Thursday, March 8, 2018

உதயமூர்த்தியும், உப்புமாவும்!

Posted by பால கணேஷ் Thursday, March 08, 2018

டி மாதத்து அம்மன் கோவில் ஒலிபெருக்கி போல அலறினாள் சாந்தி. “என்னது..? உன்னோட தம்பி பிரசவிச்சுட்டானா..?”
கண்களில் சலிப்புக்காட்டிப் பார்த்தான் உதயமூர்த்தி. அருகில் நெருங்கி, அவள் காதுகளிலிருந்து இயர்போன்களைப் பிடுங்கிக் கீழே போட்டான். “என் தம்பி ஊர்ல அவன் நடத்திட்டிருந்த ப்ரஸ்ஸை வித்துட்டான்னு சொன்னேன்மா. நெக்ஸ்ட் வீக் இங்க வந்து தங்கி, வேலை தேடப் போறானாம். போன் பண்ணான்”
“நோ வே. உங்க தம்பிக்கும் சேத்து வடிச்சுக் கொட்ட என்னால முடியாது. எங்கனாச்சும் உன்னோட ப்ரண்ட்ஸ் ரூம்ல தங்கிக்கச் சொல்லு...” என்றாள் கண்டிப்பாக. 
“ம்க்க்கும். உள்ளூர்ல உன் வீடு இருக்கறதால பாதி நாள் உன் தம்பிக்கு டிபன், சாப்பாடுன்னு சகலமும் இங்கருந்துதான். பத்து கிலோ அரிசிய பத்தே நிமிஷத்துல காலி பண்ற அந்த சின்டெக்ஸ் டாங்க்குக்கே வடிச்சுக் கொட்டறே... இதைச் செய்ய மாட்டியா..?”
“சாப்பாட்டு ராமன், சின்டெக்ஸ் டாங்க்... இன்னும் எப்டில்லாம என் தம்பிய மட்டம் தட்டறதா ஐடியா உனக்கு.? உன்னோட தம்பியப்போல மனசெல்லாம் வஞ்சனையா இருந்தா உடம்பு ஊசியாட்டம்தான் இருக்கும் உதயா...” என்று அவள் வரிந்து கட்டிக்கொண்டு யுத்தத்துக்குத் தயாராக, சும்மாக் கிடந்த சைரனைத் தெரியாமல் ஆன் செய்து விட்டோமே, இனி இது இப்போதைக்கு ஓயாதே என்று உ.மூர்த்தி ‘ழே’ யென்று விழிக்க, அதே செகண்டில் “அக்கா..” என்று வாசலிலிருந்து குரல் கேட்டது. பல்லெல்லாம் வாயாக எண்ட்ரியானான் சாந்தியின் தம்பி ஹரி.
கேஸ் சிலிண்டர் ஒன்றை நிறுத்தி வைத்து, அதற்குக் கை, கால்கள் கொடுத்து, அதன் மீது பூசணிக்காய் ஒன்றை வைத்து, அதில் சோவின் கண்கள் போல பெரிய கண்கள் கொண்ட ஒரு உருவத்தைக் கற்பனியுங்கள். அதுதான் ஹரி.
உள்நா(வீ)ட்டு உக்கிர யுத்தமொன்றில் உத்தரவின்றி உள்நுழைந்து விட்டதை அறியாமல் உற்சாகமாகப் (எத்தனை உ!!) பேசினான் ஹரி. “மாமா, அம்மாக்கு இன்னிக்கு உடம்பு சரியில்லாததால அக்கா வீட்லயே டிபன், சாப்பாடு சாப்ட்டுக்கோன்னு சொல்லிட்டாங்க. நான் இப்போ டயட்ல இருக்கறதால...”
“இருக்கறதால..?”
“எட்டே எட்டு தோசையோட சிம்பிளா டிபனை முடிச்சுக்கலாம்னு இருக்கேன் மாமா. அக்கா, டிபன் செஞ்சாச்சா..?” என்றபடி வைரமுத்துவை முறைக்கிற ஜீயர் போலத் தன்னை முறைத்த உ.மூ.வைக் கண்டுகொள்ளாமல் சாந்தியை நெருங்கினான்.
“காலைல எழுந்ததே லேட்டுடா. ஸண்டேதானே மெல்லப் பண்ணலாம்ங்கற நெனப்புல இன்னும் லேட்டாயிட்டுது. உங்க மாமா இருக்காரே... மத்த புருஷன்கள மாதிரி வீட்டைப் பெருக்கறாரா, காபி போடறாரா, இல்ல கிச்சன்ல காய் நறுக்கி ஹெல்ப்பாச்சும் பண்றாரா..? ஆபீஸ்ல இருக்கற மாதிரியேதான் இங்கயும் தேமேன்னு உக்காந்திருக்கார்..”
“என்னது..? மத்த புருஷன்களா..? அடிப்பாவி... எத்தனை நாளா எனக்கு துரோகம் பண்ற..?”எப்எம் ரேடியோ அறிவிப்பாளினி போல இன்ஸ்டன்ட்டாக அலறினான் உதயமூர்த்தி.
“அடச்சே... மத்த வீடுங்கள்ல இருக்கற மத்த பெண்களோட புருஷன்களைப் போலன்னு சொல்ல வந்தேன். அதுனால ஹரி.. இன்னிக்கு சிம்பிளா உப்புமா பண்ணலாம்னு இருக்கேன்.”
“ஐயையோ... உன்னோட உப்புமாவா..? போன வாரம் டிபன்பாக்ஸ்ல நீ தந்த உப்புமாவைத் தின்னுட்டு கொஞ்சத்தை எங்க தெரு நாய்க்குப் போட்டேன். அது இன்னி வரைக்கும் என்னைக் கடிக்கறதுக்கு வெறி கொண்டு துரத்திட்டிருக்கு. அதுக்குப் பயந்து ஓடியே நாலு கிலோ குறைஞ்சிட்டேன். ஆள விடுக்கா. சூர்யபவன்ல உளுந்துவடை சைசுக்கு சப்பாத்தி போடுவான். அதைச் சாப்ட்டுக்கறேன்..” என்று அலறியபடி ஓடி மறைந்தான் ஹரி.
“ஹும், சொந்தத் தம்பியே மதிக்கலன்னா மத்தவங்கள என்னத்தச் சொல்றது..?” என்றபடி சமையலறையை நோக்கி நகர முற்பட்ட சாந்தியைக் கையமர்த்தித் தடுத்தான் உதயமூர்த்தி. “நீ இன்னிக்கு அநியாயத்துக்கு என்னைச் சீண்டிட்டே. அதனால... இன்னிக்கு உப்புமாவை நானே செய்யறேன்.” என்றான்.
“ஆ... நமக்குக் கல்யாணமான நாள்லருந்து உங்கிட்ட சூடு, சொரணை, ரோஷம் எதுவும் நான் பாத்ததில்லையே...” சாந்தியின் முகம் எண்ணெயில் போட்ட பூரிபோல உப்பியது. “ஆனா, உன்னால உருப்படியா ஒரு காரியமும் செய்ய முடியாது. விட்று உதயா.”
“யார்டி சொன்னது உருப்படியா நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்னு?”
“போன வாரம் நம்ம வெட்டிங் அனிவர்சரிக்கு வந்த உங்க மேனேஜர்தான்...”
உக்ரமூர்த்தியானான் உதயமூர்த்தி. “ஆபீஸ்ல எல்லாரையும் அவரைப் போலவே நெனச்சுட்டார் போலருக்கு அந்தாளு...・பல்லை நறநறத்தான். 党அடியேய், இன்னிக்கு மட்டும் நான் சூப்பரா உப்புமா செஞ்சு உன்னை அசத்தல...”
“நான் கேக்கறதை வாங்கித் தரணும். டீலா.?” கையை உயர்த்தினாள் சாந்தி.
சனிபகவான் அவன் ஜாதகக் கட்டத்தில் சடுகுடு ஆடுவதை உணராதவனாய், வாராது வந்த அபூர்வ ரோஷத்துடன் பதிலுக்கு கை உயர்த்தினான் உதயமூர்த்தி. “டீல்...”
தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்த சாந்தியை இழுத்தது சமையலறையில் இருந்து வந்த நெய் வாசம். என்ன செய்கிறான் இவன்..? எட்டிப் பார்த்தாள்.
“என்ன உதயா..? உப்புமா பண்றேன்னுட்டு முந்திரி வறுத்துட்டிருக்கே..?”
“இங்க பாரு... பட்டாணி வேக வெச்சு எடுத்தாச்சு. கேரட் நறுக்கி வெச்சுட்டேன். வெங்காயம் வதக்கி வெச்சாச்சு. இப்ப இந்த முந்திரியவும் சேத்து, கூடக் கொஞ்சம் நறுக்கின தக்காளியும், பொடிப் பொடியா வெட்டின பீன்சும் போட்டு, கூடக் கொஞ்சம் கறுவேப்பெலையும், பத்து துண்டு பச்சை மிளகாவும் போட்டு...”
“ஏன், முட்டைக்கோஸ், இஞ்சியெல்லாம் விட்டுட்டே...?”
“ஆ... மறந்துட்டேன். தேங்க்ஸ். அதெல்லாத்தயும்கூடப் போட்டுக் கிளறி எறக்கிக் காட்டறேன்டி. நீ பண்றதுக்குப் பேரு உப்புமாவாடி..? போய் அஞ்சு நிமிஷம் ஹால்ல டிவி பாத்துட்டிரு. முடிச்சுட்டுக் கூப்டறேன், போடி பூந்தி”
“எனக்கு வராம இருந்தாச் சரி வாந்தி..” என்றபடி வெளியேறினாள் சாந்தி.
ந்தப் பூனையின் கிடார் இசைக்கு அறையே அதிர்ந்தது. எலியானது தலையணையைக் காதில் வைத்துப் பொத்திக் கொண்டும்கூட, சத்தம் அதைத் தூக்கிப் போட, கட்டிலில் இருந்து அது கீழே விழுந்து, பூந்தொட்டி அதன் தலையில் விழுந்து தலை கிர்ரென்று சுற்ற, விழித்தது அது. 
பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த சாந்தியை இழுத்தது உள்ளேயிருந்து வந்த உ.மூ.வின் அபயக்குரல். “சாந்திம்மா, இங்க கொஞ்சம் வாயேன்...”
சமையலறையின் உள்ளே செல்ல உதயா, எக்ஸிபிஷனில் காணாமல் போன குழந்தை மாதிரி திருதிருவென விழித்தபடி நின்றிருந்தான். “என்னமோ தெரியலம்மா. எல்லாச் சமாச்சாரங்களையும், ரவையவும் போட்டு பத்து நிமிஷமாக் கௌறிட்டிருக்கேன். கெட்டியாகவே மாட்டேங்குது...”
“ஸ்டவ்வைப் பத்த வெச்சிருக்க மறந்துருப்ப. வேறென்ன..” என்று கிடைத்த சாக்கில் அவனைக் கால்வாரியபடி கவனித்தாள். அடுப்பு சரியாகத்தான் எரிந்தது. சட்டியில் எல்லாச் சமாச்சாரங்களும் கொதித்துக் கொண்டுதான் இருந்தன. பின்னே என்னவாகியிருக்கும்..? குழம்பியபடி பார்த்தவளின் பார்வையில் பட்டது ஸ்டவ்வின் அருகிலிருந்த டப்பா.
அடுத்த கணம்...
பெயரிலிருந்த அமைதியைத் தொலைத்து, கோபமாகக் கேட்டாள். “ஏய் உதயா, என்னது இது.?”
“இதுவா..? ரவை டப்பா. இதுலருந்துதான் கொட்டிருக்கேன் ரவையை...”
“அடப்பாவி...” சீறினாள் உதயா. “என்ன வேலையப் பண்ணி வெச்சிருக்கே..?” என்றபடி அவனை மொத்தத் துவங்கினாள். நான்கைந்து அடி அடித்தவள், அடுத்த கணம் குமரிமுத்துவும் பி.எஸ்.வீரப்பாவும் சேர்ந்து சிரிப்பதைப் போல வித்தியாசமான ஒரு டோனில் அடுக்கடுக்காகச் சிரிக்கத் தொடங்கினாள்.
ஒன்றும் புரியாமல் ‘ழே’ என்று விழித்தபடி பரிதாபமாகக் கேட்டான் உ.மூ. “பழைய படத்துல சிவாஜிகணேசன் பண்ற மாதிரி இப்டி கோவிச்சுக்கிட்டே சிரிச்சா எப்டி சாந்தி..? என்ன விஷயம்னு சொல்லிட்டாச்சும் சிரியேன், ப்ளீஸ்..”
“யோவ் லூசு... ஹாஹாஹா... டப்பாவைச் சரியாப் பாக்க... ஹாஹாஹா... மாட்டியா..? இது ரவை... ஹாஹாஹா.. இல்லடா. காலைல நான்.. ஹாஹாஹா... வாங்கி வெச்ச கோலமாவு...” சிரித்தபடியே கோபத்துடன் அவன் தலையில் அவள் ஓங்கிக் குத்த, ஈரேழு பதினான்கு லோகங்களும் இருமுறை சுற்றிவிட்டு நேராகி நின்றன அவனுக்கு.
அடுப்பை அணைத்தபடியே, “பாவி மனுஷா... நீ கொட்டின தக்காளி, முந்திரி, எட்செட்ரா எட்செட்ராவை மட்டும் வறுத்துத் தின்னிருந்தாலே பசி அடங்கியிருக்கும். இப்ப அத்தனையும் வேஸ்ட்டு. உன்னைச் சொல்லிக் குத்தமில்லய்யா. உங்கம்மாவோட வளர்ப்பு அப்டி...” என்று அவள் அர்ச்சனையை ஆரம்பிக்க, “ஹி.. ஹி.. ஹி..” என்று இளித்தபடி நழுவலானான் உ.மூ.
“ஏய், நில்லு...” சட்டையைப் பிடித்து இழுத்தாள். “கேவலமாக் கூட உப்புமாச் செய்ய முடியாம நீ தோத்துட்ட. ப்ராமிஸ் பண்ணா மாதிரி நான் கேக்கறதை வாங்கிக் குடுத்தாகணும் நீ...”
“ஹி... ஹி... பந்தயம்லாம் ஒரு விளையாட்டுக்குப் போட்டுக்கறது சாந்திம்மா. இதயெல்லாம் சீரியஸா எடுத்துக்கலாமா..? ஹி... ஹி...”
“மரியாதையா சொன்ன வாக்கைக் காப்பாத்தணும். இல்லாட்டி இந்த வாரம் பூரா மூணு வேளையும் உனக்கு உப்புமாதான்.”
“ரைட்டு. என்ன வேணுமோ கேளு..” தெம்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் என்னத்தைக் கேட்டுத் தொலைப்பாளோ என்று உள்ளே குதிரைக்குட்டி உதைத்தது உ.மூ.வுக்கு.
“எனக்கு ஒரு ஆப்பிள் வாங்கித் தந்துடு...”
“செல்லாக்குட்டி..” ரிலாக்ஸானான் உ.மூ. “ஒண்ணு இல்லடா, ஒரு டஜனே வாங்கித் தரேன், போதுமா..?”
கேஸ் தீர்ந்து போன ஸ்டவ் எரிவதுபோல, பகபகவெனச் சிரித்தாள் சாந்தி. “லூசு... நான் கேட்டது திங்கற ஆப்பிள் இல்ல... ஆப்பிள் ஐபோன்”
“என்னது..?” தலை சுற்ற ஆரம்பித்தது உ.மூ.வுக்கு. “இப்ப நீ வெச்சிருக்கறதே என்னைவிட ஸ்மார்ட்டான போனாச்சே... வேற எதாச்சும் கேள்டா செல்லம்..”
“போனா இது..? பலசமயம் மக்கர். நான் பேசினா எதிர்முனைல இருக்கறவங்களுக்கு சரியாவே கேக்க மாட்டேங்குது.’‘
“அப்படியாப்பட்ட நல்ல போனைப் போய் மாத்தலாமா சாந்தி...” என்றவனை, கை நீட்டி எச்சரித்தாள். “மரியாதையா சொன்ன வாக்கைக் காப்பாத்திடு. இல்லாட்டி உன் பனிஷ்மெண்ட் ஒரு வாரம்ங்கறதை ஒரு மாசம்னு மாத்திடுவேன்...”
தலையைச் சுற்றிப் பல ராக்கெட்டுகள் பறக்க, தடாலெனத் தரையில் சரிந்தான் உதயமூர்த்தி.
• • •

27 comments:

  1. ஹாஹா. செம ரகளை. இதுக்குத்தான் வாய்விட்டு மாட்டிக்கக் கூடாதுங்கறது. சொன்ன்னா யார் கேட்கறா?

    ReplyDelete
    Replies
    1. கர்ரீக்ட்டு... சமையல் சமாச்சரத்துல சவால் விடலாமோ..?

      Delete
  2. நடையை ரசித்தேன். விறுவிறுவென்று.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் நன்றி ஐயா.

      Delete
    2. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since Tamil Books

      Delete
  3. கதை நல்லா இருக்கு. எங்க வேணும்னாலும் வம்பு வளக்கலாம். பெண்டாட்டி, அவளைச் சேந்தவங்ககிட்ட வச்சுக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டை பறக்கும், இல்லை உப்புமா கிடைக்கும். ஹி... ஹி...

      Delete
  4. எத்தனை எதனைக் கற்பனைகள் கூடவே சிரிக்க வைக்கும் சம்பவங்கள் பலேகணேஷ்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து மகிழ்வு தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  5. பழைய வீட்டுக்கு கணபதி பூஜை பண்ணி இருக்காப்ல இருக்கு?!

    ReplyDelete
    Replies
    1. அப்பப்ப இந்த வீட்லயும் உலா வரலாம்னு ஆசைப்பட்டுத்தான்...

      Delete
  6. உப்புமான்னாலே எல்லாம் தப்புத் தப்பாத்தான் ஆகுது!

    ReplyDelete
    Replies
    1. உப்புமா தப்பும்மா. தின்னாமல் பொண்டாட்டி கிட்டருந்து தப்பணும்னா முடியுமா..?

      Delete
  7. ரொம்ப நாளைக்கப்புறம் செஞ்ச உப்புமா சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அப்ப அடுத்து மசால்தோசை, பாசந்தி எல்லாம் ரெடி பண்ணிரலாமா முரளி..?

      Delete
  8. சிரிப்பு உப்புமா! சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அருமையான எண்ணங்கள் - தங்கள்
    கைவண்ணங்களில் அழகாயிருக்கு!

    ReplyDelete
  10. ஹாஹா! மனம் விட்டு சிரித்தேன். என்ன இருந்தாலும் ஹாஸ்பேண்ட் அடி வாங்கினால் அலாதி சந்தோஷம்தான் ;)

    ReplyDelete
  11. உதயமூர்த்திக்கு வாக்கு ஸ்தானத்தில் சனியோ என்னமோ. உப்புமா கெட்டியாகவில்லை என்றதுமே போட்டது கோலமாவு என்பதை யூகித்துவிட்டேன்.

    ஐபோன் SE இப்போ ரூ.20000+ கே கிடைக்குதே. அதை வாங்கி கொடுத்து சமாளிக்க வேண்டியதுதான்.

    நீண்ட நாள் கழித்து உங்கள் தளத்தில் புது கதையை படித்ததில் மகிழ்ச்சி.
    http://onlinethinnai.blogspot.com

    ReplyDelete
  12. சிரிப்பையும் சேர்த்து கிண்டி விட்டீர்கள்.

    ReplyDelete
  13. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since Tamil Books

    ReplyDelete
  14. அனுராதா ரமணன் எழுதியதில் அவருடைய பக்கத்து வீட்டில் இவ்வாறு நிகழ்ந்ததாக எழுதியிருக்கிறார்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube