Monday, July 16, 2012

மேலும் கொஞ்சம் சுஜாதா

Posted by பால கணேஷ் Monday, July 16, 2012

ம்பலம் இதழில் வந்த சுஜாதாவின் பதில்களை நான் வெளியிட்ட பதிவைப் படித்ததும் இனனும் கொஞ்சம் வெளியிடக் கூடாதா என்று 10000 இமெயில்கள்.... ஓஓஓ.... கீபோர்ட் லூசாக இருப்பதால் (அதுவுமா?) மூன்று ஜீரோ அதிகம் விழுந்து விட்டது. அழிக்க மனம் வரவில்லை... வந்ததன் காரணமாக இப்போது இன்னும சில உங்களின் ரசனைக்காக இங்கே...
 
சூடிக் கொடுத்த சுடர்‌க் கொடியாள் பாடல்களில் எது பிடிக்கும்? ஏன்? -மா..வி.கோவிந்தராசன், ஆரணி.

‘கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ, மருப்பொசிந்த மாதவன்தன் வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றக் கேட்கின்றேன். சொல் ஆழிவெண்சங்கே’ என்று கண்ணனின் உதடுகளைப் பற்றி அந்த உதடுகளோடு உறவு கொண்ட சங்கைக் கேட்கும் பாடல். காரணம், எதுபற்றிக் கேள்விகேட்டால் எதனிடமிருந்து பதில் கிடைக்கும் என்ற ஆண்டாளின் பகுத்தறிவு.

முதலைக் கண்ணீருக்கும், அரசியல்வாதிகளக்கும் என்ன சம்பந்தம்? முதலைக் கண்ணீர் என்றால் என்ன?  -கே.சஞ்சீவிபாரதி, அவ்வையார் பாளையம்.

வழக்கில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், தாங்கள் மக்களை ஏமாற்றிச் சேகரித்த முதலை இழக்காமல் இருப்பதற்காக ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல் வடிக்கும் கண்ணீர்தான் அது.

‘செப்பு’ என்கிற வார்த்‌தை ‘சொல்லு’ என்கிற அர்த்தத்தில் நிறையத் தமிழ்ப் பாட்டுகளில் வருகிறது. (‘செப்பேலோர் எம்பாவாய்’ -ஆண்டாள், ‘செப்புமொழி பதினெட்டுடையாள்’ -பாரதியார்). தெலுங்கில் இதேபோல் செப்பு என்கிற ஒரு வார்த்தை இருக்கிறது. (தமிழில் Seppu, தெலுங்கில் Cheppu) இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? ஆந்திராவில் வெற்றிலை தெளிக்கிற செவ்வாயுடன்(?) யார் ‘செப்பன்டி’ என்றாலும் எனக்கு இந்த சந்தேகம் வந்து மண்டையை உடைக்கிறது. தயவுசெய்து விளக்குங்களேன். -லாவண்யா, ஹைதராபாத்.

என் கருத்தைச் செப்புகிறேன். இது Gloctochronology என்கிற மொழியியல் பிரிவில் வருகிறது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழி பிரியும் போது அதன் அன்றாட வார்த்தைகள் ஆயிரத்துக்கு பத்தோ பதினைந்தோதான் மாறும் என்கிறார்கள். அதற்கு திராவிட மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்றவைகளில் பழந்தமிழ் வார்த்தைகள் அன்றாட வார்த்தைகளாக இருப்பதை உதாரணம் காட்டுகிறார்கள். கன்னடத்தில் ‘மனை, தாயி, தந்தே’  போன்றவை அன்றாட வார்த்தைகள். தெலுங்கில் ‘இல்லு, செப்பு’ போன்றவை அன்றாட வார்த்தைகள். மலையாளத்தில் அகம் புறம்.

 இந்த வார்த்தைகளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு இம்மொழிகள் எப்போது தனி அடையாளம் பெற்றன என்பதைக் கணக்கிட முடியும் என்கிறார்கள். வார்த்தை ஆராய்ச்சியை வைத்து கம்பராமாயண காலம் கி.பி. 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதி என்கிறார் வையாபுரிப் பிள்ளை. ‘குட்டன்’ என்கிற இன்றைய மலையாள வார்த்தை பெரியாழ்வாரில் உள்ளது. ஒரு மொழிச் சொல் இன்னொரு மொழிக்கு வருவத ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. பிறமொழிச் சொற் கலப்பு என்பது பெருமையுமல்ல, சிறுமையுமல்ல. அது உலக மொழிகள் அனைத்திற்குமுள்ள தன்மை- தமிழ் உட்பட.

‘தள்ளாத வயது’ என்பது எது?  -எஸ்.அப்துல்லா அஹ்மது, நாகூர்.

இளம் வயதுதான். உப்பு, சர்க்கரை, எண்ணெய் -எதையும் நீக்கித் தள்ளாமல் எல்லாவற்றையும் சாப்பிடலாம். முதுமை இவற்றையெல்லாம் விலக்கித் தள்ளுகிறது.

ஏகலைவன், அர்ஜுனன், கர்ணன் - யார் சிறந்த வில் வீரன்?  -ரா.மைக் மணிகண்டன், வேம்படிதாளம்.

ஏகலைவன். மற்ற இரு ரெகுலர் கல்லூரி மாணவர்களுக்கு இணையாக, அஞ்சல் வழிக் கல்வியிலேயே தேர்ச்சி பெற்றதால்!

அறிவு முதிர்ச்சிக்கும், வழுக்கைக்கும் தொடர்பு உண்டா?  -கல்லார் ரஹ்மத், நாகை.

உறுதியாகச் சொல்ல முடியாது. உதாரணமாகத் தேங்காயைப் பொறுத்தவரை வழுக்கை, அதன் முதிர்ச்சியின்மைக்கு அடையாளம்.

திரைப்படத் துறை வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள் யார்?  -கே.அரவிந்த், சென்னை.

‘டப்பிங்’ கலைஞர்கள்தான்!

ஆங்கிலத்தில் 'WAR' என்றால் தமிழில் ‘போர்’. அதே மாதிரி ஆங்கிலத்தில் 'POUR' என்றால் தமிழில் ‘வார்’ (வார்த்தல்) என்றாகிறது. இதுபோல வேறு மொழி வார்த்தைகள் இருக்கின்றனவா?  -ராணிகுருநாதன், ஈரோடு.

‘பனி’ என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பொருள் தெரியும். அதே சொல்லுக்குத் தெலுங்கில் ‘வேலை’ என்று அர்த்தம். மலையாளத்தில் ‘காய்ச்சல்’ என்று பொருள். தமிழ்ப் பனியில் தெலுங்குப் பனி செய்தால் மலையாளப் பனி வரும்.

விலை ஏறாத பொருளையே தொடர்ந்து வாங்க ஆசை. எதை வாங்கலாம்?  -ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

காற்று!

பழம் சாப்பிட விரும்புகிறேன். எப்போதும் மலிவாகக் கிடைக்கும் பழம் எது?  -கே.சஞ்சீவிபாரதி, கலிங்கியம்.

வாழைப்பழம்தான். அதுதானே எப்போதும் ‘சீப்’பாகக் கிடைக்கிறது.

குற்றாலத்திற்கு எந்த இடத்தில் இருந்து தண்ணீர் வருகிறது?  -எஸ்.அப்துல்லா அஹ்மது, நாகூர்.

மன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்பர்மேஷன் தருவதில்லை!

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடுபவர்கள், சாதி அடிப்படையில் ஒதுக்கீடுகளும், சலுகைகளும் வழங்குவது சரிதானா?  -இரா.மகராசன், வடக்கூர்.

சரிதான். கைப்பிடியில்லாத கூஜாவை இரண்டு கைகளாலும் ஆதரவாகத் தூக்குவது மாதிரி, பல நூற்றாண்டுக் காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு தேவைதான். ஆனால் சரியான ஆய்வு செய்து, உண்மையிலேயே அவர்கள் முன்னேறுகிறார்களா இல்லையென்றால் சிஸ்டத்தில் என்ன கோளாறு என்று கண்டுபிடித்துக் களைய வேண்டும்.

அவர்கள் உண்மையிலேயே முன்னேற வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். முன்னேறிவிட்ட ஜாதியை ஒவ்வொன்றாக பொதுப் பிரிவுக்கு மாற்றவும் வேண்டும். முற்பட்டவர்களில் ஏழைகளுக்கும் ஒதுக்கீடு வேண்டும்.

கன்னி எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்லிக் ‌கொள்ள விரும்புவது என்ன?  -அமுதவன், திருநெல்வேலி.

சீக்கிரம் மணம் புரிந்து கொள்ளுங்கள். சோகக் கதைகளுக்கான கருப்பொருளைக் காப்பியடிக்காமல் சொந்தத்திலேயே பெற அது ஒன்றுதான் சுலபமான வழி!

===========================================================

னைவருக்கும் வணக்கம்!  வரும் ஆகஸ்ட் 19 ம் தேதி சென்னை மாணவர் மன்றத்தில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது உங்களுக்கு தெரியும். இதுகுறித்த விபரங்களை முன்பே வெளியிட்டிருந்தோம். நிகழ்வின் முக்கிய அம்சமாக பதிவர்கள் கவிதை பாட கவியரங்கம் ஏற்பாடாகி வருகிறது. அதில் கலந்து கொண்டு கவிபாட விரும்பும் அன்பர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சொல்லியிருந்தோம். இதுவரை 15 தோழர்கள் கவி பாட உறுதியளித்திருக்கிறார்கள். மேலும் கவிபாட விழையும் தோழர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் தோழமைகளும் அலைபேசியில் தொடர்பு கொண்டு வருகையை உறுதிபடுத்தும்படி கோருகிறோம். வருபவர்களின் பட்டியல் முழுமையடைந்தால்தான் ஏற்பாடுகள் செய்ய வசதியாயிருக்கும். எனவே காலம் தாழ்த்தாமல் தங்களின் வருகையை உறுதி படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். நன்றி..!

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:  மதுமதி (தூரிகையின் தூறல்)-98941 24021, பால கணேஷ் (மின்னல் வரிகள்)-73058 36166, சென்னைப்பித்தன் (நான் பேச நினைப்பதெல்லாம்)-94445 12938, புலவர் சா.இராமாநுசம் (புலவர் கவிதைகள்)- 90947 66822, சசிகலா (தென்றல்)-99410 61575

===========================================================

59 comments:

 1. //சீக்கிரம் மணம் புரிந்து கொள்ளுங்கள். சோகக் கதைகளுக்கான கருப்பொருளைக் காப்பியடிக்காமல் சொந்தத்திலேயே பெற அது ஒன்றுதான் சுலபமான வழி!//

  Same blood !!

  ReplyDelete
  Replies
  1. மாஸ்டர் சுஜாதாவின் பதிலை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்நத நன்றி மோகன்குமார். முதல் வருகைக்கு பிடியுங்க...

   [im]http://www.aboutallonline.com/wp-content/uploads/2011/07/icecream.jpg[/im]

   Delete
 2. thanks for sujatha answers

  வரும் ஆகஸ்ட் 19 ம் தேதி சென்னை மாணவர் மன்றத்தில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது

  valthukkal

  ReplyDelete
  Replies
  1. சுஜாதா ஸாரின் பதில்களை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 3. beautifull friend... That banana question's answer is really amazing...

  @commenting thro mobile so using english...

  ReplyDelete
  Replies
  1. அதனாலென்ன... கருத்து எவ்வழி வந்தாலும் மகிழ்வே நண்பா. சுஜாதாவின் பதிலை மிக ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 4. அருமையான பதிலகள்
  பதில்களால் கேள்விகளுக்கு அர்த்தம் கொடுக்கும்
  சுஜாதா அவர்களின் பதில் கண்டு மகிழ்ந்தேன்
  மனம் கவர்ந்த பதிவு
  (நாம் இருவரும் தமிழ் மணத்திலும் மிக நெருக்கமாக
  வந்துவிட்டோம் கவனித்தீர்களா
  தங்களை தமிழ் மணத்தில் தொடர்வதையும்
  பெருமையாகக் கருதுகிறேன்.வாழ்த்துக்கள்)

  ReplyDelete
  Replies
  1. இன்று காலை தோழி தென்றல் சசிகலாதான் கவனித்துவிட்டு இந்த விஷயத்தைச் சொன்னாங்க (தமிழ்மணம்). உங்களைப் போலவே நானும் இந்த நெருக்கத்தினாலும் மகிழ்கிறேன் நண்பரே... சுஜாதாவின் பதில்களை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 5. அருமையான பதில்கள்... மிகவும் ரசித்தது :-

  கேள்வி : விலை ஏறாத பொருளையே தொடர்ந்து வாங்க ஆசை. எதை வாங்கலாம்...? பதில் : காற்று...!

  பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (TM 4)

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்ததுடன் மிக ரசித்த பதிலையும் குறிப்பிட்டதில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி நண்பரே...

   Delete
 6. அருமையான கேள்வி பதில்கள் ... எவ்வாறு அவருக்கு இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறதோ?

  பனி என்ற ஒரு சொல்லின் மூன்று மொழி பொருளையும் வைத்து வசனம் பின்னியது அவரின் எழுத்துத் திறனுக்கு சான்று !!!

  ReplyDelete
  Replies
  1. நான் மிகவும் ரசித்த விஷயமும் இதுதான். உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 7. இனனும் கொஞ்சம் வெளியிடக் கூடாதா என்று 10000 இமெயில்கள்.... ஓஓஓ.... கீபோர்ட் லூசாக இருப்பதால் (அதுவுமா?) மூன்று ஜீரோ அதிகம் விழுந்து விட்டது.//

  அண்ணே, இன்னும் நான்கு ஜீரோ போட்டாலும் தப்பில்லை அண்ணே.....சுஜாதா ஒரு வாழ்ந்த வாழும் பல்கலைகழகம்...!

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... மனோவின் ரசனையே அலாதிதான். ரசித்துப் படித்துக் கருத்திட்ட நண்பனுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 8. யாருக்கும் தெரியாத விஷயம் ஒண்ணு சொல்கிறேன், யாருக்கும் சொல்லிடாதீங்க - சுஜாதா தி க்ரேட்! அவர் எழுத்தை மட்டும் சொல்லவில்லை, அவர் வாசிப்பையும் ரசனையையும், அதைப் பகுத்தறிந்து அனுபவித்ததையும் மற்றும் வாசகர்களோடு தகுந்த இடத்தில் பகிர்ந்து கொண்டதையும் தான் சொல்கிறேன் - “கருப்பூரம் நாறுமோ ...”! இனி வாய்ப்பு கிடைத்தால் ஆண்டாள் பாசுரங்களை யாராவது படிக்காமல் போவார்களா?

  விலை ஏறாத பொருள் - காற்று! அதுவாக அடிக்கும் போது தான்! ஃபேன் போட்டு காற்று வாங்கினால் காசு கொடுக்க வேணும்!

  முதலில் பின்னூட்டமிட்ட மோஹன் குமார் அவர்களுக்கு பனி (க்கூழ்) கொடுத்துவிட்டீர்கள், அவருக்கு மலையாள பனி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

  -ஜெ.

  ReplyDelete
  Replies
  1. சுஜாதா சார் ரியலி கிரேட்தான். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு மிக்க நன்றி. (நண்பர் மோகன்குமார் பனிக்கூழ் நிறையச் சாப்பிட்டவர்.அவருக்கு மலையாளப் பனி வராது)

   Delete
 9. war, பனி, ஃபால்ஸ் டப்பிங் கலைஞர்கள் போன்றவற்றில் டிப்பிகல் சுஜாதா!

  ReplyDelete
  Replies
  1. அதிலும் பால்ஸ் நான் மிக ரசித்தது.ரசித்த உங்களுக்கு என் உளம் நிறை நன்றி.

   Delete
 10. நகைச்சுவை ததும்பும் அவரது பதில் சொல்லும் பாணியே தனிதான். குறிப்பாக ஏகலைவைன் குறித்த பதில் அசத்தல். அதான் சுஜாதா சார்.

  ReplyDelete
  Replies
  1. சுஜாதாவை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு இதயம் நிறை நன்றி பாலா.

   Delete
 11. //பால கணேஷ்16 July 2012 5:19 PMஇன்று காலை தோழி தென்றல் சசிகலாதான் கவனித்துவிட்டு இந்த விஷயத்தைச் சொன்னாங்க (தமிழ்மணம்). உங்களைப் போலவே நானும் இந்த நெருக்கத்தினாலும் மகிழ்கிறேன் நண்பரே... //

  சார் ப்ளாகில் எழுத ஆரம்பித்த குறுகிய காலத்தில் மிக நல்ல முன்னேற்றம் அசத்துங்க

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவினால் தானே மோகன்... மனம் மகிழும் வாழ்த்துச் சொன்ன நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 12. Replies
  1. oh, I feel happy on your first visit and best wishes sir. Thank you very very much.

   Delete
 13. சுஜாதா பதில்கள்...
  அனுபவம் என்ற எழுதுகோலில்,
  புத்திகூர்மை என்ற முனை சேர்த்து,
  சுவாரசியம் எனும் மை தொட்டு,
  நேர்மை எனும் வெண்தாளில்,
  எழுதப்பட்ட பொக்கிஷம்..
  Thank you so much Bala Ganesh ji..

  ReplyDelete
  Replies
  1. கவிதை போன்று உங்களின் ரசனையைச் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே. என் இதயம் நிறை நன்றி தங்களுக்கு.

   Delete
 14. அருமையான பகிர்வு கணேஷ் அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி தம்பீ.

   Delete
 15. Replies
  1. பகிர்வை ரசித்த சீனிக்கு மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 16. எல்லா கேள்விகளுக்குமே பதிலளித்த விதம் அருமை., இருப்பினும் எனக்கு பிடித்தது அந்த தள்ளாத வயது... அருமை :)

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பதிலிலும் சுஜாதா இருக்கிறார். மிக ரசித்ததைக் குறிப்பிட்டு மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 17. //விலை ஏறாத பொருளையே தொடர்ந்து வாங்க ஆசை. எதை வாங்கலாம்? -ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

  காற்று!

  பழம் சாப்பிட விரும்புகிறேன். எப்போதும் மலிவாகக் கிடைக்கும் பழம் எது? -கே.சஞ்சீவிபாரதி, கலிங்கியம்.

  வாழைப்பழம்தான். அதுதானே எப்போதும் ‘சீப்’பாகக் கிடைக்கிறது.

  குற்றாலத்திற்கு எந்த இடத்தில் இருந்து தண்ணீர் வருகிறது? -எஸ்.அப்துல்லா அஹ்மது, நாகூர்.

  மன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்பர்மேஷன் தருவதில்லை!//

  அப்பப்பா... இப்படி பதில்கள் தர வாத்தியார் ஒருவரால் தான் முடியும்.

  தமிழ் மணம் வரிசைப் பட்டியலில் ஐந்தாம் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள் பல. முதலிடத்தை சீக்கிரமே எட்டிப் பிடிப்பதற்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பதிலையும் ரசித்திருக்கிறீர்கள். அகமகிழ்வுடன் கூடிய என் நன்றி வெங்கட். உங்கள் அனைவரின் ஆதரவினாலும்தானே இந்த இடம் எனக்குக் கிடைத்துள்ளது...? எல்லாப் பெருமையும் என் நண்பர்களையும் சேரும். வாழ்த்திய நல்ல மனதிற்கு என் அன்பான நன்றி.

   Delete
 18. // ஓஓஓ.... கீபோர்ட் லூசாக இருப்பதால் (அதுவுமா?)// ஹா ஹா ஹா ஏன் வாத்தியாரே ஏன் இப்படி

  //டப்பிங்’ கலைஞர்கள்தான்!// அருமையான ஹாஸ்யம்

  //மன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்பர்மேஷன் தருவதில்லை!//

  சுஜாதாவின் பதில்கள் அனைத்தும் அருமை, பதிவர் சந்திப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது என்பதை நினைக்கும் பொழுது மகிழ்வாய் உள்ளது

  த ம 8

  ReplyDelete
  Replies
  1. அனைத்து பதில்களையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி தோழா.

   Delete
 19. என்றும் புத்துணர்வு கொடுக்கும் எழுத்து வாத்தியாருடயது..சிலேடை கேள்வி பதில்களை தொகுத்து ரசிக்க வைத்த் உங்களுக்கு சிறப்பு நன்றி....

  ReplyDelete
  Replies
  1. வாத்தியாரின் பதில்களை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 20. நகைச்சுவையாகவும் உபயோகமாகவும் இருந்தது! நன்றி....

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த. என் பதிவுகள் பலவற்றை ரசித்துப் படித்து வரும் உங்களுக்கு நெகிழ்வுடன் கூடிய என் நன்றிகள் நட்பே.

   Delete
 21. சுவாரஸ்யமான பகிர்வு:).

  ReplyDelete
  Replies
  1. சுவாரஸ்யம் என்று சொல்லி எனக்கு மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 22. //‘பனி’ என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பொருள் தெரியும். அதே சொல்லுக்குத் தெலுங்கில் ‘வேலை’ என்று அர்த்தம். மலையாளத்தில் ‘காய்ச்சல்’ என்று பொருள்.//
  தெலுங்கில் உபயோகப்படும் வேலை என்ற பொருளில் உள்ள வார்த்தை தமிழில் ‘பணி’ (என் கடன் பணி செய்து கிடப்பதே) என்ற வார்த்தையிலிருந்தும் மலையாலத்தில் உபயோகிக்கும் ‘பனி’ (பனிக்கட்டி) வார்த்தையிலிருந்தும் பிறந்திருக்க வேண்டும்.

  வாத்யார் phonetic-ஆகக் கொடுத்திருந்தாரா அல்லது யானைக்கும் அடி சறுக்கும் என்பதா?

  சுவாரசியமான பதில்கள்

  ReplyDelete
  Replies
  1. அவர் பனி என்பதை கிராமாடிகல் ஆக எடுத்துக் கொள்ளாமல் பேச்சு வழக்கில் உச்சரிப்பதை வைத்துத்தான் சொல்லியிருக்க வேண்டும். அந்த யானைக்கு அடி சறுக்கிய சந்தர்ப்பம் வெகு குறைவு. பதில்களை ரசித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 23. சுஜாதா சுஜாதாதான்... அருமையான பகிர்வு..

  ReplyDelete
  Replies
  1. சுஜாதா பதில்களை நீங்கள் ரசித்ததில் மிக மகிழ்கிறேன் நான். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 24. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சுஜாதாவின் பதில்கள் அப்போதுதான் சொன்னவை போல் இருக்கும் அதுதான் அவருக்கே உரிய சிறப்பு. எல்லா பதில்களுமே அருமை. பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஸார். இப்போது படித்தாலும் இனிக்கிறதே.. ரசித்துப் படித்த தங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 25. மன்னிக்கவும். நான் ஃபால்ஸ் இன்பர்மேஷன் தருவதில்லை!

  haa haa.. சுஜாதா சுஜாதாதான்..

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ரசித்த பதில் படிக்கும்போதே என்னை மிகக் கவர்ந்தது ஸார். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 26. ரொம்ப சூப்பரா இருக்கு சார் சுஜாதா பத்தின பதிவு... நான் அதிகமா சுஜாதா சார் கட்டுரை கதை படிச்சதில்ல.. ஆனா உங்க பதிவு தொடர்ந்து படிச்சதால எனக்கு அவரோட கதைகள் கட்டுரை எல்லாம் படிக்கணும்னு ஆசை வந்திடுச்சி....
  ""ஓஓஓ.... கீபோர்ட் லூசாக இருப்பதால் (அதுவுமா?) மூன்று ஜீரோ அதிகம் விழுந்து விட்டது. அழிக்க மனம் வரவில்லை... வந்ததன் காரணமாக இப்போது இன்னும சில உங்களின் ரசனைக்காக இங்கே.."" ஹஹஹா!!!! ரொம்ப ரசிக்கும் படி எழுதறீங்க சார்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. சுஜாதா என்ற ஜாம்பவானின் பதில்களைப் படித்து ரசித்ததோடு என் எழுத்தையும் நீங்கள் பாராட்டியிருப்பது மிகமிகப் பெருமையாக உள்ளது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 27. அருமையான சுஜாதா பதிலகள்...
  அவர் வீட்டு பலசரக்கு பேப்பர் கூட விடாமல் படித்திருக்கிறேன்...

  இன்னும் நீங்கள் டாஷ்போர்டிலோ...மெயில் ரூபத்திலோ வருவதில்லை கணேஷ் சார்..எப்பவாவது தமிழ்மணம் போனால் உங்களை பிடிக்க முடிகிறது...

  ReplyDelete
  Replies
  1. அடாடா... உடனே இதைச் சரி செய்து விடுகிறேன் நண்பரே... சுஜாதாவின் தீவிர விசிறிகளில் நீங்களும் ஒருவரே என்பதில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   Delete
 28. எனக்கு என்னமோ சுஜாதா அவர்களின் சூப்பர் பதில் பிடித்த அதே அளவுக்கு ராணிகுருநாதன், ஈரோடு அவர்களின் கேள்வியும் பிடித்திருந்தது ( இதற்காக மீண்டும் ஒரு முறை மேலே சென்று கேள்வியை படிக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல) பிரபு

  ReplyDelete
  Replies
  1. க்ரேட் பிரபு. உங்கள் கெஸ்வொர்க்கின்படி நான் மேலே சென்று பார்த்துத்தான் வந்தேன். பலரைக் கவர்ந்த அந்த கேள்வி பதில் உங்களுக்கும் பிடித்திருந்ததில் வியப்பில்லை. உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 29. I had been to Mount Abu on Monday/Tuesday hence I could not see your blog. Today, I read the next part of Sujathas Q & A and very interesting to read the same.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு நல்ல பயணம் அமைந்ததில் மகிழ்ச்சி. சுஜாதாவை ரசித்துப் படித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே.

   Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube