Monday, August 6, 2012

நடை வண்டிகள் - 29

Posted by பால கணேஷ் Monday, August 06, 2012

நானும் அனுராதாரமணனும் - 2

நான் முதன்முதலாக அனுராதா ரமணன் அவர்களைச் சந்தித்துப் பேசியது ‘மன ஊஞ்சல்’ என்னும் புத்தகம் தயாரிக்கும் சந்தர்ப்பத்தில். அந்தப் புத்தகம் வெளியானதன் பிறகு ‘அன்புடன் அந்தரங்கம்’ என்கிற பெயரில் ‘வாரமலர்’ இதழில் அனுராதா ரமணன் எழுதின கேள்வி-பதில்களைத் தொகுத்து புத்தகமாக்கலாம் என்று தங்கத் தாமரை பதிப்பகத்தார் முடிவு பண்ண, அதற்கான பணிகளை ஆரம்பித்தேன். அது மீண்டும் அனும்மாவைச் சந்திப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.

நான் அவர் வீட்டுக்குச் சென்றதும் வழக்கம் போல் முகம் மலர வரவேற்று, காபி தந்து உபசரித்து அன்புடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வந்த ஒரு எஸ்.டி.டி. போன் கால் மூலம் அவரது இன்னொரு பரிமாணத்தை நான் அறிந்தேன். போனில் அனும்மா பேசினதை இங்கே தருகிறேன். மறுமுனையில் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்களும் என்னைப் ‌போலவே யூகித்துக் கொள்ளுங்கள்.

‘‘ஹலோ... ஓ... நீயாம்மா? சொல்லும்மா! நல்லாயிருக்கியா...?’’

‘‘என்னதிது டைவர்ஸ், கிவர்ஸ்னுல்லாம் பேசிக்கிட்டு? இதோபாரு... இப்படில்லாம் பேசறதை முதல்ல நிறுத்து. மனுஷங்களால தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவுமே கிடையாது. என்னாச்சு அப்படி...?’’

‘‘சரி... உன் மாமனாரும், அவர் தம்பியும் குடிக்கறாங்க... இதுவா உனக்குப் பிரச்சனை? உன் புருஷனுக்கு குடிப்பழக்கம் இல்லதானே...? அப்புறமென்ன? மாமனாரும், சின்ன மாமனாரும் குடிச்சா குடிச்சுட்டுப் போகட்டுமே...’’

‘‘ஓ... நடுவீட்ல வெச்சுக் குடிக்கறாங்கன்றதுதான் உனக்குப் பிடிக்கலையா? ஸ்நாக்ஸ் வேற உங்க மாமியாரே பண்ணித் தர்றாங்கன்றது எரிச்சலா இருக்குங்கற. சரிதாம்மா... ஆக்சுவலா எல்லாருக்கும் இந்தக் கோபம்தான் வரும். உன் கோபத்துல ரொம்ப நியாயம் இருக்கு. ஆனா ஒரு விஷயம் யோசிச்சுப் பாரு... உங்க மாமனாரும், சின்ன மாமனாரும் ஊர்ல மதிப்பும், மரியாதையும் இருக்கற பெரிய மனுஷங்க. ஏதோ வீக்னஸ், குடிப் பழக்கம் வந்துடுச்சு. அவங்க ரோட்ல குடிச்சு, மயங்கி விழுந்துட்டாலோ, இல்ல தடுமாறி நடந்தாலோ குடும்பத்துக்குத் தானே கெட்ட பேர். அதை நினைச்சுத்தான் இப்படி வீட்ல குடிக்கறாங்கன்னு எனக்குத் தோணுது. இப்படி நெனச்சுத்தான் உன் மாமியாரும் அவங்களுக்கு எல்லாம் பண்ணித் தர்றாங்கன்றது என் எண்ணம். அதுசரி... உன் புருஷன் குடிக்கறானா? இல்ல, உன்னை ஏதாச்சும் கொடுமை பண்றானா? ’’

‘‘அப்படியா... அவன் உன்னை உள்ளங்கைல வெச்சுத் தாங்கறானா? அவன் மேல குறை சொன்னா நாக்கு அழுகிடும்னு நீயே சொல்றதானே? ஓ... அவன் குடிக்கறதில்லையா? இதையெல்லாம் கண்ணால பாத்தும்கூட அவனுக்குக் குடிக்கற எண்ணமே தோணலைங்கறது எவ்வளவு சந்தோஷப்பட வேண்டிய விஷயம். அதை விட்டுட்டு நீ இப்படிப் பேசினா என்ன அர்த்தம்? சரிம்மா... அதான் சொன்னேனே... எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு உணர்ச்சிவசப்படக் கூடாது. போனை உன் வீட்டுக்காரர்ட்ட கொடு...’’

‘‘என்னப்பா... உன் வைஃப் பேசினதெல்லாம் கேட்டே தானே...? (மறுமுனையில் ஏதோ பதில் வர) அது சரிப்பா... உங்கப்பாவையும், சித்தப்பாவையும் உன்னால கண்டிக்க முடியாதுதான். ஒத்துக்கறேன். ஆனா நீ ஒண்ணை யோசிச்சுப் பாரு... வீட்ல ஹால்ல உக்காந்து சைட் டிஷ்ஷைக் கேட்டு வாங்கி அவங்க குடிச்சிட்டிருந்தாங்கன்னா குடும்பத்துல இருக்கற பொம்பளைங்களுக்கு கோபம் வராதா என்ன? வெளியாட்கள் யாராவது பார்‌த்தாங்கன்னா, உங்க வீட்டுப் பெண்களுக்கு என்ன மரியாதை இருக்கும்னு நீ நினைக்கற? அவங்களோட உணர்வுகளுக்கும் மதிப்புத் தரணுமில்ல... நீ ஒண்ணு பண்ணுப்பா... உங்கப்பாட்டயும், சித்தப்பாட்டயும் பேசி, அவங்களை வீட்டு மொட்டை மாடிக்குப் போய் குடிச்சுட்டு அங்கயே தூங்கச் சொல்லிடு...’’

‘‘என்ன... தனியா ரூமே கட்டிடறேங்கறியா மொட்டை மாடில? நல்லதுப்பா... இப்படிப் பேசி ஏற்பாடு பண்ணிட்டேன்னா, அவங்களுக்கும் பிரச்சனையில்ல.. உங்களுக்கும் நிம்மதி. உன்‌ பொண்டாட்டியைப் பத்தியும் யோசிக்கணும் நீ. அவளும் பாவம் இல்லையா? உன்னை நம்பித்தானே தன் குடும்பத்தையும், மனுஷங்களையும் விட்டுட்டு வந்து வாழறா... முதல்ல இதைக் கவனிச்சு சரி பண்ணிடுப்பா... போனை அவ கிட்டக் கொடு...’’

‘‘அம்மா ..........., அவன்கிட்ட தெளிவாப் பேசிட்டேன். இந்தப் பிரச்சனையை சீக்கிரத்துல சரி பண்ணிடறேன்னுட்டான். அதனால அவசரப்பட்டு யோசிச்சு எந்த தப்பான முடிவையும் எடுக்கக் கூடாது நீ. நல்லவனா ஒரு புருஷன் கிடைச்சிருக்காம்மா உனக்கு. அவனை அவசரப்பட்டு முடிவெடுத்து நீ தொலைச்சிடக் கூடாது, என்ன..? நீ வேணாப் பாரேன்... அடுத்த தடவை போன் பண்றப்ப, சந்தோஷத்தோட பேசுவே நீ என்கிட்ட. சரியா... ரைட், வெச்சிடறேன்’’

-இப்படிப் பேசிவிட்டு போனை வைத்தார். உரையாடல் என் நினைவிலிருந்தவரை தந்திருக்கிறேன். ஆனால் நான் எழுதியதை விடவும் இன்னும் விரிவாக, கனிவாக, அன்பாக நீண்டநேரம் பேசினார். போனை வைத்துவிட்டு என்னிடம் சொன்னார்: ‘‘அன்புடன் அந்தரங்கம் பகுதியை நான் எழுத ஆரம்பிச்சதுக்கப்பறம் இப்படி போன் கால்கள்லயும், நேர்லயும் வந்து நிறையப் பேர் தங்களோட பிரச்சனையைச் சொல்றாங்க கணேஷ். நானும் என்னால் முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் கவுன்சலிங் பண்ணிக்கிட்டிருக்கேன்’’ என்று அது என்னவோ சாதாரண விஷயம் ‌போல என்னிடம் சொன்னார்.

அவர் கல்கியில் எழுதிய ‘நெருப்பாக நீ’ என்கிற தொடர்கதை கல்லூரி நாட்களில் நான் விரும்பிப் படித்து வந்தது. பாதிக்கு மேல் படிக்க இயலாதபடி குடும்ப சூழ்நிலைகள் அமைந்து விட்டன. அந்த புத்தகத்தை அவரிடம் கேட்டபோது, ‘‘அதை ஓவியம்னு வானதில போட்டாங்க. இப்ப புத்தகம் என்கிட்ட இல்ல. அதுக்கு ரீ பிரிண்ட் போடவும் இல்லை. எங்கயாவது கிடைச்சா வாங்கிடுங்க. அதை ரீ பப்ளிஷ் பண்ண ஏற்பாடு பண்றேன்’’ என்றார். ஏமாற்றமாக இருந்தது எனக்கு. (அதிர்ஷ்டவசமாக அந்த புத்தகம் பின்னாட்களில் பழைய புத்தகக் கடை ஒன்றில் கிடைத்தது. அதை வாங்கி படித்துவிட்டு அனும்மாவிடம் கொடுத்துவிட்டேன் என்பது வேறு விஷயம்.)

அவரிடம் விடைபெற்றுப் புறப்படத் தயாரானபோது பதினைந்து தினங்களில் அவரது பிறந்த நாள் வருவதைச் சொல்லி, என் அட்வான்ஸ் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு, பிறந்த நாள் விழா கொண்டாட அந்த ஆண்டு திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி அழைப்பிதழ் கொடுத்தார். அனும்மா பற்றி பின்னர் நான் தெரிந்து கொண்ட தகவல்களையும், அந்தப் பிறந்த நாள் விழாவுக்குச் சென்றதையும் பற்றி.....

                                                                                                             -தொடர்கிறேன்...

41 comments:

 1. வணக்கம்..நினைவுகள் அருமை..

  ReplyDelete
  Replies
  1. திரட்டிகளில் நான் இணைக்கும் முன்னரே படித்துக் கருத்திட்ட உங்களின் விரைவு வியக்க வைக்கிறது நண்பரே. அனுபவப் பகிர்வை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

   Delete
 2. அந்த தொலைபேசி உரையாடலில் அவர் பேசிய விதம் நிஜமாகவே கனிவாகவும் பொறுமையாகவும் இருந்த்தது.... பல நாளுக்குப் பின் அந்த உரையாடல் இன்றும் இந்த அளவிற்கு உங்கள் நினைவில் இருப்பது வியப்பு தான் வாத்தியரே... நடை வண்டியில் கைகோர்க்க காத்துள்ளோம்

  ReplyDelete
  Replies
  1. நடைவண்டியில் தொடர்ந்து பயணித்துவரும் சீனுவுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 3. அன்புடன் அந்தரங்கம் பகுதியை ஆரம்பித்ததும் அவரிடம் கவுன்சிலிங்குக்காக பல பெண்கள் போனில் தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினைகளை சொல்லி வந்ததை அனுராதாரமணன் அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லி இருந்ததை நானும் வாசித்து இருக்கிறேன்.பழைய நினைவுகளை மறாவமல் தொகுத்து தந்திருப்பது சுவாரஸ்யமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஓ... அனும்மாவின் தீவிர வாசகி என்பதால் சரியாகப் படித்ததைக் குறிப்பிட்டீர்கள் தங்கையே. மிக்க நன்றி.

   Delete
 4. பெரிய பிரச்சினையை கூட போனில் பேசியே முடித்து வைத்த விதம் அருமை என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான். சிறப்பான அனுபவம் நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. நல்ல பகிர்வு என்று ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 5. பிரச்சனையின் இருபக்கத்து நியாயத்தையும் எடுத்துரைத்து அதற்கான தீர்வை, அதுவும் சில மணித்துளிகள் தொலைபேசி வார்த்தைகளினூடே தெரிவித்து, தெளிவித்த அனுராதா ரமணன் அவர்களின் திறமையை எவ்வளவு போற்றினாலும் தகும். அப்போதைய நிகழ்வுகளையும் அழகாய் நினைவிலிருந்து பதிந்தமைக்கு நன்றி கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் தோழி. பார்த்த எனக்கும் பிரமிப்பை விதைத்தது அவர் போனிலேயே செய்த சமரசம். இப்போதும் அதனை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 6. போனில் அவர் என்ன பேசியிருப்பார் என்பதை எங்களை யூகித்த வைத்ததற்கும், இத்தனையும் ஞாபகம் வைத்து எழுதியதற்கும் நன்றி சார்... வாழ்த்துக்கள்...(TM 2)


  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே.

   Delete
 7. மிகச் சிறப்பு.சொல்வதற்கு வார்த்தை வரவில்லை. (இவரின் கதைகள் பைன்ட் பண்ணி இலங்கையில் தங்கை வீட்டில் உள்ளது.
  நல்வாழ்த்து. (முகநூல் மூலம் வந்தேன்.)
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. இத்தனை சிறப்பாக நீங்கள் ரசித்ததில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி சகோ. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 8. சிக்கலை அவர் போனில் பேசியேத் தீர்த்து வைத்து
  இருபுறமும் அழகாய் பொறுமையாய் சமாளித்த விதம் +
  நீங்கள் அதை விவரித்த விதம் அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. அனைத்தையும் அருமை என்று ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 9. அனுராதா ரமணன் அவர்கள் பேசிய உரையாடலை தங்கள் நினைவிலிருந்து எழுதியிருப்பதாக சொல்லியிருந்தாலும் முழு உரையாடலையும் நீங்கள் தந்திருப்பதாகவே எனக்குப் படுகிறது. வாழ்த்துக்கள்!
  படிக்கவே மனதுக்கு சந்தோஷமாக இருந்தது எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களின் சேவையை எண்ணியதும். அந்த பிறந்த நாள் விழா பற்றிய செய்தியை படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இல்லை சபாபதி ஸார். அவங்க அரை மணி நேரத்துக்கிட்ட பேசினாங்க. பொறுமையா விசாரிச்சு நிதானமா தீர்த்து வெச்சாங்க. அதுலருக்கற ஹைலைட்ஸ்தான் நான் தந்தது. நீங்கள் ரசித்துப் படிச்சதுல மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   Delete
 10. அவர்களுடன் உங்களுக்குக் கிடைத்த நட்பினைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவல்.

  ஒரு பெரிய சிக்கலை தொலைபேசி மூலமாகவே தீர்த்து வைத்த அவரது திறன் மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. சில நேரங்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் தான் பல குடும்பங்கள் பிரிய நேருகின்றது....

  நடைப் பயணங்களின் அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்!

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட் வெங்கட். சரியான வழிகாட்டி இருந்தால் எதையும் பேசித் தீர்த்து சரிசெய்து விடலாம். நல்ல கருத்தினைப் பகிர்ந்து அடுத்த பகுதிக்காய் காத்திருக்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 11. எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளினி. அவரைப்பற்றிய தகவல்களைப்பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஒரு வாசகியிடமிருந்து வரும் கருத்து தருகிறது கூடுதல் மகிழ்வு. என் மனமார்ந்த நன்றிங்க.

   Delete
 12. மலரும் நினைவுகள் - ரசித்தேன் அறிந்தேன் - தொடருங்கள்

  ReplyDelete
 13. கேட்பதற்கு ஆளிருந்தாலே போதும், பாதிப் பிரச்னைகள் முடிந்து விடும். அனு மேடம் செய்தது மிகப் பெரிய சேவை. தொலைபேசி உரையாடலிலேயே இந்தப் பகுதி சென்று விட்டது. தொடருங்கள் காத்திருக்கிறேன்.

  அவர் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று, தலைப்பு நினைவில்லை, உயிருக்குப் போராடும் கணவன் தன் பிள்ளைகள் தன் உதவிக்கு வருவார்கள் என்று நம்பி மனைவியை உதவி கேட்டு அனுப்ப, ஏற்கெனவே அவர்கள் வர முடியாது என்று சொல்லியிருப்பது தெரிந்த மனைவி அதைக் கணவனிடம் சொல்லாமல் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தெருமுனையில் காத்திருப்பார்...'இன்னும் கொஞ்ச நேரம்தான்' என்ற அழும் நினைவுகளுடன். மறக்க முடியாத சிறுகதை அது.

  ReplyDelete
  Replies
  1. அந்தத் தலைப்பு என்ன என்பது என்க்கும நினைவு வரவில்லை. கண்டுபிடிக்க முயற்சிக்கறேன் ஸ்ரீராம். தொடரும் உங்களின் அன்பிற்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி.

   Delete
 14. நல்ல பகிர்வு. நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வரும் உங்களின் அன்பிற்கு என் இதய்ம் நிறை நன்றி நண்பரே.

   Delete
 15. அய்யா வணக்கம்,,
  தகவலுக்கு நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. நீண்ட நாளைக்கப்பறம் உங்களைப் பாக்கறதுல மிகமிக மகிழ்ச்சி கருண். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 16. வாசிக்க வாசிக்க ஒரு கதைபோலவே இருக்கு ஃப்ரெண்ட் !

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... தெம்பூட்டும் வார்த்தைகளைத் தந்த என் மனதிற்கினிய ஃப்ரெண்டுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 17. சிறப்பான நினைவுகள்!பகிர்வுக்கு நன்றி!

  இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

  ReplyDelete
  Replies
  1. உற்சாகம் தந்த கருத்திற்கு உளம் நிறைந்த நனறி

   Delete
 18. எதை எழுதினாலும் வெகு சுவாரஸ்யமாக எழுதும் உங்கள் எழுத்து நடை பிரமிப்பு! வலைத்தளத்தில் நுழைந்துவிட்டால் அந்த இடுகையை வாசித்து முடிக்காமல் திரும்ப முடியவில்லை :(

  ReplyDelete
  Replies
  1. உங்களின் மனம் திறந்த பாராட்டினால் மகிழ்வடைந்த மனதுடன் என் நன்றி உங்களுக்கு.

   Delete
 19. அட அண்ணனுக்கு இம்புட்டு நியாபக சக்தியா...? அசந்து போனேன்...!

  மலரும் நினைவுகள் அருமை அண்ணே...!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த என் தோழனுக்கு மனம் நிறைந்த நன்றி.

   Delete
 20. உங்கள் பதிவை படித்து முடித்ததும் எனக்கொரு பதிவு போட ஐடியா கிடைத்துவிட்டது நன்றி

  ReplyDelete
  Replies
  1. அட... இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கா... மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 21. அனும்மாவோட வாரமலரில் வரும் அன்புடன் அந்தரங்கம் என்னுடைய favorite பகுதி! புத்தகம் வந்ததும் நான் படிக்கும் முதல் பகுதி அதுவாகத்தான் இருந்தது... அருமையான அறிவுரைகள், கலகங்களை போக்கும் விளக்கங்கள்!!! ஒரு மனோதத்துவ நிபுணராகவே பதில் கூறுவார்.. பெண்கள் சுயமுன்னேற்றத்திற்கு நிறைய வழிகள் கூறுவார்..சில நேரங்களில் நன்றாக திட்டிகூட பதில் கொடுப்பார்... அவர்களுக்கு பிறகு நான் அந்த பகுதி படிபதையே நிறுத்திவிட்டேன்!!!

  அழகாக அனும்மாவின் சந்திப்பினை பதிவிட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்ததைக் குறிப்பிட்டு மகிழ்வித்த சமீராவுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube