Saturday, December 17, 2011

ஒரு காதல் கதை!

Posted by பால கணேஷ் Saturday, December 17, 2011
டிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து வேலை வேட்டையில் ஈடுபட்டிருந்தேன். அப்போது என் உயிர் நண்பனின் மச்சான் செளகார் பேட்டையில் ஒரு ஏஜென்ஸி வைத்திருந்தார். பூமர், சாக்லெட்கள் போன்றவற்றை மொத்தமாக வாங்கி சில்லறைக் கடைகளுக்கு விற்கும் ஏஜென்ஸி அது. அங்கே அடிக்கடி அவனைப் பார்க்கப் போய் விடுவேன். (வேற வேலை எதுவும் இல்லையே...) நண்பனும், மச்சானும் மிகப் பிரியமாக இருப்பார்கள். அவர்கள் எங்கேயாவது வெளியில் போவதாயிருந்தால் என் பொறுப்பில் கடையை விட்டுவிட்டுப் போவார்கள். நான் முன்னால் கேஷ்பாக்ஸ்க்கு அருகில் ஓனரின் சேரில் உட்கார்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

அது செளகார்பேட்டை என்பதால் சேட்டுக் குடும்பங்கள் அதிகம் குடியிருந்தார்கள். ஏஜென்ஸிக்கு மேலே இரண்டு மாடிகள் உண்டு. இரண்டிலும் சேட் ஃபேமிலிதான் குடியிருந்தது. அதில் ஒரு சின்னப் பெண் மிக அழகாக இருப்பாள். அவள் போகும் போதும் வரும்போதும் பயங்கரமாக ‘ஸைட்’ அடிப்பேன். அவளும் ஒன்றிரண்டு முறை என்னைப் பார்த்து புன்னகை செய்ததுண்டு. அடடா... ஒரு பெண் நம்மைக் கவனிக்கிறாள் என்று தெரிந்தால் வயசுப் பசங்களுக்கு ஒரு வேகம் வரும் பாருங்கள்... எனக்கும் வந்தது. அவள் கவனத்தைக் கவர்வதற்கென்றே ஏதாவது செய்து என்னைப் பார்க்க வைப்பேன்.

இப்படியாக, கிட்டத்தட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லும் பார்டர் லெவலுக்கு வந்து விட்டிருந்த சமயம். ஒருநாள் என் நண்பனும், மச்சானும் வெளியே போய்விட்டபடியால் வழக்கம்போல நான் கடையில் இருந்தேன். மாடியிலிருந்து நம்ம சிட்டு இறங்கியது. இறங்கியவள் ஒரு ஆச்சரியமான காரியம் செய்தாள். கடை வாசலுக்கு நடுவில் வந்து நின்று கொண்டு, இரு கைகளையும் என்னைப் பார்த்து நீட்டி, புன்னகைத்தாள். பட்டப் பகலில், நிறையப் பேர் நடமாடும் சமயத்தில் கட்டிப் பிடிக்கச் சொல்கிறாளே என்று என்னுள் தயக்கம். பின்னால் திரும்பிப் பார்த்தேன். யாரும் இல்லை. என்னைப் பார்த்துத்தான் கை நீட்டுகிறாள் என்பது தெரிந்தது.

இப்போது கை நீட்டியதோடு, ‘வா’ என்பது போல கையை அசைத்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு தான்... என் ஆண்மைச் சுரப்பிகள் விழித்துக் கொண்டன. ஒரு பெண் பிள்ளையே இப்படி பயப்படாமல் கூப்பிடும் போது ஆண் சிங்கம் நமக்கென்ன என்று எண்ணியவனாய் அவளைக் கட்டியணைக்க, ஆவலுடன் சேரை விட்டு எழுந்தேன். அப்போது...
-காதல் கதை தொடரும்!

======================================================

மீபத்தில் டிவிடியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தை போட்டுப் பார்த்தேன். ஒரு காட்சியில் துடிப்பான எம்.ஜி.ஆர். கையில் பணம் இல்லாமல் ஹோட்டலுக்கு சாப்பிட வந்து விடுவார். ‘‘என்ன ஸார் வேணும்?’’’ என்று கேட்கும் சர்வரிடம், ‘‘என்ன இருக்கு?’’ என்று வாத்தியார் கேட்க, ‘‘இட்லி, பொங்கல், பூரி, மசால் தோசை’’ என்று ஒரு நீளமான லிஸ்டைச் சொல்வார் சர்வர். ‘‘நாலு இட்லி, நாலு பூரி, நாலு பொங்கல், நாலு ஊத்தப்பம், நாலு மசால்தோசை’’ என்று எல்லா அயிட்டத்திலும் நான்கை வாங்கி வெளுத்துக் கட்டுவார் பொன்மனச் செம்மல்.

சாப்பிட்டு முடித்த அவர், நைசாக நழுவிவிட, அப்பாவி எம்.ஜி.ஆர். இப்போது உள்ளே நுழைந்து அதே டேபிளில் அமர்வார். (அதெப்படி அவ ருக்கும் அதே டேபிள்ல உக்காரத்‌ தோணும்னு லாஜிக் கேள்வில்லாம் கேக்கப்படாது, சொல்லிப் புட்டேன்...) சர்வர் வந்து ‘‘வேற என்ன வேணும்?’’ என்க, ‘‘ரெண்டு இட்லி, அப்புறம் காபி’’ என்பார். சர்வர், ‘‘மறுபடியும் முதல்லருந்தா?’’ என்று சலித்துக் கொண்டே வந்து கொடுக்க, சாப்பிட்டு விட்டு ‘எவ்வளவு தரணும்?’ என்பார். சர்வர் கணக்குப் போட்டு பில் கொண்டு வந்து, ‘‘ஆறு ரூபாய், இருபத்தஞ்சு காசு’’ என்பார். அதற்கே புரட்சித்தலைவர் அதிர்ச்சியாகி, ‘‘அவ்வளவா?’’ என்பார்.

இநதக் காட்சியைத் திரையில் பார்த்ததும், அன்றைக்கிருந்த விலைவாசியையும், இன்றைக்கிருக்கும் விலைவாசியையும் நினைத்து என் காதுகளிலிருந்து புகை வந்தது.

======================================================

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தைப் பற்றி பலரும் எழுதி (குமுறி) விட்டார்கள். எனக்கு இதில் ஒரு விஷயம்தான் புரியவேயில்லை. தமிழ்நாட்டில் பெரிய கட்சிகள் என்றால் ஏழு கட்சிகள் ‌தேறும். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி ‘அனைத்து கட்சி தலைவர்களும் இருப்போம் தொண்டர்கள் அணி திரண்டு வாருங்கள்’ என்று போராட்ட அறிவிப்பு விடுத்தால் தமிழகமே திரண்டு விடாதா? கட்சியின் மாநில மாநாடுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்க வேண்டுமா? இவர்களுக்குள் இந்த மாதிரி ஒரு விஷயத்தில் கூட ஒன்றுபட இயலாதா?

இப்போது ஒவ்வொரு கட்சிக்காரரும் நாளைக்கு முல்லைப் பெரியாறு விஷயத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என மக்கள் கேட்டால் பதில் சொல்ல வேண்டுமே என்பது போல மிருகசங்கிலி போராட்டம், உண்ணும் விரதம் என்று தங்கள் கட்சி சார்பில் மட்டுமே அறிவித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாமும் வேறு வழியின்றி இவர்களில் ஒருவருக்குத்தான் ஓட்டைப் போட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு என்னதான் மாற்று?

======================================================

சில ‘கொலவெறி’க் கேள்விகள் :

‘‘ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்’’ என்று ஒரு பாடலில் (அபூர்வராகங்கள் படத்தில் ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’) கண்ணதாசன் எழுதியிருப்பார். அதுபோல ‘ஏன்’ என்கிற சில கேள்விகள் விடை கிடைக்காமல் என்னைச் சுற்றிக் கொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது சொல்கிறேன். உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

* நான் சிறுவனாக இருந்த நாளில் பெண்கள் எல்லோரும் இந்தப் படத்தில் இருப்பதைப் போல நெற்றியின் மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வார்கள். அதற்கு ‘நெற்றிப் பொட்டு’ என்றுதான் பெயர். நெற்றியின் மையம் மூடப்படுவதால் மந்திரவாதிகளாலோ மற்ற எவராலுமோ  ஹிப்னடைஸ் செய்ய முடியாது என்பதால் முன்னோர்கள் இப்படி வைககச் சொன்னார்கள் என்று என் அம்மா சொல்வார். ஆனால் இன்றைய பெண்கள் நெற்றிப் பொட்டை ‘மூக்குப் பொட்டு’ என்று அழைக்கத்தக்க விதமாக மூக்கின் துவக்கத்தில் வைத்துக் கொளகிறார்களே... அது ஏன்?

* ட்ராபிக் சிக்னலில் பச்சை தென்பட்டால் நிற்காமல் போகலாம், ஆரஞ்சு தென்பட்டால் வேகத்தைக் குறைக்க வேண்டும், சிவப்பு எரிந்தால் நின்றுவிட வேண்டும் -இதுதான் டிராபிக் சிக்னல்கள் பற்றி நான் படித்த பாடம். ஆனால் சென்னையில் ஆரஞ்சு விளக்கு எரிவதைக் கண்டால் வாகனத்தை மெதுவாக்கி ஓட்டுவதற்குப் பதில், வெறி பிடித்த மாதிரி இருமடங்கு வேகத்தில் அப்போதுதான் தலைதெறிக்க ஓட்டுகிறார்களே... அது ஏன்?

* பாங்க்கில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணப் போனால் ஐ.டி. ப்ரூப், ரெஸிடென்ஸ் ப்ரூப் அது இதுவென்று ஆயிரம் விஷயங்களைக் கேட்கிறார்கள். அவர்களிடம் பணத்தை கடன் வாங்குவதாக இருந்தால் இதையெல்லாம் கேட்பதில் அர்த்தம் உண்டு. நியாயமாக நாம் நம் பணத்தை அவர்களை நம்பிக் கொடுப்பதற்கு நாமல்லவா அவர்களிடம் கம்பெனி ஸ்டேட்மெண்ட், ஃபைனான்ஷியல் ஸ்டேட்மெண்ட் என்றெல்லாம் கேட்க வேண்டும். மாறாக அவர்கள் இதையெல்லாம் கேட்பது ஏன்?

* ரேவதி நட்சத்திரத்திலும், ரோகிணி நட்சத்திரத்திலும் பெண் குழந்தை பிறந்தால் ரேவதி, ரோகிணி என்று பெயர் வைக்கிறார்களே... ஏன் மிருகசீரிஷம் என்றோ, விருச்சிகம் என்றோ வைப்பதில்லை?

======================================================

-காதல் கதையின் தொடர்ச்சி...

ன் சிட்டுக்குருவி கையை நீட்டி, ஆட்டிக் காட்டியதும், நான் சேரை விட்டு ஆவலுடன் எழுந்து அவளை நோக்கி நடக்க ஆரம்பித்த நேரம்... ஒரு கூடை கயிறால் கட்டப்பட்டு எனக்கு முன்பாக மேலிருந்து கீழே இறங்கியது. அவள் அதை நெருங்கி, அதிலிருந்த பால் கார்டையும், பணத்தையும் எடுத்துக் கொண்டு, மேலே பார்த்து கை காட்டிவிட்டு, என்னைப் பார்த்து ஸ்மைலி விட்டுச் சென்றாள்.

வாசலில் வந்து பார்த்தேன். மாடி வீட்டில் சேட்டு கயிற்றில் கட்டப்பட்ட கூடையை இழுத்துக் கொண்டிருந்தார். அடதேவுடா! இதை கீழே இறக்கச் சொல்லிதான் அப்படி கை நீட்டி சிக்னல் காட்டினாளா? நல்லவேளை... இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக நான் எழுந்து வந்து கட்டிப் பிடித்திருந்தால் டின் கட்டியிருப்பார்கள். தப்பித்தோம்டா சாமி என்று ஆறுதலுடன் மீண்டும் சேரில் உட்கார்ந்தேன். பல்புகள் ஓய்வதில்லை!

46 comments:

  1. ஒரு பதிவு...பல விஷயங்கள் அருமை.
    எம்.ஜி.ஆர்.,காலத்து விலைவாசியை இப்போது ஒப்பிட்டால் காதில் புகை மட்டும் வராது... நெஞ்சுவலியே சேர்த்து வந்துவிடும்

    ReplyDelete
  2. @ ரஹீம் கஸாலி said...

    -முதல் விருந்தினராக வந்திருக்கும் தம்பி கஸாலிக்கு நல்வரவு. நீங்க சொல்லியிருக்கறது உண்மைதான்ப்பா. வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  3. பயங்கரமாக 'சைட்'அடித்தீர்களா..சிரித்தேன்..காதல் கதையின் இடைவேளையில் விளம்பரம் வருவதைப்போல /விலைவாசி ஒப்பீடு/அரசியல் கட்சிகளுக்கான கேள்வியென உட்புகுத்தியது அருமை..கொலைவெறி கேள்விகள் என்னையும் யோசிக்க வைத்தது..அடுத்து காதலின் இரண்டாம் பாகம்..'கட்டிபிடி வைத்தியம் நடந்துருக்குமா இருக்காதா என்ற வேட்கையில் கண்கள் வேகமெடுத்தது..ஏமாற்றமாய் போய்விட்டது..'டின்' கட்டினால்தான் என்ன 'பெண்' கட்டியது போல வருமா..இன்னும் உங்கள் இளமைக் குறும்புகளை சுவைக்க ஆசைப்படுகிறேன்..விஜய் டி.வி யின் சரவணன் மீனாட்சியின் தாக்கமா இந்த பதிவு?..அனைத்தும் சுவை.

    ReplyDelete
  4. @ மதுமதி said...

    - தொடர் ஒன்று எழுதலாமென்று ஆசை கவிஞரே. அதற்கு முன்னோட்டமாக மினி தொடர் மாதிரி அமைத்துப் பார்த்தேன். பிடித்திருந்ததா... நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் மெகா, வசந்த் டிவிகளில் வரும் பழைய பாடல்கள் மட்டும்தான். ஆகவே தொடர் பற்றித் தெரியலை. ஸாரி! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. நல்ல காதல்! நல்ல கதை!
    சுவையாகச் சொன்னீர்கள்!
    நன்று!


    சங்கப் பதிவின் கூட்டத்திற்குத்
    தாங்களும் மற்ற நண்பர்களும் வருவதை உறுதி செய்து என் வலையில் மறு மொழி
    யிட வேண்டி யுள்ளேன் கவனிக்க!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. ஏன் என்று எவ்வளவு சந்தேகங்கள்? தீர்ந்ததா இல்லியா? விலைவாசியெல்லாம் அது ஒரு கனாகாலம்தான். பல்பு வாங்கின கதையும் சுவாரசியம்

    ReplyDelete
  7. தோழர் .. விளைவாசியைப் பார்த்து காதுல புகை மட்டும்தான் வந்ததா?

    ReplyDelete
  8. உங்களது நடை அருமையாக இருக்கிறது..தாராளமா எழுதலாம்..அதுவும் உங்களது இளமையை நீங்களே சொல்லும்போது உங்களை அறியாமலேயே ஒரு குதூகலம் எழுத்துக்களில் எட்டிப்பார்க்கிறது..(சரவணன் மீனாட்சி தொடரில் அப்பாக்கள் பழைய காதலை சிலாகிப்பதாக காட்சி வந்தது அதனால் கேட்டேன்)
    'பல்புகள் ஓய்வதில்லை' தலைப்பு கூட பாருங்கள் உங்களது இளமைக் குறும்பைக் காட்டுகிறது..ஹாஹஹஹா..விரைவில் அறிவிப்பை கொடுத்துவிட்டு தொடரெழுத தொடங்குங்கள்..

    ReplyDelete
  9. கதைக்கு அதற்குள் தொடரும் போட்டுவிட்டீர்களேனு நினத்தேன்.


    விளம்பர இடைவெளி போல பல சுவையான விசயங்கள்,தகவல்கள்,கேள்விகளுக்கு பின் கதையை இந்தப்பதிவிலே தொடர்ந்துவிட்டீகள்.பொண்ணுக்கு
    வாய் பேச இயலாதோனு

    யூகிச்சிருந்தேன்.

    அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete
  10. உங்க style எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கணேஷ்.
    எம்ஜிஆர் நடிப்பு அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வயதில் நான் எம்ஜிஆர் கட்சி. சிவாஜி ரசிப்பேன் என்றாலும் எம்ஜிஆர் 'உடம்பெல்லாம் ரத்தம் ஏறும்'படி பிடிக்கும். எம்ஜிஆருக்குப் பதில் சிவாஜி நடித்திருந்தால் அந்தப் படம் overactingல் எவ்வளவு நாசமாகியிருக்கும் என்று வாதம் செய்தது நினைவுக்கு வருது. (of course, நான் பொறக்குறதுக்கு முன்னால வந்த படம்தான்.. :-)
    ஏன் கேள்விகள் சிலிர்க்க வைக்குதுண்ணே.

    ReplyDelete
  11. ஆ.. எழுத மறந்துட்னே..
    இதுக்கு தான்.. டக்குனு காரியத்துல இறங்கிடணும்னு சொல்லுறது.. கை காட்டினப்பவே ஓடிப்போயிருக்க வேணாமா?
    என் ஐயர் நண்பன் ஒரு சேட் பெண்ணை டாவடித்தான். நாங்கள் எல்லாம் அந்த ரெண்டு பேருக்கும் நிறைய உதவி செஞ்சிருக்கோம். வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கவைத்த சம்பவங்கள் சில உண்டு. அவர்கள் திருமணத்துக்கு முன்பே இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டேன். சமீபத்தில் சென்னை சென்றபோது அவர்களுடன் பேசினேன். ஏழு குழந்தைகளாம் அவர்களுக்கு!!!!!!! நாற்பது வயதுக்கு மேல் கடைசிக் குழந்தை. இன்னும் காதல் தீரவில்லை என்றான் நண்பன். ஜமாய்டா என்று சொல்லித் திரும்பினேன்.

    ReplyDelete
  12. @ புலவர் சா இராமாநுசம் said...

    -நீஙகள ரசித்ததற்கும் வருகைக்கும் நன்றி புலவரையா... அவசியம் உங்கள் தளத்தில் வந்து உறுதி செய்கிறேன்.

    ReplyDelete
  13. @ Lakshmi said...

    -‌தீராத சந்தேகங்களைத்தானே கேள்வியாக்கினேன் லக்ஷ்மிம்மா... பல்பு வாங்கின விஷயம் உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  14. @ வேடந்தாங்கல் - கருன் *! said...

    -ஆமாங்க.. மனசுக்கு கூடவே யதார்த்தமும் புரியுதே... அதனால புகை மட்டும்தான் வந்தது நண்பா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  15. @ மதுமதி said...

    -நிச்சயம் செய்கிறேன் கவிஞரே... என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  16. @ thirumathi bs sridhar said...

    -தொடரும் போட்டு வெயிட் பண்ண வெக்க வேணாமேன்னுதான் இப்பவே முடிச்சுட்டேன். நீங்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  17. @ அப்பாதுரை said...

    -முதல்ல என் ஸ்டைல் நல்லாயிருக்குன்னு சொன்னதுக்கு என் இதய நன்றி! உஙகளைப் போல எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். (பல பட்டங்களில் நான் அவரை அழைத்து எழுதியதிலேயே புரிந்திருப்பீர்கள்.) உங்கள் நண்பனின் சேட் பெண்ணைக் காதலித்த கதை அருமை. (சேட் பெண்கள் கல்யாணத்திற்குப் பின் இரண்டு மடங்கு பெருத்துவிடுவார்கள் என்பதை பார்த்திருக்கிறேன். தப்பிச்சோம்டான்னு தான் நினைச்சிருக்கேன் பின்னால) இப்படி விரிவான பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்திய உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள் சார்!

    ReplyDelete
  18. சூப்பர் அனுபவம்தான். விதி சில நொடிகள் தாமதத்தில் காப்பாற்றி விட்டது போலும். கொலை வெறிக் கேள்விகளில் கடைசி ரெண்டும் சூப்பர்!
    அதே எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நாகேஷின் காமெடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் அவர் பேசுவது போல பேசுவது ரொம்பக் கஷ்டம்!

    ReplyDelete
  19. Pudhumai+Nagaichuvai. Unga formula super Ganesh Sir!
    TM 8.

    ReplyDelete
  20. @ ஸ்ரீராம். said...

    -ஆமாம் ஸ்ரீராம் சார். மேனேஜரை டேமேஜர் என்றும், மலையப்பனை கொலையப்பன் என்றும் குருடன் என்பதற்கு முரடன் என்றும் வார்த்தை மாற்றிப் பேசும் காமெடியில் நாகேஷ் கலக்கியிருப்பார். தங்கவேலு அவரை ‘சொல்லழகா’ என்று கலாய்ப்பார். மறக்க முடியாதவை அவை. எனக்கு நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  21. @ துரைடேனியல் said...

    - கொஞ்சம் கலகலப்பாக கொண்டு செல்ல நினைத்தேன். இந்த ஃபார்முலா உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி துரை. மிக்க நன்றி.

    ReplyDelete
  22. பல்புகள் ஓய்வதில்லை!

    மின்னல் பல்புகள்1

    ReplyDelete
  23. ஐயோ.....
    அப்புறம்...
    போனீங்களா??????
    என்னா ஆச்சு??????/

    இளமையில் பொத்தாம் பொதுவாக எல்லோரும் நடந்திருக்கும்
    இப்படிப்பட்ட ஒரு சம்பவம். நீங்க சொல்லும் விதம் அழகு நண்பரே.
    அதுவும் சிட்டுன்னு நீங்க சொன்னதும் அப்படியே மனசெல்லாம்
    சிறகடிச்சி பறக்குது நண்பரே..

    சின்னாளம்பட்டி சீமையிலே
    சிரித்திருந்த சின்னபுள்ளே
    சிரிச்சி சிரிச்சி என்னை
    சிதறடிச்சி போட்டுட்டியே !!

    அப்படின்னு நான் கல்லூரி காலத்தில் எழுதியது
    ஞாபகம் வந்துருச்சி நண்பரே...

    ReplyDelete
  24. முல்லைப்பெரியாறு பிரச்னையை பற்றி
    சட்டப் பேரவையில் அருமையான தீர்மானம்
    கொண்டு வந்தது முதல் மகிழ்ச்சி.
    நீங்கள் கூறியது போல அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து
    நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்...
    கொள்கைகளில் வேற்றுமை (என்ன கொள்கையோ?????)
    இருந்தாலும்.. இந்து போன்ற விஷயங்களில் ஒற்றுமையுடன்
    இருக்க வேண்டும்.

    ReplyDelete
  25. சிறிய எழுத்துப்பிழை "இது" என்பதற்கு பதிலாக "இந்து" என்று
    பதிவாகிவிட்டது முந்தைய கருத்தில்..

    ReplyDelete
  26. ஹா ஹா ஹா ஹா
    நல்லவேளை டின் கட்டாம விட்டங்க..
    பல்புகள் என்றும் தீர்வதில்லை என்பது
    மிகச் சரி நண்பரே.

    ReplyDelete
  27. @ இராஜராஜேஸ்வரி said...

    -ஹா... ஹா... அருமையான கமெண்ட்! உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  28. @ Riyas said...

    -உங்கள் வருகைக்கும் ரசிச்சதுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  29. @ மகேந்திரன் said...

    -அவள் சிட்டுப் போல மெலிதாக அழகாக இருந்தாள் நண்பா. அதுசரி... கல்லூரி நாட்களிலேயே உங்கள் கவிதை கலக்கல் துவங்கி விட்டதா?

    -முல்லைப் பெரியாறுல நீங்க சொன்ன விஷயத்தை கவனிச்சேன். இது ஆறுதல் பரிசு மாதிரின்னு எடுத்து்க்கலாம். ஆனாலும் இந்த விஷயத்துல நம்ம தலைவர்களுக்கு ரோஷம் பத்தலைன்றதுதான் நிஜம்!

    -ஆம்! எல்லோரது வாழ்விலும் பல்பு வாங்கிய அனுபவங்கள் இருக்கும். முடிவற்ற விஷயம் அது!

    -படித்து ரசித்ததுடன் ஒவ்வொரு அம்சத்தி்ற்கும் கருத்துக் கூறி என்னை உற்சாகப்படுத்திய நண்பா... உமக்கு என் இதயபூர்வமான நன்றி!

    ReplyDelete
  30. அருமை.
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. @ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    -உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சார்!

    ReplyDelete
  32. ஒரு தொடர்கதையை தொடரும்ன்னு போட்டு அதே பதிவிலயே முற்றும் சொன்ன முதல் ஆள் நீங்களாத்தான் இருப்பீங்க.அந்தக் காலத்திலயே நிறைய பல்ப் வாங்கியிருக்கீங்கபோல.டின் கட்டியிருந்தா இன்னும் சத்தமா சிரிச்சிருக்கலாம் !

    உங்க கேள்விகள் உண்மையிலேயே தீர்க்கப்படணும்.ஆனா கஸ்டம் !

    ReplyDelete
  33. @ ஹேமா said...

    -ஒரே பதிவுலயே முடிஞ்ச மினி தொடர் இது. அடுத்து நெடுந்தொடரா ஒண்ணு எழுதிட்டாப் போச்சு. என்னது... என் முதுகுல டின் கட்டிருந்தா இன்னும் சிரிச்சிருப்பீங்களா... என்னா கொலவெறி! உங்களின் வருகைக்கும், ரசனைக்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  34. ஆஹா ..முதல் பருவக் காதல் மிக மிக அருமை
    அதை சொல்லிச் சென்ற விதம் அதிக
    எதிர்பார்ப்பைத் தூண்டிப் போனது
    நிச்சயம் அந்த விடலைப் பருவத்தில்
    எல்லோரும் இப்படி ஒரு பல்பு வாங்கித்தான் இருப்போம்
    பலபுகள் ஓய்வதில்லை என்பது மிகச் சரியே
    முல்லைப் பெரியார் விசயத்திலும் பாங்க் விஷயத்திலும்
    நீங்கள் சொல்லுகிற விஷயம் மிகச் சரியானதே
    அருமையான பலசுவைப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. @ Ramani said...

    -நான் சொல்லிய விதத்தை ரசித்ததாக நீங்க சொன்னதுல மிக்க மகிழ்ச்சி சார். இதுபோல பல்சுவைப் பதிவுகள் சுவாரஸ்யமாக அதிகம் தர முயல்கிறேன். நன்றி.

    ReplyDelete
  36. இரண்டு சாத்தியங்கள் இருந்தன-1.டின் கட்டியிருக் கலாம் 2.கட்டி வைத்திருக்கலாம்(கல்யாணம்)!

    ReplyDelete
  37. @ சென்னை பித்தன் said...

    நீங்க சொன்ன ரெண்டாவது சாத்தியம் நடந்திருந்தா என் லைஃபே மாறியிருக்கும். ஒரு வழியா தைரியம் வந்து பேசி பேர் கேட்டு பழகி லவ் சொல்லப்போற நேரத்துலதான் அவளுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சது. என்ன செய்ய.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

    ReplyDelete
  38. ஆகா ..
    என்ன எழுதினாலும் ரசிக்கும்படி எழுதுகிறீர்கள். அருமை.

    ReplyDelete
  39. @ சிவகுமாரன் said...

    -ஆகா என்கிற உங்கள் துவக்கமே நீங்கள் ரசித்ததைச் சொல்லிவிட்டது. உங்கள் ரசிப்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன் ஸார்..!

    ReplyDelete
  40. ஒரு(தலை) காதல் கதை என்று தெரிந்தாலும் முடிவை யூகிக்க இயலவில்லை. சஸ்பென்ஸை நன்றாக நகர்த்தி கொண்டுசென்றதற்கு நன்றி.

    //பாங்க்கில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணப் போனால் ஐ.டி. ப்ரூப், ரெஸிடென்ஸ் ப்ரூப் அது இதுவென்று ஆயிரம் விஷயங்களைக் கேட்கிறார்கள்....... அவர்கள் இதையெல்லாம் கேட்பது ஏன்?//
    வேறொன்றுமில்லை.இப்போதெல்லாம் தீவிரவாதிகள் கூட வங்கியில் கணக்கு ஆரம்பித்து, வங்கிகள் வழியாக பணப்பரிமாற்றம் மூலம் நாசவேலையில் ஈடுபடுவதால், உண்மையில் கணக்கு ஆரம்பிப்பவர்கள் யார் எனத் தெரிந்து கொள்ளத்தான்.

    ReplyDelete
  41. @ வே.நடனசபாபதி said...

    -காதல் கதை உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல மிக்க மகிழ்ச்சி! சந்தேகங்களில் ஒன்றைத் தீர்த்து வைத்ததற்கும் கருத்திட்டமைக்கும் என் இதயம் கனிந்த நன்றி சார்!

    ReplyDelete
  42. ஹா ஹா உங்க காதல் கதையில் இப்படியொரு திருப்பத்தை எதிர்பார்க்கலை. செம பல்ப்தான் அண்ணா

    ReplyDelete
  43. @ ராஜி said...

    -நானும் எதிர்பாராம கிடைச்ச பல்பில்லையா அது... அதனால மறக்க முடியாதது தங்கச்சி...

    ReplyDelete
  44. அட்ட்டா லேட்டா பாக்றேனே இருங்க வாசிச்ச்ட்டுவரேன் கணேஷ்

    ReplyDelete
  45. @ ஷைலஜா said...

    -நீங்க எப்ப வந்தாலும் உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களுக்கு தம்பி ஆவலோட காத்திருப்பேன்க்கா...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube