Friday, June 29, 2012

நடை வண்டிகள் - 23

Posted by பால கணேஷ் Friday, June 29, 2012

கடுகு அவர்களும் நானும் - 1
கைச்சுவையாக நடிப்பதன் மூலம் சிரிப்பை வரவழைப்பதை விட பலமடங்கு கடினமானது நகைச்சுவையான எழுத்தின் மூலம் சிரிப்பை வரவழைப்பது. மனதை உருக்கி அழ வைக்கும்படி கதைகளை சற்று முயன்றால் எவரும் எழுதிவிட முடியும். நகைச்சுவையாக எழுதுவது அத்தனை சுலபமில்லை. (சிலபேர் நகைச்சுவையாக எழுதுகிறேன் பேர்வழி என்று எழுதியே நம்மை அழ வைத்து விடுகிறார்கள் என்பது வேறு விஷயம்). நகைச்சுவை எழுத்தில் ஒரு ஜித்தர் கடுகு என்கிற அகஸ்தியன் என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள்.

என்னுடைய பள்ளி நாட்களிலேயே அகஸ்தியனின் எழுத்து எனக்கு அறிமுகம் ஆனது. அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் எந்தப் பத்திரிகையும் வாங்குவது கிடையாது. விகடன், குமுதம், கல்கி போன்ற வார இதழ்கள் எதுவும் எனக்குத் தெரியாது. செய்தித்தாள்கள் மட்டுமே அறிந்திருந்தேன். என் அத்தையின் கணவர் தினமணி நாளிதழில் ‘நேரக்காப்பாளர்’ பணியில் இருந்தார். ஆகவே தினமணி வெளியிடும் தினமணி கதிர், சினிமா எக்ஸ்பிரஸ் ஆகிய புத்தகங்கள் Complimentary ஆக அவருக்கு வந்து விடும். அவற்றைப் படிபபதற்காகவே ஞாயிறு வந்தால் அத்தையின் வீட்டிற்கு ஓடுவேன்.

அப்போது தினமணி கதிர் இதழில் ‘பெரியசாமி ஒளிக்கதிர்’ என்கிற அவரின் சிறுகதை ஒன்று வெளியாகியிருந்ததைப் படித்தேன். பேராசிரியர் பெரியசாமி ஒரு லேசர் மிஷினைக் கண்டுபிடிப்பார். அந்த ஒளிக்கதிரைப் பாய்ச்சினால் ஒரு பொருளை டெம்பரரியாக மறைய வைக்கவும், மீண்டும் தோன்றச் செய்யவும் முடியும் என்பது அவர் கண்டுபிடிப்பு. அதை ஒரு காலேஜில் டெ‌மோ காட்டுவதற்காக ‌மேஜையில் இருக்கும் டீ கப்பின் மேல் லேசரைப் பாய்ச்சி அதை மறைய வைப்பார். பின் வேறொரு விசையை முடுக்கி லேசர் மூலம் அதை மீண்டும் வரவழைப்பார். இதே பரிசோதனையை ஒரு கல்லூரி மாணவன் மேல் அவர் பிரயோகிக்க, மாணவன் காணாமல் போய் விடுவான். ஆனால் மீண்டும் வரவழைக்காது மிஷின்.

பெரிய கலாட்டாவாகி, பெரியசாமியின் நண்பர் மயக்கமடைந்து மிஷினின் மேல் விழ, ஏதோ ஒரு பட்டன் முடுக்கப்பட்டு பையன் மீண்டும் வந்து விடுவான். அனைவரும் அந்த ஹாலை விட்டே ஓட, மிஷின் வெடித்து தன்னையே அழித்துக் கொண்டு விடும். இந்தக் கதையை வரிக்கு வரி நகைச்சுவை ததும்ப அவர் எழுதியிருந்தார். சத்தம் போட்டுச் சிரித்துப் படித்து மகிழ்ந்தேன். அதன்பின் வந்த வாரங்களில் பேராசிரியர் பெரியசாமியை வைத்து ‌தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார். (பேராசிரியர் பெரியசாமி கதைகள், சாமுவேல் சார் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்து ‘ரொட்டி ஒலி’ என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.)

அதன் பின்னர் நான் படித்த அகஸ்தியனின் எழுத்துக்களில் வந்த கமலாவும், தொச்சுவும், அங்கச்சியும் முழுமையாக என்னை ஆட்கொண்டு ரசித்துச் சிரிக்க வைத்தனர். கடுகு என்ற பெயரில் சின்னச் சின்ன துணுக்குச் செய்திகளும், சுவாரஸ்யமான கட்டுரைகளும் வெளியானதை படித்திருந்தேன் நான். அகஸ்தியன்தான் கடுகு என்பது மட்டும் அப்போது எனக்குத் தெரியாது. அப்போதைய தினமணி கதிரின் ஆசிரியர் சாவி ஸார் 128 பக்கங்களுக்கும் அதிகமாக கனமான மாத நாவல் ஒன்றும் தினமணியிலிருந்து வெளியிட்டு வந்தார். அந்த மாத இதழில் படித்த ‘மிண்ட்டா ரோடு’ மற்றும் ‘சொல்லடி சிவசக்தி’ ஆகிய அகஸ்தியனின் நாவல்கள் நினைவை விட்டு நீங்காகதவை.

மதுரையை விட்டுச் சென்றதும் இந்த படிப்புத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் கல்லூரி நாட்களில்தான் படிக்கும் பழக்கத்தை புதுப்பித்துக் ‌கொண்டேன். அச்சமயம் சாவி இதழிலும் மோனாவிலும் அகஸ்தியனை மீண்டும் படித்தேன். மோனா மாத இதழில் ‘கொல்லவல்லாயோ கிலியே’ என்ற தலைப்பில் ஒரு க்ரைம் கதை அவர் எழுதியிருந்தது என்னை விழி உயர்த்த வைத்தது. அவர் எழுதிய ‘அலைபாயுதே கண்ணா’ நாவல் என் ஆல்டைம் ஃபேவரைட்களில் ஒன்று.

பின்னாளில் வெளிவந்த பாரதிராஜா இயக்கிய ‘புதுமைப் பெண்’ படத்தின் கதை பல அம்சங்களில் இந்த நாவலை ஒத்திருந்தது. (நோ... நோ... பாரதிராஜா சுட்டு விட்டார் என்றெல்லாம் உடனே நினைத்துவிட வேண்டாம். கடுகு ஸாரே அப்படி நினைக்கவில்லை.) வியக்கத் தக்க பல ஒற்றுமைகள் இரண்டுக்கும் இருந்ததை ஒரு கடிதமாக பாரதிராஜாவுக்கு கடுகு ஸார் எழுத, அதற்கு அவர் தந்த பதிலையும் ‘பாரதிராஜாவும் நானும்’ என்ற தன் பதிவில் எழுதியிருக்கிறார் கடுகு அவர்கள்.

இப்படி என் பள்ளி நாட்களிலும், சற்றே இடைவெளிக்குப் பின் கல்லூரி நாட்களில் தொடங்கி இன்று வரை ரசித்துப் படிக்க வைக்கும் எழுத்துக்குச சொந்தக்காரரான கடுகு என்கிற அகஸ்தியனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று மட்டும் எனக்குத் தோன்றியதில்லை. காரணம்... அவர் கட்டுரைகளைப் படித்ததிலிருந்து டெல்லியில வசிக்கிறார் என்பதை புரிந்து கொண்டிருந்தேன். ‘சுபா’வுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு, சென்னைவாசியாக நான் ஆகிவிட்ட ஒரு காலச்சதுரத்தில் சுபா சொல்லித்தான் கடுகு ஸார் சென்னைவாசியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன என்கிற விஷயம் தெரிந்தது.

பிற்பாடு சுபாவின் மூலமாகவே கடுகு அவர்களுடனான என் முதல் சந்திப்பும் நிகழ்ந்தது. (ஒரு பள்ளி மாணவன் தென்னை மரத்தைப் பற்றிய கட்டுரைக்கு மனப்பாடம் செய்து கொண்டு போக, பரீட்சையில் பசுவைப் பற்றி கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்டிருக்க, இவன் படித்த தென்னை மரத்தைப் பற்றி விரிவாக எழுதி கடைசியில், ‘இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னை மரத்தில் பசுவைக் கட்டுவார்கள்’ என்று எழுதினான் என்ற துணுக்குச் செய்தி இந்தக் கட்டுரையைப் படிக்கையில் உங்கள் நினைவில் இடறினால் நான் பொறுப்பல்ல.) அந்த முதல் சந்திப்பில் துவங்கி...

                                                                          -தொடர்கிறேன்...

==================================================

                               சென்னையில் பதிவர் சந்திப்பு - ஆகஸ்டு-19 

லையுலகத் தோழமைகளுக்கு, வணக்கம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்தத் தேதியில் அரங்கம் கிடைக்காத காரணத்தால் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவர் சந்திப்பு மாற்றப்பட்டுள்ளது. 

கவிரயங்கம், கருத்தரங்கம், சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலம் என்பன உள்ளிட்ட பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. அவை பற்றிய விரிவான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமுள்ள நட்புகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். பட்டியல் தயாரிக்க வசதியாயிருக்கும்.

                                   நாள் : 19.08.2012 (ஞாயிற்றுக்கிழமை)  
                                 இடம் : மாணவர் மன்றம், சென்னை.

தங்களின் வருகையை 98941 24021(மதுமதி), 73058 36166(பா.கணேஷ்), 94445 12938(சென்னைப்பித்தன்), 90947 66822(புலவர்.சா.இராமநுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்.

==================================================

47 comments:

  1. // மனதை உருக்கி அழ வைக்கும்படி கதைகளை சற்று முயன்றால் எவரும் எழுதிவிட முடியும். நகைச்சுவையாக எழுதுவது அத்தனை சுலபமில்லை//நூற்றுக்கு நூறு உண்மை வாத்தியரே.

    கடுகு அவர்கள் எழுதி நான் படித்ததாக எனக்கு நினைவில் இல்லை . அவர் மிகப் பெரிய எழுத்தாளர் என்ற அளவில் மட்டுமே அறிந்துள்ளேன். இதைப் படித்ததும் நல்ல எழுத்தாளர் ஒருவரின் புத்தகங்களை தவற விட்டுள்ளேனோ என்று தோன்றுகிறது. வரும் நாட்களில் வாங்கி படிக்கிறேன்.

    கடுகாரை உங்கள் நடை பயணத்தில் சந்திக்க காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. படிக்க ஆரம்பித்தால் கடுகை விட மாட்டீர்கள் சீனு. நடைவண்டிப் பயணத்தில் தொடரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
    2. நீங்கள் சொல்வதுபோல் நகைச்சுவையாக எழுதுவது அத்தனை சுலபமில்லை. தமிழில் தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளார்களில் திரு கடுகு அவர்களும் ஒருவர். அவரது எழுத்துக்களை விரும்பி படித்தவன் நான். அவருடன் பழகி அவரது அன்பை எவ்வாறு ‘சின்ன கடுகு’ பெற்றார் என அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.

      Delete
  2. தொடருங்கள் சார் உங்கள் வாழ்க்கை பயணங்களை....

    ReplyDelete
    Replies
    1. தொடரும் உங்கள் ஆதரவிற்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  3. உங்கள் படிக்கும் ஆர்வமும் பிரபலங்களின் சந்திப்பும் சுவார்சயமாக உள்ளது. அடுத்த சந்திப்புக்கு காத;திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சுவாரசியம், காத்திருக்கிறேன் என்ற தென்றலுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  4. நகைச்சுவை நடிப்பும், நகைச்சுவை எழுத்தும் வரம். மற்றவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் செயலும் வரமே. தொடருங்கள் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து என்னைத் தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. VERY GOOD BEGINNING. JOKE AT THE END OF THE ARTICLE REMINDS ME OF ANOTHER SIMILAR JOKE - WHEN THE TEACHER ASKED STUDENTS TO WRITE AN ESSAY ON TRAIN JOURNEY - THE GREAT GREAT COMEDIAN RAMCHANDRAN WROTE LIKE THIS : GADA GADA GADA GADA .................FOR ALMOST THREE PAGES.
    very nice and enjoyed your article and look forward for the next issue eagerly.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  6. சுவாரஸ்யமான பகிர்வு.

    பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கண்டு மிக மகிழ்வு எனக்கு. மிக்க நன்றி.

      Delete
  7. கடுகு அவர்களை பற்றி தெரிந்து கொள்ள எப்பவுமே ஆவல் அதிகம். இடையிடையே அவரின் துணுக்குகள் இருந்தால் சொருகி விடுங்கள்.சிரிக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசனையாக இருக்கிறதே கவிஞரே... அப்பப்ப சொருகி விடறேன். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  8. அன்புள்ள கணேஷ் அவர்களுக்கு,
    என் அபிமான எழுத்தாளரைப் பற்றி படித்து மகிழ்ந்தேன்,
    பொன்னியில் செல்வன் ரேஞ்சுக்கு எழுதினாலும் தொடர்ந்து படிப்பேன்.
    -இப்படிக்கு
    கடுகு

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... எ(உ)ஙகள் அபிமான எழுத்தாளரைப் பற்றி என்னாலியன்றவரை எழுதுகிறேன். நன்றி ஸார்.

      Delete
    2. கடுகு சார்! எங்கள் ப்ளாக் பக்கம் எல்லாம் வரமாட்டீர்களா?

      Delete
  9. படிக்க படிக்க ஆவல் மேலோங்குகிறது சார் ! தொடருங்கள் ... நன்றி !

    ReplyDelete
    Replies
    1. மிகிழ்வு தந்த உங்கள் வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  10. தனது நகைச்சுவை சிந்தனை எழுத்துக்களால்
    வாசிப்பவர்களை கட்டிப் போடுபவர்களில்
    திரு.கடுகு அவர்கள் மிகவும் முக்கியமானவர்..
    நடைவண்டியில் அவருடன் பயணிப்பது
    மிகவும் சுவாரஸ்யமான அனுபவம் நண்பரே...

    நான் ஆகஸ்ட் பதினாறாம் தேதி திரும்ப இந்தியா வருவேன்..
    முடிந்தால் கலந்து கொள்வேன்...

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வரணும் மகேன். உங்களைப் பார்க்க மத்த எல்லாரையும் விட நான் அதிக ஆர்வத்தோட காத்திருக்கேன். நடைவண்டிப் பயணத்தை சுவாரஸ்யம் என்ற உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. படிக்க படிக்க சுவாரஸ்யம் கூடுகிறது நடைவண்டிக்கு. அடுத்த பாகத்திர்க்காக வெய்ட்டிங்.!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கும் தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? கணேஷ் பதிவில் சுவைபோகுமா? அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. அருமை என்று சொல்லி ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. ரொட்டி ஒலி - படித்து மிகவும் ரசித்த புத்தகம். கமலா டியர் கமலா - படித்து அதிரடி சிரிப்பு சிரித்ததை ஏற்கனவே என் பக்கத்தில் பதிந்திருக்கிறேன்.

    கடுகு அவர்களுடன் உங்கள் அனுபவங்களைப் படித்து சுவைக்கப்போகும் ஆர்வத்தில் இருக்கிறேன்.

    பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்ற உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி வெங்கட்.

      Delete
  15. அருமையாகத் துவங்கி மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    தென்னை மர பசு மாடு கதையயெல்லாம் ஞாபகம் வரவில்லை
    சுவாரஸ்யமான துவக்கம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அழகாகச் செல்கிறது என்ற வார்த்தையால் ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  16. எழுத்தாளர் கடுகு பற்றிய தொடர் துவக்கமே நகைச் சுவையோடு
    ஆரம்பம். அவரது புகைப் படத்தினையும் பதிவில் காட்டவும்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் காட்டுகிறேன் இளங்கோ ஸார். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  17. எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அவருடன் உங்களுக்கு உள்ள அனுபவங்கள் படிக்க புதுமையாகவும் நன்றாகவும் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. கடுகு எழுத்தை ரசிக்கும். அனுபவங்களைத் தொடரும். ந்ண்பருக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  18. உங்கள் நட்பு வட்டம் வியக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. என்னையும்தான். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  19. கடுகு சாரின் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்த நாட்களில் கல்கி அவர்கள் தான் இந்த புனைப்பெயரில் எழுதுகிராரோன்னு நினைச்சிருக்கேன் அப்புரம் போகப்போகத்தான் அவர் இவரில்லேன்னு புரிஞ்சுது.னல்ல நகைச்சுவை எழுத்து இவருக்கு கைவந்தகலை. நிறையவே படிச்சு ரசித்து சிரிச்சிருக்கேன். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி. சென்னை பதிவர் சந்திப்பு ஆகஸ்ட் 19 ஆஆஆ??????? நான் ஆகஸ்ட் 22 டு 27 சென்னையில் இருப்பேன், அதற்குள் பதிவர் சந்திப்பு நடந்து முடிஞ்சுடுமே (பேட் லக் ஜஸ்ட் மிஸ்ட்)

    ReplyDelete
    Replies
    1. பதிவர் சந்திப்பு முடிஞ்சுட்டா என்ன..? நீங்க பல பதிவர்ளைச் சந்திக்க நான் உதவறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
    2. ஆகஸ்ட் பத்தொன்பதாம் தேதி நானும் சென்னையில் இருப்பேன்.

      Delete
  20. கடுகு சாரின் எழுத்துக்கள் உங்கள் வலைத்தளம் அறிந்த பிறகுதான் கண்டேன்.அதிலிருந்து அவரது எழுத்துக்கள் உக்கு நான் தீவிர ரசிகையாவிட்டேன்.இப்பொழுது கடுகு சாருடன் நீங்களும் தலைப்பில் எழுதும் கட்டுரை ரொம்ப சுவாரஸ்யமாகி விட்டது.எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும் ,ஆகவே அண்ணாவுக்கு சிறு வேண்டுகோள் கடுகுசாரின் கூற்றுப்படி பொன்னியில் செல்வன் ரேஞ்சுக்கு எழுதினாலும் நாங்கள் சளைக்காமல் வாசிப்போம்.ஆகவே மற்ற கட்டுரைகளை விட இதன் பகுதிகள் அதிகம் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ம்.... என்னால் இயன்ற அளவுக்கு சுவாரஸ்யம் கெடாமல் அதிகமாகத் தருகிறேன் தங்கையே. உற்சாகம் தந்த உங்களின் கருத்துக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  21. நன்றி கணேஷ். யாரையானும் சந்திக்கணும்னு மனசில் ஒரு நினைப்பு இருக்கு. பாக்கலாம்.

    ReplyDelete
  22. வணக்கம் சார். சொந்த வேலை காரணமாக இணையம் பக்கமே வர முடியவில்லை. கொஞ்சம் லேட்டா வந்த வண்டியில் ஏறிக்கொள்கிறேன்.

    //நகைச்சுவையாக நடிப்பதன் மூலம் சிரிப்பை வரவழைப்பதை விட பலமடங்கு கடினமானது நகைச்சுவையான எழுத்தின் மூலம் சிரிப்பை வரவழைப்பது.

    கரெக்டா சொன்னீங்க....

    //சிலபேர் நகைச்சுவையாக எழுதுகிறேன் பேர்வழி என்று எழுதியே நம்மை அழ வைத்து விடுகிறார்கள் என்பது வேறு விஷயம்

    யாரு நானா? ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. நீங்க இல்ல பாலா... என் கருத்தை ஆமோதித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  23. தொடரட்டும் நடை வண்டிகள் அருமை அங்கிள்....
    .........................................

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube