Thursday, August 9, 2012

அன்புக்குரிய நண்பர்களே...

பதிவர் திருவிழாவுக்கான முழுமை பெற்ற அழைப்பிழ் இது. அனைத்துப் பதிவர்களும் நமக்கான இந்தத் திருவிழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.


Wednesday, August 8, 2012

‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு ஸ்டவ்கள் எரிந்து கொண்டிருந்த சூடான மேஜைகளை நோக்கி நகர்ந்தார்கள். நானும்தான். என் நண்பர் செல்வராமன், பாலாம்பிகா ஹாலில் தன் மகளின் நடன அரங்கேற்றத்ம் இருப்பதாக அழைத்ததால் வந்திருந்தேன். பஃபே விருந்தில் கடைப்பிடிக்க வேண்டிய முதல் விதி: முன்னோர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே செய்ய வேண்டியது. அதன்படி பார்க்காத மாதிரி பார்த்து வைத்துக் கொண்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டேன்.

முதல் பாத்திரத்தில் மஞ்சள் நிறத்தில் ரசமலாய் மிதந்து கொண்டிருந்தது. ‘ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்ற பெரியவர்கள் சொல்லியிருந்த போதிலும் எந்தச் சர்க்கரை வியாதிக்காரனுக்கும் இனிப்பு ஆசை மட்டும் விடுவதில்லை. வசதியான கரண்டியால் லாகவமாக எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டேன். அடுத்து பொங்கல் (ரவா உப்புமாவாகவும் இருக்கலாம்) அதில் முக்கால் கரண்டி. பிறகு அழகிய, சிவப்பான இளம் வடைகள்- வடை சைஸில் பெரிதாகவே இருந்தது. அடுத்த பாத்திரம் இட்லி. அதன் பிறகு பளபளவென்ற ஜொலிப்புடன் மடித்து வைக்கப்பட்டிருந்த தோசை- அதில் ஒன்றையும் பக்கத்திலேயே தொட்டுக் கொள்ள வைத்திருந்த உருளைக்கிழங்கு மசாலாவில் அரைக் கரண்டியும் போட்டுக் கொண்டேன்.

இனி, பத்திரமாக ஒரு மேஜையை அடைய வேண்டியதுதான் என்று தீர்மானித்த போதுதான் அதிர்ச்சி. உட்கார்ந்து சாப்பிடுவதற்கான மேஜை எதுவும் காணோம். என்னைத் தவிர மற்ற எல்லோரும் அனுபவஸ்தர்கள். பஃபேக்கு பழக்கப்பட்ட புத்திசாலிகள். தட்டை லாகவமாகப் பிடித்துக் கொண்டு ஸ்பூனையோ, விரலையோ உபயோகித்து ருசித்துக் ‌கொண்டிருந்தார். ஜாடியில் கைவிட்ட குரங்கு மாதிரி நான்தான் அத்தனை ஐட்டங்களையும் சின்னத் தட்டில் வைத்துக் கொண்டு முழித்தேனே தவிர, அவர்கள் முதலில் ரஸமலாய் சாப்பிட வேண்டியது; அதன்பின் பொங்கல்; அதன் பின்னர் வடை -இப்படி அவ்வப்போது விழுங்கிக் கொண்டிருந்தார்கள். (கணக்குப் பார்த்தால் நான் எடுத்துக் கொண்டதை விட இரண்டு மடங்கு அதிகமாகக் கூட இருக்கும்.)

‘‘என்ன, செளக்கியமா?’’ என்று முதுகுப் பக்கமாய் யாரோ விசாரித்தார்கள். ‘‘ஓ, நீங்க எப்படி இருக்கீங்க?’’ என்றபடி திரும்பினேன். தட்டின் அபாயமான முனையில் ரிஸ்க்கான விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த சாம்பார் சற்றே வெளியுலகத்தைப் பார்க்கும் ஆவலில் எட்டிப் பார்த்தது. ஒரு குண்டு அம்மையாரின் காஞ்சிபுரத்தில் ஒர துளி பட்டதோ- அல்லது பட்டதாக அவர் நினைத்துக் கொண்டாரோ- ஒரு முறைப்பு முறைத்தார். ‘‘ஹி.... ஹி...’’ என்றேன். (தர்மசங்கடமான கட்டங்களி்ல கைகொடுக்கும் வடமொழி தமிழ்ச் சொல். கண்டுபிடித்தவர்: எஸ்.ஏ.பி.)

அந்தக் கணத்தில்தான் எப்படிப்பட்ட பயங்கரமான போர்க்களத்தின் நட்டநடுவே நான் இருக்கிறேன் என்று புரிந்தது. கூட்டம் எக்கச்சக்கமாய் உள்ளது. எல்லோருமே தீனிப் பண்டாரங்கள். எல்லாத் தட்டுகளிலும் வழிய வழியச் சாம்பார், சட்டினி. ஆரம்பத்தில் நான் கண்ட நாசூக்குக்காரர்களின் எண்ணிக்கை குறைந்து ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. பேச்சும் வேகம்; அசைவுகளும் வேகம். ‘‘ஆயிரம் சொல்லுங்க... டோனி செய்தது மடத்தனம்தான்’’ என்று அடித்துப் பேசினார் ஒருவர். எனக்கும் அவருக்கும் சில அங்குலமே இடைவெளி. வேறொருத்தர், ‘‘அவளைக் கட்டிக்கிட்டு நான் படற பாடு’’ என்று சொல்லி நெற்றியில் படீரென்று அடித்துக் ‌கொண்டார். ஒரு கறுப்புக் கண்ணாடிப் பெண், ‘‘ஈஸி இன்ஸ்டால்மெண்ட்’’ என்று தன் கையை நீட்டி வளையலை இன்னொரு பெண்ணிடம் காட்டிக் கொண்டிருந்தார்.

நின்று கொண்டே, தட்டில் இருப்பதைத் தின்று கொண்டே, மறு கையையும் ஆட்டியபடி பேச சிலரால் எப்படி முடிகிறது என்ற வியப்புடன் நான் சாப்பிடவும் முடியாமல், கையை நீட்டவும் முடியாமல், தட்டைப் பிடித்துக் கொள்ளவும் முடியாமல் கோமாளி மாதிரி தடுமாறினேன். ஒன்றுமில்லாததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் தமிழர்கள் என்ற அவப்பெயர் உண்டு. ஆனால் அத்தனை உணர்ச்சி வசப்படுகிறவர்களும் இங்கே குழுமியிருந்ததுதான் ஆச்சரியம்! எனக்கு இன்விடேஷன் கொடுத்த செல்வராமன் கண்ணில் பட்டிருந்தால் நானும் உணர்ச்சிவசப்பட்டிருப்பேன். படவில்லை. இவ்வளவு அமளிகளுக்கு நடுவே ஒரு சர்வர் நீள அகலமான பெரிய ட்ரேயில் இரண்டு குடம் சாம்பாரை நிரப்பிக் கொண்டு வேகமாக நீந்தி என்னைக் கடந்து சென்றார். எனக்குக் குலை நடுங்கியது.

கொஞ்சம் சாம்பாரோ, இட்லி விள்ளலோ மேலே விழுந்துவிட்டால்தான் என்ன, அதற்கு இப்படி அலட்டிக் கொள்ள வேண்டுமா என நீங்கள் நினைப்பது புரிகிறது. காரணம் என்னவெனில் இந்த மாதிரி விசேஷ வைபவங்களுக்குப் போவதற்காகவே நான் வைத்திருந்த தும்பைப் பூ வெள்ளை கதர் வேட்டியும் கதர் சட்டையும் அன்றைக்கு அணிந்து கொண்டிருந்தேன். துளி கறை பட்டாலும் அக்கிரமப் பளிச்செனத் தெரியும்; ஒரு ட்ரே சாம்பார் கொட்டினால்..?

அங்கிருந்து நகர்ந்து தளத்துக்கு வரும் மாடிப்படியின் கைப்பிடி ரெய்ல்ஸில் சாய்ந்தாற்போல் நான் நின்றிருந்தேன். இறங்கிச் செல்வோரும், ஏறி வருவோரும் என் முதுகைச் செல்லமாய் உரசிக் கொண்டே போனார்கள் அல்லது வந்தார்கள். ‘‘சீச்சீ1 அங்கே போய் வாங்கித் தர்றேன். அங்கிள் வச்சிருக்கிறதை எடுக்கக் கூடாது’’ என்று ஒரு தாயின் குரல் கேட்டது. பார்த்தால் அவள் தோளிலிருந்த இரண்டு வயதுக் குழந்தை என் தட்டை- தட்டில் இருந்த எதையோ எட்டிப் பிடிக்க, தட்டிப் பறிக்க- முயன்று கொண்டிருந்தது. தாய் அதன் கையை மடக்கி மடக்கி அடக்கிக் கொண்டிருந்தாள். முள்ளின் மீது துணி விழுந்தாலும் துணியின் மீது முள் விழுந்தாலும் துணிக்குத்தான் ஆபத்து என்று ஏதோ ஒரு பழைய சினிமாவில் கேட்ட வசனம் ஞாபகத்துக்கு வந்தது. குழந்தைக்கும் தாய்க்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெற்றி பெற்றாலும் என் வேட்டி சட்டைக்குத்தான் அபாயம் என்பதை உணர்ந்தபோது என் கை மேலும் அதிகமாக நடுங்கியது. காலில் எதுவோ தட்டுப்பட, கீழே பார்த்தேன். சாப்பிட்ட தட்டுகளைப் போடுவதற்காக நீல நிறத்தில் பெரிய பிளாஸ்டிக் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. தட்டை அதில் வைத்தேன். கடவுளுக்கு நன்றி சொன்னேன். நடையைக் கட்டினேன்.

யிற்றெரிச்சலான பின்கதை ஒன்று இதற்கு உண்டு. அடு்த்த வாரத்தில் ஒரு நாள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் செல்வராமனைப் பார்க்க நேரிட்டது. ‘‘சுஜியின் டான்ஸ் புரோகிராம் எப்படியிருந்தது?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அருமையாயிருந்தது. ஆனால் எனக்குத்தான் டயமில்லை. மாமனாரை ரயிலேற்றிவிட வேண்டியிருந்ததால் சும்மா அஞ்சு நிமிஷம் இருந்துவிட்டு புறப்பட்டு விட்டேன்’’ என்றேன். ‘‘நீங்க வந்ததே பெரிய சந்தோஷம்! டிபன் சாப்பிட்டேளோல்லியோ?’’ என்றார். ‘‘சாப்பிட்டேனே...’’ என்றவன் அதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். ‘‘பஃபேயானதால சாப்பிடச் சிரமப்பட்டு விட்டேன்’’ என்று சொல்லி விட்டேன். ‘‘பஃபேயா? டைனிங் டேபிள் போட்டு, வந்தவர்களை உட்கார்த்தி வைத்து சர்வர்கள் பரிமாறும்படியான்னா ஏற்பாடு பண்ணினேன் ஸ்வாமி? போளி, பாதாம்கீர், ஸமோஸா’’ என்றவர் என் முகத்தைப் பார்த்து, ‘‘நீங்க பாலாம்பிகா ஹாலுக்குத்தானே வந்தேள்?’’ என்றார்.

‘‘ஆமாம்’’ என்றேன்.

‘‘எந்த ஃப்ளோர்?’’

‘‘இரண்டாவது ஃப்ளோர்!’’

‘‘அட ராமா! எங்காத்து ஃபங்ஷன் மூணாவது ஃப்ளோர்லன்னா நடந்தது? ரெண்டாவது ஃப்ளோர்ல ஒரு...’’

நான் மடையன்தான். ஆனால் செல்வராமன் சொல்லும் மீதியையும் கேட்டுக் கொண்டு நிற்கும் அளவுக்கு அல்ல.

                                                           -‘அம்பலம்’ மின்னிதழில் இக்கட்டுரையை
                                                              எழுதியவர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள்.

Monday, August 6, 2012

நடை வண்டிகள் - 29

Posted by பால கணேஷ் Monday, August 06, 2012

நானும் அனுராதாரமணனும் - 2

நான் முதன்முதலாக அனுராதா ரமணன் அவர்களைச் சந்தித்துப் பேசியது ‘மன ஊஞ்சல்’ என்னும் புத்தகம் தயாரிக்கும் சந்தர்ப்பத்தில். அந்தப் புத்தகம் வெளியானதன் பிறகு ‘அன்புடன் அந்தரங்கம்’ என்கிற பெயரில் ‘வாரமலர்’ இதழில் அனுராதா ரமணன் எழுதின கேள்வி-பதில்களைத் தொகுத்து புத்தகமாக்கலாம் என்று தங்கத் தாமரை பதிப்பகத்தார் முடிவு பண்ண, அதற்கான பணிகளை ஆரம்பித்தேன். அது மீண்டும் அனும்மாவைச் சந்திப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.

நான் அவர் வீட்டுக்குச் சென்றதும் வழக்கம் போல் முகம் மலர வரவேற்று, காபி தந்து உபசரித்து அன்புடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வந்த ஒரு எஸ்.டி.டி. போன் கால் மூலம் அவரது இன்னொரு பரிமாணத்தை நான் அறிந்தேன். போனில் அனும்மா பேசினதை இங்கே தருகிறேன். மறுமுனையில் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்களும் என்னைப் ‌போலவே யூகித்துக் கொள்ளுங்கள்.

‘‘ஹலோ... ஓ... நீயாம்மா? சொல்லும்மா! நல்லாயிருக்கியா...?’’

‘‘என்னதிது டைவர்ஸ், கிவர்ஸ்னுல்லாம் பேசிக்கிட்டு? இதோபாரு... இப்படில்லாம் பேசறதை முதல்ல நிறுத்து. மனுஷங்களால தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவுமே கிடையாது. என்னாச்சு அப்படி...?’’

‘‘சரி... உன் மாமனாரும், அவர் தம்பியும் குடிக்கறாங்க... இதுவா உனக்குப் பிரச்சனை? உன் புருஷனுக்கு குடிப்பழக்கம் இல்லதானே...? அப்புறமென்ன? மாமனாரும், சின்ன மாமனாரும் குடிச்சா குடிச்சுட்டுப் போகட்டுமே...’’

‘‘ஓ... நடுவீட்ல வெச்சுக் குடிக்கறாங்கன்றதுதான் உனக்குப் பிடிக்கலையா? ஸ்நாக்ஸ் வேற உங்க மாமியாரே பண்ணித் தர்றாங்கன்றது எரிச்சலா இருக்குங்கற. சரிதாம்மா... ஆக்சுவலா எல்லாருக்கும் இந்தக் கோபம்தான் வரும். உன் கோபத்துல ரொம்ப நியாயம் இருக்கு. ஆனா ஒரு விஷயம் யோசிச்சுப் பாரு... உங்க மாமனாரும், சின்ன மாமனாரும் ஊர்ல மதிப்பும், மரியாதையும் இருக்கற பெரிய மனுஷங்க. ஏதோ வீக்னஸ், குடிப் பழக்கம் வந்துடுச்சு. அவங்க ரோட்ல குடிச்சு, மயங்கி விழுந்துட்டாலோ, இல்ல தடுமாறி நடந்தாலோ குடும்பத்துக்குத் தானே கெட்ட பேர். அதை நினைச்சுத்தான் இப்படி வீட்ல குடிக்கறாங்கன்னு எனக்குத் தோணுது. இப்படி நெனச்சுத்தான் உன் மாமியாரும் அவங்களுக்கு எல்லாம் பண்ணித் தர்றாங்கன்றது என் எண்ணம். அதுசரி... உன் புருஷன் குடிக்கறானா? இல்ல, உன்னை ஏதாச்சும் கொடுமை பண்றானா? ’’

‘‘அப்படியா... அவன் உன்னை உள்ளங்கைல வெச்சுத் தாங்கறானா? அவன் மேல குறை சொன்னா நாக்கு அழுகிடும்னு நீயே சொல்றதானே? ஓ... அவன் குடிக்கறதில்லையா? இதையெல்லாம் கண்ணால பாத்தும்கூட அவனுக்குக் குடிக்கற எண்ணமே தோணலைங்கறது எவ்வளவு சந்தோஷப்பட வேண்டிய விஷயம். அதை விட்டுட்டு நீ இப்படிப் பேசினா என்ன அர்த்தம்? சரிம்மா... அதான் சொன்னேனே... எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு உணர்ச்சிவசப்படக் கூடாது. போனை உன் வீட்டுக்காரர்ட்ட கொடு...’’

‘‘என்னப்பா... உன் வைஃப் பேசினதெல்லாம் கேட்டே தானே...? (மறுமுனையில் ஏதோ பதில் வர) அது சரிப்பா... உங்கப்பாவையும், சித்தப்பாவையும் உன்னால கண்டிக்க முடியாதுதான். ஒத்துக்கறேன். ஆனா நீ ஒண்ணை யோசிச்சுப் பாரு... வீட்ல ஹால்ல உக்காந்து சைட் டிஷ்ஷைக் கேட்டு வாங்கி அவங்க குடிச்சிட்டிருந்தாங்கன்னா குடும்பத்துல இருக்கற பொம்பளைங்களுக்கு கோபம் வராதா என்ன? வெளியாட்கள் யாராவது பார்‌த்தாங்கன்னா, உங்க வீட்டுப் பெண்களுக்கு என்ன மரியாதை இருக்கும்னு நீ நினைக்கற? அவங்களோட உணர்வுகளுக்கும் மதிப்புத் தரணுமில்ல... நீ ஒண்ணு பண்ணுப்பா... உங்கப்பாட்டயும், சித்தப்பாட்டயும் பேசி, அவங்களை வீட்டு மொட்டை மாடிக்குப் போய் குடிச்சுட்டு அங்கயே தூங்கச் சொல்லிடு...’’

‘‘என்ன... தனியா ரூமே கட்டிடறேங்கறியா மொட்டை மாடில? நல்லதுப்பா... இப்படிப் பேசி ஏற்பாடு பண்ணிட்டேன்னா, அவங்களுக்கும் பிரச்சனையில்ல.. உங்களுக்கும் நிம்மதி. உன்‌ பொண்டாட்டியைப் பத்தியும் யோசிக்கணும் நீ. அவளும் பாவம் இல்லையா? உன்னை நம்பித்தானே தன் குடும்பத்தையும், மனுஷங்களையும் விட்டுட்டு வந்து வாழறா... முதல்ல இதைக் கவனிச்சு சரி பண்ணிடுப்பா... போனை அவ கிட்டக் கொடு...’’

‘‘அம்மா ..........., அவன்கிட்ட தெளிவாப் பேசிட்டேன். இந்தப் பிரச்சனையை சீக்கிரத்துல சரி பண்ணிடறேன்னுட்டான். அதனால அவசரப்பட்டு யோசிச்சு எந்த தப்பான முடிவையும் எடுக்கக் கூடாது நீ. நல்லவனா ஒரு புருஷன் கிடைச்சிருக்காம்மா உனக்கு. அவனை அவசரப்பட்டு முடிவெடுத்து நீ தொலைச்சிடக் கூடாது, என்ன..? நீ வேணாப் பாரேன்... அடுத்த தடவை போன் பண்றப்ப, சந்தோஷத்தோட பேசுவே நீ என்கிட்ட. சரியா... ரைட், வெச்சிடறேன்’’

-இப்படிப் பேசிவிட்டு போனை வைத்தார். உரையாடல் என் நினைவிலிருந்தவரை தந்திருக்கிறேன். ஆனால் நான் எழுதியதை விடவும் இன்னும் விரிவாக, கனிவாக, அன்பாக நீண்டநேரம் பேசினார். போனை வைத்துவிட்டு என்னிடம் சொன்னார்: ‘‘அன்புடன் அந்தரங்கம் பகுதியை நான் எழுத ஆரம்பிச்சதுக்கப்பறம் இப்படி போன் கால்கள்லயும், நேர்லயும் வந்து நிறையப் பேர் தங்களோட பிரச்சனையைச் சொல்றாங்க கணேஷ். நானும் என்னால் முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் கவுன்சலிங் பண்ணிக்கிட்டிருக்கேன்’’ என்று அது என்னவோ சாதாரண விஷயம் ‌போல என்னிடம் சொன்னார்.

அவர் கல்கியில் எழுதிய ‘நெருப்பாக நீ’ என்கிற தொடர்கதை கல்லூரி நாட்களில் நான் விரும்பிப் படித்து வந்தது. பாதிக்கு மேல் படிக்க இயலாதபடி குடும்ப சூழ்நிலைகள் அமைந்து விட்டன. அந்த புத்தகத்தை அவரிடம் கேட்டபோது, ‘‘அதை ஓவியம்னு வானதில போட்டாங்க. இப்ப புத்தகம் என்கிட்ட இல்ல. அதுக்கு ரீ பிரிண்ட் போடவும் இல்லை. எங்கயாவது கிடைச்சா வாங்கிடுங்க. அதை ரீ பப்ளிஷ் பண்ண ஏற்பாடு பண்றேன்’’ என்றார். ஏமாற்றமாக இருந்தது எனக்கு. (அதிர்ஷ்டவசமாக அந்த புத்தகம் பின்னாட்களில் பழைய புத்தகக் கடை ஒன்றில் கிடைத்தது. அதை வாங்கி படித்துவிட்டு அனும்மாவிடம் கொடுத்துவிட்டேன் என்பது வேறு விஷயம்.)

அவரிடம் விடைபெற்றுப் புறப்படத் தயாரானபோது பதினைந்து தினங்களில் அவரது பிறந்த நாள் வருவதைச் சொல்லி, என் அட்வான்ஸ் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு, பிறந்த நாள் விழா கொண்டாட அந்த ஆண்டு திட்டமிட்டிருப்பதாகச் சொல்லி அழைப்பிதழ் கொடுத்தார். அனும்மா பற்றி பின்னர் நான் தெரிந்து கொண்ட தகவல்களையும், அந்தப் பிறந்த நாள் விழாவுக்குச் சென்றதையும் பற்றி.....

                                                                                                             -தொடர்கிறேன்...

Friday, August 3, 2012

மடமைதனைக் கொளுத்துவோம்

Posted by பால கணேஷ் Friday, August 03, 2012

மீபத்தில் நான் படித்த இரண்டு பதிவுகள் எனக்குள் சிந்தனை அலைகளையும் கோபத்தையும் எழுப்பின. அமைதிச்சாரல் மேடம் எழுதின இந்தப் பதிவு பெண் சிசுக்கள் கருவிலேயே அழிககப்படும் கொடுமையையும். நிறைய படித்தவர்களே இதில் ஈடுபடும் விஷயத்தையும் விளக்கமாகச் சொல்லியது அந்தப் பதிவு. அதன்பின் சிந்தனைச் சிறகுகள் தளத்தில் என் தோழி சாமுண்டீஸ்வரி இட்ட இந்தப் பதிவில் விஜய் டிவி நிகழ்ச்சில எடுத்த வீடியோ கிளிப்பிங்குகளோட இதே விஷயத்தைப் பகிர்ந்திருந்தாங்க. டிவி பாக்கற பழக்கம் இல்லாததால இதைப் பாக்கத் தவறின நான் இங்க பார்த்து மனம் கலங்கிட்டேன். கொஞ்சம் சிரமம் பாக்காம... இந்த ரெண்டையும் படிச்சுட்டு வரும்படி உங்களை கேட்டுக்கறேன்.

படிச்சாச்சா...? ‘மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ன்னும் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ன்னும் இன்னும் பலப்பல பாடல்களை எழுதி பெண்மையைப் போற்றுகிறோம். எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதித்து விட்டதாகப் பெருமை கொள்கிறோம். ஆனால் பெண் குழந்தை பிறந்தால் மட்டும் வேண்டாமென்றால்... எங்கே போய் முட்டிக் கொள்வது..? பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் இந்த மோசமான வழக்கம் இப்போது நடப்பதில்லை என்றுதான் நான் எண்ணியிருந்தேன். டாக்டர்களிடையே இதற்கு கோட் வேர்ட் வைத்து இத்தகைய விஷயங்கள் இப்போதும் நடப்பதாக அறிந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியும் கோபமும் இன்னும் என்னுள்.

‘பெண் குழந்தையா பெத்துப் போடறா’ என்று மருமகளைக் கொடுமை செய்யும், மகனுக்கு மறுமணம் செய்து வைக்கும் மாமியார்கள் பலர் இருக்கவே செய்கிறார்கள். குழந்தை ஆணாக அல்லது பெண்ணாகப் பிறப்பதில் சமபங்கு ஆணுக்கும் உண்டு என்று விஞ்ஞானம் சொல்கிறது. ஆணின் உயிர்த் துளியில் இருக்கும X அல்லது Y குரோமசோம் பெண்ணின் கருமுட்டையிலிருக்கும் குரோமசோம்களுடன் இணையும்போதுதான் குழந்தை ஆணா பெண்ணா என்பது தீர்மானமாகிறது. இதற்குப் பெண்ணைக் குற்றம் சொல்வது படிக்காதவர்களின் மடமை என்று கொண்டாலும் கூட வேறொரு கேள்வி எழுகிறது. என் மகனுக்கு பெண் குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் அந்த மாமியார்க்காரி. பேரன் வளர்ந்து வயசுக்கு வந்து விட்டால் (ஐ மீன் கல்யாண வயசுக்கு) அவனுக்கு வேறொரு இளைஞனையா மணமுடித்து வைக்கப் போகிறாள்? அப்போது அவனுக்கேற்ற ‘பெண்’ கிடைக்குமா என்றுதானே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையப் போகிறாள்? இப்படி கருவிலேயே பெண் குழந்தைகளை அழித்து விட்டால் பின்னர் ஆண்கள் மட்டுமே இருக்கும உலகில் என்ன இருந்துவிடப் போகிறது?

படித்த ஆண்பிள்ளைகள்கூட அம்மாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இதே தவறு செய்கிறார்கள் என்பது மிகமிக வேதனையளிக்கும் விஷயம். உலகமெங்கும் இது நடந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கத்தில் முதலிரண்டு இடங்களையும் வகிக்கும் சீனா மற்றும் இந்தியாதான் இக்கொடுஞ்செயலைச் செய்வதிலும் முன்னணி வகிக்கின்றன என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்த மாதிரி கொடுமைக்குத் துணைபோன மஹாராஷ்ட்ராவின் ஷிக்ராபூரைச் சேர்ந்த மோகன் நகானே என்ற மருத்துவரின் தொழிலுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்கிற விஷயம் சற்றே ஆறுதல் தருகிறது. இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக. நல்ல தீர்ப்புகளுக்கு முன்னுதாரணமாக அமையட்டும்.

வலையில் எழுதிவரும் கவிதைக்காரி ஒருவரின் ப்ரொபைலில் இந்த வரிகளைப் பார்த்தேன் - எதுவாகவும் நான் இல்லை. ஆனால் எல்லாமாகவும் நான் இருக்கிறேன் - மிக அருமையான வரிகள். ஒரு ஆணுக்கு எல்லாமாகவும் பெண்தான் இருக்கிறாள். வளர்த்து ஆளாக்க அம்மா, மகிழ்வு+வலிகளை பகிர்நது கொள்ள சகோதரி, மனதறிந்து பழக தோழி, உயிரின் பாதியாய் மனைவி... இப்படி எல்லா நிலைகளிலும் பெண் இன்றி ஆணின் வாழ்வு இல்லை. இந்துக் கடவுளின் ‘சிவசக்தி’ தத்துவம் கேலிக்குரியதும் இல்லை. ‘ஆணும் பெண்ணும் சரிசமம்’ என்று அது சொல்லும் செய்தி மகத்தானது.

நம்மிடம் இருக்கும் வலைப்பூ என்ற ஆயுதத்தின் வலிமையை நாம் அறிவதில்லை. சமீபத்தில் திருநெல்வெலியில் விசாலினி எனற பெண்ணின் ஐக்யூ 230 என்பதும் (சராசரி மனிதனின் ஐக்யூ 90லிருந்து 110க்குள்தான் இருககும்) புனேயில் ஐஐடி ப்ரொபசர்களுக்கே பாடம் எடுக்கும் திறன் படைத்திருக்கிறாள் என்பதும உணவு உலகத்தில் ஆபீசர் சங்கரலிங்கம் அவர்களும். கௌசல்யா அவர்களும் மற்றும் பலரும் எழுதிய பின்தான் வெளியுலகம் அறிந்தது, வலைப்பூக்களில் இந்தக் கட்டுரையை பார்த்துவிட்டு லட்சக் கணக்கில் உலகெங்குமிருந்து மெயில்கள் குவிந்ததாக அப்பெண்ணின் அம்மா காட்டினார் யூத் பதிவர் சந்திப்பில். இம்மாத க்ரைம் நாவலில் (கற்கண்டு ஆயுதம்) ராஜேஷ்குமார் கூட ஒரு பெட்டிச் செய்தியாக இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ளோரால் படிக்கப்படும் இத்தகைய சக்தி வாய்ந்த ஆயுதமான வலைப்பூவில் நம்முடைய கோபத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்வோம். நிச்சயம் இதற்குப் பலன் இல்லாமல் போகாது. இங்கே என் கோபத்தையும், ஆத்திரத்தையும். ஆதங்கத்தையும் கொட்டிவிட்டேன். உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...!

Wednesday, August 1, 2012

கல்யாண சமையல் சாதம்

Posted by பால கணேஷ் Wednesday, August 01, 2012

ணவு என்கிற விஷயத்தில் தென்னிந்தியர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறையை வேறு எந்த நாட்டவரும் எடுத்துக் கொள்வதில்லை என்பது என்னுடைய கருத்து. நார்த் இன்டியன் ஃபுட், சைனீஸ், ஃபுட், கான்டினென்டல் ஃபுட் என்று எத்தனையோ விதவிதமான உணவு முறைகள் இருந்தாலும் நம் தென்னிந்திய உணவு முறைகளை அடித்துக் கொள்ள முடியாது. நம் உணவு வகைகளில்தான் எத்தனை எத்தனை வெரைட்டிகளில் டிபன் ஐட்டங்கள், சாப்பாட்டு ஐட்டங்கள்...! இப்போதும் பரிசோதனை முயற்சியாகச் செய்து புதிய புதிய விதங்களி்ல் சமையல் குறிப்புகள் நிறையக் கண்களில் படுகின்றன. உணவு சாப்பிடுவது என்பது பசியைப் போக்குவதற்காக மட்டுமின்றி, ரசனை சார்நததாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

‘புதிய பறவை’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். ‘‘நல்லா இருக்குன்னு சொல்றோமே... அது நல்ல ரசனையிலிருந்துதான் உருவாகுது. எல்லாத்துக்கும் ரசனைதான் அடிப்படை’’ என்பார் சிவாஜி. உணவின் சுவையானது உணவுப் பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை சுத்தம் செய்வதிலும், கழுவுவதிலும், ‌சமையலில சேர்க்கும் உப பொருட்கள் எந்த அளவில் சேர்க்கப்படுகின்றன, எந்த உஷ்ண நிலையில் சமைக்கப்படுகின்றன என்பதில்தான் அமைந்திருக்கிறது. மற்றபடி, ‘எங்கம்மாவின் கைப்பக்குவம் வராது’ ‘என் மனைவி செஞ்சா ஊரே மணக்கும்’ என்பதெல்லாம் சுத்த ஹம்பக்தான்!

ரஜினியோட எக்ஸ்ப்ரஷனை பாருங்க..!
‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு; நெய் மணக்கும் கத்தரிக்காய்; நேத்து வெச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா, நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதய்யா...’ என்று துவங்கும் பாடலில் தான் ரசிக்கும் சாப்பாட்டு ஐட்டங்களை கதாநாயகி பாடுவதாக கவிஞர் (யார்?)  எழுதியிருப்பார் பாருங்கள்... ரசிகரய்யா! அவரையம் விஞ்சும் வண்ணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன்னுடைய ‘கடல்மேற்க குமிழிகள்’ என்ற நாடகக் காப்பியத்தில் உணவைப் பற்றியும் பாடியிருக்கிறார் இப்படி:

‘‘கத்தரிப் பொரியலும், கரும் பாகற்குழம்பும்
புத்துருக்கு நெய்யும், பொன்னிறப் பருப்பும்,
மிளகின் சாறும், புளியாத தயிரும்,
அனைவர்க்கும் நிகரே! ஆயினும் மின்னொளி
உனக்கொன் றதிகள்’’ என்றுரைத்தான் வையன்.
‘‘என்ன?’’ என்றாள் மின்னொளி.
சின்னதாய் முத்தம் தந்தான்-
அன்னதனோடே அருந்தினாள் விருந்தே!


என்ன ஒரு ரசனை! கிடைத்தால் இப்படி முத்தத்தோடு உணவருந்தி சமையலோடு சேர்த்து காதலையும் வளருங்கள். (ஹோட்டல்ல யார்ட்டயாவது கேட்டு நீங்க அடி வாங்கினா, நான் பொறுப்பில்ல... பாரதிதாசன்தான் பொறுப்பு!) கரும்பாகற் குழம்பு என்றால் என்னவென்ற யோசித்ததில் வற்றல் குழம்பைத்தான் சொல்லியிருக்கிறாரோ என்று தோன்றியது. வற்றல் குழம்புடன் சுட்ட அப்பளமும், பருப்புத் துவையலும் கிடைத்தால் எனக்கு அமிர்தம்தான்!

இப்படி உணவு வகைகளுக்கு அவைகளுக்கேற்ற சரியான காம்பினேஷன் அமைந்து விட்டால், மூக்குப் பிடிக்கத் தின்றாலும் சரி, அளவோடு சாப்பிட்டாலும் சரி... பசியோடு நல்ல ருசியையும் அனுபவிக்கலாம். குழாய்ப் புட்டு என்கிற ஒரு ஐட்டம் எனக்கு மிகப் பிடித்தமானது. அதனோடு வாழைப்பழத்தைப் பிசைந்து சாப்பிடலாம். கொண்டைக் கடலை மசாலா இருந்தால் அதைச் சேர்த்தும் சாப்பிடலாம். ஒருமுறை உணவகத்தில் ஒருவர் அதைப் பாலில் கலந்து சாப்பிடுவதைக் கண்டு வியந்தேன். ஆப்பம் என்கிற ஒரு ஐட்டத்துக்குத்தான் தேங்காய்ப்பால் சரியாக வரும் என்பது அதுவரை என் கருத்தாக இருந்தது.

இப்படி விதவிதமான காம்பி னேஷன்களைக் கண்டுபிடித்துச் சாப்பிடுவதும் ஒரு தனி சுவாரஸ்யம்தான். இல்லாமலா பின்னே, ‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்’ என்கிற பாடலில் விதவிதமான சாப்பாட்டு காம்பினேஷன்களை அப்படி விளக்கியிருப்பார்கள்? அத்தனை வகைகளையும் கடோத்கஜன் சாப்பிடுவது போல் சாப்பிட்டால் நம் வயிறு என்னாகும் என்பது வேறு விஷயம். நான் சொல்ல வந்தது ரசித்துச் சாப்பிடுவது என்பதைத்தான்.

உணவை ரசித்துச் சாப்பிடும் விஷயத்தில் கூட சில மேனர்ஸ் கடைப்பிடிக்க வேண்டுமென்பதும் என் கருத்து. என் நண்பன் ஒருவன் சாப்பிடும் போது டிடிஎஸ் சவுண்ட் எபெக்ட் போல ‘சபக் சபக்’ என்று மெல்லும் சத்தம் என் காதுகளைக் குடையும். அவனோடு உணவருந்துவதை பின்னாட்களில் தவிர்த்து விட்டேன். சாம்பாரையோ, ரசத்தையோ, பாயசத்தையோ கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் போது ‘சர்’ரென்று சத்தம் எழ உறிஞ்சுபவர்கள் என் அருகில் அமர்ந்து தொலைத்து விட்டால் பாதிச் சாப்பாட்டில் எழுந்து விடுவேன். (தலையெழுத்து! பலமுறை அப்படி அமைந்து விடுகிறது). மற்றவர்களுக்கு உறுத்தாமல் வெகு நளினமாகச் சாப்பிடும் கலை நம்மவர்களில் பலருக்கு இன்னும் கைவரப் பெறவில்லை என்பதே என் கருத்து.

அடை- அவியல், பூரி -கிழங்கு, வெஜிடபிள் பிரியாணி... சொல்லிக் கொண்டே போனால் லிஸ்ட் மிக நீண்டு விடும். இப்படி சாப்பிடுவதில் பிடித்த ஐட்டங்கள் பல இருந்தாலும் எனக்கு எப்போதும் சம்மதமானது தோசைதான். சில நேரங்களில் மதிய உணவு நேரம் தாண்டிவிட்டால் தோசை சாப்பிட்டே பொழுதை ஓட்டிவிடுவேன். சட்னி, சாம்பார், தோசை என்கிற இந்தக் காம்பினேஷன் எனக்கு எந்த நேரத்திலும் எந்த சீதோஷ்ண நிலையிலும் சம்மதமான, ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயமாக இருந்து வருகிறது.

உணவு விஷயத்தில் என் நிலைப்பாடு இது. உங்களின் கருத்து எது?

பின்குறிப்பு : இதைப் படித்ததும் எனக்கு எதுவும் பட்டம்(?) வழங்கலாமா என்று யாரும் யோசிக்க வேண்டாம். அடுத்து நான் ‘அழகு’ பற்றிய என் கண்ணோட்டத்தை எழுதும் போது என்ன பட்டம் தருவதென்று நீங்கள் திருதிருவென்று முழிக்க நேரிடும். கபர்தார்!

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : கத்தரித்தவை-8
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube