Thursday, December 15, 2011

டூரிங் டாக்கிஸ்

Posted by பால கணேஷ் Thursday, December 15, 2011
நான் இந்த பூமிக்கு விஜயம் செய்து (ஆமா, பெரிய வி.ஐ.பி. விஜயம் செய்யறாராம்.... -மைண்ட் வாய்ஸ்) எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்பதை எண்ணிப் பார்த்தால் என்னை முதி‌யவனென்று சொல்ல முடியாது (உங்களைக் கொன்டேபுடுவேன்). அதேநேரத்தில் என்னை இளைஞன் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது (நீங்க என்னைக் கொன்டேபுடுவீங்க). இப்படி நடுத்தர வயதினனாக இருப்பதினால் நிறைய அனுகூலங்கள் எனக்குக் கிடைத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

எனக்கு முந்தைய தலைமுறையான என் அப்பாவிற்கு கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியம். மாட்ச் நடைபெறும் நாட்களில் பாக்கெட் டிரான்சிஸ்டரை காதருகில் வைத்துக் கொண்டு கமெண்டரி கேட்டுக் கொண்டிருப்பார். ‘ஆஸ்திரேலியாவில் அவர்கள் விளையாடுவதை நாம் நம் வீட்டு ஹாலிலிருந்து பார்‌க்கலாம் அப்பா’ என்று அன்று நான் சொல்லியிருந்தால் எள்ளி நகையாடியிருப்பார்.

இன்று அது சாத்தியமாகியிருக்கிறது. அதேபோலத்தான் இன்று நாம் பேசும் செல்போனும். இன்றைய தலைமுறையினருடன் சேர்ந்து கம்ப்யூட்டர், செல்போன், டிவிடி ப்ளேயர் இன்னபிற நவீன வசதிகளை அனுபவிக்கிறேன். அதேசமயம் இன்றைய இளைய தலைமுறைக்குக் கிட்டாத சில அனுபவங்கள் சென்ற தலைமுறையுடன் சின்னப் பையனாக இருந்ததால் கிட்டியிருக்கிறது. வாங்க, ப்ளாஷ்பேக்கலாம்...

======================================================

முதலில் நினைவுக்கு வருவது சிறு வயதில் சினிமா பார்த்த அனுபவங்கள். இன்றைக்கு மல்ட்டி ப்ளெக்ஸ்களிலும், நவீன தியேட்டர்களிலும் ஏ.சி.யில் படம் பார்‌க்க முடிகிறது. காலண்டரில் பார்க்கும் மகாவிஷ்ணு போல, மகாபலிபுரம் ஸ்தலசயனப் பெருமாள் போல படுத்த வாக்கில் படம் பார்த்திருக்கிறீர்களா? ; நான் பார்த்திருக்கிறேன்.

அந்நாளில் டூரிங் டாக்கீஸ் என்கிற ஒன்று இருந்தது. வெட்டவெளியில் கூரை போட்டு, கம்புகள் நட்டு எல்லை அமைத்திருப்பார்கள். சைடில் தடுப்பு எதுவும் கிடையாது. எனவே மாலை ஷோவும், இரவு ஷோவும் மட்டுமே நடைபெறும்.

இரண்டே வகுப்புகள்தான். முதல் வகுப்புக்கு மடக்கு சேர் போடுவார்கள். மற்றவர்கள் மண் தரையில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும். சிலர் மண்ணைக் குவித்து மேடாக்கி, ராவண சபையில் வாலில் அமர்ந்த அனுமன் போல உயரமாக அமர்வார்கள். சிலர் கிராமத்துப் பாட்டிகள் மாதிரி காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். நான்காம் வகுப்பு படிக்கும் வயதில் நான் முன்பே சொன்னதுபோல மகாவிஷ்ணு போஸில் படுத்தபடி மக்கள் திலகத்தின் ‘நாடோடி மன்னனை’ பார்த்தேன். ஒரே ஒரு புரொஜக்டரில்தான் படம் ஓட்ட வேண்டும் என்கிற காரணத்தால் இரண்டு முறை ரீல் மாற்றுவார்கள். ஆகவே இடைவேளைக்கு முன் பத்து நிமிடங்கள், இடைவேளைக்குப் பின் பத்து நிமிடங்கள் ஆக, மூன்று இடைவேளைகள் எல்லாப் படத்துக்கும் உண்டு. இஷ்டம்போல் ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி இயற்கைக் காற்றில் படம் பார்‌த்த அந்த சுகம், இப்போது ஏ.சி. ‌தியேட்டர்களில் எனக்குக் கிடைப்பதில்லை.

======================================================

றாம் வகுப்பு படிக்கும் போது விழுப்புரத்திற்கு அருகில் உள்ள விக்கிரவாண்டி என்ற ஊரில் எங்கள் குடும்பம் இருந்தது. அங்கே காசியானந்தா என்ற தியேட்டர் (இப்போது இருக்கிறதோ என்னவோ) உண்டு. அங்கே ஞாயிற்றுக்கிழமை மாட்னி ஷோவுக்குத் தவறாமல் சென்று விடுவேன். ஏனென்றால் ‌ஒரே டிக்கெட்டில் (டிக்கெட் விலை அதே ஆறு ரூபாய்தான்) இரண்டு படம் காட்டுவார்கள். ஒன்றரை மணிக்கு ஆரம்பித்து இடைவேளையேயின்றி ஒரு படம். முடிந்ததும் பத்து நிமிடம் இடைவேளை விட்டு அடுத்த படம்.

அதிலும் வெரைட்டி இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வார்கள். சிவாஜி படத்துடன் ஜெய்சங்கர் படம், எம்.ஜி.ஆர். படத்துடன் கமல் படம் என்கிற மாதிரி ‌இருவித ரசனைகளில் படங்கள் அமைந்திருக்கும். இப்படி இரண்டு படம் பார்த்துவிட்டு மாலை ஆறரை மணிக்கு வெளியே வரும்போது மிகத் திருப்தியாக இருக்கும். இப்படி இரண்டிரண்டாக நான் பார்த்த திரைப்படங்களுக்குக் கணக்கே இல்லை.


======================================================

ள்ளியில் நண்பர்கள் எல்லோருமாக தமிழ் சினிமாப் பாட்டுக்களில் எங்களுக்குப் பிடித்த பாட்டுக்களை..ஆங்கிலத்தில்(!) மொழிபெயர்த்துப் பாடுவோம். இப்படிப் பாடி மொழியறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்று ஒருவன் போதித்ததன் விளைவாகச் செய்தது. அது. அப்போது நாங்கள் பாடிய ஒரு ஆங்கிலப் பாடலை, அப்போதைய வார்த்தைகளிலேயே என் நினைவிலிருந்து கொடுத்திருக்கிறேன். என்ன பாடல் என்பது தெரிகிறதா பாருங்கள்...

If i order, that will happen,
here poor will never feel sorrow then.
Upto their lifetime, there is no trouble
they will never fall in tear's sea.

======================================================

சினிமா அனுபவங்களைச் சொல்லும்போது தியேட்டரில் நான் பல்பு வாங்கிய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. (மத்தவங்க பல்பு வாங்கினதைப் படிக்கிறதுன்னாலே தனி குஷிதானே... படியுங்க).

நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். அப்போது நாங்கள் காரைக்குடியில் இருந்தோம். சிறு வயதிலேயே அப்பாவை இழந்து அண்ணனின் ஆதரவில் படித்தவன் நான். அவருக்கு அடிக்கடி பணி மாறுதல் ஆகிற வேலை என்பதால் ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊருக்கு குடும்பத்துடன் இடம் பெயர வேண்டிய சூழல் இருந்தது. அதனால் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். சில நண்பர்கள் காலப்போக்கில் தொடர்பு விட்டும் போனார்கள்.


என்ன சொல்ல வந்தேன்? சினிமாவுக்குப் போனது! என் அண்ணன், நான், அம்மா, சித்தி நால்வருமாக காரைக்குடி அருணாசலா தியேட்டரில் (இப்போது வேறு ஏதோ பெயர் என்று சொன்னார்கள்) வசந்தமாளிகை படம் பார்க்கப் போயிருருந்தோம். சிவாஜி சாரின் நடிப்பை நான் மிகவும் ரசித்த படங்களுள் அதுவும் ஒன்று. இடைவேளை விட்டார்கள்.

அண்ணன் என்னிடம், ‘‘டேய், கான்டீன்ல போய் நாலு கோல்ட் ஸ்பாட் வாங்கிட்டு வர்றியா?’’ என்று கேட்டார். குஷி்யாக தலையசைத்தேன். ‘‘உடைக்காம வாங்கிட்டு வருவியா, இல்ல, நானும் வரணுமாடா?’’ என்று கேட்டார். சற்றுத் தயங்கிவிட்டு, ‘‘நீயும் வாண்ணா... கேன்டீன்ல உடைக்காம தரமாட்டான்...’’ என்றேன்.

அம்மாவும், சித்தியும் ஏன் அப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அண்ணா தலையில் அடித்துக் கொள்ள, சிரிப்பை சற்று அடக்கிக் கொண்டு சித்தி சொன்னது: ‘‘டேய், அவன் (கீழ போட்டு) உடைக்‌காம கொண்டு வருவியான்னு கேக்கறான். நீ (ஓப்பனர் வைத்து) உடைக்காம தரமாட்டாங்கங்கன்னு சொல்ற... லூசு’’ என்று என் தலையில் தட்டினார். அடக்கடவுளே... ஒரு அப்பாவிப் பையனக் கூட்டிட்டுப் போயி என்னமா கலாய்க்கிறாங்கப்பா...

59 comments:

  1. ‘நீயும் வாண்ணா... கேன்டீன்ல உடைக்காம தரமாட்டான்...’’ என்றேன்.
    ஹா.. ஹா.. நல்ல பல்ப் தான்.
    நீங்க சொல்றது சரியே. ஏசி தியேட்டரில் பார்க்கும் அனுபவத்தை விட டூரிங் தியேட்டர் அனுபவங்கள் படுசுவாரசியம்.

    ReplyDelete
  2. அப்புறம்..
    உடைச்சி வாங்கிட்டு வந்திங்களா.. உடைக்காம வாங்கிட்டு வந்திங்களா..

    ReplyDelete
  3. டூரிங் டாக்கிஸ் என்றாலே..

    விநாயகனே வினை தீர்ப்பவனே பாடல் மறக்க முடியாது...

    டூரிங் டாக்கிஸ்... அது தனி சுகம்.. கேபிள் டிவியால் ஒரு நல்ல அனுபவத்தை நாம் இழந்துவிட்டோம்...

    ReplyDelete
  4. @ ரிஷபன் said...

    -கரெக்ட்தான் சார். இப்ப நினைக்கறப்பவும் அந்த அனுபவம் தித்திக்குது. முதல் விருந்தினராக உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  5. அட உங்கள் அனுபவங்களை சுவாரஸ்யமாக தந்திருக்கிறீங்க

    நேற்று இந்த விடயம் பற்றி பேஸ்புக்கில் கதைத்தோம் அதாவது பழயகாலத்தில் இழந்த இப்போது ஞாபகத்தில் நிற்கும் சிலதை பற்றி பேசினோன் அதில் பல சொன்னது,வாக்மேன்,ஹீரோ இங் பென்,கடிதங்கள்,இப்படி பல விடயங்கள் வந்தது..
    எதிர்காலத்தில் இன்னும் பல விடயங்களை நாம் இழந்து விடுவோம்

    ReplyDelete
  6. @ கவிதை வீதி... // சௌந்தர் // said...

    -உடைச்சுத்தான் வாங்கிட்டு வந்தோம் செளந்தர் ஸார்... டூரிங் டாக்கீஸில் ஷோ ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரம் முன்னாலிருந்து நீங்கள் சொன்ன விநாயகர் பாடலில் துவங்கி சினிமாப் பாட்டுக்கள் போடுவார்கள். இந்த விஷயத்தை கட்டுரைல சொல்ல மறந்துட்டேன். ஞாபகப்படுத்தினதுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  7. @ K.s.s.Rajh said...

    -அப்படியா? நான் பேஸ்புக்ல இயங்கறதை இன்னும் கத்துக்கலை. கூடிய சீக்கிரம கத்துக்கிட்டு உங்க கூட டிஸ்கஷனுக்கு வந்திடறேன் ராஜ்! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இதய நன்றி!

    ReplyDelete
  8. எங்கள் ஊரிலும் ஒரு டூரிங்டாக்கிஸ் இருந்தது..இப்போது அது காணாமல் போய்விட்டது.

    எனக்கு நினைவிருக்கிறது. வால்டர் வெற்றிவேல் படம் அங்குதான் கடைசியாகப் பார்த்தேன்.

    மணலில் மேடு செய்து அதில் உட்கார்ந்து பார்க்கும் சுகமே தனி..

    ReplyDelete
  9. @ வேடந்தாங்கல் - கருன் *! said...

    -கரெக்ட். அந்த சுகத்தை இனி திரும்பப் பெற முடியாது. உங்களைப் போல பலருக்கும் அந்த அனுபவம் கிடைத்திருப்பதில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி வருகிறது கருன் சார்! நன்றி!

    ReplyDelete
  10. எங்களுக்கெல்லாம் அந்த கொட்டகை வாய்க்கவில்லை.நீங்கள் சொல்லும்போதே அதில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கிறது..கடந்த காலத்தை நீங்கள் திரும்பி பார்த்ததோடு மட்டுமல்லாது எங்களையும் பார்க்க வைத்துவிட்டீர்கள்..அனுபவத்தை சுவையாக பகிர்ந்துள்ளீர்கள்..நன்றி..

    ReplyDelete
  11. @ மதுமதி said...

    -உங்களுக்கு அந்த அனுபவம் வாய்க்கவில்லையா? இனி கிடைக்கவும் வழியில்லையே கவிஞரே... என் செய்வது? என் அனுபவம் மூலம் நீங்களும் மகிழ்ந்தீர்கள் என்பதில் நான் மகிழ்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  12. new sky.,,,,,,sky,,sky,,,,,
    new earth,,,,,earth,,,,,,earth,.

    haa haa
    நானும் கொஞ்சம் முயற்சி பண்ணேன்!
    @K.s.s.Rajh சொன்னது போல நேத்து தான் இதைப்பத்தி கதைத்துக் கொண்டிருந்தோம்,
    அனுபவங்களைப்பகிர்வதில் புதிய உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.தொடருங்க ...

    ReplyDelete
  13. @ கோகுல் said...

    -ஒண்ணு கவனிச்சிங்களா கோகுல்? நீங்க முயற்சி பண்ணினதும் மக்கள் திலகத்தோட பாடல்தான். ஹீரோ கேரக்டருக்கு மக்கள் சுலபமா கூப்பிடற பேரைத்தான் வெப்பார் அவர் (ராமு, வேலன் இந்த மாதிரி) அதுபோல பாடறதுக்கும் சுலபமானது அவர் பாட்டுக்கள்தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! (அப்ப... இன்னும் கொஞ்சம் ப்ளாஷ்பேக்கலாம்கறீங்க...)

    ReplyDelete
  14. //இப்படி நடுத்தர வயதினனாக இருப்பதினால் நிறைய அனுகூலங்கள் எனக்குக் கிடைத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்//

    இது உலகமகா பொய்

    ReplyDelete
  15. என் வலையில் மாணவர்களுக்காக கைகோர்க்க வாருங்கள்

    ReplyDelete
  16. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    -உலக மகா பொய்யா... அப்ப நான் இளைஞன்தான்னு சொல்றீங்க... ரொம்பநன்றிங்க ராஜா! (உங்க தளத்துக்கு ஏற்கனவே வந்து கருத்துச் சொல்லிட்டேன்)

    ReplyDelete
  17. எனக்கும் எங்க ஊர் டூரிங் டாக்கீஸ் நினைவுகள் வருது

    ReplyDelete
  18. கணேஷ் நானும் எங்க ஊரு கல்லிடைக்குறிச்சியில் டூரிங்க் தியேட்டரில் படம் பாத்திருக்கேன். இடுப்பில் எவ்வளவு பெரிய குழந்தையை தூகிண்டு போனாலும் அவர்களுக்கு டிக்கட் எடுக்க வேண்டாம். சோடா கலர், முறுக்கு கடலை மிட்டாய் விற்பவர்கள் இடை இடையே நடந்து படம் பார்க்கவே விடமாட்டார்கள் இடையில் தூண்மறைக்காத இடமாக பார்த்து உக்கார போட்டியே நடக்கும். ஆனா சவுண்ட் மட்டும் காதைத்துளைக்கும்படி இருக்கும் எங்க ஊருல 4- இடைவேளை விடுவாங்க. பழைய நினைவெல்லாம் நினைக்க வச்சுட்டீங்க.

    ReplyDelete
  19. If i order, that will happen,
    here poor will never feel sorrow then.
    Upto their lifetime, there is no trouble
    they will never fall in tear's sea.


    நான் ஆணையிட்டால்..... அது நடந்துவிட்டால்...

    ReplyDelete
  20. (மத்தவங்க பல்பு வாங்கினதைப் படிக்கிறதுன்னாலே தனி குஷிதானே... படியுங்க).//

    ஆமா குஷி தான்... பல்பு உடஞ்சதா? சாரி "பாட்டில் உடஞ்சதா?

    ReplyDelete
  21. @ மோகன் குமார் said...

    -உங்கள் ப்ளாஷ்பேக்குக்கும் போய் வந்தீர்களா? மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  22. @ Lakshmi said...

    -நாலு இடைவேளையா... அப்ப எனக்கும் முந்தின பீரியட்ல பாத்திருக்கீங்க. திறந்த வெளிங்கறதாலயும், தூரத்துல இருக்கற ஜனங்களுக்கும் கேட்டு வரணுங்கறதுக்காகவும் நீங்க சொன்ன மாதிரி காதைத் துளைக்கற சவுண்ட்தான் அப்ப. ஆனா அதுவும் ரசனையாத்தான் இருந்தது. உங்கள் வருகையாலயும், கருத்துனாலயும் எனக்கு ரொம்ப சந்தோஷம். நன்றிம்மா...

    ReplyDelete
  23. @ இராஜராஜேஸ்வரி said...

    -ஹா/// ஹா/// கரெக்டாக் கண்டுபிடிச்சுட்டீங்க! இந்த மாதிரி மொழி்மாத்தி(கொலை பண்ணி)ப் பாடறதுல அப்ப பெரிய போட்டியே நடக்கும். உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  24. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

    -இல்லீங்க... அதிர்ஷ்டவசமா உடைக்காம பத்திரமா கொண்டு கொடுத்துட்டேன் கூல்ட்ரிங் பாட்டிலை. பல்பு வாங்கினது மட்டும்தான் மறக்காதது. வந்ததுக்கும கருத்துச் சொன்னதுக்கும் என் இதயநன்றி பிரகாஷ் சார்!

    ReplyDelete
  25. குழந்தைக் கால நினைவுகளுக்கு கூட்டிக்கிட்டு போயிட்டீங்க அண்ணா. நானும் கோடைவிடுமௌறையில் பாட்டி வீட்டுக்கு போகும்போது என் பாட்டியுடன் டூரிங்க் தியேட்டருக்கு போய் வந்திருக்கிறேன். உங்களால் என் பாட்டியை நினைவு படுத்த முடிந்தது. நன்றி அண்ணா

    ReplyDelete
  26. :):) ஆரம்பவரிலயே குறும்பு!! முழுக்க ரசிச்சேன் கணேஷ் சின வயசுல ரொம்ப இன்னசண்ட்?:)

    ReplyDelete
  27. Unga anupavam athanaiyum Naanu petru irukkiren. Malarum Ninaivugal. Tamilmanam vote try pannen. Poda mudiyala.

    ReplyDelete
  28. அப்பவே கொலைவெறியா பாட்டு உருமாத்தியிருக்கீங்க.அப்புறமென்ன.பல்பு...சிரிச்சு இன்னும் முடியல !

    ReplyDelete
  29. அன்றைய நினைவுகளை மனதில் அள்ளிக்கொள்ள வைத்துவிட்டீர்கள்.

    அது ஒரு கனாக்காலம் என்பதுபோல ஆயிற்று. தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும்

    பார்ப்பதே ஒரு பெரிய விஷயமா இருந்த காலமெல்லாம் நிழலாய் ஓடுது மனதுக்குள்...



    வாத்தியார் சொல்லுவார்.. பத்தாம் வகுப்பில்

    "எலேய்.. இன்னைக்கு சிறப்பு வகுப்பு சீக்கிரம் முடிந்து ஒலியும் ஒளியும் பார்க்கப் போகணும்னா

    சீக்கிரம் படிங்க லே"

    காதுக்குள் ரீங்காரமிடுகிறது நண்பரே.

    ReplyDelete
  30. அன்புநிறை நண்பர் கணேஷ்,

    உங்க டூரிங் டாக்கீஸ் அனுபவம் இன்றைய தலைமுறைக்கு கிடைக்காது

    எனபது நிதர்சமான உண்மை. அவர்கள் அவற்றை அனுபவிக்கவும் தயாராக இல்லை...

    ReplyDelete
  31. பல்பு வாங்குவது என்றால் என்ன? (தெரிந்தால் உபயோகமாக இருக்கும்.. இந்தத் தொடரைப் பதிவுகளில் அடிக்கடி சந்திக்கிறேன் :)

    டூரிங் டாக்கீஸ் காலத்தவரா நீங்க.. எனக்கொண்ணுமே தெரியாதுங்க. டிவிடி தெரியும் யுட்யூப் தெரியும் அவ்ளோ தான்.

    ஹிஹி.. 'டேய்.. படம் போடுறியா, இல்லே பத்த வைக்கட்டுமா?' என்று லுங்கியை லேசாகத் தூக்கிக் கட்டி, கைச் சிகரெட்டை வெள்ளைத்திரையின் ஓரத்தில் வைக்கக் காத்திருந்த கூட்டம்... விநாயகனே.. பாட்டு முடியும் இடத்தில் 'தீர்ப்பவனே' என்று சீர்காழி இ.ழ்.ழுத்துப் பாடுவார்.. அதுவரைக் காத்திருந்து, தீஈஈர்ப்பவனே என்று உரக்கச் சிலிர்த்து நொங்கைத் தின்று முடித்தப் பனங்காயை தகரக் கதவில் எறிவோம்.. எட்டுப் பத்தாகக் கதவில் தெறித்து விழும்.. ஒரு சின்ன கையளவு ஜன்னலை பயத்துடன் விலக்கி, "போடுறேன்..போடுறேன்" என்றபடி கர்ர்ர்ர்ர்ர்னெறு புரொஜெக்டரை ஓட்டுவார். அந்த நாள் ஞாபகம்...ம்ம்ம்ம்.

    ReplyDelete
  32. இனிமையான மலரும் நினைவுகள்தான்....பாட்டு என்ன பாட்டுன்னு யாரும் சொல்லவில்லையே, நாமதான் சொல்லணும் போல என்று ஆசையாக நினைத்துக் கொண்டிருந்தால் ராஜராஜேஸ்வரி மேடம் சொல்லி என் வாய்ப்பைத் தட்டிப் பறிச்சிடாங்க....! எங்கள் ப்ளாக்லயும் இது போல ஒரு பதிவு முன்பு வந்தது. ("டெண்ட்டுக் கொட்டாயும் காந்திப் படமும்")

    ReplyDelete
  33. நினைக்கவே இனிக்குதே... அந்த நாட்கள்! டூரிங் தியேட்டரில் மண்மேட்டில் உட்கார்ந்து பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு. இன்னும் வேடிக்கை என்னவென்றால் நம் வீட்டு நாயும் எப்படியோ உள்ள வந்து நம் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நமக்குத் திட்டு வாங்கிக் கொடுக்கும்.

    நல்ல சுவையான அனுபவங்கள். அதைவிடவும் சுவையாக உள்ளது நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் அழகு. பாராட்டுகள்.

    ReplyDelete
  34. @ ராஜி said...

    -அட, சின்னப் பொண்ணாச்சே, உனக்கு இந்த அனுபவம் கிடைச்சிருக்காதேன்னு நினைச்சேன். பாட்டி ஞாபகம் வந்திச்சா? சந்தோஷம்! ந்ன்றிம்மா!

    ReplyDelete
  35. @ ஷைலஜா said...

    -என்ன இப்பூடிச் சொல்லிட்டிங்கக்கா... நான் இப்பக்கூட இன்னசென்ட் தானே! நீங்க ரசிச்சதுல எனக்கு சந்தோஷம்! நன்றி!

    ReplyDelete
  36. @ துரைடேனியல் said...

    -நீங்களும் மலரும் நினைவுகளை அனுபவிச்சதுல மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை சார்! (உங்கள் கருத்தைவிடவா மதிப்பு வாய்ந்தது ஓட்டு? விடுங்க...)

    ReplyDelete
  37. @ ஹேமா said...

    -சின்ன வயசுல ஆரம்பிச்சதுதானே இப்பவும் தொடருது. நல்லா ரசிக்கறீங்க ஹேமா... உங்கள் கருத்து்க்கள் எனக்கு ரொம்ப உற்சாகம் தருது. நன்றிம்மா!

    ReplyDelete
  38. @ மகேந்திரன் said...

    -நீங்கள் சொன்ன விஷயத்துடன் இன்னும் சிலவற்றை சேர்த்து ‘தொலைக்காட்சி’ என்று ஒரு தனிப்பதிவே போடலாம் நண்பரே... இனி டூரிங் டாக்கீஸ் அனுபவம் கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க அதை மதிப்பு மிக்கதாக எண்ணவும் இன்று யாரும் தயாரி்‌ல்லை என்பதுதான் உண்மை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  39. @ அப்பாதுரை said...

    -வேறொண்ணுமில்லீங்க... ‘அசடு வழியறது’ன்னு முன்ன சொன்ன விஷயம்தான் இப்ப ‘பல்பு வாங்கறது’ன்னு பேர் மாறிடுச்சு. உங்களோட மலரும் நினைவுகளையும் படிகக சுவாரஸ்யமா இருக்கு. வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  40. @ ஸ்ரீராம். said...

    -‘எங்கள் ப்ளாக்’குல லேட்டாச் சேர்ந்தவன்கறதால நான் அந்தப் பதிவைப் பாககலை. உடனே தேடிப் படிச்சுடறேன் ஸ்ரீராம் சார்! அழகாய் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்திய உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  41. @ கீதா said...

    -இந்த இனிய அனுபவங்களை நீங்களும் பெற்றிருப்பதில் மகிழ்கிறேன் கீதா. நான் ப்‌ரஸெண்ட் செய்யும் ஸ்டைல் நன்றாக இருக்கிறதென்று நீங்கள் பாராட்டியது ஒரு அண்டா ஹார்லிக்ஸ் குடித்தது போல் தெம்பாக உணர்கிறேன். மிகமிக நன்றி!

    ReplyDelete
  42. எங்க ஊர் டூரிங்டாகீஸ்ல நான் முதல்முதலா பார்த்தபடம் பட்டாகத்திபைரவன்,ஆட்டுக்கார அலமேலு படங்களை மறக்கமுடியாது...அருமையான நினைவுகள்

    ReplyDelete
  43. @ veedu said...

    -நினைவுகளுக்குள் நீங்களும் சென்று வந்தீர்களா? மிக மகிழ்ச்சி எனக்கு. உங்கள் வருகை + கருத்து இரண்டுக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  44. பராசக்தி மற்றும் அவ்வையார் படங்களை விருத்தாசலத்தில்,‘டூரிங் டாக்கீஸ்’ஸில் நீங்கள் எழுதியிருந்தபடி மண்ணைக்கூட்டி மேடாக்கி அமர்ந்து பார்த்து இரசித்ததும்,படத்தின் இடைவேளை இடையே ‘சோடா டீ காப்பி பாலு, காராசேவு கள்ளபருப்பு முறுக்கு’ என்றும்,‘சினிமா பாட்டு புஸ்தகம் ஒரு அணா’ எனக் கூவி சிறுவர்கள் விற்றதும்,தங்கள் பதிவைப் படித்ததும், நினைவுக்கு வருகிறது மறந்து போன, திரும்பவும் வரமுடியாத நிகழ்வுகளை மனக்கண் முன் கொண்டு வந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  45. @ வே.நடனசபாபதி said...

    -அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே... நண்பரே... நண்பரே... இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி!

    ReplyDelete
  46. ‘உடைக்காம வாங்கிட்டு வருவியா, இல்ல, நானும் வரணுமாடா?’’ என்று கேட்டார்.///

    ”உடைத்துட்டு எப்படீண்ணே வாங்கிட்டு வர முடியும்.அங்கேயே போட்டுட்டுல்ல வர முடியும்?”இப்படி கேட்டு அண்ணனை பல்பு வாங்க வைக்கறதை விட்டுட்டு இப்படி பல்பு வாங்கிட்டீங்களேண்ணே..:(


    நாண்காம் வகுப்பு படிக்கும் பொழுது நாடோடி மன்னன்,பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது வசந்த மாளிகை இப்படி சொல்லி உங்கள் வயதை கணக்கா சொல்லிட்டீங்களேண்ணே.


    சினிமா தியேட்டர் அனுபவங்கள் அருமையோ அருமை.எனக்கும் டூரிங் டாக்கீஸ் இருக்கும் பொழுது கொசுக்கடி மூட்டைப்பூச்சுக்கடியுடன் முறுக்கை கடித்துக்கொண்டே படம் பார்க்க பிடித்தது போல் இப்பொழுது ஏஸியின் சில்லிப்புடன் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஹாயாக பாப்கார்ன் அல்லது சாண்ட்விச் கொரித்துக்கொண்டு படம் பார்ப்பது பிடிக்கவே இல்லை.அதான் படமும் பார்ப்பதில்லை.

    ReplyDelete
  47. @ ஸாதிகா said...

    -அட, இப்படிச் சொல்லி பல்பு வாங்காம தப்பிச்சிருக்க‌லாமோ... எனக்கு அப்பத் தோணலியேம்மா...
    -வயசை மறைக்கறதுக்கு நான் என்ன சினிமா நடிகனா தங்கச்சி? எல்லாருக்கும் தெரிஞ்சா தப்பில்லைம்மா.
    -டூரிங் டாக்கீஸில் படம் பாக்கறது எனக்கும் பிடிக்கும்னு சொல்லி உன்னோட வயசையும் எல்லாருக்கும் தெரியப்படுத்திட்டியேம்மா... ஹி... ஹி...

    ReplyDelete
  48. டூரிங் டாக்கீஸில் படம் பாக்கறது எனக்கும் பிடிக்கும்னு சொல்லி உன்னோட வயசையும் எல்லாருக்கும் தெரியப்படுத்திட்டியேம்மா... ஹி... ஹி...////

    அண்ணே..அண்ணே..இப்பவும் கிராமத்திலே டூரிங் டாக்கீஸ் இருக்குண்ணே.

    ReplyDelete
  49. @ ஸாதிகா said...

    -அட! நிஜமாவாம்மா ஸாதிகா? டூரிங் டாக்கீஸ்ங்கற விஷயம் முடிஞ்சு போச்சுன்னுல்ல நினைச்சுட்டிருந்தேன். புதுத் தகவல் இது எனக்கு! நன்றி!

    ReplyDelete
  50. அந்த காலம் நினைவிற்கு வந்தது. அப்போது இருந்த சந்தோசம் இப்ப இல்லே சார்!
    பகிர்விற்கு நன்றி!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  51. எனக்கும் பழைய நினைவுகளை
    முன் விரித்துப் போனது
    அன்று டூரிங் டாக்கீஸில் மண் தரையில் அமர்ந்து
    பார்த்து விசிலடித்து ரசித்த படங்க்கள் எல்லாம்
    நினைவில் வந்து போனது
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 13

    ReplyDelete
  52. @ திண்டுக்கல் தனபாலன் said...

    -வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்!

    ReplyDelete
  53. @ Ramani said...

    -Nostalgia இல்லாதவர்கள் யாரும் இல்லைதானே ரமணி சார்! அழகாய்த் தொடர முயல்கிறேன். நீங்கள் ரசித்ததற்கும் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  54. மிகவும் அழகிய அனுபவப்பதிவு. எல்லோரையும் அவரவர்களின் டீன் ஏஜூக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்து விட்டீர்கள் ...........

    “அந்த நாள் ...... ஞாபகம் ...... நெஞ்சிலே .... வந்ததே! நண்பனே ..... நண்பனே!

    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே ...
    அது .... ஏன் .... ஏன் .... ஏன் ... நண்பனே!!

    எனப்பாட வைத்து விட்டீர்கள். பதிவுக்கு நன்றிகள்.
    அன்புடன் vgk

    [தமிழ்மணம்: 14]

    ReplyDelete
  55. வணக்கமண்ணா.. :p

    விக்கிரவாண்டியில் இப்போ அந்த தியேட்டர் பேரு காசி அம்மன். அதுவும் சமீபமா ஓடரதில்ல.

    நினைவுகள் சுகமானது.

    ReplyDelete
  56. @ வை.கோபாலகிருஷ்ணன் said...

    -தங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு மிக மகிழ்ந்தேன். நீ்ஙகள் ரசித்ததி்ல் மன நிறைவு பெற்றேன். மிக்க நன்றி ஸார்!

    ReplyDelete
  57. @ ரசிகன் said...

    -ரொம்ப வருஷமாயிட்டதால தியேட்டர் பேரை மாத்தி எழுதிட்டனா? அந்த ஊரையும் அந்த லைஃபையும் மறக்கவே முடியாது. தகவலுக்கும் ரசித்ததற்கும் மிகமிக நன்றிங்க!

    ReplyDelete
  58. அனுபவங்கள் சுவையாக உள்ளது. நகைச்சுவையும் கூட. ஒன்று இரண்டுடன் தொடரும் என்று போட்டுத் தொடரலாமே! ஓடி வந்து கருத்திடலாமென்றால் நீண்டு நேரத்தை எடுக்கிறதே! பொறுமையைச் சோதிக்கிறது. இது என் கருத்து மட்டுமே! வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  59. @ kovaikkavi said...

    -அப்படியா சொல்றீங்க... இனிமே போடற பதிவுகள் சின்ன சின்னதா அமையற மாதிரி பாத்துக்கிட்டா போச்சு. வருகைக்கும் கருத்துக்கும நன்றிங்க...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube