Monday, November 21, 2011

தந்தைக்கு உபதேசித்த ஸ்வாமிநாதன்!

Posted by பால கணேஷ் Monday, November 21, 2011
கைலாய மலை. ‘‘சர்வேஸ்வரா... அபயம்...’’ ‘‘நீங்கள்தான் எங்களைக் காத்தருள வேண்டும்...’’ என்று பலவிதமாகக் கூக்குரலிட்டபடி கூப்பிய கரங்களுடன் எதிர்வந்து நின்றனர் தேவர்கள். கண் மூடியிருந்த பரமசிவன் கண்களைத் திறந்து புன்னகை புரிந்தார். ‘‘‌தேவேந்திரா! ஏனிந்தப் பதட்டம்? என்ன நடந்தது?’’

தேவேந்திரன் முன்னால் வந்தான். ‘‘பிரபு! பூலோகத்தில் பிருகு முனிவர் கடுந்தவம் புரிந்து வருகிறார். அவரது தவத்தின் எண்ண அலைகள் தேவலோகத்தையும் எட்டி விட்டது. அவரது தவ அலைகளைத் தடுப்பவர் எவராயினும் தன் அறிவு முழுவதையும் இழந்துவிட வேண்டும் என்று வரமும் பெற்றிருக்கிறார். அகில உலகங்களுக்கும் நாயகனாகிய தாங்கள்தான் இதைத் தடுத்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று வேண்டினான்.

சிவபெருமான் புன்னகைத்தார். தன் இரு கரங்களையும் நீ்ட்டி முனிவரின் சிரசை மூடினார். முனிவரின் எண்ண அலைகள் தடை பட்டதன் காரணமாக, சிவன் தன் நினைவி லிருந்த வேத மந்திரங்கள் அனைத்தையும் மறந்தார். பிருகு முனிவர் கண் விழித்தார். கைலாயபதியைக் கண்டதும் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து வருந்தினார். “பரமேஸ்வரா... தாங்களே ஆனாலும் நான் பெற்ற வரத்திற்கு விதிவிலக்கல்ல. என் தவத்தைக் கெடுத்ததின் விளைவை அனுப வித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், உங்களின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றும் புதல்வனிடம் நீங்கள் பிரணவ மந்திரத்தைக் கேட்டறிந்தால் இழந்ததை திரும்பப் பெறுவீர்கள்’’ என்றார்.

பின்னாளில் சூரபத்மனை அழிப்பதற்காக பரமேஸ்வரன் தன் நெற்றிக் கண்ணி லிருந்து உருவாக்கிய குழந்தை முருகன், அளவில்லாத சுட்டித்தனமும், அளப்பரிய வீரமும் பெற்றிருந்தான். ஒருமுறை பிரம்ம தேவன், சிவபெருமானைத் தரிசிக்க வேண்டி கைலாயம் வந்திருந்தார். சிறுவன் குமரன் அவரிடம் ஓடி வந்தான்.

‘‘ஓ... பிரம்ம‌ தேவரே! நில்லுங்கள்... நில்லுங்கள்...’’

‘‘என்ன வேலவா! எதற்கு இவ்வளவு வேகமாக ஓடி வருகிறீர்கள்? என்ன வேண்டும்?’’

‘‘பிரம்ம தேவரே... ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருளை நீங்கள் எனக்கு விளக்கமாகக் கூறியருள வேண்டும். கணபதிக்கும் இது தெரியாதென்கிறார்...’’

பிரணவ மந்திரத்தை மறந்து விட்டிருந்த பிரம்மன் திருதிருவென்று விழித்தார். தன் இயலாமையை வேலவனிடம் தெரிவித்தார். கடுஞ்சினம் கொண்டான் கார்த்திகேயன். ‘‘பிரணவ மந்திரத்திற்குப் பொருள்கூறத் தெரியாத நீர் படைக்கும் உயிர்கள் ஞான சூன்யங்களாக அல்லவோ விளங்கும்? நீர் படைப்புத் தொழிலைத் தொடர்வது நியாயமில்லை. இனி படைப்புத் தொழிலை யாமே மேற் கொள்வோம்...’’ என்று அவரை பூவுலகில் ஓர் உயர்ந்த மலையில் சிறை யிலிட்டான். சரஸ்வதி தேவியும், தேவர்களும் ஈஸ்வரனை அணுகி, பிரம்மனைக் காப்பாற்றும்படி வேண்டினர்.

‘‘கந்தா... பிரம்ம தேவனை விடுவித்து படைப்புத் தொழில் செம்மையாக நடைபெற வழி செய்..’’’ என்று மகனிடம் ஆணையிட்டார் சர்வேஸ்வரன். ‘‘முடியாது தந்தையே. பிரணவ மந்திரத்தின் பொருளையே மறந்துவிட்ட அவரை எப்படி விட்டுவிட இயலும்?’’ என்றான்.

‘‘குமரா... பிரணவ மந்திரத்தின் உட்‌பொருள் இன்னதென்று நீ அறிவாயா?’’ என்று வினவினார் வெள்ளியங்கிரிவாசன்.

‘‘நன்றாக அறிவேன் தந் தையே...’’ என்று வேலவன் கூற, ‘‘அப்படியானால் அதை எனக்கு உபதேசம் செய்...’’ என்று வேண்டுகோள் விடுத் தார் சிவபெருமான். குறும்புக் கடவுளான சிவகுமரன் புன்முறு வல் பூத்தான். ‘‘தந்தையே... உபதேசம் என்று வந்துவிட்ட பின்னர் நான் குரு. நீங்கள் சிஷ்யன். இதுதான் உறவு. நீங்கள் கை கட்டி, வாய் புதைத்துக் கேட்டால் நான் சொல்லித் தருகிறேன்’’ என்றான்.

சிவபெருமான் கை கட்டியபடி குமரனைத் தன் மடியில் வைத்துக் கொள்ள, சிவனின் காதில் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தான் குமரன். பிருகு முனிவரின் சாபத்தால் சிவன் இழந்திருந்த மந்திர சக்திகள் அனைத்தும் அந்த உபதேசத்தின் மூலம் பரமேஸ்வரனுக்குத் திரும்பக் கிடைத்தன. தன் சக்திகள் முழுவதையும் திரும்பப் பெற்ற ஈசன், மகனை உவப்புடன் அணைத்து, ‘‘தந்தைக்கு உபதேசம் செய்த நீ இன்று முதல் ‘ஸ்வாமிநாதன்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவாய். நீ உபதேசம் செய்த இந்த மலையும் இன்று முதல் ‘ஸ்வாமி மலை’ என்ற பெயரில் வழங்கப்படும்’’ என்று வரம் அளித்தருளினார்.

ஸ்வாமி மலை திருத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. முருகனின் ஆறு படை வீடுகளில் நான்காவது படை வீடாகச் சொல்லப்படுகிறது இத்தலம். ஏனைய முருகனுறை மலைக்கோவில் களைப் போலன்றி, இந்த ஆலயம் செயற்கையான உருவமைக்கப்பட்ட ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. அறுபது அடி உயரமுள்ள இந்த மலையில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அறுபது படிக்கட்டுகளையும் ஏறிச் சென்றால் தமிழ்க் கடவுளான ஸ்வாமிநாதனைத் தரிசித்து அவனருள் பெறலாம். மலைக்குக் கீழே சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.

அருணகிரிநாதரால் திருப்புக ழிலும், நக்கீரரால் திருமுருகாற் றுப் படையிலும் பாடல் பெற்ற ஸ்தலம் இது. தினம் ஆறுகால பூஜைகள் நடக்கின்றன. 7 கிலோ தங்கத்திலும், 85 கிலோ வெள் ளியிலும் அழகுற வடிவமைக் கப்பட்ட தங்கத் தேரில் வலம் வரும் முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.

பக்தர்கள் ஸ்வாமி மலையில் தங்கி இறைவனைத் தரிசிப்பதற்கு வசதியாக அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்படும் தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கின்றன. மாதந்தோறும் கிருத்திகை, ஏப்ரல் மாதத்தில் தேர்த் திருவிழா, மே மாதத்தில் விசாகத் திருவிழா மற்றும் நவராத்திரி விழா,  அக்‌டோபர் மாதத்தில் கந்தசஷ்டிப் பெருவிழா, நவம்பர், டிசம்பர் மாதங்களில் கார்த்திகைத் திருவிழா, ஜனவரி மாதம் தைப்பூசத் திருவிழா, மாதத்தில் பங்குனி உத்திரத் திருவிழா என்று இங்கே ஆண்டு முழுவதும் விழாக்கள் நடப்பதால் குமரனைத் தரிசித்து அருள் பெறுவதற்கு உகந்த இடமாக விளங்குகிறது.

சுவாமிமலைக்கு திருவேரகம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. கவிகாளமேகம் எழுதிய...

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை-மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே


-என்ற தனிப்பாடல் கூட இந்தத் திருவேரகத்தை (ஏரகத்துச் செட்டியாரே) குறிப்பதுதான் எனச் சொல்வார்கள். குமரக் கடவுள் அருள் மழை பொழியும் ஆலயமான ஸ்வாமி மலையை நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்து அவனருளுக்குப் பாத்திரமாகுங்கள்..!

35 comments:

  1. சுவாமிமலைக்கு நான் பலமுறை சென்று இருந்தாலும்,முருகன் சிவபெருமானுக்கு பிரணவமந்திரம் உபதேசிக்க காரணமாயிருந்த,பிருகு முனிவரின் கதையை இப்போதுதான் அறிகிறேன். விளக்கமாக பதிவிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. அனைவரும் அறிய வேண்டிய கட்டுரை....

    ReplyDelete
  3. சுவாமி மலை, சுவாமிநாதன் அருள் உங்களுக்கு பூரணமாகக் கிடைக்கட்டும். நல்ல பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. வே.நடனசபாபதி said...
    சுவாமிமலைக்கு நான் பலமுறை சென்று இருந்தாலும்,முருகன் சிவபெருமானுக்கு பிரணவமந்திரம் உபதேசிக்க காரணமாயிருந்த,பிருகு முனிவரின் கதையை இப்போதுதான் அறிகிறேன். விளக்கமாக பதிவிட்டதற்கு நன்றி.

    -ஆன்மிக மேட்டரை முதல் தடவையா எழுதறோமே... என்று தயங்கியபடியே தான் வெளியிட்டேன். முதல் விருந்தினரான நீங்கள் ரசித்தது எனக்குத் தெம்பூட்டுகிறது. நன்றி...

    ReplyDelete
  5. சங்கவி said...
    அனைவரும் அறிய வேண்டிய கட்டுரை....

    -உங்களின் வருகை மகிழ்ச்சி தந்தது. கருத்துக்கும் மிக்க நன்றி சங்கவி சார்...

    ReplyDelete
  6. kg gouthaman said...
    சுவாமி மலை, சுவாமிநாதன் அருள் உங்களுக்கு பூரணமாகக் கிடைக்கட்டும். நல்ல பதிவுக்கு நன்றி.

    -நல்வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் சார். வேலவனின் அருள் நம் அனைவருக்குமே கிட்டட்டும்!

    ReplyDelete
  7. ஸ்வாமிநாதன் கதை இப்படித்தானா? //. தன் சக்திகள் முழுவதையும் திரும்பப் பெற்ற ஈசன், மகனை உவப்புடன் அணைத்து, ‘‘தந்தைக்கு உபதேசம் செய்த நீ இன்று முதல் ‘ஸ்வாமிநாதன்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவாய். நீ உபதேசம் செய்த இந்த மலையும் இன்று முதல் ‘ஸ்வாமி மலை’ என்ற பெயரில் வழங்கப்படும்’’ என்று வரம் அளித்தருளினார்.//
    இப்படிப்பிறந்ததுதானா ஸ்வாமிநாத நாமம்!

    எனது ஸ்வாமிநாதன் கதை கேட்கும் ஆவலை இப்பதிவின் மூலம் உடனே பதிவிட்டு தெளிவு படுத்தியற்கு மிக்க நன்றி கணேஷ்ண்ணா

    ReplyDelete
  8. ஸாதிகா said...
    ஸ்வாமிநாதன் கதை இப்படித்தானா? //. தன் சக்திகள் முழுவதையும் திரும்பப் பெற்ற ஈசன், மகனை உவப்புடன் அணைத்து, ‘‘தந்தைக்கு உபதேசம் செய்த நீ இன்று முதல் ‘ஸ்வாமிநாதன்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவாய். நீ உபதேசம் செய்த இந்த மலையும் இன்று முதல் ‘ஸ்வாமி மலை’ என்ற பெயரில் வழங்கப்படும்’’ என்று வரம் அளித்தருளினார்.//
    இப்படிப்பிறந்ததுதானா ஸ்வாமிநாத நாமம்!
    எனது ஸ்வாமிநாதன் கதை கேட்கும் ஆவலை இப்பதிவின் மூலம் உடனே பதிவிட்டு தெளிவு படுத்தியற்கு மிக்க நன்றி கணேஷ்ண்ணா

    -வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்காய்...

    ReplyDelete
  9. சிவபெருமான் பிரணவ மந்திரம் மறந்த முன்கதை இப்போது தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  10. ஸ்ரீராம். said...
    சிவபெருமான் பிரணவ மந்திரம் மறந்த முன்கதை இப்போது தெரிந்து கொண்டேன்.

    -வாங்க ஸ்ரீராம்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி...

    ReplyDelete
  11. பல புதிய விஷயங்கள் நன்றி

    ReplyDelete
  12. சுவாமி மலை சென்று தரிசித்த அனுபவம் உண்டு பிருகு முனிவர் கதை இப்பதான் தெரிந்துகொண்டேன் நன்றி.

    ReplyDelete
  13. அதென்னவோ சுவாமிமலைபோகவே கைவரவில்லை கணேஷ் பதிவு படிச்சதும் போக பேராசையாகிவிட்டது

    ReplyDelete
  14. பிரணவ மந்திரத்தை குமரன் தந்தைக்கு உபதேசித்தது தான் தெரியுமே தவிர பிருகு முனிவரின் சாபம் பற்றி தெரியாது. அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  15. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    பல புதிய விஷயங்கள் நன்றி.

    -உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி ராஜா சார்...

    ReplyDelete
  16. Lakshmi said...
    சுவாமி மலை சென்று தரிசித்த அனுபவம் உண்டு பிருகு முனிவர் கதை இப்பதான் தெரிந்துகொண்டேன் நன்றி.

    -உங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா...

    ReplyDelete
  17. ஷைலஜா said...
    அதென்னவோ சுவாமிமலைபோகவே கைவரவில்லை கணேஷ் பதிவு படிச்சதும் போக பேராசையாகிவிட்டது.

    -அதுக்கென்னக்கா... எப்ப டைம் இருக்குன்னு சொல்லுங்க... நானே கூட்டிட்டுப் போறேன். முருகக் கடவுளின் அருள் பெற்று வரலாம்.

    ReplyDelete
  18. bandhu said...
    பிரணவ மந்திரத்தை குமரன் தந்தைக்கு உபதேசித்தது தான் தெரியுமே தவிர பிருகு முனிவரின் சாபம் பற்றி தெரியாது. அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

    -ஆம். தவத்தைக் கெடுப்பவன் தன் ஞானத்தை இழப்பான் என்று அவர் பெற்ற வரம்கூட ஒரு சாபம்தான். உங்கள் ரசனைக்கும், வருகைக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  19. 7 கிலோ தங்கத்திலும், 85 கிலோ வெள் ளியிலும் அழகுற வடிவமைக் கப்பட்ட தங்கத் தேரில் வலம் வரும் முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்./

    பலமுறை தரிசித்த
    அற்புதத் தலம் பற்றிய
    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  20. அறுபது அடி உயரமுள்ள இந்த மலையில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அறுபது படிக்கட்டுகளையும் ஏறிச் சென்றால் தமிழ்க் கடவுளான ஸ்வாமிநாதனைத் தரிசித்து அவனருள் பெறலாம். /

    மிகச்மீபத்தில்தான் சிலமுறைகள் உற்சாகமாக அறுபது படிக்கட்டுகளில் ஏறி இறங்க்கி அறுபது ஆண்டுகளையும் மனப்பாடம் செய்தேன்..

    ReplyDelete
  21. இராஜராஜேஸ்வரி said...
    7 கிலோ தங்கத்திலும், 85 கிலோ வெள்ளியிலும் அழகுற வடிவமைக் கப்பட்ட தங்கத் தேரில் வலம் வரும் முருகப் பெருமானைத் தரிசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்./

    பலமுறை தரிசித்த அற்புதத் தலம் பற்றிய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    -ஆன்மீகம் என்றாலே உங்கள் தளம் தான் எல்லாருக்கும் நினைவு வரும். உங்கள் பாராட்டு எனக்குப் பெரிய வரம்தான். மிக்க நன்றி...

    ReplyDelete
  22. இராஜராஜேஸ்வரி said...

    அறுபது அடி உயரமுள்ள இந்த மலையில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அறுபது படிக்கட்டுகளையும் ஏறிச் சென்றால் தமிழ்க் கடவுளான ஸ்வாமிநாதனைத் தரிசித்து அவனருள் பெறலாம். /

    மிகச்மீபத்தில்தான் சிலமுறைகள் உற்சாகமாக அறுபது படிக்கட்டுகளில் ஏறி இறங்க்கி அறுபது ஆண்டுகளையும் மனப்பாடம் செய்தேன்..

    -ஆன்மீகம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்ததும் இக்கோயிலை நான் தேர்வு செய்த காரணமும் இதுதான். தமிழ்க் கடவுளின் கோயிலில் தமிழ் ஆண்டுகளை நினைவுகூரும் விதமாக இருப்பது என்ன பொருத்தம் பாருங்கள்...

    ReplyDelete
  23. கணேஷ் அண்ணா,

    வடித்திருக்கும் எழுத்து நடையில் படிப்பவர் அனைவருக்கும் சுவாமி மலையை தரிசிக்கும் ஆவல் மேலோங்கும்!

    ReplyDelete
  24. பல புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்...மிக்க நன்றி...

    ReplyDelete
  25. முனிவர் கதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.சுவாமி மலை பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  26. சத்ரியன் said...

    கணேஷ் அண்ணா,
    வடித்திருக்கும் எழுத்து நடையில் படிப்பவர் அனைவருக்கும் சுவாமி மலையை தரிசிக்கும் ஆவல் மேலோங்கும்!

    -என் எழுத்து நடையைப் பாராட்டிய முதல் நண்பர்! நன்றி சத்ரியன்... (அடடே, என்னை அண்ணனாக்கிட்டீங்களா... வெரி ஹாப்பி)

    ReplyDelete
  27. ரெவெரி said...
    பல புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்...மிக்க நன்றி...

    -உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  28. சென்னை பித்தன் said...
    முனிவர் கதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.சுவாமி மலை பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றி.

    -உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  29. படிக்க படிக்க ஆனந்தம் சார்!
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  30. @ திண்டுக்கல் தனபாலன்

    -குமரன் அருள் உங்களுக்கு பூரணமாகக் கிடைக்கட்டும்! ரசித்த உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  31. என் பதிவை விட தங்களது மிகச்சிறந்ததாய் உள்ளாது அண்ணா

    ReplyDelete
  32. @ ராஜி said...

    -அப்படி இல்லம்மா. இரண்டும் அதனதன் பாணியில சிறப்பானவையே. நான் கதைல்லாம் சொல்லி ஜல்லியடிக்கிறேன். நீ தகவல்களால தூள் கிளப்பியிருக்க. இருந்தாலும் இது நல்லாருக்குன்னு சொன்ன நல்ல மனசுக்கு நன்றி!

    ReplyDelete
  33. செங்கோடன்-வேலன்-முருகன்

    பிருகுரிஷி என்பவர்தான் ஜமதக்கினி; அவரது மகனே பரசுராமன்; இங்கு பரமேஸ்வரனாகக் குறிப்பிடப்படுகிறான். துணைவி ரேணுகாவின் தலையை வெட்டிவர உத்தரவிட்டவன் ஜாமதக்கினி. வெட்டிவந்தவன் பரசுராமன். இவர்களது வரலாறு மாபாரதத்தில் ஆதிபர்வத்திலும் வன பர்வத்திலும் உள்ளன; விரிவான வரலாறு விஷ்ணுபுராணத்திலும் ஊள்ளது. முக்கண்ணானின் வரலாறாக முருகனின் வரலாறும் அவனது தாயின் வரலாறும் தொல்தமிழ்ப்பாடலான கலித்தொகையில் உள்ளதாக அதன் உரைகாரர் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். நச்சினார்க்கினியர் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். முருகனின் தாயைப் பலவாறு துன்புறுத்தியதோடு முருகனையும் தனது மகனாக ஏற்கமறுத்த வரலாறும் கலித்தொகையில் இடம்பெற்றுள்ளது.
    செங்கோடன்-வேலன்-முருகன்
    அழகும் செந்நிறமும் கொண்ட செங் கோடனை முருகன்(அழகன்) என மக்கள் கொண்டாடினர். இவனது பிறப்பு, வளர்ப்பு குறித்த வரலாற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் பல நீக்கப்பட்டதால் உண்மை நிலையை அறியமுடியவில்லை. பரிபாடலில் மொத்தமுள்ள 70 பாடல்களில் 22 மட்டுமே கிடைத்துள்ளன. 70 என இறையணார் அகப்பொருள் உரையும், ஒரு பழம்பாடலும் உறுதிப்படுத்துகின்றன. முருகன் மிகச்சிறப்புடன் போர்ப்பயிற்சி கொடுத்து வளர்க்கப்பட்டான். திருமுருகாற்றுப்படை:
    ".. .நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
    ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
    அறுவர் பயந்த ஆறமர் செல்வ!" என்கிறது. செங்குட்டுவனை ஈன்றது முதலாகச் சிலம்பு: 9 / 18-38ல் சில அடிகள்:
    "ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும்
    தீர்த்தத் துறைபடிவேன் என்று" பாவை; தீர்த்தங்கரியானதை அமணத்தில் மறைத்துவிட்டனர். மேலும்:
    " தூய மறையோன் பின் மாணி ஆய்,வான்பொருள் கேள்வித்
    துறைபோய்,அவர் முடித்த பின்னர்,இறையோனும்
    தாயத்தாரோடும் வழக்கு உரைத்துத் தந்தைக்கும்
    தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து,மேயநாள்,
    தேவந்தி என்பாள் மனைவி,அவளுக்கு,
    'பூ வந்த உண் கண் பொருக்க' என்று மேவித்தன்
    மூவா இள நலம் காட்டி,'எம் கோட்டத்து
    நீ வா' என உரைத்து,நீங்குதலும்,தூ-மொழி,
    'ஆர்த்த கணவன் அகன்றனன்,"போய் எங்கும்
    தீர்த்தத் துறை படிவேன்" என்று: அவளைப் பேர்த்து இங்கன்
    மீட்டுத் தருவாய்' என ஒன்றன்மேல் இட்டு,
    கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்..............." எனத் தீர்த்தங்கரியாகிக் காஞ்சி காமகோட்டத்தில் இருந்துள்ளாள்.

    ReplyDelete
  34. கலித்தொகை149/10-11:
    "சூள்(ழ்)(ல்) வா(பொ)ய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின்
    மற்றுஅவன் வாள் வாய்நன் றாயினும்
    அஃதுஎறியாது விடாதேகாண்" என;
    "துனைவரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே" எனவும்; 150/9-10:
    "பிரங்குநீர் சடைக்கரந்தான் அணியன்ன நின்நிறம்
    பசந்துநீ இனையையாய் நீக்க லும் நீப்பவோ?" எனவும்; 13-14:
    "உருவஏற்று ஊர்தியான் ஒள்அணிநக் கன்னநின்
    உருஇழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ?" எனவும்; 16-18:
    "'ஒதுக்கறிய நெறி'என்னார் ஒண்பொருட்டு அகன்றவர்
    புதுத்திங்கள் கண்ணியான் பொன்பூண்ஞான் றன்னநின்
    கதுப் புலறு(ரு)ம் கவினையாய் காண்டலும் காண்பவோ?" எனவும் குறிப்பிடுகிறது. இதனை உறுதிப்படுத்தும் அகநாநூறு- 90:
    ".. புணர்ச்சி அலர்எழ .. தெரு மரல் உள்ளமொடு
    வருந்தும் நின்வயின் 'நீங்குக' என்றுயான்
    யாங் கனம் மொழிகோ?.. " எனக்குறிப்பிடுகிறது. இதனைஅகநாநூறு- 91;
    "..குட்டுவன் காப்ப .. குடநாடு பெறினும் தவிரலர்;
    மடமாண் நோக்கிநின் மாண்நலம் மறந்தே" என குறிப்பிடுகிறது. பரி-பா: 14- 25, 28ல்:
    "பிறந்த ஞான்றே நின்னை உட்கிச்
    சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே ..எனவும்5 / 22- செவ்வேளின் பிறப்பு:
    "ஆதி அந்தணன்அறிந்து பரிக்கொளுவ
    வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
    நாகம் நாணா மலைவில் லாக
    மூவகை ஆர்எயில் ஓரம் பின்முளிய
    மாதிரம் அழலஎய்து அமரர் வேள்விப்
    பாகம் உண்ட பைங்கற் பார்ப்பான்
    உமையொடு புணர்ந்து..காமவதுவையுள்
    அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி
    இமையா நாட்டத்து ஒருவரம் கொண்டு
    விலங்கு என விண்ணோர்
    வேள்விமுதல்வன் விரிகதிர் மணிப்பூணவற்குத்
    தான் ஈத்தது அரிது என மாற்றான்
    வாய்மையன் ஆதலின் எரிகனன்று
    ஆனாக் குடாரிகொண்டு அவன் உருவு திரித்திட்டோன்
    இவ் உலகு ஏழும் மருள
    கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்த
    சேய் யாக்கை நொசிப்பின் .. .
    நிவந்தோங்கு இமையத்து நீலப்பைஞ்சுனைப்
    பயந்தோர் என்ப பதுமத்துப்பாயல்
    பெரும்பெயர் முருக நிற்பயந்த ஞான்றே
    அரிதுஅமர்சிறப்பின் அமரர்செல்வன் தன்
    எரியுமிழ் வச்சிரம்கொண்டு இகந்துவந்து
    எறிந்தென அறுவேறு துணியும் அறுவர் ஆகிய
    ஒருவனே வாழி ஒங்குவிறல் சேஎய்! " என, பாவைக்கும், மைந்தன் வேலன் பிறப்புக்கும் எதிராக "அமரர்செல்வன்" முக்கண்னன் வச்சிராயுதத்தால் குழந்தையைத்தாக்கி; தாடை எலும்பு உடைந்து; ஒருங்கு கூட்டப்பட்டது. ஆயினும் கீழ்த்தாடை வாய்ப்பகுதி சரியாக அமையாமல் குரங்குபோல் அமைந்து விட்டதோ? சம்முகனின் முகம் கண்டு; தாய் பாவையின் மனம் எப்படியெல்லாம் வேதனைப்பட்டிருக்கும். உணர்ந்துபாருங்கள் பெண்களே. எப்படியோ; தாமரை இதழில் ஏந்திய தாய் மாமன் கரிகால்சோழனால் அழகன் முருகன் காப்பாற்றப்பட்டுவிட்டான்!!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube