Tuesday, June 5, 2012

நடை வண்டிகள் - 19

Posted by பால கணேஷ் Tuesday, June 05, 2012

இந்திரா செளந்தர்ராஜனும், நானும் - 2

ராஜேஷ்குமாரிடம் இந்திராஜியைப் பற்றிக் கேட்பதை நிறுத்திவிட்ட பின் பல மாதங்கள் கழித்து என்று சொல்லியிருந்தேன் இல்லையா... பல மாதங்கள் அல்ல, ஒன்றரை வருடங்கள் கழித்துத்தான் சந்‌தித்தேன். அந்த இடைக்காலத்தில் நான் திருநெல்வேலிக்கு மாற்றலாகிச் சென்று விட்டிருந்தேன். சுபாவின் சிறுகதைகளை டைப் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.

 முடித்தவற்றைக் கொடுத்து, அடுத்த செட் பெறுவதற்காக அவ்வப்போது சென்னை விஸிட் அடிக்க வேண்டியிருந்தது என்று ‘சுபாவும் நானும்’ பகுதியில் குறிப்பிட்டிருந்தேனல்லவா... அப்படி ஒரு முறை சென்னை செல்வதற்கு முதல்நாள் ரா.கு.வுடன் போனில் உரையாடி‌ய போது, சனி, ஞாயிறு சென்னையில் இருப்பேன் என்று சொன்னேன்.

‘‘நானும் சனி, ஞாயிறு சென்னைலதான் இருப்பேன் கணேஷ்.’’ என்றார் ராஜேஷ்குமார். தொடர்ந்து, ‘‘எழுத்தாளர் தேவிபாலா தொலைக்காட்சித் தொடர்ல 1000 எபிஸோட் எழுதிட்டதைப் பாராட்டி சனிக்கிழமை சாயங்காலம் காமராஜர் அரங்கத்துல ஃபங்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. சனிக்கிழமை சென்னைல இருப்பீங்கன்னா, விழாவுக்கு வாங்களேன். என் கெஸ்டா முன்னால உக்காந்து பாககலாம்’’ என்று அழைப்பு விடுத்தார். மிகுந்த மன மகிழ்வுடன் நான் அவசியம் வருவதாக அவரிடம் கூறினேன்.

சனிக்கிழமை சென்னை வந்ததும் சுபாவைச் சந்தித்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்ற பின், மாலை விழாவுக்குச் செல்வதைப் பற்றிக் குறிப்பிட்ட போது, அவர்களும் வருவதாகவும், பி.கே.பி. ஸாரும் வருவார் என்றும் சொன்னார்கள். 

கரூரிலிருந்து என் நண்பன் ஸ்ரீதரன் அப்போதுதான் சந்தையி்ல் பிரபலமாகியிருந்த, ஃபிலிம் போடாமல் ஃபைல்களாக சேமிக்கும் டிஜிட்டல் காமிரா என்ற வஸ்துவை எடுத்து வந்திருந்தான். நாங்கள் இருவருமாக மாலை விழாவுக்குச் சென்றோம். விழா துவங்குவதற்கு முன்பு வந்திருந்த பல வி.ஐ.பிக்களை சுட்டுத் தள்ளினேன் -காமெராவால். எஸ்.வி.சேகருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வந்தால் ரா.கு. வந்திருந்தார். அவருடன் வந்திருந்த ரவி தமிழ்வாணன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் தேவிபாலா வசனம் எழுதி‌ய சில எபிஸோடுகள் திரையிடப்பட்டு, அதில் நடித்த நடிகர்கள், புரொட்யூஸர்கள் மற்றும் அனைத்து எழுத்தாளர்களும் பாராட்டிப் பேசினார்கள். (விழா நிகழ்வை நான் எழுதப் போவதில்லை. பயப்படாதீர்கள்...) அந்த விழாவில் இந்திரா செளந்தர்ராஜன் வந்திருப்பதைப் பார்த்தேன். இந்த ஒன்றரை வருட காலத்தில் விகடனில் தொடர்கதை எழுதி பெயர் தெரிந்த எழுத்தாளராகியிருந்தார் இ.செள.ராஜன்.

நேராக ராஜேஷ்குமாரிடம் சென்று, ரவி தமிழ்வாணனிடம் பேசிக் கொண்டிருந்த அவர் தோளைக் கொத்தினேன். இந்திராஜியிடம் என்னை அறிமுகம் செய்து வைக்கும்படி ‌கேட்டேன். உடன் எழுந்து வந்து இந்திராஜியிடம், ‘‘இவர் உங்க தீவிர வாசகர். என் நண்பர். பேர் கணேஷ். தினமலர்ல வேலை பார்க்கறார். உங்களை அறிமுகம் செய்து வைக்கச் சொல்லி வருஷக்கணக்கா என்கிட்ட கேட்டுட்டிருக்கார்...’’ என்று அறிமுகப்படுத்திவிட்டு மீண்டும் அவர் இருக்கைக்குச் சென்று விட்டார்.

இந்திரா செளந்தர்ராஜன், ‘‘வாங்க, உக்காருங்க... என் கதைகள் படிச்சிருக்கீங்களா?’’ என்று கேட்டார். அவருடைய கம்பீரமான, அழுத்தமான குரல். அதனால் எனக்குத் தெளிவாகக் கேட்டது அவர் பேசியது. என் குரல் அப்படியல்லவே... நான் சொன்ன பதில் அவருக்கு சரியாகக் கேட்கவில்லை. சற்று உரக்க, ‘‘சார், உங்ககிட்ட விரிவாப் பேசணும். இது சமயமில்ல. நாளைக்கு பூரா சென்னைலதான் இருப்பேன். எப்ப ஃப்ரீயா இருப்பீங்கன்னு சொன்னா வந்து சந்திக்கறேன்’’ என்றேன். லஸ் கார்னரில் ஒரு ஹோட்டலின் பெயரும் அறை எண்ணும் குறிப்பிட்டு, அங்கே மறுநாள் மாலை ஐந்து மணிக்கு வரச் சொன்னார். விழா நிகழ்வுகள் முடிய இரவாகி விட்டதால், ரா.கு.விடம் சொல்லிவிட்டு நாங்கள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று விட்டோம்.

றுதினம் சரியாக மாலை ஐந்து மணிக்கு நானும் ஸ்ரீதரனும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக் கதவைத் தட்டினோம். நான் முன்பே சொன்னது போல அவருடைய முதல் நாவலைக் குறிப்பிட்டு, அதில் செக்ஸ் அதிகம் எழுதியிருந்ததற்கு என் கோபத்தை வெளியிட்டேன். கதைக் கரு அப்படி அமைந்து விட்டதால் வேறு வழியில்லை என்றும், இனி அப்படி அவர் எழுத்தில் வராது என்றும் தெரிவித்தார். (இன்றுவரை அவர் எழுத்தில் ஒரு துளியளவும் ஆபாசம் இருக்காது.)

அவர் எழுதிய இரண்டாவது நாவலான ‘பதுங்கும் நாகங்கள்’ நாவலைப் பாராட்டி விட்டு, அதில் ஓவியர் ஜெ. போட்டிருந்த நிர்வாணப் படம் எனக்குப் பிடிக்கவில்லை என்றும், அப்படி வருவது இந்திராஜியின் பெயரையும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டேன். இந்த இடத்தில் ‘தாழம்பூ நாகங்கள்’ நாவலின் கதையைப் பற்றிச் சொன்னால் வியப்பீர்கள். ஒரு நடிகை பாத்ரூமில் குளிப்பதை யாரோ வீடியோ படம் எடுத்து வெளியிட்டு விட, அதை யார் என்று இன்ஸ்பெக்டர் ருத்ரா துப்பறிந்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதுதான் கதை. (பல வருடங்களுக்குப் பின்னால் யாரோ ஒரு நடிகையின் குளியல் காட்சிகள் இணையத்தில் பரபரப்பாக உலாவியது; முன்பே அதை கற்பனையில் எழுதியிருந்தார் இந்திராஜி).

அதன் பிறகு, அதுவரை வெளியாகியிருந்த அவர் நாவல்களைப் பற்றி நான் விமர்சித்ததையும், அவர் பதிலளித்ததையும் விரிவாகச் சொன்னால் உங்களுக்குப் போர் அடிக்கும், வேறு தளத்திற்குத் தாவி விடுவீர்கள். எனவே... அப்போது அவர் எழுதிக் கொண்டிருந்த கான்ஸெப்ட் பற்றியும், இனி எழுதப் போகும் விஷயங்கள் பற்றியும் பேசினோம். அந்த முதல் சந்திப்பில் படைப்புலகம் தவிர்த்து வெளி விஷயங்கள் எதுவும் பேசவில்லை. கொஞ்சம் பேச்சில் கலந்து கொண்டும், நிறைய கவனித்துக் கொண்டும் இருந்தான் என் நண்பன் ஸ்ரீதரன். அதுவும் நல்லதாகப் போயிற்று..! பேச்சில் மூழ்கிவிட்ட எனக்கு, மணி எட்டைத் தாண்டி விட்டதை அவன் நினைவுபடுத்தினான்.

ஒன்பதரைக்கு எங்களுக்கு பஸ்! சாப்பிட்டு வி்ட்டு பஸ் பிடிக்க நேரமாகிவிடும் என்பதால் இந்திராஜியிடம், ‘‘உங்களை மாதிரி ஆள்கிட்ட எவ்வளவு நேரம் வேணாலும் பேசலாம் ஸார். ஆனா எனக்கு பஸ் பிடிக்க நேரமாயிடுச்சு. புறப்படறேன்’’ என்று விடைபெற்றேன். ஒரு பேப்பர் எடுத்து, நான் எங்கே வேலை செய்கிறேன், முகவரி எல்லாம் கேட்டு குறித்துக் கொண்டார். அவரின் முகவரியை எழுதிக் கொடுத்தார். ‘‘அட, பைக்காராலதான் இருக்கீங்களா? எங்க சித்தப்பா வீடு டி.வி.எஸ்.நகர்ல இருக்கு அடிக்கடி வருவேனே...’’ என்றேன். ‘‘டி.வி.எஸ். நகரா... ரயில்வே லைனை ஒட்டி நடந்தா, எங்க வீட்டுக்கு நடந்தே வந்துடலாமே... அடிக்கடி வாங்க...’’ என்றார்.

டுத்த முறை மதுரை சென்றால் அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு திருநெல்வேலிக்குப் ‌போய்ச் சேர்ந்தேன். என் வழக்கமான பணிகள் என்னை ஆட்கொண்டன. ஆனால் அடுத்த மாத‌மே இந்திராஜி எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தார். அதனால் உடனே மதுரைக்கு அவரைப் பார்க்க ஓடினேன். அது என்ன இன்ப அதிர்ச்சி என்பதை...

-தொடர்கிறேன்...!
கத்தரித்தவை-2 படித்துச் சிரிக்க - மே.மை

43 comments:

 1. இந்திரா சௌந்தரராஜன் கேள்விப்பட்டது கூட இல்லை கணேஷ்.. என்ன புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.. ?

  ReplyDelete
  Replies
  1. அப்பா ஸார்... நிஜமாச் சொல்றீங்களா, இல்ல... கேலி பண்றீங்களான்னு எனக்குப் புரியலை. ஆன்மீகம் கலந்த மர்ம நாவல்கள் எழுதறதுல இவர் ஸ்பெஷலிஸ்ட். தமிழில் பெயர் பெற்ற எழுத்தாளர் மட்டுமில்லாது, பல வெற்றிகரமான டி.வி. தொடர்களுக்கு (ரகசியம், விடாது கருப்பு, மர்மதேசம், ருத்ரவீணை) கதை வசனகர்த்தா. தொடத்தொடத் தங்கம், சிவம், எங்கே என் கண்ணன், சிவமயம், ருத்ர வீணை, ரங்கநதி.... இன்னும் ஏராளமான நூல்கள் எழுதியிருக்கார்.

   Delete
 2. கோவை நீங்க வந்தா நான் இராஜேஸ்குமாரை சந்திக்க முடியுமா? ஹிஹி!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமா முடியும் சுரேஷ்- அவர் ஊர்ல இருந்தா. வருகை தந்து கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 3. //விழா நிகழ்வை நான் எழுதப் போவதில்லை. பயப்படாதீர்கள்...//

  நிச்சயம் நாங்கள் பயப்பட மாட்டோம்.எங்களுக்குத்தெரியும் நீங்கள் அதை நேர்முக வருணனை போல் தருவீர்கள் என்று!

  உங்களுக்கு எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்ன என்று அறிய ஆவலோடு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்... அதிகம் காக்க வைக்காமல் விரைவில் சொல்லி விடுகிறேன் நண்பரே. தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 4. உங்கள் நியாபகத் திறமை உண்மையில்லேயே அபாரம தான் வாத்தியாரே. எத்தனை நாவல்கள் படித்திருப்பீர்கள், இருந்து அதன் பெயர்கள் மொதக்கொண்டு மறக்காமல் குறிப்பிடும் உங்கள் நினைவாற்றல் கண்டு வியக்கிறேன்.

  சுவாரசியமாகக் கொண்டு சென்று சுவாரசியத்தை உடைக்காமல் சுவாரசியமாக அடுத்த பதிவிற்கு இழுத்துச் செல்வதில் தான் உங்கள் சுவாரசியம் இருக்கிறது என்று நான் நினைக்கிறன். நீங்கள் என்ன நினைகிறீங்க.

  சென்னை டூ சென்னை படித்துப் பாருங்களேன்

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய சுவாரஸ்ய ரகசியத்தைக் கண்டறிந்து சொல்லியதற்கும், நினைவாற்றலைப் பாராட்டியதற்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 5. Good Writing sir. I love also RK,PKP,Suba Novels. I ll come here again. Thanks for your sharing.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் பொன்மலர்! உங்கள் உதவியால்தான் என் தளம் டாட் காம் ஆக ரீடைரக்ட் ஆகிறது. உங்களுக்கு என் நண்பர்களின் எழுத்துக்கள் எல்லாம் பிடிக்கும் என்பதில் மிக்க மகிழ்‌ச்சி எனக்கு. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 6. அவரின் புத்தகங்கள் கிடைத்தால் நிச்சயமாக படிப்பேன்
  அங்கிள்...

  ம்ம் தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. படித்துப் பார்த்தால் பிடித்துப் போகும் அவரது எழுத்து எஸ்தர். உனக்கு என் இதய நன்றி!

   Delete
 7. உண்மையைச் சொல்லுங்கள் கணேஷ் நீங்கள் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளராகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் இப்போது கணேஷ் என்ற புனை பெயரில் வலைத்தளத்தில் எழுதிவருவது உண்மைதானே. பதிலை இங்கு சொல்ல வேண்டாம் எனது மெயிலில் சொன்னால் போதும் நான் ரகசியமாக வைத்து கொள்வேன்

  ReplyDelete
  Replies
  1. அடடே... அவ்வளவு மதிக்கிறீர்களா என்னை? நான் பிரபலங்களுடன் பழகிவரும் ஒரு சாதாரணன் என்பதை மீண்டும் ‌சொல்லிக் கொள்கிறேன். மிக்க நன்றி நண்பா!

   Delete
 8. ஒருவரிடம் பழகும் போது அவர்களிடம் உள்ள நிறை , குறைகளை தைரியமாக சுட்டிக்காட்டும் துணிவு தங்களிடம் கண்டு வியந்தேன் . எனக்கும் அவர்கள் உண்மைகள் கருத்தில் உடன்பாடு உள்ளது .

  ReplyDelete
  Replies
  1. தென்றல்! நிறை குறைய‌ை தயங்காமல் எடுத்துச் ‌சொல்பவன்தானே நண்பனாக முடியும்? அதனால்தான் நல்ல நட்பாக இருக்க என்‌னால் முடிகிறது. நீங்களும் அவர்கள் உண்மைகளோட சேர்ந்துட்டீங்களா? உங்க நண்பன் சாதாரண ஆசாமிதான்மா!

   Delete
 9. இந்திரா சௌந்திரராஜன் எழுதிய ரகசியமாய் ஒரு ரகசியம் தொடர்கதை படித்து பிரமித்து இருக்கிறேன்......... நினைத்துப்பார்த்தால் இப்போதும் அந்த உணர்வு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. ரகசியமாய் ஒரு ரகசியம், ஐந்து வழி மூன்று வாசல் இரண்டு தொடர்களும்தான் அவருக்கு நிறைய வாசகர்களை உருவாக்கித் தந்தன. நீங்களும் அதைப் படிச்சு ரசிச்சிருக்கீங்கன்றதுல மகிழ்ச்சிண்ணே! மகிழ்வூட்டும் உங்கள் வருகைக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 10. தாழம்பூ நாகம்! இந்தப் பெயர் எனக்கு ஒரு பழைய நாவல் தலைப்பை நினைவு படுத்துகிறது. அது 'தாழம்பூ பங்களா'...!
  ஒரு வேளை இவர் எழுதியதைப் பார்த்து ஐடியா வந்துதான் 'அந்த' குளியலறைக் காட்சிகள் படம் பிடிக்கப் பட்டனவோ...! :))

  ReplyDelete
  Replies
  1. ‘தாழம்பூ பங்களா’ எழுத்தாளர் பி.வி.ஆர். சரஸ்வதி ராமகிருஷ்ணன்ங்கற (புனை)பெயர்ல குமுதத்துல எழுதின அருமையான த்ரில்லராச்சே! நீங்களும் ரசிச்சுப் படிச்‌சதுண்டா ஸ்ரீராம். சந்தோஷம்! என்னது... இவர் எழுதினதப் பாத்துட்டு படம் பிடிச்‌சாங்களா? நீங்களே ஒரு அப்பாவி எழுததாளரை மாட்டி விட்ருவீங்க போலருக்கே..!

   Delete
 11. காத்திருக்கிறேன்... இன்ப அதிர்ச்சியை தெரிந்துகொள்ள...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அன்பு! பாத்து நாளாச்சு... நலம்தானே! என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 12. இந்திரா சௌந்திரராஜன் அவர்களின்
  தங்கக்காடு, ஜென்மஜென்மமாய் போன்ற
  நாவல்கள் படித்திருக்கிறேன் நண்பரே..
  அற்புதமான எழுத்தாளர்..
  நடைவண்டிப் பயணம் விரைவு பெற்றுக்
  கொண்டிருக்கிறது..
  நானும் அதன் வேகத்துடன் பயணிக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... இந்திராஜியின் நாவல்கள் படித்து ரசித்திருக்கிறீர்களா? நல்லது நண்பரே... நடை வண்டிப் பயணத்தில் என்னுடன் வரும் உங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!

   Delete
 13. அனுபவங்களோடு நடைவண்டி .... ஃப்ரெண்ட் நீங்க அதிஷ்டசாலிதான்.சந்தோஷமாயிருக்கு.என் வாசிப்பு அனுபவம் மிக மிகக் குறைவு !

  ReplyDelete
  Replies
  1. வாசிப்பு அனுபவம் குறைவாயிருந்தால் என்ன... அழகுத் தமிழும் கவிதைகளும் உங்களை அண்ணாந்து பாக்க வெக்கற சொத்தச்சுதே... நடை வண்டியில கூடவே வர்ற உங்களுக்கு அன்போடுகூடிய என் நன்றி ஃப்ரெண்ட்!

   Delete
 14. //உடனே மதுரைக்கு அவரைப் பார்க்க ஓடினேன். அது என்ன இன்ப அதிர்ச்சி என்பதை...//

  ம்ம்..சீக்கிரம் சீக்கிரம்..:)

  ReplyDelete
  Replies
  1. சரிம்மா தங்கச்சி... அதிகம் காக்க வெக்காம, சனியன்று அடுத்த பகுதியை வெளியிட்டுடறேன். (இடைல ஒரு க்ரைம் சிறுகதை வருது). மகிழ்வுடன் கூடிய என் நன்றி!

   Delete
 15. அந்த இன்ப அதிர்ச்சி என்னவென்று அறிய ஆவல். டிஜிட்டல் காமராவை ஒரு விநோத வஸ்து ரேஞ்சில் அறிமுகப்படுத்தியதை மிகவும் ரசித்தேன். எத்தனை பேருடன் பழகினாலும் ஒவ்வொரு நிகழ்வையும் அழகாய் படம்பிடித்தபடி நேரம் முதற்கொண்டு சிலாகித்து எழுதும் உங்கள் திறனை மனம் நிறைந்து பாராட்டுகிறேன் கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. ஃபிலிம் போட வேண்டாம், ஃபைலா ‌ஸேவ் ஆயிடும்கற விஷயம் அப்ப எனக்கு புதுசாவும், அது புது வஸ்துவாவும்தான் தெரிஞ்சது. என்னைப் பாராட்டிய தோழிக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 16. எத்தகைய இலக்கிய நட்புகள் உங்களுக்கு!இன்ப அதிர்ச்சி என்ன என அறியக்காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. காத்திருக்கும் நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 17. எத்தனை எத்தனை அனுபவங்கள் உங்களுக்கு....

  இன்ப அதிர்ச்சியை அறிந்துகொள்ள காத்திருக்கிறேன் நானும்....

  ReplyDelete
  Replies
  1. நடை வண்டிப் பயணத்தில் என்னைத் தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!

   Delete
 18. அடுத்த அதிர்ச்சி என்ன என அறியும் ஆவல். ஒரு வேளை தனக்கு அசிஸ்டென்ட்டாக இருக்கக் கேட்டாரோ!. நீங்கள் ஒரு பிரபலம் என்றும் கணேஷ் பெயரில் எழுதுவதாக ஒரு புரளியைக் கிளப்பினாரே! உண்மையோ!...காத்திருப்போம்...
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. நல்லது... நீங்கள் புரளி என்று சரியாகச் சொன்னீர்கள். ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 19. வழக்கம் போலத்தான்! தொடர் அருமை!
  தொடர்வேன் என்பதைச் சொல்லவும்
  வோண்டுமோ?

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து நீங்கள் எனக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு நான் அவசிய்ம் மகிழ்வுடன் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

   Delete
 20. Mr. Ganesh, I am back now after 10 days tour of Tamil Nadu. Let me go through the older posts which I have missed and then I will offer my comments.

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாடு டூரா... முன்பே தெரிவித்திருந்தால் உங்களைச் சந்தித்து மகிழ்ந்திருப்பேனே... என் எழுத்தை மதித்து எனக்கு உற்சாகப்படுத்தும் உங்களைப் பாக்கற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டனே... பதிவுகளைப் படித்துவிட்டு வாருங்கள். காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

   Delete
  2. I was having tight schedule while in Tamil Nadu. Next time, I will keep in mind to inform you well in advance while coming to Tamil Nadu.

   Delete
 21. இந்திரா செளந்தர்ராஜன் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்ன என்று அறிய ஆவலோடு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் சொல்லி விடுகிறேன். உங்களின் வருகையினாலும் கருத்தினாலும் அகமகிழ்ந்து என் நன்றியைத் உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

   Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube