Friday, August 11, 2017

என் முதல் நாவல்

Posted by பால கணேஷ் Friday, August 11, 2017
ப்ரல் மாதத்தில் ஓர் நாள்... தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டில் இருந்து என் முகநூல் நண்பராக இருக்கும் உதவி ஆசிரியர் ஒருவர் என்னை வந்து சந்திக்கச் சொன்னார். போய்ப் பார்த்தேன். தாங்கள் மாத நாவல்கள் வெளியிட உள்ளதாகவும், வரும் மாதத்திலேயே நான்கு நாவல்கள் வெளியிடும் உத்தேசம் இருக்கிறது என்றும், நான்கில் ஒரு நாவலை நான் எழுதித் தர இயலுமா என்றும் கேட்டார்.

பத்திரிகைகளில் என் எழுத்துக்கள் வரவேண்டும், அதற்காக நான் சின்ஸியராக முயல வேண்டும் என்று அதற்கு முந்தைய வாரம்தான் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூலில் பதிவு எழுதி யிருந்தார். நானும் பத்திரிகையில் எழுத முயல்வதற்குத் துவங்கியிருந்தேன் என் முயற்சிகளை. இப்படியான நிலையில் அவர்கள் கேட்டதும் சிறிதும் சிந்திக்காமல் சம்மதம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். ஒரே வாரத்தில் நாவலைத் தந்தாக வேண்டிய அவசரம் இருந்தது.

நாவலை எழுதத் துவங்கினால்... இடையில் சில காலம் எழுத மறந்ததால் நகைச்சுவை வண்டி ஓடாமல் ஸ்டரக்அப் ஆகி நின்றது. தொடர்ந்து எண்ணெய் போட்டு (ஐ மீன், எழுதி) வைத்திருந்தால்தான் வண்டி ஓடும் என்பதைப் புரிந்து கொண்ட சமயம் அது. ஓடினேன் குருநாதர் சேட்டைக்காரனிடம். அவர் முதல் சில அத்தியாயங்களைத் திருத்தி, அவருடைய ஸ்பெஷல் டச்கள் சிலவற்றை சேர்த்துக் கொடுத்தார். அவ்வளவுதான்... அதையே கெட்டியாகக் பிடித்துக் கொண்டு கடகடவென்று வண்டியை ஓட்ட, அதன்பின் வரும் உவமை, பன்ச் போன்றவை சரளமாக வந்து விழுந்தன. கடகடவென ஒரே வாரத்தில் முடித்து அனுப்பி விட்டேன் நல்ல பிள்ளையாக.

ஆனால் அவர்களின் நிர்வாகப் பிரச்சனைகள் ஏதோ குறுக்கிட, மாதம் ஒன்றாக வெளியிடத் துவங்கினார்கள். அந்த வகையில் நான்காவதாக என் நாவல் இப்போது வெளியாகி இருக்கிறது. (ஹப்பாடா... வந்தாச்சு...)

இது சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற ஒரு அரிய வகை நாவலாகும். படிக்கையில் நிச்சயம் சிரிப்பீர்கள். படித்து முடித்தபின் எதற்காகச் சிரித்தோம் என்று சிந்திப்பீர்கள். ஆகவே இந்தச் சிறப்பான புத்தகத்தை நீங்கள் அனைவரும் வாங்கிப் படித்து உங்கள் விமர்சனத்தை முன்வையுங்கள். மீ ஆவலுடன் வெயிட்டிங்.

புத்தகத்தின் விலை ஐம்பது ரூபாய் மட்டுமே.

புத்தகம் வேண்டுவோர், சென்னையில் 95978 00485 என்ற எண்ணிலும், புதுச்சேரியில் 95978 00487 என்ற எண்ணிலும், கோவையில் 95978 00415 என்ற எண்ணிலும், மதுரையில் 95978 00452 என்ற எண்ணிலும், சேலத்தில் 96009 69301 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பேசினால் புத்தகம் உங்கள் கைகளில் தவழும்.

உடனே பேசிடுவீங்கதான...?

Wednesday, August 2, 2017

“அண்ணே... அவசரமாப் பேசணும்னு சொன்னீங்களே... என்ன விஷயம்ணே?”

“வாய்யா... ப்ளாக் எழுதறதை விட்டுட்டு காணாமப் போய்ட்டவங்கன்னு சொல்லி நம்ம வெங்கட் நாகராஜ் ஒருபோஸ்ட் போட்ருக்காரு தெரியுமா.-? அதுல முக்கியக் குற்றவாளியா உன்னையும் சேத்திருக்காரு. அதான்... ஏன் நீ இங்கிட்டு வரலன்னு கேக்கலாம்னு கூப்ட்டேன்...”

“ப்ளாக் எழுதறதுக்கு நேரம் ஒதுக்க முடியாம முக்கிட்டு இருக்கறதால முக்கியக் குற்றவாளியா சேத்திருப்பாருண்ணே... ஹி... ஹி... ஹி...”

“ஏன் நேரம் ஒதுக்க முடியலை..? என்னாச்சு..?’‘

“வயித்துப் பொழப்புண்ணே. புல்டைம் ஜாபும், பார்ட் டைம் ஜாபுமா நேரத்தைச் சாப்பிட்ருது. வருமானம் வேணும்லண்ணே பொழைப்புக்கு..?”

“முன்ன ப்ளாக் எழுதிட்டிருந்தப்ப கோடீஸ்வரனா இருந்தியாக்கும்..? அப்பவும் துந்தனாதானே பொழப்பு..? அதில்லை சரியான காரணம். என்னான்னு தெரிஞ்சாவணும் எனக்கு இப்ப...”

“உங்களை டபாய்க்க முடியாது. கிடைக்கற கொஞ்ச நேரத்தை முகநூல்ல உலாவுறதுல செலவு பண்ணிட்டிருக்கேன் அண்ணே. அதான் இங்கிட்டு... ஹி.. ஹி.. ஹி...”

‘என்னது..? முகநூலா..? இங்க இல்லாத என்ன வசதி அங்க கெடைச்சிடுது உனக்கு அங்கயே சுத்திட்டிருக்கற அளவுக்கு..?”

“ரெண்டு சமாச்சாரம்ணே. இங்க எழுதி போஸ்ட் பண்ணிட்டு யாராச்சும் கமெண்ட் சொல்வாங்களான்னு பாத்துட்டிருப்போம். அதுக்கு நாம பதில் போட்டு, அத பாத்துட்டு அவங்க பதில் போட்டு... நாளே ஆயிடும்ணே. அங்கிட்டுன்னா பாத்த உடனே கமெண்ட் போடுவாங்க.நாம பதில் சொன்னா, உடனே பதில் சொல்லுவாங்க. போன்ல பேசிக்கறதுக்கு பதிலா டைப்பிங்ல பேசிக்கற மாதிரிண்ணே. அதான்.”

“ஓகோ... அந்த இன்னொரு சமாச்சாரம்..?”

“இங்ஙன எழுதறதுன்னா எதுனாச்சும் டாபிக் வேணும்ணே. கதையோ, கட்டுரையோ யோசிச்சு எழுதணும். அங்ஙன எழுதணும்னா பெருசா யோசிக்க வேண்டியதில்லைண்ணே. நாலு வரி எழுதுனாலே போதும். டைம் கம்மி. ஈஸியா எழுதிரலாம்ணே....”

“ஓகோ... அப்ப சோம்பேறியா ஆக்கிட்டிருக்குது போல அந்த முகநூல் உன்னைய...”

“அப்டியும் ஒரேயடியா சொல்லிட முடியாதுண்ணே. ப்ளாக்லயும், முகநூல்லயும் திரிஞ்சிட்டிருந்தா பத்தாது அச்சு ஊடகத்துலயும் நீ வரணும்னு நமக்கு வேண்டிய சில பேரு தூண்டி விட்டுட்டாங்கண்ணே. அந்த ஆசை தீயாப் புடிச்சுக்கிச்சு இப்ப. போன வாரத்துக்கு முந்தின வாரம் குமுதம் லைஃப் புக்குல என் ஆர்ட்டிக்கிள் ஒண்ணு வந்துச்சுண்ணே...’‘

“அடடே... சொல்லவே இல்லையே... எங்க அது..?’‘



“இதாண்ணே.. பாருங்க...”

“சபாஷ். அழகான லேஅவுட்ல பாக்கவே நல்லாருக்கு...”

“அவ்வ்வ்வ்... பாக்கத்தான் நல்லாருக்கா..? எழுதுனதும் நல்லாருக்குன்னு நெறையப் பேரு சொன்னாங்கண்ணே. இந்த இஷ்யூ ஜன்னல்ல பாக்கெட் நாவல் அசோகன் சாரை இண்டர்வியூ எடுக்க நானும் போயிருந்தேன் அண்ணே. சொன்னா நம்ப மாட்டீங்கன்னு சாட்சிக்கு போட்டோவே போட்ருக்காங்க பாருங்க இங்க...”



“சூப்பர். இப்டி ரெண்டு ப்ளஸண்ட் சமாச்சாரம் சொல்லிட்டு ஒரு கேக் கூடத் தராட்டி எப்டி..? வாய்யா, போலாம்...”

“கேக் இல்லண்ணே. கிராண்ட் பார்ட்டியே தந்துரலாம். ஏன்னா, இந்த ஆகஸ்ட் மாசத்துல என்னோட மொத மாச நாவல் வெளியாகப் போகுது. ஹி... ஹி... ஹி..”

“வாவ்.... யாரு வெளியிடறாங்க..? எப்ப வருது..?”

“பைனலைஸ் ஆயிருச்சே தவிர, வந்தப்பறம் சொல்லலாம்னு வாயைக் கட்டிருக்காங்கண்ணே. அதுனால வந்ததும் ஒடனே இங்கிட்டு வந்து சொல்லிர்றேன்...”

“சந்தோஷம்டே. ஆக மொத்தத்துல, அங்கிட்டும் இங்கிட்டும் உலாத்துவியே தவிர, ப்ளாக் ஏரியாவுக்கு எண்ட்ரி குடுக்க மாட்டேன்னு சொல்ல வர்ற..? அப்டித்தான..?”

“இல்லீங்ணா. பழைய மாதிரி ப்ளோவுல எழுத முடியுமான்னு கொஞ்சம் பயமா இருக்குங்ணா. நான் நல்லா எழுதி நாலு பேரு பாராட்டினா, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் வெங்கட் நாகராஜா?” அப்டின்னு அவரு சந்தோஷப்படுவாரு. சரியா எழுதலன்னா, “இதற்காடா ஆசைப்பட்டாய் வெங்கட் நாகராஜா?” அப்டின்னு சொவத்துல முட்டிக்குவாரே.. அத நெனச்சாத்தான்ணே பாவமா இருக்குது...”

“அப்டிச் சொல்லாதீங்க பாலகணேஷ்.. அப்டில்லாம் நடக்காது. அதெல்லாம் எழுதிடுவீங்க. நீங்க யானை மாதிரி...”

“அவ்வ்வ்வ்வ்... அண்ணே, 108 கிலோ இருந்த வெயிட்டை இப்பத்தான் கொறைச்சு 96க்கு வந்துருக்கேன். இன்னும் தீவிரமா இலியானா மாதிரி ஒல்லியானா என்னன்னு யோசிச்சிங். இப்பப் போயி என்னைய யானைன்னு கேலி பண்றீங்களே...”

“அட, உடம்பு சைஸச் சொல்லலய்யா. எழுதற விஷயத்துல சொன்னேன். தயக்கத்தைத் தூர வெச்சுட்டு தைரியமா உள்ள பூந்து அடிச்சு ஆடுங்க. மறுத்துப்  பேசப்படாது. சொல்லிட்டேன்..”

“சரிங்கண்ணே. முன்ன மாதிரி ஒருநாள் விட்டு ஒரு நாள் எழுதாட்டியும் இனிமே வாரம் ஒண்ணாச்சும் போஸ்ட் எழுதிடறேண்ணே. வாங்க, ட்ரீட்டுக்குப் போகலாம்...”
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube