Thursday, February 16, 2012

நடை வண்டிகள் - 4

Posted by பால கணேஷ் Thursday, February 16, 2012
சுபாவும் நானும் - 1

1983 டிசம்பர் மாதம். ஆனந்த விகடனில் ‘சிம்மாசனம்’ என்ற தலைப்பில் வந்திருந்த சிறுகதையைப் படித்த என் சித்தி, என் அம்மாவிடம் அதை மிகவும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தார். மாணவப் பருவத்தில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு பத்திரிகைகள் படிக்காத நான், சித்தி ஸ்கூலுக்குக் கிளம்பிப் போனதும் (டீச்சர்ங்க!) விகடனை எடுத்துப் படித்தேன். அந்தச் சிறுகதையின் நடையழகும், கருப்பொருளும் மனதைக் கொள்ளை கொண்டது. எழுதியது யாரென்று பார்த்தேன். சுபா! ‘யாரிந்தப் பெண்மணி? பிரமாதமாக எழுதியிருக்கிறார்களே...’ என்று எண்ணினேன்.

பின்னர் கல்லூரிப் பருவத்தில் எல்லா எழுத்தாளர்களையும் படித்துப் பழகிய நாட்களில் சுபா ஏராளமான சிறுகதைகளும், மோனா, மாலைமதி ஆகியவற்றில் நாவல்களும் எழுதி பிரபலமான எழுத்தாளர். சுபா’ என்பது ஒரு பெண்ணல்ல, அது ‘சுரேஷ்’, ‘பாலகிருஷ்ணன் என்ற இரு நண்பர்களின் கூட்டு முயற்சியில் இருவர் பெயரின் முதலெழுத்தையும் எடுத்து ‘சுபா’ என்று வைத்துக் கொண்ட விஷயத்தை அப்போது தெரிந்து கொண்டு மிக ஆச்சரியப்பட்டேன்.

வழங்கு தமிழில் எழுதாமல் நல்ல தமிழ் எழுத்து நடையை சுபா கைக் கொண்டிருந்ததை வியந்து ரசித்திருக்கிறேன். அந்த தனித் தமிழ் நடை க்ரைம் கதைகள் எழுதிய போதும், நகைச்சுவைக் கதைகள் எழுதிய போதும் ரசனைக்கு ஏற்றதாகவே இருந்தது மேலும் சிறப்பு.

சில காலத்திற்குப் பின்பு மாத நாவல்கள் அதிகம் விற்கத் தொடங்கிய பருவத்தில் ‘சூப்பர் நாவல்’ என்ற ஒன்று சுபாவின் படைப்புகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. சூப்பர் நாவலோ, வேறு ஏதாவது மாத நாவலோ... ‘சுபா’வின் எழுத்தைத் தவறாமல் வாங்கிப் படித்து விடுவேன். நாவலைப் படித்த உடனேயே விமர்சனக் கடிதமும் எழுதி விடுவேன். நான் விரும்பிப் படித்த எழுத்தாளர்களில்  மிக அதிகமாக வாசகர் கடிதம் எழுதியது ‘சுபா’வுக்குத்தான். தினமலரில் சேர்ந்த பின்னர், இரவுப் பணி முடிந்து கிளம்புவதற்கு முன்னர், நாவலுக்கான விமர்சனக் கடிதத்தை டைப் செய்து, அழகாக லே அவுட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப ஆரம்பித்தேன். (அந்தக் கடிதங்களில் எழுத்துப் பிழை இல்லாமல் இருந்ததையும், சிரத்தையாக வடிவமைக்கப் பட்டிருந்ததையும் சுபா மிகவும் ரசித்திருக்கிறார்கள் என்பதை பின்னர் அறிந்தேன்.)

வேலூர் தினமலரில் நான் பணி செய்த போது தீபாவளி வாழ்த்து ஒன்றை கணிப்பொறியில் வடிவமைத்து ப்ரிண்ட் அவுட் எடுத்து சுபாவிற்கு அனுப்பியிருந்தேன். அதை மிகவும் ரசித்த சுபா, அதை ‘கணேஷிடமிருந்து வந்த, கணிப்பொறி அமைத்த தீபாவளி வாழ்த்தை மிகவும் ரசித்தோம். இதோ உங்கள் பார்வைக்கு’ என்று எழுதி ‘சூப்பர் நாவல்’ உள் அட்டையில் பிரசுரித்திருந்தார்கள். அந்த வாழ்த்தை இங்கே தந்திருக் கிறேன். (இப்போது பார்த்தால் சாதாரணமாகத் தெரியும். இன்று கணிப்பொறிகளின் வேகத்தையும், கிடைக்கும் சாஃப்ட்வேர்களையும் வைத்து இதை அளவிடக் கூடாது. அப்போது 386 என்கிற மிகவும் மெதுவான கம்ப்யூட்டர்களே இருந்தன. புரோகிராம் வரிகள் எழுதித்தான் டிசைன் செய்ய வேண்டும். தீபாவளி வாழ்த்துக்கு நான் எழுதிய புரோகிராம் கீக்கள் மொத்தம் 10,020 என்றால் அந்த முயற்சியின் சிறப்பை உணர்வீர்கள்)

சுபா என் பெயரையும் குறிப்பிட்டு, வாழ்த்தையும் பிரசுரித்ததில் மிகமிக மகிழ்ந்து போனேன். சுபாவிற்கு நன்றி சொல்லிக் கடிதம் எழுதினேன். பின்னர் சென்னை வந்த சமயம் சுபாவைச் சந்திக்க விரும்பி ‘ஆத்மா ஹவுஸ்’ சென்றேன். பாலா ஸாரின் வீட்டுக் கதவைத் தட்டினேன். கவுன் போட்ட குட்டிப் பெண் வந்து, ‘‘நீங்க அப்பாவோட ரசிகரான்னு கேட்டாரு’’ என்றாள். ‘‘ரசிகர் இல்லம்மா, வாசகர்னு சொல்லு’’ என்று சொல்லியனுப்பினேன். அப்பாவிடம் பேசிவிட்டு வந்து, ‘‘அப்பா உங்களை மாடியில வெய்ட் பணணச் சொன்னாரு’’ என்றது அந்தக் குழந்தை -ஸ்ரீவைஜயந்தி. (அந்தக் குழந்தைக்கு டிசம்பர் 2011ல் கல்யாணம் நடந்தது. அதில் கலந்து கொண்டு வாழ்த்திய என் பூரிப்பை வார்த்தைகளால் விளக்குவது கடினம்)

பாலா வந்தார். சுபாவின் கதைகளைப் பற்றிப் பேசினேன். ‘‘ஏன் நெர்வஸா இருக்கீங்க? முகத்தைப் பார்த்தே பேச மாட்டேங்கறீங்களே...?’’ என்று கேட்டார். ‘‘உங்க கிட்ட நிறையப் பேசணும்னு மனசுக்குள்ள லிஸ்ட் போட்டுட்டு வந்தேன் ஸார். முகம் பாத்துப் பேசினா சந்தோஷத்துல எதாவது விட்ருவனோன்னுதான் இப்படிப் பேசினேன்’’ என்று விட்டு நினைத்த விஷயங்களைப் பேசிவிட்டுக் கிளம்பினேன். அதன் பின்னர் வாசகனாக எழுதும் கடிதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

சுபா தங்கள் நண்பர் பட்டுக்கோட்‌டை பிரபாகருடன் இணைந்து ‘உங்கள் ஜூனியர்’ என்ற மாத இதழைத் தொடங்கினார்கள். ஒரு மாதம் பி.கே.பியின் நாவலும், மறு மாதம் சுபாவின் நாவலும், நாவலுடன் இணைந்த பல பல்சுவை அம்சங்களும் இணைந்து சுவாரஸ்யமான புத்தகம் அது. மிக ரசித்துப் படித்து கடிதங்கள் எழுதுவேன். ‘உங்கள் ஜுனியர்’ ஆரம்பித்து 25வது இதழ் வெளிவந்தபோது அதில் 25 போட்டிகளை வாசகர்களுக்காக வைத்திருந்தார்கள் (எல்லாமே போஸ்ட் கார்டிலேயே எழுதி அனுப்பும்படி அமைத்திருந்தார்கள்.).அதில் 10 போட்டிகளுக்கு ஆர்வமாக எழுதி அனுப்பினேன்.  26வது இதழில் எனக்கு ஒரு இனிய ஆச்சரியம் காத்திருந்தது. போஸ்ட் கார்டில் எழுதிய என்‌னுடைய குட்டிச் சிறுகதையை முதல் பரிசு பெற்றதாக அறிவித்து வெளியிடப்பட்டிருந்தது. இப்போது படித்தால் எனக்கே சிரிப்பு வருகிற நடை அது. (இங்கே கொடுத்திருக்கிறேன்- நீங்களும் சிரிக்க). ஆனாலும் அச்சில் அதைப் பார்த்தபோது கிடைத்த ஆனந்தம் அளவிடற்கரியது.

பின்னாட்களில் வந்த உங்கள் ஜுனியர் இதழ்களில் ஒன்றிரண்டு சிறு படைப்புகள் வெளியாகியிருந்தன. சென்னை வந்த ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் சுரேஷ் சாரையும் சந்தித்துப் பேசியிருந்தேன். சுபாவுக்கும் அவர்களின் குடும்பத்து உறுப்பினர்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவனாக ஆகியிருந்தேன். இப்படியான ஒரு காலச்சதுரத்தில் தான் ஒரு முறை சென்னை வந்தபோது சுபாவைச் சந்திக்கச் சென்றேன். சுபா இருவரும் இருந்தார்கள். 

படைப்புகள் பற்றி சற்று நேரம பேசியபின் ஒரு மிகப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க விரும்புவதாக சுபா சொன்னார்கள். அதைப் பற்றி விரிவாக விளக்கினார் சுரேஷ் ஸார். அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதின் மூலம் சுபாவிடம் என் நெருக்கம் மிகமிக அதிகமாகப் போகிறது என்பதையும், குடும்ப நண்பர்களில் ஒருவன் என்ற அந்தஸ்தை எனக்கு  அது அளிக்கப் போவதையும் அப்போது கிஞ்சித்தும் அறியாமலேயே சம்மதம் சொல்லி வைத்தேன்.

-தொடர்கிறேன்...

61 comments:

  1. இருவர் இணைந்து எழுதி இத்தனைப் பிரபலமாவது பெரிய விஷயம். அவர்களுடனான உங்கள் நட்பும் வியக்கவைக்கிறது. அந்த வாழ்த்துமடல்... உண்மையிலேயே உங்கள் உழைப்பையும், சுபாவின் மீதான பெருமதிப்பையும் காட்டுகிறது. தொடரும் பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் கணேஷ் சார்.

    ReplyDelete
  2. @ கீதமஞ்சரி said...

    முதல் வருகையாக வந்த நீங்கள் அந்த வாழ்த்து மடலைப் பாராட்டியது மிக மனமகிழ்வளிக்கிறது தோழி. என்னுடன் தொடரும் உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்! (கட் திஸ் சார், கால் மீ கணேஷ்)

    ReplyDelete
  3. தடுத்துப் பார் அரைநிமிடக் கதை நன்றாகவே உள்ளது .....பெரிதாக்கிப் படித்தேன்.
    [ இப்போது வருவது போல் ஒருபக்கக் கதை , ஒருநிமிடக் கதை என்று ]
    அந்த அந்த காலத்திற்கு அது அது பொருந்தும்.
    நம்முடைய பழைய புகைப்படம் பார்த்தால் கூடத் தான்
    நாம் இப்படியா இருந்தோம் என
    எண்ணத் தோன்றும். நகைப்பிற்கு இடமில்லை.
    அப்பாடி , 10020
    கீக்களா........ பொறுமை , அருமை , அழகு.
    சுபா வுடனான அனுபவப் பகிர்வுகள் பிரமாதம்.
    என்ன பொறுப்பு ? நாவல் இதழின் ஆசிரியர் பணியோ ?

    ReplyDelete
  4. @ ஸ்ரவாணி said...

    அந்த அரைப்பக்க குட்டிக் கதையைப் பாராட்டித் தட்டிக் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆசிரியர் பணியா? இல்லை, ஆனால் என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்த தோழிக்கு மனமகிழ்வுடன் நன்றி நவில்கிறேன்.

    ReplyDelete
  5. (அந்தக் கடிதங்களில் எழுத்துப் பிழை இல்லாமல் இருந்ததையும், சிரத்தையாக வடிவமைக்கப் பட்டிருந்ததையும் சுபா மிகவும் ரசித்திருக்கிறார்கள் என்பதை பின்னர் அறிந்தேன்.)

    அருமையான சிரத்தையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. @ இராஜராஜேஸ்வரி said...

    மகிழ்வு தரும் பாராட்டினை வழங்கிய தங்களுக்கு மனம் நிறைந்து நன்றியை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
  7. தடுத்துப்பார் கதை கவர்ந்தது.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. @ இராஜராஜேஸ்வரி said...

    என முதல் எழுத்துக் கிறுக்கலை தட்டிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. சுபா வுடன் கூட நீங்கள் நெருக்கமா வியக்க வைக்கிறீர்கள் சார் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. @ r.v.saravanan said...

    உங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வைத் தந்தன. மிக்க நன்றி சரவணன்.

    ReplyDelete
  11. தொடருங்கள். படித்துக் கொண்டு வருகின்றேன்.

    ReplyDelete
  12. @ kg gouthaman said...

    தொடரும் தங்களின் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி ஸார்!

    ReplyDelete
  13. பொறாமையா இருக்கு சார்... இன்னும் எத்தனை எழுத்தாளரோட பழகியிருக்கீங்க... எழுதுங்கள்... காத்திருக்கிறோம்... எழுத்தாளர் சுபா என்ன பொறுப்பை கொடுத்தார் என்று எனக்கு தெரியும்... ஆனால் இப்ப சொல்லமாட்டேன்... உங்களின் எழுத்திலேயே படிக்க காத்திருக்கிறேன்... (நீங்கள் போனில் பேசும்போது முன்பு பார்த்தாக சொன்ன வேலைதானே...)

    ReplyDelete
  14. எனக்கு ஒரு சந்தேகம் சார் இந்த சுபா அவர்கள் தான தற்போது கே வி ஆனந்து சார் படத்துக்கு கதையாசிறியர்?இல்லை என்றால் பிழைக்கு மன்னிக்கவும்.

    மிக அருமையான ரசிக்கும் படியான
    அனுபவப் பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. @ குடந்தை அன்புமணி said...

    நான் போனில் தங்களிடம் சொன்னது பி.கே.பி. எனக்குக் கொடுத்த பொறுப்பைப் பற்றி. சுபா கொடுத்த பொறுப்பு வேறு. ஸோ... உங்களுக்கும் சஸ்பென்ஸ் தான். ஹா... ஹா... தங்கள் வருகைக்கும கருத்துக்கும் என் இதய நன்றி.

    ReplyDelete
  16. @ dhanasekaran .S said...

    ஆம் தனசேகரன். அயன், கோ, வேலாயுதம் என சுபாவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. சூப்பர் நாவல் சுபா எழுதும் போது அட்டைப்படம் எடுத்த புகைப்பட நிபுணராக இருந்தவர் கே.வி.ஆனந்த். அப்போது சுபாவுடன் ஏற்பட்ட அவர் நட்பு பின்னர் பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம் ஒளிப்பதிவு கற்று, முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கி, பின் இயக்குனரான பின்பு இப்போதும் வெற்றிக் கூட்டணியாக தொடர்கிறது. நன்றி தனசேகரன்!

    ReplyDelete
  17. அருமை அருமை
    சொல்லுகிற விஷயமும்
    சொல்லிச் செல்லும் விதமும் அருமை
    தாங்கள் எழுத்துலகுடன் கொண்ட நீண்ட காலத் தொடர்பே
    இத்தனை சிறப்பாக படைப்புகள் தர முடிகிறது
    என நினைக்கிறேன்
    சுவார்ஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. சிறுகதையின் நடையழகும், கருப்பொருளும் மனதைக் கொள்ளை கொண்டது. எழுதியது யாரென்று பார்த்தேன். சுபா! ‘யாரிந்தப் பெண்மணி? பிரமாதமாக எழுதியிருக்கிறார்களே...’ என்று எண்ணினேன். ///
    நானும் சுபா நாவல்கள் படிக்க ஆரம்பித்த பொழுது யாரிந்த பெண்மணி என்றுதான் நினத்தேன்.

    பல வருடங்களுக்கு முன்பே கணினி கிரீட்டிங் தயாரித்து அனுப்பியது வியக்க வைக்கும் ஒன்றுதான்.

    ஒரு மிகப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க விரும்புவதாக சுபா சொன்னார்கள்//என்ன பொறுப்பு?சீக்கிரம் நடைவண்டிகள் 5வது பாகத்தினை போடுங்கள்!

    ReplyDelete
  19. குட்டிக் கதை க்யூட்டாகவே இருக்கு. அந்தச் சமயத்துல இது ஒரு புது முயற்சி இல்லையா..

    சஸ்பென்ஸ் நல்லாவே வைக்கிறீங்க :-))

    ReplyDelete
  20. அருமையான் ஆரம்பம்..வாழ்த்து மடலையும் தங்களது குட்டிக் கதையையும் மறக்காமல் எங்களுக்கு பகிர்ந்ததில் மகிழ்ச்சி..அப்போது வாழ்த்து அட்டை வடிவமைப்பது சிரமமான விசயம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்..உண்மையென உணர்கிறேன்.. சுபாவோடு உங்கள் நாட்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.அந்த பெரிய பொறுப்பு துணை ஆசிரியர் என்று நினைக்கிறேன்..சரியா?

    ReplyDelete
  21. சுபாவின் படைப்புகளை வெகுவாக ரசிப்பவள் நான். ஆத்மா, உங்கள் ஜூனியர்லாம் விரும்பி படித்த புத்தகங்கள். இப்போ குடும்ப பொறுப்புகள் வந்த பிறகு அதெல்லாம் படிப்பதில்லை. பழைய புத்தக கடைகளுக்கு போகும்போதெல்லாம் அள்ளிக்கிட்டு வந்து படிப்பேன்.

    ReplyDelete
  22. எனக்கு பிடிச்ச எழுத்தாளர்கள் கூடலாம் நட்பு பாராட்டுற உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு அண்ணா

    ReplyDelete
  23. எழுத்தாளர்கள் சுபா வுடனான உங்களது நட்பு பற்றி மிக அழகாக விவரித்துள்ளீர்கள்.தொடர்ந்து நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    அந்த வாழ்த்து அட்டை மிகவும் அருமையாக இருக்கு.

    குட்டிக்கதை முடிவுல ஒரு குட்டி டுவிஸ்ட் வைத்து அழகாக எழுதியிருக்கீங்க.மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  24. @ Ramani said...

    தங்களின் பாராட்டு எனக்கு ஊக்க சக்தி. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  25. @ ஸாதிகா said...

    சரிம்மா தங்கச்சி... சீக்கிரமே தொடர்ந்திடுறேன். உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  26. @ அமைதிச்சாரல் said...

    போஸ்ட் கார்டுல கதை எழுதறத கொஞ்‌சம் சிரமமாத்தான் இருந்துச்சு. இப்ப நீங்கல்லாம் ஓ.கே. சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. நல்லா சஸ்பென்ஸ் வைக்கிறனா? இப்படிச் சொல்லி என்னை உற்சாகமூட்டிய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் மேடம்!

    ReplyDelete
  27. சுபா - இவர்களுடைய சில கதைகள் படித்து ரசித்திருக்கிறேன்....

    உங்களுடைய அனுபவங்கள் பகிர்ந்து கொள்வது நன்று.... நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது....

    தொடருங்கள் நண்பரே....

    ReplyDelete
  28. @ மதுமதி said...

    வீடு பூரா அலசி உங்களோட பகிர்ந்துக்கணும்னு இந்த மாதிரி விஷயங்களை தேடி எடுத்தேன். சுபா எனக்குத் தருவதாகச் ‌சொன்னது நீங்கள் யூகிப்பது இல்லை. வேறொன்று... விரைவில் சொல்லி விடுகிறேன் கவிஞரே... நற்கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  29. @ ராஜி said...

    கல்யாணத்துக்கப்புறம் பெண்களோட லைஃப் ஸ்‌டைல்ல மாற்றம் வந்துடுது இல்ல... அதனாலதான் நான் பெண்களை மதிக்கிறேன். என்னது... பொறாமையா? அவங்க எல்லாரையும் உனக்கும் அறிமுகம் பண்ணி வெச்சிட்டாப் போச்சு. சரியாம்மா...

    ReplyDelete
  30. @ RAMVI said...

    நான் மிக மெனக்கெட்ட வாழ்த்து அட்டையைப் பாராட்டியதோடு, குழந்தைக் கிறுக்கல்னு நினைச்ச குட்டிக் கதையையும் பாராட்டினதுல எனக்கு மிகமிக மகிழ்ச்சி. அதை வழங்கிய தங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  31. @ வெங்கட் நாகராஜ் said...

    எங்கள் நட்புப் பயணத்தைப் பற்றிய பகிர்தலில் உடன் வந்து என்‌னை உற்சாகப்படுத்தும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. குட்டிக் கதை ட்விஸ்ட் அருமை. நல்ல இடத்தில்தான் தொடரும் போடறீங்க....!

    ReplyDelete
  33. அனுபவம் தொடரட்டும்...இரட்டையர்களுடனான உங்கள் நட்பு வியக்க வைக்கிறது கணேஷ் சார்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  34. @ ஸ்ரீராம். said...

    கு்ட்டிக் கதையை நீங்க ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி. பின்ன... ரைட்டர்ஸோட பழகிட்டு எந்த இடத்துல தொடரும் போடறதுங்கறதைக் கத்துக்காம இருப்பனா? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  35. @ ரெவெரி said...

    அனுபவப் பயணத்தில் உடன் வந்து என்னை மகிழ்வுடன் வாழ்த்திய தங்களின் அன்பிற்கு என் மனம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  36. 10020
    கீகளா?அதில் உங்கள் ஆர்வமும்,சுபா அவர்களின் மீதான அன்பும் மதிப்பும் தெரிகிறது.தொடருங்கள்,தொடருகிறேன்.

    ReplyDelete
  37. சுவாரஸ்யமா இருக்கு. உங்கள் படைப்புக் கதையும் வெளியிடுங்களேன்!

    ///அப்போது 386 என்கிற மிகவும் மெதுவான கம்ப்யூட்டர்களே இருந்தன. புரோகிராம் வரிகள் எழுதித்தான் டிசைன் செய்ய வேண்டும். தீபாவளி வாழ்த்துக்கு நான் எழுதிய புரோகிராம் கீக்கள் மொத்தம் 10,020 என்றால் அந்த முயற்சியின் சிறப்பை உணர்வீர்கள்)

    //


    நிஜமாவே புரிகிறது. hats off.

    ReplyDelete
  38. எனக்கும் இதே நிலைமை தான்..
    ஆரம்ப காலங்களில் சுபா என்பவர்
    ஒரு பெண்மணி என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.
    காலங்கடந்து தெளிந்து தெரிந்து கொண்ட ஒரு விஷயம்...

    நடைவண்டி தடையின்றி ஓடுகிறது...

    ReplyDelete
  39. @ thirumathi bs sridhar said...

    கரெக்டா சொன்னீங்க. புரோகிராம் செய்யறதுல ரொம்ப ஆர்வம் அப்ப. எர்ரர் மெஸேஜ் வர்றப்ப, எங்க த்ப்புன்னு கண்டுபிடிச்சு சரி பண்றதுல ஒரு தனி சந்தோஷம். தங்களின் வருகையாலும் உற்சாகமூட்டிய கருத்தாலும் மிக மகிழ்ந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன் தங்களுக்கு!

    ReplyDelete
  40. @ Shakthiprabha said...

    சிறுகதைகள் படைப்பது எனக்கு மிகப் பிடித்த விஷயம்தான். அவ்வப்போது வெளியிட்டிருக்கிறேன். இந்தத் தொடர் முடிந்ததும் நிறையவே எழுதுகிறேன். ரசனையுடன் கூடிய என் முயற்சியை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  41. @ மகேந்திரன் said...

    ஹா... ஹா... இந்த விஷயத்துல ஏமாந்தவங்க லிஸ்ட் கொஞ்சம் பெரிசுதான். நடைவண்டியின் பயணத்தைப் பாராட்டி, தொடர்ந்து உடன் வரும் நண்பா! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  42. அருமையான பதிவு.தொடரக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  43. சுபா அவர்களுடனான தங்களின் நட்பு வியக்க வைக்கிறது சார்....

    போஸ்ட் கார்டில் எழுதி முதல் பரிசுப் பெற்ற தங்களின் குட்டி கதை சூப்பர்....

    வாழ்த்து மடலுக்காக தாங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தையும் ஆச்சரியம் தான். இப்போது பொறுமை என்பதே குறைந்து கொண்டு வருகிறதே....

    அந்த பொறுப்பை பற்றி தெரிந்து கொள்ள ஆவல்....

    ReplyDelete
  44. எதைப் பாராட்ட! நீங்கள் எழுதி பரிசுபெற்ற ‘தடுத்துப்பார்’ என்ற குறுங்கதையையா அல்லது நீங்கள் ப்ரோக்ராம் எழுதிய தீபாவளி வாழ்த்தையா அல்லது எல்லா எழுத்தாளர்களின் படைப்பையும் படித்து அவர்களோடு நீங்கள் கொண்ட சிநேகத்தையா?

    உங்கள் பதிவைப் படிக்கும்போது பொறாமையாய்(!) இருக்கிறது. எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று.

    நீங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  45. @ சென்னை பித்தன் said...

    தொடர்ந்து என்னுடன் பயணிக்கும் தங்களுக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  46. @ கோவை2தில்லி said...

    அன்றிருந்த பொறுமை இன்று எனக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் தோழி. வாழ்த்தையும் குறுங்கதையையும் நீங்கள் பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. உங்கள் ஆவலை அதிகம் காக்க வைக்காமல் விரைவில் தொடர்கிறேன். தங்களுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  47. @ வே.நடனசபாபதி said...

    நீங்கள் அனைத்தையும் ரசித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களி வருகை தந்த ஊக்கத்தோடு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  48. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராஜா!

    ReplyDelete
  49. முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வருகின்றேன் நான் படித்த உங்கள் முதல் பதிவே மிக அருமை. நீங்கள் எழுதுகின்ற விஷயமும் எழுதி செல்லும் விதமும் மிக அருமையாக் இருக்கிறது அப்போது நிறைய எழுத்தாளர்கள் சொல்லிக் கொள்ளும் வண்ணம் போட்டி போட்டு எழுதுவார்கள். அப்போது எனக்கு புத்தகங்கள் படிப்பது என்றால் ஒரு வெறியே உண்டு(பாடப் புத்தகங்களை தவிர)

    உங்கள் எழுத்து நடை மிக சுவராஸ்மாகவும் தென்றலை போல மனதை தொட்டு செல்கின்றன, வாழ்த்துக்கள் நண்பரே. இன்று முதல் நான் உங்களை தொடர முடிவு செய்துள்ளேன் . நீண்ட நாள்களுக்கு அப்புறம் ஒரு நல்ல எழுத்தை படித்த திருப்தி என் மனதில் எழுந்துள்ளது நன்றி & வாழ்த்துக்கள்!!! வாழ்க வளமுடன்

    ReplyDelete
  50. சுபா பெண் என்றே இதுவரை நாளும் நான் எண்ணியிருந்தேன். மிக்க நன்றி உங்கள் எழுத்துலகப் பகிர்விற்கு. அனைத்தும் ரசிக்கக் கூடிய தகவல்கள் தொடருங்கள் வாசிப்போம். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  51. இவ்ளோ பேர் சொல்லிட்டாங்க.இனி நான் என்ன சொல்லக்கிடக்கு.ஃபிரெண்ட் இனி நீங்கதான் எங்க நடைவண்டி !

    ReplyDelete
  52. @ Avargal Unmaigal said...

    நல்வரவு. அப்போது ஆரோக்கியமான ஒரு போட்டி இருந்த காலம் அல்லவா? பலரும் விரும்பிப் படித்திருக்கிறோம். என் எழுத்து நடையைப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  53. @ kovaikkavi said...

    மீடியா வெளிச்சம் அவங்க மேல பாய்ஞ்சு பல வருஷங்கள் ஆச்சே... இப்பவும் அப்படி நினைச்சிருந்தீங்களா? வியப்புதான். இன்னும் பல நல்ல தகவல்களுடன் தொடர்கிறேன் தோழி. வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  54. @ ஹேமா said...

    நாம வரைஞ்ச படத்தை ஸ்கூல்ல மிஸ், ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பாராட்டினாலும் அம்மா பாத்துட்டு ‘நல்லாருக்கு’ன்னு சொன்னா முகத்துல ஒரு தனிப்பிரகாசம் வரும்தானே... அது மாதிரிதான் ஃப்ரெண்ட் உங்க கிட்ட ஓ.கே. வாங்கறது எனக்கு. நடை வண்டியில் தொடர்ந்து பயணிக்கும் தங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  55. //சுபா! ‘யாரிந்தப் பெண்மணி? பிரமாதமாக எழுதியிருக்கிறார்களே...’//

    ம்! இதை நானும் நினைத்தனுண்டு. அனுபவ பகிர்வு சிறப்பாக இருக்குங்க.

    ReplyDelete
  56. அருமையான தொடக்கம் சார். சுபா அவர்களின் நாவல்களில் இருக்கும், நகைச்சுவை உணர்வுக்காகவே அதன் ரசிகன் ஆனேன்.

    ReplyDelete
  57. @ சத்ரியன் said...

    அனுபவப் பகிர்வைப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் பிரதர்...

    ReplyDelete
  58. @ பாலா said...

    சுபா இருவருக்குமே நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்வுடன் என் இதய நன்றி.

    ReplyDelete
  59. நல்ல அனுபவப்பகிர்வு.

    ReplyDelete
  60. @ விமலன் said...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸார்!

    ReplyDelete
  61. // புரோகிராம் வரிகள் எழுதித்தான் டிசைன் செய்ய வேண்டும். தீபாவளி வாழ்த்துக்கு //

    என்னால் உணர முடிகிறது.

    //முதல் பரிசு பெற்றதாக அறிவித்து வெளியிடப்பட்டிருந்தது. //

    வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube