Wednesday, October 12, 2011

அழகன் அருகிருக்கும் பட்டிணம்!

Posted by பால கணேஷ் Wednesday, October 12, 2011
லகிலுள்ள நகரங்களில் எந்த ஒரு நகரத்திற்கும் இல்லாத சிறப்பு மதுரை என்று இன்று அழைக்கப்படுகிற ஆலவாய் நகருக்கு உண்டு. மற்ற நகரங்கள் எல்லாம் காலத்தால் உதயமானவை. முதலில் சிற்றூராக இருந்து, பின் பேரூர் ஆகி, அதன்பின் நகரமானவை. ஆனால் மதுரை நகரம் எடுத்த எடுப்பிலேயே நான்கு மாட வீதிகள், நான்கு ஆடி வீதிகள், நான்கு சித்திரை வீதிகள் என்று தாமரை மலரின் இதழ் அடுக்கு போல திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அது மட்டுமல்ல... இந்த நகரை முதலில் உருவாக்கியவன் இந்திரன். அவனே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை வடிவமைத்தவனும்கூட. இந்திரன் உருவாக்கிய நகரத்தை ஈசன் மகிழ்ந்து தன் சிரசில் சடைக்குள்ளிருந்து மதுரமாகிய அமுதத் துளிகளை எடுத்து புனிதப் படுத்தினான். மதுரத் துளிகள் பட்டுப் புனிதமடைந்த மண் என்பதால் மதுரை என்று பெயர் பெற்றது.
சிவன் சடையின் மதுரம் பட்டதால் மதுரை என்றான நகருக்கு ஆலவாய் நகர், கூடல் நகர், நான்மாடக் கூடல், அழகன் அருகிருக்கும் பட்டினம், சுந்தரபுரி என்றெல்லாம் பத்துப் பெயர்கள் உண்டு. உலகில் எந்த ஒரு நகருக்கும் இப்படி ஒன்றுக்கு பத்துப் பெயர் வழக்கில் இருந்ததில்லை. மதுரை நகரம் ஒன்றில்தான் நதி, கடல், குளம், கிணறு, ஊற்று என்கிற ஐவகை புண்ணியப் பெருக்குக்கும் இடம் அமைந்தது. நதிக்கு வைகை, கடலுக்கு ஏழுகடல், குளத்துக்கு பொற்றாமரை, கிணற்றுக்கு கோயிலில் பைரவர் சன்னிதி முன் அமைந்த கிணறு, ஊற்றுக்கு அழகர்மலை நூபுர கங்கை என்று ஐவகை தீர்த்தச் சிறப்பும் மதுரையில் மட்டுமே உண்டு!
சொக்கநாதப் பெருமானாகிய இறைவன் எப்படித் தன் உட‌லில் சரிபாதியை சக்திக்குத் தந்தானோ அதேபோல மதுரையையே ஆளும் உரிமையையும் தந்திருக்கிறான். இந்த நகரை மீனாட்சி ஆளும் விதமும் அலாதியானது. மற்ற எல்லா ஊர்களிலும் அம்பிகை சொரூபம் அருள்வது போன்ற கரத்துடன்தான் காட்சி தரும். அன்னை மீனாட்சி மட்டும் வலக்கையில் மலர்ச் செண்டும், இடக் கையில் கிளியும் அமர்ந்திருக்க புன்னகை பூத்தபடி காட்சி தருகிறாள். இதன் பின்னணி... அன்னை மீனாட்சி இங்கே கண்களாலேயே ஆட்சி செய்கிறாள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்! அது மட்டுமல்ல... அன்னையின் கையிலிருக்கும் கிளியின் பின்னாலும் நாம் அறிந்து பரவசப்படத்தக்க பல ஆச்சரியத் தகவல்கள் நிறைந்துள்ளன. அது...

 அன்னையின் கையில் பஞ்சவர்ணக்கிளி அமர்ந்திருக்கிறது. கிளி ஒரு பஞ்சபூத வடிவம். நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் என்ற நிறங்களைக் கொண்டது பஞ்சவர்ணக் கிளி. வானத்தைக் குறிப்பது நீலம், பூமியைக் குறிப்பது பச்சை, நெருப்பைக் குறிப்பது சிவப்பு, நீரினைக் குறிப்பது வெண்மையாகிய ஸ்படிக நிறம், காற்றைக் குறிப்பது மஞ்சள் வண்ணம். இப்படி பஞ்ச பூதங்களும் அன்னையின் கைகளில் அடங்கியிருக்கிறது என்பதே உள்ளடக்கமான உண்மை. கிளியை அஞ்சுகம் என்பார்கள். அதாவது ஐந்து பூதங்களின் அகம் எனலாம். அதைத் தன் வசம் பிடித்திருக்கிறாள் அன்னை. அதேசமயம் நீரில் திரியும் மீனானது எப்படி உறக்கமில்லாமலும் கண்களாலேயே தன் குஞ்சுகளை அரவணைத்தும் வளர்க்கிறதோ அதுபோல பார்வையாலேயே அனைவரையும் ரட்சிப்பவள் மதுரை மீனாட்சி என்பது உட்பொருள்!
இந்த உலகில் இறைவன் நேரில் தோன்றிய இடங்கள் வெகு சிலவே. அதிலும் ஒரு முறைக்கு பலமுறை தோன்றிய இடமும், பெரும் திருவிளை யாடல்கள் புரிந்ததும் மதுரை யம்பதியில் மட்டும்தான்.  மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள பொற்றாமரைக் குளமும் ஒரு அதிசயம்தான். இதில் குளித்திராத புலவர்களே இல்லை. பரணர், பாணர், கபிலர் என்று புலவர்கள் தொடங்கி, கெளதமர், பிருங்கி, ஜனகர் என்று முனிவர்கள் வரை பலரும் நீராடிய திருக்குளம் அது. அது மட்டுமல்ல.. உலகம் கொண்டாடும் திருக்குறளை உலகுக்கு அடையாளம் காட்டியது அதுதான். பல உலக இலக்கியங்களை பொற்றாமரைக் குளத்தில் இருந்த சங்கப்பலகைதான் காத்து ரட்சித்தது.

ஆறு, குளம், விருட்சம், ஸ்தலம், அருவி என்று ஐந்தும் ஒரு ஊரில் அமைவது அபூர்வமானதாகும். எல்லா ஊர்களிலும் இதில் ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. இந்த ஐந்தும் அமையப் பெற்றது மதுரையில் மட்டும்தான். வைகை ஆறு, கடம்ப விருட்சம், பொற்றாமரைக் குளம், மீனாட்சி சன்னதி, அழகர்கோயில் மலையில் ஆகாயகங்கை அருவி என்று ஐந்தும் மதுரையில் மட்டுமே இருப்பதால்தான் காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, திருவாரூரில் தரிசிக்க முக்தி, சிதம்பரத்தில் பிறகக முக்தி, மதுரையில் வசிக்க முக்தி என்றனர். ஆம்... மதுரையில் பிறந்து மதுரையிலேயே இறப்பவர்களுக்கு வீடுபேறு அடைவது மிகவும் சுலபம்!

மதுரை சைவம், வைணவம், சாக்தம் (சக்தி வழிபாடு), கெளமாரம் (முருக வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), செளரம் (சூரிய வழிபாடு) ஆகிய ஆறு வழி முறைகளும் செழிப்பாக உள்ள ஒரு ஊராகும். வைணவச் சிறப்புக்கு பல்லாண்டு பாடுவதை உதாரணமாகக் கூறுவார்கள். அந்தப் பல்லாண்டு பாடப்பட்ட போது திருமால் கருடன் மீது அமர்ந்து வந்து சேவை சதித்ததாகக் கூறப்படுவது மதுரையில்தான். அறுபத்து நான்கு திருவிளையாடல்களின் போது அந்தப் பரமசிவன் மதுரை வீதியில் நடந்து திரிந்திருக்கிறான். அன்னை மீனாட்சியோ அரசியாக விளங்கி மதுரையை ஆட்சியே செய்து வருகிறாள். முருகவேளோ திருப்பரங்குன்றத்தில்தான் மணம் முடித்தான். மீனாட்சி ஆலயத்திலேயே பெரிய திருவுருவம் முக்குருணிப் பிள்ளையார்தான். சூரியனால்தான் பொற்றாமரைக் குளத்தில் தாமரை மலர்கள் மலர்ந்து பூஜைக்குப் பயன்பட்டது.

இப்படி ஆறு வழிகளும் சீருடன் இருக்கும் ஒரு ஊராக உலகில் வேறு எந்த ஊரையும் கூற முடியாது. ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது. ஆனால் மதுரை அதன் பெயருக்கேற்றாற் போல மதுரமான, பரிபூரணமான ஒரு நகரம்.

-இப்போது எதற்காக மதுரையைப் பற்றி இப்படிப் புராணம் படிக்கிறேன் என்றால்... மதுரைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நான் பிறந்த, வளர்ந்த ஊர் மதுரைதான் என்பதே அது. ஹி... ஹி...

-மதுரையைப் பற்றிய இந்த அரிய தகவல்கள் முழுவதும் என் சரக்கல்ல. இதில் பெரும்பாலானவை எங்க ஊர்க்காரரும், என் இனிய நண்பருமான எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் வழங்கியது. அவருக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

14 comments:

  1. மதுரைப் பற்றி பல அறிய தகவல்கள்.. நன்றி..

    ReplyDelete
  2. வேடந்தாங்கல் - கருன் *! said...
    மதுரைப் பற்றி பல அறிய தகவல்கள்.. நன்றி..

    -முதல் விருந்தினர் கருனுக்கு நல்வரவு. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. //பரணர், பாணர், கபிலர் என்று புலவர்கள் தொடங்கி, கெளதமர், பிருங்கி, ஜனகர் என்று முனிவர்கள் வரை பலரும் நீராடிய திருக்குளம் அது. அது மட்டுமல்ல.. உலகம் கொண்டாடும் திருக்குறளை உலகுக்கு அடையாளம் காட்டியது அதுதான். பல உலக இலக்கியங்களை பொற்றாமரைக் குளத்தில் இருந்த சங்கப்பலகைதான் காத்து ரட்சித்தது.//

    முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரரை சிவபெருமான் எரித்ததும் அவர் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததும் இதே பொற்றாமரைக்குளத்திலிருந்து தானே? (நன்றி: திருவிளையாடல்)

    :-)

    ReplyDelete
  4. சேட்டைக்காரன் said...

    //பரணர், பாணர், கபிலர் என்று புலவர்கள் தொடங்கி, கெளதமர், பிருங்கி, ஜனகர் என்று முனிவர்கள் வரை பலரும் நீராடிய திருக்குளம் அது. அது மட்டுமல்ல.. உலகம் கொண்டாடும் திருக்குறளை உலகுக்கு அடையாளம் காட்டியது அதுதான். பல உலக இலக்கியங்களை பொற்றாமரைக் குளத்தில் இருந்த சங்கப்பலகைதான் காத்து ரட்சித்தது.//

    முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரரை சிவபெருமான் எரித்ததும் அவர் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததும் இதே பொற்றாமரைக்குளத்திலிருந்து தானே? (நன்றி: திருவிளையாடல்)

    -அட, ஆமாங்கண்ணா... மதுரையப் பத்தி இன்னும் பல பதிவுகள் போடலாம் போலருக்கே... நன்றி!

    ReplyDelete
  5. -தமிழ்மணம் ஏனோ இந்த முறையும் எனக்கு சரிவரலை. வெறுத்துப் போய் சேக்காம விட்டுட்டேன். அங்க இணைச்ச சேட்டையண்ணன் வாழி நீடூழி!

    ReplyDelete
  6. மதுரை பற்றிய நல்ல பகிர்வு.அங்கு நான் இருந்த ஏழாண்டுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  7. எனக்கும் மதுரை ரொம்பப் பிடித்த ஊர் கணேஷ். நான் அங்கேதான் ஃபாத்திமா கல்லூரியில் படித்தேன். :))

    ReplyDelete
  8. சென்னை பித்தன் said...

    மதுரை பற்றிய நல்ல பகிர்வு.அங்கு நான் இருந்த ஏழாண்டுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

    -நன்றி சென்னைப் பித்தன் சார். இப்போது நான் சென்னையில் வசித்தாலும் என் மனமெல்லாம் மதுரைதான்!

    ReplyDelete
  9. தேனம்மை லெக்ஷ்மணன் said...

    எனக்கும் மதுரை ரொம்பப் பிடித்த ஊர் கணேஷ். நான் அங்கேதான் ஃபாத்திமா கல்லூரியில் படித்தேன். :))

    -ஆகா... நீங்களும் என்னைப் போல்தான் என்பதில் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றியக்கா.

    ReplyDelete
  10. நல்ல தகவல்கள்

    ReplyDelete
  11. மதுரை பற்றி பல விஷயங்கள் .. அருமை

    ReplyDelete
  12. "என் ராஜபாட்டை"- ராஜா said...

    நல்ல தகவல்கள்

    மதுரை பற்றி பல விஷயங்கள் .. அருமை.

    தங்கள் வருகைக்கும் என்னை ஊக்கப்படுத்தியதற்கும் மிக்க நன்றி ராஜா சார்.

    ReplyDelete
  13. எங்க ஊரைப் பற்றிய அசத்தலான பதிவு !

    ReplyDelete
  14. மதுரை அழகு said...

    எங்க ஊரைப் பற்றிய அசத்தலான பதிவு!

    -அழகாச் சொல்லிருக்கீங்க அழகு சார்! ஒரு திருத்தம்... எங்க ஊர் இல்ல, அது நம்ம ஊர்! வருகைக்கு நன்றி!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube