Tuesday, December 20, 2011

கேப்ஸ்யூல் நாவல்-3 : யவன ராணி

Posted by பால கணேஷ் Tuesday, December 20, 2011
சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் யவனராணி தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான  இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம் சொட்டும் வர்ணனைகளையும், அழகான உரையாடல்களையும், கதாநாயகன் இளஞ் செழியனின் வீரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை உணர்வதற்கு முழுநாவலையும் படித்து அனுபவிப்பதே சிறப்புடையது. இது அதன் ஜுஸ் மட்டுமே!

சோழர்களின் பிரதான கடற்கரை நகரமான பூம்புகாரில் சோழர் படை உபதலைவன் இளஞ்செழியன், தன் மேல் கோபத்துடன் இருக்கும் மாமன் மகள் பூவழகியின் நினைவுடன் கடற்கரையில் நடந்து சென்று கொணடிருக்கும் போது அவன் காலில் இடறுகிறாள் ஒரு யவனப் (கிரேக்க) பெண். அவளைத் தன் இல்லத்துக்கு எடுத்து வந்து முதலுதவி செய்ய முற்படுகிறான் இளஞ்செழியன்.  அவன் மெய்க்காப்பாளன் ஹிப்பலாஸ், அவள் அணிந்திருக்கும் அன்னப் பறவை ஆபரணத்தை வைத்து அவள் யவன அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும் அவள் வந்திருப்பது தெரிந்தால் புகாரின் யவனர்கள் ஒன்று திரண்டு புரட்சி செய்து புகாரைக் கைப்பற்றி அவளை அரசியாக்கி விடுவார்கள் என்றும் சொல்லி அஞ்சுகிறான். அதை மெய்ப்பிப்பது போல் கோட்டைக் காவல் தலைவன் (யவனன்) விசாரணைக்கு வர, யவன ராணியை மறைத்து கோட்டைத் தலைவனை மிரட்டி அனுப்புகிறான் இளஞ்செழியன்.

வீரர்களுடன் வருவதாகக் கூறிய கோட்டைத் தலைவன், சோழ மன்னன் இளஞ்சேட்சென்னி அவர் மாளிகையிலேயே இருங்கோவேள் என்பவனால் எரித்துக் கொல்லப்பட்டதாகவும், இளவரசன் திருமாவளவனைக் காணவில்லை என்றும் அதிர்ச்சிக் குண்டுகளை இளஞ்செழியன் மீது வீசிச் செல்கிறான். மயக்கத்திலிருந்து விழித்த அந்த யவனப் பெண்ணோ, தான் டைபீரியஸ் என்ற புகழ்பெற்ற கடற்படைத் தலைவனுடன் வந்ததாகவும் கடற் கொள்ளையருடன் ஏற்பட்ட போரினால் கப்பல் மூழ்கி தான் மரக்கட்டையைப் பிடித்து தப்பியதையும் கூறுகிறாள்.

இதற்கிடையில் கோட்டைத் தலைவன் பல வீரர்களுடன் இளஞ்செழியன் மாளிகையைச் சூழ்ந்து கொள்ள, போரிட்டுத் தப்பும் இளஞ்செழியன், யவன ராணியை பிரும்மானந்தர் என்னும் துறவியின் மடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கே இருக்கும் பூவழகி அவன் ஒரு யவனப் பெண்ணுடன் வருவதைக் கண்டதும் மேலும் சினமடைகிறாள். அப்போது டைபீரியஸ் அங்கு வர, தன் ஆசிரமம் வீரர்களால் சூழப்பட்டிருப்பதை அறிந்த அடிகள், இளஞ்செழியன் விருப்பத்துக்கு மாறாக யவனராணியை அவனுடன் அனுப்புகிறார். சுரங்கப்பாதை வழியாக அனைவரும் தப்பிச் சென்று கடற்கரையை அடைகையில் டைபீரியஸால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது அவர்களுடன் வந்த இளஞ்செழியன் தப்பிச் சென்றுவிட்டதை அறிகிறான் டைபீரியஸ்.

தப்பிய இளஞ்செழியன் இரவில் கோட்டைச் சுவரேறி யவன ராணியைத் தன் வாணகரை என்னும் கடற்கரை தீவுக் கோட்டைக்கு கடத்திச் செல்கிறான். அவளை மீட்க வரும் டைபீரியஸிடம் பிரும்மானந்தர் உள்ளிட்டவர்களை விடுவிக்கும்படி யவனராணி சொல்ல, டைபீரியஸ் அவள் ஆணைப்படி அவர்களை விடுதலை செய்து அனுப்பி வைக்கிறான். பிரும்மானந்தர், திருமாவளவனின் மாமாவான இரும்பிடர்த் தலையர் என்பவருக்கு ஒரு ஓலை எழுதி இளஞ்செழியனை யவனராணியுடன் சேர நாட்டில் தன் சிஷ்யனின் மடத்துக்கு செல்லச் சொல்கிறார். அங்கு செல்லும் இளஞ்செழியன் அந்த ஓலையை இருங்கோவேளிடமே ஒப்படைக்கும்படி நேர்கிறது.  இருங்கோவேளை தந்திரமாகப் பேசி சமாளிக்கிறான் இளஞ்செழியன்.

ன்றிரவு. வீரர்களால் சூழப்பட்ட மடத்தில் சமணத் துறவியுடன் தங்கும் இளஞ்செழியன், மர்ம மாளிகை என்று அவர் காட்டும் ஒரு மாளிகை அப்போது எரிவதைக் காண்கிறான். இருவரும் அங்கு சென்று எரிந்த மாளிகையிலிருந்து தப்பும் திருமாவளவனைக் காப்பாற்றுகின்றனர். ஒரு பாழடைந்த மாளிகையில் பதுங்குவதற்கு அவர்கள் வர, அங்கு பூவழகியம் அவள் தோழிகளும் இருக்கின்றனர். இருங்கோவேளி்ன் வீரர்களை சமாளித்து அனுப்பிவிட்டு திருமாவளவனின் காயங்களுக்கு சிகிச்சை செய்கிறாள் பூவழகி. தீயில் எரிந்ததால் அவன் கால் இனி கருநிறமாகவே இருக்கும் என அவள் சொல்ல, தன் பெயர் இனி கரிகாலன் எனவும், அவள் தன் சகோதரி எனவும் கூறி அங்கிருந்து செல்கிறான் திருமாவளவன்.

இளஞ்செழியன் மீண்டும் சமண மடத்திற்கு வர, அங்கு இருங்கோவேள் ராணியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயல்வதைக் கண்டு சினமடைய, அங்கு வரும் பிரும்மானந்தர் நைச்சியமாகப் பேசி இருங்கோவேளை சமாளித்து அனுப்புகிறார். இரவில் இருங்கோவேளின் வீரர்கள் யவனராணியைக் கடத்த முற்பட, இருளில் வாட்போர் செய்து அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான் இளஞ்செழியன். முன்னர் தன்னால் காப்பாற்றப்பட்ட அல்லி என்பவளின் வீட்டில் அவளைத் தங்க வைக்கலாம் என்று வர,அங்கே டைபீரியஸைக் காண்கிறான். டைபீரியஸும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, புகார் செல்லும் வழியில் ஏற்படும் ஆபத்திலிருந்து தன் புத்தி சாதுயர்யத்தால் அவர்களைக் காப்பாற்றுகிறான் இளஞ்செழியன்.

புகாருக்கு படகில் செல்கையில் யவன ராணியிடம் காதல் மயக்கத்தில் இருக்கும் இளஞ்செழியனை வஞ்சகமாக மயக்கத் துளிகளால் மயங்கச் செய்து யவனர் கப்பலில் ஏற்றி அனுப்பி விடுகிறான் டைபீரியஸ். அவன் செயலைக் கடுமையாக எதிர்க்கும் ராணியைச் சிறை வைத்து புகாரைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான். இதேநேரம் இருங்கோவேள் பூவழகியின் தந்தையை சிறை வைத்து விட்டு மற்ற வேளிர்கள் உதவியுடன் சோழநாட்டின் மறைமுக மன்னனாக இருப்பதுடன், பூவழகியை மணக்க விரும்பி அவளை மாளிகைச் சிறையில் வைக்கிறான்.

வனர் கப்பலில் செல்லும் இளஞ்செழியன், ஹிப்பலாஸின் உதவியால் கப்பலிலிருந்து தப்பி அடிமை வர்த்தகர்களிடம் சிக்கிக் கொள்கிறான். அடிமை வர்த்தகர்கள் அவர்களை விற்க கப்பலில் அழைத்துச் செல்ல, கொள்ளையர் கப்பல் சூழ்ந்து கொள்கிறது. வீரமாகப் போரிடும் இளஞ்செழியனையும் மற்றவர்களையும் கொள்ளையர் கைது செய்கின்றனர். கொள்ளையர் தலைவனுக்கு ஆசை ஊட்டி இலி ஆஸு என்ற கொடுங்கோல் மன்னனிடம் அவர்களை மாட்டி விடுகிறான் இளஞ்செழியன்.

இளஞ்செழியனைத் தன் படைத்தலைவனாகும்படி வற்புறுத்தும் அந்த மன்னனை தன் புத்தி சாதுர்யத்தால் ஏமாற்றி தப்புகிறான் இளஞ்செழியன். அந்நாட்டில் அவன் மேல் மோகம் கொண்ட அலீமா ன்றெ பெண் அவனுக்கு உதவ, கிரேக்க நாட்டு ரதப் போட்டியில் வென்று பல கப்பல்களுடன் தமிழகம் திரும்பும் இளஞ்‌செழியன் தன்னிடம் இருக்கும் யவனர் உதவியுடன் முகக்கவசம் அணிந்து யவனத் தூதனாக டைபீரியஸை சந்திக்கிறான். அவனுடன் உறவாடியபடியே புகாரில் அவனை முறியடிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறான். அடிக்கடி வரும் யவனக் கப்பல்கலைக் கண்ட பிரும்மானந்தர் அல்லியைக் கொண்டு உளவறிய முற்பட, அவள் மூலம் கரிகாலனுக்குச் செய்தி அனுப்புகிறான் இளஞ்செழியன்.

யவன ராணியை ரகசியமாகச் சந்தித்து தமிழர்களின் இந்திர விழாவை யவனர்களின் வீனஸ் விழாவாக நடத்தும்படி இளஞ்செழியன் வேண்ட, அவள் தன்னை அவன் மணமுடிக்க வேண்டுமென்று பதிலுககு சத்தியம் கேட்கிறாள். அவ்வாறே சத்தியம் செய்கிறான் இளஞ்செழியன்.

தேசமயம் திருமாவளவனும் இரும்பிடர்த் தலையரும் சிறு படை திரட்டி பதினெட்டு வேளிர் மற்றும் சேர, பாண்டிய மன்னர் துணையால் பெரும்படையுடன் இருக்கும் இருங்கோவேளுடன் போர் புரியத் தயாராகின்றனர்.  இளஞ்செழியன் அவர்களைச் சந்தித்து கோவில் வெண்ணி என்ற இடத்தில் போர் புரியச் சொல்லி வெற்றி தரும் போர்த்திட்டம் ஒன்றையும் வகுத்துத் தருகிறான். அவன் திட்டப்படி போர் நடக்க, கரிகாலன் போரில் வென்று, இருங்கோவேளை கொன்று பழி தீர்த்து வெற்றிவாகை சூடுகிறான். சோழர் படை, பின்வாங்கி ஓடிய சேர, பாண்டியப் படைகளை வாகை என்ற ஊருக்கு துரத்திச் செல்கிறது.

புகாரில் வீனஸ் விழாவில் பொதுமக்களுடன் கலந்து ‌வரும் கரிகாலன் தன் வீரர்களுடன் சூழ்ந்து கொள்ள, அவனுடன் போரிட்டுத் தப்பும் டைபீரியஸ், யவன நாட்டுக்கே செல்லும் உத்தேசத்துடன் கடற்கரைக்கு ராணியை இழுத்துச் செல்கிறான். அங்கே இளஞ்செழியனால் மடக்கப்பட, இனி தப்ப இயலாது என்றறியும் டைபீரியஸ் யவனராணியின் மீது குறுவாளை வீசிவிட்டு, இளஞ்செழியனின் உபதலைவன் வீசிய வேலுக்கு இரையாகி மடிகிறான்.

இளஞ்செழியனின் மாளிகையில் சிகிச்சை பலனின்றி அவன் மடியில் யவனராணி இறக்கிறாள். கரிகாலன் சோழ சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு அல்லியை மணந்து கொள்ள, பூவழகியை மணந்து கொண்டு சோழர்களின் பிரதான படைத்தலைவனாகும் இளஞ்செழியனின் நினைவில் (வாசகர்களின் மனதிலும்) யவனராணி வாழ்கிறாள்.

48 comments:

  1. அடேங்கப்பா.முழு நாவலையும் ஒரே பக்கத்தில புழிஞ்சுட்டிங்களே. இப்படியே நிறைய ஜூஸ்கள் இன்னும் கொடுக்கணும் நீங்க சகோ.

    தமிழ்மணம் வாக்கு 2.

    ReplyDelete
  2. @ துரைடேனியல் said...

    -பிடிச்சிருந்ததா? இன்னும் நிறையத் தருகிறேன் துரை. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. 2 நாளில் படித்த புத்தகத்தை அதன் விறுவிறுப்பு குறையாமல் 2 நிமிடங்களில் படித்துவிட்டேன். யவன ராணி என்னை கவர்ந்த புத்தகங்களில் ஒன்று, சாண்டியல்யனின் எழுத்துக்களின் ரசிகை நான். அவர் மற்றா படைப்புகளையும் இதுப்போல் கேப்ஸ்யூல் வடிவில் குடுங்க.

    ReplyDelete
  4. தமிழனுக்கு நிறையவே திறமைகள் இருந்திருக்கு.புத்தியும் அதிகம்.ஆனால் கூடவே போட்டியும் பொறாமையும் காட்டிக்கொடுக்கும் குணம் போன்ற குணங்களும் கூடவே பிறந்திருக்கு.அதுதான் இன்றுவரை நம் அழிவுகளுக்குக் காரணம் !

    உங்கள் கட்டிச்சாறு தித்திப்பு.இப்பிடிச் சுருக்கித் தருவது எல்லாராலும் முடியாது.நன்றி !

    ReplyDelete
  5. எனக்கு பிடித்த வரலாற்று நாவல் வரிசையில் யவன ராணிக்கு முதலிடம், பொதுவாக சாண்டில்யன் நாவல்களைப் படிக்கும் பொது குதிரை ஓடும் சத்தம் நம் காதுகளிலும் கேட்கும்.. அனுபவித்து இருக்கிறீர்களா?

    ReplyDelete
  6. யவன ராணி முன்பே படிச்சிருக்கேன் அதுபோல கடல் புறாவும் ரொம்ப நல்லா இருக்கும். இங்க யவனராணி
    ஜூஸ்மட்டுமே ஆனாலும் நினைவலைகள் இனிமைதான்.

    ReplyDelete
  7. முன்பு படித்திருக்கிறேன்.சுவையான கேப்ஸ்யூல்!

    ReplyDelete
  8. யவன ராணியை பிழிந்து பருக கொடுத்த சாறு தித்தித்தது..சுருக்கம் சுவை..யவன ராணியை மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி..இதுவரை படிக்காதவர்களுக்கு பயன்படும்படியான பதிவு.நன்றி..

    ReplyDelete
  9. @ ஹேமா said...

    -நீங்க சொல்றது ரொம்பக் கரெக்டுங்க ஹேமா. இல்லாட்டி தமிழன் எங்கயோ போயிருப்பான். தவிர, இப்படி நாவல்களைச் சுருக்கறதுக்கு நிறைய பயிற்சி வேணுங்கறதை அழகா உணர்ந்து சொல்லியிருக்கற உங்களுக்கு என்னோட ஸ்பெஷல் தாங்க்ஸ்!

    ReplyDelete
  10. @ ரஹீம் கஸாலி said...

    -நீங்க ரசிச்சதுக்கு என்னோட நன்றிகளைப் பிடியுங்க தம்பி!

    ReplyDelete
  11. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    -அனுபவித்து ரசித்திருக்கிறேன் கருன்! சாண்டில்யன் என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவர். நீங்களும் ரசித்து மகிழ்ந்ததற்கு என் நன்றி!

    ReplyDelete
  12. @ Lakshmi said...

    -எனக்கென்னமோ கடல் புறாவை விட யவனராணி பிடிக்கும். அதனால்தான் முதல்ல அதை எடுத்துக்கிட்டேன். நீங்க வந்ததுக்கும், ரசிச்சதுக்கும் நன்றிம்மா!

    ReplyDelete
  13. @ சென்னை பித்தன் said...

    -நினைவுகள் எப்போதும் சுகமானவை இல்லையா ஸார்... உங்கள் வருகைக்கும் என்னை ஊக்கப்படுத்தியதற்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  14. @ மதுமதி said...

    -கரெக்ட் கவிஞரே... படிக்காதவர்கள் யாராவது இதைப் படித்தால் நாவல் முழுவதையும் படிக்க வேண்டும் என நினைக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். நீங்கள் நினைவுகூர்ந்து ரசித்ததற்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  15. @ ராஜி said...

    -இவ்வளவு தூரம் உனக்குப் பிடிச்சிருக்குன்னா கண்டிப்பா மத்த நாவல்களையும் அழகாத் தர்றேன் தங்கச்சி. ரசித்ததற்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  16. அன்புநிறை நண்பர் கணேஷ்,
    ////அன்றொரு நாள் இதே நாவலில்////

    மூழ்கித் திளைத்த காலம்.
    யவனராணி,கடல்புறா,ராஜபேரிகை,ராஜமுத்திரை...................
    அப்பப்பா.. எத்தனை எத்தனை ..
    வரலாற்று நாவல்களில் தனக்கென தனியிடம் பிடித்தவர்
    திரு.சாண்டில்யன் அவர்கள். கல்லூரிக் காலங்களில் தேடித் தேடி
    படித்தவை..
    அவரின் வர்ணனைகள் சொல்லி மாளாது..
    காதல் வர்ணனைகள் அவரின் நாவலுக்கு பலம் சேர்ப்பவை..
    மற்றொரு புறம் வாட்போருக்காக மன்னவர்கள் எதிரெதி நின்று
    சமர் புரிவதை அவ்வளவு அழகாக நேரில் காண்பது போல
    கண் முன் நிறுத்திக் காட்டுவார்...

    அப்படி ஒரு நாவலை கண்முன் நிறுத்தி விட்டீர்கள் நண்பரே.
    நீண்ட நாட்களுக்குப்பின் யவனராணியை சந்தித்த உணர்வு.

    நன்றிகள் பல.

    ReplyDelete
  17. முழுக்கரும்பைப் பல்லால் கடித்து மென்று சாறை விழுங்கி சக்கையைத் துப்புவது ஒரு ஆனந்த அனுபவம். கரும்பு தின்னவும் கூலி கேட்கும் இந்த அவசர உலகத்துக்கு இப்படி சாறு பிழிந்து குவளையில் கொண்டுவந்து கையிலும் கொடுத்தால்.... ஆஹா அதுவும் ஒரு அலாதி ஆனந்தம்தான். ஒரு நாவலைச் சுருக்கி சுவை குறையாமல் கொடுப்பது மிகவும் சவாலான காரியம். அதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். மிகவும் நன்றி கணேஷ் சார்.

    ReplyDelete
  18. @ மகேந்திரன் said...

    -எனக்கும் உங்களைப் போலத்தான் அழகப்பா கல்லூரி நூலகத்தி்ன் வாயிலாகத்தான் சாண்டில்யன் அறிமுகமானார். அவரது காதல் + போர் வர்ணனைகளை நானும் ரசித்திருக்கிறேன். உங்கள் ரசனையுடன் நான் ஒத்திருப்பதில் மகிழ்ச்சி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  19. @ கீதா said...

    -சரியாச் சொன்னீங்க. முழு நாவலையும் படிக்காதவங்களுக்காகத்தான் இந்த ஜூஸ் கொடு்க்கறது. இதை நீ்ங்க ரசிச்சதுல சந்தோஷம். பாராட்டுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  20. பல மணிநேரம் படித்து இரசிக்கவேண்டிய சாண்டில்யன் அவர்களது ‘யவன ராணி’ நாவலை சில மணித்துளிகளில் படிக்கும்படி குறுக்கித் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  21. பிரமாதம். பிரமாதம். மிக அழகாய் சுருக்கி வரைந்து விட்டீர்கள்.

    எனக்கும் சாண்டில்யனின் கதைகளில் யவனராணிதான் முதலில் பிடிக்கும். எவர் கிரீன் கதை. அப்புறம்தான் மற்றதெல்லாம். பொதுவாக அவர் ஹீரோக்களை அறிமுகப் படுத்துவதும், ஆக்ஷன் சீன்களைக் கையாளும் விதமும் இருக்கிறதே, அடடா....இப்போது வரும் தமிழ் பட ஆக்ஷன் காட்சிகளெல்லாம் தூசு அதன் முன்! எதிரிகளில் திறமையைக் கூட அவர் சிறந்த வார்த்தைகளால் வர்ணிப்பது படிப்போருக்கு மதிப்பை உண்டாக்கும். அவர் புத்தகம் படித்த பாதிப்பில்தான் நீலகண்ட சாஸ்த்ரியின் சோழர்கள் புத்தகம் வாங்கி வைத்துள்ளேன். பின்னூட்டத்தை முடிக்க மனமில்லாமல் முடிக்கிறேன்!

    ReplyDelete
  22. யவனராணி எனக்கு மிகவும் பிடித்த நாவல்
    பகிர்வு அருமை பாஸ் நன்றி.

    ReplyDelete
  23. @ வே.நடனசபாபதி said...

    -உங்கள் வருகைக்கும் ரசித்துப் படித்ததற்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  24. @ ஸ்ரீராம். said...

    -எனக்கும் சாண்டில்யன் நாவல்களில் யவனராணி மிகப் பிடிக்கும் என்பதால்தான் அதை சுருக்கித் தந்தேன். உங்களின் ரசனைக்கும் அழகிய விரிவான பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தியதற்கும் என் இதயம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  25. @ K.s.s.Rajh said...

    -உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ்.

    ReplyDelete
  26. அந்த காலத்தில் இந்த நாவல் தொடராக வந்த போதே
    நான் படித்த, எனக்குப் பிடித்த ஒன்று!
    அதன் மூலம் கெடாமல் தாங்கள் சுருக்கித்
    தந்தது உங்கள் திறமைக்குச் சான்று!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. முழு நீள நாவலை ஒரே பதிவில் பகிர்ந்த உங்களை பாராட்டியே ஆக வேண்டும்... அருமை நண்பரே... தொடருங்கள் முயற்சியை...


    வாசிக்க:
    ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

    ReplyDelete
  28. @ புலவர் சா இராமாநுசம் said...

    -அந்நாளைய குமுதத்தில் ‘லதா’வின் ஓவியங்களுடன் படித்திருக்கிறீர்களா... அருமையாக இருக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

    ReplyDelete
  29. @ தமிழ்வாசி பிரகாஷ் said...

    -வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரகாஷ் சார். அவசியம் தொடர்கிறேன்...

    ReplyDelete
  30. அருமை.
    பகிர்விற்கு நன்றி Sir!

    ReplyDelete
  31. @ திண்டுக்கல் தனபாலன் said...

    -தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்!

    ReplyDelete
  32. அருமையா கொடுத்துருக்கீங்க கணேஷ் எப்படி இப்படி செய்ய ஐடியா வந்தது? தொடருங்க இன்னும் சில பிரபலங்கள் எழுத்துக்களையும்.

    ReplyDelete
  33. @ ஷைலஜா said...

    -பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்க... இன்னும் சில மேதைகளின் படைப்புகளை வெச்சு கண்டிப்பா தொடர்கிறேன். நன்றிக்கா...

    ReplyDelete
  34. இளஞ்செழியனின் நினைவில் (வாசகர்களின் மனதிலும்) யவனராணி வாழ்கிறாள்./

    எத்தனை முறை படித்த கதை!

    மின்னல் வரிகளாய் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  35. @ இராஜராஜேஸ்வரி said...

    -வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  36. கணேஷண்ணா நல்ல தொகுப்பு..பிரபலங்களைபற்றி இன்னுமின்னும் தொடருங்கள். எல்லாரும் அறிய மீண்டும் ஓர் சந்தர்ப்பமாய்.. பாராட்டுகள்..

    http://niroodai.blogspot.com/2011/12/blog-post_22.html

    ReplyDelete
  37. @ அன்புடன் மலிக்கா said...

    -நன்றி தங்கச்சி... நிச்சயம் தொடர்கிறேன்...

    ReplyDelete
  38. அட்டகாசமாக ஆரம்பிக்கும் அந்த முதல் அத்தியாயமும் அதற்கு ஓவியர் 'லதா'வின் இருபக்க ஓவியமும் இப்பவும் ஞாபகத்தில்!

    ReplyDelete
  39. சுவை மிளிர சுருக்கமா பிழிஞ்சி கொடுத்திட்டீங்க.

    நாவலைப் படிக்கும் ஆவலைத் தீர்க்க, ஊருக்கு போகனுமே. பயணச்சீட்டுக்கு பணம் யார் தருவா?

    ReplyDelete
  40. @ கே. பி. ஜனா... said...

    -ஆஹா... ஓவியங்களுடன் படித்து ரசித்ததுண்டா என்னைப் போல... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  41. @ சத்ரியன் said...

    -அதனாலென்ன சத்ரியன் தம்பி... உங்க அட்ரசை ஈமெயில் பண்ணுங்க... நானே புத்தகம் தர்றேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  42. இன்றைய [23.12.2011] வலைச்சர அறிமுகத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், ஐயா. அன்புடன் vgk

    ReplyDelete
  43. கதைச்சுருக்கத்துக்கு நன்றி கணேஷ்.
    அநாளில் சாண்டில்யன் கதை ஒன்றைக்கூட முழுமையாகப் படித்த நினைவில்லை. யவனராணி பற்றி என் நண்பன் விஜயன் (அவன் குடும்பமே சாண்டில்யன் பித்தானவர்கள்; அப்படி ஒரு வெறியோடு படிப்பார்கள். படித்து விட்டு விவாதம் செய்வார்கள். நான் விழித்துக் கொண்டிருப்பேன். பழவந்தாங்கல் நினைவுகள்..). நிறைய தவறவிட்டது பின்னாளில் புரிந்தது. அவர் கதைகளில் புதைந்திருக்கும் ஆராய்ச்சி பிரமிக்க வைத்தது. அதிகம் படித்ததில்லை. இந்தியப் பயணத்தில் சாண்டில்யன் புத்தகங்கள் சில வாங்க எண்ணியிருக்கிறேன். கிட்டே வந்து என் மண்டைல தட்டிட்டு போங்க சொல்றேன்.. இரண்டு வருடங்களுக்கு முன் சென்னைப் பயணத்தில் தி.நகர் ரவிராஜ் (?) லென்டிங்க் லைப்ரரி போயிருந்தேன். அந்த நாளில் மிகப் பிரபலமான வாடகை நூலகம் இப்போது தேய்ந்து கிடப்பது வருத்தமாக இருந்தது. கடைக்காரருடன் பேசிக் கொண்டிருந்தேன் - புத்தகங்களை விலைக்குத் தரமுடியுமா என்று கேட்ட போது "எல்லா புத்தகமும் விலைக்குத்தான் - இப்பல்லாம் யாரு வாடகைப் பணம் கொடுத்துப் படிக்கிறாங்க?" என்று வருத்தத்தோடு புலம்பினார். குமுதத்தில் வந்ததை சேகரித்து பைன்ட் செய்த சாண்டில்யன் நாவல்கள் ஐந்து (மன்னன் மகள், யவனராணி மட்டும் நினைவிருக்கிறது..) நாவல்கள் ஒரு செட்டாகத் தருவதாகச் சொன்னார். மிக மிகக் குறைந்த விலையில் பாதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். "வேண்டாம் சார்.." என்று சொல்லித் திரும்பியதற்காகப் பல முறை வருந்தியிருக்கிறேன். அடுத்தப் பயணத்தின் போது புத்தகம் இருக்கிறதோ என்ற கவலையுடன் ரவிராஜ் லைப்ரரி இருக்கிறதோ என்ற கவலையும்.

    ReplyDelete
  44. @ வை.கோபாலகிருஷ்ணன் said...

    -தங்களின் அன்பான வாழ்த்துக்கள் நான் மேலும் உற்சாகமுடன் செயல்பட ஊக்கமளிப்பவை என்றுமே. நன்றி சார்...

    ReplyDelete
  45. @ அப்பாதுரை said...

    -தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு என் இதயம் கனிந்த நன்றிகள். சாண்டில்யன் நாவல்களின் மேல் அவ்வளவு பித்து எனக்கும். காதலும் வீரமும் கை கோத்து நடமிடும் அவர் எழுத்தில். ரவிராஜ் லெண்டிங் லைப்ரரியா... விசாரிச்சுப் பாக்கறேன் உங்களுக்காக. கிடைச்சா வாங்கியும் வெச்சுட்டு தகவல் தர்றேன் சார்...

    ReplyDelete
  46. விரிவுரை தெரியும். ஆனால் இந்த சுருக்குரை வரைவது
    லேசான காரியம் இல்லை. தொகுப்பு நன்றாக உள்ளது.
    மாத்தி யோசிச்சு மனதை அள்ளறீங்க. பின்னூட்டங்களுக்கு
    உங்களின் மனம் திறந்த இயல்பான பதில்கள் சிறப்பு.
    இடுகைக்கு சமமாக விமர்சனமும் பிடிக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube