Friday, August 3, 2012

மடமைதனைக் கொளுத்துவோம்

Posted by பால கணேஷ் Friday, August 03, 2012

மீபத்தில் நான் படித்த இரண்டு பதிவுகள் எனக்குள் சிந்தனை அலைகளையும் கோபத்தையும் எழுப்பின. அமைதிச்சாரல் மேடம் எழுதின இந்தப் பதிவு பெண் சிசுக்கள் கருவிலேயே அழிககப்படும் கொடுமையையும். நிறைய படித்தவர்களே இதில் ஈடுபடும் விஷயத்தையும் விளக்கமாகச் சொல்லியது அந்தப் பதிவு. அதன்பின் சிந்தனைச் சிறகுகள் தளத்தில் என் தோழி சாமுண்டீஸ்வரி இட்ட இந்தப் பதிவில் விஜய் டிவி நிகழ்ச்சில எடுத்த வீடியோ கிளிப்பிங்குகளோட இதே விஷயத்தைப் பகிர்ந்திருந்தாங்க. டிவி பாக்கற பழக்கம் இல்லாததால இதைப் பாக்கத் தவறின நான் இங்க பார்த்து மனம் கலங்கிட்டேன். கொஞ்சம் சிரமம் பாக்காம... இந்த ரெண்டையும் படிச்சுட்டு வரும்படி உங்களை கேட்டுக்கறேன்.

படிச்சாச்சா...? ‘மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ன்னும் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ன்னும் இன்னும் பலப்பல பாடல்களை எழுதி பெண்மையைப் போற்றுகிறோம். எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதித்து விட்டதாகப் பெருமை கொள்கிறோம். ஆனால் பெண் குழந்தை பிறந்தால் மட்டும் வேண்டாமென்றால்... எங்கே போய் முட்டிக் கொள்வது..? பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் இந்த மோசமான வழக்கம் இப்போது நடப்பதில்லை என்றுதான் நான் எண்ணியிருந்தேன். டாக்டர்களிடையே இதற்கு கோட் வேர்ட் வைத்து இத்தகைய விஷயங்கள் இப்போதும் நடப்பதாக அறிந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியும் கோபமும் இன்னும் என்னுள்.

‘பெண் குழந்தையா பெத்துப் போடறா’ என்று மருமகளைக் கொடுமை செய்யும், மகனுக்கு மறுமணம் செய்து வைக்கும் மாமியார்கள் பலர் இருக்கவே செய்கிறார்கள். குழந்தை ஆணாக அல்லது பெண்ணாகப் பிறப்பதில் சமபங்கு ஆணுக்கும் உண்டு என்று விஞ்ஞானம் சொல்கிறது. ஆணின் உயிர்த் துளியில் இருக்கும X அல்லது Y குரோமசோம் பெண்ணின் கருமுட்டையிலிருக்கும் குரோமசோம்களுடன் இணையும்போதுதான் குழந்தை ஆணா பெண்ணா என்பது தீர்மானமாகிறது. இதற்குப் பெண்ணைக் குற்றம் சொல்வது படிக்காதவர்களின் மடமை என்று கொண்டாலும் கூட வேறொரு கேள்வி எழுகிறது. என் மகனுக்கு பெண் குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் அந்த மாமியார்க்காரி. பேரன் வளர்ந்து வயசுக்கு வந்து விட்டால் (ஐ மீன் கல்யாண வயசுக்கு) அவனுக்கு வேறொரு இளைஞனையா மணமுடித்து வைக்கப் போகிறாள்? அப்போது அவனுக்கேற்ற ‘பெண்’ கிடைக்குமா என்றுதானே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையப் போகிறாள்? இப்படி கருவிலேயே பெண் குழந்தைகளை அழித்து விட்டால் பின்னர் ஆண்கள் மட்டுமே இருக்கும உலகில் என்ன இருந்துவிடப் போகிறது?

படித்த ஆண்பிள்ளைகள்கூட அம்மாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இதே தவறு செய்கிறார்கள் என்பது மிகமிக வேதனையளிக்கும் விஷயம். உலகமெங்கும் இது நடந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கத்தில் முதலிரண்டு இடங்களையும் வகிக்கும் சீனா மற்றும் இந்தியாதான் இக்கொடுஞ்செயலைச் செய்வதிலும் முன்னணி வகிக்கின்றன என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்த மாதிரி கொடுமைக்குத் துணைபோன மஹாராஷ்ட்ராவின் ஷிக்ராபூரைச் சேர்ந்த மோகன் நகானே என்ற மருத்துவரின் தொழிலுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்கிற விஷயம் சற்றே ஆறுதல் தருகிறது. இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக. நல்ல தீர்ப்புகளுக்கு முன்னுதாரணமாக அமையட்டும்.

வலையில் எழுதிவரும் கவிதைக்காரி ஒருவரின் ப்ரொபைலில் இந்த வரிகளைப் பார்த்தேன் - எதுவாகவும் நான் இல்லை. ஆனால் எல்லாமாகவும் நான் இருக்கிறேன் - மிக அருமையான வரிகள். ஒரு ஆணுக்கு எல்லாமாகவும் பெண்தான் இருக்கிறாள். வளர்த்து ஆளாக்க அம்மா, மகிழ்வு+வலிகளை பகிர்நது கொள்ள சகோதரி, மனதறிந்து பழக தோழி, உயிரின் பாதியாய் மனைவி... இப்படி எல்லா நிலைகளிலும் பெண் இன்றி ஆணின் வாழ்வு இல்லை. இந்துக் கடவுளின் ‘சிவசக்தி’ தத்துவம் கேலிக்குரியதும் இல்லை. ‘ஆணும் பெண்ணும் சரிசமம்’ என்று அது சொல்லும் செய்தி மகத்தானது.

நம்மிடம் இருக்கும் வலைப்பூ என்ற ஆயுதத்தின் வலிமையை நாம் அறிவதில்லை. சமீபத்தில் திருநெல்வெலியில் விசாலினி எனற பெண்ணின் ஐக்யூ 230 என்பதும் (சராசரி மனிதனின் ஐக்யூ 90லிருந்து 110க்குள்தான் இருககும்) புனேயில் ஐஐடி ப்ரொபசர்களுக்கே பாடம் எடுக்கும் திறன் படைத்திருக்கிறாள் என்பதும உணவு உலகத்தில் ஆபீசர் சங்கரலிங்கம் அவர்களும். கௌசல்யா அவர்களும் மற்றும் பலரும் எழுதிய பின்தான் வெளியுலகம் அறிந்தது, வலைப்பூக்களில் இந்தக் கட்டுரையை பார்த்துவிட்டு லட்சக் கணக்கில் உலகெங்குமிருந்து மெயில்கள் குவிந்ததாக அப்பெண்ணின் அம்மா காட்டினார் யூத் பதிவர் சந்திப்பில். இம்மாத க்ரைம் நாவலில் (கற்கண்டு ஆயுதம்) ராஜேஷ்குமார் கூட ஒரு பெட்டிச் செய்தியாக இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ளோரால் படிக்கப்படும் இத்தகைய சக்தி வாய்ந்த ஆயுதமான வலைப்பூவில் நம்முடைய கோபத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்வோம். நிச்சயம் இதற்குப் பலன் இல்லாமல் போகாது. இங்கே என் கோபத்தையும், ஆத்திரத்தையும். ஆதங்கத்தையும் கொட்டிவிட்டேன். உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...!

54 comments:

 1. இதன் தாக்கத்தை இப்பொழுதே ஓரளவிற்கு அனுபவிக்கிறோம். ஆண்கள் திருமணத்திற்குத் தேவையான அளவில் பெண்கள் இல்லை. போகப் போக நிலைமை சீர்கெட்டு இது பெரிய சமூகக் குற்றங்களுக்கும் அழுத்தங்களுக்கும் காரணமாக இருக்கப் போகிறது.

  ReplyDelete
  Replies
  1. மிகமிகச் சரியாகச் சொன்னீர்கள் நண்பரே. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. // அவனுக்கு வேறொரு இளைஞனையா மணமுடித்து வைக்கப் போகிறாள்?// அருமையான கேள்வி சார்...

  ஆதங்கமா ஆத்திரம் வருகிறது.... பெண்கள் நாட்டின் கண்கள் என்று விளம்பரம் செய்தால் மாட்டும் போதுமா அந்தக் கண்களை குத்தி கொலைகள் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா... என்ன உலகமோ, எதற்கும் லாயகிலாத அரசாங்கம்... தன் வீடு தன் குடும்பம் என்ற அரசாங்க நிலை மாறி சமுக அவலங்களையும் பிரச்சனைகளையும் துடைக்க முன் வரும் போது தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கும்

  ஆம் வேண்டும் இன்னுமொரு சுதந்திரப் போர்

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான் சீனு. விழிப்புணர்வை ஊட்டும் முயற்சியை போர் என்று நீங்கள் அழைத்தாலும் தவறில்லை. நற்கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 4. எனது கருத்தை இங்கே நான் பதிவாக பதிந்துள்ளேன். உங்கள் மனம் மிக இளகியது என்றால் இங்கே நீங்கள் செல்ல வேண்டாம்.

  Tuesday, October 26, 2010 ல் நான் பதிவிட்டது. நீங்கள் படித்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்

  http://avargal-unmaigal.blogspot.com/2010/10/abortion.html

  கருக்கலைப்பு (Abortion) பெண்கள் அவசியம் படிக்க வேண்டியது

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் உங்களின் பதிவைப் படித்ததும் மனம் கலங்கித்தான் விட்டது நண்பா. இன்னும் நிறைய மாற்றங்களும் போதனைகளும் தேவைப்படுகின்றன என்பதை உணர முடிகிறது. மிக்க நன்றி.

   Delete
 5. இன்னும் பெண்ணுரிமை பேச்சளவிலேயே இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். மனதால் அதை அனைத்து ஆண்களும் தரும் நாளே நன்னாள். உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 6. உலகெங்கும் உள்ளோரால் படிக்கப்படும் இத்தகைய சக்தி வாய்ந்த ஆயுதமான வலைப்பூவில் நம்முடைய கோபத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்வோம். நிச்சயம் இதற்குப் பலன் இல்லாமல் போகாது.//

  நிச்சயமாக
  மன்ம் சுட்ட அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. என் கருத்தை ஆமோதித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 7. நியாயமான கோபம்.

  ஆணானால் என்ன பெண்ணானால் என்ன.... எல்லாம் நம் குழந்தை என்ற எண்ணம் எப்போ வருமோ!

  ReplyDelete
  Replies
  1. என்றாவது ஒரு நாள் நீங்கள் சொன்ன எண்ணம் அனைவருக்கும வருமானால் அதுவே திருநாள் டீச்சர். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 8. ஆதங்கம் நியாயமானது உண்மையில் வலைப்பூவிற்கு இருக்கும் சக்தியை பதிவர்கள் சரியாக பயன்படுத்தாதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் பல பதிவர்கள் ஹிட்ஸ்களுக்காகவே ப்அதிவிடுகின்றனர்.......

  என்னதான் மாமியாருக்கு ஆண் முழந்தை தேவைப்பட்டாலும் உலக சனத்திகையின் படி பெண்களின் பிறப்புவீதம் அதைகரித்துக் கொண்டேதான் போகிறது.....இன்னும் சில மிக சொற்ப காலங்களில் ஒரு 40 பெண்களுக்கு ஒரு ஆண் எனும் நிலை வருவதில் ஐயமில்லை ஐயா.......

  ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. நண்பரே... உலக ஜனத்தொகையைப் பற்றிப் பேசவரவில்லை நான். இந்தியத் திருநாட்டில் பெண்களின் தொகை குறைவதைப் பற்றித்தான் கவலை. நாமென்ன நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு பிரான்சிலோ, நியூசிலாந்திலோவா பெண் தேடுகிறோம்? இந்தியாவில் இந்நிலை மாறவேண்டும் என்பதே என் கவலை. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 9. தாயை மதிப்பவர்கள், தன் வாழ்நாள் முழுவதும் இருக்கும் துணைவியை / சகோதரியை மதிப்பதில்லையே ஏன் ?

  வீட்டில் இருக்கும் பெண்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்...

  ஆணும் பெண்ணும் சரி சமம் என்பது புரிந்து கொள்ள வேண்டும்... பெண் என்பவள் மாபெரும் சக்தி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

  முன்பை விட இந்த நிலை மாறி விட்டது... மாறும்... மாற வேண்டும்... மாறியே தீரும்...


  நன்றி…
  (த.ம. 6)

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கை கொள்ளச் செய்த உங்களின் வரிகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 10. உங்களுடைய ஆதங்கத்தை நல்ல முறையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். என் இடுகைக்கும் சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் சிந்தனையில் வந்த கருத்துக்கள் என்னுள் எழுப்பிய எதிரொலிதானே இங்கே... உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 11. அர்த்தமுள்ள சிந்தனைக் கட்டுரை.

  ReplyDelete
  Replies
  1. சிந்தனையை ஆமோதித்த தம்பிக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

   Delete
 12. சார்!... என் இடுகையைத் தொடருவிங்கனு நான் எதிர்பார்த்தேன்! ஆனால் இவ்வளவு சீக்கிரமே தொடர்ந்ததற்கு மிக்க நன்றி! எனது இடுகையைச் சுட்டியதற்கு நன்றி!... கண்டிப்பா... # எல்லாருமே சேர்ந்து குரல் கொடுத்தால் நிச்சயம் முன்னேற்றம் என்பது விரைவிலேயே வரும்!.... பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உஙகளின் வருகையும் கருத்தும் மகிழ்வு தந்தது சாமு. உஙகளுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 13. உண்மையில் அந்த அழிக்கப்பட்டப் பெண் குழந்தைகள்
  மகா பாக்கியசாலிகள் என்றே கருதுகிறேன் .
  வேறு எந்த நல்ல நாட்டிலாவது பெண்மையை மதிக்கும்
  [ நதி , மலை ,அம்பாள் எல்லாம் பெண்கள் என்று பம்மாத்து வேலை செய்யாமல் இருக்கும் .....
  பெயரளவில் மட்டும் இன்றி ... உண்மையிலே பெண்மை போற்றுதும் நாட்டில் ]
  நாட்டில் ஜனித்து விட்டுப் போகட்டும் கணேஷ் சார் .....
  வேறு எதுவும் சொல்வதிற்கில்லாமல் நெஞ்சம் கனக்கிறது .
  மிக அருமையானதொரு பதிவு தந்தமைக்கு அனைத்துப் பெண் பதிவர்கள் சார்பாக
  உங்களை மனமார வாழ்த்துகிறோம் கணேஷ் சார் !

  ReplyDelete
  Replies
  1. அருமையான கருத்தை உரைத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 14. பதிவுலகை நல்ல ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற தங்கள் என்னத்தை நானும் வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. என் கருத்துடன் உடன்பட்டுக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா.

   Delete
 15. மிகவும் சிறப்பான கருத்துக்கள்! பெண்ணுரிமை பேசும் பெண்களே இதற்கு துணை போகிறார்கள் என்பது இன்னும் கொடுமையான விசயம்! இது குறித்து இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஆம் சுரேஷ். அனைவரும் முயன்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 16. சிந்திக்ததூண்டும் கருத்துகள்§ விழிக்க வேண்டியது பெண்களே!

  ReplyDelete
  Replies
  1. உண்மை நேசன். பெண்களே பல சமயங்களில் இத்தகைய கொடுமைகளுக்குத் துணை போவதுதான் வேதனை. தங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 17. மிகவும் பயனுள்ள பதிவு. நியாயமான ஆதங்கம். ஆண் பெண் குழந்தைகள் சரிசமமாக இருப்பதே நல்லது. இல்லாவிட்டால் மிகப்பெரிய பிரச்சனைகளை பிற்காலத்தில் சந்திக்க நேரிடும். இதை அனைவரும் உணர்ந்து செயல் பட வேண்டியது அவசியம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் நற்கருத்து மிக மகிழ்வு தருகிறது ஐயா. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 18. உங்களின் ஆதங்கம் அருமையான கட்டுரையாக வந்திருக்கிறது.

  இது குறித்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. என் கருத்தை ஒட்டிப பேசிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சே.குமார்.

   Delete
 19. ஆதங்கம் தெரிகிறது ஃப்ரெண்ட்.ஆனாலும் இன்னும் முழுமையாக யாரும் உணரவில்லை.சும்மா எழுத்திலும்,பேச்சிலும் மட்டுமே பெண்களை மதிப்போம் என்கிறார்கள்.இதில் ஒன்றை ஒத்துக்கொண்டேயாகவேணும்.சில பெண்கள் தங்களை தாங்களே தங்கள் அளவு தெரியாமல் மீறுவதும் ஒரு காரணம்.அடுத்து எம் வழி வந்த சில பெண்களுக்கான அடக்குமுறைகளை பாரம்பரியம்,பண்பாடு,கலாசாரம் என்பவற்றோடு போட்டுச் சேர்த்துக் குழப்பி வைத்திருக்கிறது நம் சமூகம் !

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது மிகச்சரி ஃப்ரெண்ட். சில பெண்களும் மாற வேண்டும். நிறைய ஆண்களும் மாற வேண்டும். சமூகத்தின் குழப்பங்களை மீறி இதைச் சாதிக்க நீண்ட் காலமாகும். நம்மால் இயன்றவற்றைச் செய்வோமே... மிக்க நன்றி.

   Delete
 20. நியாயமான ஆதங்கம். இப்போது ஹரியானாவின் சில கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர்கள் பெண்சிசு வதையைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இளைஞர்கள் தலைவர்களாக இருக்கும் இக்கிராமங்களில் நல்ல முயற்சிகள் மேற்கொள்வது மகிழ்ச்சியான விஷயம்.

  மனிதர்களின் மனனிலை இன்னும் மாறவேண்டும்... மாறினால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. மாறும் வரை காத்திருப்போம் வெங்கட். மாறுவதற்கு நம்மாலான அளவில் உதவிகளும் செய்வோம். வேறென்ன... உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 21. அழிக்க நினைக்கும் அந்த நேரத்தில் நமை சுமந்த நேரத்தில் நம்மை சுமந்தவளும் இப்படி நினைத்திருந்தால் நிலைமை என்ன என்பதை சிந்தித்தாலே போதுமே நல்ல பகிர்வு நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... சரியான கருத்து தென்றல். இந்தச் சிந்தனை வந்துவிட்டால் தானே எல்லாம் மாறிவிடும். பார்க்கலாம்... மிக்க நன்றிம்மா.

   Delete
 22. பெண்ணினம் இங்கே
  ஒரு பாலினமாக மதிக்கப்படுவது
  மிகக் குறைவு..
  பாலியல் இனமாகவே மதிக்கப்படுகிறது
  பேச்சில் செவ்வீரர்கள் எல்லாம்
  வெளிப்புறத்தில்
  பெண்ணைப் போற்றிவிட்டு
  அகத்தில் ஆணென்ற அகம்பாவம்
  கொண்டு சிரம் முத்தி போய் அலைகிறார்கள்..

  தன்னை தந்தை தாய் என அழைக்க முதல் குழந்தை
  வருகையில் அது பெண்ணாய் இருந்தால் என்ன ஆணாய்
  இருந்தால் என்ன..
  குழந்தை குழந்தை தான் என்ற எண்ணம் பெருகவேண்டும்..
  பெண்கல்வி இன்னும் வளரவேண்டும்...
  கற்ற பெண்கள் தங்கள் கல்வியினை
  வெறும் வெட்டிப்பேச்சாக பெண்ணீயத்தை சொல்லாது
  செயலில் காட்ட வேண்டும்...
  அன்று மலரும் அந்தப் பொன்னாள்

  ReplyDelete
  Replies
  1. பாலினமாக அல்ல... பாலியல் இனமாகவே... உண்மை உரைத்த உங்கள் வரிகள் வலி தந்தன. நீங்கள் சொன்ன பொன்னாளை எதிர்நோக்கிக் காத்திருப்போம் மகேன். உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 23. நல்ல பதிவு. நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 24. அவரவர் உங்கள் மனைவியை, தாயை, உங்கள் பெண் பிள்ளையை மதித்து கெனரவம் செய்தாலே உலகம் திருந்தும். மிக நல்ல கருத்து மதிக்கப்படவேண்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. எக்ஸாக்ட்லி. வீட்டில் திருத்தங்கள் செய்தால் நாட்டில் தானாகவே வந்துவிடும் தான். அதற்கு முயல்வோம் நாம். நற்கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 25. Replies
  1. பார்க்கிறேன் நண்பரே... மிக்க நன்றி.

   Delete
 26. மிகவும் பயனுள்ள பகிர்வுவெகு நியாயமான கோபமும் ஆதங்கமும்தான்.

  ReplyDelete
  Replies
  1. என் கோபம் + ஆதங்கத்தை மதித்த தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 27. எத்தனை பதிவெழுதினாலும்...

  ReplyDelete
  Replies
  1. ஆம்... எத்தனை எழுதினாலும் மாறுதல் உடன் வந்துவிடாது தான். சிறு நெருப்புக் குச்சியாவது நாம் கொளுத்தினோம் என்று மன ஆறுதல் மட்டுமேனும் கிடைக்கும்தானே அப்பா ஸார். அதற்கெனவே...

   Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube