Wednesday, November 23, 2011

கல்லுக்குள் ஈரம்!

Posted by பால கணேஷ் Wednesday, November 23, 2011
சென்ற வருடம் ஸ்ரீரங்கத்தி்ல் இருக்கும் என் நண்பனின் வீட்டில் மூன்று தினங்கள் சென்று தங்கியிருந்து திருச்சியைச் சுற்றி வந்தேன். அப்போது பள்ளி ஆசிரியராக இருந்து ரிடையரான அவன் சித்தப்பா இரவில் வராண்டாவில் அமர்ந்து என்னுடன் நிறையப் பேசினார். ஒரு பள்ளி ஆசிரியராக, தான் சந்தித்த பல சுவாரஸ்ய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு அவர் வாழ்வில் நடந்ததாக அவர் சொன்ன ஒரு சம்பவத்தை தன்மை ஒருமையில் சிறுகதையாக இங்கே தந்துள்ளேன்...
 

‘‘அப்பா... ஜேம்ஸ் என்னை அடிச்சு, என்னோட பேனாவைப் புடுங்கிக்கிட்டான்ப்பா...’’ ஆசிரியர் ஓய்வு அறையிலிருந்த என்முன் அழுதபடி வந்து நின்றான்... நான் வேலை பார்க்கும் அதேபள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கும் என் மகன் செல்வம்.

‘‘என்னடா... போன வாரம்தானே அவனைக் கூப்பிட்டு அவ்வளவு அட்வைஸ் பண்ணினேன். இன்னிக்கு என்ன தகராறு?’’

‘‘என்னோட பேனாவை எழுதிப் பாக்கறேன்னு கேட்டான்ப்பா. குடுத்தேன். எழுதிப் பாத்துட்டுத் தரவேயில்லை. கேட்டதுக்கு எனக்குப் பிடிச்சிருக்கு, நானே வச்சுக்கறேன்னான். குடுடான்னு பிடுங்கப் பாத்தேன்... அடிச்சுட்டான்ப்பா...’’

‘‘க்ளாஸ் டீச்சர்கிட்டச் சொல்ல வேண்டியது‌தானேடா?’’

‘‘சொன்னேன்ப்பா... சரி விடு, வேற பேனா வாங்கிக்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாருப்பா...’’

 வாயால் பேசுவதை விட அதிகமாக ஆயுதத்தால் பேசும் ஜேம்ஸின் அப்பா ‌அலெக்ஸை நினைத்துப் பயந்திருப்பார் போலிருக்கிறது. ஏரியாவையே அலற வைக்கும் தாதாவாயிற்றே... உண்மையில் பயத்தால்தான் நானும் இதற்கு முன் பல தடவை என் மகன் புகார் சொன்ன போதெல்லாம் அவனுக்கு பொறுமையைப் போதித்தேன். ஜேம்சுக்கு அட்வைஸ் பண்ணியும் பார்த்தாயிற்று.

‘‘சரி, இனிமே இப்படி நடக்காது. நான் சரி பண்றேன். போடா...’’ என்று செல்வத்தை சமாதானப்படுத்தி அனுப்பினேன். ஒரு முடிவுக்கு வந்தவனாக கிளம்பினேன்.


லெக்ஸை அணுகுவது அவ்வளவு சுலபமாக இல்லை. அவன் மகனின் பள்ளி ஆசிரியர் என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் எடுத்துச் சொன்னபின்தான் அவனிடம் பேச முடிந்தது. அவன் மகனைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னதும் எதுவும் பேசாமல் முறைத்தான் என்னை. அமர்ந்திருந்த சேரை விட்டு எழுந்தான்.

ஆஜானுபாகுவான அவன் உருவமும், முறுக்கிய மீசையும், குடியினால் சிவந்து கிடந்த கண்களும்... சத்தியமாக எனக்குள் பயத்தைத் தோற்றுவித்தது. ‘‘தோ...டா... புகார் சொல்ல வந்துட்டாரு. அண்ணனுக்கு வேற வேலையில்லைன்னு நெனச்சியா வாத்தியாரே...’’ என்று அடியாட்களில் ஒருவன் முஷ்டியை மடக்கி என்னை நோக்கிவர, அவனை ஒரு கையசைவில் தடுத்துவிட்டு என் அருகில் வந்தான் அலெக்ஸ்.

‘‘வாங்க சார்...’’ என்று என் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று காரில் அமர வைத்தான். உடன் கிளம்பிய அடியாட்களை ஒரு கையசைவில் தடுத்துவிட்டு தானே காரை ஓட்டத் தொடங்கினான். அப்படி ஒரு வேகத்தில் அதுவரை நான் காரில் பயணித்ததில்லை. எங்கள் பள்ளியை அடையும் வரை எதுவும் பேசாமல் வெறித்த பார்வையுடன் காரோட்டிய அவனும், காரின் அசுர வேகமும் என்னுள் பீதியை விதைத்தது.

 
டதடவென கிளாஸ் ரூமுக்குள் அலெக்ஸ் பிரவேசித்த வேகத்தில் கிளாஸ் டீச்சர் சந்தானம் சார் பயந்துதான் போனார். மூக்குக் கண்ணாடியை நெற்றிக்கு ஏற்றி விட்டுக் கொண்டு மிரண்ட பார்வையுடன் எங்களை ஏறிட்டார்.

‘‘சார், இவர் சொல்றது நிஜமா? என் பையன் முரட்டுத்தனமா நடந்துக்கறதாகவும், நீங்க எதுவும் கண்டிக்கறதில்லைன்னும் சொல்றாரே... அப்படியா?’’ உறுமினான் அவன். ‘‘இல்ல சார்... ஆமாம் சார்... உங்க பையனாச்சேன்னு...’’ உளறிக் கொட்டினார் சந்தானம். அவரை ஒரு கணம் வெறித்த அலெக்ஸ், கையைச் சொடுக்கி தன் மகனை அழைத்தான். பளார்! அறையின் சப்தத்தில் அருகில் நின்றிருந்த எனக்கே வலித்தது. விக்கித்து நின்றான் ஜேம்ஸ்.

‘‘ராஸ்கல்! படிச்சு நல்ல நிலைமைக்கு வருவேன்னு ஸ்கூலுக்கு அனுப்பினா, இப்படியா அடங்காம நடந்துக்கற? இன்னொரு தடவை உன்னைப் பத்திப் புகார் வந்துச்சோ... வெட்டி பொலி போட்ருவேன். போடா...’’ அலெக்ஸின் கர்ஜனையில் சப்தநாடியும் ஒடுங்கியவனாய் அழுதபடி தன் இடத்தில் சென்று அமர்ந்தான் ஜேம்ஸ். “உங்கம்மாட்டயும் இன்னிக்கே சொல்லி வக்கிறேன். உன்னைப் பத்தி ஏதாவது தப்பா ரிப்போர்ட் வந்துச்சோ... உன்னோட சேத்து புள்ளையச் சரியா வளக்காத அவளையும் வெட்டிருவேன். ஜாக்கிரதை...”

மகனை எச்சரித்த அதே வேகத்தில் சந்தானம் சாரை நோக்கித் திரும்பிய அவன், பயந்திருந்த அவரைப் பார்த்து கோபமாகப் பேசினான்.

‘‘யோவ் வாத்தியாரே... நானும் படிக்கிற காலத்துல இவனைப் போல இருந்தவன்தான். அப்ப என்னைக் கண்டிக்கிறதுக்கு ஆளில்லாமதான் இப்ப இப்படி ஒரு தாதாவா உம்ம முன்னாடி நிக்கிறேன்...  இன்னிக்கு அவன் மத்த பசங்களை அடிக்கிறான்னு கண்டிக்காம விட்டயின்னா, நாளைக்கு உன்னையே அடிக்கிற அளவுக்கு வந்துருவான்யா...  எந்தப் பையன் தப்புப் பண்ணாலும் வாத்தியார்தான்யா அடிச்சுத் திருத்தணும். (25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதை நினைவில் கொள்க. இன்னிக்கு பசங்க மேல வாத்தியார் கை வச்சா நிலைமையே வேற...)  இப்படி ஆரம்பிச்சு நான் ஒரு தாதாவாகி இன்னிக்கு புலிவாலைப் புடிச்சவன் கதையா விடமுடியாம நிக்கிறேன். இன்னொருத்தன் இப்படி ஆவக் கூடாது. இவன் படிச்சு நல்லா வரணும். (என்னைக் கை காட்டி) இந்த சார் எவ்வளவு தைரியமா என்கிட்ட வந்து பேசினாரு. இவரைப் போல எல்லாரும் நேர்மையா, துணிச்சலா இருக்கணும்யா... இந்த நிமிஷத்துலருந்து இவனை உங்களோட முழுப்பொறுப்புல விடறேன். நல்லபடியா பாத்துக்கங்க...’’ ஏ.கே.47 வேகத்தில் கடகடவெனப் பேசியவன், அதிரடியாய் அதே வேகத்தில் வெளியேறிப் போய் விட்டான்.

முரட்டுத்தனமான உருவம் படைத்த அந்தக் கொலைகாரனுக்குள்ளேயும் ஒரு நல்ல இதயத்தைத் தரிசித்து விட்ட மகிழ்ச்சியில், பிரமிப்பில் அசையாமல் பார்த்தபடி இருந்தேன் நான்.

49 comments:

  1. நாங்கள் படிக்கும் காலத்தில் இரண்டு கண்களை விட்டுவிட்டு மீதிஇடங்களில் அடியுங்கள் என்று பெற்றோர்களே சொல்லுவார்கள்.ஆனால் இன்று...கல்வி முத்திபோச்சு...சாரி..கலி முத்திபோச்சு...

    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  2. வேலன். said...
    நாங்கள் படிக்கும் காலத்தில் இரண்டு கண்களை விட்டுவிட்டு மீதி இடங்களில் அடியுங்கள் என்று பெற்றோர்களே சொல்லு வார்கள்.ஆனால் இன்று...கல்வி முத்தி போச்சு...சாரி..கலி முத்தி போச்சு...வாழ்க வளமுடன்
    வேலன்.

    -உண்மைதான். நான் என் ஆசிரியர்களிடம் சில வினோத தண்டனைகளையெல்லாம் பெற்றுள்ளேன். அந்த அனுபவம் தனிப்பதிவாக பின்னர்... ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி வேலன் சார்...

    ReplyDelete
  3. ஒவ்வொரு மனிதனும் நல்ல குடிமகனாகவே வாழ விரும்புகிறான் என்ற உண்மை நிகழ்ச்சியை நல்ல கதையாக புனைந்து தந்தமைக்கு நன்றி.

    நீங்கள் சொல்வது சரிதான். இன்றைக்கு ‘அடியாத மாடு பணியாது’என்ற பழமொழியை சொல்லமுடியாது. நாங்கள் படிக்கும்போது சரியாக படிக்காவிட்டாலோ,கணக்கு போடாவிட்டாலோ,எங்கள் ஆசிரியர் எங்கள் காதை திருகியும்,பிராம்பால் அடித்தும், தொடையில் கிள்ளியும், குனியவைத்து முதுகில் செங்கற்களை வைத்து வெயிலில் நிற்கவைத்தும் தண்டனை கொடுத்து படிக்க வைத்திருக்கிறார்.ஆனால் அதை எந்த பெற்றோரும் தடுத்ததில்லை.

    ReplyDelete
  4. தன் வாழ்க்கையை இனிமேல் மாற்றமுடியாது. மகனுடைய வாழ்க்கையாவது நன்றாக அமையவேண்டுமென்று நினைத்த தகப்பனைப் பாராட்டியே ஆகவேண்டும். அதே சமயம் ஒரு மாணவனைத் திருத்த முயற்சி மேற்கொண்ட ஆசிரியரின் துணிவும் பாராட்டுக்குரியது. அனுபவக்கதையை அழகான கதையாக்கிப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வே.நடனசபாபதி said...
    ஒவ்வொரு மனிதனும் நல்ல குடிமகனாகவே வாழ விரும்புகிறான் என்ற உண்மை நிகழ்ச்சியை நல்ல கதையாக புனைந்து தந்தமைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். இன்றைக்கு ‘அடியாத மாடு பணியாது’என்ற பழமொழியை சொல்லமுடியாது. நாங்கள் படிக்கும்போது சரியாக படிக்காவிட்டாலோ,கணக்கு போடாவிட்டாலோ,எங்கள் ஆசிரியர் எங்கள் காதை திருகியும்,பிராம்பால் அடித்தும், தொடையில் கிள்ளியும், குனியவைத்து முதுகில் செங்கற்களை வைத்து வெயிலில் நிற்கவைத்தும் தண்டனை கொடுத்து படிக்க வைத்திருக்கிறார்.ஆனால் அதை எந்த பெற்றோரும் தடுத்ததில்லை.

    -அடடே... உங்கள் வாத்தியார் கடுமையாக இப்படியெல்லாம் தண்டித்திருக்கிறாரா? என் வாத்தியார் மென்மையாக தண்டிப்பார். அதை ஒரு பதிவாக எழுதும் எண்ணத்தில் உள்ளேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்...

    ReplyDelete
  7. கீதா said...
    தன் வாழ்க்கையை இனிமேல் மாற்றமுடியாது. மகனுடைய வாழ்க்கையாவது நன்றாக அமையவேண்டுமென்று நினைத்த தகப்பனைப் பாராட்டியே ஆகவேண்டும். அதே சமயம் ஒரு மாணவனைத் திருத்த முயற்சி மேற்கொண்ட ஆசிரியரின் துணிவும் பாராட்டுக்குரியது. அனுபவக்கதையை அழகான கதையாக்கிப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    -உங்கள் ரசனைக்கும் பாராட்டுக்கும் என் பணிவான சல்யூட்! நன்றிங்க...

    ReplyDelete
  8. kg gouthaman said...
    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    -மிக்க நன்றி கௌதமன் சார்...

    ReplyDelete
  9. நானும் படிக்கிற காலத்துல இவனைப் போல இருந்தவன்தான். அப்ப என்னைக் கண்டிக்கிறதுக்கு ஆளில்லாமதான் இப்ப இப்படி ஒரு தாதாவா உம்ம முன்னாடி நிக்கிறேன்...//

    சரியான அப்பா ...
    எனக்கும் இதுபோல பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  10. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    நானும் படிக்கிற காலத்துல இவனைப் போல இருந்தவன்தான். அப்ப என்னைக் கண்டிக்கிறதுக்கு ஆளில்லாமதான் இப்ப இப்படி ஒரு தாதாவா உம்ம முன்னாடி நிக்கிறேன்...//

    சரியான அப்பா ... எனக்கும் இதுபோல பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி..

    -நீங்கள் ஆசிரியர் அல்லவா கருன் சார்... நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். உங்கள் ஆசிரியர் பணி அனுபவங்களையும் பதிவிடும்படி வேண்டுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  11. ////எந்தப் பையன் தப்புப் பண்ணாலும் வாத்தியார்தான்யா அடிச்சுத் திருத்தணும். (25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதை நினைவில் கொள்க. இன்னிக்கு பசங்க மேல வாத்தியார் கை வச்சா நிலைமையே வேற...) ////

    ஹா.ஹா.ஹா.ஹா அதுதானே இப்ப கைவைச்சால் நிலைமை வேறதான்

    ReplyDelete
  12. அருமையான கதை பாஸ் ஒருவர் சொன்ன விடயத்தை அழகாக ஒரு சிறுகதையாக தந்திருக்கீங்க

    ReplyDelete
  13. K.s.s.Rajh said...

    ////(இன்னிக்கு பசங்க மேல வாத்தியார் கை வச்சா நிலைமையே வேற...) ////
    ஹா.ஹா.ஹா.ஹா அதுதானே இப்ப கைவைச்சால் நிலைமை வேறதான்.

    அருமையான கதை பாஸ் ஒருவர் சொன்ன விடயத்தை அழகாக ஒரு சிறுகதையாக தந்திருக்கீங்க.

    -வருகைக்கும் ரசித்ததற்கும் மிக்க நன்றி நண்பா...

    ReplyDelete
  14. இதுபோல நல்ல ஆசிரியர், நல்ல மனிதர்களைப்பார்க்கணும்னா 25- வருடங்களுக்கு முன்பு போகனுமா?

    ReplyDelete
  15. Lakshmi said...
    இதுபோல நல்ல ஆசிரியர், நல்ல மனிதர்களைப்பார்க்கணும்னா 25- வருடங்களுக்கு முன்பு போகனுமா?

    -இல்லம்மா... விதிவிலக்குகள் எக்காலத்திலும் உண்டு. நல்ல ஆசிரியர் அமைவது பாக்கியம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. உண்மை சம்பவத்தை அப்படியே சிறுகதையில் மிகவும் அழகாக சொல்லியுள்ளீர்...

    ReplyDelete
  17. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    உண்மை சம்பவத்தை அப்படியே சிறுகதையில் மிகவும் அழகாக சொல்லியுள்ளீர்...

    -தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  18. சகோ!
    நானும் ஆசிரியனே எனகுகும்
    பல அனுபவங்கள் உண்டு!
    அனைவரும் படிக்க வேண்டிய பதிவு!

    த ம ஓ 5

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. உங்கள் அனுபவங்கள்...நீங்கள் உரசிய தோள்கள்....உங்களுக்கு பெரிய பிளஸ்...

    இப்படியே ஜமாயுங்கள்...நல்லாயிருந்தது கணேஷ் சார்...

    ReplyDelete
  20. புலவர் சா இராமாநுசம் said...
    சகோ!நானும் ஆசிரியனே எனகுகும்
    பல அனுபவங்கள் உண்டு!
    அனைவரும் படிக்க வேண்டிய பதிவு!

    -தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  21. ரெவெரி said...
    உங்கள் அனுபவங்கள்...நீங்கள் உரசிய தோள்கள்....உங்களுக்கு பெரிய பிளஸ்...
    இப்படியே ஜமாயுங்கள்... நல்லாயிருந்தது கணேஷ் சார்...

    -என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் தங்களுக்கு என் இதய நன்றி நண்பரே...

    ReplyDelete
  22. அருமை அருமை
    இப்போதெல்லாம் இப்படி ஒரு சம்பவத்தை
    கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியுமா ?
    அருமையான மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ஒரு மறக்க முடியாத அனுபவத்தைக் கதையாக்கி விட்டீர்கள்.நன்று.

    ReplyDelete
  24. ஒரு விசயத்தை கேட்டு அதை ஒரு சிறுகதையாக்கியிருப்பது அருமை சார்

    ReplyDelete
  25. பகிர்வுக்கு நன்றி ஐயா

    அனுபவ உண்மை சம்பவங்கள் வலிமையானவை பல படிப்பினைகளை கற்று தருபவை,நல்ல திசைகாட்டி

    ReplyDelete
  26. Ramani said...
    அருமை அருமை இப்போதெல்லாம் இப்படி ஒரு சம்பவத்தை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியுமா ?
    அருமையான மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    -வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  27. r.v.saravanan said...
    ஒரு விசயத்தை கேட்டு அதை ஒரு சிறுகதையாக்கியிருப்பது அருமை சார்.

    -அனுபவத்தின் அடிப்படையில் கதை அமைத்தால் எப்போதுமே நன்றாக வரும். பாராட்டுக்கு நன்றி சரவணன் சார்!

    ReplyDelete
  28. சென்னை பித்தன் said...
    ஒரு மறக்க முடியாத அனுபவத்தைக் கதையாக்கி விட்டீர்கள்.நன்று.

    -உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  29. ஹைதர் அலி said...
    பகிர்வுக்கு நன்றி ஐயா
    அனுபவ உண்மை சம்பவங்கள் வலிமையானவை பல படிப்பினைகளை கற்று தருபவை,நல்ல திசைகாட்டி

    -நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் சார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  30. அப்பனுக்குக் கூட பிள்ளையை அடிக்க உரிமையில்லை என்று நினைப்பவன் நான். ஆசிரியருக்கு அந்த உரிமை கிடையாது என்றாலும் கதையின் கரு சுவாரசியமானது. அடித்துத் தான் திருத்த வேண்டும் என்பதில்லை. அடி உதை பக்கம் போகாமல் ஆசிரியர்கள் எந்த மாணவனையும் திருத்தக் கூடியவர்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். நல்ல கதை. (தன்மை ஒருமையில் என்றால் என்ன?)

    ReplyDelete
  31. அப்பாதுரை said...
    அப்பனுக்குக் கூட பிள்ளையை அடிக்க உரிமையில்லை என்று நினைப்பவன் நான். ஆசிரியருக்கு அந்த உரிமை கிடையாது என்றாலும் கதையின் கரு சுவாரசியமானது. அடித்துத் தான் திருத்த வேண்டும் என்பதில்லை. அடி உதை பக்கம் போகாமல் ஆசிரியர்கள் எந்த மாணவனையும் திருத்தக் கூடியவர்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். நல்ல கதை. (தன்மை ஒருமையில் என்றால் என்ன?)

    -என் ஆசிரியர்கூட சின்னச் சின்ன வலிக்காத தண்டனைகள் தந்துதான் திருத்துவார். (பதிவாக வெளியிட உள்ளேன்). கேட்டதை எழுதினேன். நான் சொல்வதாய் கதை எழுதுவது தன்மை ஒருமை. நாங்கள் போனொம், பார்த்தோம் என்று எழுதினால் தன்மை பன்மை நடை.

    ReplyDelete
  32. எந்த ஒரு தாய் தந்தைக்கும் பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் எதுவாக இருக்கமுடியும்?

    தன் பிள்ளையை பற்றி மற்றோர் நல்லவற்றை சொல்லும்போது பெற்றோருக்கு தான் ஜென்மம் எடுத்த பயனை நல்கியது போலவே இருக்கும்...

    ஒரு நிகழ்வை உங்க கிட்ட பகிரும்போது கதாசிரியராக பொறுப்பா நீங்க செய்த வேலை இதை அழகிய ஒரு படிப்பினை தரும் கதையாக மாற்றி எங்களுக்கு படைத்தது தான்....

    கெட்டவனின் மகன் கெட்டவனாகவே வளரும் சூழல் அமைந்தாலும் அதை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு பள்ளிக்கூடத்தில் தான் அமைவது.... வீட்டில் இருப்பதை விட அதிகப்படியான நேரங்கள் கழிவது பள்ளிக்கூடத்தில் தான்....

    அதனால் தான் பெற்றோருக்கு அடுத்தபடியாக பெற்றோர் ஸ்தானத்தில் குருவை வைத்திருப்பது... பிள்ளைகளின் எதிர்க்காலத்திற்கு முழுமையான காரணமாக அவர்களே விளங்குவதாலும் தான்.....

    பிள்ளைகள் சிறுவயதில் சண்டை போடுவதும் பின் சேர்ந்துக்கொள்வதும் இயல்பு... ஆனால் ஒரு பிள்ளை தொடர்ந்து அட்டகாசம் செய்து அடித்து மற்ற பிள்ளைகளை துன்புறுத்துகிறது என்றால் உடனடியாக அதை கவனித்து சரி செய்யவேண்டும்... அப்படி செய்ய தவறிவிடும் ஆசிரியர் பிற்காலத்தில் பதில் சொல்லவேண்டியது வரும்....


    அருமையான கதை கணேஷ்..... அப்பாவை பார்த்து தானும் ஒரு குட்டி தாதாவாக தன்னை கற்பனை செய்துக்கொண்டு ஜேம்ஸ் நடத்தும் அட்டகாசத்தை கண்டு அவன் அப்பா அலெக்ஸுக்கு பயந்து மற்ற ஆசிரியர்களை போல செல்வத்தின் அப்பாவும் பயந்து அமைதியாக இருந்திருந்தால் வாரிசு தாதா உருவாகி இருக்கும்... ஆனால் அதை தடுக்க நினைக்க அவர் ரிஸ்க் எடுத்தது நல்ல பலனையே தந்தது... அதுமட்டுமில்லாமல் அலெக்சும் தன் சிறுவயது குழந்தை பருவத்தில் இப்படி தன்னை திருத்தி அடித்து வளர்த்தி இருந்தால் தான் இப்படி ஒரு நிலைக்கு வந்திருக்கமாட்டேன் என்றும் தன் பிள்ளையாவது நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆதங்கத்தையும் ஒருசேர காணமுடிகிறது... இயல்பான கதை நடை... எளிய கதையில் அருமையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கீங்கப்பா....

    அருமையான கதை படைத்தமைக்கு அன்பு நன்றிகள் கணேஷ்....

    யாரோ எவரோ என்று விட்டுவிடாமல் மனம் சரியில்லை உடல்நலம் சரியில்லை என்றதும் உடன் ஓடி வந்து ஆறுதல் சொன்னதோடு இறையருள் பெற்று நலமுடன் சீர்பெற மீனாட்சி அருள்புரிவாள் என்று சொன்ன நல்ல மனதுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷ்..

    என்றும் இறையருள் பெற்று நீங்களும் உங்களும் குடும்பமும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா....

    ReplyDelete
  33. மஞ்சுபாஷிணி said...
    அருமையான கதை கணேஷ்.....

    -பாராட்டியதற்கு நன்றிங்க...

    யாரோ எவரோ என்று விட்டுவிடாமல் மனம் சரியில்லை உடல்நலம் சரியில்லை என்றதும் உடன் ஓடி வந்து ஆறுதல் சொன்னதோடு இறையருள் பெற்று நலமுடன் சீர்பெற மீனாட்சி அருள்புரிவாள் என்று சொன்ன நல்ல மனதுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷ்..

    -நீங்க யாரோ எவரோ கிடையாதுங்க. ரொம்ப நாளா உங்க பதிவுகளைப் படிச்சு ரசிச்சிருக்கேன். நான் பதிவெழுதாததால கமெண்ட் போடத்தான் அப்ப முடிஞ்சதில்லை. மத்தவங்க படைப்புகளுக்கு மயிலிறகால வருடற மாதிரி வார்த்தைகளோட நீங்க எழுதற பின்னூட்டங்களுக்கும் நான் ரசிகன். அந்த உரிமைல, உண்மையோடதான் மீனாட்சியை வேண்டினேன். உங்கள் வருகை என்னை மிகமிக மகிழ வைத்திருக்கிறது. நன்றி...

    ReplyDelete
  34. (25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதை நினைவில் கொள்க. இன்னிக்கு பசங்க மேல வாத்தியார் கை வச்சா நிலைமையே வேற...) /

    படிப்பினை தரும் கதை.

    ReplyDelete
  35. இராஜராஜேஸ்வரி said...
    (25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதை நினைவில் கொள்க. இன்னிக்கு பசங்க மேல வாத்தியார் கை வச்சா நிலைமையே வேற...) /
    படிப்பினை தரும் கதை.

    -வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...

    ReplyDelete
  36. மனம் நிறைந்த நன்றி சொல்கிறேன் கணேஷ் இறைவனுக்கு... நல்ல உள்ளங்களை எனக்கு அடையாளம் காட்டிக்கொண்டே இருப்பதற்கு.....

    அன்பு நன்றிகள்பா.. எல்லோரின் ஆசிகளும், பிரார்த்தனைகளும் உங்களைப்போன்றோர் நல்ல உள்ளங்களும் தந்தமைக்கு இறைவனுக்கும் என் அன்பு நன்றிகள் கணேஷ்....

    ReplyDelete
  37. ஹ்ம்ம். நல்லா இருக்கு
    http://mydreamonhome.blogspot.com

    ReplyDelete
  38. அப்ப என்னைக் கண்டிக்கிறதுக்கு ஆளில்லாமதான் இப்ப இப்படி ஒரு தாதாவா உம்ம முன்னாடி நிக்கிறேன்... இன்னிக்கு அவன் மத்த பசங்களை அடிக்கிறான்னு கண்டிக்காம விட்டயின்னா, நாளைக்கு உன்னையே அடிக்கிற அளவுக்கு வந்துருவான்யா... எந்தப் பையன் தப்புப் பண்ணாலும் வாத்தியார்தான்யா அடிச்சுத் திருத்தணும்.

    தான் எப்படி போனாலும் மகன் நல்லபடி வாழணும் என்கிற பெற்றவர் மனப்பான்மை அழகாய் கதையாக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  39. வினோத் said...
    ஹ்ம்ம். நல்லா இருக்கு
    http://mydreamonhome.blogspot.com

    -புதுவரவாக வந்திருக்கும் வினோத்துக்கு நல்வரவு. பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி. உங்கள் ‘கனவு இல்லம்’ வந்து சந்திக்கிறேன்...

    ReplyDelete
  40. ரிஷபன் said...
    தான் எப்படி போனாலும் மகன் நல்லபடி வாழணும் என்கிற பெற்றவர் மனப்பான்மை அழகாய் கதையாக்கி விட்டீர்கள்.

    -வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்...

    ReplyDelete
  41. படிப்பினைதரும் கதை கணேஷண்ணா.மிக அருமை..

    //நான் என் ஆசிரியர்களிடம் சில வினோத தண்டனைகளையெல்லாம் பெற்றுள்ளேன். அந்த அனுபவம் தனிப்பதிவாக பின்னர்//

    ஆகா அப்ப அண்ணாக்கிட்டே நிறையவிசயமிருக்கு! அடிவாங்கின நினைவுகளையும் அப்படியே அடிங்க, அச்சோ அப்படியே எழுதுங்க..

    ReplyDelete
  42. அன்புடன் மலிக்கா said...

    படிப்பினைதரும் கதை கணேஷண்ணா.மிக அருமை..

    -பாராட்டுக்கு நன்றிம்மா...

    //நான் என் ஆசிரியர்களிடம் சில வினோத தண்டனைகளையெல்லாம் பெற்றுள்ளேன். அந்த அனுபவம் தனிப்பதிவாக பின்னர்//

    -கரெக்ட். நானும் என் ஆசிரியர் அளித்த தண்டனைகளை தனிப்பதிவாக வெளியிடத் தான் எண்ணியுள்ளேன்.

    ///ஆகா அப்ப அண்ணாக்கிட்டே நிறையவிசயமிருக்கு! அடிவாங்கின நினைவுகளையும் அப்படியே அடிங்க, அச்சோ அப்படியே எழுதுங்க..

    -அடிச்சு விட்டுட்டாப் போச்சு...

    ReplyDelete
  43. பாட சாலைகளில் கல்வி பயிலும்போது கிடைக்கும்
    பல அனுபவங்கள் சொல்லச் சொல்ல சொல்லிக்கொண்டே போகலாம் .அதிலும் உங்களைபோன்றவர்கள் அந்தக் கடந்தகால அனுபவத்தைப் பகிரும்போது அதில் கிட்டும்
    சுவாரசியங்கள் என்றுமே மறக்க முடியாத ஒன்று .அருமையான
    படைப்பு தொடர வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .கவிதை காத்திருக்கு ......

    ReplyDelete
  44. அருமையான கருத்துள்ள பதிவு சார்!

    ReplyDelete
  45. @ அம்பாளடியாள்

    -உங்கள் வ‌ருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  46. @ திண்டுக்கல் தனபாலன்

    -உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  47. கிடைத்த அனுபவத்தை கதையாக்கிய விதம் அருமை

    ReplyDelete
  48. நல்ல சம்பவம்! ஆனா இன்னைக்கு ஆசிரியர்கள் மாணவரை திட்டினாலே.... நடக்கரதே வேற இல்ல.... காலம் மாறுதில்ல!

    ReplyDelete
  49. இன்றுதான் படித்தேன் . நல்ல கதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube