Saturday, March 17, 2012

துப்பாக்கியில் பூத்த பூ!

Posted by பால கணேஷ் Saturday, March 17, 2012


                டெய்ஸி - 2006 - தென்கொரியத் திரைப்படம்

ரு கால்வாயின் குறுக்காக மரத்துண்டு போடப்பட்டிருக்கிறது. கையில் பெயிண்டிங் உபகரணங்களுடன் அதைக் கடக்க முயலும் அவள், தடுமாறிக் கீழே விழுகிறாள். தன் பெட்டியை மட்டும் மீட்டு தண்ணீரிலிருந்து வெளியேறிச் செல்கிறாள். அதை சற்று தூரத்திலிருந்து கவனிக்கும் அவன் ஓடிவந்து நீரில் அடித்து வரும் அவளின் பெயிண்டிங் உபகரணங்களை மீட்கிறான். சில தினங்களுக்குப் பின் அங்கே வரும் அவளுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது! கால்வாயி்ன குறுக்கே மரப்பாலம் அமைககப்பட்டிருக்கிறது. அங்கே ஒரு கிளையில் அவளது உபகரணங்கள் அடங்கிய பை வைக்கப்பட்டிருக்கிறது. தனக்காக யார் செய்தது என்று வியந்து, தான் வரைந்த டெய்ஸிப் பூக்களின் சித்திரத்தை அவனுக்காக அங்கே விட்டுச் செல்கிறாள் அவள். அன்று துவங்கி தினம் மாலை 4.15க்கெல்லாம் ‘ஃப்ளவர்’ என்ற குரலுடன் அவள் வீட்டு வாசலில் டெய்ஸிப் பூக்கள் வைக்கப்படுகிறது. அவன் யாரென அறிய அவள் எவ்வளவு விரைந்து ஓடிவந்து பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனைக் காணும் ஆவல் அவளுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

அவன் பெயர் பார்க் யீ! ஒரு தொழில் முறைக் கொலையாளி. அவளைப் பார்த்ததில் இருந்துதான் அவனுக்குள் பூ பூத்திருக்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் துப்பாக்கிப் புகை விலக இந்தப் பூப்பூத்தல் காரணமாக இருக்கும் என அவன் நம்புகிறான். அவள் இருக்கும் வீட்டிற்கு எதிர் வரிசையிலேயே மாடியில் ஒரு அபார்ட்மெண்டிற்கு குடிவந்து பைனாகுலர் மூலம் அவளை ரசித்து வருகிறான். அவன் வீட்டு வாசலில் கறுப்பு ட்யூலிப் மலர்கள் வைக்கப்பட்டால், தலைவனைச் சந்தித்து அவன் தரும் போட்டோவை பெற்றுக் கொண்டு, அந்த நபரைத் தீர்ப்பது அவன் வேலை. அந்தத் தலைவன் பார்க் யீயை, பெண்களைக் காதலிப்பது என்பது துப்பாக்கிக்கு நேராக மார்பைக் காட்டுவது போல, உனக்குத் தேவையற்ற வேலை என்று விமர்சி்க்கிறான்.

அவள் பெயர் ஹ்யூ யங்! நெதர்லாந்தில் ஒரு சதுக்கத்தில் அமர்ந்து 30 யூரோ கொடுப்பவர்களை வரைந்து தரும் ஓவியர் அவள். அன்று ஒருவன் கையில் டெய்ஸிப் பூககளுடன் வந்து அவளுக்குப் பூக்களை கொடுத்துவிட்டு தன்னை வரையச் சொல்கிறான். அவள் பாதி வரைந்து கொண்டிருககும் போதே எதையோ பார்த்துவிட்டு, ‘நாளை வருகிறேன்’ என்று விட்டு ஓடிவிடுகிறான். அவன்தான் தனக்கு மலர் அனுப்புபவனோ என்று மனதில் ஐயம். அவன் ஓவியத்தை பூர்த்தி செய்து வீட்டில் வைக்கிறாள் அவள். மறுதினம் அவன் வந்து மீண்டும் டெய்ஸிப் பூ தர, உங்களை வரைந்த ஓவியத்தின் மீது காப்பி கொட்டி விட்டது, புதிதாக வரைகிறேன் என்று மீண்டும் வரைகிறாள் அவள். அவன்தான் தனக்கு பூக்களை அனுப்புபவன் என்று (தவறாக) எண்ணி அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள் ஹ்யூ யங்!

மாடியிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்துக் கொண்டி ருக்கும் கொலையாளியான பார்க் யீ, யார் இந்தப் புதியவன்... இவளுடன் சிரித்துப் பேசுகிறான் என்று புரியாமல் குழம்புகிறான். அந்தப் புதியவன் பெயர் ஜியாங் வூ. அவன் ஒரு இன்டர்போல் போலீஸ் ஆஃபீஸர். ஒரு போதைப் பொருள் ராக்கெட்டை பிடிக்க வந்தவன், அந்த சதுக்கத்திலிருந்து எல்லாப் பக்கமும் பார்க்க முடியும் என்பதால் அவள் முன் வரைய உட்கார்ந்தவன், அவளின் டெய்ஸிப் பூ காதலையும், தன்னை அதை அனுப்புபவனாக எண்ணி காதலிப்பதையும் உணர்கிறான். அவளிடம் உண்மையைச் சொல்லாமல், பொய்யும் சொல்லாமல் மெளனமாக இருந்து அவள் காதலனாகிறான்.

மழை பெய்து கொண்டிருக்க, கையில் குடையுடன் அவளைக் காண வரும் ஜியாங் வூ ஒரு மர்ம உருவத்தை சந்தேகித்து துரத்த, ஒரு முட்டுச் சந்தில் அதனால் தாக்கப்பட்டு மயக்கமாகிறான். அவனைத் தாக்கிய பார்க் யீ, அவன் பர்ஸிலிருந்த ஐடிகார்ட மூலம் அவன் யாரென்பதை அறிகிறான். பணத்துக்காக திருடியது போல பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போக, ஜியாங் வூவும் அப்படியே எண்ணி ஆறுதலாகிறான்.

டெய்ஸிப் பூ!
மறுதினம் ஹ்யூ யங்கின் முன்னால் ஜியாங் வூ அமர்ந்து சூழ்நிலை மறந்து பேசிக் கொண்டிருக்க, அவனைச் சுற்றி வளைக்கிறது போதைப் பொருள் ராக்கெட் கும்பல். மாடியிலிருந்து அதைப் பார்க்கும் பார்க் யீ, அங்கிருந்தே டெலஸ்கோப் துப்பாக்கியால் அவர்களைச் சுட்டு இவனைக் காப்பாற்றுகிறான். இவனும் சுதாரித்து அவர்களைச் சுட, நாலாபக்கமும் துப்பாக்கிகள் சீறுகின்றன. அதில் ஒரு குண்டு ஹ்யூ யங்கின் ‌கழுத்தில் பாய்ந்து விடுகிறது. அவளை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு, மாடியிலிருந்து சுட்டவனைப் பிடிக்க வருகிறான் ஜியாவ் வூ. ஆனால் பார்க் யீ, அவனை காலில் சுட்டு வீழ்த்தி விட்டுத் தப்பி விடுகிறான்.

தொண்டையில் குண்டுபட்ட அவளுக்கு பேசும் சக்தி போய் விடுகிறது. அன்றிலிருந்து ஜியாங் வூ கண்ணில் படவேயில்லை. அவள் சோக சித்திரமாக இருப்பதை காணச் சகியாமல் அவளின் முன்வந்து அறிமுகமாகும் பார்க் யீ, அவளுக்கு நல்ல நண்பனாகிறான். அவன் தன்னை நேசிப்பதை உணரும் அவள், தன் காதலைப் பற்றி அவனிடம் சொல்கிறாள். நட்பே போதும் என்கிறான் பார்க் யீ‌. இந்நிலையில் ஆறு மாதத்தின் பின் ஜியாங் வூ திரும்ப வருகிறான். அவன் நண்பரான டிடெக்டிவ் அவனிடம், அவன் காதலியின் புது நட்பு பற்றிச் சொல்கிறார். நேராக அவளிடம் வந்து அவன் தான் போலீஸ்காரன் என்பதையும், துப்பறிய அவளையும், அவள் காதலையும் பயன்படுத்தியதாகச் சொல்லி மன்னிப்புக் கேட்டு திரும்பிப் பாராமல் சென்று விடுகிறான். அப்போது வீட்டின் உள்ளே பார்க் யீயும் இருப்பதால் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

அவன் நண்பரான டிடெக்டிவ் மூலம் பார்க் யீ பற்றி அறிகிறான் ஜியாங் வூ. வாடகைக் கொலையாளிகளின் ராக்கெட்டை பிடிக்க தான் முயன்று, அவர்கள் எப்படி அமர்த்தப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து விட்டதாகச் சொல்கிறார் நண்பர். ‘‘அவனைப் பிடிக்க வேண்டுமானால் அவனை வேலைக்கு அமர்த்திக் கொள், என் படத்தைக் கொடுத்து என்னைக் கொல்லச் சொல்லி பணிக்கு அமர்த்து’’ என்கிறான் ஜியாங் வூ. அவர் அப்படியே செய்ய, தலைவன் மூலம் தனக்கு வரும் படத்தைப் பார்த்து திடுக்கிடுகிறான் பார்க் யீ. சதுக்கத்தில் காரில் அமர்ந்து சுற்றிலும் மறைவான போலீஸ் பாதுகாப்பில் இருககும் ஜியாங் வூவிடம் வந்து அவனுடன் பேச வேண்டும் என்கிறான் பார்க் யீ. போலீஸ் நண்பர்களைத் தவிர்த்துவிட்டு வேறு அமைதியான பகுதிக்கு அவனை அழைத்துச் செல்கிறான் ஜியாங் வூ. காரில் பேசுகையில் பார்க் யீ தான் பூக்கள் அனுப்பிய காதலன் என்பதும், வாடகைக் கொலையாளி அவன்தான் என்பதும் ஜியாங் வூவிற்குத் தெரிகிறது. அவன் யார் என்பதை தான் அறிவேன் என்றும், என்ன நோக்கத்திற்காக தன்னிடம் அவன் போட்டோவை அனுப்பினான் என்பது தனக்குத் தெரியும் என்றும் பார்க் யீ சொல்கிறான்.

இப்படி ஒருவரையொருவர் நன்கு அறிந்த நிலையில் காதல் எதிரிகள் மற்றும் தொழில் முறை எதிரிகளான அவர்களின் சந்திப்பு நிகழ்கிறது. அதன்பின் நி்கழ்ந்த மோதலின் முடிவில் என்ன நிகழ்ந்தது? பிழைத்தது ஜியாங் வூவா இல்லை பார்க் யீயா? இருவரில் யாரை ஹ்யூ யங் ஏற்றுக் கொண்டாள்? பார்க் யீயின் தலைவரும், ஜியாங் வூவின் இன்டர்போல் அமைப்பும் என்ன செய்தன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை நிச்சயம் நான் நிச்சயம் சொல்ல மாட்டேன். பரபரவென நகரும் இப்படத்தின் கடைசி அரைமணி நேரங்கள் பதில் சொல்லும். தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படத்தில் என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், ஒரு காதல் கதைக்குரிய மென்மையும், உணர்ச்சி மோதல்களும் நம் மன‌தைத் தொட்டு அசைக்கிறது. அதே சமயம் வா‌டகைக் கொலையாளி, போலீஸ் மோதலின் காரணமாக அடுத்தடுத்து சுவாரஸ்யமான முடிச்சுகளும், சம்பவ்ஙகளுமாக துப்பறியும் படம் போல பரபரவென்று போரடிக்காமல் படம் விரைகிறது. இப்படி மென்மையையும், ஸ்பீடையும் பாலன்ஸ் செய்ய எப்படி இயக்குனரால் முடிந்தது என்ற வியப்பு இன்னமும் என்னுள்! அழகான அந்தக கதாநாயகியும், கண்களில் ஒற்றிக் கொள்வது போன்ற அழகிய படப்பிடிப்பும் (இயக்குனர்தான் ஒளிப்பதிவாளரும்!) படம் பார்ப்பதை ஒரு அற்புத அனுபவமாக்குகின்றன.

2006ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைப் பற்றிய தொழி்ல்நுட்பத் தகவல்கள் : Directed by     Andrew Lau, Produced by     Teddy Yung, Written by : Kwak Jae-yong, Music by : Shigeru Umebayashi, Cinematography :Andrew Lau, Editing by : Chan Ki Hop, Running time : 110 min, 125 min. (Hong Kong edit), Country : South Korea, Hong Kong, Language: Korean.

அவளை ஒரு உணவகத்தில் இருக்கச் சொல்லி விட்டு புயல் வேகத்தில் ஓடிச் சென்று, பார்க் யீ தன் கொலைத் தொழிலையும் செய்து விட்டு கூலாக அவளுடன் பேசுவது, காபி‌ கொட்டியதாக அவள் சொன்ன தன் ஓவியத்தை அவள் வீட்டில் பார்த்து ஜியாங் வூ வியக்கையில் அவள் வெட்கப்படுவது, மூன்று பேரின் மன உணர்வுகளை பார்வையாளருக்கு விவரிக்கும் விதமாக குரல்களில் சொல்லி கதையை நகர்த்திச் சென்றது, கொலையாளிக்குள் இருக்கும் சங்கீத ரசனையும், மென்மையான சுபாவங்களும், போலீஸ் காரனிடம் இல்லை என்ற நகைமுரணை போகிற போக்கில் விளக்கியது, அவள் தன் எதிரில் இருக்கும் பார்க் யீ முகத்தை வரைய முற்பட இயல்பாக அவள் கை  ஜியாங் வூ முகத்தை வரைந்துவிட அதைக் கண்டு அவள் அழுவது -என்று இந்தப் படம் தந்த ஆச்சரியங்கள் நிறைய... நுணுக்கமாக ஒவ்வொன்றையும் விவரிக்க ஆசையாக இருந்தாலும் பதிவு நீண்டுவிட்ட காரணத்தால் இத்துடன் முடிக்கிறேன்.

இப்படத்தை யூ டியூப்பில் முழுமையாகப் பார்த்து ரசிக்கலாம். அல்லது டவுன்லோடு செய்தும் பார்த்து ரசிக்கலாம். அதற்கான லிங்க்குகள்:

http://www.youtube.com/watch?v=w3CtE6zmujk

http://www.fileserve.com/file/wKyDRRa


பின்குறிப்பு: என்னாலும் திரைப்படத்தைப் பற்றி எழுத முடியும் என்று நம்பிக்கை வைத்து எழுதத் தூண்டிய நண்பர் குமரன் அவர்களுக்கு நன்றி!

26 comments:

  1. இதுக்காக முழு படத்தை யூ ட்யூபில் பார்க்க முடியுமா பாஸ்....அதுதான் அங்கே கிடைக்குது இல்லே...முழுசா சொல்லிடலாம் இல்லே....இப்படி அம்போன்னு விடுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா படிச்சிருக்கவே மாட்டேனே....!! சொல்லுங்க பாஸ்!

    ReplyDelete
  2. முழுக் கதையையும் சொல்லிட்டிருந்தேன் முன்னல்லாம். ஆனா நெட்ல சினிமா விமர்சனம் எழுதற மத்தவங்கல்லாம் முழுக் கதையையும் எழுதாம தான் அறிமுகம் தர்றாங்க. சங்கத்துல அப்படி தீர்மானமாம். அதுனாலதான் டவுன்லோடு லிங்க்கும் தந்திருக்கேன். பாத்து ரசிங்க ஸ்ரீராம் ஸார்! நன்றி!

    ReplyDelete
  3. முழு கதையும் கொடுத்து விட்டீர்கள்தான் படம் தமிழில் இருந்தால் இன்னும் புரிதலாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்ததற்கு மிக்க நன்றி எஸ்தர்!

      Delete
  4. அருமையான பகிர்வுகள்..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றிகள் பல!

      Delete
  5. மீதிக் கதையை எங்கள் ப்ளாக் ஜிமெயிலுக்கு அனுப்பி வையுங்கள். ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. இது சூப்பர் ஐடியா! இன்னும் சற்று விரிவாக மீதிக் கதையை எழுதி இன்று இரவு அனுப்பி விடுகிறேன். ஓ.கேயா? நன்றி ஸார்!

      Delete
  6. நல்ல நல்ல பகிர்வுகள் கிடைக்குது உங்க பக்கம் வந்தால் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நல்ல விஷயம் என்று ரச்த்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  7. அண்ணா! திரைப்பட விமர்சனம் எழுதுபவர்களெல்லாம் ஒன்றும் வரம் வாங்கி வரவில்லை. தொடர்ந்து இது போல் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அண்ணா என்றழைத்த எங்கஊர் அழகு, சிறப்பாக எழுதினேன் என்றும் பாராட்டியிருக்கீங்க. யாவற்றுக்கும் என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. அழகான கதை சுருக்கம். முடிவும் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். லிங்க் கொடுத்துள்ளதற்கு நன்றி சார். பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. அட, நீங்களும் இதையே சொல்றீங்க. அடுத்த முறை எந்தப் படம் எழுதினாலும் முடிவு வரை சொல்லிடறேன். ஓகே.யா தோழி? முடிந்தால் பார்த்து நான் சொல்லியிருப்பது சரியா என்று சொல்லுங்கள். உற்சாகம் தந்த நற்கருத்துக்கு என் இதய நன்றி.

      Delete
  9. கதையை வர்ணித்த விதம் ரொம்ப நேர்த்தி...பார்த்துடறேன் சீக்கிரம்.

    ReplyDelete
    Replies
    1. பாருங்கக்கா... உங்களுக்கும் இது ரொம்பவே பிடிச்சுப் போகும். தங்களுககு என் இதய நன்றி.

      Delete
  10. படம் பார்க்க சீரியல் பார்க்க ஆசைப்பட்டு டிவி முன்னால் உட்கார்ந்தாலும் பத்து நிமிடத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தாம்மா. நான்கூட எப்பவாவது தான் டிவி பாக்கறேன். ஆனா ஒரிஜினல் டிவிடிகள் வாங்கி சினிமா பாக்கற பைத்தியம் மட்டும் இன்னும் போகலை. அதனால ரசிச்சதை முடியறப்ப பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன். மிக்க நன்றி!

      Delete
  11. முகத்தை வரைய முற்பட இயல்பாக அவள் கை ஜியாங் வூ முகத்தை வரைந்துவிட அதைக் கண்டு அவள் அழுவது -என்று இந்தப் படம் தந்த ஆச்சரியங்கள் நிறைய... நுணுக்கமாக ஒவ்வொன்றையும் விவரிக்க ஆசையாக /// தங்கள் வர்ணனையில் அழகுற கண் முன் வந்த கதையை கழுத்தை நெரித்த கதையாகிவிட்டது வசந்தமே .

    ReplyDelete
    Replies
    1. அடடா... அடுத்த முறை இன்னும் அழகாக முழுமையாகத் தந்து விடுகிறேன். மிக்க நன்றி தென்றல்!

      Delete
  12. எழுத்தில் மிக வலிமையுள்ள உங்களுக்கு சினிமா பட விமர்சனம் எழுதுவது மிக கடினம் அல்ல என்பது எனது கருத்து

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் கருத்தை உரைத்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  13. //தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். //

    அடடாஅ......இப்படி முடிச்சுட்டீங்களே!!!

    //அவள் தன் எதிரில் இருக்கும் பார்க் யீ முகத்தை வரைய முற்பட இயல்பாக அவள் கை ஜியாங் வூ முகத்தை வரைந்துவிட அதைக் கண்டு அவள் அழுவது -என்று இந்தப் படம் தந்த ஆச்சரியங்கள் நிறைய...//

    ரசிக்க முடிகிறது....சொகமான ரசனை...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  14. சில வாரங்களாக சில பிரச்சனைகள்..அதனால்தான் இணையப்பக்கமே வர முடியவில்லை..அதற்கு என்னை முதலில் மன்னியுங்கள்.
    மிகவும் அருமையான விமர்னம் ஐயா..என்னுடைய பெயரை விமர்சனத்தில் போடுமளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்..ஒரு அற்ப்புதமான எழுத்தாளரான தங்களது இனிய நட்பு எனக்கு கிடைத்ததில் மனம் பெருமைக்கொள்கிறது.நன்றி..

    ReplyDelete
    Replies
    1. குமரன்... நீங்கள் ரசித்ததில் மிக்க மனநிறைவு எனக்கு. என்னை எழுதத் தூண்டிய ஒவ்வொரு நண்பரையும் மறக்காமல் பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்வதில் தனி மகிழ்வு எனக்கு. வலைத்தளம் எனக்களித்த நல்ல நட்புகளில் நீங்களும் ஒருவர். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube