Wednesday, March 20, 2013

தெரியுமா இவரை - 5

Posted by பால கணேஷ் Wednesday, March 20, 2013

                                  லியனார்டோ டாவின்சி (Leonardo da Vinci)

எஸ்.வி.சேகரின் நாடகம் ஒன்றில் அவரின் அப்பா, ‘‘ஏண்டா இப்படிப் பொறுப்பில்லாம திரியறே? நீ ஒரு டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா வரணும்னு நான் எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா?’’ என்பார். ‘‘போப்பா... ஒரே ஆள் எப்படி டாக்டரா, வக்கீலா, இஞ்சினீயரா வர முடியும்?’’ என்பார் எஸ்.வி.சேகர். அரங்கம் சிரிப்பலையில் மூழ்கும். ஆனால் நிஜவாழ்வில் மிகச் சிறந்த ஓவியராக, சிற்பியாக, நில அளவையாளராக, தச்சராக, விஞ்ஞானியாக, பொறியியலாளராக, மருத்துவராக, அரசியல் ஆலோசகராக என்று பல நிலைகளில் வாழ்ந்த சாதனையாளர் லியனார்டோ டாவின்சி.

1452ம் வருடம் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி இத்தாலியிலுள்ள வின்சி என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையான செர்.பியரோ டா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர். தாய் கத்தரீனா ஒரு விவசாயக் குடும்பப் பெண். டாவின்சியில் இளமைக்காலம் புளோரசன்சில் கழிந்தது. டாவின்சி இடதுகைக்காராக இருந்தாலும் சிறு வயதிலேயே இரண்டு கைகளாலும் எழுதவும், வரையவும் திறமை பெற்றிருந்தார். உள்ளூர்க் குடியானவன் ஒருவன் லியனார்டோவிடம் ஒரு வட்டப் பலகையில் படம் வரைந்து தருமாறு கேட்க, பாம்புகள் தீயை உமிழ்கிற காட்சியைப் படமாக வரைந்திருக்கிறார். அவரின் தந்தை அந்தப் படத்தின் அழகை அதிசயித்து அதை நல்ல விலைக்கு கலைப்‌பொருள் கூடத்திற்கு விற்றுப் பணமாக்கி விட, வேறொன்று வரைந்து குடியானவனுக்குத் தந்திருக்கிறார் லியனார்டோ.

1466ல், டாவின்சியின் 14வது வயதில், அந்நாளில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆண்ட்ரே டி சியோன் (Andrea di Cione) என்பவரிடம் லியனார்டோ ஓவியம் பழகுவதற்காகச் சேர்ந்தார். அப்போது புகழ் பெற்றிருந்த பல கலைஞர்கள் வெரோக்கியாவின் கலைக்கூடத்தில்  தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். அதனால் லியனார்டோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்தது.  வேதியியல், உலோகவியல், உலோகவேலை, தோல் வேலை, இயந்திரப் பொறிகள் செய்தல், தச்சுவேலை போன்றவற்றோடு ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் முதலிய பல திறமைகளையும் வளர்த்து தன்னை கூர் தீட்டிக் கொள்ள ஒரு சிறந்த பயிற்சிக் களமாக அவருக்கு அது அமைந்தது.

‘கிறிஸ்துவின் ஞானஸ்நானம்’ என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், லியனார்டோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை லியனார்டோ வரைந்த விதம், குருவையும் விஞ்சியதாக இருந்ததால், அசந்துபோன வெரோக்கியோ அதன் பின்னர் வரைவதையே நிறுத்தி விட்டார் என்று சொல்லப்படுவதுண்டு. இது மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும் நன்கு ஆராயும்போது, அந்த ஓவியத்தில் லியனார்டோவின் முத்திரை அழுத்தமாக இருப்பதை உணரலாம். அதன்பின்னர் குருவை மிஞ்சிப் புகழ்பெற்ற லியனார்டோ வரைந்த பல ஓவியங்களில் 1498ல் வரைந்த ‘இயேசுவின் கடைசி விருந்து’ ஓவியமும், 1503-1506ல வரைந்த ‘மோனாலிசா’ ஓவியமும் உலகப் புகழ் பெற்றவை. ஆகாய விமானம், பாராசூட், பீரங்கி போன்ற அக்காலத்தில் இல்லாத பல விஷயங்களை ஒரு விஞ்ஞானியாக முன்கூட்டியே கற்பனை செய்து, ஓவியங்களில் வரைந்திருக்கிறார் டாவின்சி. அவரது மேதைமை அவர் வாழ்ந்த காலத்தில் உணரப்படவில்லை, கொண்டாடப்படவில்லை என்பதே வேதனையான உண்மை. (நமது மகாகவி பாரதியார் போல).

1472 ஆம் ஆண்டளவில், லியனார்டோ 20 ஆவது வயதில், மருத்துவர்கள் மற்றும் கலைஞர்கள் குழுவான ‘சென்-லூக்’ குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். 1482 இலிருந்து, 1498 வரை மிலானில் லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன்கூடிய வேலைத்தலம் ஒன்றையும் நடத்திவந்தார். அதன்பின் போரின் காரணமாக அவர் வெனிஸ் சென்றடைந்தார். பின், புளோரன்சில் செஸாரே போர்கியா என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், மிலானுக்குத் திரும்பினார்.

1515ல் பிரான்ஸ் மன்னர் பிரான்சிஸ்-Iக்கும் போப் லியோ X-க்கும் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியனார்டோ அமர்த்தப்படார். அதுதான் அரசருடன் அவரின் முதல் சந்திப்பு. 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் ஒரு வீடும் சிறப்பான ஊதியமும் வழங்கப்பட்டன.

ஒரு கல்லைக்கூட கைகளிடையில் வைத்து நசுக்கிவிடும் அளவுக்கு லியனார்டோ வியக்கத்தகு உடல் வலிமை படைத்திருந்தார். ஆனாலும் இறப்புக்கு விதிவிலக்காக எவர் இருந்துவிட இயலும்?  1519ம் ஆண்டு லியனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது... பதியைக் கொன்ற பாவை-4

46 comments:

 1. லியனார்டோ டாவின்சி (Leonardo da Vinci) அவர்கள் உண்மையில் ஆல் இன் ஆல் அழகு ராஜா தான்...

  மேய்ச்சலுக்கு செல்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. பல்கலை வித்தகர் லியனார்டோவை ரசித்து மேய்ச்சலுக்கும் வரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 2. லியனார்டோ டாவின்சி பல்துறை வல்லுனராக விளங்கினார்.அவரைப்பற்றிய தகவல்கள் நன்று. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

  ReplyDelete
  Replies
  1. தெரிந்திருந்தாலும் மீண்டும் நினைவுகூர்ந்த நண்பர் முரளிக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 3. அருமை!

  மோனாலிஸாவை Louvre இல் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நேரில் பார்க்கக் கொடுத்து வைத்த பாககியசாலியா நீங்கள்! மிக்க மகிழ்ச்சி. அருமை என்ற வார்த்தையில் உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி டீச்சர்!

   Delete
 4. சிவாஜி என்றால் ரஜினி படத்தைச் சொல்வது போல டவின்சி புத்தகம்/படத்துக்குப் பிறகு அசல் டவின்சியை பலரும் மறந்துவிட்டனர். கூகில் தேடலில் கூட அதிகம் வருவது புத்தக/சினிமா விவரங்கள். அக்கிரமம். இடையில் இது போன்ற கட்டுரைகள் மழை நீர். தென்றல். உண்மைச்சுடர். எளிமையாக எழுதியிருக்கிறீர்கள். நன்று.

  ReplyDelete
  Replies
  1. கரெகட்... சிவாஜியைப் பற்றிய புத்தகம் ஒன்றுக்காக படம் தேட கூகிளில் சிவாஜி என்று டைப் பண்ணப் போய் ரஜினிதான் தலை காட்டினார். அப்புறம் சிவாஜி கணேசன், நடிகர் திலகம் என்றெல்லாம் டைப் பண்ணிப் பிடித்தேன். மழைநீர்த் தென்றல்! என்ன அழகான வார்த்தை அப்பா ஸார்! உங்களுக்கு மன நிறைவுடன் என் நன்றி!

   Delete
 5. Replies
  1. ரமணி ஸாருக்குப் பிடித்திருக்கிறது என்பதில் கொள்ளை மகிழ்வு எனக்கு. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 6. புத்தகம் வாங்கி படிக்க கொஞ்சம் சோம்பலா இருக்கும்.. இந்த மாதிரி நீங்க எழுதி படிச்சாதான் தெரிஞ்சிக்க முடியும்.. டாவின்சி வெறும் ஓவியர்ன்னு தான் இவ்ளோ நாளா நினைச்சிட்டு இருந்தேன்!! அவர் பல கலை வல்லவர்னு தெரிஞ்சிகிட்டேன். நன்றி சார்!

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பல்கலை வித்தகரை சமீரா என்மூலம் அறிந்து கொண்டதில் எனக்கு மனம் நிறைய மகிழ்ச்சி. ந்னறிம்மா!

   Delete
 7. மேய்ச்சல் மைதானம் போக ஒரு குதிரை படம் போட்ட சுட்டி இருக்குமே அது ஏன் சார் எடுத்துடீங்க?

  ReplyDelete
  Replies
  1. சரிதா புத்தக சுட்டி வைக்கிறோமேன்னும், இப்ப பதிவிடறதில்லையேன்னும் நினைச்சு எடுத்துட்டேன். மறுபடி இயங்க ஆரம்பிச்சுட்டதால இப்பவே வெச்சுடறேன்மா.

   Delete
 8. Da Vinci though he was good at so many arts, he was well known for his paintings. Very good post. I am thinking of collecting your post on famous personalities as they are giving gist of such personalities. Very nice.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... மிக அதிகபட்ச பாராட்டை வழங்கியிருக்கீங்க மோகன்! மன நெகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 9. தூரிகை பிடித்த கைகளுக்கு கற்களையும் பொடியாக்கும் வலிமை இருந்தது அறிந்து வியப்பாக இருந்தது. தெரியுமா இவரை?- எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் தெரிந்து கொள்ளும் வகையில் வரலாற்று நாயகர்கள் உலா வரும் தொடர். மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அரிய தகவல்தான் அது! ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 10. ஒரு சிறந்த பல்கலை வித்தகரைப் பற்றி ஒரு
  நகைச் சொல் வித்தகர் மூலம் அறிந்து
  மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. நகைச்சொல் வித்தகர்! சந்தோஷமா இருக்கு தோழி கேக்க! இதைக் காப்பாத்திக்க முயல்கிறேன். மிகமிக மகிழ்வோட என் நன்றி!

   Delete
 11. அவர் தன்னையே ஒரு பெண்ணாகப் பார்த்து வரைந்த படம்தான் மோனோலிசா என்று சொல்வார்கள். கருவில் இருக்கும் குழந்தையின் படம், மனித உடலின் உள்ளுருப்புகள் என்று வெகு தத்ரூபமாக படம் வரையும் திறனும் அவரிடம் இருந்தது.
  @ துளசி டீச்சர் - டா வின்சி கோட் படித்தபின் Louvre ம்யுசியம் போக வேண்டும் என்று ஒரு பெரிய ஆசை!

  ReplyDelete
  Replies
  1. மனித உடலின் உள்ளுறுப்புகள் படங்களும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அவர் கற்பனை செய்து வரைந்த படங்களையும் சேர்த்தால் பதிவு மிக நீண்டு விடுமோன்னுதான் சேர்க்கலை ரஞ்சனிம்மா. டாவின்சி கோட் புத்தகமா படிக்கறதைவிட, படமா வந்ததை டிவிடி வாங்கிப் பாருங்க. அது எனக்கு சுவாரஸ்யமா இருந்துச்சு. உங்களைப் போலவே எனக்கும் அந்த மியூசியம் செல்லத்தான் ஆசை! ம்... பார்‌க்கலாம் கொடுத்து வெச்சிருக்கான்னு! மிக்க நன்றி!

   Delete
  2. ஆம்,டாவின்சியின் உடலுறுப்புகள் தொடர்பான படங்கள் பிரபலமானவை.அப் படங்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டிருந்தது.ஹெலிகொப்டர்,டாங்கி போன்றவற்றை ஒத்த சாதனங்களையும் டாவின்சி வரைந்திருப்பதாக படித்திருக்கிறேன்.எல்லாவற்றையும் தொகுத்து இரு பதிவுகளாக பகிர்ந்திருக்கலாமே ஐயா.எப்படியிருப்பினும் நல்லதொரு பதிவை வழங்கியமைக்கு பாராட்டுக்கள்

   Delete
  3. ரஞ்சனி அம்மா,மோனாலிசா ஓவியம் எலிசா ஜியோகொண்டா என்ற சீமாட்டி உடையது.நான் அறிந்த வரையில் பிக்காசோ தான் தன்னைத் தானே படமாக வரைந்தவர்

   Delete
  4. எல்லாரும் ரசிக்கிறதைப் பாக்கறப்ப... நீங்க சொன்ன மாதிரி விரிவா படங்களோட ரெண்டு பதிவா எழுதியிருக்கலாமோன்னு எனக்கும் தோணுது டினேஷ்! போகட்டும்... இனி வருபவர்களைப் பற்றி எதையும் சுருக்காமல் விரிவாகவே தர முயற்சிக்கிறேன். உங்களின் வருகைக்கும் மதிப்புமிகு கருத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி!

   Delete
 12. அருமையான நபரைப்பற்றிப் பகிர்ந்துகொண்டீர்கள். இத்தகைய பகிர்வுகள் மனதுக்கு உற்சாகம் தருகிறது. லியனாடோ டாவின்சியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், அவரை ஓவியராகமட்டுமே அறிந்திருந்தேன். இந்தப் பதிவு எனக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி
  ஒரே ஒரு சந்தேகம்... தனது இறுதி ஊர்வலத்தில் ஏன் பிச்சைக்காரர்கள் செல்ல வேண்டும் என விரும்பினார் என்று நீங்கள் சொல்லவில்லையே...

  ReplyDelete
  Replies
  1. காரணத்தை டாவின்சியிடம் தானம்மா கேட்க வேண்டும். ’இறந்தபின் நாம் எடுத்துச் செல்வது எதுவுமில்லை.’ என்பதை உலகுக்கு உணர்த்த இப்படி விரும்பியிருப்பாரோ... என்னவோ? டாவின்சியைப் பற்றிய தகவல்களை ரசித்துப் படித்த பூங்கோதைக்கு எ் மனம் நிறைய நன்றி!

   Delete
 13. நான் உங்களோடு சில விடயங்கள் பேசவேண்டும்.. உங்கள் தொடர்பை இரண்டு நாளாக தேடித் திரிகிறேன்.. poongothaichelvan8@gmail.com என்ற முகவரிக்கு தயவு செய்து தொடர்பு கொள்வீர்களா?

  ReplyDelete
 14. பல்கலை வித்தகர்.... ஓவியம் மட்டுமே வரைவார் என நினைத்த எனக்கு புதிய செய்தி.....

  தொடரட்டும் தெரியுமா இவரை பதிவுகள்.

  ReplyDelete
  Replies
  1. இந்த தொடர் கட்டுரைகளை ரசித்து வாசித்து நீங்கள் அளிக்கும் ஊக்கம் என்னை இன்னும் தெம்புடன் செயல்பட வைககிறது வெங்கட்! உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 15. நல்ல பதிவு.டாவின்சி பற்றி எழுதியவர்கள் மிகக் குறைவே.உலகில் அதிக பெறுமதியுள்ள ஓவியமான மோனாலிசாவின் உதடுகளை வரைய டாவின்சி எவ்வளவு காலம் எடுத்தார் என்பதில் பெரும் சர்ச்சை நிலவுகின்றது.3 ஆண்டுகள் என விக்கி ஆன்சர்ஸ் குறிப்பிடுகின்றது.10 ஆண்டுகள் எடுத்ததாக முகப் புத்தகத்தில் 10 லட்சம் வாசகர்களுக்கு மேல் கொண்டுள்ள unbelievable facts குறிப்பிட்டிருந்தது.இதையும் பாருங்கள்
  www.redbubble.com/people/letthemeatart/writing/1350275-did-you-know-leonardo-da-vinci-spent-12-years-painting-the-mona-lisas-lips.

  ReplyDelete
  Replies
  1. டாவின்சி பற்றிய பல தகவல்கள் வேறு வேறு தளங்களில் பார்க்கும் போது சற்று முரண்பட்டே காணப்படுகின்றன டினேஷ். நான் ஆராய்ந்தவரை சரியானவை என்று பட்டவற்றையே இங்கு எழுதியுள்ளேன். மோனாலிசா என்ற அற்புத ஓவியம் வரைய எத்தனை காலம் எடுத்தால்தான் என்ன..? இன்றும் ரசனைக்கு விருந்தல்லவா! உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 16. Replies
  1. சுருக்கமான வரிகளில் நிறைய மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 17. லியனார்டோ டாவின்சி பற்றி நல்ல பகிர்வு .

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மாதேவி! உங்களுக்கு இது ரசிக்கும்படி அமைஞ்சது ரொம்ப மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றி!

   Delete
 18. டாவின்சி போன்ற வரலாற்று நாயகர்களைப் பற்றி தெரிந்து கொள்ளத்தந்தமைக்கு நன்றிகள் அண்ணா....

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த உங்களு்க்கு என் மனம் நிறைய நன்றி நண்பரே!

   Delete
 19. மிக மிக அழகான தெளிவான அருமையான பதிவு... பல அறிய புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன்... படிபதற்கு சுவாரசியமாய் இருந்தது

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... இது சுவாரஸ்யமாய் இருந்தது என்று கூறி மகிழ்வு தந்த சீனுவுக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 20. கட்டுரை மிக நன்று. அங்கங்கு துண்ட துண்டாக வாசிப்பதை இங்கு சேர்த்து வாசித்தது மகிழ்வு. மிக்க நன்றி.
  ஆம் சுருக்காமல் எத்தனை பதிவானாலும் பிரித்துப் பிரித்துப் போடுவது சிறப்பு. பின்னர் புத்தகம் செய்யும் போது சிறப்பாக வரும்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 21. மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர் டாவின்சி என்னும் அளவுக்குத்தான் அவரைப்பற்றி தெரிந்திருந்தது. மேலும் அவரைப்பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொள்ள உத்விய பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 22. டாவின்சி கோட் படித்த பிறகு , டான் பிரவுன் வடிவமைத்த பிம்பம் தான் மனதில் நின்றது. இந்தப் பதிவு மன நிறைவைத் தந்தது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. அவரைப் பற்றி அறியாத பல செய்திகளைப் பற்றி அறிந்து கொண்டேன், மிக்க நன்றி அண்ணா...

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube