Friday, May 30, 2014

ஒரு கொலவெறிக் க(வி)தை!

Posted by பால கணேஷ் Friday, May 30, 2014
குறுகுறு குழந்தைகள் துள்ளி விளையாட...
விறுவிறுவென முதியோர் நடை பழக...
துறுதுறுவெனக் காதலர்கள் கூடிமகிழ...
பரபரப்பான நகரின் நடுவே அவ்வமைதிப் பூங்கா!

வானமது நீலநிறத்தினை யிழந்து அடர்
கருமை பெற்றிடும் நேரந் தன்னிலே
பொறுமையினை யிழந்து ராகுல் ஒரு
எருமையென உலாவிய அந்(தி)நேரத்திலே...

ஆடிகாரென ஓசையின்றி ஆடியசைந்து மெல்ல
அருகினிலே வந்திட்டாள் அழகுநங்கை விலாசினி!
குறுநகையொன்றை அவன்மேல் வீசி - காதலனுக்குக்
காத்திருத்தலே அழகு கண்ணா வென்றிட்டாள்!

காதலெனும் அத்தியாயந்தான் முடிந்ததடி கண்ணே...
கல்யாண அழைப்பிதழும் காண் இதோவென்று
காளையவனும் புன்னகை சிந்தி நீட்டிட...
மணமகன் அவனென்றும் மணமகள் அவள்
தோழி மது(வந்தி)யென்றும் பகன்றது பத்திரிகை!

விஜயகாந்த்போல் விழிகள் சிவந்திட
வீறிட்டலறினாள் அழகுநங்கை விலாசினி..!
பாரினிற் சிறந்த அழகி நானெனப் பலநாள்
பகன்றதெல்லாம் பொய்யோ - நீயும் தினம்
மலர்விட்டு மலர் தாவுமொரு வண்டோ...?

மதுவென் னுள்ளிருக்க மதுவின் வீட்டினில்
மழைநாளொன்றில் யான் ஒதுங்கிடவே நேரிட
வழக்கம்போல நம்மரசு மின்சாரத்தைப் பறித்திட
விளைந்திட்ட விளைவாய் மதுவினுள்ளே யின்று
மழலையொன்று விதை கொண்டிட்டதே கண்மணி...


சீராய்ப் பலமுறை யோசித்து யான்.இழைத்திட்ட தவறுக்கு
பிராயச்சித்தம் இதுவெனத் தெளிந்தே மனதின் ஆசைக்கு
மாறாய் முடிவெடுத்தேனவளை மணந்திடவே - மங்கையெனை
மன்னித்தே விலகிடுவாயென ராகுலவன் இயம்பிடவும்...
கண்ணிரண்டும் சிவந்திருக்க பாவையவனை ஏறிட்டாள்...

காவலனாய் நீயிருப்பாய் என நினைக்க நீயோ
கேவலனாய் மாறிடுவாய் என கனவிலும்
யான் நினைத்தேனில்லை தடியா.... ஒழி
என் கண்முன் நில்லாதே இனி...! கண்டால்
கொன்றிடுவேன் நானுனை யென்றாள்...!

கோபம் கொப்பளித்த மங்கையின் மதிமுகத்தை
தாபமுடனொரு முறை பார்த்து ராகுல்வன் நகர...
அரக்கனே நில்.... போவதற்கு முன்பெனக்கு
அரவிந்தனெனும் உன் நண்பனின் அலைபேசி
எண்ணைத் தந்தே யொழிவாய் பாதகா வென்றாள்!

Wednesday, May 14, 2014

மின்னல் திரை : யாமிருக்க பயமே

Posted by பால கணேஷ் Wednesday, May 14, 2014
நீண்ட நாட்களுக்குப் பிறகு குறை சொல்வதற்கு அதிகமில்லாமல் நிறைவாக வந்திருக்கும் ஒரு தமிழ்ப்படம் ‘யாமிருக்க பயமே’. பொதுவாக ஒரு திகில் படத்தின் இடையில் நகைச்சுவைக் காட்சிகள் வருவது படத்தின் திகிலை நீர்த்துப் போகச் செய்துவிடும். இவ்ர்கள் சற்று மாறுதலாக நகைச்சுவைக் காட்சிகளிலேயே திகிலை வரவழைக்கலாமே என்று முயன்று அதில் வெற்றியும் அடைந்துள்ளார்கள்.

கதை என்னமோ சிம்பிள்தான். கடன் கதாநாயகனின் கழுத்தை நெறிக்க, தந்தைவழி பூர்வீக சொத்தாக ஒரு பழைய பங்களா கிடைக்க, அதை ஒரு ஹோட்டலாக மாற்றி புதுப்பிக்க, அவனுக்குத் துணையாக மேனேஜரும் அவன் தங்கையும். அங்கே தங்க வரும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் மரணமடைய, கதாநாயகன் பிணங்களை மறைக்க, ஒருசமயம் தோண்டிய பிணங்கள் எதுவும் குழியில் இல்லை என்பது தெரிய, இவர்கள் அதிர, மர்ம உருவமாக நடமாடும் ஒருவனை இவர்கள் மடக்கிப் பிடிக்க, ஆவியின் (கோவை ஆவி அல்ல...) சரிதம் இவர்களுக்குப் புரிய, கதாநாயகனின் உயிருக்கு ஆவி குறிவைக்க, எப்படித் தப்புகிறான் என்பதை விளக்கி படம் நிறைவடைகிறது.

கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்கள் நான்கு. கதாநாயகனாக வரும் கிருஷ்ணா திகில் காட்சிகளில் பயந்தும், ஆங்காங்கே அசடு வழிந்தும், சொத்துக்கு வாரிசானவனின் அதிகார தோரணையை வெளிப்படுத்தியும் படத்துக்குத் தேவையான சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாநாயகியாக ரூபா மஞ்சரி அழகாக இருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார். ஓரிரண்டு க்ளோஸப் காட்சிகளில் பயமுறுத்துகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஓவியா தன்னுடைய திறந்த நடிப்பை... ஸாரி, சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். மேனேஜராக வரும் கருணாகரனின் நகைச்சுவை கலந்த நடிப்பு படத்துக்குப் பெரிய பலம். சீரியஸான் காட்சியில் கூட, ”ஏன் பாஸ்... இவன் தலையில அடிச்சு காலி பண்ணினது மேடம்தான். இந்தக் கொலையை என் கணககில சேர்க்க மாட்டீங்கல்ல...?” என்று இவர் கேட்கையில் சிரிப்பை அடக்க முடியவில்லை. சூப்பருங்கோ!

சாதாரணமாக திகில் படங்களில் வரும் க்ளிஷேக்களான கதாநாயகி பயந்து நடுங்குகையில் பூனை தாவுவது போன்ற விஷயங்களை கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள். ‘காஞ்சனா’ மாதிரி படங்களில் பேய் வரும் காட்சிகள் திகிலாகவும் மற்ற காட்சிகளை நகைச்சுவையாக அமைத்தும் இரண்டையும் மிக்ஸ் செய்வார்கள். இதில் நேர்மாறாக பேய் வருகிறது என்பதையே நகைச்சுவையாக பயன்படுத்தியிருப்பது அசத்தல்... “வாடா... வாடா... பன்னிமூஞ்சிவாயா...” என்று பேயைக் கூப்பிடும் காட்சிகளில் தியேட்டரில் கலகலப்பு. 

விசாரணைக்கு வரும் இன்ஸ்பெக்டர், ஸ்கூல் டீமை நடத்திவரும் டீசசர், மகாநதி சங்கர் போன்ற துணை கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளார்கள் என்றால், ஏறத்தாழ க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் வரும மயில்சாமி சிக்ஸர் அடித்திருக்கிறார். கதைக்கும் நகைச்சுவைக்கும் தேவைப்படும் அவரது காரெக்டரைசேஷன் அருமை. படம் பார்க்கும் போதே இப்படி நகைச்சுவையான திகிலுக்கு என்ன மாதிரி க்ளைமாக்ஸ் அமைப்பார்கள் என்று சிந்தனை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தது. பிரச்னையை ஆரம்பித்து வைத்த மகாநதி சங்கர் கேரக்டரை க்ளைமாக்ஸில் கொண்டு வந்து. அவர் மூலமே முடித்தும் வைத்திருப்பது அருமையான திரைக்கதை உத்தி.

பயத்தை விதைக்கும் நோக்கில் காட்சிகளை அமைக்கையில் கதாநாயகி பயந்து ஓடுவதும், வியர்வையில் நனைந்து ஈரமாகி, நெஞ்சத்தை கையால் அழுத்திக் கொண்டு பயப்படுவதும் பார்க்கையில் ‘இன்னும் கொஞ்ச நேரம் பயப்படுடி செல்லம்’ என்று பார்க்கிறவர்களுக்குத் தோன்றும் விபரீதங்கள் பல திகில் படங்களில் நேர்வதுண்டு. இதையே சாக்காகப் பயன்படுத்தி திகில் படங்களில் செக்ஸியான காட்சிகளையும் வைக்கலாம். இந்தப் படத்திலும் அந்த வசதியைப் பயன்படுத்தி (ஓவியாவின் முதுகில் பிட்நோட்டீஸே ஒட்டலாம்)  ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனங்களாலான நகைச்சுவை தலைகாட்டுகிறது. நல்லவேளையாக... படம் போகிற வேகத்தில் கவனிக்கப்படாமலும் போகின்றன.

டீச்சர் வைததிருக்கும் டப்பாவில் எத்தனை ஜெம்ஸ் இருக்கிறது என்று கருணாகரன் சொல்வது, அந்தப் பள்ளிக்கூட டீமில் மட்டும் யாரும் ஏன் இறக்கவில்லை என்று பார்ப்பவர் மனதில் எழும் கேள்விக்கு இன்ஸ்பெக்டர் கேரக்டர் மூலம் பதில் வைத்திருப்பது என்று ஆங்காங்கே திரைக்கதையில் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது. அந்த ப்ரைட் ரைஸ் திருடனாக வருபவர் சொல்லும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் பேயாக வரும் பெண் வெகு அழகாக இருக்கிறார். (நாங்கல்லாம் பேயையே சைட் அடிப்போமில்ல...) ஓவியாவை இந்த கேரக்டருக்குப் போட்டிருந்தால் டைரக்டருக்கு மேக்கப் செலவாவது மிச்சமாகியிருக்கும், ஹும்...!

 ”பம்ப்செட் பத்மினிகள் படத்தை நீங்க பார்த்ததுல வியப்பில்லை பாஸ். இவங்க எப்படிப் பாத்தாங்கன்றதுதான் ஆச்சரியம்” என்கிற கருணாகரனிடம் அசடுவழிந்து ரூபாமஞ்சரி எஸ்கேப்பாவது. “மூடிக்கிட்டு குழியை வெட்டுரா...” “நான் வாயே திறக்கலையே... ஏன் மூடச் சொல்றாரு?” ”முண்டம். அவர் சொன்னது ஜிப்பை. முதல்ல மூடு” என்கிற காட்சி என்று நிறைய நிறைய காட்சிகளில் வாய்விட்டு. மனம் விட்டுச் சிரிக்கலாம்.

படத்தின் பிண்ணணி இசை கொஞ்சமும் உறுத்தல் எதுவும் இல்லாமல் படத்திற்குத் தேவையானதை வழங்கியிருக்கிறது. (அந்த அறிமுக இசையமைப்பாளரின் பெயரைக் குறித்துக் கொள்ளத் தவறி விட்டேன். ஸாரி) இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் கே.வி.ஆனந்தின் சிஷ்யர் டீக்கே - விறுவிறுப்பான, கலகலப்பான திரைக்கதைக்காக இவருக்குச் சொல்லலாம் ஓக்கே!

ஏதாவது ஒரு நல்ல விஷய்ம் ./ திறமை நம்மவர்களிடமிருந்து வெளிப்பட்டால் ’இது ஒரிஜினல் இல்ல... ரஷ்யப் படத்துலருந்து சுட்டது’ ‘ஜப்பான் படத்துலருந்து உருவுனது’ என்றெல்லாம் சொல்ல ஒரு கும்பலே புறப்படும். அந்த வகையில் இந்தப் படமும் ஒரு கொரியத் திரைப்படத்தை தழுவியது என்று இந்தத் தளத்தில் குற்றச்சாட்டை வீசியுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவ்வளவு அழகாக நம் மொழிக்கு ஏற்றாற்போல் நல்ல என்டர்டெய்னரைக் கொடுக்க முடியுமென்றால் சுடுவது சுகம்!  (அட... ‘சுடுவது சுகம்’ங்கறது க்ரைம் கதைக்கு நல்ல டைட்டில் இல்ல...?)

Monday, May 5, 2014

மொறு மொறு மிக்ஸர் - 25

Posted by பால கணேஷ் Monday, May 05, 2014
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை 
முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், ''கோழி இன்னும் சாகலையாப்பா?''

ன்னடத் திரையுலகின் இளம் நடிகரான ரக்‌ஷித் ஷெட்டி முதல் முறையாக இயக்கி நடித்த படம் ‘உலிதவரு கண்டந்தே (Ulidavaru Kandante)  -- என்றால் ‘மற்றவர் பார்வையில்’ என்று பொருள் என்று கன்னடம் தெரிந்த நண்பர் பிரபுகிருஷ்ணா சொன்னார். சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால் அந்தப் படம் புரியவில்லை, என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை என்றெல்லாம் புகார்கள் எழுந்ததால் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக படத்தின் மொத்த்த் திரைக் கதையையும் பி.டி.எப் பைலாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். பட்ம் தியேட்டர்கள்ல ஓடிட்டிருக்கும் போதே முழுத் திரைக் கதையையும் வெளியிட்ட இவங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. இங்கே க்ளிக்கினால் கன்னடத்திலும், இங்கே க்ளிக்கினால் ஆங்கிலத்திலும் டவுன்லோடு செய்து படிக்கலாம். எனக்குக் கூடத்தான் நிறைய தமிழ்ப் படங்கள் புரிவதில்லை. அதாவது...  ஏன் எடுக்கிறார்கள் என்றே புரிவதில்லை. ஹி.... ஹி... ஹி...!
=======================================================================================
ரு கல்யாணத்தில் திரு,கிரேசி மோகனும் திரு ஏ.ஆர்.எஸ்ஸும் பேசிக்கொண்டதை ஒட்டுக்கேட்டதில்....

ஏ.ஆர்,எஸ்: “மோகன்! ஒரு நாள் வீட்டுக்கு வாயேன். பழய போட்டொவெல்லாம் காட்டறேன்! எம்ஜிஆர் வித் தொப்பிவித்தவுட் தொப்பி...”

கிரேசி: “நீங்க எங்க வீட்டுக்கு வாங்க! நானும் நிறைய போட்டோ வித்தவுட் எம்ஜிஆர் - காட்டறேன்..”
=======================================================================================
ந்தசாமிப்பிள்ளை ஆழ்ந்த சிந்தனையுடன் தலையை நிமிர்த்தி கூரையை நோக்கிய வண்ணம் உட்கார்ந்திருந்தார். “என்ன பிள்ளைவாள்... என்ன அவ்வளவு அபாரமாய் யோசிக்கிறீர்?” என்றார் முதலியார். “பொழுது விடிந்தால் கவலைப்படுவதற்கே நேரம் போதவில்லையே... பலவிதத் தொல்லை...” என்றார் பிள்ளை. “அது என்னய்யா அப்படிப்பட்ட தொல்லை? எழுந்து வாருங்காணும்... இப்படிக் காற்றாட வெளியில் போய்விட்டு வரலாம்...” என்றார் முதலியார். “ஓய்! என்னுடைய கசலையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வரக் கூடியதல்ல...” என்றார் பிள்ளை. “பூ! அப்படிப்பட்ட கவலை என்னென்ன சொல்லும். ஒரேயடியாகக் குறைக்க வழி சொல்கிறேன்...” -முதலியார். பிள்ளை ஆரம்பித்தார், “ஸார்! பொழுது விடிந்தால் பொங்கல் பண்டிகை. சாமான் வாங்கிப் போடணும். குறைந்தது பத்து ரூபாயாவது ஆகும். என் தங்கை ஊரிலிருந்து வந்திருக்கிறாள். அவளுக்கு ஒரு நூல் புடவையாவது வாங்க ஆறு ரூபாய் வேண்டும்... கை மாற்றுக் கடனைத் திருப்ப 5 ரூபாய் தேவை. பால் பாக்கி எட்டு ரூபாய்..! பார்த்தீரா...? ஒன்றா, இரண்டா கவலைப்படுவதற்கு..?”. முதலியார்,“இவ்வளவுதானே..? இவ்வளவு காரியங்களைச் செய்வதற்கு இருபத்தொன்பது ரூபாய் வேண்டும் இல்லையா..?” என்றார். “ஆமாம்” என்ற பிள்ளையிடம், “இப்பொழுது ரூபாய் 29 வேண்டும் என்ற கவலையாயிருக்கட்டுமே. எதற்காக பாக்கி கொடுக்கணும். சாமான் வாங்கணும், புடவை எடுக்கணும் என்று பலவிதமாய் கவலைப்படுகிறீர்?” என்றார்.
--26.3,1939 விகடனில் ‘சாவி’ எழுதிய சின்னஞ்சிறு கதை
=======================================================================================
ரிரண்டு பதிவுகளுக்கு முன்னர் நான் ட்ரிபிள் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டு இருப்பதைக் கவனித்தேன். இதொன்றும் மார்தட்டிக் கொள்கிற அளவுக்கு பெரிய சாதனை இல்லைதான். என்றாலும் இதுவரை என்ன எழுதியிருக்கிறோம் என்ற போன வாரம் ஒருநாள் ‘பொழுதுபோகாத பொம்முவாக இருந்தபோது பெரும்பாலான பகிர்வுகளை மறுவாசிப்பு செய்தேன். எந்த ஒரு பகிர்வும் ‘இதை ஏன் எழுதினோம்?என்று வருத்தப்பட வைக்கவில்லை என்கிற மகிழ்வும், சிலவற்றை இப்போது படிக்கையில் நாம் தானா எழுதியது?என்ற வியப்பும் என்னுள் எழுந்த்து.

இந்த இரண்டுக்கும் காரணமானவர் நீங்கள். எல்லாப் புகழும் உங்களுக்கே. உங்களனைவருக்கும் மனதின் ஆழத்திலிருந்து மகிழ்வான நன்றி!

(20ம் நூற்றாண்டு நரி என்கிற ஆங்கிலப்பட நிறுவனத்தின் லோகோ எனக்கு மிகப் பிடிக்கும் என்பதால் 200க்கு போட்ட அதே படத்தை 300க்கும் மாற்றி விட்டேன். ஹி... ஹி... ஹி...!)

Saturday, May 3, 2014

சுஜாத்...ஆ!

Posted by பால கணேஷ் Saturday, May 03, 2014
மிழில் சில பிரயோகங்களின் ‘லாஜிக்’ எனக்குப் புரியவில்லை. இலக்கண ஆசிரியர்கள் ஏதாவது காரணம் சொல்லி விளக்கலாம். எழுத்தாளன் என்கிறோம். ஏன் கொலையாளன் என்பதில்லை? கொலையாளி என்கிறோம், உளவாளி ஏன் உளவாளனாவது இல்லை. இதற்கெல்லாம் எங்கேயாவது விதி இருக்கிறதா? பார்த்தால் இலக்கணப் புத்தகங்களில் கிடைக்காது என்றே தொன்றுகிறது. ஆனால் ‘உளவன்’ என்கிற வார்த்தை இருந்திருக்கிறது. இழந்து விட்டோம். உளவன் என்றால் SPY. ‘உளவன் இல்லாமல் ஊரழியாது’ என்கிறது குமரேச சதகம். அதை ஏன் உளவாளி ஆக்கினோம் என்று புரியவில்லை.

தமிழில் நாம் பல சொற்களை இழந்து விட்டோம். ‘இதைத் துடைச்சுரு’ என்கிறோம். துடைப்பதற்கு மற்றொரு நளினமான வார்த்தை இருந்திருக்கிறது. ‘உவனித்தல்’. ஒரு வில்லை அதை எய்துவதற்கு முன் துடைப்பதற்கு, ஏன் தயார் செய்வதற்கும் ஏற்பட்ட வார்த்தை. சீவக சிந்தாமணியில் ‘வில்லன்றே உவனிப்பாரும்’ என்று வருகிறது. எய்யத் தொடங்குவதற்குமுன் ஒருவாறு Preparation for take off. ராக்கெட் விடுவதற்கு முன் count down இவைகளுக்குப் பயன்படுத்தலாம். ‘ஏவுகணையை உவனித்தல்’. இம்மாதிரியான ஆயிரக்கணக்கான வார்த்தைகள் நம் திவாகரம் பிங்கலம் போன்ற நிகண்டுகளில் உள்ளவை வழக்கொழிந்து போவதற்குமுன் அவைகளை தூசுதட்டி புதுப்பித்து கலைச் சொற்களாக பயன்படுத்த இயலும் என்பதை நான் எல்லா மேடைகளிலும் சொல்லக் கொண்டு இருக்கிறேன்.

கணிப்பொறி வார்த்தைகள் Hardware, Software, Operating System போன்றவைகளுக்கெல்லாம் புதிய வார்த்தைகள் தேடவேண்டிய அவசியமே இல்லை. கலைச்சொற்கள் அமைப்பதில் நமக்கு ஒரு கோட்பாடு சரிவர அமைக்கப்படவில்லை. அதனால்தான் தமிழார்வத்தில் இஷ்ட்த்துக்கு வார்த்தைகளை அமைத்துக் கொண்டு இருக்கிறோம், உதாரணமாக ‘கட்டுமானப் பொறியியலில் கண்டதுண்ட பகுப்பாய்வு’ என்று ஒரு கட்டுரையைப் பார்த்தேன். இது எந்த இயல் பற்றியது என்பதாவது புரிகிறது. கட்டுமானப் பொறியியல் என்று ஆர்க்கிடெக்சரைச் சொல்கிறார். ஆனால் கண்டதுண்ட பகுப்பாய்வு..? அதில் வரும் முக்கியமான கணிப்பொறித் திறனான finite element analysis-க்கு கட்டுரையாளர் அமைத்துக் கொண்ட கலைச்சொல். இதை நாம் அங்கீரிக்குமுன் ‘கண்டதுண்டம்’ என்றதும் ஓர் ஆளை வெட்டிப் போடுவதை நாம் மறந்துவிட வேண்டும்.

-ஜுனியர் போஸ்ட், 17,12,1997

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

......‘ஒண்டித்வனி’ (தனிக்குரல்) என்று பெயர் வைத்து நாகாபரணா படப்பிடிப்பைத் துவங்க பூஜை போட்டார்கள். ‘24 ரூபாய் தீவு’ கதையைப் பற்றி அப்போது முன்னணியில் இருந்த நடிகர் அம்பரீஷ் கேள்விப்பட்டார். ‘ஒள்ளே கதே’ என்று தன்னிச்சையாக அதில் நடிக்கிறேன் என்று முன்வந்தார். அதில் நடிக்கவிருந்த சுந்தர்ராஜன் நீக்கப்பட்டார். கதைக்குக் கேடுகாலம் துவங்கியது. கன்னட நடிகை மஞ்சுளாவும் ‘நானும் உண்டு’ என்று சேர்ந்து கொண்டார். தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு சந்தோஷம். அம்பரிஷ் ஒருவகையில் சூப்பர்ஸ்டார் கேட்டகெரி-2 அந்தஸ்தில் இருந்தார். (ராஜ்குமார் நம்பர் 1)

“அம்பரீஷுக்காக சின்னச்சின்ன மாற்றங்களும் சமரசங்களும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சின்ன ஃபைட் சீனு, சிஸ்டர் வெச்சு ஒரு சாங், அவ்வளவுதான்” என்று தயாரிப்பாள்ர் சொன்னார். “படப்பிடிப்பு மைசூர் ராஜா பேலசில் நடந்து கொண்டிருக்கிறது. வந்து பாருங்கள்” என்றார். போனேன். நாகரா அலற, மஞ்சுளா நடனமாட, சுற்றிலும் திண்டு  போட்டு சேட்டுகள் வீற்றிருந்து நோட்டுகளை தலையைச் சுற்றி விசிறிக் கொண்டிருந்தார்கள். நான், “இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது?” என்ற என்னுடைய பழக்கமாகிவிட்ட கேள்வியைக் கேட்டேன். “அம்பரிஷ் நடிப்பதால் கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி நீங்கள் எழுதியபடியே எடுத்திருக்கிறோம்” என்றார்.

படம் வெளிவந்து கினோ தியேட்டரில் பார்த்தேன். உயிரோட்டமுள்ள ஒரு கதையை இயன்ற அளவுக்கு விகாரப்படுத்தியிருந்தார்கள். வெளியே வந்த ரசிகர்கள் “கதே பரிதவனு யாவனப்பா?” என்று அதட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள், நான் மஃப்ளரால் முகத்தை மறைத்துக் கொண்டு விலகினேன். படம் ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டு ஒரு வாரத்தில் தூக்கப்பட்டது.

-பார்வை 365 நூலிலிருந்து...

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தவு மெல்லத் திறக்க வினிதா நடுங்கிக் கொண்டே வெளியே வந்தாள், “இஸ் தி ஷூட்டிங் ஓவர்? வஸந்த், உங்களுக்கு ஏதாவது அடியா?” என்றாள். “அப்படி ஒண்ணும் பிரமாதமில்ல. சின்னதா மார்ல குண்டு பாய்ஞ்சிருக்கு. ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டா சரியாப் போயிடும், உம் மார்ல எதும் பாயலியே..?”  “வஸந்த்... இஸ் இட் டரூ? நிசமாவே உங்க மார்ல... ஆர் யூ ஆல்ரைட்?” “கவலையே படாத. உன்னை வீட்டில கொண்டு விட்டுட்டு அப்படியே ஆபரேஷன் தியேட்டர் போயிடறேன்...” “மிஸ்! அவன் சொல்றது எதையும் நம்பாதீங்க. புருடா விடறதில மன்னன். உங்களை போலீஸ் வண்டியில கொண்டு விட்டுடறோம்..,” “பாஸ்., இதானே வேணாங்கறது” என்றான் வஸந்த். அவளை நோக்கித் திரும்பி புன்முறுவலித்து. “இவங்க சொல்றதையெல்லாம் கேக்காத வின்னி. வாரம் எட்டு நாள் இவங்க உண்மைக் காதலுக்கு தடை விதிப்பாங்க. நான் உனக்கு ரேகை பார்க்கணும். மச்ச சாஸ்திரம் தெரியுமோ உனக்கு..?” “தெரியாதே!” “உனக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்குன்னு காட்டு, ஐ மீன்... சொல்லு. நான் அங்கங்கெல்லாம், ஸாரி... அதுக்கெல்லாம் பலன் சொல்றேன். வா...” “பழனிவேல்..! அவங்க மூணு பேர்கூட இவனையும் அரெஸ்ட் பண்ணிட்டுப் போங்க...” என்றான் கணேஷ்.

-‘மீண்டும் ஒரு குற்றம்’ நாவலிலிருந்து...

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube