Monday, November 7, 2011

ராஜேஷ்குமாரும், நகைச்சுவையும்!

Posted by பால கணேஷ் Monday, November 07, 2011
ராஜேஷ்குமாருக்கு அறிமுகம் தேவையில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட க்ரைம் நாவல்களை எழுதி க்ரைம் கதை மன்னன் என்று பெயர் வாங்கியிருக்கும் இவர் அவ்வப்போது சமூக நாவல்களையும் எழுதுவதுண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வு பலர் அறியாதது. ஊஞ்சல் இதழின் உதவி ஆசிரியராக நான் இருந்தபோது, ராஜேஷ்குமார் தன் வாழ்வில் நடந்த நகைச்சுவை அனுபவங்களை ஒரு மினி தொடராக எழுதியதை வெளியிட்டோம். அதில் எனக்குப் பிடித்த ஒரு அத்தியாயத்தை, அவரின் அனுமதியோடு இங்கே வழங்குகிறேன்.

============================================================
1971ம் வருடம். நான் பி.எட். படிப்பைப் படித்து வாங்கிய டிகிரி கையில் சூடு ஆறுவதற்கு முன்பே எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்து விட்டது. பிரித்துப் பார்த்தேன். பவானிசாகர்க்கு பக்கத்தில் உள்ள பேஸிக் ட்ரெய்னிங் ஸ்கூலில் உள்ள மாணவர்களுக்கு கல்விக் கண்ணைத் திறக்கச் சொல்லி உத்தரவு போட்டிருந்தார்கள். பெட்டி படுக்கையோடு உடனே புறப்பட்டு விட்டேன்.

நல்ல பகல் நேரத்தில் பஸ்ஸில் போய் இறங்கினேன். கிராமம் பொட்டலாய் இருந்தது. சுற்றிலும் ஆள் நடமாட்டம் இல்லை. எங்கோ ஒரு தலை தெரிந்தது.

‘‘வாங்க.. வாங்க...’’

குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். நடுத்தர வயதில் அந்த நபர் தெரிந்தார். வேஷ்டி சட்டையில் பட்டை பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியோடு வாயில் வெற்றிலைச் சீவலோடு நிரம்ப ஜாக்கிரதையாய்ப் பேசினார்.

‘‘என்ன... பேஸிக் ட்ரெய்னிங் ஸ்கூல்ல டீச்சர் போஸ்டிங்கா..?’’

‘‘ஆமா...’’ தலையாட்டினேன்.

‘‘நான் ராகவமூர்த்தி. அதோ தெரியுதே ஓட்டு வீடு. அதுதான் இந்த கிராமத்தோட போஸ்ட் ஆபீஸ்! நான் போஸ்ட் மாஸ்டர். ஏதாவது போன் போடணும்னா ட்ரங்க்கால் புக் பண்ண நீங்க அங்கேதான் வரணும்...’’

நான் அவரோடு நடந்தேன். ‘‘தம்பி! இதுக்கு முன்னாடி ஏதாவது கிராமத்துல தங்கியிருந்து வேலை பார்த்த அனுபவம் இருக்கா?’’ என்று கேட்டபடி, ஏதோதோ சொல்லிக் கொண்டே வந்தார்.

============================================================

நான் வேலைக்குச் சேர்ந்து ஆசிரியராய் பணிபுரிய ஆரம்பித்து ஐந்து மாத காலம் ஓடி விட்டது. இந்த ஐந்து மாத காலத்தில் கிராமம் எனக்கு வெகுவாய்ப் பிடித்துப் போயி்ற்று. பள்ளி இல்லாத நாட்களில் போஸ்ட் ஆபீஸில் உட்கார்ந்து போஸ்ட் மாஸ்டரோடு அரசியல், சினிமா என்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன்.
ஒரு நாள் சனிக்கிழமை. பகல் பதினோரு மணி. அன்று பள்ளி இல்லாத காரணத்தால் நான் போஸ்ட் ஆபீசில் உட்கார்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டிய படி போஸ்ட் மாஸ்டரோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது வெளியூரிலிருந்து டெலிபோனுக்கு அழைப்பு வந்தது.

போஸ்ட் மாஸ்டர் எடுத்துப் பேசினார். ‘‘பேர் என்ன சொன்னீங்க..? நடராஜனா? அட்ரஸ் சொல்லுங்க... பி.பி. கால்ன்னா அவரை மட்டுந்தான் கூப்பிடுவோம்...’’

போஸ்ட் மாஸ்டர் ரிஸீவரை வைத்துவிட்டு உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய அலுவலக ஊழியரைக் கூப்பிட்டார்.  ‘‘புதுக்கிணறு தெருவில 34ம் நம்பர் வீட்டில நடராஜன்னு ஒருத்தர் இருப்பார். அவரைப் போய் கூட்டிட்டு வா. பி.பி. கால் வந்திருக்குன்னு சொல்லு. திருச்சியிலிருந்து அவரோட மாமா மாணிக்கவாசகம் பேசறார்ன்னு சொல்லு...’’

‘‘ஸார்... அவர் வீட்ல இல்லேன்னா... வேற யாரையாவது கூட்டி வரவா?’’

‘‘வேண்டாம். இது பி.பி. கால். அவர் வீட்ல இல்லேன்னா வந்துடு...’’

‘‘சரி ஸார்...’’ ஊழியர் வெளியில் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போய்விட நான் போஸ்ட் மாஸ்டரிடம் கேட்டேன். ‘‘அது என்ன பி.பி. கால்?’’

‘‘அதுவா..? PARTICULAR PERSON என்கிற வார்த்தையைத்தான் சுருக்கி பி.பி.ன்னு கூப்பிடறோம். வீட்ல இருக்கிற ஒரு குறிப்பிட்ட நபரோட மட்டும் சில பேர் பேச விருப்பப்படுவாங்க. அவர் வீட்ல இருந்தா கூட்டி வந்து பேச வைப்போம்...’’

ஒரு பொதுஅறிவு விஷயத்தைத் தெரிந்து கொண்ட சந்தோஷத்தோடு கையில் இருந்த நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தேன். பதினைந்து நிமிஷம் கரைந்து போயிருக்கும். தபால் ஊழியர் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை உள்ளே கூட்டி வந்தார்.

‘‘பி.பி. வந்துட்டாரா..? அப்படி உட்கார வை. இன்னும் பத்து நிமிஷத்துல கால் வந்துடும்...’’

அழைத்து வரப்பட்ட அந்த நபர் இறுக்கமான முகத்தோடு அங்கே போடப்பட்டு இருந்த பெஞ்சில் அமர்ந்தார். ஊழியர் போஸ்ட் மாஸ்டரிடம், ‘‘சார், காபி வாங்கிட்டு வரட்டுமா?’’ என்று கேட்டார். ‘‘பி.பி.க்கு காபி வேணுமான்னு கேட்டுட்டு மூணு காப்பியா வாங்கிட்டு வா. இல்லன்னா, ரெண்டு காபி வாங்கிட்டு வந்துடு.’’ என்றார் போஸ்ட் மாஸ்டர்.

அடுத்த பத்து நிமிஷங்களில் திருச்சியிலிருந்து அந்தக் கால் வந்து விட்டது. போஸ்ட் மாஸ்டர் உரக்கக் குரல் கொடுத்தார். ‘‘பி.பி.யைக் கூப்பிடுய்யா... கால் வந்தாச்சு...’’

அந்த நபர் இறுக்கம் குறையாத முகத்தோடு அறைக்கு வந்து ரிஸீவரை எடுத்துப் பேசினார். மூன்று நிமிஷத்தில் பேச்சை முடித்துக் கொண்டவர் பிறகு ரிஸீவரை கோபமாய் லொட்டென்று வைத்து விட்டு வெளியேறினார்.

நானும போஸ்ட் மாஸ்டரும் திகைப்போடு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டோம். ‘‘என்ன ஸார், பி.பி. இவ்வளவு கோபமாய்ப் போறார்?’’

‘‘ஏதாவது எமோஷனல் நியூஸாய் இருக்கும். இல்லேன்னா... அங்கிருந்து பேசின நபர் பணம் ஏதாவது கேட்டிருப்பார்...’’

============================================================


மேலும் ஒரு பதினைந்து நிமிஷம் போஸ்ட் ஆபீசில் இருந்துவிட்டு நான் என்னுடைய அறைக்குத் திரும்புவதற்காக நாற்காலியினின்றும் எழுந்த விநாடி வாசலில் அந்தச் சத்தம் கேட்டது. கோபமான பேச்சுச் சத்தம்.

நானும் போஸ்ட் மாஸ்டரும் திரும்பிப் பார்த்தோம். போஸ்ட் ஆபீஸ் வாசலில் ஒரு கும்பல் நின்றிருந்தது. பத்துப் பதினைந்து பேர்கள் இருக்கலாம். அதில் பாதிப் பேர் பெண்கள். நான்கைந்து ஆண்களிடம் உருட்டுக் கட்டைகள் தெரிந்தன. ஒருவன் கத்தினான்.

‘‘யோவ் போஸ்ட் மாஸ்டர்! வாய்யா வெளியே...’’

இரண்டு பேரும் வந்தோம். அந்தக் கோபமான கும்பலுக்கு முன்பாய் சற்று நேரத்திற்கு முன்னால் போஸ்ட் ஆபீஸுக்கு வந்து போன் பேசிவிட்டுப் போன அந்த பி.பி. நபரும் நின்றிருந்தார். எங்களைப் பார்த்ததும் கும்பலைத் திரும்பிப் பார்த்து, அங்கேயிருந்த பெரியவரிடம் கோபமாயச் சொன்னார்.

‘‘இவஙகதான்...’’

அந்தப் பெரியவர் வேகமாய் முன்னால் வந்து நின்றார். ‘‘ஏன்ய்யா.,.. நடராஜன் பெரிய நாதஸ்வர வித்வானாய் இல்லாவிட்டாலும் ஏதோ அவனோட திறமைக்கு ஏத்த மாதிரி கல்யாணம், திருவிழான்னு போய் நாதஸ்வரம் வாசிச்சிட்டு வர்றான். அவனுக்கு பரம்பரைத் தொழிலே நாதஸ்வரம் வாசிக்கிறதுதான். அவனையும், அவனோட தொழிலையும் கேவலப்படுத்தற மாதிரி பீப்பி வந்தாச்சு, பீப்பி வந்தாச்சுன்னு சொல்றது என்னய்யா நியாயம்? சின்னப்பசங்க மாதிரி பீப்பின்னு சொல்றதுக்குப் பதிலா நாதஸ்வரம் வாசிக்கிறவர்ன்னு சொல்லியிருக்கலாமே...’’

எங்களுக்குப் புரிந்து விட்டது. போஸ்ட் மாஸ்டர் அவசரமாய்ச் சொன்னார். ‘‘அய்யா... அது பீப்பி இல்லே... பி.பி.’’

‘‘ரெண்டும் ஒண்ணு தானே..?’’

நான் குறுக்கிட்டேன். ‘‘அய்யா... இது அந்த பீப்பி இல்ல. இங்கிலீஷ்ல வர்ற எழுத்தான பி.பி. ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் போன்ல பேசணும்னு போன் பண்ணினவர் ஆசைப்பட்டா பி.பி.ன்னு சொல்லுவாங்க...’’ என்று சொல்லி, எழுதிக் காண்பித்து, அவர்களைச் சமாதானம் செய்வதற்குள் எனக்கும் போஸ்ட் மாஸ்டருக்கும் வியர்த்துப் போய் விட்டது.

கூட்டம் எங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு கலைந்து போனாலும், அதில் ஒருவன் திரும்பிச் சொன்னான்: ‘‘இந்த வாட்டி எதையோ சொல்லித் தப்பிச்சுட்டீங்க... இன்னொரு வாட்டி சொன்னா... நடக்கிற கதையே வேற!’’

==================================================

33 comments:

  1. ஒரு பி.பி கால்ல இவ்ளோ வில்லங்கம் வந்துச்சா.. ஹ.ஹா...

    ReplyDelete
  2. சிறந்த எழுத்தாளர்களில் பெரும்பாலானோருக்கு நிறைய நகைச்சுவை உணர்வு இருக்கும் என்பதை ராஜேஷ்குமாரின் கட்டுரை உறுதிப்படுத்துகிறது. நல்ல பகிர்வு கணேஷ்!

    ReplyDelete
  3. ராஜேஷ் குமார் போன்ற எழுத்தாளர்களுக்கு...

    அவர்களுடைய கதைக்கான கருவை இந்த சமுகத்தில் இருந்தே எடுக்கிறார்கள்..


    இந்த சமுகத்தை எட்டிப் எழுத்தபடும் இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் அத்தனையும் கண்டிப்பாக வெற்றிப்பெறும் மற்றும் காலம் கடந்தும் வெற்றிப்பெறும்...

    இவை நம்பகூடிய உண்மை..


    இது போன்ற நிகழ்ச்சிகள் கிராமங்களில் நிறைய நடக்கும்.
    இனி அவர் பி.. பி.. என்று சொல்லமாட்டார்.. போல...

    ReplyDelete
  4. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஒரு பி.பி கால்ல இவ்ளோ வில்லங்கம் வந்துச்சா.. ஹ.ஹா...

    -அது மொபைல் போன் வராத, எஸ்டிடி வசதி இல்லாத காலம். அதனால் வந்த வினை... நன்றி கருன்.

    ReplyDelete
  5. சேட்டைக்காரன் said...
    சிறந்த எழுத்தாளர்களில் பெரும்பாலானோருக்கு நிறைய நகைச்சுவை உணர்வு இருக்கும் என்பதை ராஜேஷ்குமாரின் கட்டுரை உறுதிப்படுத்துகிறது. நல்ல பகிர்வு கணேஷ்!

    -நீங்கள் சொன்னது சரி. அந்த தொடர் முழுவதுமே அவரின் நகைச்சுவை மிளிர்ந்தது. சில பதிவுளுக்குப் பின் இன்னொரு சம்பவத்தைத் தருகிறேன்.

    ReplyDelete
  6. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    ராஜேஷ் குமார் போன்ற எழுத்தாளர்களுக்கு... அவர்களுடைய கதைக்கான கருவை இந்த சமுகத்தில் இருந்தே எடுக்கிறார்கள்..
    இந்த சமுகத்தை எட்டிப் எழுத்தபடும் இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் அத்தனையும் கண்டிப்பாக வெற்றிப்பெறும் மற்றும் காலம் கடந்தும் வெற்றிப்பெறும்...
    இவை நம்பகூடிய உண்மை..
    இது போன்ற நிகழ்ச்சிகள் கிராமங்களில் நிறைய நடக்கும். இனி அவர் பி.. பி.. என்று சொல்லமாட்டார்.. போல..

    -வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர் சார்...

    ReplyDelete
  7. தமிழ்மணத்தில் 4-வது ஓட்டை பதிவு செய்திருக்கிறேன்..

    நண்பரே...

    ReplyDelete
  8. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    தமிழ்மணத்தில் 4-வது ஓட்டை பதிவு செய்திருக்கிறேன்..

    -உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்... இதயம் நிறைந்த நன்றி நண்பா...

    ReplyDelete
  9. எனக்கு மிகவும் பிடித்த ஓரு எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவரின் இன்னும் ஓரு எழுத்து பக்கத்தை அறியத்தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  10. ஜூப்பரு! Thank you for sharing this. :-))))

    ReplyDelete
  11. K.s.s.Rajh said...
    எனக்கு மிகவும் பிடித்த ஓரு எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவரின் இன்னும் ஓரு எழுத்து பக்கத்தை அறியத்தந்தமைக்கு நன்றி.

    -வருகைக்கும் கருத்துக்கம் நன்றி நண்பரே...

    ReplyDelete
  12. Chitra said...
    ஜூப்பரு! Thank you for sharing this. :-))))

    -படிச்சதுக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க. (எனக்கு ‘வெட்டிப்பேச்சு‘ ப்ளாக் மிகவும் பிடிக்கும். பாளையங்கோட்டையில் பிறந்த அந்தச் சித்திரம்தானே நீங்கள்?)

    ReplyDelete
  13. Chitra said...
    ஜூப்பரு! Thank you for sharing this. :-))))

    இப்போதான் உங்க ப்ளாக் போய் தலதீபாவளி கட்டுரை படிச்சு கருத்து போட்டேன். நிறைய எழுதுங்க சிஸ்...

    ReplyDelete
  14. ‘‘இந்த வாட்டி எதையோ சொல்லித் தப்பிச்சுட்டீங்க... இன்னொரு வாட்டி சொன்னா... நடக்கிற கதையே வேற!’’/////


    ஹா..ஹா..ஹா.. சிரித்து முடியலேண்ணே.இன்னும் இதுபோல் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  15. ஸாதிகா said...
    ‘‘இந்த வாட்டி எதையோ சொல்லித் தப்பிச்சுட்டீங்க... இன்னொரு வாட்டி சொன்னா... நடக்கிற கதையே வேற!’’/////

    ஹா..ஹா..ஹா.. சிரித்து முடியலேண்ணே.இன்னும் இதுபோல் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்!

    -கைவசம் நிறைய ஸ்டாக் இருக்கும்மா. அடுத்தடுத்த தர முயல்கிறேன். ரசித்தற்கு நன்றி.

    ReplyDelete
  16. ராஜேஷ்குமாரின் நகைச்சுவை உணர்வு எனக்குத்தெரிந்தது என்றாலும் உங்கள் எழுத்தில் அதைப்படிக்கிறபோது கூடுதலா ரசிச்சேன் கணேஷ்.

    ReplyDelete
  17. ஷைலஜா said...
    ராஜேஷ்குமாரின் நகைச்சுவை உணர்வு எனக்குத்தெரிந்தது என்றாலும் உங்கள் எழுத்தில் அதைப்படிக்கிறபோது கூடுதலா ரசிச்சேன் கணேஷ்.

    -உங்கள் ரசிப்புத் தன்மைதான் எனக்கு ஊக்கம். நன்றி.

    ReplyDelete
  18. சிறு வயதில் அவர் நாவல்களை படிப்பதுண்டு, ஒரு முறை கேள்வி பதில் பகுதியில், இந்தியாவில் கூட்டம் கூட்டமாய் மக்கள் போராடுகிறார்கள், சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது அதனால் எரிச்சலடைந்ததாகவும், மேல் நாடுகளில் இது போல் நடப்பதில்லை... என்றும் கூறியிருந்தார்.. மேலும் கூறுகையில் ஆட்சியாளர்களிடம் மனு கொடுக்காமல் போராடுவது அபத்தமானது என்றும் கூறியிருந்தார்... அன்று ராஜேஷ்குமார் எழுத்துக்களை படிப்பதை விட்டேன், இன்றும் ராஜேஷ்குமார் குறித்து நீங்கள் எழுதியதையும் படிக்க மனம் வரவில்லை

    ReplyDelete
  19. அவர் நகைசுவையிலும் , கிரைம் கதையிலும் மன்னன்

    ReplyDelete
  20. //‘‘இந்த வாட்டி எதையோ சொல்லித் தப்பிச்சுட்டீங்க... இன்னொரு வாட்டி சொன்னா... நடக்கிற கதையே வேற!’’//
    ஹா ஹா... இது படிச்சதுக்கு அப்புறம்தான் சிரிப்பே வந்திச்சு...!

    படம் கூட சூப்பர் !!

    பகிர்வுக்கு நன்றி ஐயா !!!

    ReplyDelete
  21. நல்லவேளை..பிளட்பிரஷர் பற்றி எல்லாம் அப்போது அவ்வளவா தெரியாது..தெரிந்திருத்தால் அதற்கும் ஒரு சண்டை அவர்போட்டிருப்பார்..
    நல்ல நகைச்சுவை...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  22. suryajeeva said...
    சிறு வயதில் அவர் நாவல்களை படிப்பதுண்டு, ஒரு முறை கேள்வி பதில் பகுதியில், இந்தியாவில் கூட்டம் கூட்டமாய் மக்கள் போராடுகிறார்கள், சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது அதனால் எரிச்சலடைந்ததாகவும், மேல் நாடுகளில் இது போல் நடப்பதில்லை... என்றும் கூறியிருந்தார்.. மேலும் கூறுகையில் ஆட்சியாளர்களிடம் மனு கொடுக்காமல் போராடுவது அபத்தமானது என்றும் கூறியிருந்தார்... அன்று ராஜேஷ்குமார் எழுத்துக்களை படிப்பதை விட்டேன், இன்றும் ராஜேஷ்குமார் குறித்து நீங்கள் எழுதியதையும் படிக்க மனம் வரவில்லை.

    -இப்படி ஒரு அபத்தமான கருத்தை ராஜேஷ்குமார் சொல்லியிருப்பார் என்று நம்பவே முடியவில்லை சூர்யஜீவா சார். புதிய தகவல் இது....

    ReplyDelete
  23. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    அவர் நகைசுவையிலும் , கிரைம் கதையிலும் மன்னன்.

    -நன்றி ராஜா சார்.

    ReplyDelete
  24. சென்னை பித்தன் said...
    சூப்பர் நகைச்சுவை!

    -வருகைக்கும், ரசித்ததற்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  25. வேலன். said...
    நல்லவேளை..பிளட்பிரஷர் பற்றி எல்லாம் அப்போது அவ்வளவா தெரியாது..தெரிந்திருத்தால் அதற்கும் ஒரு சண்டை அவர்போட்டிருப்பார்..
    நல்ல நகைச்சுவை...
    வாழ்க வளமுடன், வேலன்

    -அட, ஆமாம் வேலன் சார். பி.பி. என்பதற்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாம்தானே... நன்றாக கருத்துச் சொன்ன தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. anishj* said...
    //‘‘இந்த வாட்டி எதையோ சொல்லித் தப்பிச்சுட்டீங்க... இன்னொரு வாட்டி சொன்னா... நடக்கிற கதையே வேற!’’//
    ஹா ஹா... இது படிச்சதுக்கு அப்புறம்தான் சிரிப்பே வந்திச்சு...!
    படம் கூட சூப்பர்!! பகிர்வுக்கு நன்றி ஐயா !!!

    -முதல் வருகைக்கு அன்பான வரவேற்பு. ரசித்ததற்கும், குறிப்பாக படத்தைப் பாராட்டியதற்கும் நன்றியோ நன்றி.

    ReplyDelete
  27. PP.. பீப்பி-யான சம்பவம் அருமையான நகைச்சுவை பகிர்வு அண்ணே.

    ReplyDelete
  28. சத்ரியன் said...
    PP.. பீப்பி-யான சம்பவம் அருமையான நகைச்சுவை பகிர்வு அண்ணே.

    -ரசித்ததற்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி தம்பி!

    ReplyDelete
  29. தல... ராத்திரி நேரத்துல உங்க ப்ளாக்கை படிக்க முடியல... இடி இடிக்கிற மாதிரியோ, பட்டாசு வெடிக்கிற மாதிரியோ ஏதோ ஒரு சத்தம் கேட்டுட்டே இருக்கு...

    ReplyDelete
  30. Philosophy Prabhakaran said...
    தல... ராத்திரி நேரத்துல உங்க ப்ளாக்கை படிக்க முடியல... இடி இடிக்கிற மாதிரியோ, பட்டாசு வெடிக்கிற மாதிரியோ ஏதோ ஒரு சத்தம் கேட்டுட்டே இருக்கு...

    -அது ஒண்ணுமில்லிங்க. சைடுல நம்ம பேர் ஸ்கிரீன்ல மின்னினதும், ரசிகர்கள் உற்சாகத்துல வெடிக்கற பட்டாசுச் சத்தம்தான்... ஹி... ஹி...

    ReplyDelete
  31. ஹா... ஹா... பகிர்விற்கு நன்றி சார்!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube