Wednesday, December 7, 2011

சிலேடைச் சிதறல்கள்

Posted by பால கணேஷ் Wednesday, December 07, 2011
வேறெந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் நம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று- இரண்டு பொருள் தரும்படியான வார்த்தைகள் மற்ற மொழிகளைவிட தமிழில்தான் அதிகம் உள்ளன. ஒரு வார்த்தை இருபொருள் தரும்படி அழகாகப் பேசுவதை ‘சிலேடை’ என்று அழைப்பார்கள். இந்த சிலேடைத் தமிழில் வல்லவர் திரு.கி.வா.ஜ. அவர்கள். இங்கே நான் படித்து ரசித்த சில சிலேடைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

==================================================

ரு மடாதிபதி தமிழ்ப் புலவர்களை எல்லாம் அழைத்து விருந்து ஒன்று வைத்தாராம். எல்லா ஊர்களில் இருந்தும் புலவர்கள் வந்து விருந்தில் அமர்ந்தனர். ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்குப் பக்கத்தில் கடைமடை என்ற ஊர் இன்றைக்கும் இருக்கிறது. அவ்வூரைச் சேர்ந்த புலவர் ஒருவர் விருந்திற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார்.

மடாதிபதி அவரை வரவேற்கும் விதமாக, “வாரும் கடைமடையரே!’ என இருபொருள்பட அழைத்தாராம். கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவரே என்பது ஒரு பொருள். கடைசியாக வந்த மடையரே என்பது மற்றொரு பொருள். வந்த புலவர் லேசுப்பட்டவரல்ல... அவரும் பதிலுக்கு, “வந்தேன் மடத்தலைவரே...” என்றாராம். இதற்கு மடத்திற்குத் தலைவரே என்பது ஒரு பொருள். மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்பது மற்றொரு பொருள்.

==================================================

பெரும் புலமை பெற்ற ஒருவர் பாட்டுப் பாடுவதிலும் வல்லமை பெற்றிருந்தார். அவர் தன் ஊரில் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்தபோது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த கிராமத்து ஆசாமி ஒருவன் அவரை நெருங்கி, “ஐயா, நான் உங்களைப் பாடையில பார்க்கணும்” என்றானாம். ’பாடும்போது பார்க்க வேண்டும்’ என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறான். அவரும் அசராமல், ”அப்ப சாகையில வந்து பார்” என்றாராம். ’சாகை’ (ஜாகை) என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். வீட்டில் வந்து பார் என்பதை இப்படி அழகாக சிலேடையில் கூறிச் சென்றுள்ளார் புலவர்.

==================================================

யதான புலவர் ஒருவர் கம்பு ஒன்றினை ஊன்றிக் கொண்டு தள்ளாடியபடி வந்து  கொண்டிருந்தார். அவரைக் கண்ட கஞ்சப்பிரபு ஒருவர் கேலியாக, ”வாரும் கம்பரே...” என்றாராம். கம்பரைப் போன்ற புலவர் என்றும் கம்பை ஊன்றியவரே என்றும் பொருள் கொள்ளும்படி அவர் பேச, இவரும் உடனே தயங்காது கம்பைச் சற்று ஓங்கி, ”அடியேன் வணக்கம்” என்றாராம்.

==================================================

ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது. எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்து அமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்தூரைச் சேர்ந்த ‘வெண்பா பாடுவதில் புலி’ என்று அழைக்கப்பட்ட பிச்சுவையர் வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக, “வேம்புக்கு இங்கு இடமில்லை” என்றாராம். ’வேம்பு’ என்றால் கசப்பு. இந்த இனிய சபையில் கசப்புக்கு இடமில்லை என்றும், வேம்பத்தூரைச் சேர்ந்த உமக்கு இடமில்லை என்றும் இருபொருள் கொள்ளலாம்.

புலவர் விடுகிற ரகமா என்ன..? சட்டென்று சற்றும் தயங்காது வெகுவேகமாக வந்து மன்னரின் சிம்மாசனத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, “வேம்பு அரசோடுதான் இருக்கும்” என்றாராம். அதாவது வேம்பு என்று தன்னை மன்னன் சொன்னதும், அரசனும், வேம்பாகிய தானும் சேர்ந்தே இருப்போம் என்றும், வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து இருந்தால் அது கோவிலாகும் என்றும் இருபொருள்படக் கூறினாராம். சபையே வியந்து சிரிக்க, மன்னரும் சிரித்து மகிழ்ந்தாராம்.

==================================================

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு அடுத்த கூட்டத்தில் பேசுவதற்கு அவசரமாகக் கிளம்பினார். அவரோடு சில நண்பர்களும் காரில் ஏறிக் கொண்டனர். அண்ணா, டிரைவரிடம், “தம்பி, விரைவாக வண்டியை ஓட்டுவாயா?” என்று கேட்டார்.

டிரைவரும் உடனே, “கவலைப்படாதீங்கய்யா... ஒரு நொடியில கொண்டு போய் விட்டுடறேன் பாருங்க...” என்றிருக்கிறார். அவர் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றதில் சாலையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கவனிக்காமல் போக, கார் பள்ளத்தில் இறங்கி உருண்டது. அனைவரும் காரைவிட்டு வெளியே வர, நல்லவேளையாக யாருக்கும் அதிகமாகக் காயம் இல்லை.

அனைவரும் கோபமாக டிரைவரை திட்டத் தொடங்க, அண்ணா அவர்களை கையமர்த்தி விட்டு இப்படிக் கூறினாராம்: ”நாம கிளம்பறப்பவே அவர்தான் சொன்னார்ல... ஒரு ‘நொடி’யில விடறேன்னு. சொன்னபடி விட்டுட்டார். விடுங்க...” நொடி என்பதற்கு வினாடி, பள்ளம் என்று இரு பொருள் உண்டு. இப்படி அண்ணா சொன்னதும் அனைவரும் கவலை மறந்து சிரித்து விட்டார்களாம்.

==================================================

வியரசு வைரமுத்து ஒருமுறை தன் சொந்த ஊரான வடுகபட்டிக்கு வந்திருந்தார். அவர் என் இனிய நண்பர் ஆதலால் நான் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம். அவருக்கு கவிதையைப் போலவே நகைச்சுவை உணர்வும் அதிகமுண்டு. நானும் அவரும் நண்பர்களும் காரில் வரும்போது மதுரையில் ஓரிடத்தில் பொங்கல் வைத்து விழாக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

“மதுரை இன்றைக்கும் கிராமம்தான்” என்று கவிஞர் ஆச்சரியத்தோடு சொல்ல, “அந்த போஸ்டரைப் பாருங்கள். இன்றிரவு கரகாட்டமும், பட்டிமன்றமும் நடைபெறும் என்று போட்டிருக்கிறார்கள்” என்று நான் சுட்டிக் காட்டினேன்.
   “இப்போதெல்லாம் இரண்டும் ஏறத்தாழ ஒன்றுதான்” என்று ஒரு நண்பர் சொன்னார்.
   உடனே வைரமுத்து, “இரண்டுக்குமே தலையில் ஏதாவது இருந்தால்தான் நல்லது” என்றார் சிரிப்போடு. 
   கார் ஓட்டிய டிரைவர் உட்பட அனைவரும் சிரித்து விட்டோம். அவர் சிலேடையாகக் கூறிய செய்தியை நினைத்து வியந்தோம்.

-முனைவர் கு.ஞானசம்பந்தன் எழுதிய ’பரபரப்பு, சிரிசிரிப்பு’ என்ற நூலிலிருந்து.

64 comments:

  1. தாங்கள் தந்த சிலேடைகளைப் படித்தேன்! இரசித்தேன்.நன்றி!

    வாரியார் ஸ்வாமிகளும் கலைஞரும் கூட சிலேடையாக பேசுவதில் வல்லவர்கள். அவர்களது சிலேடைகளையும் தாங்கள் தரலாம்.

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை

    ReplyDelete
  3. வே.நடனசபாபதி said...
    தாங்கள் தந்த சிலேடைகளைப் படித்தேன்! இரசித்தேன்.நன்றி! வாரியார் ஸ்வாமிகளும் கலைஞரும் கூட சிலேடையாக பேசுவதில் வல்லவர்கள். அவர்களது சிலேடைகளையும் தாங்கள் தரலாம்.

    -நீங்கள் ரசித்ததற்கு நன்றி. நீங்கள் கேட்டது போல சிலேடைகளை இன்னும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    அனைத்தும் அருமை

    -உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ராஜா சார்...

    ReplyDelete
  5. ஒருவரை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அவர் படிக்கும் புத்தகங்களைப் பார்த்தால் புரியும் நீங்கள் சுவாரஸ்யமானவர்தான்..

    ReplyDelete
  6. சிலேடை சிதறல்களை சுட்டிக் காட்டிய இடங்களெல்லாம் அருமை.சிலேடை என்றதும் கலைஞர் இடம்பெறுவார் என்றிருந்தேன்..தற்போதைய சூழ்நிலையில் சரிப்பட்டுவராது என்பதால் விட்டுவிட்டீர்கள் என்று நினைத்துக்கொண்டே மற்ற சிலேடைகளைப் படித்தேன்..பிடித்தது..உங்களது அடுத்த பதிவை எதிர்நோக்குகிறேன்..

    ReplyDelete
  7. veedu said...
    ஒருவரை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அவர் படிக்கும் புத்தகங்களைப் பார்த்தால் புரியும் நீங்கள் சுவாரஸ்யமானவர்தான்..

    -நீங்கள் பாராட்டியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சியாகவும் உள்ளது. மனம் நிறைந்த நன்றி...

    ReplyDelete
  8. மதுமதி said...
    சிலேடை சிதறல்களை சுட்டிக் காட்டிய இடங்களெல்லாம் அருமை.

    -மிக்க நன்றிங்க...

    சிலேடை என்றதும் கலைஞர் இடம்பெறுவார் என்றிருந்தேன்.. தற்போதைய சூழ்நிலையில் சரிப்பட்டுவராது என்பதால் விட்டுவிட்டீர்கள் என்று நினைத்துக்கொண்டே மற்ற சிலேடைகளைப் படித்தேன்..

    -எனக்கு அரசியல் பத்தில்லாம் தெரியாது கவிஞரே... ரொம்ப நீளம் ஆயிடக் கூடாதேன்னு பொதுவான சிலேடைகளை போட்டேன். அடுத்து கி.வா.ஜ., வாரியார் ஆகியவ சிலேடைய பதிவிட்டபின் கலைஞரையும் எழுதுறேன்.

    பிடித்தது..உங்களது அடுத்த பதிவை எதிர்நோக்குகிறேன்..

    -நன்றிங்க... தொடர்ந்து உங்க நம்பிக்கைய காப்பாத்த முயல்வேன்...

    ReplyDelete
  9. கிவாஜ சிலேடை எல்லாமே நல்லா இருக்கு ஏற்கனவே படிச்சிருக்கேன் இப்ப நினைவு படுத்தி இருக்கீங்க .

    ReplyDelete
  10. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. 'கடைமடையர் மடத்தலைர்' மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  13. படித்தேன். படித் தேன்!

    ReplyDelete
  14. அருமை! கிவாஜ ஒருதடவை காலங்கார்த்தால ஸ்ரீரங்கம்க்கு ஒரு மீட்டிங்குக்கு வந்தார் என் அப்பாவோட சிலர் வரவேற்க மாலையோட போனபோது கிவாஜ என் அப்பாவிடம்,”அட! காலையிலேயே மாலையா?” என்றாராம்! சிலேடை சொல்ல நிறைய புத்திசாலித்தனம் வேண்டும், தொகுத்துத்தந்துள்ள கணேஷுக்கு சபாஷ்!

    ReplyDelete
  15. Lakshmi said...
    கிவாஜ சிலேடை எல்லாமே நல்லா இருக்கு ஏற்கனவே படிச்சிருக்கேன் இப்ப நினைவு படுத்தி இருக்கீங்க

    -படிச்சு ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிம்மா...

    ReplyDelete
  16. Rathnavel said...
    அருமையான பதிவு.எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.

    -படித்து ரசித்ததுடன், என்னை முகநூல் பக்கத்திலும் பகிர்ந்தமைக்கு இதயம் நிறைந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete
  17. சிலேடை சிதறல்களை படித்தேன் ரசித்தேன் அண்ணா! எல்லாஅமே புதுசாவும் இருக்கு. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  18. ரசித்துப் படித்தேன் ..அருமையான தொகுப்பு

    ReplyDelete
  19. தமிழ் புரியும் விந்தைகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  20. மிக அருமையான சிலேடைகள் சகோதரா. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  21. சிலேடைகள் அனைத்தும் ரசிக்கவைத்தன. இதுவரை அறிந்திராத பல சுவாரசியத் தகவல்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து வருபவற்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  22. நீங்க சொல்றது சரி தான்,,, தமிழ் மொழி சிலேடையில் தனித்துவம் வாய்ந்த மொழி என கேள்விப்பட்டு இருக்கேன்.... உங்க பகிர்விலும் சிலேடையை அறிந்து கொண்டேன்...


    வாசிக்க:
    சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி

    ReplyDelete
  23. suryajeeva said...
    பகிர்வுக்கு நன்றி.

    -உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூர்யஜீவா சார்...

    ReplyDelete
  24. அப்பாதுரை said...
    'கடைமடையர் மடத்தலைர்' மிகவும் ரசித்தேன்.

    -நீங்கள் ரசித்ததில் எனக்கு நிறைவு. மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  25. ஸ்ரீராம். said...
    படித்தேன். படித் தேன்!

    -ரசித் தேன் என்று சொல்கிறீர்கள். மிக்க நன்றி!

    ReplyDelete
  26. ஷைலஜா said...
    அருமை! கிவாஜ ஒருதடவை காலங்கார்த்தால ஸ்ரீரங்கம்க்கு ஒரு மீட்டிங்குக்கு வந்தார் என் அப்பாவோட சிலர் வரவேற்க மாலையோட போனபோது கிவாஜ என் அப்பாவிடம்,”அட! காலையிலேயே மாலையா?” என்றாராம்! சிலேடை சொல்ல நிறைய புத்திசாலித்தனம் வேண்டும், தொகுத்துத்தந்துள்ள கணேஷுக்கு சபாஷ்!

    -கி.வா.ஜ. அவர்களின் சிலேடை அருமைக்கா. அவருடைய சிலேடைகளைச் சொல்லணும்னா தனிப் பதிவே போடணும். அதான் இதுல அவரைச் சேர்க்கலை நான்...

    ReplyDelete
  27. ராஜி said...
    சிலேடை சிதறல்களை படித்தேன் ரசித்தேன் அண்ணா! எல்லாஅமே புதுசாவும் இருக்கு. பகிர்விற்கு நன்றி

    -படிச்சு ரசிச்சதுக்கு மிக்க நன்றி தங்கையே...

    ReplyDelete
  28. சி.பி.செந்தில்குமார் said...
    சிறப்பான சிலேடைகள்

    -உங்கள் வருகை எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருவது. பாராட்டியதற்கும் நன்றி செந்தில்!

    ReplyDelete
  29. கோகுல் said...
    தமிழ் புரியும் விந்தைகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    -சரியான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பல ஜாலங்கள் செய்யும். ரசி்த்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  30. பூங்குழலி said...
    ரசித்துப் படித்தேன் ..அருமையான தொகுப்பு

    -வாங்க பூங்குழலி... பாத்து ரொம்ப நாளாச்சு. நீங்க ரசிச்சதுல எனக்கு மகிழ்ச்சி. நன்றி!

    ReplyDelete
  31. kavithai (kovaikkavi) said...
    மிக அருமையான சிலேடைகள் சகோதரா. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    -முதல் வருகை என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் சொல்லி என்னை உற்சாகப்படுத்திய தங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  32. கீதா said...
    சிலேடைகள் அனைத்தும் ரசிக்கவைத்தன. இதுவரை அறிந்திராத பல சுவாரசியத் தகவல்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து வருபவற்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    -உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயல்கிறேன். வருகைக்கும், ரசித்தமைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  33. தமிழ்வாசி பிரகாஷ் said...
    நீங்க சொல்றது சரி தான்,,, தமிழ் மொழி சிலேடையில் தனித்துவம் வாய்ந்த மொழி என கேள்விப்பட்டு இருக்கேன்.... உங்க பகிர்விலும் சிலேடையை அறிந்து கொண்டேன்...

    -நீங்க அறிந்து கொண்டு ரசித்ததுல மிக்க மகிழ்ச்சி. என் மனமார்ந்த நன்றி பிரகாஷ்!

    ReplyDelete
  34. பத்தாவதோடு மனதில் பதிந்துவிட்ட(முழுதும் மறந்துவிடவில்லை ஐயா) சிலேடை, ஒரு பகிர்வின் மூலம் தோண்டி எடுத்ததற்கு நன்றிகள் பல ஐயா...

    ReplyDelete
  35. இரசிக்கத்தக்க சிலேடைப் பேச்சுகள்.பகிர்வுக்கு நன்றி.இதுபோன்ற என் பழைய பதிவொன்று http://chennaipithan.blogspot.com/2011/03/1.html
    முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  36. தமிழ்கிழம் said...
    பத்தாவதோடு மனதில் பதிந்துவிட்ட(முழுதும் மறந்துவிடவில்லை ஐயா) சிலேடை, ஒரு பகிர்வின் மூலம் தோண்டி எடுத்ததற்கு நன்றிகள் பல ஐயா...

    -கரெக்‌ட் சார். நானும் பள்ளியில் படித்ததை மறக்காமல்தான் இன்றைய தலைமுறையினர் படித்தால் புதிதாய் இருக்குமே என்று பதிவிட்டேன். உங்களுக்கு என் நன்றி!

    ReplyDelete
  37. சென்னை பித்தன் said...
    இரசிக்கத்தக்க சிலேடைப் பேச்சுகள்.பகிர்வுக்கு நன்றி.இதுபோன்ற என் பழைய பதிவொன்று http://chennaipithan.blogspot.com/2011/03/1.html முடிந்தால் பாருங்கள்.

    -முடிந்தால் என்ன... கண்டிப்பாகப் பார்க்கிறேன். சென்னைப்பித்தன் ஸார் தொடாத சப்ஜெக்ட்டை இனிதான் நான் கண்டுபிடிக்‌கவேண்டும் போல. சந்தோஷமாய் இருக்கு சார். மிக்க நன்றி!

    ReplyDelete
  38. சிலேடைப்பேச்சு அனைவருக்கும் வந்துவிடாது.அழகாக தொகுத்து சுவாரஸ்யப்படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
  39. சிலேடை சிதறல்களின் சேகரிப்பு சூப்பர் கணேஷண்ணா..

    ReplyDelete
  40. ஸாதிகா said...
    சிலேடைப்பேச்சு அனைவருக்கும் வந்துவிடாது.அழகாக தொகுத்து சுவாரஸ்யப்படுத்தி விட்டீர்கள்.

    -தங்கையின் வருகைக்கும், கருத்துக்கும் என் நன்றி!

    ReplyDelete
  41. அன்புடன் மலிக்கா said...
    சிலேடை சிதறல்களின் சேகரிப்பு சூப்பர் கணேஷண்ணா..

    -இங்க பாத்து நாளாச்சு தங்கச்சி! நலமா? இது உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப சந்தோஷம். ந்னறி!

    ReplyDelete
  42. சிலேடை சிதறலகள் அனைத்தும்
    சிலேடை முத்துக்கள்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 7

    ReplyDelete
  43. Ramani said...
    சிலேடை சிதறலகள் அனைத்தும் சிலேடை முத்துக்கள்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்
    த.ம 7

    -உங்கள் வருகைக்கும் ரசித்ததற்கும் என்னை வாழ்த்தியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சார்...

    ReplyDelete
  44. சிலேடைகளை சிதறாமல் தந்திருக்கிறீர்கள் நண்பரே...

    இன்றுதான் தங்களின் தளம் வந்தேன்.
    மற்றைய பதிவுகளையும் நேரம் கிடைக்கையில் படிக்கிறேன்.

    ReplyDelete
  45. மகேந்திரன் said...
    சிலேடைகளை சிதறாமல் தந்திருக்கிறீர்கள் நண்பரே... இன்றுதான் தங்களின் தளம் வந்தேன்.
    மற்றைய பதிவுகளையும் நேரம் கிடைக்கையில் படிக்கிறேன்.

    -புதியதாய் ஒரு நண்பர் கை குலுக்கியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. நல்வரவு மகேந்திரன் சார்! மற்ற சில பதிவுகளையும் படித்தால் என்னைப் பற்றிய ஒரு வடிவம் கிடைக்கும தங்களுக்கு. என் இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  46. நல்ல பகிர்வு. வாழ்த்துகள் சார்!

    ReplyDelete
  47. விரும்பிப் படித்தேன் சார்!
    உங்கள் தளத்திற்கு இன்று தான் முதன்முறையாக வருகிறேன். தங்களின் பல பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். என் தளத்தில் மனித மனங்களை, எனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். கடைசியாக இட்ட பதிவு :


    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete
  48. சிலேடைச் சிதறல்கள் எல்லாமே அருமை.

    ReplyDelete
  49. உங்க பின்னூட்டம் பார்த்துத்தான் (ஷைலஜா) கடுகு ஸார் இந்தியா வந்த செய்தி தெரிஞ்சது.. நன்றி. உடனே பேசிட்டேன்.

    ReplyDelete
  50. -தோழன் மபா, தமிழன் வீதி said...
    நல்ல பகிர்வு. வாழ்த்துகள் சார்!

    -தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தோழரே!

    ReplyDelete
  51. திண்டுக்கல் தனபாலன் said...
    விரும்பிப் படித்தேன் சார்! உங்கள் தளத்திற்கு இன்று தான் முதன்முறையாக வருகிறேன். தங்களின் பல பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

    -நண்பரே... முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! அவசியம் நீங்கள் குறிப்பிட்டவற்றைப் படிககிறேன்.

    ReplyDelete
  52. ரிஷபன் said...
    சிலேடைச் சிதறல்கள் எல்லாமே அருமை.

    -நீங்க ரசிச்சதுல எனக்கு சந்தோஷம். மனமார்ந்த நன்றி சார். (கடுகு சார் உங்களுக்கும் வேண்டியவரா? ரொம்ப நெருங்கிட்டோம்.)

    ReplyDelete
  53. சிலேடைகள் அனைத்தும் அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
  54. @ ரசிகன் said...

    -நீங்கள் ரசிகன் அல்லவா? உங்களின் ரசனைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றியும்!

    ReplyDelete
  55. கலக்கல் பதிவு. ரொம்பவும் ரசித்தேன்.
    வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :)

    கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.html

    ReplyDelete
  56. @ Shakthiprabha said...

    வலைச்சரத்தில் இணைத்து என்னைப் பெருமைப்படுத்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  57. சிலேடை சூப்பர்ங்கோ:)

    ReplyDelete
  58. @ mazhai.net said...

    -உங்களின் ரசனைக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  59. கணேஷ் சார் ,
    இது தங்களின் masterpiece என்று நினைக்கிறேன்.
    அனைத்தும் கல கல கலக்கல்.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மேலும் தொடரவும்.
    திரைப்படங்களில் சிலேடையின் நிலையினை
    நினைத்துப் பார்த்தால் ....

    ReplyDelete
  60. @ ஸ்ரவாணி said...

    சினிமாவுல வர்றது சிலேடைங்களா? அது டபுள் மீனிங் இல்லையோ? அதை விடுங்க... உங்களின் பாராட்டு மிகமிக மனமகிழ்வு தந்தது. மிக்க நன்றி!

    ReplyDelete
  61. தோள்ல தட்டிக் கொடுக்கிறேன். அருமையான தொகுப்பு!

    ReplyDelete
  62. அருமையான பதிவு https://pandiarajan1988143.blogspot.com/2020/07/aadi-amavasai.html

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube