Saturday, June 30, 2012

சரிதாவும், வால்களும்!

Posted by பால கணேஷ் Saturday, June 30, 2012

ஷாப்பிங் மாலில் சரிதாவும் நானும் தேவையானவற்றை எடுத்துக் கூடையில் போட்டபடி நகர்ந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிரே உற்பத்தியானான் அவன். ‘‘நீங்க... கணேஷ் தானே?’’ என்றான். தலையசைத்தேன்.

‘‘என்னைத் தெரியுதா?’’

‘‘நான் கண்ணாடி போட்டிருக்கறதால சரியாப் பாக்க முடியாதுன்னு நினைச்சுட்டிங்களா? ப்ளூ கலர் ஷர்ட் போட்டிருக்கீங்க. ப்ரவுன் கலர் பேண்ட் போட்டிருக்கீங்க. நல்லாவே தெரியுது உங்களை...’’

நோகாமல் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, அதில்லை நான் கேட்டது. என்னை யாருன்னு உனக்கு அடையாளம தெரியுதா?’’

‘‘எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கு... ஆனா சட்னு நினைவுக்கு வரலை. ஏதாவது க்ளூ கொடேன்...’’

‘‘தே ப்ரித்தோ ஸ்கூல்ல உன்னோட படிச்சவன் நான்...’’

கூர்ந்து கவனித்தேன். அலைபாயும் தலைமுடியும், கூரான நாசியும், துறுதுறு கண்களும்... ஆஹா! நினைவு வந்துவிட்டது. ‘‘டேய், நீயாடா? மறக்க முடியுமா உன்னை? ஸ்கூல் டேஸ்ல ரெண்டு பேரும் சேர்ந்து கொஞ்சநஞ்ச லூட்டியாடா அடிச்சிருக்கோம். ஆமா, உன் பேர் என்ன?’’ என்றேன்.

இம்முறை வலிக்கிற மாதிரியே தலையிலடித்துக் கொண்டான். ‘‘சிவநாத்டா! சிவான்னு கூபபிடுவியே...’’ என்றான். ‘‘ஸாரிடா சிவா. சில விஷயங்கள் மட்டும் மறந்து போகுது. நல்லாயிருக்கியா? எங்க இருக்‌க இப்ப?’’

‘‘மயிலாப்பூர்லடா...’’ என்றான்.

‘‘அடப்பாவி! நான் மாம்பலத்துல இருக்கேன்டா. ஒரே ஊர்ல பக்கத்துல இருந்தும் தெரியாமப் போய்டுச்சே. மயிலாப்பூர்ல நீ எங்க இருக்க?’’ என்று‌ கேட்டேன்.

‘‘நடுத்தெருவுலடா...’’

‘‘சின்ன வயசுலயே உங்கப்பா கொடுக்கற பாக்கெட் மணியையெல்லாம் செலவு பண்ணித் தீத்துடுவ. நீ ஒருநாள் நடுத்தெருவுலதான் நிப்பேன்னு அப்பவே எனக்குத் தெரியும்டா...’’

‘‘அடேய் பாதகா! நான் குடியிருக்கற வீடு இருக்கற தெருவுக்குப் பேர் நடுத்தெருடா.’’ என்றான் கோபமாக. சரிதா குபுக்கென்று சிரித்துவிட, நான் அவளை முறைத்தேன். நாங்கள் பரஸ்பரம் நலம் விசாரிப்புகள், விசிட்டிங் கார்டுகளைப் பரிமாறிக் கொண்டபின் நான் சொன்னேன்: ‘‘டேய், வர்ற ஞாயித்துக்கிழமை மனைவிகள், குழந்தையக் கூட்டி்கிட்டு... ஸாரி, மனைவி, குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு சாப்பிட வந்துடு’’ என்றேன்.

‘‘வார்த்தைய மாத்திப் பேசற வழக்கம் இன்னும் உன்னைவிட்டுப் ‌போகலையா? சரி, வந்துடறேன்’’ என்று புன்னகைத்துவிட்டுச் சென்றான் சிவா.

ஞாயிற்றுக்கிழமை மனைவி யசோதாவுடனும், மூன்று குழந்தைகளுடனும் வந்தான் சிவா. அமைதியான முகத்துடன் புன்னகைத்த அவன் குழந்தைகளைப் பார்த்து பரம சாதுக்கள் என்று நான் நினைத்தது எவ்வளவு தவறு என்பது சற்று நேரத்தில் புரிந்து விட்டது. பரம வானரங்கள் அவை!

சிவாவை ரொம்ப நாள் கழித்து சந்தித்ததில் நாங்கள் ஹாலில் உட்கார்ந்து பழைய கதை பேசிக் கொண்டிருந்தோம். சமையலறையில் சிவாவின் மனைவியுடன் சமையலில் ஈடுபட்டிருந்த சரிதா, சமையல் மேடைக்கு கீழேயிருந்த எண்ணைத் தூக்கை எடுப்பதற்காகக் குனிய, அதைக் கண்டதும் வேகமாக ஓடிவந்த சிவாவின் மூத்த பெண் அவள் மேல் கை வைத்து பச்சைக் குதிரை தாண்டியது.

அந்த வேகத்தில் சரிதா கவிழ்ந்து உருண்டுவிட, அவள் மேல் பாத்திரங்கள் டமடமவென உருள, எண்ணை தூக்கிலிருந்து கொட்ட... சமையலறையிலிருந்து வந்த களேபரமான சத்தத்தைக் கேட்டு தன் வாரிசுகளில் ஒன்றின் கைங்கரியமாயிருக்கும் என்றபடி ஓடிய சிவா, எண்ணெயில் கால் வைத்து ராபணாவென்று மல்லாந்து விழுந்து வைத்தான் பின்னந்தலை ‘ணங்’கென்று தரையில் மோதியது. நான் பதறி, அவனை கை பிடித்துத் தூக்கி நான் சோபாவில் உட்கார வைக்க, சோபா உறையெல்லாம் பாழ், எண்ணைக் கறை!

மல்லாக்க விழுந்து தலையில் அடிபட்ட தாக்கத்தில் அவன் இ.தி.கு.‌ போல விழித்தபடி இருக்க, ஹாலுக்குள் நுழைந்த சரிதா, ‘குறைவு குறைவு’ என்று (அதாங்க... லோ லோன்னு) அலறினாள். திரும்பிப் பார்த்தேன். சிவாவின் இரண்டாவது வாரிசு என் டேபிளில் இருந்த பென் ஸ்டாண்டில் இருந்து எடுத்த மார்க்கர் பேனாவை வைத்து சுவரில் சித்திரம் வரைந்து பழகிக் கொண்டிருந்தது. ஒரு பக்கச் சுவரில் பாதியளவில் மாடர்ன் ஆர்ட் மங்காத்தாவாக மாறி கிறுக்கித் தள்ளியிருந்தது.

வேகமாக சமையலறையிலிருந்து வந்த யசோதா அதன் முதுகில் ஒன்று வைத்து, மார்க்கர் பேனாவைப் பிடுங்கி வைத்தாள். ‘‘சின்னவன் எங்கடி காணோம்?’’ என்று முனகினான் சிவா ஈனஸ்வரத்தில். அனுபவ தோஷத்தால் யசோதா நேராக ஃப்ரிட்ஜின் அருகில் சென்று, பாதி திறந்திருந்த அதன் கதவை முழுவதுமாகத் திறந்தாள். யசோதா பெற்ற மூன்றாவது தவப்புதல்வன் உள்ளே சரிதா வைத்திருந்த கேக், சாக்லெட், தயிர் வகையறாக்களை வாயில் அடக்கி மென்று கொண்டு சாக்ஷாத் கண்ணன் போல சிரித்தான். சரிதாவின் கண்களில் தெரிந்த அனலுக்கு, பாத்திரத்தை அவள் முகத்தில் வைத்திருந்தால் சமையலே பண்ணியிருக்கலாம்.

ஒரு இடத்தில் நிற்காத அந்தக் குழந்தைகளை ஒரு வழியாக கண்ட்ரோல் செய்து சிவாவையும் யசோதாவையும் சாப்பிட வைத்து வழியனுப்பினேன். அவன் காரைக் கிளப்பிச் சென்றதும், உள்ளே வரத் திரும்பிய என்னை மாடிப்படி வளைவில் சோளக்கொல்லை பொம்மை போல கைகளைப் பரப்பி நின்று மறித்தார் வீட்டுச் சொந்தக்காரர்.

‘‘என்ன சார், டிராஃபிக் கான்ஸ்டபிள் மாதிரி போஸ் கொடுக்கறீங்க..? வழியை விடுங்க’’ என்றேன்.

‘‘இந்தாப்பா... வர்ற மாசம் அட்வான்ஸைக் கொடுத்துடறேன். நீ வேற வீடு பாத்துக்கோ...’’ என்றார்.

‘‘ஏன் ஸார்...? வாடகைல்லாம் ஒழுங்காக் குடுத்துடறேனே...’’

‘‘அதெல்லாம் சரிதான். நீ குடிவரும்போது என்ன சொன்னே...? ஒரு புருஷன் பொண்டாட்டி மட்டும்தான்னு தானே சொன்னே?’’

‘‘இப்ப மட்டும் என்ன மூணு பொண்டாட்டியா வெச்சிருக்கேன்? ஒண்ணையே சமாளிக்க முடியலையே’’ என்றேன் கோபம் பாதியும், பரிதாபம் பாதியுமாக.

‘‘அசிங்கமாப் பேசாதய்யா... ஞாயித்துக்கிழமை ஒரு நாள் மனுஷன் நிம்மதியா வீட்ல இருக்க விடறீங்களா? உன் வீட்லருந்து ஒரே கூசசல், குழப்பம். என்னன்னு ‌போய்ப் பாத்தா... வீடெல்லாம் கன்னாபின்னான்னு கிறுக்கல். யுத்தகளம் போல வீடே கன்னாபின்னான்னு இருக்கு. நீ முதல்ல வேற வீடு பாரு...’’

அவரைச் சமாதானப்படுத்திவிட்டு வருவதற்குள் விழி பிதுங்கி விட்டது எனக்கு. வீட்டினுள் வந்து பார்த்தபோது... புயல் கடந்த பூமி போல இருந்தது. ‌தலையில் கை வைத்துக் கொண்டு வீட்டின் நடுவில் உட்கார்ந்திருந்தாள் சரிதா. ஐயோ பாவம்... எந்தப் பொருளும் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு வீடு நீட்டாக இருக்க வேண்டும் அவளுக்கு. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் என்னையே (வழக்கம்போல) சரமாரியாகத் திட்டுவாள்.

 ‘‘ஹப்பா... இனிமே யாரையாவது வீட்டுக்கு இன்வைட் பண்ணினா, குழந்தைங்களைப் பத்தி விசாரிச்சுட்டுத்தான் இன்வைட் பண்ணனும் போல...’’ என்று நான் சொன்ன அதே நேரம், அவளின் மொபைல் மெஸேஜ் வந்ததற்கு அடையாளமாய், ‘கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்கய்யா...’ என்று வடிவேலுவின் குரலில் அலறியது. மொபைலின் இன்பாக்ஸைத் திறந்து எஸ்.எம்.எஸ்ஸைப் படித்தவள் சொத்தைக் கடலையை மென்று விட்டவள் போல முகத்தைச் சுளித்தாள். திருதிருவென்று விழித்தாள்.

‘‘என்னாச்சு சரி? ஏன் அப்படி ‘‌ஙே’ன்னு முழிக்கிறே?’’

‘‘உங்கண்ணன் நாளைக்கு அவர் குழந்தைகளோட வரப்போறதா மெஸேஜ் குடுத்திருக்கார்... உங்கண்ணன் பசங்க ரெண்டும் சரியான ரெட்டை வாலாச்சே...’’

‘‘அதுக்கென்ன பண்ணச்‌ சொல்ற இப்ப...?’’

‘‘நிப்பாட்டணும். எல்லாத்தையும் நிப்பாட்டணும்’’ என்றாள். (நேற்று டிவியில் ‘தளபதி’ பார்த்த பாதிப்பு)

‘‘எங்கண்ணன் எதுக்கு எனக்கு போன் பண்ணாம உனக்கு மெ‌ஸேஜ் கொடுக்கறார்..?’’ என்றபடி அவள் மொபைலை வாங்கிப் பார்த்த நான் குபீரென்று சிரி்த்து விட்டேன்.

‘‘ஏன் சிரிக்கறீங்க?’’

‘‘கண் செக்கப் பண்ணி கண்ணாடி போடணும் உனக்குன்னு சொன்னா கேக்கறியா? மெஸேஜ் குடுத்திருக்கறது எங்கண்ணன் பாரதி இல்லடி. உங்கண்ணன் சாரதி. வரவேண்டாம்னு போன் பண்ணிச் சொல்லி நிப்பாட்டிரலாமா?’’ என்றேன்.

‘‘எங்கண்ணன் எப்பவோ ஒரு தரம் வர்றார். அது உங்களுக்குப் பொறுக்கலியா? அவரோட நாலு குழந்தேளையம் கூட்டிட்டு ஊரைச் சுத்திக் காட்டிட்டுத்தான் அனுப்பணும்’’ என்றாள்.

‘‘சரியாச் சொன்னே... அதுங்க குழந் தேளுங்கதான்! அதுங்கல்லாம் வாலில்லா ‘முன்னோர்கள்’ ஆச்சே! நாலு வாண்டுகளும் நாப்பது குழந்தைங்க பண்ற அட்டகாசத்தைப் பண்ணிடுமே.. இப்பவே வீட்டுக்காரரை தாஜா பண்றதுக்குள்ள ‌போறும் போறும்னு ஆயிடுச்சு. அந்த கும்பல் வேற வந்துச்சுன்னா... வேற வழியேயில்ல... நாம வேற வீடு பாக்க வேண்டியதுதான்!’’ என்றேன். ‘ஙே’ என்று விழிக்க ஆரம்பித்தாள் சரிதா.


48 comments:

  1. கதை மாதிரி சொல்லி இருக்கிற நிஜம்தான்
    என நினைக்கிறேன்
    இல்லையேல் இத்தனை தத்ரூபமாகச்
    சொல்லிப் போவது கடினமே
    படிப்பவர்களுக்கு ரசிக்கத்தக்க களேபரம்தான்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர (பதிவைச் சொன்னேன் )வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அனுபவமும் கற்பனையும் எத்தனை சதவீதம் என்பது மட்டும் என் ரகசியம். ரசித்து நகைச்சுவை ததும்பக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. முதல் வருகைக்கு...
      [im]http://3.bp.blogspot.com/-cd9M5Ufixb0/TprLa_j5vzI/AAAAAAAAEDw/Hf_95TxykaY/s1600/cup_of_ice_cream.jpg[/im]

      Delete
  2. நான் சொல்ல நினைச்சேன். ரமணி சார் சொல்லிட்டார்... :) சில அனுபவங்கள் இப்படித்தான் ஆகிவிடுகின்றன. என் நண்பர் என் வீட்டுக்கு தன் குழந்தைகளுடன் வரேன் என்றால் எங்கூட்டு அம்மணி அலற ஆரம்பிச்சுடுவாங்க!

    வந்து போன பிறகு புயல் அடித்து ஓய்ந்த மாதிரி இருக்கும்....

    அனுபவிச்சு எழுதியிருக்கீங்க....

    ReplyDelete
    Replies
    1. அனுபவித்து எழுதியதை ரசித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி,

      Delete
  3. சுவாரஷ்யமாக இருந்தது சார் ! பகிர்வுக்கு நன்றி ! (TM 4)

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் என்ற உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  4. ரகளையான வால்கள் சிரிக்கவைத்தார்கள் !

    ReplyDelete
    Replies
    1. வால்களின் சுட்டித்தனத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி,

      Delete
  5. ஐயோ... எனக்கும் நிஜம்மாவே இப்படி வாலா இருக்கற குழந்தைகளைத் தெரியும்... சம்பவங்களைப் படித்து சிரிப்பு வந்தாலும் நிலைமையை நினைத்து வருத்தமும் வந்தது! இன்னொரு கேள்வி நிஜம்மாவே உங்கள் அண்ணன் பேர் பாரதியா, ஆம் என்றால் கிள்ள வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. அண்ணன் பெயர் பாரதி அல்ல, கதைக்காக சில மாற்றங்கள் தேவைப்படுவதால். ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  6. சுட்டித்தனம் செய்தால் தானே அவை குழந்தைகள்., இல்லையென்றால் குழந்தைகள் அந்த வீட்டில் இருக்கிறதென்று எவருக்கும் தெரியாமலே போய்விடும்.,

    சுவாரஸ்யமாய் உங்கள் பாணியில் கலக்கலாய் எழுதி அசத்திவிட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை, சுட்டித் தனம் இன்றேல் குழந்தைகள் இல்லை. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  7. Vaalunga ungalai affect seiyalaiya??!! :-))

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனேவே ஐயோ பாவம் போல இருக்கானேன்னு நினைச்சிடுச்சு போல. ஒண்ணும் பண்ணலை. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  8. sir!

    ethaarthamaaka ezhuthitteenga...

    comedyaakavum irunthathu!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  9. அண்ணே..எங்க வீட்டிலும் இப்படி ரெண்டு மூணு வாலுங்க இருக்கின்றன.அவங்களை கூட்டிட்டு வரட்டுமா?சரிதா மன்னிக்கிட்டே பெர்மிஷன் வாங்கித்தாங்க.////பரம வானரங்கள் ,‘குறைவு குறைவு’ என்று (அதாங்க... லோ லோன்னு)சரிதாவின் கண்களில் தெரிந்த அனலுக்கு, பாத்திரத்தை அவள் முகத்தில் வைத்திருந்தால் சமையலே பண்ணியிருக்கலாம்.குழந் தேளுங்கதான்!வாலில்லா ‘முன்னோர்கள்’/////சட்டென் சிரிக்க வைக்கும் இப்படி வார்த்தகளை யெல்லாம் எங்கிருந்துதான் தேடிக்கண்டுப்பிடிக்கின்றீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. தாராளமா கூட்டிட்டு வாம்மா. நாங்க ரெடி. வார்த்தைகளையும் ரசித்த தங்கைக்கு நன்றி.

      Delete
  10. இப்போதைய குட்டீஸ் எல்லாம் ஒரு விதத்தில் பாவப்பட்ட ஜென்மங்கள் தான் வாய்க்கால் ,வல்லைவெளி ,தோப்பு தெரியாமல் வெறும் இயந்திர வாழ்வில் இணையத்தோடு இருந்து விட்டு போகும் வீடுகளில் போடும் ஆட்டம் சந்தி சிரிக்கும் !ம்ம் ரசித்து எழுதியிருக்கும் பதிவு அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். ரசித்துப் படித்த நேசனுக்கு உளம் கனிந்த நன்றி.

      Delete
  11. ஹாஹா !!!
    வீட்டுக்கு வீடு வாசப்படி சாரே..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  12. இதான் நகைச்சுவை எழுத்து. நகைச்சுவை சம்பவங்கள் இருந்தால் தான் நகைச்சுவை. நன்று கணேஷ். பல இடங்களில் லயித்துச் சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வார்த்தை ஜாலம் தவிர சம்பவங்களையும் ரசித்து என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  13. ஓஓஓஓ அருமை நன்றாக அருந்தது அங்கிள்......

    ReplyDelete
    Replies
    1. அருமை என்ற எஸ்தருக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  14. சார், அப்படி இருந்தா தான் புள்ள இல்லைனா புளி மூட்டை.

    ரசித்தேன் அனுபவ பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகளின் இயல்பை ரசித்த மனசாட்சிக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  15. இனி இணைக்கிறேன், நன்றி.

    ReplyDelete
  16. எல்லா இடங்களிலும் குழந்தைகள் குழந்தை தன்மை மாறாமல் தான் இருக்காங்க அதை நகைச்சுவை கலந்து சொன்னவிதம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  17. சூப்பர், சூப்பர், சூப்பர். இந்தக் கதையில், பல எழுத்தாளர் முகங்கள் தெரிந்தன.
    முக்கியமாக, கடுகு, ராஜேந்திர குமார்.

    ReplyDelete
    Replies
    1. மிகமிகச் சரி. ராஜேந்திரகுமாரின் அடியொற்றித்தான் இக்கதையைத் துவக்கினேன். கடுகின் பாணி இயல்பாக என்னுடனிருப்பது என்பதால் இரு முகங்களையும் நீங்கள் தரிசிக்க முடிந்தது இயல்பே. உங்களின் கணிப்பும் கருத்தும் மிக்க மகிழ்வினைத் தந்தது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  18. அருமையான பதிப்பு. தங்கள் தளத்திற்கு இதுதான் முதன் வருகை... இனி தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு நன்றியும் நல்வரவும்.

      Delete
  19. வாத்தியாரே தாமதமாக வந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். வீடு மாற்றும் வேளையில் மும்மரம் ஆனதால் வலை பக்கம் தலை வைத்துக் கூட படுக்க முடியவில்லை.

    வழக்கம் போல் தங்கள் பாணி நகைசுவைக் கதை என்றாலும் இதில் சுவை கொஞ்சம் தூக்கல் தான். மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வரிகள்.

    " பதிவர் சந்திப்பைப் பற்றி தங்களிடம் பேசியதும்,
    வராவிட்டால் உதைப்பேன் என்று உரிமையோடு என்னை ஏசியதும்
    மகிழ்ந்தேன்."

    வார்த்தைக் கோவை அழகாயிருந்ததால் மட்டுமே மேற்கூறிய வரிகளை மாற்றம் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டேன்.
    தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னதில் தவறில்லை சீனு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் தோழா. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  20. சிரித்துக்கொண்டே படித்தேன்.எந்த நகைச்சுவை பதிவிலும் தங்களது " final punch " மிகவும் ரசிக்கும்படி இருக்கும்.இதிலும் சிறப்பே..அய்யா..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சிரித்து ரசித்ததில் எனக்கு மிகமிக மகிழ்வு. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  21. நகைச் சுவை சிறுகதை மன்னர் கணேஷ் என்ற பட்டம் தங்களுக்கு மிகவும் பொருத்தம்! இரண்டு முறை படித்து சிரித்து மகிழ்ந்தேன்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ஒரு முறைக்கிருமுறை படித்தேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு ஜாக்பாட். மிக்க நன்றி ஐயா.

      Delete
  22. Very interesting to read. I can visualise your house immediately after departure of your friend and his company. There is one advantage. We need to learn not only in clean atmosphere but also in unclean atmosphere too. My wife is also like that "A PLACE FOR EVERYTHING AND EVERYTHING IN ITS PLACE" type like your wife. But we three are just opposite - three means myself and my children.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இல்லமும் என் வீடு போல்தானா... மிக்க மகிழ்ச்சி. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  23. ஃப்ரெண்ட் எப்பிடி இருக்கீங்க.நானும் சுகம் !

    குழந்தைகள் என்றாலே ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ஒரே அட்டகாசம்தான்.அதோட அவர்களின் பேச்சுக்களும் கேள்விகளும்...சிலநேரம் போதுமெண்டு போகுது !

    ReplyDelete
    Replies
    1. ஹப்பா... பாத்து எத்தனை நாளாச்சு ஃப்ரெண்ட். பொம்மையத் தொலைச்ச குழந்தை மாதிரில்ல நான் இருந்தேன். இப்ப பாத்ததுல சந்தோஷம். குழந்தைகளின் குறும்பு அளவுக்கு மீறிப் போனால் சலிச்சுக்கிட்டாலும் அதெல்லாம் நமக்கு வேண்டித்தானே இருக்கு. மிக்க நன்றி.

      Delete
  24. அந்த வேகத்தில் சரிதா கவிழ்ந்து உருண்டுவிட, அவள் மேல் பாத்திரங்கள் டமடமவென உருள, எண்ணை தூக்கிலிருந்து கொட்ட... சமையலறையிலிருந்து வந்த களேபரமான சத்தத்தைக் கேட்டு தன் வாரிசுகளில் ஒன்றின் கைங்கரியமாயிருக்கும் என்றபடி ஓடிய சிவா, எண்ணெயில் கால் வைத்து ராபணாவென்று மல்லாந்து விழுந்து வைத்தான் பின்னந்தலை ‘ணங்’கென்று தரையில் மோதியது. நான் பதறி, அவனை கை பிடித்துத் தூக்கி நான் சோபாவில் உட்கார வைக்க, சோபா உறையெல்லாம் பாழ், எண்ணைக் கறை!

    தாமத வருகைக்கு மன்னிக்கவும் சிரிச்சி சிரிச்சி ஒரு வழி ஆகிட்டேன் போங்க.

    ReplyDelete
    Replies
    1. தாமதமாய் வந்தாலும் ரசிச்சுச் சிரிச்சீஙகன்றதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி தென்றல். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube