Thursday, June 9, 2016

பக்... பக்... பரம்பரை!

Posted by பால கணேஷ் Thursday, June 09, 2016
ரசியல் + மர்மம், ஆன்மீகம் + மர்மம், சரித்திரம் + மர்மம் என்று பல ரசனைகளில் ஐந்து வெற்றிகரமான நாவல்களைத் தந்த காலச்சக்கரம் நரசிம்மாவின் எழுத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் புத்தகம் ‘கர்ண பரம்பரை’. மூலிகை மருத்துவம் + மர்மம் என்கிற காக்டெய்லில் இந்த விறுவிறுப்பான, பரபரப்பான த்ரில்லரை வழங்கியிருக்கிறார் நரசிம்மா.

‘உலகம் சுற்றும்  வாலிபன்’ படத்துல வாத்யார் சொல்வாரே.. ‘இது இப்போ அழீவு சக்தியாக உருவாகியிருக்கு. மேலும் ஆராய்ச்சி செய்தால் இதை ஆக்க சக்தியாவும் பயன்படுத்தலாம்’ என்று. அதுபோல அகத்தியமுனி கர்ண மந்திரமாக (கர்ணம் = காது) உபதேசித்து வழிவழியாக அவ்விதமே தொடரச் செய்த அபூர்வகரணி மூலிகையானது ஆக்க சக்தியாகவும் அழிவு சக்தியாகவும் பயன்பட வல்லது அதைத் தீய எண்ணம் கொண்ட ஒருவன் தன் திறமையால் (சூழ்ச்சியால்?) உபதேசம் பெறுபவரிடமிருந்து அபகரித்து விடுகிறான். அதன் விளைவாகத் தொடரும் கொலைகள், மர்மங்கள், செய்தவன் யார். அதன் தீர்வு என்ன என்பதை 482 பக்கங்களில் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார் நரசிம்மா.

அகதா கிறிஸ்டியின் நாவல்களைப் படிக்கையில் ஒரு நுணுக்கமான விஷயத்தைக் கவனித்து மலைத்ததுண்டு நான். குற்றச் சம்பவங்களின் சூத்ரதாரி யார் என்பதற்கு கதையின் துவக்கத்திலேயே க்ளூ தந்திருப்பார் அகதா. படிக்கும் சுவாரஸ்யத்தில் நாம்தான் அதை நழுவ விட்டுவிட்டு க்ளைமாக்ஸ் படித்த பிறகு, முன் பகுதியை மீண்டும் படித்தால் அட என்று வியப்பது நிச்சயம். அந்த நுணுக்கத்தை நரசிம்மாவின் இந்த த்ரில்லரிலும் அனுபவித்தேன். முடிச்சுகள் விழும் சமயத்திலேயே குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கான க்ளூ தந்திருக்கிறார். புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்தபின் முன் சென்று பார்த்தால் நிச்சயம் சபாஷ் போடச் செய்கிற உத்தி அது. ஹாட்ஸ் ஆஃப் நரசிம்மா ஸார்.

மற்றொரு புதுமையான விஷயத்தை அவர் செய்திருப்பதற்காகவும் கை குலுக்க வேண்டும். நாவலின் மையச்சரடாக அவர் வைத்திருப்பது பார்வையற்ற ஒரு மூதாட்டியை. நிகழும் தொடர் கொலைகளின், அமானுஷ்ய சம்பவங்களின் பின்னணியைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதாநாயகியும் அப்பார்வையற்ற மூதாட்டிதான். நெருங்கியவர்களின் துணை கொண்டும், தர்க்க ரீதியாகச் சிந்தித்தும் புதிர்களை விடுவிக்கும் அந்தக் கதாபாத்திரம் தமிழுக்குப் புதியது. 

கதையின் மாந்தர்களைப் பற்றியோ, சம்பவங்களைப் பற்றியோ எதைச் சொன்னாலும் நாவல் வாங்கிப் படிக்கும் எண்ணமுள்ளவர்களுக்கு ஸ்பாய்லராக அது ஆகிவிடலாம் என்பதால் எதையும் நான் குறிப்பிடப் போவதில்லை. ஆனால் குறிப்பிட வேண்டிய சில விஷயங்கள் உண்டு. நரசிம்மாவின் முந்தைய ‘பஞ்சநாராயணக் கோட்டம்’ நாவலில் நிறைய சந்திப் பிழைகள், ஒற்றுப் பிழைகள் நெருடலாக இருந்ததைக் குறிப்பிட்டிருந்தேன். இதில் அந்தக் குறைபாடு இல்லை. எழுத்துப் பிழைகளும் தென்படவில்லை. அதற்காக ஒரு ஸ்பெஷல் கை குலுக்கல். நரசிம்மாவின் நாவலில் இத்தனை கதாபாத்திரங்களைக் கையாண்டுஅவர்  எழுதியிருக்கும் முதல் நாவல் இது. ஆனாலும் கிஞ்சித்தும் குழப்பமின்றிப் படித்து முடிக்க முடிகிறது அவரது தெளிவான, தங்குதடையற்ற எழுத்து நடையின் காரணமாக. இது மற்றொரு ப்ளஸ்.

மதுரைவீரன் பெண்டாட்டி, அப்பு என்கிற இரு கதாபாத்திரங்கள் சதி பற்றிப் பேசும் காட்சியை வைத்துவிட்டு, அது யாராக இருக்கும் என்று வாசகர்களை ஊகிக்க வைத்து மிஸ்கைட்  செய்து விட்டு, நாவலின் பிற்பகுதியில் நீங்கள் ஊகித்தவர்கள் இல்லை, வேறு இருவர் என்பதை லாஜிக்கலாக ஏற்றுக் கொள்ளும்படி  சொன்ன திறமை அபாரமான ஒன்று.

கதையில் குறைகளே இல்லையா என்று கேட்டால்... ஒரு லாஜிக் மிஸ்டேக் இருப்பது எனக்கு உறுத்தலாக இருந்தது. ‘நளபவன்’ ஓட்டல்களை ஓடவைக்கும் சாம்பார் ரகசியம் எழுதப்பட்ட ஓலைச் சுவடியை நான் சொல்லி சந்திரசேகர் யாக  நெருப்பில் போட்டார் என்று வனதாயி, பூங்குன்றத்திடம் க்ளைமாக்ஸில் சொல்கிறார். ஆனால் கதையில் யாகம் நடந்த சம்பவத்துக்குப் பிறகுதான் சந்திரசேகர் தன் ஓட்டலுக்கு பூங்குன்றத்தை அழைத்துச்  சென்று ரகசியமைக வைத்துள்ள அந்த ஓலைச் சுவடியைக் காண்பித்து, அந்தப் பாடலுக்கு  பொருள்சொல்வதாக வருகிறது. நெருப்பில் இட்ட ஓலைச்சுவடி எப்படி அங்கே மீண்டு வந்திருக்க முடியும்..? காணாமல் போயிருக்க முடியும்..? இந்த ஒரு சமாசாரம் தான் புரியவில்லை. நரசிம்மா ஐயாதான் இதற்கான விளக்கம் தர முடியும்.

‘என்ன சார், வழக்கமான உங்க நாவல் போல இல்லையே.. இது ஜவ்வா இழுக்குதே..’ என்ற வார்த்தையைக் கேட்டுவிடப் போகிறேனோ என்கிற பயம் என் ஒவ்வொரு நாவல் வெளியாகும் போதும் எழும் என்கிறார் நரசிம்மா. இந்த எண்ணம் உள்ளவரை அவர் நாவல்கள் எதுவும் தோற்காது என்பது என் எண்ணம். இந்த ஆறாவது நாவலும் விறுவிறுப்பில் சொல்லி அடித்த கில்லிதான்.

புத்தகக் கண்காட்சியில் இது வெளியிடப்பட்ட தினத்தன்று அவர் கையெழுத்துடன் வாங்கிய நான் அடுத்த இரண்டு தினங்கள் கழித்தே நாவலைக் கையில் எடுக்க முடிந்தது. ஆனால் முதல் தினம் மதியம் படிக்கத் துவங்கிய நான், அடுத்த தினம் காலை பத்தரை மணிக்குள் படித்து முடித்து விட்டேன் என்றால் கீழே வைக்க விடாதபடியான அதன் விறுவிறுப்பை நீங்கள் யூகிக்க முடியும். 482 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை ரூ.225/- விலையில் எண் 23. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017ல் அமைந்துள்ள வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். தவறவிடாமல் வாங்கிப் படியுங்கள் என்பது என் சிபாரிசு. காலச்சக்கரம் நரசிம்மாவுக்கு ஒரு பூங்கொத்து!

Friday, October 2, 2015

பேரன்(பேத்தி?)புடையீர்...

நிகழும் மன்மத ஆண்டு புரட்டாசி 24ஆம் நாள் உத்திர நட்சத்திரமும் சதுர்த்தசியும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணி முதல்...

என்னங்க... உங்களை ஏதோ என் வீட்டுக் கல்யாணத்துக்கோ காதுகுத்துக்கோ அழைக்கப் போறேன்னு நினைச்சீங்களா... இல்லவே இல்லீங்க. அக்டோபர் 11ம் தேதி ஞாயித்துக் கிழமை காலை 9 மணியில் துவங்கி கோலாகலமாக (பெப்ஸிகலமாக?) நடக்கவிருக்கும் நம்முடைய பதிவர் சந்திப்பைத் தூய தமிழ்ல சொல்லி அழைச்சேன். அவ்வளவுதேங்.

புதுக்கோட்டை நண்பர்கள் முழு மூச்சாகக் களத்துல இறங்கி தனித் தனிக் குழுக்களா அமைச்சுகிட்டு, ஒவ்வொரு அம்சத்தையும் பாத்துப் பாத்து திட்டமிட்டுக்கிட்டிருக்கற இந்த நம்முடைய விழாவிற்கான அழைப்பிதழ் இதோ இங்கே உங்களுக்காக....பிறகென்ன... நம்ம வீட்டுத் திருவிழாவுல நீங்க அனைவரும் தவறாம கலந்துக்கிட்டு அதை என்னென்னிக்கும் நினைவில் நிற்கிற ஒரு நிகழ்வாகச் செய்துவிட வேண்டும் என்று இருகரம் கூப்பி, மகிழ்வுடன் வேண்டிக்கறேனுங்க. விழா அரங்கில் சந்திக்கலாம்.

Wednesday, September 16, 2015

ந்த 2015ம் ஆண்டுக்கான வலைப்பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் அக்டோபர் 11ல் நிகழ இருப்பதையும், அதற்காக முத்துநிலவன் அவர்களின் தலைமையில் நண்பர்கள் பரபரக்க வேலை செய்வதையும் நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள். (நீ தூங்கி வழிஞ்சிட்டு லேட்டா பகிர்ந்தா நாங்க என்னய்யா செய்யறதுன்னு உங்க மை.வா. கேக்குது. ஹி... ஹி....) பதிவர் சந்திப்புக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தளத்தில் அந்த நாளை எதிர்நோக்கி உருகிக் கரைந்து கொண்டிருக்கின்றன விநாடிகள். பார்க்கையில் மகிழ்ச்சியும் படபடப்பும் கூடிக் கொண்டே வருகிறது.

புதுக்கோட்டை நண்பர்களின் உற்சாகமான ஏற்பாட்டில் பலப்பல புதிய விஷயங்கள் இம்முறை அரங்கேறப் போகிறது என்பதைக் காண்கையில் மகிழ்ச்சி கரை உடைக்கிறது. முதலில் குறிப்பிட வேண்டியது வலைப் பதிவர்கள் பற்றிய குறிப்புகளுடன் வெளிவர இருக்கும் கையேடு. மிகச் சிறப்பான, வரவேற்கத்தக்க இந்த முயற்சியில் உங்களைப் பற்றிய விவரங்களை இதுவரை அனுப்பவில்லையெனில் உடன் இங்கு விரைந்து 20ம் தேதிக்குள் அனுப்புங்கள். இந்தப் புத்தகத்திற்கென விளம்பரமும் சேகரித்துக் கொண்டுள்ளார்கள். உள் அட்டை முதல் பக்கத்திற்கு அப்பாதுரையும், கடைசிப் பக்க வெளி அட்டைக்கு விசுஆவ்ஸமும் பங்களித்துள்ளனர். உங்களால் இயன்றதை நீங்களும் செய்தால் சிறப்பு. (விசு ஆவேசம் என்று பதிவில் பார்த்ததும் மிரண்டுதான் போனேன். வேலூர்ல நாம பாத்தப்ப சாந்தமா தானே இருந்தார், ப்ளாக்கர் மீட்னதும்தான் அவர் ஆவேசமாயிட்டாரோ? ஹி.. ஹி... ஹி..)


அப்புறமென்ன... “சிவபெருமான் கிருபை வேண்டும்னா கேக்கப் போறேன்? பணம்தான் ஸார் வேணும். அது பத்தும் செய்யும்னுவாங்க. அது மாத்திரம் என் கைல இருந்துட்டா நான் பதினொண்ணும் செய்வேன்” அப்டின்னு நாகேஷ் சும்மாவா சொன்னார்..? நாம் ஒவ்வொருவரும் நம்மளால முடிஞ்ச நிதிப் பங்களிப்பை செஞ்சு புதுக்கோட்டை நண்பர்களின் கரத்தை வலுப்படுத்திட்டா, அவங்க பன்னெண்டும் செய்வாங்கன்றதுல சந்தேகமில்லை. நிதிஉதவி செய்ய விரும்புவோர் NAME - MUTHU BASKARAN N,, SB A/c Number - 35154810782, CIF No. - 80731458645, BANK NAME - STATE BANK OF INDIA, PUDUKKOTTAI TOWN BRANCH, BRANCH CODE - 16320, IFSC - SBIN0016320 என்ற வங்கிக் கணக்கில் உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள்.

இவை யாவற்றையும் விட முக்கியமானது  நமக்காக இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய போட்டிகள். வலைப்பதிவர் திருவிழா - 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.  ஐந்து தலைப்புகள்! ஒரு போட்டிக்கு பத்தாயிரம் வீதம் இதன் மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000/-  போட்டிவிவரம் :

வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி- கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு.

வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24 வரி. அழகொளிரும் தலைப்போடு.

இதன் விதிமுறைகள் மற்றும் இன்னபிற மேல்/பீமேல் விவரங்களை அறிந்து கொள்ள இங்கே விரையவும்.

போட்டியில கலந்துக்கிட்டு அவங்க தர்ற பரிசுக் கேடயம் நிறைய பரிசுத் தொகைய அள்ளணும்னு ஆசை ஆசையா வருது... ஆனா எல்லாம் சீரியஸ் சப்ஜெக்டாச்சே, நமக்கு என்ன தெரியும்னு நெனக்கறப்ப வர்ற ஆசையும் அடங்கிப் போகுது. ஆ... அபிராமி... அபிராமி.. எனக்கில்லை... பரிசு எனக்கில்லைன்னு தருமி மாதிரி புலம்பத் தோணுது. (இருந்தாலும் நானும் எதையாவது கிறுக்கியே ஆகணும்னு வலைச்சித்தர் உத்தரவு போட்டிருக்கார். நாரதர் கலகம் நன்மைல முடியும்பாங்க. இவர் கௌப்பிவிட்டது என்னாவப் போவுதோ..? ஹி... ஹி...) சிறப்பான எழுத்துத் திறமை படைத்த நீங்கள்  இதில் ஆர்வமுடன் கலந்துக்கிட்டு உங்களோட பங்களிப்பைச் செலுத்தி பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள். இப்பவே அட்வான்ஸா என்னோட நல்வாழ்த்துகள்.

Monday, August 24, 2015

விடுமுறை விபரீதம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 24, 2015
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எழுந்திரிப்பது என்பது மட்டும் ராஜ ரமேஷால் முடியாத காரியம். மற்ற நாட்களில் எழுந்து கிழித்து விடுவானா என்று கேட்டால்.. ஹி… ஹி… ஹி...! அந்த ஞாயிறின் அதிகாலை 9 மணிக்கு (அவனுக்கு சார்) "பர்ர்ர்..." என்றது அழைப்பு மணி. "யார்?" என்றான் ராஜ ரமேஷ். "பார்..." என்றாள் சபிதா அவன் முதுகில் ஒன்றுவைத்து. வேகமாய் எழுந்துபோய்க் கதவைத் திறந்தான். வெளியில் நின்றிருந்தவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவளைப் பார்த்து அவன் அதிர்ந்து போய் ‘ழே‘ என்று விழித்தான். நெற்றிச் சுட்டியும், காதுகளில் அகன்ற வளையங்களும், பளிச்சென்ற மூக்குத்தியும், நாலணா அளவுக்குப் பொட்டும் அணிந்து சாண்டில்யனின் கதையிலிருந்து நேரே குதித்துவந்த ஓவியப் பெண் போல இருந்தாள். என்ன... சாண்டில்யனின் நாயகி சுரிதார் அணிய மாட்டாள்; இவள் அணிந்திருந்தாள்.

யாரும்மா நீங்க..? என்ன வேணும்..? என்றான். என்னையா யாரென்று கேட்கிறாய் பார்த்திபேந்திர பல்லவா… உன் தலையைக் கொய்யாமல் விட மாட்டேன்.. என்றவள் குமரிமுத்துவின் சிரிப்பு டெஸிபலில் பாதி வருகிற அளவுக்கு ஹாஹாவெனச் சிரித்தாள். அப்போதுதான் கவனித்தான். ஐயோ...! சிரிக்கையில் வாயில் இரண்டு கடைவாய்ப் பற்களும் சற்றே நீண்டிருப்பது போலில்லை? அந்தப் பற்களின் நுனியில் அதென்ன… தக்காளி சாஸா, இல்லை ரத்தமா..? பார்த்த டிராகுலா சினிமாவும் பேய்ப்படங்களும் இன்ஸ்டன்ட்டாய் நினைவுக்கு வந்து வயிற்றைக் கலக்க, பார்வையைச் சற்று கீழிறக்கியபோதுதான் அதைக் கவனித்தான். அவள் கையில் ஒரு கத்தி! கன்பர்ம்டாக அதில் சொட்டிக் கொண்டிருந்தது ரத்தம்தான்!

நானில்ல.. நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க.. என்றவன், அவள் கத்தி பிடித்த கையை உயர்த்த, உளறிக் கொட்டி, கிளறி மூடி அலறியடித்து உள்ளே ஓடி, கட்டிலில் கிடந்த சபிதாவின் அருகில் விழுந்தான். அலறினான். "ஐயோ.. பேய்... பேய்...!". எரிச்சலாய் எழுந்து  'பளார்' என்று முதுகில் ஒரு அறை வைத்தாள். "ய்யூ ராஸ்கல்! ராத்திரி பூரா என்னை தேவதைன்னு கொஞ்சிட்டு, இப்ப பொழுது விடிஞ்சதும் பேய்ங்கறியா..? கெட் லாஸ்ட்" என்றாள். ஐயோ, உன்னையில்லடி. நெஜம்மாவே ஹால்ல ஒரு பேய் வந்து நிக்குதுடி. உடனே வாயேன்… என்றான். ஹாலிடேல கூட தூங்கவிடாம ஏன்யா படுத்தற..? என்றபடி ஹாலுக்கு அவள் செல்ல, அவள் புடவைத் தலைப்பைப் பிடித்தபடி பின்னால் போனான் அவன்.

அவள் இப்போது சோபாவில் ஒய்யாரமாகச் சாய்ந்து படுத்து, டீபாயிலிருந்த சபிதாவின் செல்போனை ஆராய்ந்து கொண்டிருக்க, சபிதா கோபமானாள். ஏய், யார்றி நீ? என்ன வேணும் உனக்கு? என்று அவன் கேட்டதையே அட்சரம் பிசகாமல் கேட்டாள். குதித்தெழுந்த அவள், உன் கணவனின் உயிரை வாங்கவே யாம் வந்திருக்கிறோம் இளவரசி.. என்றாள். நான் ஒருத்தி இருக்கற வரைக்கும் அது உன்னால முடியாதுடி.. என்றாள் சபிதா. ஆமாம். அதை இவளே வாங்கிடுவா. உனக்குல்லாம் விட்டுத் தருவாளா? என்று ரமேஷ் முனக, கும்மென்று அவன் இடது கன்னத்தில் குத்தினாள் சபிதா. கன்னத்தைப் பிடித்தபடியே சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறினான். Sabi, I think she is mad. Please dial to kilpauk என்றவனின் வலது கன்னத்தில் கத்தி பிடிக்காத மற்றொரு கரத்தால் கும்மென்று குத்தினாள் வந்தவள். You Idiot!! How dare you say that? I’m not mad என்றாள்.  என்னாங்கடி ஆளாளுக்குக் குத்தறீங்க…? அவ்வ்வ்… என்று புலம்பியபடி சோபாவில் சரிந்தான் ராஜரமேஷ். என்னங்க… நெஜமாச் சொல்லுங்க. இவள உங்களுக்குத் தெரியாதுதானே..? என்று சபிதா கத்தினாள்.

நீ வேறடி… மொதல்ல அவளப் புடி என்று அலறியபடி வாசலைப் பார்த்தவன் பிரகாசமானான். ரங்குவும் பொடியனும் வந்து கொண்டிருந்தனர். ரங்கநாதன் பாலசந்திரன் என்று அவன் நண்பன் பெயரைச் சொல்வதைவிட ரங்கு என்றால் அனைவருக்கும் தெரியும். அப்படியே ரித்விக் பிரணவன் என்கிற அவன் நண்பன் பெயரைச் சொன்னால் தெரிவதைவிட பொடியன் என்கிற அவன் புனைபெயர் வெகு பிரபலம். இப்போது சபிதா, அந்த வினோதள் கையிலிருந்த கத்தியைப் பிடுங்க போராடிக் கொண்டிருக்க, அதை புதிராகப் பார்த்தபடி ரமேஷின் அருகில் வந்தார்கள் எழுத்தாள நண்பர்கள்.

என்ன சார், புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம்னு எங்களை வரச் சொல்லிட்டு இங்க ஏதோ சண்டைக் காட்சிக்கு ஒத்திகை நடக்குது போலத் தெரியுதே..? உங்க குறும்பட ஸ்க்ரிப்ட் ரெடியாய்டுச்சா? இவங்கதான் ஹீரோயினா? என்றான் ரங்கு. அடேய்… குறும்படத்துல ஹீரோவா நடிச்சு பர்னிங் ஸ்டார்னு பட்டம் வேற வாங்கினப்பறம் உன் ரவுசு தாங்கலடா… பாக்கறதெல்லாம் குறும்படமா? இது கொடும்படம்டா. நான் பல்லவ இளவரசனாம். என்னக் கொலை பண்ணியே தீருவேன்னு ஒத்தக் கால்ல நிக்கறாடா.. என்று அலறினான் ரமேஷ். ரங்கு ஏறிட்டுப் பார்க்க, சபிதாவைக் கீழே சாய்த்து ஒற்றைக் காலில் நின்றபடி தள்ளிக் கொண்டிருந்தாள் அவள். சரியாத்தான் சொல்றீங்க சார் என்றான் ரங்கு மூக்குக் கண்ணாடியை மேலேற்றியபடி. கோபமாக அவன் தலையில் தட்டி, அடேய்... முதல்ல போய் சபிதாவக் காப்பாத்துடா என்று ரமேஷ் அலற, அவளை நோக்கிப் பாய்ந்தான் ரங்கு.

சார், மென்டலாய்ட்டாலும்கூட மனசுல பதிஞ்ச எடத்துக்குத்தான் போகத் தோணும். நீங்க இவங்கள எப்பவோ சந்திச்சு எதோ செஞ்சிருப்பீங்களோன்னு தோணுது. நல்லா யோசிச்சுப் பாருங்க… ஒரு அனுபவக் கதையே பின்னால இருக்கும்.. என்றான் பொடியன். அடேய், சந்திக்கற அனுபவத்துலல்லாம் கதையத் தேட உன்னாலதான்டா முடியும். நான் ஒரு மண்ணும் தெரியாத அப்பிராணிடா. காலேஜ் டேஸ்ல லவ்கூடப் பண்ணினது கெடையாது. நீ பாட்டுக்கு எதையாவது பேசி குடும்பத்துல கும்மியடிச்சிராதடா என்று பதறியவனாக பொடியனின் வாயைப் பொத்தினான் ரமேஷ்.

இப்போது சபிதாவும் ரங்குவுமாக அவளைச் சமாளித்து கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். அவள் கையைப் பின்னால் பிடித்து மடக்கியபடி கத்தியைப் பறித்துவிட்டுக் கேட்டான் ரங்கு. சொல்லுலே… எதுக்கு கத்தியோட அலையுத? அரிமர்த்தன பாண்டியரின் துணைவி யான். என் கணவரின் சிரத்தைச் சதிசெய்து கொய்த சோழன் செழியனை யாம் சற்றுமுன்தான் கொன்றோம். அவன் தோழனான இந்தப் பல்லவனின் சிரத்தைத் துண்டிக்கா விட்டால் எம் கணவரின் ஆத்மா அமைதியுறாது. விடுங்கள் என்னை என்று திமிறினாள் அவள்.

தபாரு… சாருக்கு பல்லு கொஞ்சம் பெரிசுதான். அதுக்காக வாய்க்கு வாய் அவரைப் பல்லவன்னு சொன்னா மிதிபடுவ.. என்று ரங்கு அலற, அவள் அவன் கையை உதற, பொடியன் இப்போது அவளைப் பிடிக்க உதவிக்கு வர, உங்களுக்கு அறிவே கெடையாதா? செல்லை எடுத்து போலீசைக் கூப்புடுங்க.. என்று சபிதா அலற, ரமேஷ், அதிவேகமாக செல்லைக் கையிலெடுத்து டயல் செய்யத் தொடங்க.. ஸ்டாப் இட். டயல் பண்ணாதீங்க சார்… என்று வாசலில் அதிகாரமான ஒரு குரல் கேட்டது. ரமேஷ் நிமிர்ந்து பார்க்க, மற்றவர்கள் திரும்பிப் பார்க்க, அங்கே காவி நின்றிருந்தான்.

காரைக்குடி வினாயகராஜன் என்கிற அவன் பெயரை முழுதாகச் சொன்னால் அனைவரும் ‘ழே‘ என்றுதான் விழிப்பார்கள். ஆனால் பெயரின் முதலிரண்டு எழுததுக்களைக் கோர்த்து அவன் வைத்துக் கொண்டிருக்கும் காவி என்கிற பெயரானது ஜகப்பிரசித்தம். டேய் காவி, எப்படா காரைக்குடிலருந்து வந்த..? இங்க என்ன நடக்குது தெரியுமா…? என்று ஆரம்பித்த ரமேஷைக் கையமர்த்தினான் காவி. இந்த சீனுக்கு நான்தான் சார் டைரக்டர். எனக்குத் தெரியாதா என்ன..? டேய், ரங்கு… அவள விடுடா. இதான் சாக்குன்னு அமுக்காத. அவ என் அடுத்த குறும்பட ஹீரோயின் வினோதினி என்றான் காவி. ஹாய் அங்க்கிள் என்றது அந்த வினோதினி. என்ன.. குறும்படமா… கதாநாயகியா…? என்று துண்டு துண்டாய் வியந்த ரமேஷிடம் விளக்கினான் காவி.

என் அடுத்த குறும்படத்தோட சப்ஜெக்டே வினோதமா ஒரு கேரக்டர் வீட்ல புகுந்து அட்டகாசம் பண்ணா வீட்ல இருக்கறவங்களோட ஆக்டிவிடீஸ் என்னவா இருக்கும்ங்கறதுதான். நேத்து ஈவினிங் இந்தப் பொண்ணை ஹீரோயினா பிக்ஸ் பண்ணப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. ரிகர்சல்னு தனியா வெக்காம ப்ராக்டிகலாவே பண்ணிப் பாத்தா என்னன்னு மனசுல பட்டதும் உங்க நெனைப்புதான் வந்துச்சு. நான் மறைஞ்சு நின்னு உங்க ரெண்டு பேரோட எக்ஸ்பிரஷனையும் கவனிச்சுட்டிருந்தேன். இவங்க ரெண்டு பேரும் குறுக்க வருவாங்கன்றது நான் எதிர்பாக்காதது…. ஹி.. ஹி… ஹி. ஸாரி ஸார்… என்றான் காவி.

கடைசில எல்லாம் உங்க வேலையா காவியண்ணா? என்று சபிதா சிரிக்க, கடைசில இல்லம்மா.. ஆரம்பத்துலருந்தே என் வேலைதான் என்று காவியும் சிரிக்க, அதைக் கண்டு கடுப்பாகி, அடேய் குறும்படம் எடுக்கற குரங்குப்பயலே… (நன்றி: ரா.பார்த்திபன்) நீ காவியே இல்லடா… பாவி, படுபாவி!! என்று பல்லைக் கடித்துக் கையை ஓங்கியபடி ராஜரமேஷ் காவியை அடிக்கப் பாய, கூடவே பாய்ந்தனர் ரங்குவும், பொடியனும்.


பி.கு. : இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனைக் கதைதான் மக்களே... உங்களுக்குத் தெரிந்த நபர்களை கதை மாந்தர்களாக நீங்களே கற்பனை செய்து கொண்டு படித்தால் அதற்குக் கம்பெனி பொறுப்பில்லை..!!

Wednesday, July 22, 2015

ர்... ரா.. ராதிகா மிஸ்..!!!

Posted by பால கணேஷ் Wednesday, July 22, 2015
கார்த்திக் சரவணன் என்கிற ஸ்கூல்பையன் நேற்று முன்தினம் தன் தளத்தில் ஷர்மிலி மிஸ் என்று ஒரு அனுபவக் கதையை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியை எழுதி ஷர்மிலி மிஸ்! என் பொண்ண ஏன் அடிச்சீங்க? என்று ஒரு பதிவை நேற்று வெளியிட்டிருந்தார் நம்ம டி.என்.முரளிதரன். கூடவே குறும்படம் எடுக்கிற பதிவர்கள் இதைப் பயன்படுத்தவும்னு கோரிக்கையும் வெச்சிருந்தாரு. அதைப் பார்த்ததுமே குறும்பு பண்ற என் புத்தி, இதை வேற ஸ்டைல்ல எழுதியே ஆகணும்னு அடம் புடிச்சது. விளைவு... இப்ப நீங்க படிக்கப் போற ‘ராதிகா மிஸ்’.

ராதிகா மிஸ்ஸை உடனே பார்த்து, அவள் கன்னத்தில் ‘ரப்’பென்று ஒரு அறை விடவேண்டும் போல கோபம் பொங்கிக் கொண்டிருந்தது எனக்குள். அதைப் பற்றிச் சொல்வதற்கு முன் ராதிகா மிஸ்ஸை நீங்கள் சந்திக்க வேண்டும். என் மகளை நேரடியாக எல்.கே.ஜியில் சேர்க்கச் சென்ற போதுதான் ராதிகா மிஸ் எனக்கு அறிமுகமானாள். இரண்டு குண்டு பன்களை ஒட்ட வைத்தது போன்ற கன்னம், ஜெய்சங்கருக்கிருப்பது போன்ற சின்னக் கண்கள், அதற்குப் பொருந்தாத பெரிய கண்ணாடி, அறிவின் அடையாளமாய் பரந்த நெற்றி, தடித்த உதடுகள், குள்ளமான, குண்டான உருவம் என்று மொத்தமாக அவளைப் பார்த்த போது சற்றே பெரிய சைஸ் பூசணிக்காய் கை கால் முளைத்து வந்தது போல் தோற்றமளித்தாள். தன் கையிலிருந்த லிஸ்டைப் பார்த்துவிட்டு ‘‘உங்க பொண்ணு பேர் என்ன மாநந்தியா..?’’ என்று கேட்டாள். நான் திடுக்கிட்டுப் போய் அவள் கையிலிருந்த லிஸ்டை எட்டிப் பார்த்தேன். 

‘‘சரியாப் போச்சு போங்க... எம்.ஆனந்திங்க அது. என் பேர் முரளி’’ என்றேன். ‘‘ஆபீஸ்ல இருக்கறவங்க புள்ளி வெக்க மறந்துட்டாங்க போல. ஸாரி ஸார்’’ என்று சிறிதும் வருந்தாத குரலில் கூறி இலவச இணைப்பாக குமரிமுத்துவின் சிரிப்பை ஆல்டர் செய்தது போலச் சிரித்தாள். நான் கடுப்பாகி, ‘‘என் பக்கத்து வீட்டு மூவேந்தன் தன் பொண்ணு தேவிய இங்க சேக்கலாம்னு இருந்தான். நல்லவேளை... வேற ஸ்கூலுக்குப் போய்ட்டான்..’’ என்க, நான் சொன்னது புரியாமல் ‘ழே‘ என்று விழித்தபடி நின்றிருந்தாள். தலையிலடித்துக் கொண்டு வீடு திரும்பினேன்.

என்ன அவசரமாக இருந்தாலும் என் மகளைப் பள்ளியில் விடுவது நான்தான். அதை மட்டும் அவளுக்கு விட்டுத்தரவே மாட்டேன். மாலையில் போய் அழைத்து வருவது என் மனைவி ஜெயாதான். குழந்தைகள் வகுப்பு முடிந்து வருவதற்குள் பாகுபலியின் பிரம்மாண்டத்திலிருந்து மெகாசீரியலின் வில்லிகள் வரை எல்லா சப்ஜெட்டுகளையும் அலசி முடித்திருப்பார்கள் அங்கு காத்திருக்கும் தாய்மார்கள். இப்படி என் மனைவிக்கு நிறையத் தோழிகள் அங்கே. எப்போதாவது மற்ற சப்ஜெக்ட்டுகள் போரடித்தால் குழந்தைகளின் படிப்பு பற்றியும் பேசிக் கொள்வார்கள் நேரிலும் சிலசமயம் கைபேசி மூலமும். 

இப்படி நான் நினைத்திருந்தது மகாத்தப்பு என்பது அலுவலகத்துக்கு மட்டம் போட்ட ஒரு தினத்தின் மாலையில் ஆனந்தியை அழைத்துவரப் போயிருந்தபோது தெரிந்தது. மகள் வரும்வரை கைபேசியில் முகநுலில் திரிந்து கொண்டிருந்த எனக்குப் பின்னால் அவர்கள் மெல்லிய குரலில் பேசியது கேட்டது. ‘‘ஏய்.. அவர்தாண்டி ஜெயா வீட்டுக்காரர்..’’ ‘‘இவரா..?’’ ‘‘ஆமாடி. எப்பப் பாரு ஃபேஸ்புக்ல மேஞ்சுட்டிருப்பாருன்னு சொன்னால்ல..?’’ ‘‘கதைல்லாம் எழுதுவாருன்னு சொன்னா. ஆளப் பாத்தா சேட்டு வீட்டுப் பிள்ளை மாதிரில்ல இருக்காரு...’’ ‘‘மெதுவாப் பேசுடி. காதுல விழுந்துரப் போவுது.’’ ‘‘அதெல்லாம் விழாது. நாளைக்கு நீ ஜெயாட்ட நான் இப்டிச் சொன்னேன்னு மாட்டிவுடாம இருந்தாச் சரி..’’ திரும்பி, பேசியவளை முறைக்கலாம் என்று ஆசை துடித்தாலும், வாலண்டியரா வண்டில ஏறாதடா என்று அறிவு தடுத்ததால் பேசாமல் ஆனந்தியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினேன். அன்றிலிருந்து வீட்டில் சும்மாவே இருந்தாலும்கூட மகளை அழைத்துவர நான் போவதில்லை. ஹி.. ஹி... 

நான் சொல்லவந்தது ராதிகா மிஸ்ஸின் மீது எனக்கு வந்த கோபம் பற்றித்தான் இல்லை..? அதைப் பேசலாம். இரண்டு நாட்களுக்கு முன் நான் ஏகப்பட்ட ஆணிகள் பிடுங்கிய அலுப்பில் அலுவலகத்திலிருந்து வந்து உடை மாற்றுவதற்கு முன்பே, ‘‘அப்பா, ஸ்கூல்ல என்னை மிஸ் அடிச்சுட்டாங்க..’’ என்றாள். ‘‘நீ க்யூட் பேபி இல்லையா...? அதான் கிஸ் அடிச்சிருப்பாங்க. விடும்மா..’’ என்றேன். ‘‘ஐயோ அப்பா.. மிஸ்... மிஸ்... அடிச்சுட்டாங்கன்னு சொல்றேன்..’’ என்றாள் சலிப்பாக. ‘‘அவ யார் அடிக்க?’’ என்று நான் கேட்க, ‘‘இவ என்ன செஞ்சான்னு கேளுங்க மொதல்ல’’ என்றாள் ஜெயா. ‘‘நீ என்ன செஞ்ச கண்ணூ?’’ ‘‘மிஸ் உக்கார வெச்ச எடத்துல உக்காராம மாறி உக்காந்துட்டேன்னு அடிச்சிட்டாங்கப்பா’’ 

எனக்கு கோபம் தலைக்கேறியது. என் மகள் பிறந்ததிலிருந்தே சேட்டைக்காரிதான். அடம் பிடித்து எங்களை நிறையத் தொந்தரவு செய்திருக்கிறாள். என்றாலும் ஒரு நாள் கூட அவளைக் கைநீட்டி அடித்ததில்லை, அவள் முகத்தைப் பார்த்தால் அடிக்கவும் மனசு வராது. ஸ்கூல் மிஸ், அதுவும் ரெண்டு மாசம் கூட ஆகவில்லை, அதற்குள் அவளுக்குக் கைநீட்டுமளவு தைரியம் வந்துவிட்டதா? என் முகத்தின் கோபத்தைப் படித்த ஜெயா, ‘‘ஏன் இப்டி டென்ஷனாகறீங்க..? மிஸ் லேசாத்தான் கன்னத்துல தட்னாங்களாம். அவ அடிச்சதா சொன்னதும் பதறிட்டாங்க. உங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாங்க.’’ ‘‘அதான் மறக்காம சொல்லிட்டியாக்கும்..? ஆனந்தி என்ன நினைச்சிருப்பா? இதுக்குத்தான் அம்மா அப்பா நம்மளை அழஅழ ஸ்கூல்ல தள்றாங்க போலன்னு நினைச்சிருக்க மாட்டா? இந்த அடிக்கிற வேலையெல்லாம் வேணாம்னு அவளத் திட்டறத விட்டுட்டு எனக்கு அட்வைஸ் வந்துட்டா பெரிசா..’’ ஜெயா கூலாக ‘‘நாய்னா கடிக்கறதும், மிஸ்னா அடிக்கறதும் சகஜம்தாங்க. சின்ன வயசுல நான் வாங்காத அடியா..? விட்டுட்டு வேலயப் பாருங்க.’’ என்றாள். அதற்கு மேல் அவளை எதிர்த்துப் பேசுவது ஆபத்து என்பதை அனுபவ அறிவு உணர்த்தியதால் மவுனமானாலும், ‘இதச் சும்மா விடக்கூடாது’ என்று மனதினுள் முடிவு செய்தேன்.

றுதினம் காலை சீக்கிரமாகவே பள்ளிக்குச் சென்று விட்டேன். ஆனந்தியை வகுப்பில் அமர வைத்துவிட்டுக் காத்திருக்க, பூசணிக்காய்க்குப் பதில் காற்றில் பறந்து விடுகிற உடல்வாகில் ஒரு முருங்கைக்காய் வந்தது. ‘‘ராதிகா மிஸ்..?’’ ‘‘அவங்க லீவ் ஸார். நீங்க போங்க நான் பாத்துக்கறேன்’’ என்றது. அடுத்த தினமும் காத்திருப்பு, மு.காயின் வருகை, நான் திரும்புதல் என்று டிட்டோ. ரெண்டு நாள் பாக்காட்டா கோபத்தின் சதவீதம் குறைந்துவிடுமே என்று அதை அவ்வப்போது ஊதிவிட்டுக் கொண்டேன். மூன்றாம் தினமும் அதே மு.காய் வர, ‘‘ராதிகா மிஸ் வரலையா..? என்னாச்சு..?’’ என்று கேட்டே விட்டேன். வந்த பதில் என்னை அதிரச் செய்தது. ‘‘திடீர்னு அவங்களுக்குக் கல்யாணம் ஆய்டுச்சு சார். அதனால இன்னும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவாங்க’’ என்றது அந்தப் பெண் வெட்கமாக. ‘அதுக்கு இவ எதுக்கு வெட்கப்படணும்’ என்ற கேள்வியுடன் திரும்பி விட்டேன்.

ன்றிலிருந்து மூன்றாவது தினம் தான் ராதிகா மிஸ் வந்தாள். என்னைப் பார்த்ததுமே அடையாளம் கண்டு கொண்டாள். ‘‘நீங்க ஆனந்தியோட அப்பா இல்ல..?’’ ‘‘என் மகளை அடிச்சீங்களாமே..?’’ என்றேன் கோபத்தைக் குரலில் வரவழைத்துக் கொண்டு. ‘‘அடிக்கல்லாம் இல்ல. கொஞ்சம் குறும்பு பண்ணினா. அதான் லேசாத் தட்டினேன். அவங்கம்மாட்ட கூட ஸாரி கேட்டேனே..?’’ ‘‘நீங்க ஸாரி கேட்டா என்ன, வேஷ்டி கேட்டா என்ன.? ஆயிரக்கணக்குல பீஸ்கட்டி நாங்க குழந்தையப் படிக்க அனுப்பினா அடிப்பீங்களோ..? என்ன நெனச்சுட்டிருக்கீங்க மனசுல..?’’ முகத்தைக் கடுகடுவென மாற்றிக் கொண்டு கோபமாக நான் இரைய, கையைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள் ராதிகா மிஸ். பயந்துவிட்டாள் போலும்! 

‘‘குழந்தை தப்பு பண்ணா எங்ககிட்டதான் சொல்லணுமே தவிர நீங்க அடிக்கக் கூடாது. குழந்தைகளை அடிக்கறதுக்குப் பெத்தவங்களுக்கே உரிமை இல்லைங்கறப்ப நீங்க எப்படி அடிக்கலாம்? சைல்ட் சைகாலஜியப் படிக்காமயா வேலைக்கு வந்தீங்க..? நான் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். அவர் கேக்கலைன்னா சி.இ.ஓ. கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன், உங்க வேலை போயிரும்.’’ ‘‘பெரிய கவர்மெண்ட் வேல... போங்க ஸார் வெளையாடிக்கிட்டு...’’ என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வகுப்பறையினுள் ஓடிவிட்டாள். சில விநாடிகளில் அங்கிருந்து சிரிப்பொலி கேட்க, நான் குழப்பமாக என் வாகனத்தைக் கிளப்பினேன்.

ன்றிரவு வீடு திரும்புகையில் ஆனந்திக்கு மிகப் பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக்கும், பெரிய டெடிபியர் பொம்மையையும் வாங்கி வந்திருந்தேன். வழக்கமாக என் வண்டி நிற்கும் சத்தத்துக்கே ஓடிவரும் ஆனந்தி இன்றைக்கு காணோம். சரி, கேம்ஸ்ல பிஸியா இருப்பா போல என்று நினைத்தபடி உள்ளேறினேன். காபி தந்த ஜெயாவிடம் ‘‘ஆனந்தி எங்க..? அவளுக்காக என்னல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..? அவளக் கூப்பிடு’’ என்றேன். ‘‘அதென்னமோ சாயங்காலம் ஸ்கூல்லருந்து வந்ததுலருந்தே உம்முன்னு இருக்கா. என்ன கேட்டாலும் பதிலே இல்ல. அப்டியே அடம் அப்பனைப் போல..’’ சந்தடிசாக்கில் அவள் எனக்கொரு பஞ்ச் விட, நான் ‘ழே’ என்று விழிக்க ‘வரச் சொல்றேன் இருங்க. ரொம்பதான் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சுருக்கீங்க’’ என்று அம்மாக்களின் வழக்கமான டயலாக்கை பேசிவிட்டுப் போனாள்.

அப்போதும் ஆனந்தி வரவில்லை நான் அவள் ரூமுக்குள் நுழைந்தேன். கட்டிலின் மூலையில் உம்மென்று உட்கார்ந்திருந்தது என் செல்லம்.. நான் போனதும் முகத்தை திருப்பிக் கொண்டாள். "ஏண்டா செல்லம்? என்ன கோவம் உனக்கு? .டாடி உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு... உனக்குப் புடிச்ச ப்ளாக் கரண்ட் கேக், பொம்மை.." பதிலில்லை. ஒருவேளை நான் வந்தும் அந்த குண்டு பூசணிக்காய் என் மகளைத் திட்டியிருக்குமோ..? "கண்ணூ... நான் கோவிச்சுக்கிட்டதுக்காக மிஸ் உன்னைத் திட்டினாங்களா..? சொல்றா.. அவள ஒரு வழி பண்ணிடறேன். என்ன நெனச்சுட்டிருக்கா அவ மனசுல..?" என்றபடி அவள் கையில் பொம்மையைத் தர கோபத்துடன் தூக்கி எறிந்தாள் ஆனந்தி. 

‘‘போங்க டாடி.. உங்களை யார் காலைல மிஸ்ஸைத் திட்டச் சொன்னது..? உங்களால எனக்கு பெரிய இன்சல்ட்டாப் போச்சு’’ என்றாள் கோபமாக. ‘‘இன்சல்ட்டா..? என்னம்மா சொல்ற..?’’ நான் வழக்கம்போல பாக்யராஜ் முழி முழிக்க, அவளே தொடர்ந்தாள். ‘‘அமுல் பேபி மாதிரி உங்க மூஞ்சி இருக்காம். அதுல நீங்க கஷ்டப்பட்டு கோவத்தை வரவழைச்சுகிட்டதப் பாத்ததும் ராதிகா மிஸ்க்கு சிரிப்பை அடக்க முடியலையாம். கையால வாயப் பொத்தி கஷ்டப்பட்டு அடக்கிருந்திருக்காங்க. நீங்க போனதும் க்ளாசுக்குள்ள வந்து விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அவங்க சொன்னதக் கேட்டு என் ப்ரண்ட்ஸ்லாம் கூடச் சிரிச்சுட்டாங்க. எனக்கு அவமானமாப் போச்சு தெரியுமா..’’ என்று அவள் கோபமாகச் சொல்ல, நான் திகைத்தேன். ‘ழே’ என்று விழித்தேன். அடிப்பாவி... நான் குண்டுப் பூசணிக்காய் என்று அவளுக்குப் பட்டப் பெயர் வைத்தால் இப்படியா எனக்கு அமுல்பேபி என்று பட்டப் பெயர் வைத்து குழந்தைப் பிள்ளைகள் முன்னால் மானத்தை வாங்குவாள்..? அவ்வ்வ்வ்... ‘இனி ஆனந்தியை பள்ளியில் விடப் போனால் தலையில் போட்ட ஹெல்மெட்டைக் கழற்றாமல் அப்படியே திரும்பி ஓடி வந்துவிடத்தான் வேணும்.’ மனதிற்குள் சொல்லியபடியே திரும்ப, அறை வாசலில் நின்று என்னைக் கேலியாகப் பார்த்த ஜெயாவின் பார்வையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை..!!!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube