Friday, November 18, 2011

‘எங்கள் ப்ளாக்’கில் ‘சவடால் சிறுகதைப் போட்டி’ அறிவித்து பாதிக் கதையைத் தந்து விட்ட இடத்திலிருந்து தொடரச் சொல்லியிருந்தபடி, கதையைத் தொடர்கிறேன். கதையின் துவக்கத்தைப் படிக்கவும் போட்டி பற்றி அறியவும் விரும்புபவர்கள் இங்கே சென்று அதைப் படித்துவிட்டு வரும்படி வேண்டுகிறேன்.

=================================================

ந்தப் பொன்னிற மங்கை, புங்கவர்மனிடம் சொன்னாள்: "மன்னா உங்களிடமிருந்து எனக்கு ஓர் உதவி தேவை. அந்த உதவியை உங்களால் மட்டுமே செய்ய இயலும். நான் பக்கத்து நாட்டு இளவரசி. என் கணவனுடன் இங்கு உல்லாசப் பயணம் வந்தேன். என் கணவரை ஓர் அரக்கன் பிடித்துப் போய், இங்கிருந்து மேற்கே ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி, ஓரிடத்தில் சிறை வைத்திருக்கின்றான். அடுத்த பௌர்ணமிக்குள் அவரை மீட்டு வந்துவிட்டால் அந்த அரக்கன் எங்கள் இருவரையும் ஆசீர்வதித்து, இந்தப் பக்கம் மீண்டும் வராமல் சென்றுவிடுவான். வருகின்ற பௌர்ணமிக்குள் அவரை யாராலும் மீட்க முடியாவிட்டால், அரக்கன் என் கணவனைக் கொன்று, என்னைக் கடத்திச்  சென்றுவிடுவான். மன்னா நீங்கதான் எப்பாடு பட்டாவது அவரை மீட்டுத்தர வேண்டும்...”

“என் வீரதீர பராக்கிரமங்களை(?) நீ அறிய மாட்டாய் பெண்ணே... வரும் பௌர்ணமிக்குள் உன் கணவனுடன் வருகிறேன்...” என்று வாக்களித்துவிட்டு நாடு திரும்பினான் புங்கவர்மன்.

=================================================

“என்ன அமைச்சரே... தக்க யோசனை கூறுவீர் என்று பார்த்தால் அப்போதிலிருந்து தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறீர்... அங்கே ஏதாவது யோசனை ஒளிந்து கொண்டிருக்கிறதா...?” கோபமாகக் கேட்டான் புங்கவர்மன்.

‘இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை. பட்டத்து யானையை பக்கத்து நாட்டு மன்னனிடம் வாடகைக்கு விட்டு நமக்கு மூன்று மாதம் முன் சம்பளம் கொடுத்ததுதான். கேள்வியப் பாரு...‘ என்று மனதிற்குள் நினைத்தபடி, “மன்னா... ஒரே வழிதான் உள்ளது. அண்டரண்டப் பறவை என்ற ஒன்றில் ஏறி விக்கிரமாதித்தன் என்ற மன்னர் ஏழு கடல், ஏழு மலை தாண்டியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பறவையைப் பிடித்தால் போதும்...” என்றார் மந்திரி மங்குணிப் பாண்டியர்.

“நீர் என்ன செய்வீரோ தெரியாது. உடனே காட்டிற்கு வீரர்களுடன் சென்று அந்தப் பறவையைப் பிடித்து வாரும்...” என்றான் புங்கவர்மன். ‘விக்கிரமாதித்தன் வீரத்தால் பறவையைப் பிடித்தான். நீர் போரில் தோக்கிரமாதித்தர். என்னைத் தான் ஏவுவீர்...’ மனதிற்குள் முனகியபடி சென்றார் மந்திரி.

=================================================

ரு வாரத்திற்குப் பின்...
 
“மன்னா... மிகுந்த சிரமத்தின் பேரில் அந்தப் பறவையைப் பிடித்து விட்டேன்...” என்று பறவையுடன் வந்தார் மன்னர். பறவையைப் பார்த்த மன்னன் வியந்து போனான். இரண்டு ஆள் உயரத்திற்கு பிரம்மாண்ட மாக இருந்தது அது. “இது வயதான பறவையாக உள்ளதே அமைச்சரே...?“ என்றான் மன்னன். “விக்கிரமாதித்தன் சென்ற அதே பறவை மன்னா.. வயதாகாமல் இருக்குமா...“ என்றான் மந்திரி மங்குணி.

“பறவையே... ஏழு கடல், ஏழு மலை தாண்டி உள்ள தீவில் என்னைக் கொண்டுவிட வேண்டும். மறுத்தால் உன்னை வெட்டி இப்போதே சூப் வைக்கச் சொல்லி விடுவேன். என் வீரர்கள் அனைவரும் ஒரு வாரம் உட்கார்ந்து சாப்பிடுவார்கள்...” என்றான் புங்கவர்மன் ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் திணித்தபடி.

“இது வேறயா... என் மேல் இருக்கும் போது பொடி போடாதீர் மன்னா. நான் தும்மினால் அப்புறம் நீர் கடலில் விழுந்து ஜலசமாதியாக வேண்டியதுதான்...” என்றது பறவை. மன்னன் ஏறி அமரவும் பறக்கத் துவங்கியது. “என்ன சாப்பிடுகிறீர் மன்னா? விக்கிரமாதித்தனை விட இரண்டு பங்கு கனமாக இருக்கிறீரே...” என்று முனகியபடியே பறந்தது.

=================================================

ரண்டு நாட்கள் பறந்தபின் ஒரு தீவில் கரை இறங்கியது பறவை. “ஏன் இங்கே இறங்கினாய்?” என்று கோபமுடன் கேட்டான் மன்னன். “விடாமல் பறக்க நான் என்ன நான்ஸ்டாப் பேருந்தா? கொஞ்சம் ஓய்வு தேவை மன்னா. நான் ஒரு தூக்கம் போடுகிறேன். அதோ இருக்கும் குகையில் நிறைய மதுபானங்கள் உள்ளன. நீரும் சற்று அருந்தி ஓய்வெடும்...” என்றபடி படுத்தது பறவை.
 
இரண்டு மணி நேரத்திற்குப் பின் பறவையைத் தட்டி எழுப்பினான் புங்கவர்மன். “ம்... புறப்படு...”. ஆச்சரியமாக அவனைப் பார்த்தது பறவை. “என்ன பார்க்கிறாய்? அதுசரி... மது இருக்கும் குகையில் ஒருவன் மட்டையாகிக் கிடக்கிறானே... யார் அவன்?” என்று கேட்டான்.

“அவன் வில்லவ நாட்டு இளவரசன் போதைதிருமன். உமக்கு முன்பே இளவரசிக்காக என்னைப் பிடித்து பறந்து வந்தான். இங்கே விட்டதும் மது அருந்திவிட்டு மட்டையானவன்தான். இன்னும் எழுந்திருக்கவில்லை. நீரும் அப்படி ஆகிவிடுவீரென நினைத்தேன்” என்றது பறவை. “யாரு... நானா? குடிப்பதில் எமக்கு எத்தனை வருட சர்வீஸ்...” என்றபடியே பறவை மீது மீண்டும் ஏறினான். “என்ன மன்னா... திடீரென்று பிணகனம் கனக்கிறீர்?” என்று முனகியது பறவை. “அதுவா... அங்கே மதுவுடன் நிறைய தின்பண்டங்களும் இருந்தன. ஒரு வெட்டு வெட்டினேன். அதான்...” என்றபடியே பறவையின் மீது மட்டையானான் புங்கவர்மன்.

=================================================

முகத்தின் மீது யாரோ அடிப்பது போல் உணர்ந்து விழித்தான் புங்கவர்மன். பறவை தன் பெரிய இறக்கைகளால் அவன் முகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. “மன்னா.. தீவு வந்து விட்டது. அதோ அரக்கன் தவம் செய்து கொண்டிருக்கிறான் பாரும்... அவன் அருகில் அமர்ந்திருக்கும் இளவரசரை நீர் தூக்கி வந்தால் நாம் புறப்படலாம்...” என்றது பறவை.

புங்கவர்மன் சப்தம் எழும்பாமல் மெல்ல அடி எடுத்து வைத்து இளவரசன் அருகில் சென்ற நேரம் பார்த்தா அரக்கன் விழிக்க வேண்டும்? “அடேய் மானிடா... என்ன துணிச்சலில் வந்தாய்? இப்போதே சபிக்கிறேன் உன்னை“ என்று ஆரம்பித்த நேரம்... பறவை அருகில் வந்து “ஒரு நிமிடம் பொறுங்கள் அரக்கரே...” என்றது. “என்ன?” என்றான் அவன்.

“நீர் பாட்டுக்கு மன்னனை குரங்காக வேண்டும், கரடியாக வேண்டும் என்று சபித்து விடாதீரும். என்னால் இவரைச் சுமக்க முடியாது. எலும்பும் தோலுமாக மன்னன் வடிவம் மாறவேண்டும் என்று சாபமிடும்” என்று வேண்டியது பறவை. “அப்படியே ஆகட்டும்...” என்று அரக்கன் சபிக்கவும் மன்னன் ஓமக்குச்சி போலாக, தகர டப்பா போலிருந்த அவன் முகம் நசுங்கிய தகர டப்பா போலானது. அரக்கன் அட்டகாசமாகச் சிரிக்கத் தொடங்கினான். பறவை சும்மாயிராமல் ஒரு தகளியை எடுத்துவந்து மன்னன் முன் காட்டியது. (என்னா வில்லத்தனம்?)

தன் முகத்தைத் தகளியில் கண்ட மன்னன் கடுஞ்சினமடைந்து, கச்சையிலிருந்து ஒரு கை மூக்குப் பொடியை எடுத்து சிரித்துக் கொண்டிருந்த அரக்கன் முகத்தில் அடித்தான். அவன் கண்ணை மூடிக்கொண்டு அலற, “உன்னை மாதிரி கேனை அரக்கனை நான் பார்த்ததே இல்லை...” என்றபடி இளவரசனுடன் பறவை மீது பாய்ந்தேறினான் மன்னன். பாரம் குறைந்ததால் விரைந்து பறந்தது பறவை.

=================================================

புங்கவர்மன் வேட்டையாடிய காட்டில் அவர்களை இறக்கி விட்ட அடுத்த கணம் மன்னன் கையில் சிக்காமல் விரைந்து பறந்து தப்பிவிட்டது பறவை. இளவரசனைக் கண்டதும் தத்திவந்த தவளை இளவரசியாக உருமாறி அவனை அணைத்துக் கொண்டது. அருகில் நின்றிருந்த புங்கவர்மனின் காதில் புகை வந்தது. “மன்னா... இனி நாளை பௌர்ணமியன்று அந்த அரக்கன் வந்தாலும் நிபந்தனையை மீறாமல் எங்களை ஆசீர்வதித்துத்தான் செல்வான். நானும் இனி தவளையாக மாற வேண்டியதில்லை. கொடுத்த வாக்கிற்காக இத்தனை கஷ்டப்பட்ட உமக்கு எங்கள் ராஜ்யத்தில் பாதியைத் தருகிறோம்...” என்றாள்.

“மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். ஏதோ பார்த்து போட்டுக் குடும்மா... இப்போதைக்கு ஒரு புரவியைக் கொடு. என் நாட்டிற்குச் செல்ல வேண்டும்..” என்று புரவியில் பாய்ந்தேறி தன் நாட்டிற்கு வந்த புங்கவர்மனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமைச்சர் மங்குணி பாண்டியர் மன்னனாக சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். “அடேய் மங்குணி... நான் இரண்டு மாதம் இல்லாவிட்டால் நீ மன்னனாகி விடுவதா? இறங்குடா சிம்மாசனத்தை விட்டு...” என்று கத்தினான் புங்கவர்மன்.

“யாரோ பைத்தியம் போலிருக்கிறது. இவனை அரண்மனைக்கு வெளியே எறியுங்கள்” என்று மங்குணி மன்னன் (மாஜி அமைச்சர்) உத்தரவிட, புங்கவர்மன் வீரர்களால் வெளியில் இழுத்துத் தள்ளப்பட்டான். பாவம் மன்னன். அங்கே யாருக்குமே அடையாளம் தெரியவில்லை அவரை.

33 comments:

 1. நீங்கள் தொடர்ந்த விதம் அருமை

  உண்மையில் அது போட்டியா இல்லை சும்மா மொக்க போட்டிருக்காங்களா எனக்கு புரியலை

  ReplyDelete
 2. கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள்; வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. ஆகா! அவரையோ அவரை, அருமையோ அருமை!
  நல்ல நகைச்சுவை. 'விக்கிரமாதித்தன் பறந்த அசல் பறவை' நல்ல டச்!
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. தகளி என்றால் என்ன?

  ReplyDelete
 5. K.s.s.Rajh said...
  நீங்கள் தொடர்ந்த விதம் அருமை

  உண்மையில் அது போட்டியா இல்லை சும்மா மொக்க போட்டிருக்காங்களா எனக்கு புரியலை...

  -‌என்ன ராஜ் இப்படி பயமுறுத்தறீங்க? நிஜம்னு நம்பித்தான் பதிவு போட்ருக்கேன். உங்க பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 6. kg gouthaman said...
  கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள்; வாழ்த்துகள்.

  -வெல்கம் கெளதமன். உங்கள் பாராட்டு மகிழ்வளித்தது. நன்றி.

  ReplyDelete
 7. அம்புலிமாமா கதை மாதிரி அசத்திட் டீங்க!எல்லோரும் சொல்லப் போறாங்க”இதே மாதிரி நிறையக் கதை எழுதச் சொல்லுங்க அவரை!”

  ReplyDelete
 8. அப்பாதுரை said...
  ஆகா! அவரையோ அவரை, அருமையோ அருமை!
  நல்ல நகைச்சுவை. 'விக்கிரமாதித்தன் பறந்த அசல் பறவை' நல்ல டச்!
  வாழ்த்துக்கள்.
  தகளி என்றால் என்ன?

  -ஆம் ஐயா. காமிக்ஸ் மாதிரி கதையிலும் நகைச்சுவை தர முடியுமா என்றுதான் முயன்றேன். உங்கள் பாராட்டு மகிழ்வளிக்கிறது. நன்றி. ‘தகளி’ என்றால் நல்ல தமிழில் ‘கண்ணாடி’ என்பது பொருள்.

  ReplyDelete
 9. சென்னை பித்தன் said...
  அம்புலிமாமா கதை மாதிரி அசத்திட் டீங்க!எல்லோரும் சொல்லப் போறாங்க”இதே மாதிரி நிறையக் கதை எழுதச் சொல்லுங்க அவரை!”

  -இந்த மாதிரி டைப் கதை ஒண்ணு எழுதிப் பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இப்ப நிறைவேத்திக்கிட்டேன். உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல எனக்கு மகிழ்ச்சி. நன்றி சார்...

  ReplyDelete
 10. ஆஹா..அடுத்த சாண்டில்யனா?முழுக்க படித்துவிட்டு நாளை வருகிறேன்.

  ReplyDelete
 11. ரஹீம் கஸாலி said...
  kalakkalaa kondu poyirukkeenga. Arumai

  -அடடே... நம்ம பக்கம் பாத்து நாளாச்சு கஸாலி சார். உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல எனக்கு மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 12. ஸாதிகா said...
  ஆஹா..அடுத்த சாண்டில்யனா?முழுக்க படித்துவிட்டு நாளை வருகிறேன்.

  -பெரியவர் சாண்டில்யன் சீரியஸா எழுதின மேதைம்மா தங்கச்சி. நான் காமெடியா எழுதற பேதை. வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 13. கவிதையில் அந்தாதி கவிதைபோல் இது அந்தாதி கதைபோலும். தங்களது கதையும், அதன் நடையும், அதன் ஊடே இழைந்தோடும் நகைச்சுவையும் அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. பெரியவர் சாண்டில்யன் சீரியஸா எழுதின மேதைம்மா தங்கச்சி. நான் காமெடியா எழுதற பேதை. வருகைக்கு நன்றி!//தன்னடக்கத்திற்கு ஒரு ராயல் சல்யூட்.

  ReplyDelete
 15. “விக்கிரமாதித்தன் சென்ற அதே பறவை மன்னா.. வயதாகாமல் இருக்குமா.//
  “பறவையே... ஏழு கடல், ஏழு மலை தாண்டி உள்ள தீவில் என்னைக் கொண்டுவிட வேண்டும். மறுத்தால் உன்னை வெட்டி இப்போதே சூப் வைக்கச் சொல்லி விடுவேன். என் வீரர்கள் அனைவரும் ஒரு வாரம் உட்கார்ந்து சாப்பிடுவார்கள்...” என்றான் புங்கவர்மன் ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் திணித்தபடி.//

  என் மேல் இருக்கும் போது பொடி போடாதீர் மன்னா. நான் தும்மினால் அப்புறம் நீர் கடலில் விழுந்து ஜலசமாதியாக வேண்டியதுதான்.//

  என்ன சாப்பிடுகிறீர் மன்னா? விக்கிரமாதித்தனை விட இரண்டு பங்கு கனமாக இருக்கிறீரே.//

  விடாமல் பறக்க நான் என்ன நான்ஸ்டாப் பேருந்தா? கொஞ்சம் ஓய்வு தேவை மன்னா. நான் ஒரு தூக்கம் போடுகிறேன்///

  “என்ன மன்னா... திடீரென்று பிணகனம் கனக்கிறீர்?” என்று முனகியது பறவை. “அதுவா... அங்கே மதுவுடன் நிறைய தின்பண்டங்களும் இருந்தன. ஒரு வெட்டு வெட்டினேன். அதான்...///

  மன்னன் ஓமக்குச்சி போலாக, தகர டப்பா போலிருந்த அவன் முகம் நசுங்கிய தகர டப்பா போலானது. ///


  ஹா ஹா ஹா..கமெடியாக எழுதுவதில் உங்களை அடித்துக்கொள்ள முடியாது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றீர்கள் சகோ.

  ReplyDelete
 16. வே.நடனசபாபதி said...
  கவிதையில் அந்தாதி கவிதைபோல் இது அந்தாதி கதைபோலும். தங்களது கதையும், அதன் நடையும், அதன் ஊடே இழைந்தோடும் நகைச்சுவையும் அருமை. வாழ்த்துக்கள்!

  -ரசித்த விஷயத்தை என்ன அழகான வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு ஜே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 17. ஸாதிகா said...
  ஹா ஹா ஹா..கமெடியாக எழுதுவதில் உங்களை அடித்துக்கொள்ள முடியாது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றீர்கள் சகோ.

  -நீங்கள் ரசித்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். பாராட்டியதில் ஒரு சுற்றுப் பூரித்தே விட்டேன். நன்றிம்மா...

  ReplyDelete
 18. மிக அழகாக நகைச்சுவை உணர்வு மிகாமல் எழுதி இருக்கிறீர்கள்.
  வரிக்கு வரி அம்புலிமாமாவையும் தாண்டிவிட்டது சுவை. பாவம் இவ்வளவு செய்த மன்னனுக்கு மங்குனி அமைச்சரா வரவேண்டும்:)

  ReplyDelete
 19. வல்லிசிம்ஹன் said...
  மிக அழகாக நகைச்சுவை உணர்வு மிகாமல் எழுதி இருக்கிறீர்கள்.
  வரிக்கு வரி அம்புலிமாமாவையும் தாண்டிவிட்டது சுவை. பாவம் இவ்வளவு செய்த மன்னனுக்கு மங்குனி அமைச்சரா வரவேண்டும்:)

  -உங்கள் ப்ளாக்-இல் படித்து தான் இந்த கதை போட்டி பற்றி தெரிந்து கொண்டானே வல்லிம்மா. அதற்க்கு உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். நீங்கள் ரசித்தது எனக்கு மகிழ்ச்சி தந்தது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் ஐயா இந்தக் கதை வெற்றிபெற .மிக்க நன்றி அருமையான கதைப் பகிர்வுக்கு .வாருங்கள் என் தளத்திற்கும் ஓர் நீதி சொல்லிச்
  செல்ல .உங்கள் வருகைக்காக ஆக்கம் காத்திருக்கு .

  ReplyDelete
 21. அம்பாளடியாள் said...
  வாழ்த்துக்கள் ஐயா இந்தக் கதை வெற்றிபெற .மிக்க நன்றி அருமையான கதைப் பகிர்வுக்கு .வாருங்கள் என் தளத்திற்கும் ஓர் நீதி சொல்லிச் செல்ல .உங்கள் வருகைக்காக ஆக்கம் காத்திருக்கு .

  -உங்கள் தளம் எனக்கு மிக விருப்பமானதாயிற்றே.. அழைக்காமலே வருபவன் அழைத்தால் வரமாட்டேனா? உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 22. கதை வெகு ஜோர் காமெடியோடு கலக்குறது கணேஷண்ணா. சபாஷ் சரியான போட்டி அசத்துங்க..

  ReplyDelete
 23. அன்புடன் மலிக்கா said...
  கதை வெகு ஜோர் காமெடியோடு கலக்குறது கணேஷண்ணா. சபாஷ் சரியான போட்டி அசத்துங்க..

  -பாராட்டுக்கு மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 24. ஹா ஹா நான் ஸ்டாப் பேருந்து .. போதைதிருமன்.. சூப்பர்ப்ப்..:)

  ReplyDelete
 25. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  ஹா ஹா நான் ஸ்டாப் பேருந்து .. போதைதிருமன்.. சூப்பர்ப்ப்..:

  -உங்களின் வருகைக்கும், ரசித்தற்கும் நன்றிக்கா...

  ReplyDelete
 26. கதையை மிகவும் ரசித்துச் சிரித்துப் படித்தேன்! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. middleclassmadhavi said...
  கதையை மிகவும் ரசித்துச் சிரித்துப் படித்தேன்! வாழ்த்துக்கள்.

  -உங்களின் படைப்புக்கள் பலவற்றைப் படித்து வியந்து ரசித்தவன் நான். நீங்கள் முதல் முறையாக என் தளத்திற்கு வந்து, என் படைப்பை ரசித்தீர்கள் என்பதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. நன்றிங்க...

  ReplyDelete
 28. மிகவும் ரசித்தேன். நல்ல நகைச்சுவை!
  //பறவை சும்மாயிராமல் ஒரு தகளியை எடுத்து வந்து மன்னன் முன் காட்டியது. (என்னா வில்லத்தனம்?) // அட்டகாசம்.

  எங்கள் ப்ளாக் மூலம்தான் உங்கள் பதிவிற்கு வந்தேன். அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
 29. மீனாக்ஷி said...
  மிகவும் ரசித்தேன். நல்ல நகைச்சுவை!
  //பறவை சும்மாயிராமல் ஒரு தகளியை எடுத்து வந்து மன்னன் முன் காட்டியது. (என்னா வில்லத்தனம்?) // அட்டகாசம்.
  எங்கள் ப்ளாக் மூலம்தான் உங்கள் பதிவிற்கு வந்தேன். அருமையாக இருக்கிறது.

  -மதுரைக்காரனான எனக்கு மீனாக்ஷியே வந்து ரசித்ததில் கொள்ளை மகிழ்ச்சி. மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 30. மிக அருமை. முடித்த விதமும் நன்று. வெற்றிக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 31. @ ராமலக்ஷ்மி said...

  -நல்வரவு ராமலக்ஷ்மி மேடம்! நீங்கள் நன்று என்று பாராட்டியதும், வெற்றிக்கு வாழ்த்தியதும் மனதுக்கு தெம்பையும் உற்சாகத்தையும் அளித்தது. என் இதயம் கனிந்த நன்றிகள்!

  ReplyDelete
 32. விக்ரமாதித்தன் கதையையும் இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசியும் கலந்து உங்க ஸ்டைல்ல சூப்பர எழுதி இருக்கிங்க...... கதையை நல்லா முதல் பாகம் எழுதினவங்களோட wave length லயே தொடர்ந்து இருக்கீங்க.... கடைசில போட்டி என்னாச்சு? அருமை..இதெ மாதிரி ஒரு தொடர்கத எழுதுங்க.... நாங்க படிப்போமீல? பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube