Thursday, July 19, 2012

இன்னும் சிதறுது சிலேடை!

Posted by பால கணேஷ் Thursday, July 19, 2012

முன்னொரு பதிவில் நான் ரசித்த சிலேடைகளை  ‘சிலேடைச் சிதறல்’ என்று எழுதியபோது ‘கி.வா.ஜ மற்றும் வாரியார் சிலேடைகளைத் தரலாமே’ என்று நண்பர் நடனசபாபதி கேட்டிருந்தார். தருவதற்கு எண்ணமிருந்தும் ஏனோ சந்தர்ப்பம் அமையாமல் போய்விட்டது. இப்போது ‘வாகீச கலாநிதி’ கி.வா.ஜகந்நாதன் அவர்களின் சிலேடைகளில் நான் ரசித்ததை உங்களுக்குத் தருகிறேன். புகழ்பெற்றவை என்பதால் பல சி‌லேடைகளை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக் கூடும்.

 கி.வா.ஜ. ஒருமுறை, ‘‘நான் உண்மையிலேயே பேசிய சிலேடைத் துணுக்குகளைத் தவிர, நான் பேசாத சில சி‌லேடைகளும் என் பெயரில் பத்திரிகைகளில் இடம்பெற்று விடுகின்றன. சில துணுக்கு எழுத்தாளர்கள் அவர்களின் சி‌லேடைகளுக்கு என் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். ஒன்று ‌சொல்ல வேண்டும்... நான் சொன்ன சிலேடைகளை விட நான் ‌சொன்னதாக வரும் சில சிலேடைகள் மிக நன்றாகவே இருக்கின்றன.’’ என்று சொன்னார். ஹா... ஹா... இது எப்புடி இருக்கு?

கி.வா.ஜ. அவர்களுக்கு கடைசிக் காலத்தில் உடல்நலம் குன்றிய போது நிறைய ஓய்வு தேவைப்பட்டது. அவரைச் சோதித்த மருத்துவர், ‘‘TAKE REST’’ என்று அறிவுரை சொன்னார். அதற்கு மருத்துவருக்கு கி.வா.ஜ. சொன்ன பதில்: ‘‘OK. I TAKE REST AND LEAVE THE REST TO YOU!’’

சேலத்தி்ல் சாரதா கல்லூரி சில காலத்துக்கு முன் உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. கி.வா.ஜகந்நாதன் அவர்கள் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்று நிர்வாகத்தினர் விரும்பி அழைத்தார். கி.வா.ஜ.வும் வந்தார். ஊருக்கு வெளியே பல ஏக்கர் புன்செய் நிலங்களுக்கு இடையே அந்தப் பள்ளி இருந்ததாகையால் பள்ளியின் பின்புறம் கிணறு இருந்தது. அதையும் காட்டினார்கள். ‘‘கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து வந்தோம். ஆனால் இப்போது பம்ப் செட் போட்டு விட்டோம். பம்ப் மூலமாகத் தண்ணீர் கொட்டுகிறது’’ என்றார் பள்ளித் தலைமை ஆசிரியர். இதைக் கேட்ட அடுத்த கணம் கி.வா.ஜ., ‘‘அடடே! அப்படியானால் இனிமேல் தண்ணீருக்குக் கவலையே இல்லை என்று சொல்லுங்கள்!’’ என்றார்.

‘இலக்கியமும் ஆன்மீகமும்’ குறித்துப் பேச கி.வா.ஜ. அழைக்கப்பட்டிருந்தார். அவர் வாழ்க்கையின் நிலை‌யாமைத் தத்துவத்தைப் பேசிவிட்டு, இம்மை மறுமை ஆகியவை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த மைக் தகராறு செய்தது. உடனே அதை நீக்கி விட்டு வேறொரு மைக்கை வைத்தார் மைக்செட் உரிமையாளர். அதில் இவர் பேச்சைத் தொடர, அந்தோ... அதுவும் தகராறு செய்தது. உடனே கி.வா.ஜ. அவர்கள் உரத்த குரலில், ‘‘இம்மை மறுமை இரண்டிலும் பயன்படுவது ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று எனக்கு இம்மைக்கும் பயன்படவில்லை, மறுமைக்கும் பயன்படவில்லை. என்ன செய்ய..?’’ என்றார். அவையினர் வியந்து கரவொலி எழுப்பினார்கள்.

சில பேருக்கு வாய் பேசிக் கொண்டிருக்கும் போதுகூட கைகள் தானாக ஏதாவது (குரங்குச்) சேட்டை செய்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இயல்புடைய ஒரு பேச்சாளர் கி.வா.ஜ. அருகில் ஒரு விழா மேடையில் அமர்ந்திருந்தார். கி.வா.ஜ.வுககும், அவருக்கும் மாலை போட்டு மரியாதை செய்தார்கள். கி.வா.ஜ.வுடன் பேசியபடி இருந்த அவரது கரங்கள் மாலையிலிருந்து ரோஜாவின் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போட்ட வண்ணம் இருந்தன. இயல்பாக அவர் செய்து கொண்டிருந்த இந்தச் செயல் கி.வா.ஜ.வுக்குச் சங்கடமாக இருந்ததால் அவரால் சரியாகப் பேச முடியவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து, ‘‘ஐயா, ஆரம்பிக்கலாமா?’’ என்று கி.வா.ஜ.விடம் கேட்டார். உடனே பளிச்சென்று ஒரு பன்ச் அடித்தார் கி.வா.ஜ..- - ‘‘நான் இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். இவர் ஏற்கனவே ஆரம் பிய்த்துக் கொண்டிருக்கிறார்’’ என்று.

கி.வா.ஜ.வும் நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்த போது அது ரிப்பேராகி நின்று விட்டது. கி.வா.ஜ. வயதானவர் என்பதால் அவரை காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு மற்ற நண்பர்கள் இறங்கி காரைத் தள்ள முற்பட்டனர். கி.வா.ஜ. தானும் காரை விட்டு இறங்கி, அவர்களுடன் காரைத் தள்ளியபடியே சொன்னார் இப்படி: ‘‘என்னை என்ன தள்ளாதவன் என்று நினைத்து விட்டீர்களா?’’

கி.வா.ஜ. ஒரு நண்பரின் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது காலையில் செய்த உப்புமாவை மாலையில் தன் குழந்தைக்கு அம்மா ஊட்டிக் கொண்டிருக்க, அது சாப்பிட மறுத்து அடம் பிடித்தது. ‘‘ஏண்டி... பாத்துப் பாத்து உப்புமா செஞ்சா திங்கக் கசக்குதோ? தொண்டையில குத்துகிறதா?’’ என்று கோபமாக மகளின் தலையில் குட்டினார் அந்த அம்மா. அருகிலிருந்த கி.வா.ஜ. ஒரு வாய் உப்புமாவை வாயில் போட்டுப் பார்த்துவிட்டு, ‘‘ஆம், தொண்டையில் குத்தத்தான் செய்யும். ஏனென்றால் இது ‘ஊசி’ இருக்கிறதே!’’ ‌என்றார்.

ரு விழாவில் கி.வா.ஜ.வுக்கு மு்ன்னதாகப் பேசிய குமரி அனந்தன் அருமையாகப் பேசி அவையோரின் ஏகோபி்த்த கை தட்டல்களை அள்ளினார். அடுத்துப் பேச வந்த கி.வா.ஜா. அவரிடம், ‘‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று கேட்க, குமரி, ‘‘வண்ணாரப் பேட்டையிலிருந்து’’ என்றார். ‘‘அதுதான் இப்படி வெளுத்துக் கட்டி விட்டீர்கள்!’’ என்று ஒரு போடு போட்டார் கி.வா.ஜ.

ண்பரின் வீட்டில் விருந்துண்ண அழைக்கப்பட்டிருந்த கி.வா.ஜ. உணவு அருந்தியதும் கை கழுவத் தண்ணீர் கேட்டார். நண்பரின் மனைவி ஒரு பிளாஸ்டிக் குவளையில் நீர் மொண்டு வந்து அவரிடம் தர, கி.வா.ஜ. சொன்னார் இப்படி: ‘‘நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். இங்கே குவளையிலேயே நீர் இருக்கிறதே!’’.

தேபோன்ற மற்றொரு சந்தர்ப்பத்தில் நண்பருடன் டிபன் சாப்பிட கி.வா.ஜ. அமர, நண்பரின் மனைவி இலையில் பூரிகளைப் போட்டபடி, ‘‘நீங்க டிபன் சாப்பிட வர்றீங்கன்னதும் பூரியும் கிழங்கும் தயார் பண்ணிட்டேன். உங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதான்னுகூட கேட்டுக்கலை. நாங்க...’’ என்றார். கி.வா.ஜ. உடனே, ‘‘என்னம்மா சொல்கிறீர்கள்...? ஜகந்நாதனுக்கு பூரி பிடிக்காமல் இருக்குமோ?’’ என்றார். இந்தப் பதில் நண்பரையும் அவர் மனைவியையும் ‘பூரி’க்க வைத்து விட்டது.

ஸ்ரீரங்கத்தில் நடந்த இலக்கியக் கூட்டத்திற்காக சென்னையிலிருந்து வந்தார் கி.வா.ஜ. அந்த ரயில் அதிகாலை 4 மணிக்கே ஸ்ரீரங்கத்தை அடைந்து விடும். பெரிய ரோஜாப்பூ மாலை ஒன்றைப் போட்டு அவரை வரவேற்றனர் இலக்கிய அன்பர்கள். இத்தனை அதிகாலையில் இவ்வளவு பெரிய மாலையை எப்படி இவர்கள் வாங்கிவந்தார்கள் என்ற வியப்பு மனதில் ஓட, கி.வா.ஜ., ‘‘அடடா... என்ன இது? காலையிலேயே மாலை வந்து விட்டதே!’’ என்றதும், அனைவரும் கை தட்டி ஆரவாரித்தனர்.

ண்பரின் மனைவியொருவர் டிபன் எதுவும் வேண்டாம் என்று மறுத்த கி.வா.ஜ.விடம், ‘‘அப்படியானால் பழம் கிழம் எதுவும் சாப்பிடுகிறீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார்.  ‘‘பழைய காலத்துக் கிழவன் நான் என்பதால் இப்படிச் சொன்னீங்க போல இருக்கு. எனக்கு எதுவும் வேண்டாம்மா...’’ என்ற கி.வா.ஜ.வி்ன் பதில் அவர்களைச் சிரிக்க வைத்து விட்டது.

59 comments:

 1. பொதுவாக சிலேடைகளை ரசித்துப் படிப்பேன்.கி.வா.ஜா சிலேடைகள் என்றாலே சிரிக்காமல் இருக்கவே முடியாது..அனைத்து சிலேடைகளும் ரசிக்க வைத்தன.
  "தள்ளாதவன் என நினைத்தீர்களா"-செம டைமிங்..

  ReplyDelete
  Replies
  1. சிலேடைகளை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. முதல் நபராய் வந்து வாழ்த்தின உங்களுக்கு... கவிதை எழுத பேனாவும் பேப்பரும் பரிசு..!

   [im]http://www.grey-cloud.com/wp-content/uploads/2012/05/poetry.jpg[/im]

   Delete
  2. நன்றி..பெற்றுக் கொண்டேன்..

   Delete
 2. Replies
  1. ரசித்துப் படித்தவைகளை குறிப்பிட்டுப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 3. Miga miga rasithaen. Anaithum Then !!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்துக் கருததிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 4. நல்ல டைமிங் சென்ஸ்... ரசித்து படித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. சிலேடைகளை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 5. // ஜகந்நாதனுக்கு பூரி பிடிக்காமல் இருக்குமோ?’’// கி வ ஜ என்றாகி எனக்கு நினைவுக்கு வருவது இந்த சிலேடை தான்.
  நீங்கள் சொல்லாமல் விட்டிருக்க வேண்டும் அதனை நான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் குருவே நீங்கள் சிஷ்யனுக்கு வேலையில்லாமல் செய்து விடீர்கள். அனைத்தையும் ரசித்து மகிழ்ந்து சிரித்தேன் த ம 4

  ReplyDelete
  Replies
  1. எல்லா சிலேடைகளையும் ரசித்துப் படித்துக் கருத்திட்ட சீனுவுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

   Delete
 6. ஆரம் பிய்த்துக் கொண்டிருக்கிறார்’’ என்று.
  சிலேடைகள் அருமை. உங்களால் மட்டுமே இப்படி பதிவிட்டு அசத்தமுடியும்.
  எங்களுக்கும் கொஞ்சம் பயிற்சி கொடுங்க டீச்சர்.

  ReplyDelete
  Replies
  1. பயிற்சியா... எனக்குத் தெரிஞ்ச விரலளவை சொல்லித் தந்துட்டாப் போச்சு... மகிழ்வு தந்த வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி தென்றல்.

   Delete
 7. சிதறியிருக்கும் சிலேடைகள் சிரிப்புச் சுரங்கம்.

  ReplyDelete
  Replies
  1. சிரித்து ரசித்துப் படித்த உங்களுக்கு இதயம் நிறை நன்றி.

   Delete
 8. Fantastic and quite interesting. Timing is more important and it seems spontaneous for KEEVAJA.

  ReplyDelete
  Replies
  1. ஆம். வினாடி நேரத்தில் சிந்தித்துச் சொல்வதில் வல்லவராக இருந்திருக்கிறார். இன்றைக்கெல்லாம் சிலேடை என்ற வார்த்தையைச் சொன்னாலே முதலில் அவர் நினைவுதானே வருகிறது? ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 9. தமிழுக்கு வரபிரசாதம் இந்த சிலோடை..

  இதையே தற்போது தவறான இரட்டை அர்த்தம் தருவதுபோது பயன்படுத்துகிறார்கள்...

  உங்களுக்கு பழம் கிழம் வேண்டுமா தலைவரே...

  ReplyDelete
  Replies
  1. நான் பழம்கிழமுமல்ல, புதுக்கிழமுமல்ல. அதனால் எனக்கு உங்கள் அன்பே போதும் நண்பரே... நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் சரியே. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 10. நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் நடப்பதுபோல் எனது வேண்டுகோளை ஏற்று திரு கி.வா.ஜ அவர்களின் சிலேடைகள் சிலவற்றை பதிவிட்டமைக்கு நன்றி.

  கரும்பில் எந்த பக்கத்தில் சுவை அதிகம் என்று சொல்லமுடியாதோ,அது போல
  ‘வாகீச கலாநிதி’அவர்களின் சிலேடைகளில் எது அதிகம் இரசிக்கக்கூடியது என சொல்லமுடியாது. அத்தனையும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... அத்தனை சிலேடைகளையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 11. கி.வா.ஜா அவர்களின் சிலேடை நயமும்
  அதை அவர் சொன்ன சூழலை நீங்கள்
  வர்ணித்துப் போனவிதமும் மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சிலேடைகளை ரசித்து நீங்கள் பாராட்டியதில் மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி.

   Delete
 12. தமிழ் இலக்கிய உலகில் கி.வா.ஜ வுக்கு என்று தனியிடம் உண்டு. அவரை நினைவு கூர்ந்து அவரது சிலேடைச் சிதறல்களைத் தநதமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சிலேடைகளைப் படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 13. கி வ ஜ சிலேடைகள் நானும் நிறைய படீசிருக்கேன் நீங்க அதை மறுபடியும் நினைவு படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் படித்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 14. சிலேடைகள் அருமை சார்..,ரசிக்க வைத்தது.!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

   Delete
 15. புது புது விடயங்களை தெரிந்துக்கிறதுதான் அது கணேஷ் சாரோட பிளாக்கில்தான்..எழுத்தளவில் பின்னி பெடலை எடுத்து எல்லோரையும் ரசிக்க வைக்கிறிங்க சார்..ரொம்ப நாள் இங்க வரல..வேற.

  @@ கி.வா.ஜ. சொன்ன பதில்: ‘‘OK. I TAKE REST AND LEAVE THE REST TO YOU!’’ @@
  என்னால யோசிச்சு கூட பார்க்க முடியாத லாவகமான பதிலோடு பதிவையும் மனம் நிறைக்க ரசித்தேன்.நன்றிங்க சார்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்ததைக் குறிப்பிட்டு மனமகிழ்வோடு நீங்கள் பாராட்டியிருப்பது நெகிழ வைத்தது என்னை. என் இத்யம் நிறைந்த நன்றிகள் குமரன்.

   Delete
 16. அசத்திட்டீங்க கணேஷ். எத்தனை அற்புதமான சிலேடைச் சுவைகள்! நினைக்க நினைக்க இனிக்கிறது. கி.வா.ஜ. அவர்களின் பிரமாதமான சொல்லாடல்களைத் தேடிப்பிடித்துப் பகிர்ந்தமைக்கு நன்றி கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 17. மிகவும் ரசித்தேன் பாஸ் எனக்கும் சிலேடைகள் மிகவும் பிடிக்கும்

  ReplyDelete
  Replies
  1. சிலேடைகள் அனைத்தையும் ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ராஜ்.

   Delete
 18. சிலேடைகள் ரசித்தேன் அனைத்தும் தேன் கணேஷ் சார்

  kudanthaiyur.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. சிலேடைகள் அனைத்தையும் ரசித்துப் படித்துச் சுவைத்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 19. இவற்றை எல்லாம் படித்தால் என் மொழி மீது காதல் இன்னும் அதிகரிக்கிறது. வெகு காலமாகவே சிலேடைகளின் ரசிகன் நான். பகிர்வுக்கு நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட பாலாவுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 20. சில்லென்ற ஏட்டைப் புரட்டியது போல சிலேடையை ரசித்துப் படித்தேன்! சிரித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சிலேடையை அசை பிரித்து நீங்கள் ரசித்துள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன் ஸ்ரீராம். மிக்க நன்றி.

   Delete
 21. அனைத்தையும் வெகுவாக ரஸித்தேன்.
  மிகவும் அருமையான பகிர்வு.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ரசித்துப் படித்தீர்கள் என்பதில் மனநிறைவு எனக்கு. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 22. காலையிலே மாலை வந்துவிட்டதே அருமையான நகைச்சுவை ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையையும் பொருடசுவையையும் ரசித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி நேசன்.

   Delete
 23. ஒரு வீட்டில் கி.வா.ஜ.க்கு விருந்து. முதலில் மாம்பழம், பின் சாப்பாடு, தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள மாவடு போட்டார்கள். அதுபற்றி அவர் பாடிய வெண்பாவின் கடைசி வரிக் குறும்பு: ‘கனிக்குப்பின் வருமாங் காய்’ (வரும் மாங்காய், வருமாம் காய்)

  கிவாஜ கலந்துகொண்ட ஒரு கவியரங்கம். கவிஞர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார்கள், ‘மாலை இல்லையா?’ என்று கேட்டார் ஒருவர். ’கவிகளுக்கு மாலை போட்டால் என்ன ஆகும் என்று தெரியாதா?’ என்று குறும்பாகக் கேட்டார் கிவாஜ (கவி = குரங்கு)

  கிவாஜவைப் பேச அழைத்த ஒருவர் ‘என் கவனிப்பில் குற்றம் குறை இருந்தால் மன்னிக்க’ என்றார், இவர் பதிலுக்கு ‘குற்றம் குறைதான்’ என்றார்.

  ’தென்னைக்கும் மனிதனுக்கும் நேர் விரோதம்’ என்பார் கிவாஜ. காரணம், தென்னைக்கு இளமையில் வழுக்கை, மனிதனுக்கு முதுமையில்.

  கிவாஜ பெயரைச் சிலர் ‘ஜெகந்நாதன்’ என்று எழுதுவார்கள். ‘எனக்குக் கொம்பு இல்லை’ என்று நாசூக்காகத் திருத்துவார்.

  தன் டிரைவர்களுக்குக் கிவாஜ சூட்டிய செல்லப் பெயர்கள் ‘பார்த்தசாரதி’ (நான் பார்த்த சாரதி),’சக்கரபாணி’ (ஸ்டீயரிங் வீல் பிடித்திருப்பதால்)

  ’ரயில் ரொம்ப சத்தம் போடுகிறது’ என்றார் நண்பர். ‘ஆமாம், இந்த ரயிலில் சத்தம் அதிகம்தான்’ என்றார் கிவாஜ (சத்தம் = sound / ticket price)

  ’முருகன் தேவர்கள் படைக்குத் தலைவனாக, தேவ சேனாபதியாக இருந்தான், பின் தேவயானியை மணந்து தேவசேனா பதி ஆனான்’ : கிவாஜ.

  கணவன் மனைவி ஒருவரை நமஸ்கரிக்கும்போது, ஆணுக்கு வலப்புறம் பெண் நிற்பது ஏன்? காரணம் ‘பெண்ணுக்கு ஆண் இடம் தரமாட்டான்’ : கிவாஜ.

  ஒருவர் கிவாஜவுக்கு முந்திரிப் பழம் தந்தார்.‘முழுப்பழம் இல்லையா, முந்திரிப் பழம்தானா?’ என்று சிரித்தார் இவர். முந்திரி=1/32 in tamil

  நண்பர் மகள் அவருக்கு மாதுளம்பழம் கொடுத்தார். ‘இந்த மாது உளங்கனிந்து கொடுத்த மாதுளங்கனி ரொம்ப இனிக்கிறது’ என்றார் கிவாஜ.

  கிவாஜ குள்ளம். அவரை ஒருவர் அகத்தியர் என்றார். ‘ஆமாம், நானும் கும்பத்தில்தான் பிறந்தேன்’ என்றார் இவர் கும்பம் = குடம் / ஒருவகை ராசி.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நான் தவறவிட்ட சிலேடைகள் எத்தனை எத்தனை இருந்திருக்கிறது நண்பரே... இப்பதிவினூடாக அவற்றை அளித்து நம் நண்பர்களை ரசித்துப் படிக்கச் செய்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 24. துணுக்குகள் அனைத்தும், ’சிரிக்க வைக்கிறார் கிவாஜ’ புத்தகத்திலிருந்து. அல்லயன்ஸ் பதிப்பகம், விலை ரூ 35/

  பாதிக்குப் பாதி அருமையான சிலேடைகள். கிவாஜ எந்நேரமும் வார்த்தைகளோடு செம ஜாலியாக விளையாடியபடி வாழ்ந்திருக்கிறார்.

  இந்தப் புத்தகத்தை இணையத்தில் இலவசமாகவும் டவுன்லோட் செய்து படிக்கலாம்.

  http://tamilvu.org/library/libindex.htm

  Strongly recommended...

  --http://nchokkan.wordpress.com/2012/05/20/1363/

  ReplyDelete
  Replies
  1. அருமையான லிங்க் தந்திருக்கிறீர்கள் நண்பரே... அங்கு சென்று கி.வா.ஜ.வின் தமிழை என் கணினிக்குள் கொண்டு சேர்த்து விட்டேன். பயனுள்ள பகிர்விற்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 25. சற்று சீரியஸாய் யோசித்தால் தெரியும்.... ரசிக்கப் படும் இடத்தில் தான் கிவாஜா சிலேடைகளைப் பேசியிருக்கிறார் என்பது புரியும்...
  சிலேடை ரசிக்கப் படாத இடத்தில் பேசினால்...
  கடிக்காம, கம்னு இரு வாதாரே...
  என்று தான் சொல்வார்கள் இல்லையா...?

  ReplyDelete
  Replies
  1. ஆம். தமிழின் சுவை உணர்ந்தவர்கள் மட்டுமே கி.வா.ஜ.வின் சிலேடை நயத்தை அனுபவிக்க இயலும். ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 26. ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தன சிலேடைகள்..

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 27. வார்த்தை விளையாட்டு - உங்கள் பகிர்வினையும், திரு பால் ஹனுமான் கொடுத்த பின்னூட்டத்தினையும் மிகவும் ரசித்தேன்.

  தொடரட்டும் இனிய பகிர்வுகள்....

  ReplyDelete
  Replies
  1. ஆம் வெங்கட். பாலஹனுமான் அசத்தி விட்டார் அசத்தி. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 28. Arumaiyana Pathivu .All the words are not only for laughing but also thinking .How is he great ?Thanks for your contributions and some of a few friens giving his articles to us .with thanks by DK

  ReplyDelete
 29. அற்புதமான சேகரிப்பு.


  நன்றி பகிர்ந்தமைக்கு

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube