குலுக்குங்க. -ரெண்டு மூணு குட்டிக்கரணம் அடிச்சாலு்ம் சரிதான்... ஆச்சா? சம்பவங்கள்ங்கற கோந்தை வெச்சு இவங்களை ஒட்டினீங்கன்னா, சரித்திரக் கதை தயார். என்னது...? எப்படி ஒட்டறதுன்னா கேக்கறீங்க? அதையும் சொல்றேன். ஓப்பனிங் ஹீரோ இன்ட்ரடக்ஷன். குதிரைல ஹீரோ இயற்கைய ரசிச்சுட்டு வர்றப்ப, அவனை சில பெண்கள் ரசிக்கறாங்கன்னு சொல்லிட்டு, அவன் வீரம் வெளிப்படற மாதிரி ஒரு சண்டை சம்பவத்தை அமைச்சுக்கணும். அடுத்து அவன் கதாநாயகியைப் பார்த்து காதல் வசப்படணும். மன்னரோட எதிரி போருக்கு வர்ற மாதிரியோ, இல்ல மன்னர் ஏதோ ஒரு போர்ல தோத்துட்டு நாட்டை மீட்கப் போராடற மாதிரியே வெச்சுக்கிட்டு, ஹீரோ போய் அவருக்கு ஐடியாஸ் தர்ற மாதிரி வெச்சுக்கணும்.

அதுக்காக எதிரி நாட்டுக்கு துப்பறியப் போறான். அங்க இன்னொரு பொண்ணை காதலிக்கறான். - சரித்திரக் கதைன்னா எத்தனை பொண்ணுங்களை வேணும்னாலும் காதலிக்கலாம். நமக்கு வேண்டியது காதலை வெச்சு ரெண்டு சாப்டர் தள்ளணும்கறதுதான். -  அங்க அவனுக்கு ஒரு துறவி உதவறார். சில பல சாகசங்களுக்குப் பின் வெற்றிகரமா தன் நாட்டுக்கு வர்றான். இப்படி்ல்லாம் சம்பவ கோந்துகளை உங்க கற்பனைக் குதிரையக் கண்டபடி தறிகெட்டு ஓடவிட்டு உருவாக்கி ஒட்டிக்கணும். கடைசியா க்ளைமாக்ஸ்னு வர்றப்ப ஒரு போர்க்களம் நிச்சயம் இருந்தாகணும். அந்தப் பெரும் போர்ல நம்ம ஹீரோவோட ஐடியாக்களாலயும், வீரத்தாலயும் மன்னர் ஜெயிக்கறதா காட்டிரணும். அவர் அரசவைக்கு வந்ததும் அவர்தான் துறவியா வந்து ஹீரோவுக்கு உதவி செஞ்சார்ங்கற மஹா சஸ்பென்ஸை உடைச்சு, ஹீரோவுக்கு பரிசுகள் தரணும். அவன் தன் காதலிகளோட கொஞ்சறதோட கதைய முடிச்சிரணும். - இல்லன்னா, கல்லெறிஞ்சு முடிக்க வெச்சிருவாங்க. ஹி... ஹி...!

இதையெல்லாம் எழுதும் போது இலக்கிய நயமா இல்லாட்டியும் கூட ஒரளவுக்காவது பழங்கால தூய தமிழ்ல சொற்களை அமைச்சுக்க வேண்டியது அவசியம். அது தெரிஞ்சாதான் சரித்திரக் கதைகள்னு எழுதி ஜல்லியடிக்கலாம். இல்லாட்டி ரசிக்க மாட்டாங்க யாரும். இத்தனை விஷயங்களை வெச்சு சீரியஸ் டைப் சரித்திரக் கதைகளை ஈஸியா எழுதி அசத்திடுவீங்கதானே... என்னது... அந்த இன்னொரு நவீன பாணி சரித்திரக் கதைன்னா என்னன்னு கேக்கறீங்களா... சொல்றேன்.

நவீன பாணி சரித்திரக் கதைகள் எழுதறது மிகமிகச் சுலபமான விஷயம். முதல்ல நீங்க ஒரு சாதாரண நாவல் எழுதிக்கங்க. அது க்ரைம் கதையாக கூட இருக்கலாம். எழுதி முடிச்சாச்சா...? இப்பத்தான் முக்கியமான விஷயம். அந்த க்ரைம் கதையில வர்ற பெயர்களை முதல்ல சரித்திர காலப் பெயர்களா மாத்தணும். உதாரணமா ஹீரோ பேர் தினேஷ்னு வெச்சிருந்தா ‌தினேசவர்மன்னும், ஹீரோயின் பேரு சுலபான்னு வெச்சிருந்தா சுலபதேவின்னும் மாத்திக்கலாம். அப்புறம்... கார்ல வந்து இறங்கினான்னு எழுதியிருந்தீங்கன்னா, குதிரையில அல்லது தேர்ல வந்து இறங்கினான்னும், துப்பாக்கியால சுட்டான்னு எழுதியிருந்த அதை வாளால் வெட்டினான்னும் மாத்தி எழுதிக்கணும்.

இப்படி எல்லாத்தையும் கவனமா மாத்திட்டீங்கன்னா நவீன பாணி சரித்திரக் கதை ரெடி. கணேச பட்டர், வசந்தகுமாரன்னு சுஜாதா ஸாரும், நரேந்திரவர்மன், வைஜயந்தி தேவின்னு சுபாவும் அவங்கவங்க எழுதின க்ரைம் கதைகளை சரித்திரமா மாத்தி இப்படித்தான் கும்மியடிச்சாங்க. உங்க பங்குக்கு நீங்களும் கும்மியடிச்சு தமிழை வாழ வையுங்க... ஹி... ஹி...

=============================

நிஜமாவே சரித்திரக் கதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு நான் எழுதினதுல கோபம் வந்திருக்கும். எத்தனை கல் விழுதுன்னு பாக்க ஆவலோட வெயிட்டிங். அப்புறம்... நாளை மறுதினம் துவங்க இருக்கும் புத்தகக் கண்காட்‌சியில ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டால் எண் 43, 44 ஆகிய எண்கள்ல அமைஞ்சிருக்கு. அங்கே என்னோட ‘சரிதாயணம்’ கிடைக்கும். இன்னும் சில பதிவர்களோட புத்தகங்களும் அங்க கிடைக்க இருக்கறதாகத் தெரிய வருகிறது. இரண்டு புத்தகஙகளை இங்க சொல்றேன். இன்ன பிறவற்றை தகவல்கள் திரட்டி நாளை சொல்றேன்.

1. கவியாழி கண்ணதாசன் - ‘அம்மா நீ வருவாயா, அன்பை மீண்டும் தருவாயா?’ என்கிற தலைப்பில் இவரின் கவிதைகள் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக புததக வடிவம் பெற்றுள்ளன. மணிமேகலையின் அரங்கு எண் 244ல் இந்தப் புத்தகத்தை நீங்கள் பெறலாம். 13-1-2013 ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு புத்தகக் கண்காட்சி அரங்கிலேயே நடக்கற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குப் போனீங்கன்னா ஆசிரிரின் ஆட்டோகிராபோட புத்தகத்தை வாங்கிக்கலாம்.

2. கோவை மு.சரளா - இவங்களோட கவிதைகளுக்கு அறிமுகம் தேவைப்படாது. ரசிக்க, மயங்க, உருக, உற்சாகப்பட, துடிக்க... இப்படி பல உணர்வுகள்ல நம்மை தோய்த்தெடுக்கற அழகான கவிதைகளுக்கு சொந்தக்காரரான இவரின் கவிதைகளும் ‘மெளனத்தின் இரைச்சல்’ என்கிற தலைப்பில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. இதையும் டிஸ்கவரியின் ஸ்டாலில் நீங்கள் சந்திக்கலாம்.

Friday, January 4, 2013

கேப்ஸ்யூல் நாவல் - 7

Posted by பால கணேஷ் Friday, January 04, 2013

                வீரத்தேவன் கோட்டை
                                                     - லக்ஷ்மி -

ழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துகிறீர்கள் தானே... இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரி்த்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்கிற குறிப்புடன் 1956ல் இதை எழுதியிருக்கிறார் லக்ஷ்மி அவர்கள். இப்போதும் படிப்பதற்கு போரடிக்காத இந்தக் கதை இங்கே உங்களுக்கு கேப்ஸ்யூலாக!

ந்த திரைப்படக் குழு காவிரிக் கரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறது. உணவு இடைவேளை விடப்பட, அனைவரும் உணவருந்தியபடியே அரட்டையடிக்கின்றனர். தனக்கு முன் தென்பட்ட இடிந்த கோட்டையைக் கண்ட கதாநாயகி காமினி, அதைப் பறறிக் கேட்க, அதற்கு ‘வீரத்தேவன் கோட்டை’ என்றும், அந்நாட்களில் வீரத்தேவன் பெயர் கேட்டால் அழுத பிள்ளையும் வாய் மூடும் என்றும் கூறுகிறார். ‘இந்தக் கோட்டை போரில் அழிந்திருக்குமோ’ என இயக்குனர் கேட்க, ‘ஒருவகையில் பெரும் போர்தான். அன்பை வெல்ல இருவர் போராடினார்கள். நூறு வருஷங்களுக்கு முன்பு...’ என்று கதையை சொல்லத் தொடங்குகிறார் கதாசிரியர்.

காவிரி பெருக்கெடுத்தோடும் கொள்ளிடக்கரையில் திருவிழா நடந்து கொண்டிருக்க, நண்பர்கள் வீரத்தேவனும் இருளப்பனும் அதைப் பார்த்து மகிழ்ந்தபடி நடககின்றனர். அங்கே கறுப்பாக, நீள் வட்ட முகமும், சிவந்த அதரங்களும், முத்துப் பற்களையும் கொண்ட அழகியொருத்தியைக் கண்டு வீரத்தேவன் மயங்குகிறான். பவளவல்லி என்கிற பெயர் கொண்ட அவள் இதயமும் வீரத்தேவனை நாடுகிறது. திருவிழா முடிந்தபின் அவளைக காண விருமபி பதினைந்து தினங்களுக்கும் மேலாக இருளப்பனுடன் அவளைத் தேடியலைகிறான் வீரத்தேவன். ‘பொன்னம்பலத் தேவர்’ என்கிற எதிரியின் எல்லையில் அந்தப் பெண்ணை மீண்டும் கண்டு அவளுடன் பேச்சுக் கொடுக்கின்றனர். இருளப்பனின் பேச்சில் கோபமடைந்து பவளவல்லி சென்று விடுகிறாள்.

அதேநேரம் அரண்மனையில் சைவப் பழமாய் காட்சியளிக்கும் வீரத்தேவனின் தாய் மங்களாம்பிகையைக் காண ஒரு கிழவி வந்திருப்பதாக தோழியர் சொல்ல, அவள் முகம் வெளிறிப் போகிறது. ‘ஏன் இங்கேயெல்லாம் வந்தாய்’ என்று கிழவியை அவள் கடிந்து கொள்ள, கிழவி பணம் கேட்கிறாள். ‘அந்த ஒலையைத் தந்தால் நிறையப் பணம் தருவேன்’ என மங்களாம்பிகை சொல்ல, ‘அது பிறகு, இப்போது கொஞ்சம் பணம் தா’ என்று அவளை மிரட்டி பணம் பறித்துச் செல்கிறாள் கிழவி.

ன்றைய படப்பிடிப்பு முடிந்து விட்டதால் கதையை நிறுத்திய கதாசிரியர் மறுநாள் லன்ச் பிரேக்கில் மீண்டும் தொடர்ந்து சொல்கிறார்.

டுத்த சில தினங்களில் பவளவல்லி-வீரத்தேவன் காதல் நன்கு வளர்ந்து விட்டிருக்கிறது. தன் இயற்பெயரான சுந்தரத்தேவன் என்று அவளுடன் அறிமுகமாகிப் பழகி வருகிறான். அவள் வீட்டுக்கு தாமதமாகத் திரும்புவதைக் கண்ட பொன்னம்பலத் தேவர், அவளைக் கண்டித்து வீரத்தேவன் என்பவன் தன் பரமவைரி என்று கூறி, பரம்பரைக் கதையைச் சொல்கிறார். ‘‘கொள்ளிடத்தின் மறுகரையை ஆண்டு வந்த சிவஞானத் தேவனின் மகன் இந்த வீரத்தேவன். பத்தாண்டுகளுக்கு முன் சிவஞானத்தேவர் சிலரால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். அதை நான் செய்ததாக பலர் சொல்கிறார்கள். நான் செய்யவில்லையே என்பதுதான் என் வருத்தமும். ஆனாலும் வீரத்தேவனின் உதிரத்தில் என் பழி தீர்த்துக் கொள்வேன். வீரத்தேவனின் தாய் மங்களாம்பிகை பெண்ணாகப் பிறந்த ஒரு பேய். என் மகனையும் மருமகளையும் கொன்று தீர்த்த அந்தக் குடும்பத்தை பழி தீர்ப்பேன்’’ என்று குமுறுகிறார். ‘‘உன் மாமன் பாண்டித்துரையும், சிவஞானமும் நெருங்கிய நண்பர்கள். ஒரு பெண் விவகாரமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு எதிரிகளானார்கள். உன் மாமி பூரண கர்ப்பிணியாயிருக்கையில் அவளுடன் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பிய உன் மா‌மனையும் மாமியையும் இருளில் சில ஆட்கள் தாக்கிக் கொன்று விட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகைகளை சில காலம் சென்றபின் மங்களாம்பிகை குறைந்த விலைக்கு விற்றாள் என்பதால் அதைச் செய்தது இன்னாரென விளங்கிற்று. நம் குடும்ப நகைகளில் மச்ச சின்னம் பொறித்திருக்கும்’’ என்கிறார் பொன்னம்பலத் தேவர். பவளவல்லி அவசரமாக ஓடிச் சென்று வீரத்தேவன் பரிசளித்த பச்சைக்கல் மோதிரத்தை எடுத்துப் பார்க்கிறாள். மச்சச் சின்னம் கண் சிமி்ட்டுகிறது அங்கே.

டப்பிடிப்பு மும்முரமாக நடைபெறவே கதையை இத்துடன் விட்டுவிட்டு மறுதினம் மீண்டும் தொடர்கிறார் கதாசிரியர்.

தன்பின் வீரத்தேவன் தன் காதலியைச் சந்திக்க வர, பவளவல்லி, தான் பொன்னம்பலத் தேவரின் பேத்தி என்பதால் இந்தக் காதல் நிலைக்காது என்று கண்ணீருடன் சொல்லவிட்டு ஓடி விடுகிறாள். அதற்குப் பதினைந்து தினங்கள் கழித்து இரவில் சில முரட்டு மனிதர்கள் எதிர்பாராதவிதமாக பொன்னம்பலத் தேவரைத் தாக்கி மயக்கமடையச் செய்து, பவளவல்லியைத் தூக்கிச் செல்கின்றனர். கண் விழிக்கும் பவளவல்லியை சந்திக்கும் மங்களாம்பிகை, அவள் கறுத்த நிறத்தை கேலி செய்துபேசி, அழவைத்து, தனக்குப் பணிப்பெண்ணாக இருக்கும்படி கூறுகிறாள். வீரத்தேவன் அவளிடம் ‘சிலகாலம் அம்மாவுக்கு பணிப்பெண்ணாக இருந்து அவள் மனம் மகிழச் செய்தால் உன்னை மன்னித்து நம் கல்யாணத்துக்கு சம்மதிப்பாக சொல்லியிருக்கிறாள், ஆகவே வேறு வழியில்லை’ என்று கடுமையாக சொல்லிச் செல்கிறான்.

மங்களாம்பிகைக்குப் பணிய மறுத்து கைதியாக பவளவல்லி படும் துன்பம் கண்டு பொறாமல், அவளுக்கு ரகசியமாக உதவ முன்வருகிறான் இருளப்பன். தன் நம்பிக்கைக்குரிய சேடிப் பெண் மூலம் இரவு அவளைத் தப்ப வைப்பதாக செய்தியனுப்புகிறான்.  இரவில் அந்தப் பணிப்பெண் வழிகாட்டி அழைத்துச் செல்ல, இருவரும் பதுங்கி தோட்டத்துக்கு வரகின்றனர். பின்கதவை நெருங்குவதற்குள் யாரோ நடந்து வரும் காலடி ஓசை‌ கேட்கவே இருளில் பதுங்குகின்றனர். முக்காடிட்டுக் கொண்டு ஒரு இருள் உருவம் வருவதைக் கண்டு மிரள்கின்றனர். அது முக்காட்டை நீக்க... அந்தக் கிழவி! அவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தன் இடுப்பிலிருந்த துணிப்பையை எடுத்து அருகிலிருந்த திரைச்சீலை மடிப்பில் ஒளித்து வைத்துவிட்டு நிற்கிறாள். தோழிப் பெண் வந்து ராணி காத்திருக்கிறார்கள் என்று கூறி அவளை அழைத்துச் செல்ல, பவளவல்லி மெல்ல அந்த துணிப்பையை கைப்பற்றுகிறாள். அதற்குள் மங்களாம்பிகை, கிழவியுடன் உரத்த குரலில் பேசுவது கேட்கிறது. அவர்களிருவரும் பயந்து ஓடி ஓரிடத்தில் வெளியேற வழியின்றி கதவு பூட்டியிருப்பதைக் கண்டு மறைந்து கொள்கின்றனர்.

சத்தம் கேட்டு அங்கே வரும் மங்களாம்பிகை அவர்களைக கண்டுபிடிக்கவில்லை. பின்னாலேயே கிழவி வருகிறாள். இம்முறை அவளுக்கு பெரும்பணம் தந்து விட்டதால் ஓலையைத் தரும்படி மங்களாம்பிகை மிரட்ட, மலடியானவள் ஒரு மகனுக்குத் தாயாக வேண்டுமானால் கஷ்டங்களை அனுபவிக்கத்தான்வேண்டும் என்று சிரிக்கிறாள் கிழவி. ‘‘உனக்கு குழந்தை பிறக்காததால் வேறு கல்யாணம் செய்ய உன் கணவர் திட்டமிட்டிருந்தார். அப்படி நடந்திருந்தால் இரண்டாவது மனைவிக்கு பணிப்பெண்ணாய் இருந்திருப்பாய். மருத்துவச்சி நான் சூழ்ச்சி செய்து நீ கர்ப்பமாய் இருப்பதாக பொய் சொன்னேன்.திருட்டுத்தனமாக ஒரு குழந்தையைப் பெற்று உன் அறையில் ஒளித்துவைத்து அது உனக்குப் பிறந்தது என்று உறுதிப்படுத்தினேன். உண்மையில் குழந்தையைப் பெற்றவள் ஒரு ஓலையில் அதன் பூர்வோத்திரங்களை எழுதி அவன் வயது வந்ததும் கொடுக்கச் சொல்லிவிட்டு இறந்தாள். அந்த ஓலைக்கு நீ என்ன கொடுத்தாலும் தகும்’’ என்கிறாள். கிழவிக்கு இன்னும் பணம் தந்து ஓலையைத் தரச் சொல்ல, அவள் வைத்த இடத்தில் துழாவி ஓலை காணவில்லையன்று மிரள, கோபமிகுதியில் மங்களாம்பிகை கிழவியின் கழுத்தை நெறித்துக் கொன்று விடுகிறாள். பிணத்தை திரைச்சீ‌லையின் பின் மறைத்துவிட்டு அவள் செல்ல, பவளவல்லி அங்கிருந்து வெளியேறி, இருளப்பன் உதவியுடன் தப்புகிறாள்.

கொள்ளிடக்கரையில் அவளைச் சேர்த்த இருளப்பன், பரிசல் ஏற்பாடு செய்யச் செல்ல, ஆவல் தாங்காமல் அந்த ஓலையைப் பிரித்துப் படிக்கிறாள். அது புதிய கதை சொல்கிறது. ‘‘நான் கொள்ளிடக் கரையில் சில தினங்கள் முன்பு படுகொலை செய்யப்பட்ட பாண்டித்துரையின் பத்தினி பர்வதவர்த்தினி. நான் இனி பிழைப்பேன் என்று தோன்றவில்லை. எங்களுக்கு இந்த நிலை வரும்படி செய்த அந்தப் பாவிகளை என் மாமன் பழிவாங்குவார். ஆகவே, இதைப் படிக்கும் அன்பு சகோதரரே, என் மைந்தனையையும் இந்த ஓலையையும் என் மாமா பொன்னம்பலத் தேவரிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன். அதற்கு பிரதியாக என் கைகளில் அணிந்திருக்கும் பச்சைக்கல் பதித்த கங்கணங்கள் இரண்டையும் பரிசளிக்கும்படி என்னைக் காத்த அம்மையாரிடம் சொல்லியிருக்கிறேன்.’’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன் உள்ள மற்றொரு ஓலையில் பொன்னம்பலத் தேவருக்கு அவள் எழுதிய கடிதம் இருக்கிறது. அதில் இந்த விஷஜுரத்தில் தான் பிழைக்க மாட்டேன் என்றும், தன் கணவரைக் கொன்றது சிவஞானத்‌ தேவரின் ஆட்கள் என்பதை அவர்கள் பேசியதைக் கேட்டதாகவும், அவரைப் பழிவாங்குமாறும், அவள் மகனின் மார்பில் பொற்காசு அளவில் மச்சமும், கால்களில் ஆறு விரலும் காணப்படுகின்றன என்று அடையாளங்களும் எழுதப்பட்டிருக்கிறது.

ஓலைகளைப் படித்து முடித்ததும் ஸ்தம்பித்துப் போகிறாள் பவளவல்லி. அதற்குள் சில ஆட்களுடன் வந்த வீரத்தேவன் அவளை எதுவும் பேச விடாமல் மீண்டும் கவர்ந்து செல்கிறான். அங்கே சென்றதும் பவளவல்லி தான் தப்புவதற்காக எதிரில் வந்த கிழவியைக் கொன்று விட்டு ஓடிவிட்டாள் என்று மங்களாம்பிகை குற்றம் சாட்ட, கோபத்தில் கொந்தளிக்கும் பவளவல்லி, வீரத்தேவனிடம் உண்மைகளைப் போட்டு உடைக்கிறாள். அதன் வீரியம் தாங்காமல் மயக்கமாகிறாள் மங்களாம்பிகை.

ங்கே கதையை நிறுத்திவிட்டு, படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதால் இரண்டு தினங்கள் கழித்து நடிகை காமினியிடம் கதையைத் தொடந்து சொல்கிறார் கதாசிரியர்.

மூர்ச்சை தெளிந்ததும் ஓர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு ‘தன் பரமவைரியின் மகனைத் தத்தெடுத்து வளர்த்து விட்டோமே’ என்ற அதிர்ச்சியைத் தாளாது, வைரமோதிரத்தைப் பொடி செய்து விழுங்கி உயிரை விடுகிறாள். இந்த உண்மைகளை ஜீரணிக்க இயலாமல் பல தினங்கள் அதிர்ச்சியுடன் திரியும் வீரத்தேவன், பின் மனம் தேறி, பவளவல்லியைத் திருமணம் செய்து கொண்டு தன் பாட்டனார் பொன்னம்மபலத் தேவரைச் சந்திக்கிறான். ‘‘என் குலக்கொழுந்தே! உன்னை யாரென்று தெரியாமல் வெறுத்தேனே!’’ என்று அவனைக் கட்டியணைக்கிறார் அவர்.

‘‘இதுதான் இந்த வீரத்தேவன் கோட்டையின் கதை’’ என்று முழுவதுமாகச் சொல்லி முடிக்கிறார் கதாசிரியர். அன்றுடன் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிவதனால் அனைவரும் புறப்படுகின்றனர்.

....என்னங்க... பேக்கேஜ் டூர் மாதிரி சுருக்கமா கதையைப் படிச்சுட்டீங்க. பிடிச்சிருந்ததா? முழுசாப் படிக்கணும்னு தோணிச்சுன்னா... உடனே லைப்ரரிக்கு ஓடுங்க. எந்த மாதிரி சுவாரஸ்யமான இடங்கள்ல லக்ஷ்மியம்மா கதாசிரியர் மூலமா ப்ரேக் விட்டுட்டு, நம்ம படபடப்பை கூட்டிட்டு அப்புறம் தொடர்ந்திருக்காங்கன்றதை கவனிச்சீங்களா? நல்ல யுத்தியா இருக்கில்ல..!  லக்ஷ்மியம்மாவின் வித்தியாசமான இந்தக் கதையைத் தந்ததுபோல அவர் எழுதிய அருமையான குடும்பக் கதைகளில் ஒன்று இன்னொரு கேப்ஸ்யூலாக பின்னர் தருகிறேன்.

Wednesday, January 2, 2013

இனி இல்லை இடைவேளை!

Posted by பால கணேஷ் Wednesday, January 02, 2013
ஹாய்... ஹாய்... ஹாய்...!

அனைவரும நலம்தானே...! பிறந்திருக்கற இந்த புதுவருடம் உங்களுக்கு நிறைய வெற்றிகளையும் முழுக்க முழுக்க சந்தோஷங்களையும் நிரப்பினதா அமையட்டும்னு மனம் நிறைய வாழ்த்தறேன். நேற்றைய தினம் எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. பதிப்பக நிறுவனத்துல ‌பணிக்குச் சேர்ந்ததால புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நிறையப் புத்தகங்களைத் தயாரிக்கும் பொருட்டு இரவு பகல் பாராமல் பணி செய்ய வேண்டியதாய் அமைந்தது சென்ற மாதம். எல்லாத்தையும் முடிச்சிட்டு இதோ மீண்டும் வந்துட்டேன். இனி முன்போல் ஒரு தினம் விட்டு ஒரு தினம் தொடர்ந்து எழுதுவதாக உத்தேசம். அவனியிற் சிறக்க தேவி பராசக்தி அருள் புரிவாளாகுக! (பாரதியார் கவிதைகள் படிச்சு, வொர்க் பண்ணினதோட பாதிப்பு. ஹி... ஹி...)

ஜனவரி மாதம் பிறந்தது என்றாலே திருவிழா மயம்தான். பொங்கல் திருவிழா ஒன்றாலேயே இந்த மாதம் களைகட்டி விடும் அனைவருக்கும். சென்னைவாசிகளுக்கோ அத்துடன் புத்தகத் திருவிழாவும் சேர்ந்து கொள்வதால் டபுள் தமாக்காதான். இம்மாதம் 11 ம் தேதி முதல் 23ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ கிரவுண்டில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த வருஷ புத்தகக் கண்காட்சி எனக்கு மிகமிக விசேஷமானது.

காரணம் 1 : சிங்கப்பூரில் வசிக்கும் தம்பி சத்ரியன் எழுதிய ‘கண் கொத்திப் பறவை’ மற்றும் நண்பர் சி.கருணாகரசு எழுதிய ‘நீ வைத்த மருதாணி’ ஆகிய கவிதைப் புத்தகங்களை நான் வடிவமைத்து இருக்கிறேன். ‘கண்கொத்திப் பறவை’ - கவிதைகளைப் படித்தால் உங்கள் மனங்களைக் கொத்திச் சென்று விடுவார் கவிஞர் சத்ரியன். ‘நீ வைத்த மருதாணி’ - அவள் வைத்த மருதாணி சில தினங்களில் கலைந்து விடும். கருணாகரசுவி்ன் கவிதைகள் மருதாணியாக உங்கள் மனங்களில் ஒட்டிக் கொண்டு கலையவே கலையாது. அத்தனை அழுத்தமான கவிதைகள் இவர்கள் இருவருடையதும். உள்ளடக்கத்திலும் சொல்லாடலிலும் அழகான இவர்களின் கவிதைகளை வடிவமைப்பால் மேலும் அழகாக்க நான் முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றிருக்கிறேனா என்பதை நீங்கள் அவசியம் படித்துவிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகங்கள் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டாலில் கிடைக்கும்.

காரணம் 2 : நான் எழுதிய ‘சரிதா’ கதைகள் மற்றும் சிரித்திரபுரம் ஆகியவை சிறுகதைகள் தொகுக்கப்பட்டு புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தப் புத்தகமும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் சில ஸ்டால்களிலும் கிடைக்கச் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன். ஸ்டால் நம்பர்கள் அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விளக்கமாய் தெரிவிக்க(விளம்பரப்படுத்த?)ப்படும். தமிழில் வெளியான மிகச் சிறந்த நகைச்சுவை(!)ப் புத்தகங்களில் ஒன்றான(?) இந்தப் புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கிப் படித்து சிரிக்க (முயற்சிக்க) வேண்டும் என்பது என் வேண்டுகோள் மற்றும் ஆலோசனை. ஹி... ஹி...

அப்புறம்... தமிழனாய்ப் பிறந்தவர்கள் அவசியம் படித்திருக்க வேண்டிய புத்தகங்கள் என்று நான் மதிக்கும் ‘பாரதியார் கவிதைகள்’ மற்றும் மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ ஆகிய இரண்டும் விகடன் வெளியீடாக வருகின்றன. ‘கோச்சடையான்’ என்ற மன்னின் வாழ்க்கையை கெளதம நீலாம்பரன் அழகாக எழுதியது குமுதம் வெளியீடாக வருகிறது. இவற்றை வாங்கிப் படிக்கலாம் என்று ‘டிக்’ அடித்து வைத்திருக்கிறேன். மற்ற நல்ல புத்தகங்களின் வருகையைப் பற்றி முதல்தினம் ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வந்து எழுதுவதாக ஒரு உத்தேசம் இருக்கிறது.

‌வேறென்ன... இந்தியத் தலைநகரில் 6 மிருகங்களால் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியனாய்ப் பிறந்தமைக்காய் நம்மைத் தலைகுனிய வைத்தன என்றே சொல்ல வேண்டும். இதனால் நிகழ்ந்த போராட்டங்களும், அபத்தமாய் அரசியல் புள்ளிகள் உதிர்த்த கருத்துக்களும், ‘எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிவது பெண்கள் சுதந்திரம்’ என்று பெண்கள் அமைப்புகள் உயர்த்திய புரட்சி(?)க் கொடியும் அந்தப் பெண்ணின் இறப்பும் நீஙகள் அறிந்ததே. இந்த விஷயத்தில் தவறு இரவில் தனியாக வந்த அந்தப் பெண்ணின் மீதோ, அந்த இளைஞர்களின் குடியின் மீதோ,அல்ல... பெண்மையை மதிக்கக் கற்றுத் தராமல் அவர்களை மிருகங்களாக வளர்த்த‌ பெற்றோர் மற்றும் ஆசிரியர்களைச் சார்ந்தது என்று நான் நினைக்கிறேன்.

நேற்றைய தினம் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து வந்தது. மிகச் சரியாக ஒன்றாம் தேதி கைக்குக் கிடைக்கும் வண்ணம் நம் தபால் துறையின் வேகத்தை(!)க் கணக்கிட்டு அனுப்பிய அவரின் திட்டமிடலை வியந்து கொண்டே பிரித்துப் பார்த்தேன். என் மன ஓட்டத்துக்கு ஏற்ப அவர் அழகாய் வடிவமைத்து வெளிப்படுத்தியிருந்தார். அதை இங்கே மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ரைட்டு... ஒரு புதிய, வித்தியாசமான கேப்ஸ்யூல் நாவலோட உங்களை வெள்ளிக்கிழமை சந்திக்கறேன். ஸீ யு.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube