Wednesday, March 13, 2013

நிலவொளிர் கடற்கரை!

Posted by பால கணேஷ் Wednesday, March 13, 2013
ற்றார் உறவினரைப் பிரிந்து வெளிநாட்டில் சென்று வேலை செய்து பொருளீட்டி வரும் குடும்பத் தலைவர்கள் இன்று அதிகம். அவர்களைப் பிரிந்து வாடும் மனைவியும், அவர்தம் மழலைகளும் ‘அவர் எப்போதாடா வருவார்’ என்று ஏங்கி வாடி நிற்பார்கள். வெளிநாட்டில் வேலை பார்த்து பொருள் சேர்த்துக் கொண்டிருந்தாலும், அந்நாட்டுடன் ஒட்ட இயலாமல் மனம் மட்டும் தன் குடும்பத்திடம் தன் நாட்டில் இருக்க, வாடி நிற்கும் இளைஞர்கள் அனேகம். இத்தனை கவலைகள் இருந்தாலும் இன்றைய தினத்தில் கவலையைச் சற்றே மறந்து இளைப்பாறுதல் பெற, ஷாப்பிங் மால்களும், தொலைக்காட்சியும், நினைத்த நேரம் பேசி மகிழ அலைபேசியும் ஆக.. பல சாதனங்கள் உதவுவதற்கு இன்று இருக்கின்றன.

ஆனால் சங்க காலத்தில் வாழ்ந்த தலைவனுக்கும் தலைவிக்கும்... பாவம், இத்தகைய வசதிகள் ஏதுமில்லை. பொருளீட்டத் தலைவன் வெளிநாடு சென்று விட்டால், வசதி படைத்தவராக இருப்பின் புறா மூலம் தூது அனுப்பி கருத்தினைப் பகிர்ந்து கொள்ள முடியும். இல்லாதவர்கள் இயற்கையிடமும், தங்களுக்கு வாழ்த்த தோழியர் ஆகியோரிடம் தலைவியும், பொருள் தேடச் சென்ற தேசத்தில் தனக்குக் கிடைத்த நண்பனுடன் தலைவனும் தத்தம் ஏக்கங்களைப் பகிர்ந்து கொண்டு ஆறுதல் பெறுவதுதான் ஒரே வழி. சங்கப் பாடல்களில் பல இத்தகைய கையறு நிலையினைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. சில பாடல்கள் தலைவனுக்கோ, அல்லது தலைவிக்கோ ஆறுதல் கூறுவதாக அமைந்து மனதைத் திருடுவதுமுண்டு. அத்தகைய பாடல்களில் ஒன்றை இன்று இங்கே காணப் போகிறோம்...!

ங்களின் நல வாழ்விற்கான பொருள் தேடலின் பொருட்டு தலைவன் பிரிந்து சென்று விட்டான். அவன் வருவதாகச் சொன்ன காலத்தை எதிர்பார்த்து அவனுடைய ‌பெண்மயில் ஏங்கித் தவித்து, வழி மேல் விழி வைத்து பாதையைப் பார்த்துப் பார்த்து ஏங்கிப் போகிறாள். தலைவன் வந்த பாடில்லை. நாட்கள் ஓடுகின்றன. ஊரார் எல்லாம் ‘‘இனி அவன் எங்கே வரப் போகிறான்? பொருள் தேடச் சென்ற இடத்திலேயே தங்கி வி்ட்டனன் போலும்!’’ என்ற ஏளனம் பேசுகின்றனர். ஊராரின் புறணிப் பேச்சுகள் சுட, தலைவி மனம் வருந்தி, அவள் உடல் வாடி நிற்கிறாள்.

உடல் மெலிந்து, துயர் படிந்த முகத்தினளாய் வாடி நிற்கும் தலைவியைப் பார்த்து கவிஞர் உலோச்சனார் ஆறுதலாகப் பாடுகிறார். அவர் தன் பாடலின் மூலம் தலைவன் வந்து கொண்டிருக்கிறான் என்பதை அவளுக்கு அழகாய் எடுத்து உணர்த்தி, ‘‘வாட்டம் நீங்கிடு பைங்கிளியே!’’ என்று கூறி ஆறுதல் தருகிறார். நற்றிணையில் சொல்லப்படும் அந்த நற்றமிழ்ப் பாடலைச் சற்றே படிக்கலாமா?

பெய்யாது வைகிய கோதை போல
மெய்சா யினை அவர் செய்குறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி யுட்கொளல்
ஒழிக மாளநின் நெஞ்த் தானே;
புனரி பொருத பூமணல் அடைகரை
ஆழி மரங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பாய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றாற் கான லானே.


இந்தப் பாடலுக்கான பொருள்: ‘‘சூடாத மலர் மாலையினைப் போல உடல்வாடி நிற்கிறாய் நீ! உன்னவர் வருவதாகச் சொன்ன நாளும் தாண்டிவிட்டது. ‘இனி அவர் வரமாட்டார்’ எனறு ஊரார் பேசும் பேச்சை நினைத்து வருந்தாதே நீ! உன் நெஞ்சிலிருந்த அத்தகைய நினைவுகள் முற்றாக அகலட்டும்! அலையடித்து பொடி மணல் எங்கும் படர்ந்து கிடக்கும் கடற்கரையில் தேர்ச்சக்கரத்தில் நண்டுகள் மிதிபடாத வண்ணம் தேரை விலக்கி ஓட்டுமாறு தேரோட்டியிடம் எடுத்துச் சொல்கிறான் உன் தலைவன். அவன் வரும் வழியில் கானலிடத்தில் நிலவும் விரிந்து சில்லென்ற தன் ஒளியைப் பரப்பியுள்ளது பார்!’’ என்பது.

இந்த வார்த்தைகளின் மூலம் எத்தனை அழகாக, உன் தலைவன் வந்து கொண்டிருககிறான் என்பதையும், பொருள் வளம் சேர்த்து வரும் அவனுடன் ஒரு இன்ப வாழ்வு காத்திருக்கிறது என்பதையும், தலைவிக்கு ஆறுதல் சொல்லும் பாடலினூடாக கடற்கரை மற்றும் நிலவொளியின் இயற்கை அழகையும் வர்ணித்து ஒரே பாடலில் எத்தனை ஜாலம் காட்டியிருக்கிறார் சங்கப் புலவர்! நினைக்க நினைக்க வியப்பே மேலிடுகிறது! இன்னும் இன்னும் சங்கத் தமிழை அருந்தி மகிழ மனம் அலைபாய்கிறது. இந்தத் தமிழமுதம் உங்களுக்கும் மகிழ்வு தந்தது தானே...!

63 comments:

  1. சிறப்பான பகிர்வு. பாடல் சொல்லும் பொருளும் அருமை. படம் அதை விட அருமை நண்பரே... பொருத்தமான படம் தான்!

    ReplyDelete
    Replies
    1. தமிழையும் படத்தையும் முதல் நபராய் வந்து ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  2. அருமை ஸார்.. நீங்க தமிழ்ல இப்படி பின்னி எடுப்பீங்கன்ணு தெரியாது.. கலக்கல்.. நீங்க சங்க கால பாட்டு சொன்னீங்க.. இந்தாங்க "எங்க" கால பாட்டு ஒண்ணு.. ;-) (இதுக்கு விளக்கம் ஏதும் தேவையில்ல..)

    வண்ண மான் வஞ்சி மான் நீர்க்கோலம்
    கண்களால் கன்னத்தில் தான் போட..

    இன்னுமா இன்னுமா போர்க்கோலம்
    இங்கு நீ அங்கு நான் போராட..

    அம்மம்மா, நாளெல்லாம் கானல் நீரில் குளித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அடப்பாவி...! சங்க காலத்துப் பாட்டை ரசிக்கிறதால நான் சங்க காலத்து ஆளாய்யா? அதென்ன எங்க காலத்துப் பாட்டு...? நம்ம காலத்துப் பாட்டுன்னு சொல்லுய்யா... என் ரசனையை அருமை என்ற ஆனந்துக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  3. அடடாடா..... என்னமா எழுதிட்டீர்!!!!

    படம் வெகு பொருத்தம்! உங்க கை வண்ணமா கணேஷ்?

    ப்ச்....பாவம். அப்போ ஸ்கைப் இல்லையே:(

    ReplyDelete
    Replies
    1. படம் என் நண்பர் தமிழ் (செந்தமிழ்ச் செல்வன்) வரைந்தது. ‘சரிதாயணத்’தில் என்னைக்கூட(!) பார்க்கும்படி வரைந்திருந்த அதே கரங்கள் தீட்டிய ஓவியம்! ரசனையுடன் ரசித்து, உரிமையுடன் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete

  4. சங்க தமிழ் பாட்டை மட்டும் நீங்கள் வெளியிட்டால் என்னை மாதிரி ஆளுகளுக்கு புரியாது என்று நினைத்து அதற்கு மிக எளிமையான தமிழில் தெளிவாக சொல்லிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள். எங்களைப் போல உள்ளவர்களும் சங்கபாடலின் கருத்தை அறிய வைக்கும் உங்களின் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களைப் போலத்தாங்க! கொஞ்சம் ட்ரை பண்ணி அறிந்து கொண்டு உங்களுக்கும் பகிர்கிறேன். அவ்வளவே. பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  5. பாடலின் பொருள் அருமை... உங்களின் ரசனையையும் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. என் ரசனையை ரசித்த D.D.க்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  6. நிலவொளிர் கடற்கரை என்றதும்
    ஒரு நல்ல கவிதை எழுதி இருப்பீங்க
    என்று ஆவலோடு வந்தேன்...
    வந்ததும் அந்த ஆவல் கூடிவிட்டது...
    அட...
    நம்ம கதை..
    தினம் தினம் அனுபவிக்கும்
    விக்கித் தவிக்கும்
    எண்ணங்கள்
    உணர்வுகள்..

    இங்கே ஒரு சங்கப் பாடலையும் சொல்லி
    அதற்கான அழகான விளக்கம் கொடுத்து
    கொஞ்சம் கவலையை மறக்கச் செய்தீர்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. எண்ணங்கள் அலைமோத அலைகடல் வாழ்விலும் நான் பகிர்ந்த கவிதையை ரசித்துக் கவலையை மறந்த மகேனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  7. இன்றும் இருக்கிறார்கள் .வந்துவிட்டால் என்ன செய்வது என்றும் அதற்குள்ளே முடித்துவிடுங்கள் என்றும் சிலபேர் உள்ளார்கள்.

    ReplyDelete
  8. அழகான பாடல் அருமையான விளக்கம்.

    ReplyDelete
    Replies
    1. பாடலையும், விளக்கத்தையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  9. திகட்டாத தெள்ளமுத, சங்கத் தமிழ் பாடல் கண்டேன்! சுவைத்து உண்டேன்!

    ReplyDelete
    Replies
    1. சுவைத்து மகிழ்ந்த புலவர் ஐயாவுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  10. தமிழமுது தித்திப்பாய் இருக்கின்றது.பாடலுக்கு எளிய நடையில் பொருள் தந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. தமிழமுதை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  11. சங்க பாடல்கள் விளக்கம் புரிந்தால் மிகவும் ரசிக்கலாம்.( நான் படிச்சது M.A தமிழ்னாலும் last bench ங்க..)அதனால.. உங்க அழகான விளக்கத்தாலத்தான் ரசித்து படித்தேன். நம்ம கவிஞர்கள் இந்த மாதிரி சங்க பாடல்கள்ல இருந்து வார்த்தைகளை நைஸா சுட்டு மாத்தி போட்டு என்னமா அழகா எழுதராங்கன்னு ஒரு பத்திரிக்கையில் தொடர் வந்திட்டிருக்கு.. என்னமா டெவலப் பண்றாங்க.. அதுக்காவது பாராட்டித்தான் ஆகனும். ( இந்த மாதிரி நிறைய பாடல்களை விளக்கமா போடுங்க.. நானும் முத்து முத்தா எழுத ட்ரை பண்ணி பார்க்கிறேன்.... ஹி.. ஹி...!)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. எந்தப் பத்திரிகைல அந்தத் தொடர்? சொன்னா நானும் கவனிப்பேனே...! இந்தப் பதிவை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete

  12. //ஆனால் சங்க காலத்தில் வாழ்ந்த தலைவனுக்கும் தலைவிக்கும்...//

    சிவசெந்தில்: இந்த காலத்துல கூடத்தான் ஏகப்பட்ட சங்கங்கள் இருக்கு. அப்ப இதுவும் சங்க காலம்தான?

    பால கவுண்டமணி: அது ஏன்டா என்ன பாத்து இந்த கேள்விய கேட்ட?

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா.... கருத்தில் கூட நகைச்சுவையை அள்ளி வீச சிவாவுக்கு மட்டுமே சாத்தியம். மிக்க நன்றிப்பா!

      Delete
  13. //// காட்டியிருக்கிறார் சங்கப் புலவர்! நினைக்க நினைக்க வியப்பே மேலிடுகிறது! இன்னும் இன்னும் சங்கத் தமிழை அருந்தி மகிழ மனம் அலைபாய்கிறது. இந்தத் தமிழமுதம் உங்களுக்கும் மகிழ்வு தந்தது தானே...!////நிச்சயமாக

    ReplyDelete
    Replies
    1. ஆமோதித்து, ரசித்து மகிழ்ந்த நண்பர் ராஜ்க்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  14. தமிழமுதம் உண்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து உண்டு மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. Nice post. Enjoyed your SANGA TAMIL - But no teacher could explain me the meaning of PASALAI NOI in my schoold days which those Thalavis used to get when their Thalaivans go missing. I expect explanation for this since you being called Vadhyar by your fans.

    ReplyDelete
    Replies
    1. காதலனைப் பிரிந்து, அவனையே எண்ணி வாடுகிற காரணத்தால், தலைவியின் உடல் மெலிவதும், அலங்காரங்கள் செய்து கொள்ளாமல் சிரத்தையற்று இருப்பதுமான ஒரு நிலைக்குத்தான் ‘பசலை நோய்’ என்பார்கள். தலைவனைக் கண்டதும் இந்த நோய் பறந்து விடும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? இதை நீங்க கேட்டாலே சொல்லியிருப்பேனே... வாத்தியார்னுல்லாம் சொல்லி பயமுறுத்தணுமா நண்பா? மிக்க நன்றி!

      Delete
    2. தோழிக்கு நெற்றியில் பசலை நோய் படர்ந்தது...அப்படினு நான் படிச்சிருக்கேனே :-)

      Delete
    3. தெரியலீங்களே சுபத்ரா! நான் படிச்ச வரை, எனக்குத் தெரிஞ்சவரை பசலைங்கறதப் பத்தி சொன்னேன். நீங்க சொல்றதக் கேட்டா நான் சொன்னது தப்போன்னு எனக்கே டவுட்டாயிடுச்சு. தமிழறிஞர் யாரையாவது கேட்டுட்டு சரியா பதில் போடறேங்க. மிக்க நன்றி!

      Delete
  16. ஆஹா.. அருமையான விளக்கத்தோடு கூடிய பாடல்.

    ReplyDelete
    Replies
    1. பாடலை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  17. //கடற்கரையில் தேர்ச்சக்கரத்தில் நண்டுகள் மிதிபடாத வண்ணம் தேரை விலக்கி ஓட்டுமாறு //
    தலைவனின் பண்பு பற்றியும் சொல்லி விட்டார்!

    ReplyDelete
    Replies
    1. அட, ஆமாங்க... நான் குறிப்பிடத் தவறியதை நீங்க அழகா குறிப்பிட்டுட்டீங்க. உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  18. அருமையான இலக்கிய சுவை! அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இலக்கியத்தை ரசித்த நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  19. பதிவு அருமை வாத்தியரே... ஆனால் பாடலை படிக்கும் பொழுது பல வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்க வில்லை... வழக்கில் இல்லாத வார்த்தைகள் மூலம் சங்கத் தமிழ் அழிகிறது, இது எத்தனை பேருக்குப் புரியப் போகிறது....

    ReplyDelete
    Replies
    1. புரியாத வார்த்தைகள் அல்ல சீனு! நல்ல தமிழ் வார்த்தைகள்தான். நாம்தான் தலைமுறைகள் தாண்டிவரும் போதெல்லாம் தமிழைத் தவறவிட்டு அதைக் கொன்று வந்திருக்கிறோம். அங்காடி என்ற தமிழ் வார்த்தையை மறந்து மார்க்கெட் என்பதையே தமிழ் வார்த்தையாக மாற்றிய கேவலம் நம் காலத்தில்தான்! அண்மை மொழியான மலையாளமும், இலங்கைத் தமிழும் அங்காடியென்றே சொல்லி மகிழும்! இப்படி நாம் தொலைத்த தமிழ் வார்த்தைகள் எவ்வளவோ...! குற்றம் சங்கத் தமிழிடம் இல்லை, தமிழர்களிடம்தான் சீனு! உனக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
    2. அதே தான் வாத்தியாரே... சங்கத் தமிழை குறை கூற வில்லை... அதன் அர்த்தத்தை சுவையை என்னால் மற்றொருவர் துணை இல்லாமல் விளக்கம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியவில்லையே என்னும் ஆதங்கம் தான்....

      என் மொழிக்கே எனக்கு மற்றொருவர் உதவி தேவைப் படுகிறது... ஒரு சில வார்த்தைகளுக்கு அல்ல... ஓராயிரம் வார்த்தைகளுக்கு என்பது மிகவும் வருத்தமான கேவலமான விஷயம்

      Delete
  20. மிக நல்ல பதிவு :-)

    /அலையடித்து பொடி மணல் எங்கும் படர்ந்து கிடக்கும் கடற்கரையில் தேர்ச்சக்கரத்தில் நண்டுகள் மிதிபடாத வண்ணம் தேரை விலக்கி ஓட்டுமாறு தேரோட்டியிடம் எடுத்துச் சொல்கிறான் உன் தலைவன்/

    இந்தக் கஷ்டக் காலத்தில் அவளுக்கு ஆறுதல் சொல்லும்போது கூட இப்படி ஒரு நல்ல எண்ணமா :-) மிக்க நன்று..

    //அவன் வரும் வழியில் கானலிடத்தில் நிலவும் விரிந்து சில்லென்ற தன் ஒளியைப் பரப்பியுள்ளது பார்!//

    தலைவன் வந்து கொண்டிருப்பது மட்டுமல்ல. வெயிலில் சிரமப்படாமல் ‘சில்’லென்ற நிலவொலியில் சுகமாக வந்து கொண்டிருக்கிறான் எனச் சொல்லி தலைவன் நன்றாக இருக்கிறான் என்பதையும் குறிப்பால் சொல்கிறாரோ?


    ReplyDelete
    Replies
    1. ஆம். அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. கவிஞரின் கற்பனையை ஒட்டி நமது கற்பனையும் ஒத்திசைந்து சிறகு விரிப்பதில்தானே ஆனந்தம்! அருமையாச் சொன்னீங்க சுபத்ரா! மிக ரசித்தேன் உங்கள் கருத்தை... உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. அருமையான பாடலை
    அழகான விளக்கத்துடன் தந்துள்ளீர்.

    (“புனரி பொருத பூமணல் அடைகரை
    ஆழி மரங்கின் அலவன் ஓம்பி
    வலவன் வள்பாய்ந்து ஊர,“

    பால கணேஷ் ஐயா... இதில் உள்ள உவமையுடன்
    உள்ளுவமையையும் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாகும்.
    தவறு இருப்பின் மன்னிக்கவும்)


    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு ஆழமான தமிழறிவு எனக்குக் கிடையாது அருணா. அகராதியின் உதவி கொண்டும், அறிந்தவரைக் கேட்டும்தான் சில வார்த்தைகளைப் புரிந்து கொள்கிறேன் இப்போதும். ஏதோ ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேன். இப்டில்லாம் கேட்டு என்னை மாட்டி விட்டீங்கன்னா, நான் அழுவேன்...! மிக்க நன்றி!

      Delete
  22. அருமையான பாடலும், விளக்கமும். படமும் பிரமாதம்.

    தமிழமுதம் எங்களுக்கும் மகிழ்வையே தந்தது.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் ரசி்தத உங்களுக்கு மனநிறைவுடன் என் நன்றி!

      Delete
  23. சங்க இலக்கியப் பாடலை எத்தனை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள், கணேஷ்!
    முன்னுரை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
    வெளிநாட்டில் வாழும் எத்தனை பேருக்கு அவரவர்களின் துணைவர்/துணைவியின் நினைவு வந்ததோ!
    திரு மகேந்திரன் வெகு அருமையாக தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார்.
    மனதை தொட்டு விட்ட பதிவு!

    ReplyDelete
    Replies
    1. மகேந்திரன் மனம் திறந்தது உங்களுக்குப் பிடித்திருந்ததி்ல மகி்ழ்வு. பாடலுக்கான என் லீடை நீங்கள் ரசித்தது அதினிலும் மிக்க மகிழ்வு. இரட்டிப்பு மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறைய நன்றி!

      Delete
  24. அருமையான விளக்கம்...அருமையான ரசனை...

    ReplyDelete
    Replies
    1. ரசனையை ரசித்துக் கருத்திட்ட நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  25. ''..இந்தத் தமிழமுதம் உங்களுக்கும் மகிழ்வு தந்தது தானே...!''
    ஆம் மாற்றுச் சுவையுடன் ஆக்கம் மகிழ்வு தந்தது.
    மிக்க நன்றி. நலமா? கன நாள் கரவில்லை இப்பக்கம்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தமிழமுதை ரசித்து, என்னை வாழ்த்திய வேதாம்மாவுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  26. பதிவளவு படமும் அழகு...

    ReplyDelete
    Replies
    1. படத்தையும் நிறையப் பேர் ரசித்ததைச் சொன்னால் தமிழ் சந்தோஷப்படுவார். உங்களுக்கு என் மனம் நிறை நன்றி ஸ்ரீராம்.

      Delete
  27. அருமை...
    பாடலுக்கான விளக்கமும்...
    அழகான படமும்...

    வெளிநாட்டு வாழ்க்கையில் குடும்பத்தாருடன் பேச எத்தனை வசதிகள் இருந்தாலும் மனதுக்குள் வலி இருக்கிறது அண்ணா...

    நல்லதொரு பகிர்வு....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வலி இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் ஆறுதல் படுத்திக் கொள்ள என்றுதான் நானும் சொல்லியிருக்கிறேன். பாடலையும், பகிர்வையும் ரசித்த குமாருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  28. அழகான பாடல்.. எல்லாமே சங்ககாலம் தொட்டே நடைபெறுகிறது. என்ன விஞ்ஞானம் மட்டும் வளர்ந்து இருக்கிறது.
    பள்ளியில் படிக்கும் போது இதுபோன்ற சங்கபாடல்களுக்கு இஷ்டம் போல கதை அடிப்போம். அப்போது கருத்து ஆழம் தெரியாது...

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படித்தான் இரு‌ந்தேன் சமீரா. அப்ப டீச்சர்கள் தமிழ் புகட்டினப்ப கசக்கத்தான் செஞ்சது. பின்னாள்ல மனம் கொஞ்சம் வளர்ந்ததும் இனிச்சது. இப்போ இதைப் படிச்சு ரசிச்ச உனக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  29. தமிழின் சுவையை உணர வைப்பதில் பெரும்பங்கு சங்க காலப் பாடல்களில் தான் இருக்கிறது. அழகான, இரசனையான பாடலைத்தெரிந்தெடுத்திருக்கிறீர்கள்.ரசித்தேன்.. களித்தேன். அருமையான பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  30. மிகவும் அருமை

    ReplyDelete
  31. மிகவும் அருமை

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube