Thursday, May 17, 2012

கேப்ஸ்யூல் நாவல் - 6

Posted by பால கணேஷ் Thursday, May 17, 2012

வாஷிங்டனில் திருமணம்
மெரிக்க கோடீஸ்வரி ராக்பெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும், யுனெஸ்கோவில் பணிபுரியும் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கல்லூரித் தோழிகள். மிஸஸ் ராக்பெல்லரின் நாத்தனார் கணவரான ஹாரி ஹாப்ஸ், வசந்தாவின் திருமணத்துக்காக குடும்பத்துடன் கும்பகோணம் வருகிறார். அந்தத் திருமணத்தை அதிசயமாகப் பார்க்கும் அவர், அது பற்றிய குறிப்புகளையும் (சாப்பாட்டில் அப்பளம் என்ற வட்டமான ஒரு வஸ்துவைப் போடுகிறார்கள். அதை எப்படி வட்டமாகச் செய்கிறார்கள், எப்படி நொறுங்காமல் செய்கிறார்கள் என்பதெல்லாம் விளங்காத மர்மங்களா யிருக்கின்றன) எழுதிக் கொள்கிறார்.

அந்தக் குறிப்புகளைப் படித்தும், தென்னிந்தியக் கல்யாண விவரங்களை ஹாரிஹாப்ஸ் தம்பதிகள் சொல்லக் கேட்டும் மிஸஸ் ராக்பெல்லருக்கு ஒரு தென்னிந்தியத் திருமணத்தைப் பார்க்கும் ஆசை ஏற்படுகிறது. அமெரிக்காவில் ஒரு தென்னிந்தியத் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்தரவிடுகிறார். தென்னிந்தியாவில் பெண்(ருக்மயி)ணின் குடும்பத்தினர் அம்மாஞ்சி, சாம்பசிவம் என்கிற இரு சாஸ்திரிகளுடன் அமெரிக்கா வருகின்றனர். பெண் வீட்டைச் சேர்ந்த பஞ்சு கல்யாண ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறான். விமானத்தில் பணிப்பெண்ணாக இருக்கும் லலிதாவை பஞ்சுவின் அத்தைக்குப் பிடித்துப் போகிறது. பஞ்சுவுக்கும்தான்!

மணமகன் (ராஜகோபாலன்) குடும்பத்தினர் தனி விமான்தில் ‌அமெரிக்கா வருகின்றனர். இந்தியாவிலிருந்து தனி விமானங்களில் கல்யாணத்துக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும், நபர்களும் வரவழைக்கப்படுகின்றனர். பந்தக்கால் நடுதல், அப்பளம் இடுவது, ஜானவாசம், சம்பந்தி சண்டை என்று தென்னிந்தியத் திருமணத்தின் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அமெரிக்கர்களுக்குப் புதிதாக இருக்க பல கலாட்டாக்கள் அரங்கேறுகின்றன. இவற்றுக்கிடையில் பஞ்சு-லல்லியின் காதலும் வளர்கிறது. இறுதியில் திருமணம் நன்கு நடந்தேற, ராக்பெல்லர் சீமாட்டி அனைவருக்கும் பரிசுப் பொருள்களும், சன்மானங்களும் கொடுத்து, கலங்கிய கண்களுடன் வழியனுப்பி வைக்கிறாள்.

-கதைச் சுருக்கம் என்று சொன்னால் சாவி அவர்கள் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ கதையை இவ்வளவுதான் சொல்ல முடியும். பல கலாட்டாக்கள் என்று நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொன்றும் சாவி அடிக்கும் நகைச்சுவை ஸிக்ஸர்கள். அதை அனுபவிக்க முழுப் புத்தகத்தையும் நீங்கள் படித்தாக வேண்டும். சாம்பிளுக்காக சில இங்கே உங்களுக்காக:

தவில் என்பது டபுள் ஹெட்டட் இன்ஸ்ட்ரூமென்ட். இதை வாசிப்பவர் ஒரு பக்கத்தை ஸ்டிக்கால் ‘பீட்’ செய்து கொண்டு மறு பக்கத்தைக் கையால் அடிக்கிறார். எப்படி அடித்தாலும் தவில் கிழிவதில்லை. தாலி கட்டும்போது சிலர் ஆள்காட்டி விரலை ‌வேகமாக ஆட்டி இவரைப் பயமுறுத்துகிறார்கள். உடனே தவில்காரர் பயந்து ‘டமடம’வென்று தவிலைக் கொட்டி முழக்குகிறார்.

சாஸ்திரிகள் தண்ணீரில் மூழ்கி எழும் போதெல்லாம் ‘ஹாரி, ஹாரி’ என்று ஹரி நாமத்தை நீட்டி முழக்கி கோஷித்தார். கரையில் நின்று கொண்டிருந்த ஹாரி என்ற பெயருடையவர்கள் எல்லாம் தங்கள் பெயரைத்தான் சொல்கிறார் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.

வெங்கிட்டு, தன் பாட்டியிடம் ஓடிப் போய், ‘‘பாட்டி! பறந்த அப்பளத்தையெல்லாம் பறக்கும் தட்டுன்னு நினைச்சு அமெரிக்கர்கள் சுட்டு விட்டார்களாம்’’ என்றான். ‘‘அடப்பாவமே! சுடுவானேன்? என்னிடம் சொல்லியிருந்தால் எண்ணெயில் பொரித்துக் கொடுத்திருப்பேனே! சுட்ட அப்பளம் நன்னாயிருக்காதேடா!’’ என்றாள் பாட்டி.

விருந்தில் பரிமாறப்பட்ட வடுமாங்காயைக் கடிக்கத் தெரியாமல் பலர் விரலைக் கடித்துக் கொண்டு ‘ஆ! ஆ!’ என்று அலறினர். பற்களுக்கிடையி்ல் விரல்கள் அகப்பட்டுக் கொண்டதால் காயம் ஏற்படவே விரல்களைச் சுற்றி பிளாஸ்திரி போட்டுக் கொண்டார்கள். மறுதினம் விரலில் துணி சுற்றிக் கொண்டு நின்ற தவில் வித்வான்களைக் கண்ட அமெரிக்கர் சிலர், ‘‘ஐயோ பாவம்! இவர்களுக்கும் வடுமாஙகாய் சாப்பிடத் தெரியவில்லை போலிருக்கிறது’’ என்று சொல்லி அனுதாபப் பட்டனர்.

நடந்து நடந்து கால் வீங்கிய சீமாட்டியின் காலில் விளக்கெண்ணையைத் தடவி ஒத்தடம் கொடுத்தார்கள் அத்தையும் பாட்டியும். ‘‘இப்ப நீங்க என்ன செய்யறீங்க?’’ என்றாள் மிஸஸ் ராக். ‘‘எங்களுக்குத் தெரிந்த கை வைத்தியம் செய்கிறோம்’’ என்றாள் அத்தை. ‘‘கால் வீங்கிப் போயிருக்க, கை வைத்தியம் செய்தால் எப்படி? கால் வைத்தியமாகச் செய்யுங்க’’ என்றாள் திருமதி ராக்.

‘‘நலங்கிட ராரா... ராஜகோபாலா’’ என்று ருக்கு பாடியபோது அத்தனை பேரும் உற்சாகத்துடன் சிரித்தனர். ‘ராஜகோபாலா’ என்று கணவன் பேரைச் சொல்லிப் பாடிவிட்ட ருக்மணி, வெட்கம் சூழ்ந்து கொள்ள மவுனமாகி விட்டாள். ‘‘எதுக்கு எல்லாரும் சிரிக்கிறாங்க?’’ என்றாள் மிஸஸ் ராக். ‘‘ருக்கு தன் ஹஸ்பெண்ட் பேரைச் சொல்லி விட்டாள். அதற்குத்தான் சிரிக்கிறோம்’’ என்றாள் லோசனா. ‘‘ருக்குவின் ஹஸ்பெண்ட் நேம் அவ்வளவு ஹ்யூமரஸா?’’ என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

55 comments:

  1. பாயாசத்தில் கிடக்கும் நெய்யில் வறுத்த
    முந்திரிகளை அழகாக எடுத்துச் சுவைக்கக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    அருமையான புத்தக அறிமுகம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முந்திரிப் பருப்பென சாவி அவர்கள்ளின் நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  2. மறக்கவே முடியாத புத்தகம் வாஷிங்க்டனில் திருமணம். ஒவ்வொரு எழுத்தும் வரியும் இப்பகூட நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிரது. நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை விழாவுல இந்த புக்கை தந்தாங்கல்ல... இப்ப படிச்சப்பவும் என்னால ரசிச்சுச் சிரிக்க முடிஞ்சதும்மா. அதான் நல்ல நகைச்சுவையோட சக்தி. நல்ல பகிர்வென்று மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  3. நான் சிறுவயதில் படித்த மற்றும் எனக்கு பிடித்த நகைச்சுவை கதை இது. அதை மீண்டும் என் மனதில் கொண்டுவந்து நிறுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. அன்றும் இன்றும் அனைவருக்கும் பிடித்த புத்தகம் அது. ரசித்துக் கருத்திட்ட நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. எழுத்தாளர் சாவி அவர்களின் படைப்புகளில் எனக்குப் பிடித்தது ‘வாஷிங்டனில் திருமணம்’அந்த நகைச்சுவை படைப்பிலிருந்து சிலவற்றை மட்டும் கொடுத்து,அந்த புத்தகத்தை திரும்பவும் படிக்கத் தூண்டியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சாவி என்றால் முதலில் நினைவுக்கு வரும் நூலல்லவா இது! மீண்டும் படிக்கத் தூண்டியது என்றதில் மகிழ்வ எனக்கு. உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  5. வாஷிங்டனில் திருமணம் தொடரைப் படிக்க, வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து ஆனந்தவிகடன், வீட்டிற்குப் போடும் நபரின் வரவுக்காக எல்லோரும் ஆவலுடன் காத்திருப்போம். அவர் வந்தவுடன் எங்கள் வீடே வியட்நாம் வீடு ஆகிவிடும்!

    ReplyDelete
    Replies
    1. ஆ.வி.யில் தொடராக வந்தபோதே படிக்கும் வாய்ப்புக் கிடைத்த பாக்கியசாலியா நீங்கள்? நான் படித்தது புத்தக வடிவில்தான்.... ஆனாலும் கோபுலுவின் படங்களோடு இருப்பதால் ரசிக்க முடிந்தது. நன்றி ஸார்!

      Delete
  6. இந்த நாவலை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் அண்ணா. ஆனா, இதுவரை இந்த புத்தகத்தை நான் படித்ததில்லை. இப்போ படிச்சே ஆகனும்ன்னு உங்க பதிவு தூண்டுதுண்ணா.

    ReplyDelete
    Replies
    1. படிச்சே ஆகணும்னு அவ்வளவு தீவிர எண்ணம் வந்துடுச்சா? நல்லது. நானே அந்தப் புத்தகத்தை உனக்குத் தர்றேம்மா. நீ படிச்சு ரசிக்கலாம்!

      Delete
  7. I expect THANI KUDITHHANAM in capsule format next time. Your articles make us to take a long walk down the memory lane. It takes lot of time to come back to real world once we start walking down under.

    ReplyDelete
    Replies
    1. டியர் ‌மோகன், மெரினாவின் ‘தனிக்குடித்தனம்’ இப்படிக் கொடுத்தால் கேப்ஸ்யூல் நாடகம் என்றல்லவா தலைப்பிட வேண்டியிருக்கும். அவசியம் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் நண்பா!

      Delete
  8. ‘வாஷிங்டனில் திருமணம்’ எப்படி நடத்தினேன் ? — சாவி
    ------------------------------------------------------
    1963 -ல், நானும் ஏன் இனிய நண்பர் பரணீதரனும் திருவையாறு தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருதோம். நானும் அவரும் சேர்ந்து விட்டால் அரட்டைக்கும் சிரிப்புக்கும் பஞ்சமே இராது. நாள் முழுதும் நகைச்சுவையோடு பேசி மகிழ்ந்து கொண்டிருப்போம்.
    நாங்கள் இருவரும் காவேரி படித்துறையில் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருந்தபோது அதே படித்துறையில் நாலைந்து வெளிநாட்டுக்காரர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டோம்.

    தென்னையும் வாழையும் மண்டிய காவிரிக் கரைச் சூழ்நிலையில், சட்டை களைந்த சந்கீதக்காரர்களுக்கும், விபூதி அணிந்த ரசிகர்களுக்கும் இடையே அந்த வெள்ளைக்காரர்கள் சற்றும் பொருந்தாதவர்களாய்க் காணப்பட்டார்கள். சிறிது நேரம் அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    “என்ன பார்க்கிறீர்கள்? ” என்று கேட்டார் பரணீதரன்.

    “இந்த இடத்தில இவர்களைக் காணும் போது வேடிக்கையாயிருக்கிறது” என்றேன்.

    “நம்முடைய கர்நாடக சங்கீதத்தின் பெருமை அத்தகையது. வெளிநாடுக்காரர்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தது!” என்றார் அவர்.

    “ஒரு வருடம் தியாகய்யர் உற்சவத்தை வெளிநாட்டிலேயே கொண்டு போய் நடத்தினால் எப்படி இருக்கும் ?” என்று கேட்டேன்.

    “ரொம்ப வேடிக்கையாய்த்தான் இருக்கும். அதுவும் அம்மாதிரி ஒரு நதிக்கரையில் நடத்திப் பார்க்க வேண்டும். அங்கே தியாகய்யருக்கு ஒரு கோயில் கட்டி அந்தச் சந்நிதியில் அந்த நாட்டவர்களும் நாமும் சேர்ந்து உட்கார்ந்து பஞ்சரத்னக் கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார்.

    அவ்வளவுதான்; வெறும் வாயை மெல்லும் என் போன்ற எழுத்தாளர்களுக்கு அவல் ஒன்று கிடைத்தால் போதாதா ? அதிலிருந்து என் கற்பனையை ஓட விட்டேன். அது எங்கெல்லாமோ சுற்றி அலைந்ததன் பயனாக என்னென்னவோ எண்ணங்களெல்லாம் உருவெடுக்கத் தொடங்கின. முழுநீள நகைச்சுவைத் தொடர் ஒன்று எழுத வேண்டுமென்று பல ஆண்டுகளாக ஆசைப் பட்டுக் கொண்டிருந்த என் லட்சியம், செயல் பூர்வமாக நிறைவேறப் போகிற காலம் வந்து விட்டது போல் ஒரு பிரமை! என் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது.

    அடுத்த கணமே, காவிரிக்கரை கர்நாடக சங்கீதம் எல்லாம் எனக்கு இரண்டாம் பட்சமாகி விடுகின்றன. தொலைவில், ஷேக் சின்ன மௌலானாவின் நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒலியே என் கற்பனைக்குப் பின்னணியாகவும் அமைந்து விடுகிறது. மறு நிமிடமே மானசீகமாக வெளி நாடுகளுக்குப் பறக்கிறேன். நான் போகுமிடங்களுக்கெல்லாம் அந்த நாதஸ்வர இசையும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

    வெளிநாட்டில் தியாகய்யர் உற்சவம் நடத்துவதைக் காட்டிலும் ‘நம் ஊர்த் திருமணம் ஒன்றை நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள் ? திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்ட போது நமக்குக் கிடைக்கும் வேடிக்கையும் தமாஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம்’ என்று தோன்றியது. இந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது.

    திருவையாற்றிலிருந்து திரும்பி வருகிற போது இதே சிந்தனைதான். பரணீதரனோடு இதே பேச்சுதான். நம் நாட்டில் சாதாரணமாக ஒரு கல்யாணத்தை நடத்தி முடிப்பதென்றாலே பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. ஜாதகப் பொருத்தம், பண விவகாரம், சம்பந்திச் சண்டை போன்ற எத்தனையோ விஷயங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவிற்கே போய் ஆடம்பரக் கல்யாணம் ஒன்று நடத்துவதென்றால் அது அத்தனை எளிதான காரியமா ? கவலை என்னைக் கவ்விக் கொண்டது. உண்மையாகவே கல்யாணம் செய்யப் போகிறவர்களுக்குக் கூட அத்தனை கவலை இருந்திருக்காது. கதைக்கு ‘வாஷிங்டனில் திருமணம்‘ என்று பெயர் கொடுத்து விளம்பரமும் செய்து விட்டேன். விளம்பரத்திலும் சரி. வாரா வாரம் கதை வெளியான போதும் சரி, அதை எழுதுகிறவர் யார் என்று சொல்லாமலே கடைசிவரை சஸ்பென்சில் வைத்திருந்து முற்றும் போடுகிறபோதுதான் என் பெயரையும் வெளியிட்டேன்.

    பதினொன்றே வாரங்கள் வெளியான இந்தக் கதைக்கு வாசகர்கள் அளித்த வரவேற்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை. வாரா வாரம் திரு. கோபுலுவின் உயிர்ச் சித்திரங்கள் இந்தக் கதைக்குத் தனிச் சிறப்பும் முழு வெற்றியும் தேடித் தந்தன.

    ReplyDelete
  9. இன்னொரு விஷயம்.

    “இந்தக் கல்யாணத்தை வாஷிங்டனில் நடத்தப் போகிறேன். அங்கேதான் பொடோமாக் நதியும் ஆபிரகாம் லிங்கன் மண்டபமும் டைடல் பேசின் நீர்த்தேக்கமும் இருக்கின்றன. ஊர்வலம் செல்ல வீதிகள் விசாலமாயிருக்கின்றன. அப்பளம் உலர்த்துவதற்கு வசதியான ஆர்ட் காலரி மொட்டை மாடி இருக்கிறது. பாலிகை விடுவதற்கும், ஜானவாச ஊர்வலம் நடத்துவதற்கும் ஏற்ற இடம் வாஷிங்டன் நகரம்தான்” என்று நான் கூறிய போது, “ரொம்ப சரி, அங்கேயே நடத்துங்கள். ஆனால் செலவையெல்லாம் ராக்பெல்லர் சீமாட்டி தலையில் போடுங்கள்” என்று எனக்கு யோசனை கூறி உதவியவர் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள்தான். அவர் யோசனைப்படியே ராக்பெல்லர் செலவிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விட்டேன்.

    ‘வாஷிங்டனில் திருமணம்’ எழுதுவதற்கு முன் நான் அமெரிக்காவே பார்த்ததில்லை. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் அந்த நாட்டையும், வாஷிங்டன் நகரையும் போய்ப் பார்த்தேன். திருமணம் நடந்த ஜார்ஜ் டவுன், சாஸ்த்ரிகள் துணி துவைத்த பொடாமாக் நதி, பாலிகை விட்ட டைடல் பேசின், அப்பளம் உலர்த்திய ஆர்ட் காலரி எல்லாவற்றையும் நேரில் பார்த்த போது எனக்கே வியப்பாயிருந்தது. இனி அந்த மாதிரி ஒரு கதை எழுத முடியுமா ? சந்தேகம்தான்.

    ReplyDelete
    Replies
    1. சாவி அவர்கள் எழுதிய மறக்க இயலாத முன்னுரையை அழகாய் பகிர்ந்திருக்கிறீர்கள் நண்பரே. உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  10. தகவல்கள் அருமை
    கணேஷ் உங்களின் ரசிகன் நான் .
    மிகவும் ரசித்தேன்
    உங்களின் எழுத்து நடை ஆபாரம்

    ReplyDelete
  11. தகவல்கள் அருமை
    கணேஷ் உங்களின் ரசிகன் நான் .
    மிகவும் ரசித்தேன்
    உங்களின் எழுத்து நடை ஆபாரம்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளாச்சு ஞானேந்திரன் நீங்க இங்க வந்தும், நான் உங்க இடத்துக்கு வந்தும். நலம்தானே! மிக ரசித்து, என் ரசிகன் என்று சொல்லிப் பெருமை‌யும் மகிழ்வும் தந்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  12. மன்னிச்சுக்கோங்க, நாவல் படிக்கும்போது சுவாரசியம் குறைந்து விடுமோ என்று பயந்து, உங்கள் பதிவை படிக்காமலேயே கமெண்ட் போடுகிறேன். பகிர்வுக்கு நன்றி. நிறைய எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது பாலா. நல்ல கதைகளை நிறையப் பேர் படிக்க வேண்டும் என்று ஒரு தூண்டுகோலாக அமைய விரும்பித்தான் இந்த கேப்ஸ்யூல் நாவல் என்ற பதிவுகளே போடுகிறேன். நாவலைப் படிப்பேன் என்று நீங்கள் சொல்லியிருப்பதிலேயே கொள்ளை மகிழ்வு எனக்கு. பதிவைப் படிக்காவிட்டால் என்ன? மிக்க நன்றி!

      Delete
  13. என் படுக்கை அருகே, எப்போதும் நான் வைத்திருக்கும் புத்தகம் இது. மனது சரியில்லாமல் நான் மிகவும் வருந்தும் நேரங்களிலும், தூங்காத இரவுகளிலும், என் மனக்கவலைகளைப் போக்கி மகிழ்விக்கும் நல்லதொரு நகைச்சுவை மருந்து இது.

    சாவி அவர்களின் எழுத்துக்களுக்கு உயிர் ஓவியமாக கோபுலு அவர்கள் வரைந்த ஓவியங்களைப் பார்த்தாலே என் மனம் மகிழ்வடைந்து விடுவதுண்டு.

    நல்லதொரு பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸார். பகுதி பகுதியாக நான் பல முறை படித்து ரசித்துச் சிரித்திருக்கிறேன். அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை உபயத்தில் இப்போதும் சிரித்தேன். உங்களுடன் பகிர்ந்தேன். அதை நல்லதொரு பதிவென்ற உங்களின் அன்புக்கு தலைவணங்கி என் நன்றி!

      Delete
  14. பின்னூட்டங்களைப் பார்க்கும்போதே இந்தக் கதையின் பிரபல்யம் தெரிகிறது.இன்றைய ஊடகங்களில் அதிகரிப்பால் வாசிப்பில் எல்லை தொடர்புக்கு அப்பால்.கேட்டல் பார்த்தல் சுலபமாகி வாசித்தலை மடக்கிவிட்டதோ!

    ஃப்ரெண்ட் சுகம்தானே நீங்கள் !

    ReplyDelete
    Replies
    1. நல்ல சுகம் ஃப்ரெண்ட்! இங்கே சென்னையில் வெயில் தாங்கேல்ல... உங்கட இருப்பிடத்தை நினைச்சாலே பெருமூச்சுதான் வருது. இந்தக் கதை தமிழில் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவைப் புதினம். நன்றிம்மா.

      Delete
  15. நல்ல பகிர்வு சார் ! நன்றி !

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  16. பஞ்சு லல்லி காதல். கல்யாணம் முடிந்த கையோட பஞ்சு ஒரு மூலையில் படுத்துத் தூங்குவது. மிஸஸ் ராக்ஃபெல்லர் புடவை கட்டிக் கொள்வது., மொட்டை மாடில அப்பளம் உலர்த்துவது கோபுலு சாரின் ஓவியங்கள் எல்லாம் கண்ணிலியே நிற்கிறது.அந்த மாதிரி ஒரு கல்யாணம் வருமா.
    மிக நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லிம்மா. நாவல் முழுவதும் நகைச்சுவையும், கடைசில ‘பஞ்சுக்கு எதுவும் தரப்போறதில்ல. நன்றிகூட சொல்லப் போறதில்ல’ன்னு சொல்லி மிஸஸ் ராக் அவனை லல்லியுடன் சேர்த்து வெக்கிற இடம் நெகிழ்ச்சியா இருக்கும். கோபுலுவின் ஓவியங்கள் இப்பப் பாத்தாலும் அழகுதான். ரசிச்சு கருத்திட்டு என்னையும் ரசி்க்க வெச்ச உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  17. அமரர் சாவி தன்னுடைய நகைச்சுவை ததும்பும் எழுத்துக்களால் தமிழ்ப் பத்திரிகை உலகத்தில் நீண்ட காலம் வலம் வந்தவர். நவகாளி யாத்திரை போன்ற நேரடி அனுபவம் சார்ந்த புத்தகங்கள் பலவற்றை இவர் எழுதியிருந்தாலும், கற்பனையும் அங்கதமும் கலந்த ‘வாஷிங்டனில் திருமணம்’ என்கிற நூலே சாவிக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது.

    ReplyDelete
    Replies
    1. விசிறி வாழை, ஆப்பிள் பசி என்று பல நல்ல சாவியின் படைப்புகளை ரசித்திருக்கிறேன். கேரக்டரும், இங்கே போயிருக்கிறீர்களாவும் என் ஃபேவரைட். இருந்தாலும் இந்த நகைச்சுவை நாவல் தந்த பிரபலம் மகத்தானது அவருக்கு. ரசித்துக் கருத்திட்ட நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  18. வணக்கம் நண்பரே..
    சாவி அவர்களின் அற்புதமான ஒரு படைப்பை
    இங்கே மிளிரவைத்தமைக்கு நன்றிகள் பல...
    எத்தனை முறை படித்தாலும் திகட்டாத
    காவியமல்லவா இது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா... நலம்தானே! உண்மையில் நான் பல முறை படித்து விட்டேன். இப்போது படித்தபோதும் அலுப்புத் தட்டவில்லை. திகட்டாத காவியம் என்ற உங்கள் கூற்றின் உண்மையை உணர முடிகிறது எனக்கு. உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  19. மிக அருமையாக கதைத்து விட்டீர்கள் வா.திருமணத்த்தை.இன்னும் கொஞ்சம் நீட்டித்து இருக்கலாம்:)

    கூடவே கலாட்டுகளையும் பத்தி பிரித்து எழுதி இருப்பது அருமையோ அருமை.உங்களில் இருந்து இன்னும் நிறைய கேப்ஸ்யூல்ஸ் நாவலகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கதை என்று வந்தால் அவ்வளவுதான். கலாட்டாக்கள் என்றால் நான் பகிர்ந்தது கொஞ்சமே கொஞ்சம். இன்னும் நிறைய இருக்குது கதையில. தங்கையின் எதிர்பார்‌ப்பை நிறைவேற்றும்படி இன்னும் பல நல்ல விஷயங்களைத் தருகிறேன். நன்றிம்மா!

      Delete
  20. அமரர் சாவியின் படைப்பை சுருக்கி தந்து மறுபடி வாசிக்க வைத்துள்ளீர்கள் கணேஷ் சார்...கரும்பு தின்ன கூலியா /கசக்குமா என்ன...?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரெவெரி... நல்ல சு்கம்தானே! சாவி அவர்கள் இன்றும் இனிக்கும் கரும்பு என்ற உங்கள் வார்த்தைகளில் எனக்கு நூறு சதம் உடன்பாடு. மிக்க நன்றி!

      Delete
  21. மிகவும் ரசித்தேன்
    உங்களின் எழுத்து நடை அபாரம்...

    ReplyDelete
    Replies
    1. எழுத்து நடையைப் பாராட்டி தெம்பூட்டிய உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி சே.குமார்!

      Delete
  22. வாஷிங்டனில் திருமணம் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, இதுவரை அப்புத்தகத்தை வாசிக்கும் வரம் கிடைக்கவில்லை. சாம்பிளுக்கு கொடுத்திருக்கும் கலாட்டாக்கள் ஒவ்வொன்றும் குபுக் சிரிப்பை வரவழைக்கின்றன எனில் மொத்தமும் எத்தனை சுவையாக இருக்கும்! மனம் ஆவல் கொண்டுவிட்டது. இந்தியா வரும்போது அள்ளிவரவேண்டிய புத்தகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நன்றி கணேஷ்.

    மேய்ச்சல் நிலம் காலியாகவே இருக்கிறதே... ஏதேனும் மேயத் தாருங்களேன், கணேஷ். அடிக்கடி போய் ஏமாந்துவருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்தியா வரும் சமயம் என்னை அவசியம் தொடர்பு கொள்ளுங்கள் கீதா. நல்ல நூல்களை நீங்கள் சுமந்து செல்வதற்கு நான் உதவுகிறேன். மேய்ச்சல் மைதானத்தை கவனித்தீர்களா...? இம்மாத இறுதியில் முதல் பதிவிட உள்ளேன். அதன் பின் தொடர்ந்து நான் படித்த நல்ல நூல்களைப் பற்றி அதில் எழுத இருக்கிறேன். என்னைக் கூர்ந்து கவனித்து என் வளர்ச்சிக்கு உதவும் தோழிக்கு நெகிழ்வுடன் கூடிய என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  23. நீங்கள் ஒவ்வொரு புத்தகங்கள் பற்றி எழுதும் போதும்
    படிக்க ஆவல் வருகிறது
    ஆனால் புத்தகங்கள் கையில்
    கிடைப்பது தான் மிக கடினமாக
    இருக்கிறதே அங்கிள்....

    ReplyDelete
    Replies
    1. என்னம்மா செய்வது...? நீ இருக்கும் பகுதியில் உள்ள நூல் நிலையம் அல்லது வாடகை நூல்நிலையம் ஏதாவது இருந்தால் சேர்ந்து படிக்க முயற்சி பண்ணம்மா. மிக்க நன்றி.

      Delete
  24. சாவி அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட அனைத்து நூல்களும் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும்...

    http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-51.htm

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... சாவி ஸாரின் சில புத்தகங்கள் என்னிடமில்லை. தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். இங்கே கிடைக்கும் என்று சொல்லி மகிழ்வு தந்த நண்பரே... உங்களுக்கு நன்றி என்ற வார்த்தைக்கு மேல் ஏதாவது உணர்வு இருந்தால் அது உங்களைச் சேரட்டும்!

      Delete
  25. சாவியின் masterpiece என்று நிறையபேர் இந்தப் புத்தகத்தைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். என்னவோ தெரியவில்லை.. நாலைந்து முறை படிக்க முயற்சி செய்தபோதும் புத்தகத்தை ரசிக்க முடியவில்ல. பூரணம் விசுவநாதன் (?) நாடகமாக வந்தபோதும் ரசிக்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பூர்ணம் விžஸ்வநாதன் நாடகமாகப் போட்டாரா என்ன? எனக்குத் தெரியாத தகவல் இது.

      Delete
  26. மேய்ச்சல் மைதானம்?

    ReplyDelete
    Replies
    1. ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே முடியாதாம், அவனுக்கு 9 மனைவி கேக்குதாம்னு சூப்பர் ஸ்டார் ஒரு டயலாக் சொல்வார். அது மாதிரி நான் இன்னும் கொஞ்சம் மேயலாம்னு ஆசைப்பட்டு ஒரு மைதானத்தை வாங்கியிருக்கேன். மைதானம் தயாரானதும் சொல்றேன் ஸார்.

      Delete
    2. இன்னும் புரியவில்லை.. but i respect your discretion.

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube