Thursday, June 7, 2012

கொன்னவன் வந்தானடி!

Posted by பால கணேஷ் Thursday, June 07, 2012
‘மறுபடி க்ரைம் கதையா?’ன்னு சலிச்சுக்காதீங்க? அடுத்து வர்ற பதிவுகள்ல ட்ராக் மாறிடலாம். இப்ப சமர்த்தா இந்த மினிக்ரைம் கதையைப் படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க...!‘‘சொல்லுங்க ஸார்! What can I do for you?’’ என்றான் அவன். என்றவன் உயரமாயிருந்தான். சிவப்பாயிருந்தான். நீள்வட்ட முகத்தில் ப்ரென்ச் தாடி வைத்திருந்தான். பெண்களை ஒரு கிழமைக்குள் கணக்குப் பண்ணி விடுவது போன்ற அழகுடன், பர்ஸனாலிட்டியாக இருந்தான். அவனானவன் பிரபு. ‘சன்ரே டிடெக்டிவ் ‌ஏஜென்ஸி’ நடத்தி வருபவன்.

‘‘எனக்காக நீங்க ஒரு கொலை பண்ணனும்’’ என்றார் அவர். என்றவர் குள்ளமாயிருந்தார், குண்டாயிருந்தார். தினசரி குடித்த உற்சாக பானங்களின் உபயத்தில் கன்னங்கள் கொழுத்திருந்தன. ஒரு தக்காளிப் பழத்துக்கு கண், மூக்கு, வாய் வைத்தது போன்ற தோற்றம் காட்டினார். அவரானவர் லக்ஷ்மி நாராயணன். பல பிசினஸ்களில் ஈடுபட்டுள்ள பெர்ரிரிரிரிய கோடீஸ்வரர்.

‘‘பார்டன் மீ! நீங்க தப்பான இடத்துக்கு வந்திருக்கீங்க. I'm not a professional killer you know... I'm a private deductive’’ என்றான். ‘‘Yes, You are a private duductive. அதுதான் வாசலில் போர்டே போட்டிருக்கிறாயே... நன்றாகத் தெரியும் இளைஞனே! என்னை சங்கரதாஸ் அனுப்பினார்...’’ என்றார்.

‘‘ஓ! Then no problem...! ‌சொல்லுங்க ஸார்... கொ‌லை பண்ணனும்னு சொன்னீங்க. சரி, யாரைப் பண்ணனும்?’’

‘‘என் மனைவியை!’’

‘‘நினைத்தேன் இந்த பதில்தான் வருமென்று. என் நிழல் வேலையில் வரும் க்ளையன்ட்களில் நூற்றுக்கு 90 பேர் மனைவியைத் தீர்த்துக் கட்டத்தான் வருகின்றனர். உங்கள் மனைவியைக் கொல்லச் சொல்வதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? சரியான காரணமின்றி நான் செயலில் ஈடுபடுவதில்லையென்பதை சங்கரதாஸ் சொல்லியிருப்பாரே...’’

‘‘துரோகம் மிஸ்டர் பிரபு! சாதனா! உறவினர் வீட்டுக் கல்யாணத்தில் அவளை முதல்முறை பார்த்தபோதே வசீகரித்தாள். அவளைத்தான் திருமணம் செய்வதென்று அடுத்த நிமிடமே முடிவு செய்து விட்டேன். பெண் கேட்டேன். அவள் தனக்கு ஒரு காதலன் ‌‌இருப்பதாகவும், வெளிநாட்டு வேலைக்குப் போயிருக்கும் அவன் அடுத்த ஆண்டு கான்ட்ராக்ட் முடிந்து வருவான் என்றும், தன்னை விட்டு விடும்படியும் கேட்டாள். எனக்கும் அவளுக்குமுள்ள வயசு வித்தியாசத்தைப் பேசிய அவள் வீட்டினர் வாயை வெள்ளமாகப் பணத்தை வீசி அடைத்தேன். சுற்றி வளைப்பானேன்... என் செல்வாக்கால் அவளைக் கவர்ந்து வந்து கல்யாணம் செய்து கொண்டேன். நான்கு நெடிய வருடங்கள்! இன்று வரைக்கும் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறேன். ஒரு குறையுமில்லாமல்தான் பார்த்துக் கொள்கிறேன் பிரபு! இருந்தும் அவள் எனக்கு துரோகம் செய்வதை சமீபத்தில் கண்டுபிடித்தேன்...’’

‘‘எப்படி...?’’

‘‘அவள் டைரியில் நிறையப் பக்கங்களில் ‘கிருஷ்ணா’ என்று எழுதி வைத்திருக்கிறாள். கேட்டால் கடவுளின் பெயரை எழுதினேனென்கிறாள். அது அவள் காதலனின் பெயர் என்பதை நான் அறிவேன். அடிக்கடி வரும் ஃபோன் கால்கள்! ஒரு சதிப் பார்வையுடன் ‘சொல்டி’ என்று பெண்ணுடன் பேசுவது போல பேசுவாள். ஒருமுறை அவள் பேசியதை மிக முயன்று ஒட்டுக் கேட்டதில் அந்தக கிருஷ்ணா என்பவன் காதல் பேசிக் கொண்டிருந்தான். அதுமட்டுமில்லை... சீக்கிரத்திலேயே என்னை தீர்த்துக் கட்டி விடுவதாகவும், என்னுடைய சொத்தை அவளுடன் சேர்ந்து அனுபவிககப் போவதாகவும் அவன் ‌சொன்னதற்கு, என்னால வெயிட் பண்ண முடியலை, சீக்கிரம் என்று அவள் ‌பதிலளித்ததை என் காதால் கேட்டேன் மிஸ்டர் பிரபு! ஒண்டுக் குடித்தன வீட்டில் இருந்தவளை மாளிகையி்ல் வைத்து அன்பு செய்தவனுக்கு என்ன ஒரு துரோகம்! இனியும் அவள் உயிருடன் இருக்கலாமா? நான் முந்திக் கொள்ள வேண்டாமா? முதலல எனக்கு துரோகம் பண்ணின பாதகி! பிறகு அந்த கிருஷ்ணாவைக் கண்டுபிடி்ச்சு... அவன்!’’

கோ‌பாவேசமாகப் பேசிய அவருக்கு மூச்சிரைத்தது. அருகிலிருந்த மினி ஃப்ரிஜ்ஜிலிருந்து ஒரு மிரிண்டா பாட்டிலை ஓபன் செய்து நீட்டினான் பிரபு. ‘‘ரிலாக்ஸ் சார்...’’ வாங்கி கடகடவென்று ஒரே மூச்சில் காலி பண்ணிவிட்டுக் கீழே வைத்தார். ‘‘ரைட்! ;நான் ‌சொல்கிறபடி செய்தீர்களெனில் உங்கள் மனைவியை உங்கள் கையாலேயே கொல்லலாம்’’ என்றான் பிரபு. கேள்விக் குறியுடன் பார்த்தார் அவர்.

தன் மேஜை டிராயரில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்துக் காட்டினான் அவன். ‘‘ஸார்! இது நான் ஜெர்மன் போயிருந்தபோது வாங்கி வந்தது. இந்த மாத்திரையை இரவு உங்கள் மனைவி குடிக்கும் பாலில் கலந்து கொடுத்தீர்களென்றால் போதும். அடுத்த நாளே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்து விடுவாள். மாத்திரையின் தடயம் உடலில் தங்கியிராமல் மூச்சுக் காற்றிலேயே வெளியேறி விடுமென்பதால் எவ்வளவு பெரிய டாக்டர் போஸ்ட் மார்ட்டம் செய்தாலும், கொலை என்று கண்டுபிடிக்க முடியாது. ஹார்ட் அட்டாக்கில் இறந்தாள் என்றுதான் எழுதுவார்கள்...’’ என்றான்.

‘‘ரொம்ப தாங்க்ஸ் பிரபு’’ என்று கை நீட்டினார் அவர். ‘‘அதுசரி... இதை சும்மா உங்களிடம் தர நான் என்ன விரல் சூப்பும் பாப்பாவா? இதன் விலை இரண்டு கோடி ஸார்’’ என்றான். ‘‘என்னது...?’’ என்றார் அதிர்ச்சியுடன். ‘‘ஏன் ஸார் வியப்பு? உங்களுக்கு எந்த சிரமமும் தடயமும் இன்றி வேலையை முடித்துத் தரும் என் புத்திசாலித்தனத்தின் விலை இது! உங்களிடமிருக்கும் பணத்திற்கு இதெல்லாம் ஒரு பெரிய தொகையே இல்லை என்பதை நானறிவேன்’’ என்று சிரித்தான்.

‘‘ஆல்ரைட்...’’ என்று செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு நீட்டினார். ‘‘ஸாரி ஸார்! பணக்காரர்களை ஒரு சதவீதம்கூட நான் நம்புவதில்‌லை. நாளைக் காலை 10 மணிக்கு வாருங்கள். இரண்டு கோடியைத் தந்துவிட்டு, மாத்திரையைப் பெற்றுச் செல்லுங்கள். முடிந்தது விஷயம்’’ என்று கண்டிப்புடன் பிரபு சொல்ல, விடைபெற்றுச் சென்றார் லக்ஷ்மி நாராயணன்.

றுதினம் காலை 10 மணி. ‘ஸன்ரே டிடெக்டிவ் ஏஜென்ஸி’க்குள் தளர்ந்து போன நடையுடன் மெதுவாக வந்தார் லக்ஷ்மி நாராயணன். சேரில் அமர்ந்தவுடன், ‘‘கொஞ்சம் தண்ணி தர்றீங்களா?’’ என்று கேட்டு, அவன்தந்த ஒரு பாட்டில் தண்ணீரையும் குடித்துத் தீர்த்தார். ‘‘என்னாச்சு ஸார்?’’ என்றவனிடம் ‘‘என்னமோ தெரியல பிரபு... காலையிலருந்து ஒரே கால் வலி. நடக்கவே கஷ்டமாயிருக்கு. எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்க மாட்டேங்குது. இந்தாங்க நீங்க கேட்ட ரெண்டு கோடி’’ என்று ஒரு ப்ரீஃப்கேஸை மேஜை மேல் வைத்தார். பணத்தை எடுத்து ட்ராவில் பதுக்கி விட்டு, மாத்திரையை எடுத்துத் தந்தான் அவன்.

‘‘தாங்க்யூ மிஸ்டர் பிரபு! இந்த மாத்திரையை இன்னிக்கு ராத்திரியே அவளுக்கு பால்ல கலந்து தந்துடறேன். ஆனா, இது வேலை செய்யுதான்னு எப்படி நான் உறுதிப்படுத்திக்கறது?’’ என்று கேட்டார் சந்தேகமாக.

‘‘ஸிம்பிள் ஸார்! இன்னிக்கு இதைக் குடிச்சாங்கன்னா, அடுத்த நாள் காலையில அவங்களுக்கு கால் மரத்துப் போகறதால கால் வலி வந்து நடக்கவே கஷ்டப்படுவாங்க. எவ்வளவு குடிச்சாலும் தீராம தண்ணி தாகம் எடுத்துட்டே இருக்கும். இது ரெண்டும் இருந்தா ஈவ்னிங் மாஸிவ் ஹார்ட் அட்டாக் வர்றதையும், அவங்க சாகறதையும் யாராலயும் தடுக்க முடியாது...’’ என்று உரக்கச் சிரித்தான் பிரபு.

துணுக்கென்று உள்ளே ஏதோ பளிச்சிட, அவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டார் லக்ஷ்மி நாராயணன். ‘‘மிஸ்டர் பிரபு... நீங்க சொல்றது...? யார்றா நீ?’’ என்றவரிடம் புன்னகை மாறாமல் பதிலிறுத்தான் அவன்: ‘‘என் முழுப் பேர் பிரபு கிருஷ்ணா!’’

54 comments:

 1. Replies
  1. க்ரைம் கதையை ரசிததுப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 2. தலைப்பே கவர்கிறதே.... தலைப்பைப் பார்த்து விட்டு முதல் வரியை "கொல்லுங்க சார்.." என்று படித்தேன்!
  முந்தைய கதையின் நீட்சியா.... கொல்லச் சொல்பவர் குரலில் விதி பஸ் ஓனர் சலிப்பு!
  மிரிண்டா கொடுக்கும்போதே சந்தேகப் பட்டது சரியாப் போச்சு!

  ReplyDelete
  Replies
  1. மிரிண்டா கொடுக்கும் இடத்திலேயே சந்தேகப் பட்டீங்களா... நீங்க கில்லாடியோன் கா கிலாடிதான் ஸ்ரீராம். தலைப்பை பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 3. கொன்னவன் வந்தானடி ---

  ‘‘என் முழுப் பேர் பிரபு கிருஷ்ணா!’’

  ஆரம்பமும் , முடிவும் அருமை !

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து பாராட்டிய உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 4. கதையின் பேரிலேயே அசத்திட்டீங்களே...... முதல் முறை வந்து சென்றபோது முடிவு கொஞ்சம் யூகிக்க முடிந்தது.....

  கிரைம் கதை நல்லாத்தான் இருக்கு.... அப்பப்ப இதுபோலவும் எழுதுங்க கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் முடியும் போதெல்லாம் எழுதுகிறேன் வெங்கட். கதையையும், தலைப்பையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 5. கணேஷ் உண்மையாகவே சொல்கிறேன் கதை மிக அருமை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது நான் இபோது எல்லாம் கதைகளை படிப்பதை மிகவும் குறைத்து இன்பர்மேஷன் சார்ந்த விஷயங்களை படிப்பது அதிகரித்துள்ளேன். இருந்த போதிலும் சில செலக்டிவ் பதிவாளர்கள் எழுதும் கதைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து வருகிறேன் அதில் மிக முக்கியமானவரில் நீங்கள் முதன்மையானவர். அதனால்தான் உண்மையாகவே மீண்டும் சொல்லுகிறேன் இந்த கதை நன்றாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வார்த்தைகள் எப்போதும் சரியாகவே இருக்கும் என்பதை நானறிவேன். நன்றாக உள்ளது என்ற வைட்டமின் வார்த்தைகள் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 6. // காலையிலருந்து ஒரே கால் வலி//

  என்று படித்தவுடன் பிரபு அவரிடம் கொடுக்க இருந்த மாத்திரை போல், அவர் மனைவியிடமும் பணம் வாங்கிக்கொண்டு கொடுத்திருக்கிறார் என நினைத்தேன் ஆனால் சத்தியமாக பிரபுதான் அவள் காதலன் என் யூகிக்கமுடியாத அளவுக்கு கதையைக்கொண்டு போய் முடித்திருக்கிறீர்கள். எதிர்பாரா திருப்பம். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கதையினை ரசித்துப் படித்து உங்களின் எண்ணத்தையும் பகிர்ந்து கொண்டதில் மிக மகிழ்வு எனக்கு. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 7. wow! பிரமாதம் கணேஷ்!

  ReplyDelete
  Replies
  1. மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி.

   Delete
 8. வணக்கம் நண்பரே,
  கவித்துவமான தலைப்பு..
  ஆனால் தங்களின் சிந்தனை கிரைம் நாவலுக்கு
  சென்றிருக்கிறது.
  கதை முழுதும் தங்களின் எண்ண ஓட்டம் சிறப்பாக
  இருக்கிறது. இது தான் என்று யூகம் செய்திருக்கையில்
  இதுவல்ல அது என்று திருப்பம்
  கொடுத்துவிடுகிறீர்கள்...

  நண்பர் கதை சொன்னதை
  வந்து படித்தேனடி
  மனம் நிறைய
  வாழ்த்திப் போகிறேனடி!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... சொல்லும் கருத்தையும் கவிதை போன்று அழகாய் சொல்வதில் உங்களுக்கிணை நீங்கள்தான் மகேன். நீங்கள் ரசித்துப் படித்து வாழ்த்தியதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 9. தலைப்பே மிகவும் அசத்தல் கணேஷ். நானும் கதையின் மத்தியில் பிரபுவின் முழுப்பெயர் கிருஷ்ண பிரபுவாக இருக்குமென்று யூகித்தேன். பிரபு கிருஷ்ணா என்றதும் எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கொண்டேன். ஆனால் மிராண்டாவில் மாத்திரை... இதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. பாராட்டுகள் கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. தலைப்பை ரசித்து. கதையையும் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 10. ம்ம்ம் நல்ல கதை அங்கிள்..
  இதை நான் இயக்குனரா வந்தா படமா எடுக்கிறன்...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நீ ஒரு நாள் இயக்குனராக ஆகணும்னு இறைவனை வேண்டிக்கறேன் எஸ்தர். உற்சாகம் தந்த வார்த்தைகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 11. வாத்தியாரே ஏன் இப்படி, செம ட்விஸ்ட் போங்க, ரொம்ப என்ஜாய் பண்ணி படிச்சேன், உங்கள வசீகரிக்கும் எழுது நடை செம. இது போல் ஒரு தொடர் கதை எழுதின செம ஹிட் ஆகும் முயலுங்கள்

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்ற மாதிரி ஒரு தொடர் எழுதும் (விபரீத) ஆசையும் மனதில் உண்டு. விரைவில் பண்ணிடலாம் சீனு. மிக்க நன்றி.

   Delete
 12. தலைப்பும் சூப்பர்... விறுவிறு நடையும் சூப்பர்... என்ன முடிவு தான் முன்கூட்டியே யூகிக்க முடிந்தது....

  ReplyDelete
  Replies
  1. நிறைய க்ரைம் கதைகளைப் படித்துப் பழகியவர்களுக்கு இது மாதிரி முடிவு வரும் என்பதை யூகிக்க முடியும்தான் நண்பரே. எழுத்து நடையையும் தலைப்பையும் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 13. மன்னவன் வந்தானடி ஆமாங்க தலைப்பை பார்த்ததும் பாடல் முனு முனுத்தபடி வந்தேன் படிக்க படிக்க கொலை வெறி தொற்றிக்கொண்டது நல்ல கதை .

  ReplyDelete
  Replies
  1. தென்றலுக்கு இந்தக் கதை பிடித்துப் போனதில் அகமகிழ்ந்து என் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete
 14. செம திரில்
  அருமையான கிரைம் சிறுகதை
  கதையை மேலோட்டமாகப் படிக்க
  கெடுவான் கேடு நினைப்பான் எனத் தெரிகிறது
  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்
  புத்திசாலி கெட்டவன் ஜெயிப்பான் எனப் படுகிறது
  எது சரி ?

  ReplyDelete
  Replies
  1. புத்திசாலி கெட்டவன் ஜெயிப்பான் என்பதுதான் எக்காலமும் நடைமுறை ஐயா. கதை த்ரில்லாக இருந்தது என்ற உங்கள் வார்த்தை தந்த மகிழ்வுடன் என் உளம் கனிந்த நன்றியை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

   Delete
  2. தலைப்பே சொல்கிறது கணேஷ்,நீங்கள் PKP RK உடன் எவ்வளவு பழகியுள்ளீர்கள் என..
   இதோ உங்களுக்கு அடுத்த கதைக்கான தலைப்புக்கள்...
   "வாய் திறந்து கொல்லம்மா"
   "கொன்னது நீதானா?"
   "கொல்லத்தான் நினைக்கிறேன்"

   ராமன்சார்,
   எப்பொழுதும் புத்திசாலியும் திறமைசாலியும்,சாமர்த்தியசாலியும்தான் வெற்றிபெறுவர்..அவர்கள் நல்லவர்களாகவும் இருக்கலாம் அல்லது கெட்டவர்களாகவும் இருக்கலாம்..நாம் தோற்றவனை தேற்றுவதறகாக "ஜெயிப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள்"எனும் கோட்பாட்டை உருவாக்கியுள்ளோம்.
   அமெரிக்கர்கள் மற்றவர்களை performers and non performers என்றே மதிப்பிடுகிறார்கள்.ஆனால் நாமோ நல்லவர்/கெட்டவர் என்றே மதிப்பிடுகிறோம்.இதன் விளைவு,ஒருவர் நல்லவராக இருந்தால் திறமை இல்லாவிட்டாலும் சகித்துக்கொள்கிறோம்.(உ-ம்)மன்மோகன் சிங்.

   Delete
 15. ம்(:
  நல்லா இருக்கு சார்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் என் இதய நன்றி.

   Delete
 16. Very good crime story. But experienced crime story readers can guess the killer after reading first 2 paragraphs which I also guessed. Please keep it up.

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரி. நிறைய க்ரைம் கதை படித்து அனுபவம் பெற்றவர்களால் ஊகித்து விட முடியும்தான். இருப்பினும் கதையைப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 17. நல்ல த்ரில்லர்! முடிவு தலைப்போடு பொருந்தி ரசிக்க வைத்தது. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. த்ரில் கதையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 18. இந்த முடிவை எதிர்பார்த்தேன் எனினும் சுவாரஸ்யம் குறையவில்லை

  ReplyDelete
  Replies
  1. முடிவை எதிர்பார்த்த நீங்கள் கில்லாடிதான். மிக்க நன்றி நண்பரே...

   Delete
  2. நிறைய படிச்ச அனுபவம் பேசுது.

   Delete
 19. அருமையான முடிவு நானும் ஒரளவு யூகித்தேன்
  நல்ல விறுவிறுப்பு நடை!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. விறுவிறுப்பான நடை என்ற தங்களின் வார்த்தை மகிழ்வு தந்தது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஐயா.

   Delete
 20. கடைசி பென்ஞ் நானேதான் ஃப்ரெண்ட் !

  ReplyDelete
  Replies
  1. கடைசி பென்ச்சாக வந்தாலும் என்னைப் பொறுத்தவரை உங்களுக்காக ஃப்ரெண்ட் பென்ச்சே ரிசர்வ்ட் ஃப்ரெண்‌ட்!

   Delete
 21. சுவாரஸ்யமான கிரைம் கதை ! நன்றி சார் !

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்து சுவாரஸ்யம் என்று சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 22. ஹா...ஹா ‘என் முழுப் பேர் பிரபு கிருஷ்ணா!’’

  அருமை.

  ReplyDelete
 23. ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 24. ம்ம்ம் சஸ்பென்ஸ் கதைகள் படிக்கனும்னு ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்! இங்க அதுக்குப் பஞ்சமே இருக்காதுனு நினைக்கிறேன்! இதெல்லாம் எப்டி இப்டி யோசிக்கிறீங்க? ஆச்சர்யமா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னா நிறைய க்ரைம் எழுதிட வேண்டியதுதான். உற்சாகம் தந்த உங்கள் கருத்துக்கு மனம் நிறைய நன்றி.

   Delete
  2. எப்டி எல்லா ப்லாக்லையும் போய் கமெண்ட்ட் போட்ரதுக்கு உங்களுக்கு டைம் இருக்கு? நிறைய ப்லாக்ல உங்களப் பாக்க முடியரதா... செவி வழிச் செய்தி வந்துச்சு!

   Delete
  3. என்னால முடிஞ்சவரைக்கும் நல்ல படைப்புகளை பார்த்து தட்டிக் கொடுக்கறது என் பழக்கம். என்னையும் நிறையப் பேர் இப்படி தட்டிக் கொடுத்ததால தானே உற்சாகமா எழுதறேன் சாமு.

   Delete
 25. அருமையான கதை வாத்தியாரே!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube