Friday, July 20, 2012

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்!

Posted by பால கணேஷ் Friday, July 20, 2012

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாடின பாரதிதாசன் இன்றைக்கிருந்திருந்தால் ‘எங்கெங்கு காணினும் சத்தமடா’ என்று மாற்றிப் பாடியிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கான சாதனங்களாக அமைந்தவை மொழியும், சப்தங்களும். இன்றைய காலச் சூழ்நிலை சப்தங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக உணர்கிறேன்.

ஆடி மாதம் பிறந்து விட்டால் போதும்... அமைதி காணாமல் போய் சப்தங்களால் சூழப்பட்டு விடும் தமிழ்நாடு. இங்குதான் தெருவுக்குத் தெரு கோயில்கள் உண்டே. மைக்குகள் கட்டி, அதிகாலையில் துவங்கி பாட்டுக்களை அலற வைத்து அக்கம் பக்கத்தில் எவரும் நிம்மதியாக இருக்க விடாமல் செய்தால்தானே கோயில்கள் இருப்பதும், பக்தி பொங்கி வழிவதும் மற்றவருக்குத் தெரியும்! காதைக் கிழிக்கும் இந்த ஓசைகளால் அக்கம் பக்கத்து இல்லங்களில் சீனியர் சிட்டிசன்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டாலோ, மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டாலோ நமக்கென்ன...?

ஒரு கருத்தை மெதுவான குரலில் நான் சொல்கிறேன். அதற்கு எதிர்க் கருத்தை உரத்த குரலில் என் நண்பன் எதிரொலித்தால் அவன் சொல்வதே சரியோவென எண்ணக்கூடிய மனப்பாங்கை இன்று நான் காண்கிறேன். தொலைக்காட்சிகளில் நடக்கும் அரட்டை அரங்கம், மக்கள் மன்றம் போன்ற நிகழ்ச்சிகளைப் பாருங்கள். மைக்கைப் பிடித்ததும் காச் மூச்சென்று கத்தி, கதறி மூச்சைப் பிடித்துக் கொண்டு உரத்த குரலில் பிளிறி தம் கருத்தைச் சொல்வதே பேச்சுத் திறமை என்று நினைக்கத் தோன்றும்.

 அங்கே கருத்துக்களுக்கு மதிப்பில்லை. சத்தத்துக்கே மதிப்பு. அமைதியாக ஒரு பெண் பேசினால் எடுபடாது. பத்ரகாளி போல் கத்தி எதிரணிப் பெண் பேசினால் அவளுக்குத்தான் கைதட்டல் விழுகிறது. தங்கள் பிள்ளைகள் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் ‘அவங்க பேசறதைப் பாரு’ என்று இப்போது கத்துவதற்குப் பழக்குகிறார்கள். என்னத்தச் சொல்ல...

மெல்லிசை நிகழ்ச்சி, ஆடியோ கேசட் வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கே மேடையில் இருப்பவர்கள் பார்வையாளர்களை சத்தம் போட்டுக் கத்தவும், கூச்சலிடவும் ஊக்குவிககிறார்கள்; பழக்கப்படுத்துகிறார்கள். அதாவது... ஆடியன்ஸ் காட்டுக் கத்தல் கத்திக் கூச்சல் போட்டும், கைதட்டல் சப்தங்களை கடலளவு எழுப்பியும்தான் தாங்கள் உற்சாகமாக இருப்பதை வெளிப்படுத்த வேண்டும்.

இரண்டு மூன்று இளைஞர்கள் கூடிப் பேசும் சந்தர்ப்பங்களில் கவனித்தீர்களானால்... ‘‘நேத்து தியேட்டர்ல கைதட்டல், விசில், டான்ஸ்னு அமர்க்களப்படுத்திட்டோம்ல...’’ என்கிற ரீதியில் பேசுவதைக் கேட்க முடியும். அதாவது இந்தக் கும்பல் எங்காவது சத்தம் எழுப்பியோ, தங்கள் நடவடிக்கைகளால் அடுத்தவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியோ.... எப்படியோ எல்லாரும் இவர்களைக் கவனிக்க வைத்து விட்டால் போதும்... அமர்க்களப்படுத்தி விட்டதாக அர்த்தம். ஆர்ப்பாட்டங்களும் வெற்று சப்தங்களும்தான் கொண்டாட்டமா?

பேருந்தில் பயணிக்கும் சமயத்திலோ சப்தங்களின் பல்வேறு நிலைகளை என்னால் காண முடிகிறது. உதாரணத்துக்கு மூன்று கேரக்டர்களைச் சொல்கிறேன். (1) ஒரு இளைஞன் தன் செல்போனில் ஸ்பீக்கரில் போட்டுப் பாட்டுக் கேட்டபடி வந்தான்- இப்படி சத்தமாகப் பாட்டுக் கேட்பது மற்றவர்களுககுத் தொந்தரவாக இருக்குமே என்ற யோசனையே இல்லாமல். சரி, கேட்கிற பாட்டாவது மென்மையாக அனைவரும் ரசிக்கிற மாதிரியானவையாக இருந்து தொலைக்கக் கூடாதோ... கேட்கச் சகிக்காத வார்த்தைகள் கொண்ட பாடல்கள் வேறு.

(2) பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நபரின் செல்போன் ஒலிக்க, எடுத்துப் பேசினார்- விசு அவர்கள் சினிமாவில் பேசுவாரே... அதுபோன்ற உரத்த குரலில். ‘‘ஆங்... சொல்லு ராதா, டி.நகர் வந்துட்டியா? பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்ல ரத்னா கபே கிட்ட வெயிட் பண்ணு. நான் பஸ்ல வந்துட்டிருக்கேன். பத்து நிமிஷத்துல வந்துடுவேன்.’’ என்று அவர் உரரரத்த குரலில் பேசியதில் கடைசி சீட் பெண்மணியிலிருந்து டிரைவர் வரை அனைவரும் ராதா டி.நகரில் காத்திருப்பதை அறிந்து கொண்டிருப்பார்கள்.

(3) ஸ்டாண்டிங்கில் நான் நின்றிருக்க, பக்கத்தில் நின்றபடி ஒரு பெண் செல்போனி்ல் பேசுகிறாள். உதடுகள் அசைவதுதான் தெரிகிறது எனக்கு. ஓசைகள் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. எவ்வளவுதான் காதைத் தீட்டிக் கவனித்தாலும் என்ன பேசுகிறாள் என்பதை உணர முடியவில்லை ஐயா.

முதலிரண்டு கேரக்டர்களை விட மூன்றாவது எனக்குப் பிடித்திருக்கிறது. என் பள்ளிப் பருவத்தில் இத்தனை சப்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கண்டதாக நினைவில்லை. கல்லூரிப் பருவத்திலும் அப்படியே. சமீப காலங்களாகத்தான நான் மேற்கூறிய விஷயங்கள் எல்லாம் நிகழ்ந்து அதிகரித்தும் வருவதாக நினைக்கிறேன். ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்று கவிஞன் அலறிப் பாட வேண்டிய நிலைதான் இன்றுள்ளது.

 ஒருசில சந்தர்ப்பங்களில் நானும்கூட சத்தமாகப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதுண்டு. என்ன செய்வது...? ‘அமைதியா இரு’ என்று சொல்வதைக் கூட இங்கே கூச்சலிட்டுத்தானே சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆனால் பொதுவாக மெல்லப் பேசுவதும், சப்தங்கள் குறைவாக இருப்பதும் எனக்குப் பிடித்தமானவை.

சப்தங்கள் என்கிற விஷயத்தைப் பொறுத்தமட்டில் என் கருத்து இப்படி. உங்களுக்கு எப்படி?

74 comments:

  1. unmai thaan ayya!
    ungal karuthu!

    naanum athe rakam!
    athaan ungal rakam!

    ezhuthu katti pottathu!

    ReplyDelete
    Replies
    1. எழுத்துக்கள் கட்டிப் போட்டன என்ற வார்த்தைகள் என்னைக் கட்டிப் போட்டு விட்டன சீனி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  2. சத்தம் போடாமல் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

    //அமர்க்களப்படுத்தி விட்டதாக அர்த்தம்.//
    தலைப்பில் ‘சத்தம் இல்லா தனிமைக் கேட்டேன்’. பதிவில் ’அமர்க்களம்’. நல்ல பொருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நானே நினைத்திராத ‘தல‘ப் பொருத்தம் வந்துடுச்சா? அருமை நீங்கள் சொன்னது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  3. //// ஸ்டாண்டிங்கில் நான் நின்றிருக்க, பக்கத்தில் நின்றபடி ஒரு பெண் செல்போனி்ல் பேசுகிறாள். உதடுகள் அசைவதுதான் தெரிகிறது எனக்கு. ஓசைகள் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. எவ்வளவுதான் காதைத் தீட்டிக் கவனித்தாலும் என்ன பேசுகிறாள் என்பதை உணர முடியவில்லை ஐயா.
    ////

    ஆமா ஆமா நானும் பல இடங்களில் கவனித்து இருக்கின்றேன் எப்புடித்தான் இப்படி பேசுவார்களோ ஹி.ஹி.ஹி.ஹி.........

    ReplyDelete
    Replies
    1. என் வியப்பு உங்களிடமும் இருக்கிறதா.. நல்லது, மிக்க நன்றி ராஜ்.

      Delete
  4. எனக்கும் அலர்ஜிதான் சப்தம் என்றாலே எனக்கும் சத்தம் இல்லாத தனிமை வேண்டும் வாங்க வயல் வெளி பக்கம் போவோம் ஒரு ச◌ாண்டியல்ன் நாவலோட.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க தென்றல்... இயற்கைக் காற்று வீசும் வயல்வெளி ஓரம்... கையில் சாண்டில்யன் நாவல்... அப்படி ஒரு சூழ்நிலைய நினைக்கவே இனிக்குது. உங்க சொந்த கிராமப் பக்கம் போயி அனுபவிச்சுட வேண்டியதுதான். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
    2. நீங்களும் வாங்க சகோ.

      Delete
  5. சத்தம் இல்லாத தனிமையான இடம் கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு அப்படி ஒரு தனிமையை நான் அனுபவிக்கும் இடம் மத்திய நூலகம்தான் ராஜ். நீங்களும் ஒரு நல்ல நூலகம் போய்ப் பாருங்களேன்...

      Delete
  6. ஏதோ அவர்களால் முடிந்தது செய்கிறார்கள்...

    நாம் பொருத்துதான் போக வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. பொறுத்துப் போகப் பழகி விட்டோம் சௌந்தர். ஆனாலும் ஆதங்கம் அவ்வப்போது தண்ணீரில் அழுத்திய பந்து மாதிரி வெளிவந்து விடுகிறது. உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. அடுத்த முறை இதுமாதிரி பஸ்டேன்டில் நின்னு போன் பேசுற பெண்ணை முறைச்சி பாக்காதீங்க அப்புறம் வேற மாதிரி ஆகிடப்போகிறது...

    ReplyDelete
    Replies
    1. இதுவரைக்கும் எதும் ஆகலை. இனி உஷாரா இருந்துக்க வேண்டியதுதான், ஹி... ஹி...

      Delete
  8. உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்னுடன் இயைபான ரசனை கொண்டவராக இருப்பதில் மிகமிக மகிழ்கிறேன் சதீஷ் ஸார். மிக்க நன்றி.

      Delete
  9. பெண்கள் பேசுவதை எல்லாம் கேட்க (அறிய) முடியாது சார் ! அது அவர்கள் மனதைப் போல (த.ம. 5)

    ReplyDelete
    Replies
    1. ஆழ்கடல் போல் ஆழமானது பெண்கள் மனது என்பார்கள். அதனால் தான் சத்தமே இல்லாமல் பேச முடிகிறது போலும். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  10. Miga arumaiyaana, theerkkamaana padhivu. Thannaip pattri mattume kavalaip padaamal aduththavargalaip pattriyum yosikkum manappaangu endru manidhanukku varugiradho, andru thaan ip pirachchinai theerum.

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். உடன்பட்டு மகிழ்வுடன் நன்றி நவில்கிறேன் நான்.

      Delete
  11. எனக்கு அந்த அந்த இடங்களில் அப்படி அப்படி இருக்கப் பிடிக்கும் வாத்தியாரே.. சினிமாவில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு படம் பார்க்க பிடிக்கும் ஆனால் அது முதல் காட்சியாக இருந்தால் மட்டுமே, மற்ற காட்சிகளில் அப்படி இருபதில்லை, காரணம் முதல் காட்சியில் ரசிகனாக செல்வேன் மற்ற காட்சிகளில் படம் பார்க்க செல்வேன்...

    கல்லூரி கலை நிகழ்சிகள் என்றெல்லாம் என் வாழ்கையில் இல்லை, ஆனால் அலுவலகத்தில் உண்டு, அங்கே தொகுபாளர்களாக பிரபலங்கள் தான் வருவார்கள் கத்திக் கூப்பாடு போட சொல்வார்கள் .. வேலை மறந்து ஒரு நாள் களிபதால் அனைவரும் கத்திக் கூச்சல் போடுவார்கள்....

    மற்றபடி உங்கள் ஒன்று இரண்டு மூன்றுடன் நான் ஒத்துப் போகிறேன் வாத்தியரே... நீங்கள் சொன்னால் நாங்கள் கேட்டுத் தானே ஆக வேண்டும் த ம 6

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்வதெல்லாமே சரியாக இருக்கும். கேட்டுத்தானாக வேண்டும் என்று முடிவு கட்டிவிட வேண்டாம் சீனு. எல்லாரும் எல்லாக் கருத்துடனும் ஒத்துப்போக முடியாது உண்மையில். மாற்றுக் கருத்திருப்பின் தயங்காமல் விவாதிக்கலாம். திறந்த மனதுடன் தயாராகவே இருக்கிறேன் நான். உங்கள் அனுபவங்களைக் கூறியதை ரசித்தேன். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. This write up reflects the thoughts of the common man who are subjected to such sound conversation. But one thing I must point out here Mr Ganesh - When you are dead against the people who are talking in loud voice simultaneously you are keen to know the conversation of the girl who talks silently. Sorry you cannot find out subject of the conversation even from their body language.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அவர்கள் உடல்மொழியின் மூலம் கூடப் புரிந்து கொள்வது கடினம்தான். ஒருவேளை காதல் பேச்சாக இருக்கலாம் என்று யூகித்துத்தான் வைத்திருக்கிறேன். உங்களின் நற்கருத்துக்கு என் மகிழ்வான நன்றி.

      Delete
  13. உங்கள் கருத்துதான் 'எங்களு'க்கும் என்று சொல்லாமலேயே தெரியுமே உங்களுக்கு......!! :))

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். ‘எங்கள்’ கருத்தை நான் அறிவேன் நன்றாக. மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  14. கடைசி நபரை தான் பிடிக்குதா? இருங்க சரிதா மேடம் கிட்டே சொல்லுறேன் :)

    ReplyDelete
    Replies
    1. யப்பா.. குதூகலமா இருக்கற குடும்பத்துல கும்மியடிச்சிராதீங்கப்பா... நான் சொன்னது அம்மணிகளோட பேசற ஸ்டைலைத்தான். அம்மணிகளையே இல்லீங்கோவ்...! மிக்க நன்றி மோகன்.

      Delete
  15. ஒருசில சந்தர்ப்பங்களில் நானும்கூட சத்தமாகப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதுண்டு. என்ன செய்வது...? ‘அமைதியா இரு’ என்று சொல்வதைக் கூட இங்கே கூச்சலிட்டுத்தானே சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

    yes

    ReplyDelete
    Replies
    1. ஆமோதித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  16. நான் விரும்புவதும் தனிமை தான் Sir! மழலைகளின் கூச்சலைத்தவிர எந்த சத்தமும் பிடிப்பதில்லை!! ஆனால் இன்றை உலகில் நித்தமும் இப்படிப்பட்ட சத்தத்திற்கு மத்தியில் தான் சகித்துக்கொண்டு வாழ வாழவேண்டியிருக்கிறது!!! நான் மிகவும் ரசிப்பது தனிமையும், தனிமையில் அமைதியும்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் யுவராணி.. சத்தத்தை சகித்துக் கொண்டு வாழப் பழகி விட்டாலும்கூட நிச்சலனமான அமைதிக்கும் புத்தகங்களுக்கும் மனது ஏங்கத்தான் செய்கிறது. உங்களின் ஒருமித்த ரசனையைக் கண்டு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  17. நீங்கள் சொன்னதை வழி மொழிகின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... என்னை ஆமோதித்த என் அருமை நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  18. தொலைபேசில சத்தமில்லாம பேசுனோம்னா..பக்கத்துல இருக்கிற நண்பன்..மச்சி யாருடா அவன்னு கேக்குறான்..சத்தம் போட்டு பேசுனா நீங்க இப்பிடி சொல்லறீங்க..ஒரு நாளைக்கு எத்தனை சோதனைதா சாமீ :D :D

    apart from the joke, it's thinkable! (TM 9)

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைத்த பதிவு என்று டானிக் தந்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  19. சென்னை மின் வண்டித் தொடர்களில், மாலை நேரப் பயணம் (பீச் டு தாம்பரம்) எப்பொழுதும் சத்தம் மிகுந்ததாகவே இருக்கும். விற்பனையாளர்கள், பிச்சைக்காரர்கள், அலைபேசி அரட்டையாளர்கள், அலைபேசிப் பாட்டுக் கேட்பவர்கள், பக்கத்தில் இருப்பவர்களிடம் கூட, நூறு டெசிபெல் சத்தத்திற்கு மேல் சத்தம் போட்டு பேசுபவர்கள் எல்லாம் சேர்ந்து தலைவலி வந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்தான். இந்த அனுபவம் எனக்கும் பலமுறை நேரிட்டதுண்டு. என்செய்ய... தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  20. இந்த மாதிரி பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கிறது. நீங்கள் சொல்ல வந்ததை மிக அழகாவும் அதே நேரத்தில் மிக சுருக்கமாகவும் எழுதிய விதம் என்னை கவர்ந்தது. உங்களின் வெளியுலக பார்வையும் அதை சார்ந்த எண்ணங்களும் அதி நீங்கள் எழுத்தில் கொண்டுவந்து அழகாக தொகுத்து கொடுத்தது அருமை.பாராட்டுக்கள். இது மாதிரி பதிவுகளை நான் அதிகம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஸீரியஸான மேட்டராயிற்றே. எழுதலாமா எனறு ஒரு தயக்கம் இருந்தது என்னுள். இதுபோல பகிர்ந்து கொள்ள நிறைய எண்ணங்கள் உண்டு நம்மிடம். அதனால் உங்களின் விருப்பப்படி தொடர்கிறேன் நண்பா.

      Delete
  21. மூன்றாவதாக நீங்கள் குறிப்பிட்ட பெண் பேசிய போது அவளின் உதடு அசைந்தது மட்டும் உங்களுக்கு தெரிந்தது என்றும் சத்தமே வெளி வரவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் அந்த பெண் பேசியது அமெரிக்காவிற்கே கேட்டது உங்களுக்கு கேட்கவில்லை என்பது ஆச்சிரியம். ஆனால் இப்போது புரிந்தது நீங்கள் அந்த பெண்ணின் அழகில் மயங்கி நின்றதால்தான் எதுவும் உங்கள் காதுக்கு கேட்கவில்லை என்பது. பார்வையை பெண்கள் பக்கம் விடாதீர்கள் அல்லது உங்கள் வீட்டிற்கு தகவல் தெரிவிக்க வேண்டி இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஐயய்யோ... அப்டி எதும் பண்ணிடாதீங்க. சும்மா பேசுறதைக் கேக்கத்தான் முயற்சியே...

      Delete
  22. இங்க யாரு எல்லாம் இது அதிக சத்தம் என்று அமோதிப்பவர்கள் பேசாமல் அமெரிக்கா வந்து 2 மாதங்கள் பஸ்ஸில் பயணம் செய்யுங்கள் அதன் பின் இந்த சத்ததின் அருமையை உணர்வீர்கள் மயான அமைதி ஒருரிரு நாளில் போரடித்துவிடும். அக்கரைக்கு இக்கரை பச்சை

    ReplyDelete
    Replies
    1. நூற்றுக்கு நூறு உண்மை. இங்கு வந்த முதலிரண்டு நாளில் எதையோ இழந்தது போல உணர்ந்தேன். பிறகு தான் தெரிந்தது, சத்தமே இல்லை! ஆயிரம் கார்கள் சென்று கொண்டிருந்தாலும் யாரும் ஹாரன் அடிப்பதில்லை!

      Delete
    2. ஆஹா... நீங்கள் இருவரும் சொன்னதில் இருந்து காரம் சாப்பிட்டு விட்டு ஸ்வீட் சாப்பிட்டால்தான் இனிமையை உணர முடியும் என்பது புரிகிறது. நண்பர்களே... இருவருக்கும் என் இதயம் நிறை நன்றி.

      Delete
    3. ஆமாம் நண்பரே நீங்கள் சொல்வது மிகவும் உண்மை..
      அது மட்டுமா
      பெருகி ஓடும சாக்கடை,
      ஈக்கள், கொசுக்கள்,
      வியாதிகள்,
      குண்டும் குழியுமாக சாலைகள்,
      சுயநலம் மிக்க ஜனப்ப்ரளயம்,
      லஞ்சம்,ஊழல்,கயமைத்தனம்
      உபயோகமற்ற அரசு இயந்திரம்
      பெயருக்கு இருக்கும் பிரதமர்
      ஜகத்தை சுற்றும் ஜனாதிபதி
      இவையெல்லாவற்றையும் விட்டு விட்டு நீங்கள்
      எப்படித்தான் அமெரிக்காவில் வாழ்கிறீர்களோ?
      மிகவும் பொறுமைசாலி ஸார் நீங்க!

      Delete
  23. / சப்தங்கள் குறைவாக இருப்பதும்/

    குறைந்த சப்தமே எனது விருப்பமும். நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. அமைதியை விரும்பும் உங்களுக்கு என்னுடைய உளம்கனிந்த நன்றி.

      Delete
  24. சுற்றி நடக்கும் தினசரி காட்சிகளை உன்னிப்பாக கவனித்து இருக்கிறீர்கள். அந்த பெண் பாலச்சந்தர் டைரக்‌ஷனில் “காதோடுதான் நான் பாடுவேன், மனதோடுதான் நான் பேசுவேன்” என்ற ஜெயந்தியின் பிரதிபலிப்பு போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... இருக்கலாம்னு தோணுது. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  25. அந்த 3வது கேரக்ட்டர் யாரையாச்சும் லவ்வும்... அது கூட புரிஞ்சும் புரியாத மாதிரி... நீங்களும் ராஜும்.... ஹீ..ஹீ..ஹீ.. வாஸ்தவமான உண்மையைத் தங்கள் பதிவின் ஊடாகச் சொல்லி இருக்கிரீர்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. மனதை லேசாக்கும் விஷயங்களில் சத்தமும் ஒன்று. மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில் ஓவென்று கத்தினால் நமது அழுத்தம் குறையும் என்று கூறுகிறார்கள்.சில நேரங்களில் சத்தம் போட்டு கதறி அழும்போது மனம் லேசாகி விடும் என்பது உண்மை. ஆனால் நமது சத்தம் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.அமைதியைவிட சத்தம் சந்தோஷமானது என்றே தோன்றுகிறது பல சமயங்களில்

    ReplyDelete
    Replies
    1. சத்தம் குறித்த உங்களின் கருத்து புதிதாக இருக்கிறது எனக்கு. ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. இதுமாதிரி சந்தர்ப்பங்களில் அமைதிக்கு விதிவிலக்கு அளிப்பதில் தவறில்லை. மிக்க நன்றி முரளிதரன்.

      Delete
  28. அமைதியின் ஆனந்தத்தை அனுபவிக்க சத்தத்தால் அவதிப்பட்ட பிறகே முடியும், இல்லையா? (இல்லாவிட்டல், அமெரிக்க வாசகர் எழுதியிருப்பதுபோல் மயான அமைதி ஆகிவிடாதா!) நிழலின் அருமை வெய்யிலில்!

    -ஜெ.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். சத்தத்தால் அவதிப்பட்டபின் கிடைக்கும் ஏகாந்தமான அமைதி சொர்க்கம்தான். அது இல்லாவிட்டால் இதற்கு மதிப்பில்லை என்பதை உணர முடிகிறது. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  29. அடாவடி செய்கைகளால் தன் இருப்பை உச்சத்தில் ஏற்றி காண்பிப்பது போல இதுவும் தன் இருப்பை வெளி காட்டிக்கொள்ள ஒரு உத்தியே (உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரக்க பேசுதல்) என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கவன ஈர்ப்பு என்பதும் ஒரு நல்ல பாயிண்ட்தான். அருமையான கருத்துக்கும் வருகை தந்த மகிழ்வுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள் தம்பி.

      Delete
  30. ( வார்த்தைகள் இன்றி... ஆமோதிப்பாய்...தாங்கள் சொன்னது முற்றிலும் சரி...என்கிற பாவனையில்...)
    தலையசைப்பு மாத்திரம்

    ReplyDelete
    Replies
    1. தலையசைத்து ஆமோதித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  31. Replies
    1. என் கருத்தை ஆமோதித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  32. ஒருசில சந்தர்ப்பங்களில் நானும்கூட சத்தமாகப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதுண்டு. என்ன செய்வது...? ‘அமைதியா இரு’ என்று சொல்வதைக் கூட இங்கே கூச்சலிட்டுத்தானே சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆனால் பொதுவாக மெல்லப் பேசுவதும், சப்தங்கள் குறைவாக இருப்பதும் எனக்குப் பிடித்தமானவை.//

    தற்போதைய நிலையில்
    அவசியமான பதிவு
    சப்தமும் வெப்பமுமே
    இங்கே பாதிப் பிரச்சனைக்குக்
    காரணமாக இருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சப்தமும் வெப்பமும்... சரியாச் சொன்னீங்க ஸார்... மிக்க நன்றி.

      Delete
  33. நல்லதொரு பகிர்வு.
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. அருமைன்னு சொன்ன குமாருக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  34. ஒருசில சந்தர்ப்பங்களில் நானும்கூட சத்தமாகப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதுண்டு. என்ன செய்வது...? ‘அமைதியா இரு’ என்று சொல்வதைக் கூட இங்கே கூச்சலிட்டுத்தானே சொல்ல வேண்டியதாயிருக்கிறது./// உண்மை உண்மை உண்மை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை என்று ஆமோதித்த தங்கைக்கு மகி்ழ்வுடன் கூடிய என் நன்றி.

      Delete
  35. ம்ம் நிச்சயம் உண்மையான தகவல்தான் அங்கிள்......

    பேச்சில் இனிமை இருந்தாலே போதும்.

    ReplyDelete
  36. அருமையான நல்ல பதிவு. #அதிகாலையில் துவங்கி பாட்டுக்களை அலற வைத்து அக்கம் பக்கத்தில் எவரும் நிம்மதியாக இருக்க விடாமல் செய்தால்தானே கோயில்கள் இருப்பதும், பக்தி பொங்கி வழிவதும் மற்றவருக்குத் தெரியும்! காதைக் கிழிக்கும் இந்த ஓசைகளால் அக்கம் பக்கத்து இல்லங்களில் சீனியர் சிட்டிசன்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டாலோ, மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டாலோ நமக்கென்ன...?# உண்மை தோழரே. அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?

    http://newsigaram.blogspot.com/2012/07/01.html

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube