Showing posts with label வலைச்சரம். Show all posts
Showing posts with label வலைச்சரம். Show all posts

Wednesday, December 4, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 3

Posted by பால கணேஷ் Wednesday, December 04, 2013
ரொம்ப நாழியா காத்துண்டிருக்கேளா? ஸாரி.... தோ வந்துட்டேன்...! 

ரிதாகிட்ட அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வ்ந்த டைரக்டர், ‘‘இவங்க பேரு சரிதா"ன்னு அறிமுகப்படுத்திட்டு, சரிதாட்ட, ‘‘இவங்க பேரு ப்ரீத்தி. இவங்களோடதான் சீரியல்ல நீங்க மோதப் போறீங்க"ன்னுட்டு நகர்ந்துடறாரு. அந்தப் பொண்ணு சரிதாவைப் பார்த்து கும்பிட்டு, ‘‘நீங்க அழகா இருககீங்க ஆன்ட்டி!"ங்கறா. அவ்வளவுதான்... ஏற்கனவே கோபத்துல சிவப்பாயிட்டிருந்த சரிதாவோட முகம் நெருப்பாட்டம் சிவந்துடறது.

‘‘என்னது....? ஆன்ட்டியா? விட்டா பாட்டின்னுவ போலருக்கே...! தோ பாரும்மா... ஒண்ணு அக்கான்னு கூப்பிடு, இல்லன்னா ஸே மேடம்...!"ன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டு கோபமா சொல்றா. அவளானா கொஞ்சமும் அலட்டிக்காம, ‘‘போங்க ஆன்ட்டி! ரொம்ப தமாஷ் நீங்க... இதுக்கெல்லாம் கோபப்பட்டுக்கிட்டு..."ன்னு உரிமையா சரிதாவோட கன்னத்துல ஒரு தட்டு தட்டிட்டு நகர்றா. அதே கோபத்தோட சரிதா, நம்மாளு பக்கம் திரும்ப... அவன் மெதுவா எஸ்கேப்பாயிடறான். இது மாதிரி சமயங்கள்ல எப்படித் தப்பிக்கறதுன்னு பிள்ளையாண்டானுக்கு அத்துபடியில்லியோ... ஹா... ஹா...!

ஷாட் ரெடின்னுட்டு அசிஸ்டெண்ட் டைரக்டர் கூப்பிடவும் சரிதா போறா. நம்மாளு ஹாயா, ஒரு சேர்ல உக்காந்துண்டு ஷுட்டிங்கை வேடிக்கை பாக்கறான். டைரக்டர், ‘‘ப்ரீத்தி, நீங்க சரிதா மேடத்தப் பாத்து, ‘யாரு ஜெயிக்கறாங்கன்னு பாத்துடலாம்னு" சொல்லி சிரிக்கறீங்க. சரிதா மேடம், நீங்க ப்ரீத்திகிட்ட, ‘யார்கிட்டடி கொக்க
ரிக்கறே?"ன்னு கேட்டு பளார்ன்னு கன்னத்துல அறையறீங்க. புரிஞ்சுதா...?" அப்படின்னு சொல்லிட்டு, ‘‘ரெடி டேக்..."குங்கறார். ப்ரீத்தி அவளோட டயலாக்கைப் பேசி முடிக்கவும், சரிதா ‘‘யாருகிட்டடி கொக்கரைக்கறே?"ன்னு கேட்டுட்டு அவ கன்னத்துல பளார்னு அறையறா.

‘‘கட்... கட்...'ன்னு கத்திட்டு டைரக்டர் வேகமா பக்கத்துல வர்றாரு. ‘‘மேடம்... கொக்கரைக்கறே இல்ல... கொக்கரிக்கறன்னு கேக்கணும். பாத்துப் பண்ணுங்க... ஒன் மோர் ஷாட்" அப்படிங்கறாரு. ‘‘ஸார்..."ன்னு பரிதாபமா குரல் கொடுக்கறா ப்ரீத்தி. ‘‘என்னம்மா?"ன்னு கேக்கற டைரக்டர் கிட்ட, ‘‘இந்த ஆன்ட்டி நடிக்கற இன்ட்ரஸ்ட்ல நிஜமாவே கன்னத்துல அறைஞ்சுட்டாங்க ஸார்..."ன்னு பாவமாச் சொல்றா. ‘‘மேடம்... பாத்துப் பண்ணுங்க..."ன்னு மறுபடி சொல்லிட்டு டைரக்டர் கேமரா பின்னால போய் நின்னுண்டு ‘‘ஸ்டார்ட் கேமரா"ங்கறார்.

இப்போ... மறுபடி அதே மாதிரி ‘‘யார்கிட்டடி கொக்கரைக்கறே?'ன்னு கரெக்டா தப்பாப் பேசிட்டு, திரும்ப அந்தப் பொண்ணை ஒரு ‘பளார்' விடறா சரிதா. ‘‘கட்... கட்..."ன்னு கோவமா கத்தின டைரக்டர் சரிதாட்ட வந்து, ‘‘அரைக்கறது இல்லம்மா... அரிக்குது... அரிக்குது..."ன்னு பலமா கத்தறாரு. ‘‘போங்க ஸார்... அரிக்குதுன்னா சொரிஞ்சுக்கறத விட்டுட்டு என்கிட்ட வந்து சொல்றீங்க?"ன்னு சரிதாவானா வெக்கப்படறா.

அதப் பாத்ததுமே டைரக்டரோட பி.பி. கன்னாபின்னான்னு எகிறிப் போய்டறது போங்கோ... ‘‘அரிக்கறதுன்னு சொல்லலைம்மா. நீங்க பேசவேண்டியது கொக்கரிக்கறதுன்னு. திரும்பத் திரும்ப கொக்கரைக்கறதுன்னே பேசறீங்க. கொக்கைல்லாம் யாரும் அரைக்க முடியாதும்மா... இதான் லாஸ்ட். இந்தத் தடவை நீங்க சரியாப் பேசலைன்னா... நாளைக்கு எடுத்துக்கலாம் இந்த சீனை"ன்னு எரிஞ்சு விழுந்துட்டு, அந்தப் பக்கம் நகர்றாரு.

வேடிக்கை பாத்துண்டு இருககற நம்ம கதாநாயகனுக்கு அந்தப் பொண்ணு ப்ரீத்தியப் பாக்கவே பாவமா இருக்கு. சரிதாட்ட அறை வாங்கினா எப்படி வலிக்கும்னு அனுபவபூர்வமா நேக்கும், உங்களுக்குமா தெரியும்...? அவனுக்கில்ல தெரியும்! அந்தப் பொண்ணை இப்ப ரொம்ப பரிதாபமாப் பாக்கறான். அதைப் பாத்ததுமே சரிதாவோட முகத்துல கோபத்தோட வால்யூம் ஜாஸ்தியாறது. மறுபடி டைரக்டர் டேக் எடுக்க... அவரோட பொறுமையையும், ப்ரீத்தயோட கன்னத்தையும் ரொம்பவே சரிதா சோதிக்க, ஏழாவது டேக்ல சரியாப் பேசிடறா. ‘‘கட்... கட்..."ன்னு குரல் கொடுத்த டைரக்டர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில அட் எ டைம் ஆறு காளைய அடக்கினவர் மாதிரி பெருமூச்சு விட்டுக்கிட்டு வந்து நம்ம கதாநாயகன் பக்கத்துல இருக்கற சேர்ல சரியறாரு.

சரிதா பவ்யமா அவர் பக்கத்துல வந்து நின்னுண்டு, ‘‘நாளைக்கு எப்ப, எங்க வரணும் ஸார்?"ன்னு கேக்கறா. அவரானா அவசர அவசரமா, ‘‘அப்புறமா ஃபோன் பண்ணிச் சொல்றேம்மா... இப்ப நீங்க கிளம்புங்கோ"ங்கறார். கார்ல திரும்பி வரும்போது நம்மாளு சரிதாட்ட கேக்கறான்: ‘‘ஏம்மா... சொல்றதை திருப்பிச் சொல்லத் தெரியாத அளவுக்கு நீ மோசமில்லன்னு நேக்கு நன்னாவே தெரியும். அப்புறம் ஏன் அப்படி ஏகப்பட்ட டேக் வாங்கி இழுத்தடிச்சே.?"ன்னு கேக்கவும், சரிதா கோவமா அவனோட கொமட்டுலயே குத்தறா. ‘‘தெரியாத மாதிரி கேக்கறதப் பாரு... அவகிட்ட நீங்க வழிஞ்சதே என்னால தாங்க முடியல. பத்தாததுக்கு அவ வேற ஆன்ட்டி ஆன்ட்டின்னு கூப்பிட்டு ரொம்பத்தான் எரிச்சல் பண்ணிட்டா. இதான் சாக்குன்னு ஷாட்டுல நடிக்கற சாக்குல நல்லா மொத்திட்டேன்..."ன்னுட்டு ஹா... ஹா...ன்னு பலமாச் சிரிக்கறா.

‘‘நல்ல காரியம் பண்ணினே போ... எனக்கென்னவோ அந்த டைரக்டர் மறுபடி உன்னை நடிக்கக் கூப்பிடுவாருன்னு தோணலம்மா..."ன்னு நம்ம கதாநாயகன் சொல்றதுக்கு, ‘‘கூப்பிட்டாம இருக்க முடியாதே... சீரியல் எபிஸோட் உடனே குடுத்தாகணுமாம், டைமில்லைன்னு டைரக்டர் அவர் அசிஸ்டண்ட் கிட்ட பேசிட்டிருந்ததைக் கேட்டேனே..." அப்படின்னு குதூகலமாத்தானே சொல்றா. நம்மாளு அதுக்கு மேல ஆர்க்யூ பண்ணினா வம்புதானே வந்து சேரும்னுட்டு காருக்கு வெளில பராக்குப் பாக்கற மாதிரி திரும்பிக்கறான். ஆனா... விதியோட விளையாட்டப் பாத்தேளோ... அவன் சொன்ன மாதிரியே நடந்துடுத்து.

அந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்ல தான் நடிச்சதை எல்லார்ட்டயும் போன் பண்ணிச் சொல்லிப பீத்திக்கறா சரிதா. அதோட நிக்காம... அந்த எபிஸோட் ப்ராட்காஸ்ட் ஆனப்ப அதை ரிகார்டும் பண்ணி திரும்பத் திரும்பப் பாத்து ரசிக்கறா. அதை பாக்க வெச்சு நம்ம ஹீரோவையும் சோதிக்கறா. ஆச்சு... ஒரு வாரம் முடிஞ்சுடுச்சு. சீரியல் கம்பெனிலருந்து போனக் காணலை. அடுத்த வாரம் வரை வெய்ட் பணணிப் பாத்துட்டு சரிதா அந்த டைரக்டருக்கு போன் பண்ணினா... ‘‘ஸார்... மறுபடி எப்ப நடிக்க வரணும்னு சொல்றேன்னேளே..."ன்னு இழுக்க, ‘‘அம்மா தாயி, ஆள விடுஙக... இந்த வாரம் சீரியல்ல வேற ஒரு நடிகைய நடிக்க வெச்சுட்டு அவருக்குப் பதில் இவர்ன்னு உங்க படத்தையும் அவ படத்தையும் காட்டி கதைய நகர்த்திட்டேன். இன்னும் ரெண்டு நாள்ல நடிச்சதுக்கு செக் வந்துரும். ரொம்ப தாங்க்ஸ்ம்மா"ங்கறார்.

சொத்தைக் கடலைய மென்னுட்ட மாதிரி ஆயிடறது சரிதாவோட மூஞ்சி! செல்போனைத்தானே அவ கட் பண்ணிட்டு நம்மாளைப் பாக்கவும், எதிர் முனைல என்ன சொல்லியிருப்பாங்கன்னு ஊகிச்சுட்ட அவன் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கறான். அதப் பாத்ததும் சரிதா கோவமாயி, முகவாயத் தோள்ல இடிச்சுட்டு உள்ள போறா. இதனால லோகத்துல உள்ளவா எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னன்னா... நம்மளை மாதிரி மிடில் கிளாஸ் குடும்பத்துல உள்ளவாள்ளாம் சீரியலைப் பாத்து (அழுது) ரசிக்கணுமே தவிர, நடிககணும்னு ஆசைப்படப் படாதுங்கறதுதான். இம்புட்டு நேரம் என்னோட காலட்சேபத்தை பொறுமையாக் கேட்டவாளும், அடுத்த கச்சேரிக்கு அழைப்புக் குடுக்கலாமா இவருக்குன்னு யோசிக்கறவாளும் எந்தக் குறையும் இல்லாம குடும்பம், பிள்ளை குட்டிகளோட க்ஷேமமா இருக்கணும்! இப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன். வரட்டுமா....


இனறு வலைச்சரத்தில் உங்களின் மேய்ச்சல் மைதானம் படிக்க இங்கே க்ளிக்கவும்!

Tuesday, December 3, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 2

Posted by பால கணேஷ் Tuesday, December 03, 2013
நான் வர்றதுக்குச் சித்த நாழி கூடவே ஆயிட்டாலும்கூட, கச்சேரியத் தொடர்ந்து கேக்கறதுக்கு ஆர்வத்தோட காத்திருக்கற உங்களுக்கெல்லாம் வணக்கம். அப்புறம் என்னாச்சுன்னா...

 வாசனோட தொணப்பல் தாங்க முடியாத நம்மாளு சரிதாவை பரிதாபமாப் பாக்க... ‘‘ஹும்...! நீங்க ஆரம்பிச்சாச்சு. அவன் சின்னப் புள்ளைலருந்தே அடம் புடிசசா சாதிக்காம விடமாட்டான். அப்புறமென்ன... சொல்லித் தொலையுங்கோ..."ன்னு சலிப்பாத்தானே சொல்றா. நம்மாளு மனசுக்குள்ள தானே சிரிச்சுண்டு, மேலுக்கு சாதுவா முகத்தை வெச்சண்டு வாசன்கிட்ட அந்தக் கதையச் சொல்றான். ‘‘அதையேண்டா கேக்கற... பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால கப்ஸி உங்கள் சாய்ஸ்ன்னு ஒரு ப்ரொகிராம் ரொம்பவே ஃபேமஸ்! அதுக்கு டயல் பண்ணிப் பேசறவால்லாம் தவறாம, ‘மேடம்.... நீங்க ரொம்ப அழகா இருககீங்க’ன்னுட்டு வழியுவா."

‘‘தெரியும் அத்திம்பேர். அந்த ப்ரொகிராம் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன்áங்கறான் வாசன். ‘‘அதேதான்... அதுல தன்னோட குரலும் கேக்கணும்னு உங்கக்காக்கு ரொம்பத்தானே ஆசை. பல மாசமா ட்ரை பண்ணிண்டிருந்தா. லைன்ல வெயிட்டிங் போட்டு கட் பண்ணி டெலிபோன் பில்தான் ஏறித்தே தவிர, இவ பேசினபாடில்ல... கடைசில ஒரு நாள் லைன் கிடைச்சிட்டுது. இவ என்ன பேசினா தெரியுமோன்னோ..."ன்னு கப்ஸி ரமா, சரிதா குரல்கள்ல நடிச்சே காட்டறான் நம்ம கதாநாயகன்.

‘‘ஹலோ... கப்ஸி ரமாங்களா...? நீங்களேதானா....? ஹை! எனக்கு லைன் கிடைச்சிருச்சு!"

‘‘சொல்லுங்க மேடம்...! எங்கருந்து பேசறீங்க? உங்க பேர் என்ன?"

‘‘என் பேர் சரிதாங்க. நான் வெஸ்ட் மாம்பலத்துலருந்து பேசறேன்... மேடம்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..."

‘‘ஓ...! தாங்க்யூ! சொல்லுங்க சரிதா. நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? உங்க ஹஸ்பெண்ட் என்னவா இருக்காரு? உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க?"

‘‘நான் ஹவுஸ் வைஃபா இருக்கேன் மேடம். என் வீட்டுக்காரர் பத்திரிகைத் துறையில இருக்காரு. ரீசன்ட்டாதான் கல்யாணமாச்சு மேடம்! இதுவரைக்கும் குழந்தைங்க இல்லிங்க..."

‘‘ஓ...! சீக்கிரமா கிடைக்கட்டும்னு வாழ்த்தறேன். அப்புறம் சொல்லுங்க சரிதா... உங்களுக்கு என்ன பாட்டு போடணும்?"

‘‘ஏதோ ஒரு பாட்டு போடுங்க மேடம்..."

‘‘நீங்கதான் டயல் பண்ணியிருக்கீங்க. உங்களுக்குப் பிடிச்ச பாட்டுத்தான் கப்ஸி உங்கள் சாய்ஸ்ல போடுவோம் சரிதா. அதனால நீங்களே சொல்லுங்க என்ன பாட்டுப் போடணும்?"

‘‘அதான் சொன்னேனே மேடம்... ஏதோ ஒரு பாட்டு போடுங்கன்னு..."

‘‘எனக்குப் பிடிச்ச ஏதோ ஒரு பாட்டப் போடணும்னு சொல்றீங்களா? இல்லீங்க... இன்னும் நிறைய நேயர்கள் பேசணும்னு காத்திண்டிருக்கா. சீக்கிரம் சொல்லுங்க சரிதா மேடம்...! எந்தப் படத்துலருந்து என்ன பாட்டு போடணும்னு..."

‘‘அதான் சொன்னேனே மேடம்... ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துலருந்து ‘ஏதோ ஒரு பாட்டு' போடுங்கன்னு..."

‘‘அவ்வ்வ்வ்வ்! பாட்டு பேரையா ஏதோ ஒரு பாட்டுன்னு சொன்னீங்க? சரிங்க.. இப்ப நீங்க கேட்ட ஏதோ ஒரு பாட்டு வருது --அப்படின்னு சொல்றப்ப கப்ஸி ரமாவோட முகம் போன போக்கையும், அவங்க மைல்டா அழுததையும் நீ பாத்திருக்கணுமே..."ன்னு சொல்லிட்டு கபகபன்னு சிரிக்கிறான் நம்மாளு. இப்ப இதைக் கேட்டதும் வாசனும் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரிச்சுடறான். சரிதா முகத்துல எள்ளு + கொள்ளு வெடிக்க... ‘‘சரி... சரி... ரொம்பத்தான்.... பல்லு சுளுக்கிக்கப் போறது. இதோ பாருங்கோ... வர்ற சனிக்கிழமைலருந்து ஷுட்டிங் ஆரம்பிக்கறதா சொல்லி வரச் சொல்லியிருக்காரு டைரக்டர். அதனால சனிக்கிழமை காலம்பற எட்டு மணிக்கெல்லாம் தயாராயிடுங்கோ... நாம போறோம்..."ன்னு சத்தம் போட்டுட்டு உள்ள போறா சரிதா.

சனிக்கிழமை காலம்பறவே பரபரப்பா தானும் எழுந்து, ஆத்துக்காரனையும் எழுப்பி துள்ளிக் குதிச்சுண்டு தயாராகறா சரிதா. போரூர் தாண்டி ஒரு பங்களால ஷுட்டிங்குங்கறதால எட்டு மணிக்கே கௌம்பி, சரியா பத்து மணிக்கெல்லாம் அங்க போய்ச் சேர்ந்துடறா. அங்க டைரக்டர் சிவகங்கை சிவனாண்டி காத்திண்டிருககார். அவர் டி.வி. சீரியல்ல புரட்சி பண்ணினவார். அதாவது... கண்ணீரும் அழுகையுமா வந்துட்டிருந்த சீரியல்கள்ல 80கள்ல வந்த சினிமா மாதிரி ‘டுஹாய் டுஹாய்'ன்னு கத்திக்கிட்டே பறந்து பறந்து போடற சண்டைகளையும், கார், வேன் சேஸிங்குகளையும் அறிமுகப்படுத்தினவரு. ஆளு பாக்கறதுக்கு பெரிய சைஸ் காராசேவுக்கு பேண்ட் சட்டை போட்ட மாதிரி (நன்றி: சந்தானம்) இருக்காரு. அந்த டைரக்டர் இவாளை நல்லவிதமாவே வெல்கம் பண்றார். ‘‘வாங்க மேடம்...! உங்களோட கேரக்டரைப் பத்தி மொதல்ல சொல்லிடறேன். ஒரு குடும்பத்துல மூத்த மருமகளா நீங்க வர்றீங்க. சின்ன மருமகள்கள் ரெண்டு பேருக்கும் உங்களுக்கும் ஆகாது. மாமியாரோட கூட்டணி வெச்சுட்டு அவங்களை மெரட்டறீங்க..."

‘‘அப்படியா? அப்புறம் என்ன ஆறது?"

‘‘சரிதான்... இவ்வளவு நேரம் கதை சொன்னதே அதிகம் மேடம்! இதை வெச்சுண்டே நூறு எபிசோட் தாண்டிருவேன். அதுக்கப்புறம் என்ன ஆறதுங்கறதை மெல்ல யோசிச்சுக்கலாம். இப்பவே என்ன அவசரம்?"ன்னு சிரிச்சுட்டு அப்பால போயிடறார் டைரக்டர். அப்புறம் கொஞ்ச நேரத்துல நடிக்கறவாள்ளாம் வந்து சேரச் சேர, கல்யாண வீடு மாதிரி ஆயிடறது அந்த பங்களா. சரிதா, ராமராஜன் மாதிரி ‘லைட்'டா மேக்கப்பிண்டுட்டு தன்னை எப்பக் கூப்பிடுவான்னு காத்துண்டிருக்கா. டைரக்டர் கூப்பிடற பாடில்லை. ‘‘ஸார்... என்னை எப்ப நடிக்க வெக்கப் போறீங்க?"ன்னு டைரக்டர் கிட்ட போய் வேற வேற மாடுலேஷன்ல அவ கேக்கறதும், ‘‘கொஞ்சம் பொறுங்க மேடம். நான் கூப்பிடறேன்"ன்னு வேற வேற மாடுலேஷன்ல அவர் சொல்றதும், சரிதா சலிச்சுக்கறதும் பாக்கறப்ப கரகாட்டக்காரன் வாழைப்பழக் காமெடியப் பாக்கற மாதிரி இருக்குது நம்மாளுக்கு. நல்லா சிரிச்சுண்டு ரசிச்சுண்டிருக்கான்.

இதுலயே லன்ச் டைமும் வந்துடறது. சும்மா சொல்லப்படாது... ஐட்டம்லாம் நல்லா இருக்கறதால... அட, சாப்பிடற ஐட்டங்களைச் சொல்றேனாக்கும் நான்... நம்ம ஹீரோ ஒரு பிடி பிடிக்கறான் - சரிதா பாக்காத நேரத்துல அசைவத்தையும்! அவளுக்கானா எப்ப நடிக்கக் கூப்பிடுவாளோங்கற படபடப்புல சாப்பாடே எறங்கலை போங்கோ... கடைசியில ஒரு வழியா ரெண்டு மணிக்கு அவகிட்ட வர்ற டைரக்டர், த்ன்னோட வர்ற அழகான பொண்ணை அவளுக்கு அறிமுகப்படுத்தறார். ‘‘அடுத்த ஷாட் உங்களோடதுதான் மேடம்! இவங்கதான் ரெண்டாவது மருமகளா நடிக்கப் போறாங்க. இவங்களோட நீங்க சண்டை போடற சீனை முதல்ல எடுக்கப் போறோம்"ன்னு சொல்லிட்டு, தன் அசிஸ்டெண்ட் கிட்ட டயலாக் சொல்லித்தரச் சொல்லிட்டு அப்பால போறாரு.

அந்த அழகான பொண்ணைப் பக்கத்துல பாத்ததும் நம்ம ஹீரோ புள்ளையாண்டான் முகம் பிரகாசமாயிடறது. கண்ணு ரெண்டும் பல்பு மாதிரி மின்னுது. அதைப் பார்த்து நறநறன்னு பல்லைக் கடிக்கறா சரிதா. அந்தப் பொண்ணோட சண்டை போடற மூடு அப்பவே ஸ்டார்ட்டாயிடுச்சு அவளுக்கு. ஏற்கனவே சரிதாங்கற நெருப்பு எரிய ஆரம்பிச்சுட்டதைத் தெரியாம, அதுல கொஞ்சம் பெட்ரோலையும் ஊத்தறா அந்தப் பொண்ணு.
   

                                                                     அப்புறம் என்ன நடந்ததுன்னு கேக்க
                                                                         நீங்க ரெடியா இருந்தாலும் நேக்கு லேசா
                                                                         வயத்தைக் கலக்கறது. சித்த நாழி
                                                                         பொறுங்கோ... வந்துடறேன்!

 
மின்னல் டிவியில இன்றைய நிகழ்ச்சி கொஞ்சம் காபி நிறைய இலக்கியம் படிக்க இங்கே க்ளிக்குக!

Monday, December 2, 2013

கணேச பாகவதரின் கச்சேரி - 1

Posted by பால கணேஷ் Monday, December 02, 2013
மப்பார்வதி பதயே... ஹரஹர மஹாதேவா... எல்லாருக்கும் வணக்கம். லோகத்துல எல்லாரும் க்ஷேமமா இருக்கணும், மாசம் தவறாம மழை பெய்யணும்னு வேண்டிண்டு கச்சேரிய ஆரம்பிக்கறேன். இந்தக் காலத்துல லோகத்துல புதுசு புதுசா நெறைய டி.வி. சேனல்கள் வந்துண்டிருக்கு. ஜனங்களும் சலிக்காம (சேனலை) மாத்தி மாத்திப் பாத்துண்டுதான் இருக்கா. அதுலயும் இந்தப் பொம்மனாட்டிங்க இருக்காளோல்லியோ... அவா இந்த டி.வி.யப் பாத்துட்டு... அதுலயும் குறிப்பா சீரியல்களைப் பாத்துட்டு பிழியப் பிழிய அழுது, வீட்டுல இருக்கறவாளப் படுத்தி அவங்களை அழ வெக்கறது இருக்கே... அதையே தனி சீரியலா எடுக்கணும் போங்கோ...! இப்படி டிவி சீரியலால அவதிப்பட்டு சீரியலான... ஸாரி, சீரியஸான ஒருத்தனோட கதைய இப்ப உங்களுக்கு நான் சொல்லப் போறேன்.

 தௌ கீர்த்தனாரம்பத்துல நம்ம கதாநாயகன் பாலகணேஷ் மாம்பலத்துல இருக்கற அவனோட வீட்டுல கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து எதையோ தட்டிட்டிருக்கான். அப்ப அவன் பக்கத்துல வர்ற அவனோட தர்மபத்தினி சரிதா, ‘‘என்னங்க... கண்ணை மூடிக்கிட்டு ஆ காட்டுங்க..." அப்படிஙகறா. இவ இப்படிச் சொன்னா ஏதோ விபரீதமாச்சேன்னு புள்ளையாண்டான் பயந்துண்டு, ‘‘ஆ காட்டச் சொல்றதே ஆபத்து. அதுல கண்ணை வேற மூடணுமா? எப்படிச் சாப்பிட்டாலும் நீ பண்ணின பதார்த்தத்தோட பேரை என்னால சொல்ல முடியப் போறதில்ல... அப்புறம் எதுக்கு..?"ங்கறான்.

‘‘ஹுக்கும்!’’ன்னு அவன் தோள்ல இடிச்சுட்டு, ‘‘சொன்னதைச் செய்யுங்களேன்"ன்னு அவ மிரட்டவும், அதுக்கு மேல தயங்கினா ஆபத்தாச்சேன்னு பயபக்தியா சொன்னதக் கேக்கறான் நம்ம கதாநாயகன். வாய்ல விழுந்ததைக் கடிச்சுட்டு, ‘ஆ'ன்னு அலறி கைல துப்பறான். கைல ஒரு வெள்ளையான ஒரு வஸ்துவோட சேர்ந்து வந்து விழறது அவன் கடைவாய்ப் பல்! ‘‘அடிப்பாவி...! மைசூர் பாகை இப்படியா கட்டியாப் பண்ணுவே? என்னோட ஒரு பல்லே உதிர்ந்துடுத்து பாரு உன்னால.."ன்னு அவனானா அலர்றான். அவளோ துளிக்கூட அலட்டிககாம. ‘‘மைசூர் பாகா...? நாசமாப் போச்சு! நான் பண்ணினது பாதுஷான்னா!"ங்கறா கூலா.

நம்மாளு வாயக் கொப்பளிச்சுட்டு வந்து மறுபடி சீட்டுல உக்காரப் போற நேரத்துல, ‘‘அக்கா... அத்திம்பேர் ஏன் இப்படி ‘இரண்டாம் உலகம்' படத்த ரெண்டாவது ஷோ பாத்துட்டு வந்தவர் மாதிரி ‘ழே'ன்னு முழிச்சுட்டிருக்கார்?’’ அப்படின்னு குரல் கொடுத்துட்டே உள்ள நுழையறான் சரிதாவோட தம்பி வாசன். அவனைப் பார்த்ததுமே வயத்துல புளிய... புளிய என்ன... மிளகு, உப்பு, இஞ்சின்னு சகல வஸ்துக்களையும் கரைக்கற மாதிரி இருக்கு நம்ம ஹீரோவுக்கு.

‘‘ஒரு குட் நியூஸ் சொல்றதுக்குத்தான்டா வரச் சொன்னேன். அதச் சொல்றதுக்கு முன்னால... இந்தா, இந்த ஸ்வீட்டைச் சாப்பிடு"ன்னு அவன் வாயிலயும் இவன் வாயில திணிச்ச அதே பதார்த்தத்தை திணிக்கறா சரிதா. ‘அடப் படுபாவி! சித்த முன்னால வந்திருக்கப்படாதோ’ன்னு மனசுல நெனச்சுண்டு, நம்மாளு அவனைப் பார்க்க, அவன் கடக் முடக்குன்னு கடிச்சு முழுங்கிட்டு ஏப்பம் விடறான். ‘‘ஸ்வீட் பிரமாதமாப் பண்ணியிருக்கேக்கா..." என்று அவன் சொல்லவும் தீப்பார்வையா முறைக்கறான் நம்மாளு.

‘‘சரி.. இனிமே நீ இந்த மாதிரி புதுசா பலகாரம் பண்ணினா முதல்ல இவனுக்குக் குடுத்துட்டு, (அவன் முழுசா இருந்தா&ன்னு மனசுல சொல்லிண்டு) அப்புறம் எனக்குத் தரணும். சரியா..."ன்னு அவசர ஒப்பந்தம் ஒண்ணு போடறதுக்கு இவன் முயற்சி பண்ண, ‘‘ஹும்...! குட் நியூஸ்ன்னு எந்தம்பி சொன்னானே... அது என்னன்னு கேக்கத் தோணறதா பாரு..."ன்னு (கண்ணீரே வராம) கண்ணைக் கசக்கறா சரிதா. ‘‘ஒன்னோட தம்பியப் பாத்த சந்தோஷத்துலயாக்கும் கேக்க மறந்துட்டேன். என்ன விஷயம், சொல்லும்மா..."ன்னு சமாளிக்கறான் பையன். இல்லாட்டி என்னென்ன விளைவுகள் வரும்னு நேக்கும் ஒங்களுக்கும் தெரிஞ்சதவிட அவனுக்குன்னா நன்னா தெரியும்? அவன் அப்படிக் கேக்கவுமே, சரிதா பல்லெல்லாம் வாயா சிரிச்சுண்டே, ‘‘எனக்கு மின்னல் டிவில சீரியல்ல நடிக்கற சான்ஸ் கிடைச்சிருக்கு" அப்படின்னு ஸ்லோமோஷன்ல ஒரு குண்டைத் தூக்கி இவன் மேல வீசறா.

‘‘ஐயையோ... இதென்ன விபரீதம்! நேரம் காலம் இல்லாம நீ சிரியல் பாத்துட்டு படுத்தறதே தாங்க முடியாது. நடிக்க வேற போறியா? எப்படிறீ?"ன்னு முழி பிதுங்க கேக்கறான் நம்மாளு. ‘‘அதாங்க... மின்னல் டிவில ‘டீ வித் திவ்யா' ** புரோகிராம்ல உங்களப் பேட்டியெடுக்கறதுக்காக டிவி ஸ்டேஷனுக்குப் போனோம்ல... நீங்க பேட்டி குடுத்துட்டிருந்த நேரத்துல சீரியல் டைரக்டர் சிவகங்கை சிவனாண்டியப் பாத்தேன். நான் பேசற ஸ்டைல் நன்னாயிருக்குன்னு சொல்லிட்டு அவர்தான் சீரியல்ல நடிக்கறேளான்னு கேட்டார். சரின்னுட்டேன்.."ங்கறா சரிதா.

‘‘அத்திம்பேர்... அககாவோட திறமயப் பத்தி ஒங்களுக்குத் தெரியாது. ஸ்கூல் டேஸ்லயே ட்ராமாலல்லாம் நடிச்சு கப்லாம் வாங்கிருக்கா தெரியுமோ"ன்னு அக்காக்கு சரியா ஒத்து ஊதறான் வாசன். ‘‘ட்ராமால நடிச்சாளா? என்னவா நடிச்சா?"ன்னு நம்மாளு கேக்கறதுக்கு, ‘‘கதாநாயகியோட தோழிக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கும். கதாநாயகி ஒரு மனோதத்துவ டாக்டர்ங்கறதால அவளைக் குணப்படுத்துவா... எங்கக்கா தோழி கேரக்டர்ல பைத்தியமா நடிச்சா"ங்கறான் வாசன். நம்ம கதாநாயகன் அப்பாவின்னா எப்படி ஒரு அப்பாவி பாருங்கோ... ‘‘நடிச்சிருக்க மாட்டாடா வாசன்... சும்மா வந்து இயல்பா பேசியிருப்பா. சூப்பர் நடிப்புன்னு நம்பி கப்பைக் குடுத்துட்டாங்க..." அப்படின்னு மனசுக்குள்ள நெனக்க வேண்டியதை சத்தமாச் சொல்லித் தொலைக்கறான். ‘‘ச்சீ, போங்க..." என்று கோபமாக சரிதா தன் (உலக்)கையால அவன் தலையில ஓங்கிக் குத்த... இப்ப அவனுக்குன்னா மூளை கலங்கினாப்போல ஆயிடுத்து! ஈரேழு உலகமும் நாலஞ்சு சுத்து சுத்திட்டு அப்பறமா நேராகறது அவனுக்கு! ‘ழே'ன்னு முழிக்கறான்!

அப்பறமா கொஞ்சம் சுதாரிச்சுண்டு, அப்பவும் பேமுழி முழிச்சுண்டு, ‘‘தோ பாரு சரி... இந்த மாதிரி சீரியல்ல நீ நடிக்கப் போறேன்னு சொன்னா எங்கம்மா திட்டுவா..."ன்னு அவன் ஆரம்பிக்க... ‘‘ஆமா... உங்க தங்கச்சி கால்கிலோ மேக்கப்ப முகத்துல அப்பிண்டு ஊர்கோலமா வர்றதுக்குல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டா உங்கம்மா... எனக்குன்னாத்தான் சொல்லுவாளாக்கும்..."ன்னு ஆரம்பிச்சு அவ நான் பண்றதைவிடப் பெரிசா ஒரு காலாட்சேபம் பண்ண... டோட்டலா டெபாஸிட் இழந்த வேட்பாளராட்டமா ஆயிடறான் நம்மாளு.

‘‘ஹும்...! ஒரு காலத்துல டெலிபோன்ல டிவி சேனலுக்குப் பேசி கப்ஸி ரமாவையே அழவெச்சவ நீ! இந்த டைரக்டர் உன்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போறானோ...?"ன்னு மெதுவா முனகறான. அது வாசனோட பாம்புக் காதுல சரியாப் போய் விழுந்துடறது. ‘‘அத்திம்பேர்... அது என்ன சமாச்சாரம்? நேக்குத் தெரியாதே. எங்கக்கா எப்படி கப்ஸி ரமாவை அழவெச்சான்னு சொல்லுங்கோ முதல்ல..."ன்னு தொணப்ப ஆரம்பிக்கறான். அடுத்தாத்து வம்புன்னா மட்டுமில்ல... சொந்த ஆத்துல வம்புன்னாலும் அத்தனை இன்ட்ரஸ்ட் அவனுக்கு...! இப்ப என்ன பண்றதுன்னு புரியாம சரிதாவ பரிதாபமாப் பாக்கறான் நம்மாளு.
 
                                                               அப்படி சரிதா என்னதான் பேசியிருப்பான்னு
                                                                சித்த நீங்களும் யோசிச்சிண்டிருங்கோ...
                                                                 நான் கொஞ்ச நாழில வெத்தல பாக்கு
                                                                 போட்டுண்டு மறுபடி வந்துடறேன்...!

மின்னல் டிவில நான் பங்கேற்ற ‘டீ வித் திவ்யா’ நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே க்ளிக்குங்கள்!

Sunday, May 6, 2012

பேசும் படங்கள்!

Posted by பால கணேஷ் Sunday, May 06, 2012

ஹாய்... ஹாய்... ஹாய்...
இன்னிக்கு வலைச்சரத்துல என்னுடைய பொறுப்பை முடிக்கிற தினம்கறதால நான் ரசிக்கிற பதிவர்களைப் பத்தி எழுதியிருக்கேன். இங்கே க்ளிக்கி போய்ப் படித்து ஆதரவு தாருங்கள்ன்னு கேட்டுக்கறேன். எனக்குப் பிடித்த பதிவுலக நட்புகளைக் குறிப்பிட்டதால இங்க புதுசா ஏதாவது எழுதலாம்னு உக்காந்தா மனசே வரலை. அதனால... இன்னிக்கு ஜாலியா சில படங்களைப் பாத்து ரசியுங்க. ரெண்டு நாள் கழிச்சு நான் மீண்டும் உங்களைல்லாம் சந்திக்கறேன்.

ஹய்யோ... யாராவது கை கொடுங்க‌ோளேன்..!
பிடியை விட்டுறாதடா... விழுந்தா பீஸ்தான் நீயி!
ரொம்ப ஓல்டா இருக்கானே... மார்னிங் டிஃபனுக்கே பத்தாதே!
சின்ன நூல் கண்டா என்னை சிறைப்படுத்துவது...?
எனக்கு இந்த வெயிட்டெல்லாம் சாதாரணமப்பா..!
படத்தை கொஞ்ச தூரத்திலருந்து மறுபடி பாருங்க..!
ரெண்டு நாள்னுட்டு கணேஷ் ஒரு வாரம் ‘எஸ்’ஸாயிடாம இருக்கணுமே..!

Saturday, May 5, 2012

சைலன்ட்டா சிரியுங்க..!

Posted by பால கணேஷ் Saturday, May 05, 2012


அப்புசாமியின் குறட்டை ஆட்டத்துக்குத் தொல்லை!









சீதாப்பாட்டியா கொக்கா? வெச்சாங்க அப்புவுக்கு ஆப்பு!


ஆறே மாசத்துல கோடீஸ்வரன், அள்ளி விட்டான் ‌ஜோசியன்!
அதிர்ஷ்டம் கைகொடுக்கலை! அப்புசாமி ஆனார் ஆத்திரசாமி!


போர்ட்டருக்கு கூலி தந்து கட்டுப்படியாகாதப்பா... அதனால...
ஐயோ, பாவம் அப்பு..1 ஆனாரே போர்ட்டரா...!

ன்ன ப்ரெண்ட்ஸ்... அப்புசாமித் தாத்தா - சீதாப்பாட்டியை ரசிச்சுச் சிரிச்சீஙகளா? (அட்லீஸ்ட், புன்னகை?) இப்போ இங்கே க்ளிக்கி வலைச்சரத்துல உங்களுக்காக காத்திருக்கற அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும் சந்தியுங்க. ஸீயு.

Friday, May 4, 2012

விறுவிறுப்பான போராட்டம்

Posted by பால கணேஷ் Friday, May 04, 2012

ரேந்திரன் கஞ்சி போட்ட காட்டன் துணி போல விறைப்பானான். மெதுவாக, மிக மெதுவாக பட்சி சிறகு காற்றில் மிதப்பது போல் தன்னிடத்திலிருந்து நகர்ந்தான். இடுப்பில் ரிவால்வரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

இரண்டு அறைகளையும் பிரிக்கும் தள்ளு கதவை உராய்ந்து கொண்டு சற்று நேரம் நின்றான். அப்புறம் ஷூ முனையால் கதவை மெல்ல மெல்ல நகர்த்தினான். இப்போது ரிப்பன் அளவு இடைவெளி விழ, தன கண்களை அங்கே பதித்து பக்கத்து அறையை நோட்டமிட்டான்.

நம்பிராஜன் இன்னமும் படுக்கையிலேயே இருந்தார். அவரது அருகில் ஒரு ஆசாமி நின்றிருந்தான். மிகக் குறைவான வாட் வெளிச்சத்தில் இரவு விளக்கு சதி செய்தது. நின்ற ஆளின் முகத்தை மூடி ஸ்கார்ஃப் போல ஏதோ கட்டப்பட்டிருக்க, சுலபத்தில் முக அடையாளம் புரியக் கூடாது என்ற கவனம் தெரிந்தது. உயரமாயிருந்தான். அகலமாயிருந்தான். நம்பிராஜனின் படுக்கையருகே குனிந்து-

அவரை ஏதாவது செய்துவிடப் போகிறான் என்று நரேந்திரன் தன் ரிவால்வரை கைக்கு கொண்டு வந்தான். இல்லை. அந்த ஆள் நம்பிராஜனைத் தொந்தரவு செய்யாமல், கால்களை வாத்து போல் எடுத்து வைத்து அங்கிருந்து நகர்ந்தான். சுவரில் தொங்கிய அலங்கார கடிகாரத்தை அண்டினான். அதை ஒற்றைக் கையால் கழற்றினான். இன்னொரு கையை சுவரில் செலுத்தினான். க்ளிக் என்று சிட்டிகை போடுவது போல் ஒரு ஒலி.

எதையோ எடுக்கிறான். அது இந்தக் கேஸிற்கு மிக முக்கியமானதாக இருக்கக் கூடும். அதை எடுத்துக் கொண்டு அவன் நழுவி விட்டால் ஆபத்து. நரேந்திரன் செயல்பட நிச்சயித்தான். ரிவால்வரின் ஸேஃப்டி காட்சை விடுவித்தான். க்ளக் என்ற அந்த ஒலியைக் கேட்டதும், கடிகாரத்தைக் கழற்றியவன் அப்படியே உறைந்து நின்றான்.

``அசையாதே'' என்றான் நரேந்திரன் குரலை ஏற்றாமல். ``அசைந்தால் என் துப்பாக்கி உன் முதுகை சல்லடையாக்கி விடும்.''

அந்த ஆள் கடிகாரத்தை அதன் ஆணியில் மாட்டிவிட்டு இரண்டு கைகளையும் உயரத் தூக்கி சுவரைப் பார்த்து நின்றான். அவன் இடது கையில் கசக்கப்பட்டு, சுருட்டப்பட்டு சில காகிதங்கள்.

``அதை என்னிடம் கொடு...''

நரேந்திரன் ஒவ்வொரு அடியாக முன்னேறினான். அந்தக் காகிதத்திற்காக தன் இடது கையை நீட்டினான். வலது கையில் ஸ்டெடியாக ரிவால்வர். நரேந்திரன் இன்றைக்கு நிறைய தவறுகள் செய்கிறான். பெட்ரூம் விளக்கின் ஒளி அவன் மீது படிந்து அவனுக்கு முன்னதாக அவனுடைய மசமசப்பான நிழலை சுவர் வரை கொண்டு போய் விட்டதை அவன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

கையைத் தூக்கி நின்றிருந்தவன் இந்த விஷயங்களில் தனியாக டிப்ளமா வாங்கியிருந்தான். நரேந்திரனின் நிழலை வைத்து நரேந்திரன் இரண்டடி தூரத்திற்குள் வந்ததை கணக்கிட்டதும் செயல்பட்டான்.

 அறுத்து விட்ட தேங்காய் போல சரேலென தரையில் விழுந்தான். விழுந்த அதே கணம் புரண்டு நிமிர்ந்தான். நிமிர்ந்த அதே கணம் உரம் பாய்ந்த அவனுடைய வலது கால் ஸ்ப்ரிங்கால் விடுவிக்கப்பட்டதைப் போல் உதறி நரேந்திரனின் வலது கையை உதைத்தது. சுடுவதா வேண்டாமா என்ற தயக்கமாய் இருந்த ரிவால்வர் காற்றில் டைவ் அடித்துப் பறந்தது.

இப்போது எதிரி கைகளை சுவரில் அடித்து ஊன்றி எம்பினான். நரேந்திரனின் தோளுக்கு அவன் கால் இறங்கியது. நரேந்திரன் உஷாராகி அந்தக் காலைப் பற்றி சரேலென முறுக்கி இழுத்தான். எதிரி அந்தத் தாக்குதலை எதிர்பார்த்தவன் போல் தனது வலது கையை மடக்கி, காற்றில் ஒளி வேகத்தில் பாய்ச்ச, நரேந்திரன் நகருமுன் முகவாயில் அந்த அடி இறங்கியது.

முப்படி உயரத்திலிருந்து கான்க்ரீட் தளத்தில் குப்புற விழுந்தது போல் இருந்தது நரேந்திரனுக்கு. யாரோ பல் டாக்டர் என்னால் பணக்காரர் ஆகப் போகிறார். எதிரியின் காலை விட்டுவிட்டு அவன் முகத்துக்குப் பாய்ந்தான் நரேந்திரன். முதல் ஆர்க்கில் எதிரியின் முக்காட்டுத் துணி கையோடு பிய்ந்து வந்தது. இரண்டாவது ஆர்க் போடுமுன் எதிரி தன் முழங்காலை மடித்து நரேந்திரன் மீது செலுத்தி, முதன் முறை பிசகி, இரண்டாவது முறை நெஞ்சில் கும்க் என்று பாய்ச்சினான்.

 நரேந்திரன் பக்கெட் ஆக்ஸிஜனை இழந்து கைகளை அகல விரித்தான். எதிரி இதற்காகவே தினமும் எண்ணெய் போட்டு மஸாஜ் செய்து தன் தசைகளை முறுக்கி வைத்திருந்தது போலிருந்தது. நரேந்திரன் தன் முஷ்டியை மடக்கி காற்றைக் கிழித்து எதிரியின் மூக்குக்கு குறி வைக்க, அது அவன் தாடையில் இறங்கியது. அவன் மல்லாந்து சுவரை மோதினான். உடன் நரேன் பாய்ந்து அவன் கண்களுக்குக் குறி வைத்து விரல்களைப் பாய்ச்சினான். ``நாஸர், இனி நீ தப்ப முடியாது...''

நாஸர் வெகு உன்னதமாகக் கணக்கிட்டு சரேலென தன் வாய் திறந்து நரேந்திரனின் விரல்களைக் கடித்தான். நெருப்புப் பற்ற வைத்ததுபோல் நரேந்திரன் கைகளை உதறிக் கொள்ள, நாஸர் விரித்த உள்ளங்களையை முறம் போல நரேந்திரனின் கழுத்தில் இறக்கினான். நரேந்திரன் உருண்டு புரண்டு எழுந்திருக்கும் முன், நாஸர் அந்த இடத்திலிருந்து எகிறினான். ஒரே ஜம்ப்பில் கதவை அணுகி, சரேலென வெளியே பாய்ந்து விட்டான்.

நரேந்திரன் அவனுக்குப் பின்னே பாய்ந்தான். ஆனால் அவன் ஹாலுக்குள் பிரவேசிப்பதற்குள் நாஸர் வாசல் கதவைத் தாண்டியிருந்தான். சட்டென அறைக் கதவைச் சார்த்தி அவன் வெளியில் தாளிட்டு விட, நரேந்திரன் அக்கம் பக்கம் பார்த்து, ஜன்னலைத் தேர்வு செய்து வெளியே குதித்தான். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விட்டது.

சிமெண்ட் பாதையில் காற்றைவிட வேகமாக ஓடி, திறந்த கேட் வழியே வெளியே அம்பு போல் பாய்ந்து இரண்டாவது நொடியில் சின்ன இருமலுடன் ஒரு மோட்டார் சைக்கிள் கிளம்ப, நரேந்திரன் இனி இந்த இரவில் அவனை எட்டிப் பிடிப்பது இயலாத காரியம் என்று உணர்ந்தான்.

============================================

ஃப்ரெண்ட்ஸ்! ‘சுபா’வின் துப்பறியும் நாவலில் இருந்து ஒரு விறுவிறு்ப்பான பகுதியை இங்கே படித்தீர்கள். இனி, இங்கே க்ளிக்கி வலைச்சரம் சென்று நரேந்திரன்-வைஜயந்தியை சந்தியுங்கள்!

Thursday, May 3, 2012

ஜோதிடமும், ராஜேஷ்குமாரும்!

Posted by பால கணேஷ் Thursday, May 03, 2012

கோவையில் கல்லூரி விழா ஒன்றில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் என்னிடம் ஒருவர் கேட்ட கேள்வி இது: ‌ஜோதிடத்தை நம்பலாமா? நான் சொன்ன பதில்: மனோதிடம் உள்ளவர்களுக்கு ஜோதிடம தேவையில்லை.

நான் குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது அந்தப் பக்கமாய் காரில் சென்ற நான் அவரைப் பார்த்ததும் காரை நிறுத்தினேன். ‘‘என்ன ஜானகிராமன்... பஸ்ஸுக்கா? கார்ல ஏறுங்களேன். சிட்டிக்குத்தானே போறீங்க...?’’

ஜானகிராமன் ஏறிக் கொண்டார். பதினைந்து நிமிஷப் பயணத்தில் காந்திபுரம் வந்தது. காரை நிறுத்தினேன். அவர் செல்ல வேண்டிய வீட்டுக்கு முன்பாய் சுவரில் ஒரு சிறிய போர்டு தெரிந்தது.

                              ஜோதிடபூஷணம் மாணி்க்கவேலு

(இங்கே கைரேகை, ஜாதகம், எண்கணிதம், வாஸ்து துல்லியமாய் கணித்துச் ‌சொல்லப்படும்)

‘‘நீங்களும் உள்ளே வாங்க ராஜேஷ்குமார்! ஜோதிடர் மாணிக்க வேலு உங்களைப் பார்த்தா ரொம்பவும் சந்தோஷப்படுவார்!’’ என்றார் நண்பர். மறுக்க முடியாமல் உள்ளே போனேன்.

ஜோதிடர் மாணிக்க வேலு சுமார் அறுபது வயதில் பளீரென்ற வெள்ளை வேஷ்டி, சட்டையில் நெற்றியில் சந்தனம், குங்குமம் மின்ன உட்கார்ந்திருந்தார். நண்பர் என்னை அவர்க்கு அறிமுகப்படுத்தி வைத்ததும் பெரிதும் சந்தோஷப்பட்டார். காபி வரவழைத்தார். பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டே காபி சாப்பிட்டுக் ‌கொண்டிருந்தபோது வாசல் பக்கம் ஒரு குரல் கேட்டது. ‘‘அய்யா...’’

ஜோதிடர் எட்டிப் பார்த்துவிட்டு மலர்ந்தார். ‘‘வாங்க பொன்னம்பலம்...’’ அந்த பொன்னம்பலம் உள்ளே வந்தார். கையில் ஸ்வீட் பாக்ஸ். ‘‘என்ன பொன்னம்பலம்... குழந்தை பொறந்தாச்சா?’’

‘‘ஆமாங்கய்யா... அய்யா, நீங்க பொண்ணுதான் பொறக்கும்னு சொன்னீங்க. ஆனா பையன் பொறந்து இருக்கான்...’’

‘‘நான் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். நீங்க எப்ப என்கிட்டே ஜோஸ்யம் பாக்க வந்திருந்தீங்க?’’

‘‘ரெண்டு மாசத்துக்கு முந்தி. இருப்தி ரெண்டாம் தேதி’’

‘‘இப்ப பாத்துடலாம்...’’ என்று சொன்ன ‌ஜோசியர், மேஜை டிராயரைத் திறந்து, ஒரு டைரியை எடுத்தார். புரட்டினார். ‘‘22ம் தேதிதானே...! ம்... உங்களுக்குச் சொன்ன பலன்களை சுருக்கமா எழுதி வெச்சிருக்கேன். அதில ஒரு பலன் ஆண் குழந்தை பிறக்கும்னு எழுதி வெச்சிருக்கேன். நீங்களே பாருங்க...’’ டயரி வரிகளைக் காட்டினார். அந்த பொன்னம்பலம் பார்த்தார். ‘‘நீங்களும் பாருங்க ஸார்...’’ என்று என்னிடமும் காட்டினார். ‘ஆண் குழந்தைபிறக்கும்’ என்று தெளிவாக எழுதி வைத்து இருந்தார்.

பொன்னம்பலம் தலையைச் சொறிந்தார். ‘‘அய்யா... மன்னிக்கணும். நீங்க சொன்னதை நான்தான் காதுல சரியாப் போட்டுக்கலை போலருக்கு... தப்பா நெனைச்சுக்காதீங்கய்யா...’’ ஸ்வீட் பாக்ஸைக் கொடுத்து விட்டு அவர் போய் விட்டார்.நானும் நண்பர் ஜானகிராமனும் ஜோதிடரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். என் மனசுக்குள் ஜோதிடத்தைப் பற்றிய ஓர் உயர்வான அபிப்ராயம் லேசாய் முளை விட்டிருந்தது.

காரை ஓட்டிக் கொண்டே நான் ஜானகிராமனைப் பார்த்தேன். ‘‘பரவாயில்லையே... உங்க ஜோதிட நண்பர் ரொம்பவும் பவர்ஃபுல்லாய் இருக்கார்...’’

ஜானகிராமன் உதடு பிரியாமல் சிரித்தார் ‘‘என்ன சிரிக்கறீங்க?’’

‘‘சிரிக்காமே என்ன பண்றது? பொழப்பு நடக்கணும்னா இப்படிப்பட்ட கெட்டிக்காரத்தனம் வேணும். இல்லையா?’’

‘‘கெட்டிக்காரத்தனமா..?’’

‘‘ம்... அந்த பொன்னம்பலத்‌தோட ஜாதகத்தைப் பார்த்துட்டு, உனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்னு சொல்லியிருப்பார் மாணிக்கவேலு. அவர் போனதும் டைரியில சொன்ன பலன்களை எழுதும் போது பெண் குழந்தை பிறக்கும் என்பதற்குப பதிலாய் ஆண் குழந்தை பிறக்கும்னு மாத்தி எழுதிக்குவார். ரெண்டு மாசம் கழிச்சு பொன்னம்பலம் வரும்போது பெண் பிறந்திருக்குன்னு அவர் சொன்னா... ‘பாத்தியா, நான் ‌சொன்ன மாதிரியே பெண் குழந்தை பிறந்தது’ன்னு சொல்லி தன்னோட ஜோசியத் திறமையை மெச்சிக்குவார்... ஒருவேளை இவர் சொன்னதுக்கு மாறாய் ஆண் குழந்தை பிறந்து இருந்தால் உடனடியாய் டைரியை எடுப்பார். அதில் ஆண் குழந்தை என்று எழுதியிருப்பதைப் பார்த்ததும் வந்தவர் அயர்ந்து போய் விடுவார். இப்ப சொலலுங்க... இது கெட்டிக்காரத்தனம் இல்லையா?’’

ஜானகிராமன் பேசப் பேச... ஜோதிடக்கலையை உயர்வாய் எண்ணிய என்னுடைய எண்ணத்திற்கு ஒரு மெகா முற்றுப்புள்ளி வைத்தேன்.
-‘ஊஞ்சல்’ இதழில் ராஜேஷ்குமார் எழுதிய
‘ ரெடி, ஸ்மைல் ப்ளீஸ்!’ தொடரிலிருந்து...

ராஜேஷ்குமாரின் ஒரு அனுபவத்தைப் படிச்சு ரசிச்ச நீங்க அவரோட கதாபாத்திரங்களான ரூபலா - விவேக் - விஷ்ணு புகுந்து விளையாடும் வலைச்சரப் பதிவை இங்கே க்ளிக் பண்ணிப் படிச்சு ரசியுங்க..!

Wednesday, May 2, 2012

சுசி, பரத் பட்டையக் கிளப்புறாங்க!

Posted by பால கணேஷ் Wednesday, May 02, 2012

பொருட்காட்சிக்கு வந்த குழந்தை!

‘யார் அந்தக் குழந்தை’ன்னு யோசிக்கறீங்களா? ‘நடிகையர் திலகம்’ன்னு பட்டம் வாங்கின, அற்புதமான நடிப்புக்குச் சொந்தக்காரரான சாவித்திரி முதல்நாளன்று படப்பிடிப்புக்கு வந்த போது தான் உணர்ந்ததை இப்படி அழகாச் சொல்லியிருக்காங்க.

அவங்க 1958-ல் ‘கலை’ என்ற இதழுக்கு அளித்த மினி பேட்டி இங்கே உங்களுக்காக:

* எது உங்களை விழிப்படையச் செய்கிறது?

- பொறுப்புணர்ச்சி!

* உங்களிடத்திலுள்ள அசந்தர்ப்பக் குறைகள்?

- வெள்ளை உள்ளத்தோடு எல்லோரையும் நம்புவது.

* நீங்கள் கோபக்காரரா?

- ‘ஆம்’ என்று அவர் சொல்கிறார்.

* நீங்கள் சினிமாத் தொழிலில் ஈடுபட்டதால் இப்பொழுது என்ன நினைக்கிறீர்கள்?

- எங்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவைகளுடன் வாழ முடியும் என நினைக்கிறேன்.

* உங்களுக்குப் பிடித்த நடிகர்?

- பிள்ளையார்!

* நீங்கள் எதைக் கண்டால் பயப்படுவீர்கள்?

- முகஸ்துதியை!

* உலகிலேயே சிறந்ததென ‌எதைக் கருதுகிறீர்கள்?

- இல்லக் கிழத்தியாக இருப்பது.

* எதனால் நீங்கள் ஆத்திரமடையக் கூடும்?

- மட்டமான ரசிப்பைக் கண்டு.

* சினிமா நட்சத்திரமாவது சுலபமான காரியமா?

- என்னைப் பொறுத்த வரையில் நான் மிகமிக கஷ்டப்பட்டேன்.

* உங்கள் கணவருக்குப் பிடித்தமான விஷயமெது?

- என் மனம்.

* நீங்கள் முதன்முதலாக கேமரா முன் தோன்றிய சமயம் எந்தவித உணர்ச்சிப் போக்குடன் ஈடுபட்டிருந்தீ்ர்கள்?

- கேமரா, சவுண்டு மிஷின் ஆகியவைகளைக் கண்டு குழந்தைகள் பொருட் காட்சிக்குச் சென்றால் ஒவ்வொன்றையும் எப்படி முறைத்துப் பார்ப்பார்களோ அவ்வித உணர்ச்சியுடன் தானிருந்தேன்.

================================================

ன்ன இருந்தாலும் பழைய சோறு தனி ருசிதான் இல்லையா! நடிகையர் திலகத்தின் அரிய பேட்டியைப் படிச்சு ரசிச்ச உஙகளுககு ஒரு கேள்வி... புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிச்ச படங்கள்ல ஒரு படத்துல டைட்டில்ல ‘கதை: எம்.ஜி.ஆர்.’ன்னு பேர் போடுவாங்க. கலைச் செல்வி ஜெயலலிதாவும், அவரும் சேர்ந்து நடிச்ச அந்த வெற்றிப் படத்தின் பெயர் என்ன? சரியான விடை சொல்றவங்களுககு ஒரு ராயல் சல்யூட்! மதியம் 1.30க்கு அடுத்த போஸ்ட் வெளியிடுவேன். அதுக்குள்ள யாரும் சரியான விடை தராட்டா, நானே இந்த போஸ்ட்ல சரியான விடையை UPDATEட்டி விடுவேன்.

இப்ப... கீழ கமெண்ட் பாக்ஸ்ல உஙக கருத்தைச் சொல்லிட்டு,  இங்கே க்ளிக்கி இன்றைய வலைச்சரத்துல பட்டையக் கிளப்புற பரத்-சுசி படித்து ரசியுங்க!

================================================

எம்,ஜி.ஆர். கதை எழுதிய அந்தத் திரைப்படம் = கணவன்

Tuesday, May 1, 2012

வஸந்தும் கணேஷும் கலக்கறாங்க!

Posted by பால கணேஷ் Tuesday, May 01, 2012
‘‘ச் ச் ச் ரத்தம் கொஞ்சம் இருங்க.’’ என்று பஞ்சு கொண்டு வந்து அதை டெட்டாலில் நனைத்து துடைத்தாள். ‘‘ஸ்ஸ்ஸ்’’ என்றான்.

‘‘இந்த வலி நல்லா இருக்கும் இல்லை?’’ என்று அவனைப் பார்த்து நிமிர்ந்தாள்.

அவனைப் படுக்கையில் உட்கார வைத்துவிட்டுத் தரையில் உட்கார்ந்து சிரத்தையுடன் அவன் காயத்துக்கு மருந்திட்டாள். அவளைப் பார்க்க முடிந்தது. மெல்லிய விரல்கள் அவர் முழங்காலைத் தொடும் போது அவனுக்கு இதயம் விரைத்தது. வகிடு தெரிந்தது. கையை அசைக்கும் போது மார்பு அசைவது தெரிந்தது. வியர்வை தெரிந்தது. கழுத்தில் மின்னிய மெல்லிய தங்கச்சங்கிலி தெரிந்தது, அவள் மூக்கு கூர்மையாக இருந்தது. அழுத்தமான உதடுகள், அந்தக் கையைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல இருந்தது. தன்னுடைய நிலையை அவனால் சமாளித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு கணத்தில் அவன் ஸ்விட்சு போட்டது போல மாறியிருந்தான்.

இப்போது அவனுக்கு வேலைக் கவலைகள் எல்லாம் அகஸ்தியர் மலையைத் தாண்டிவிட்டன. வேலை கிடைத்துவிடுமோ என்கிற புதிய கவலை ஏற்பட்டது. இந்தப் பெண்ணுக்காக ஏழு கடல் தாண்ட ஆயத்தமானான், மனசுக்குள் எத்தனையோ யுக சஞ்சாரங்கள் ஏற்பட்டன. உலகத்தில் உள்ள அத்தனை கவிதைகளுக்கும் அவசியம் ஏற்பட்டது. அவன் உடலில் உள்ள ஒவ்வொரு ஸெல்லிலும் மதுமிதா வந்து சேர்ந்து கொண்டாள். இந்தப் பெண்ணை அடைய முடியும்! பெற்றோரிடம் வரவேற்பு இருக்கிறது. சுதந்திரம் இருக்கிறது. ஒரு முறை நிமிர்ந்து பார்த்து இயல்பாக சிரித்தாள்....

இனி இந்தக் கணத்திலிருந்து என் மூச்சின் ஒவ்வோர் இயக்கத்திலும் இவளை அடையும் பாக்கியத்தைக்குறிக்கோளாகக் கலக்கப் போகிறேன். எனக்கு உள்ளுணர்வு சொல்கிறது. இவள் தான் என் மனைவி! எனக்கு எதிர்காலம் இருக்கிறது. என் படிப்புக்கு வேலை கிடைத்துத்தான் தீரும். ‘‘ஸார்! எனக்கு ஐ.டி.ஐ.லே ஆயிரத்து அம்பது ரூபா சம்பளத்திலே வேலை கிடைச்சுருச்சு ஸார்.’’ ‘‘ஸார் எனக்கு எம்.பி.ஏ அட்மிஷன் கிடைச்சுருச்சு ஸார்...’’

அவள் அவன் முழங்காலில் டெட்டால் துடைத்து பர்னால் தடவும் இந்த இரண்டு அல்லது மூன்று நிமிஷங்களில் ரகுபதிக்கு வேலை கிடைத்தது, கோபிநாத்தை சந்தித்துப் பேசி கல்யாணம் செய்து கொண்டு தேனிலவுக்கு வந்து விட்டான்.

* * *  * * *  * * *  * * *  * * *  * * *

‘‘எனக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, திடீரென்று எல்லாப் பொருள்களுமே அழகாகப் பளிச்சென்று தோன்றுகின்றன. ரேடியோவில் அபத்தமான பாட்டுகளுக்கெல்லாம் கண்ணீர் வருகிறது. தொண்டை அடைக்கிறது. எனக்குள் அதிகப்படியான சக்தி பொங்கிப் பெருகுகிறாற் போல இருக்கிறது. காலம் பறக்கிறது எப்போதும் ஒருவித ஜுரம் போல உணர்கிறேன். எனக்கு என்ன ஆயிற்று... இதுதான் காதலா?’’ டயரியைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பேனாவை மூடிவிட்டு எழுந்து சிரத்தையாக உடை அணிந்து கொண்டான். தலைவாரிக் கொள்வதில் அத்தனை கவனம், மீசையைத் திருத்துவதில் புதிய சுவாரஸ்யம். ரகுபதி காதல் வசப்பட்டிருந்தான்.

* * *  * * *  * * *  * * *  * * *  * * *
சுஜாதாவின் காதல் ரசம் (அதென்ன காதல் ரசம்? காதல் குழம்பு கிடையாதா?) தோய்ந்த வரிகள்தான் மேலே நீங்கள் படித்தது. எந்த நாவல் என்பதை முதலில் சொல்லும் ரசனைக்காரருக்கு என் அன்பான அழுத்தமான கை குலுக்கல்! (வெங்கட், ஸ்ரீராம்லாம் ஈஸியாச் சொல்லிடுவாஙகன்னு ஒரு Guess)

இன்று நான் தொடுத்திருக்கும் வலைச்சரத்தில் சுஜாதாவின் வஸந்த்தும் கணேஷும் கலக்குறாங்க. இங்கே க்ளிக்கி அவங்களைச் சந்திச்சு, அங்கயும் என்னை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் வேண்டிக் ‌கொள்கிறேன்.

Monday, April 30, 2012

நான் ‘வாத்தியார்’ ஆயிட்டேன்..!

Posted by பால கணேஷ் Monday, April 30, 2012
‘‘என்னது... கணேஷ் ஆசிரியரா?’’

ன்னோட 100வது பதிவைப் படிக்க வருகை தந்த அனைவருக்கும் கரம் கூப்பிய நன்றி! எந்தப் பள்ளிக்கூடத்துல எனக்கு வேலை கிடைச்சதுன்னும், என்கிட்டப் படிககிற பிள்ளைங்கல்லாம் பாவம்னும் உங்க மனசுல இந்நேரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டிருக்கும். எல்லாத்தையும் ரப்பர் வெச்சு சுத்தமா அழிச்சிடுங்க. நான் ஆசிரியர் (வாத்தியார்) ஆகியிருக்கிறது இந்த வார ‘வலைச்சரம்’ தளத்துக்கு. உஙக எல்லாரோட வாழ்த்துக்களோடயும், ஆதரவோடயும் இந்த வாரத்தை சிறப்பாப் பண்ண முடியம்கற நம்பிக்கையோட... வலைச்சரத்தின் முதல் நாளான இன்று என்னைப் பத்தி...

அடிச்சுக்கிட்டிருக்கேன். இங்கே கிளிக்கிச் சென்று பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன். இனி... நான் படித்தவற்றில் ரசித்த மின்னல் வரிகள் சில உஙகளுக்காக...

========================================

மணலாய்க் கிடந்தது தாமிரபரணி. சித்திரம் தீட்டின மாதிரி லேசான பழுப்பில் முழுசாய் நிலா மிதந்து கொண்டிருந்தது. கை கையாய் அள்ளித் தெளித்த மாதிரி நட்சத்திரங்கள். இந்தக் குளிர் கூட இதமாய் இருந்தது. மணல் இன்னும் சூடாறிப் போகவில்லை. எங்கேயோ ஒரு சிறு குயில். தம்பூரா தந்தியைச் சுண்டி விட்ட மாதிரி திரும்பத் திரும்ப வந்து மொய்க்கும் கொசுவைக் கூட பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
        -‘வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்’ நாவலில் மாலன்.

========================================

இருள் மண்டிக் கிடந்த குசினியில் ஒரு அனுமானத்தில் பொருட்கள் எதனினும் இடங் கெடாமல் அடுப்பை நெருங்கி அதன் முன்னே குந்தி அமர்ந்தாள். கையை எதிரே நீட்டித் துளாவி அணைந்து கிடந்த விறகுத் துண்டொன்றை எடுத்து அடுப்பில் சாம்பலைப் பரபரவெனக் கிண்டினாள். இரண்டொரு சிறப்புப் பொறிகளை விசிறிக் கொண்டு பலாக் கொட்டை அளவில் ஒரு அனல் கட்டி மிதந்து வந்தது. அதைக் கண்ட பிறகுதான் செல்வி பரபரப்பு அடங்கினாள்.
        -‘நெருப்பு’ சிறுகதையில் தேவகாந்தன்.

========================================

மழை நின்று பெய்தது. மழைக்கும் அதன் அடர்வு பொறுத்துப் பெயர்கள் உண்டு. தூற்றல், தூறல், தூவானம், சர மழை, அடைமழை, பெரு மழை. சிறு தூறலை நெசவா ளர் நூறாம் நம்பர் மழை என்பார்கள் நூலின் சன்ன ரகம் என்ற பொருளில். சீராக ஓசையுடன் பெய்து கொண்டே இருந்தது. மழைக்கு மணம் மாத்திரமல்ல, ஒலியும் உண்டு.
         -‘பேச்சியம்மை’ சிறுகதையில் நாஞ்சில்நாடன்.

========================================

சுக்காய் காய்ந்த உடம்பு முழுக்க வியர்வை. உச்சந் தலையும் வியர்த்தது. முண்டாசு நமத்து அவியல் நாற்றம் எடுத்தது. நடை வேகம் கூடியது. ஈடு கொடுத்துப் பறக்க முடியாத ஒரு கிளி பாரதியின் இடது தோளில் அமர்ந்தது. கிளியின் பக்கம் பாரதி திரும்ப, மீசை மயிர், பச்சைக் கிளியின் சிவந்த அலகோடு உரசியது.
        -‘கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்’
          சிறுகதையில் வேல ராமமூர்த்தி.

========================================

டாஞ்சூர் டெம்பிள் வெரி பிக் டெம்பிள்! டெம்பிளிலுள்ள ‘புல்’ வெரி வெரி பிக்! கோபுரத்தின் நிழல் கீழே விழாது. தினம் தினம் விழுந்து கொண்டிருந்தால் அதற்கு பலத்த காயம் ஏற்படும் என்பதற்காக சிற்பிகள் அவ்வாறு கட்டியிருக்கிறார்கள்.
        -‘வாஷிங்டனில் திருமணம்’ நூலில் சாவி
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube