Friday, November 25, 2011

சரிதா செய்த ஷாப்பிங்!

Posted by பால கணேஷ் Friday, November 25, 2011
“என்னங்க...” என்றபடி அருகில் வந்தாள் என் தர்மபத்தினி. அவளை ஏறிட்டபடி, “சொல்லும்மா யெஸ்கிவ்!” (சரி-தா என்பதை ஆங்கிலப்படுத்திப் பாருங்கள்) என்றேன். அப்படி நான் அழைத்தாலே நான் குஷியான மூடில் இருப்பதை அறிந்து கொள்ளும் அந்தக் கள்ளி, “ஈவினிங் சீக்கிரம் வந்துடுங்க... ஷாப்பிங் போகலாம்” என்று ஒரு அஸ்திரத்தைப் பிரயோகித்தாள். எனக்கு பகீர் என்றது.

நோ... நோ... இதானே வேணாங்கறது... உடனே நான் கஞ்சன் என்றோ, சரிதா வெட்டிச் செலவு செய்பவள் என்றோ கற்பனையை ஓடவிடக் கூடாது சார் / மேடம்! அப்படி எதுவும் இல்லை. பின் ஏன் சரிதா ஷாப்பிங் என்றால் நீ பயப்படுகிறாய் என்றுதானே கேட்கிறீர்கள்? காரணம்... சரிதாவின் வீக்னெஸ்!

அது என்ன வீக்னஸ் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா..? உங்கள் மானிட்டரைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்... ஒரு கொசுவர்த்திச் சுருள் ஹைஸ்பீடில் சுற்றுவது தெரிகிறதா..? கரெக்ட்... நாம் ஒரு ப்ளாஷ்பேக்கிற்குள் போகிறோம்...

முன்பொரு முறை நாங்கள் ஷாப்பிங் கிளம்பிய ஒரு (அ)சுபதினத்தில்... “என்னங்க... ஜவுளிக்கடைக்குப் போற வழியில ஹோட்டல்ல ஏதாவது கொறிச்சுட்டுப் போலாமா?” என்றாள். அவள் அடிக்கடி ஹோட்டலுக்குப் போக வேண்டும் என்று தொந்தரவு செய்யும் ரகமல்ல என்பதால் சம்மதித்தேன். ‘உயர்தர உணவகம்’ என்று போர்டிலேயே மிரட்டிய அந்த பெரிய ஹோட்டலின் காம்பவுண்டில் வண்டியை நிறுத்தி உள்ளேறினோம்.

சப்ளையர் கொண்டு வந்த வைத்த மெனு கார்டில் (புக்கில்?) இருந்து ஒரு அயிட்டத்தைத் தேர்ந்தெடுத்தாள் சரிதா. “என்னங்க... இதை ஆர்டர் பண்ணலாமா..?”

அதைப் பார்த்தேன். ஹூக்குவெஜி-ட்ரைமா என்று இருந்தது. “ஐயையோ... பேரைப் பார்த்தாலே உதறுது சரி... எனக்கு பேப்பர் தோசை போதும்...” என்றேன்.

“விட்டா நீங்க பேப்பரையேகூட தின்னுவீங்க... வீட்லதான் எப்பப் பாரு தோசை, இட்லின்னு சாப்பிடறோம்.. இங்கயாவது புது டிபன் ஏதாவது சாப்பிடலாமே... இது என்னப்பா..?” என்று கேட்டாள் சப்ளையரிடம்.

“நம்ம ஹோட்டல்ல புதுசா அறிமுகப் படுத்தியிருக்கற வெரைட்டி மேடம்...” என்றான் அவன்.
 “புது ஐட்டமா? ரெண்டு பிளேட் கொண்டு வா...” என்று உடனே ஆர்டர் செய்தாள். 

“சரி, நீ பாட்டுக்கு ஆர்டர் பண்ணிட்டே... அவன் பாம்பு குடல், தவளை கால்ன்னு எதையாவது கொண்டு வந்துடப் போறான்...”

“அட சமர்த்தே... இது சைவ ஹோட்டல்! பயப்படாம இருங்க...” என்றாள். இருந்தாலும் அவன் என்னத்தைக் கொண்டுவரப் போகிறானோ என்று உள்ளே சற்று உதறலுடன்தான் காத்திருந்தேன். வெயிட்டர் கொண்டு வந்து வைத்ததைப் பார்த்ததும் சரிதா ‘ஙே’ என்று விழித்தாள். நான் குபீரென்று சிரித்து விட்டேன்.  காரணம்...

ரத, கஜ, துரக, பதாதிகள் போல ஃபோர்க்குகளும் ஸ்பூன்களும் அணிவகுத்து நிற்க, சுற்றிலும் ஏதேதோ கீரைகளால் பாத்தி கட்டி, கொஞ்சம் ட்ரை ப்ரூட்ஸ் கொஞ்சம் கேரட், வெள்ளரித் துண்டுகள்... இவற்றுக்கிடையில் காட்சி அளித்தது... (வீட்டில் சரிதா அடிக்கடி செய்யும்) ரவை உப்புமா!

“என்னப்பா இது?” என்று வெயிட்டரிடம் (தாமதமாக) கேட்டாள் சரிதா. “இது தாய்லாந்து ஸ்டைல் ஃபுட் மேடம். இந்தியாவுல நாங்கதான் அறிமுகப் படுத்தியிருக்கோம். இந்த அயிட்டம்தான் எங்க ஹோட்டல்ல ஹாட் சேல்” என்றான் பெருமையாக. சங்ககால ரிஷிகள் போல சரிதாவின் பார்வைக்குச் சக்தி இருந்திருந்தால் பஸ்பமாகியிருப்பான்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் வாசலில் இருந்த பீடா ஸ்டாலில் பீடா வாங்கி இருவரும் போட்டோம். காரில் அவள் பின்சீட்டில் அமர்ந்ததும், கதவைச் சாத்திவிட்டு முன்புறம் வந்து டிரைவிங் சீட்டில் அமர்ந்தேன். 

“என்னங்க... துப்பட்டா...” என்றாள் சரிதா.

“ஹோட்டல் செக்யூரிட்டி திட்டுவான்மா. காம்பவுண்டு தாண்டினதும் ரோட்டோரமா நிறுத்தறேன். ஜன்னலை இறக்கிட்டுத் துப்பு” என்றேன்.
 
“அதில்லீங்க... கார்க் கதவுல துப்பட்டா...”

“கதவு நாறிப் போயிடும் சரிதா. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருக்க முடியாதா? ஏன் உன் புத்தி இப்படிப் போகுது?” சற்றுக் கோபமாகவே கேட்டேன்.

“ஐயோ என் அறிவே... கார்க் கதவுல துப்பட்டா மாட்டிக்கிச்சுன்னு என்னை முழுசாச் சொல்ல விட்டாதானே...” என்றாள். “ஹி... ஹி... ஹி...” என்று அசடு வழிந்தவாறு கதவில் மாட்டியிருந்த அவள் துப்பட்டாவை எடுத்துவிட்டு மீண்டும் கதவைச் சாத்தி காரைக் கிளப்பினேன்.

புடவைக் கடையில்... 

நாங்கள் நுழைந்ததும், “வாங்க சார்... வாங்க...” என்று வரவேற்றாள் புடவை கவுண்ட்டரில் இருந்த, நாகேஷ் போல ஒல்லியாக இருந்த பெண். அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த அந்தப் பெண், நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாகப் பார்த்து பெருமூச்சு விட்டாள். நல்லவேளை... சரிதா பதிலுக்குப் பெருமூச்சு விடவில்லை... விட்டிருந்தால், அவள் கடைக்கு வெளியே பறந்திருப்பாள்!

அந்தப் பெண் சரிதாவிடம், “என்ன வேணும் மேடம்?” என்க, “உன்கிட்ட வந்து இட்லி, சாம்பாரா கேப்பாங்க... அந்த ஸாரியை எடும்மா...” என்று சற்றுக் காரமாகவே பேசி, கை காட்டினாள் என் துணைவி. ‘வாங்க மேடம்’ என்று அவள் வரவேற்காததால் வந்த கோபம்! புடவையை எடுத்தபடி, “ஹன்ஸிகா ஸாரி இருக்கு மேடம்.. பாக்கறீங்களா?” என்றாள் அந்த நாகேஷி.

ஹன்ஸிகா எங்க புடவை கட்டறா? அப்படியே கட்டி னாலும் அவ புடவை எனக்கு வேணாம்... நான் சொல்றதை மட்டும் எடு...” என்றாள் சரிதா. 
   அடுத்த நிமிடம் நான் எதற்கு பயந்தேனோ, அது நடந்து விட்டது. “இந்த டிசைன் புதுசா வந்திருக்கு மேடம். நேத்துத் தான் வந்துச்சு” என்றபடி ஒரு புடவையைக் காட்டினாள். உடனே, “ஓக்கே, இது இருக்கட்டும்..” என்றாள் சரிதா. 

இதுதாங்க சரிதாவோட வீக்னஸ்! ‘புதுசு’ என்றோ ‘புது மாடல்’ என்றோ யாராவது சொல்லி விட்டால் போதும்... அதை வாங்காவிட்டால் அவளுக்கு மண்டையே வெடித்து விடும். புதிய ஐட்டம் என்று ஒரு (சாமர்த்திய) கடைக்காரர் இவள் தலையில் கட்டிய அம்மிக் கல்லைக் கூட வாங்கிவந்து மிக்ஸியைப் பயன்படுத்தாமல் அதில் சட்னி அரைத்தாள் என்றால் பாருங்களேன்... இப்படி அவள் ‘புதுசு’ என்று வாங்கி, பின்னர் பயன்படுத்தாமல் வீட்டில் கிடக்கும் ஐட்டங்களை வைத்து ரிடையர் மென்ட்டுக்குப் பின் ஒரு கடை வைக்கலாம் என்றிருக்கிறேன்.

அந்த நாகேஷி சரியான சாமர்த்தியக்காரி. சில நிமிடங்களிலேயே சரிதாவின் வீக்னஸைப் புரிந்து கொண்டு அவள் தலையில் ஐந்து புடவைகளைக் கட்டி விட்டாள். கையில் புடவைக்கடை பார்சலையும், அவள் வாங்கிய இதர ‘புது’ ஐட்டங்களையும் சுமந்து வந்ததில் என் முகமே வெளியில் தெரியாதபடி அவைகள் மறைத்திருந்தன. திருப்தியாக ஷாப்பிங் செய்த சந்தோஷத்தில் சரிதா ஒரு சுற்று பெருத்திருந்தாள். என் பேண்ட்டிலிருந்த பர்ஸைப் பார்த்தேன்... அது நான்கு சுற்று இளைத்திருந்தது! 

கொசுவர்த்தி ஓவர்! -- இப்ப உங்களுக்குப் புரியுதா... ’ஷாப்பிங் போகணும்’னு சரிதா சொன்னா நான் ஏன் பயப்படறேன்னு...

‘பின் குறிப்பு : குத்தினால் வலிக்கும்!


பின்குறிப்பு : நான் ஐந்து நாட்கள் வெளியூர் செல்வதால் நெட் பக்கம் வர இயலாது. (கமெண்ட் மாடரேஷனை எடுத்து விட்டேன்). ஆகவே நண்பர்களின் தளங்களுக்கு வந்து படித்து ரசிப்பதும், கருத்துச் சொல்வதும், உங்கள் கருத்துக்களுக்குப் பதிலளிப்பதும் டிச.1ல்தான். பொறுத்தருளுங்கள் அன்பர்களே...

39 comments:

 1. இதை படிச்சிட்டு எல்லோரும் உஷாரா இருங்கப்பா...

  ReplyDelete
 2. எல்லா வேலையும் வெற்றிகரமா முடிச்சிட்டு திரும்புங்க...

  ReplyDelete
 3. புது பதிவு அப்படின்னு நினைச்சுகிட்டு நாம மீள் பதிவ படிக்கலையா அது போல் தான்... விடுங்க பாஸ்... இதுக்கு போய் அலறலாமா

  ReplyDelete
 4. பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
  த.ம 3

  ReplyDelete
 5. ஷாப்பிங்கா ஐயோன்னு சொல்ல வச்சுட்டிங்க.அதையும் நகைச்சுவையுடன் நல்லாவே சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 6. மின்னல் வரிகளில் நிறுத்தி நிதானமாய் வரி வரியை நகைச்சுவை!

  ReplyDelete
 7. நகைச்சுவையை கலந்து எல்லோரும் படிக்கத்தூண்டும் எளிய நடையில் உள்ள உங்கள் பதிவு எனக்கு எழுத்தாளர் ‘கடுகு’ அவர்களை நினைவூட்டுகிறது. சமீபகாலமாக நகைச்சுவையாக எழுதுவது மறைந்து வருகிறது. தங்களைப்போன்றோர் அதை உயிர்பிக்க வேண்டும் என்பது என் அவா. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. ////யெஸ்கிவ்!” (சரி-தா என்பதை ஆங்கிலப்படுத்திப் பாருங்கள்) ////

  அட நல்லா மொழி பேர்கிறீங்க


  நல்லா பல்பு வாங்கிருக்கிறீங்க பாஸ்
  நகைச்சுவையாக வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கு.

  உங்கள் பயணம் வெற்றி கரமாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த அந்தப் பெண், நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாகப் பார்த்து பெருமூச்சு விட்டாள். //சர்வ சரளமாக எப்படி பிரதர் இப்படி எல்லாம் வார்த்தைகள் உங்களில் இருந்து பிறக்கிறது.?

  துப்பட்டா மேட்டர்..செம காமெடி.

  ReplyDelete
 10. அட, பிரமாதம். ஒரு இல்லத்தரசர் படும் பாடுகளை இயல்பான நகைச்சுவையோடு வழங்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
 11. உங்களுக்கு ஒண்ணும் வாங்கலியா..

  ReplyDelete
 12. ஷாப்பிங்..நகைச்சுவையுடன் நல்லாவே சொல்லி இருக்கீங்க...ரசித்தேன்...தொடர்ந்து கலக்குங்க...கணேஷ் சார்...

  ReplyDelete
 13. மறக்க முடியாத ஷாப்பிங் சிரிப்பா சிரித்தேன் .அருமை
  வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பயணம் சிறப்பாக அமைய .

  ReplyDelete
 14. ஆஹா சிரிக்க சிரிக்க இப்படியா எழுதறது?

  எங்க வெளியூரா சீக்கிரமா வாங்க தம்பி!

  ReplyDelete
 15. கவிதை வீதி... // சௌந்தர் // said...
  இதை படிச்சிட்டு எல்லோரும் உஷாரா இருங்கப்பா...

  -Thankyou verymuch for your visit and comment sounder sir.

  ReplyDelete
 16. suryajeeva said...
  புது பதிவு அப்படின்னு நினைச்சுகிட்டு நாம மீள் பதிவ படிக்கலையா அது போல் தான்... விடுங்க பாஸ்... இதுக்கு போய் அலறலாமா...

  -நல்லாச் சொன்னீங்க சார்... (ரொம்ப நாளாக் காணோம்...) உங்கள் வருகையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...

  ReplyDelete
 17. Ramani said...
  பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  -உங்களனைவரின் வாழ்த்துக்களால் சென்ற காரியம் வெற்றியாக முடிந்து இனிமையான பயணமாக அமைந்தது. நன்றி ரமணி சார்...

  ReplyDelete
 18. Lakshmi said...
  ஷாப்பிங்கா ஐயோன்னு சொல்ல வச்சுட்டிங்க.அதையும் நகைச்சுவையுடன் நல்லாவே சொல்லி இருக்கீங்க.

  -இதுக்கே இப்படிச் சொல்றீங்களே... என்-சரிதாவோட அடுத்த அனுபவத்தை பதிவிடுறப்போ என்ன சொல்வீங்களோ... நீங்க ரசிச்சதுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 19. ஸ்ரீராம். said...
  மின்னல் வரிகளில் நிறுத்தி நிதானமாய் வரி வரியை நகைச்சுவை!

  -ஏதோ நகைச்சு வை-ப்போம் என்று இல்லாமல் ரசித்துப் படித்ததை தெரியப் படுததியுள்ளீர்கள். பாராட்டுக்கு நன்றி சார்...

  ReplyDelete
 20. வே.நடனசபாபதி said...
  நகைச்சுவையை கலந்து எல்லோரும் படிக்கத்தூண்டும் எளிய நடையில் உள்ள உங்கள் பதிவு எனக்கு எழுத்தாளர் ‘கடுகு’ அவர்களை நினைவூட்டுகிறது. சமீபகாலமாக நகைச்சுவையாக எழுதுவது மறைந்து வருகிறது. தங்களைப்போன்றோர் அதை உயிர்பிக்க வேண்டும் என்பது என் அவா. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!

  -நீங்கள் ரசித்துப் படித்ததற்கு முதலில் என் நன்றி. கடுகு சார் என் நீண்டநாள் நண்பர். நகைச்சுவை எழுத எனக்கு பாரசீக... ச்சே, மானசீக குரு அவர்தான். நீங்கள் இதைக் குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி. இயன்றவரை நல்ல நகைச்சுவைக்கு முயல்கிறேன்...

  ReplyDelete
 21. K.s.s.Rajh said...
  ////யெஸ்கிவ்!” (சரி-தா என்பதை ஆங்கிலப்படுத்திப் பாருங்கள்) ////
  அட நல்லா மொழி பேர்கிறீங்க

  -பின்ன... ரூம்போட்டு யோசிப்பமில்ல...?

  நல்லா பல்பு வாங்கிருக்கிறீங்க பாஸ்
  நகைச்சுவையாக வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கு.

  -பல்புகள் ஓய்வதில்லை. இன்னும் பல அனுபவங்கள் சொல்ல வேண்டியதிருக்கு...

  உங்கள் பயணம் வெற்றி கரமாக அமைய வாழ்த்துக்கள்

  -இனிதாய் வெற்றியாய் முடிந்தது. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா...

  ReplyDelete
 22. ஸாதிகா said...
  அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த அந்தப் பெண், நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாகப் பார்த்து பெருமூச்சு விட்டாள். //சர்வ சரளமாக எப்படி பிரதர் இப்படி எல்லாம் வார்த்தைகள் உங்களில் இருந்து பிறக்கிறது.?

  -எனக்கும் தெரியலையே.. அதுவா வருதும்மா...

  துப்பட்டா மேட்டர்..செம காமெடி.

  -கரெக்ட். இந்தக் கட்டுரையில் எனக்கே பிடித்த பகுதியும் அதான் சிஸ்டர். வருகை + பாராட்டுக்கு நன்றி...

  ReplyDelete
 23. கீதா said...
  அட, பிரமாதம். ஒரு இல்லத்தரசர் படும் பாடுகளை இயல்பான நகைச்சுவையோடு வழங்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.

  -அட.... என்ற ஒரு வார்த்தையே நீங்கள் ரசித்தைதைச் சொல்லிவிட்டது. மிகமிக நன்றிங்க...

  ReplyDelete
 24. ரிஷபன் said...
  உங்களுக்கு ஒண்ணும் வாங்கலியா..

  -இல்லிங்க ரிஷபன் சார்... ஷாப்பிங்னாலே எங்க வீட்டைப் பொறுத்தவரை சரிதா ஸ்பெஷல்தான். நான் கிடைக்கற கேப்ல கெடா வெட்றவன். வருகைக்கு நன்றி சார்...

  ReplyDelete
 25. ரெவெரி said...
  ஷாப்பிங்..நகைச்சுவையுடன் நல்லாவே சொல்லி இருக்கீங்க... ரசித்தேன்... தொடர்ந்து கலக்குங்க...கணேஷ் சார்...

  -வார்த்தைகளால் எனக்கு உற்சாக ஊசி போட்ட டாக்டர் ரெவெரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...

  ReplyDelete
 26. அம்பாளடியாள் said...
  மறக்க முடியாத ஷாப்பிங் சிரிப்பா சிரித்தேன் .அருமை
  வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பயணம் சிறப்பாக அமைய.

  -கவிஞர்கள் மெல்லிதயம் படைத்தவர்கள் என்பார்கள். நீங்கள் ரசித்துச் சிரித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. ஷைலஜா said...
  ஆஹா சிரிக்க சிரிக்க இப்படியா எழுதறது?
  எங்க வெளியூரா சீக்கிரமா வாங்க தம்பி!

  -நம்ம வீட்டுக் குழந்தை எது செஞ்சாலும் பாராட்டற மாதிரி நீங்க ரசிச்சு பாராட்டியிருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி. தோ.. வந்துட்டேன்...

  ReplyDelete
 28. ஹாஹாஹா இருங்க சரிதாகிட்ட போன் போட்டு மாட்டி விடுறேன்..:)

  ReplyDelete
 29. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  ஹாஹாஹா இருங்க சரிதாகிட்ட போன் போட்டு மாட்டி விடுறேன்..:)

  -அச்சச்சொ... நீங்க நல்ல அக்காதானே... அப்படில்லாம் செய்ய மாட்டிங்கன்னு எனக்குத்தான் தெரியுமே... ரசிச்சதுக்கு நன்றிக்கா...

  ReplyDelete
 30. ஹா ஹா... ஹாஸ்யமான கதை.

  மேடம் இது புது டிசைன் என யாராவது சொன்னால் சரிதா, சரி தா என சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது.

  இதே போல இன்னும் நிறைய ஹாஸ்யம் எழுதுங்கள்.

  ReplyDelete
 31. //“ஹன்ஸிகா ஸாரி இருக்கு மேடம்.. பாக்கறீங்களா?” என்றாள் அந்த நாகேஷி.

  “ஹன்ஸிகா எங்க புடவை கட்டறா? அப்படியே கட்டி னாலும் அவ புடவை எனக்கு வேணாம்...//

  எள்ளல்...

  ரசித்தேன்.

  ReplyDelete
 32. Blogger ரசிகன் said...
  ஹா ஹா... ஹாஸ்யமான கதை.
  மேடம் இது புது டிசைன் என யாராவது சொன்னால் சரிதா, சரி தா என சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது.
  இதே போல இன்னும் நிறைய ஹாஸ்யம் எழுதுங்கள்.

  -ஆமாங்க, சரிதாவோட பிரச்சனையே அதானே... இன்னும் ஹாஸ்யம் தர முயல்கிறேன். நன்றி.

  ReplyDelete
 33. ரசிகன் said...
  //“ஹன்ஸிகா ஸாரி இருக்கு மேடம்.. பாக்கறீங்களா?” என்றாள் அந்த நாகேஷி.
  “ஹன்ஸிகா எங்க புடவை கட்டறா? அப்படியே கட்டி னாலும் அவ புடவை எனக்கு வேணாம்...//
  எள்ளல்...
  ரசித்தேன்.

  -பெயருக்கேற்ப நல்ல ரசிகனாக இருக்கும் உங்களின் ரசனைக்கு என் வந்தனம்!

  ReplyDelete
 34. சுவை..நான் பெரிதும் ரசித்த இடம்..

  அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த அந்தப் பெண், நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாகப் பார்த்து பெருமூச்சு விட்டாள். நல்லவேளை... சரிதா பதிலுக்குப் பெருமூச்சு விடவில்லை... விட்டிருந்தால், அவள் கடைக்கு வெளியே பறந்திருப்பாள்!

  ReplyDelete
 35. @ மதுமதி said...

  -ரசித்துப் படித்த கவிஞருக்கு என் இதயபூர்வமான நன்றி!

  ReplyDelete
 36. துப்பாக்கி சாம்பல் சார் [ மொழிபெயர்ப்பு கொஞ்சம் இடறுது ],
  சிரிச்சு முடிச்சிட்டு வந்து கருத்து சொல்றேன்.

  ReplyDelete
 37. @ ஸ்ரவாணி said...

  ஹாஹ்ஹா... என் பேரை மொழிபெயர்த்ததுல வாய்விட்டு என்னைச் சிரிக்க வெச்சுட்டிங்களே ஸ்ரவாணி மேடம்! (சரிதாட்ட மட்டும் இந்த பின்னூட்டத்தைக் காட்ட மாட்டேன், ஆமா!) நிதானமாப் படிச்சுட்டு எப்ப வேணா வாங்க ஃப்ரெண்ட்! மெனி தாங்க்‌ஸ்!

  ReplyDelete
 38. இந்தப் பதிவை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன் ஐயா. நேரமிருப்பின் பார்வையிடவும்.நன்றி

  ReplyDelete
 39. @ மதுமதி said...

  பார்த்தேன் கவிஞரே... இதைவிட நான் எழுதியதில் ‘சரிதாவின் சங்கீதம்’ எனக்கு மிகவும் பிடிக்கும். அதையும் நீங்கள் குறிப்பிட்டதில் மிக மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube