Friday, April 13, 2012

நடை வண்டிகள் - 12

Posted by பால கணேஷ் Friday, April 13, 2012

பி.கே.பி.யும் நானும் - 4

பி.கே.பி. ஸாருடன் இணைந்து ஊஞ்சல் இதழுக்கு வடிவமைப்பாளராக நான் பணி செய்து கொண்டிருந்த காலங்களில் நான் ‘கல்யாணமாலை’ இதழி்ன் வடிவமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ‘கல்யாணமாலை’ நான் சேரும் போது மாதம் ஒரு இதழ் வந்து கொண்டிருந்தது, சில காலத்திலேயே நல்ல வளர்ச்சி பெற்று மாதமிரு முறை இதழாகி, பின் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. ‘ஊஞ்சல்’ ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் வரும் இதழாக முதலி்ல துவங்கப்பட்டதாலும், பி.கே.பி. ஸார் வேலைகளைப் பட்டியலிட்டுக் கொடுத்ததாலும் அந்தப் பணியையும் நல்ல முறையில் செய்ய முடிந்தது.

ஊஞ்சல் இதழில் ஒரு சமயம் நான் சின்னஞ்சிறு கதை ஒன்றை எழுதினேன். இங்கே ‘க்ளிக்’கினால் படிக்கலாம். கதையின் ஆரம்ப வரியையே இறுதி வரியாக நான் அமைத்திருந்த உத்தியை பி.கே.பி. ஸார் ரசித்துப் பாராட்டினார். ஊஞ்சல் இதழில் நான் நிறைய எழுதுவதற்கு பின்னாட்களில் களம் அமைத்துக் கொடுத்தார். அதுபற்றி விரிவாகச் சொல்வதற்கு முன்...

கல்யாணமாலை இ‌தழின் பணியைப் பற்றி சிறிது சொல்லியாக வேண்டும். 80 சதவீதம் வரன்களின் அறிமுகமும், 20 சதவீதம் கட்டுரைகளும் அடங்கிய இதழாக (இப்போதும்) வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான வரன்கள் போட்டோவுடன் இருக்கும். ஒரே பெயரில், ஒரே இன்ஷியலில் பலர் பதிவு செய்திருக்கும் வாய்ப்புண்டு. சரியான நபர் போட்டோவை வைத்து அதற்கெதிரில் அவரைப் பற்றிய சரியான விவரங்கள் இருக்க வேண்டும். போட்டோவோ, தகவலோ இடம் மாறிவிட்டால் பெரிய பிரச்சனையாகி விடும்.

சமயங்களில் புத்தகம் தயாராகி அச்சுக்கு அனுப்புவதற்கு முன் யாராவது போன் செய்து, ‘‘கல்யாணம் நிச்சயமாகி விட்டது. எங்கள் விளம்பரத்தை எடுத்து விடுங்கள்’’ என்றால், அதை நீககிவிட்டுத்தான் அச்சுக்கு அனுப்ப வேண்டும். இப்படியான சந்தர்ப்பங்களில் கூடுதல் கவனமுடன் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

அந்த ரிஸ்க்கான பணியை மிகச் சரியாகத்தான் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றி வந்தேன். ‘கல்யாணமாலை’யின் அதிபர் மோகன் அவர்களும், இதழின் ஆசிரியர் திருமதி. மீரா நாகராஜனும் என்மீது மிகுந்த அன்பு செலுத்தி வந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் என் சொந்த வாழ்வில் புயல் ஒன்று வீசியது. என் நண்பர்களில் ஒருவன் எனக்குத் துரோகம் செய்துவிட, நான் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நாம் நிரபராதி என்றாலும் இறைவனின் விளையாட்டில் சிலசமயம் பகடைக்காய்கள் ஆகி விடுகிறோம். அப்படியான ஒரு கடின காலகட்டத்தைச் சந்தித்தேன் நான். (நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகமிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத் தந்தான் அந்த நல்லவன்)

கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலுவல கத்துக்குமாக அலைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் நான் முன்பு சொன்னது போல மிக கவனத்துடன் செய்ய வேண்டிய ‘கல்யாணமாலை’ பணியைச் செய்வது சாத்தியப்படாது, என் கவனம் சிதறுகிறது என்பது என் மனதுக்கு நன்கு தெரிந்ததால் திரு.மோகனை அணுகி வேலையை ராஜினாமா செய்வதாகச் சொன்னேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ‘‘பேசாம வேலையப் பாருங்க...’’ என்று உரிமையாய் அதட்டி, என் ராஜினாமாக் கடிதத்தை ஏற்க மறுத்து விட்டார். அவரின் அன்புக்குக் கட்டுப்பட்டு வேலையைத் தொடர்ந்தேன்.

ஆனால், அந்த நிகழ்வு ஏற்பட்ட இரண்டு மாதங்கள் கழித்து வந்த ‘கல்யாணமாலை’ இதழ் ஒன்றில் ஒரு வரனைத் தூக்கி விட்டு வேறு ஒருவரை வைக்க வேண்டிய இடத்தில் நான் தவறு செய்தேன். விளைவாக... அந்தப் பக்கம் முழுவதுமே வரன்களும், போட்டோவும் மாறி விட்டன.

அச்சமயம் மோகன் ஸார் ‘கல்யாணமாலை’ படப்பிடிப்புக்காக டெல்லியில் இருந்தார். நிகழ்ந்த தவறு அவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தவறு நிகழ்ந்த அந்தப் பக்கத்தைக் கிழித்துவிட்டு பிரதிகளை விற்பனைக்கு அனுப்பும்படி சொல்லி விட்டு, இரண்டு நாட்கள் கழித்து சென்னை வந்தார். வந்தவுடன் என்னை அழைத்து, நிகழ்ந்த தவறுக்கு மிகவும் ‘பாராட்டி’ விட்டு, வேலையை விட்டுச் சென்று விடும்படி பணித்தார். நான் கோரியபோதே அதைச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அல்லவா...! அதைச் செய்யாமல் இப்படி ஒன்று நிகழ்ந்தபின் தான் எனக்கு ‘சைக்கோ’ என்ற பட்டத்தையும் அளித்து நான் கேட்டதைச் செய்தார் அந்த விந்தை மனிதர்!

எனக்குப் பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து இரண்டு மாதங்கள் கழித்து ‘கல்யாணமாலை’ இதழிலிருந்து வெளிவந்தேன். அதனபின் வந்த மாதத்தில் எங்கும் வேலைக்குச் செல்லாமல் பொழுது போனது. இந்த மூன்று மாதங்களில் இறைவனருளால் கோர்ட் சிககல்களிலிருந்து விடுபட்டிருந்தேன். மிகமிக நிம்மதியாக உணர்ந்தேன்.

இப்போது மீண்டும் ஏதாவது பணிக்குச் செல்லலாம் என்று நினைத்த சமயத்தில் முதலில் நினைவுக்கு வந்தது நண்பர் பி.கே.பி. ஸார் தான். என் வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் அறிந்தவர் அவர். பொதுவாக நாமெல்லாம் நான்கைந்து முகமூடிகள் அணிந்துதான் மற்றவர்களுடன் பழகுவோம். ஒரு முகமூடி கழற்றிய முகம் நண்பர்களுக்கு, இரண்டு முகமூடி கழற்றிய முகம் மனைவிக்கு, ஒரு மூகமூடியுடன் இருக்கும் முகம் பெற்றோருக்கு, முகமூடிகளற்ற முகம் நமக்கு மட்டுமே என்பதுதான் வாழ்வில் பெரும்பாலானோரின் நிலை. எந்த முகமூடியுமின்றி நான் பழகும் ஒருவர் பி.கே.பி. அவரும என்னிடம் அப்படியே.

 ‘கல்யாணமாலை’யை விட்டு வெளியே வருவதற்கு முந்தைய காலகட்டத்தில் அவரைச் சந்தித்த போது அவர் சொல்லியிருந்த ஒரு ‘விஷயம்’ நினைவுக்கு வர, உடனே அவரின் வீட்டைத் தேடி ஓடினேன். அவரிடம் ‘அதை’ப் பற்றிப் பேசி, இப்போது நான் ‘அதை’ச் செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் பெருந்தன்மையுடன், மகிழ்வுடன் சம்மதித்தார். அந்த ‘அது’ என்ன என்று கேட்கிறீர்கள்தானே... சொல்லிடலாம்னா ‘தொடரும்’ போடற இடம் வந்துடுச்சே... எனவே....

-தொடர்கிறேன்!

அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

64 comments:

  1. முகமூடிகள் பற்றிய பாரா அருமை. உங்கள் மன முதிர்ச்சியைக் காட்டும் வரிகள். உங்கள் வாழ்வின் சம்பவங்கள் எந்த அளவுக்கு அந்த வார்த்தைகளை அமைக்க உதவியிருக்கும் என்றும் தெரிகிறது. நண்பர்கள் வாழ்க! ஒவ்வொருவரும், நமக்கு நட்பைச் சிலரும், அனுபவங்களைச் சிலரும் தந்தே செல்கிறார்கள்!

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்களால் ஆனதே வாழ்க்கை. வலிக்க வலிக்க எனக்கு நிறையப் பாடங்களைச் சொல்லித் தந்தது அது. எல்லாம் நன்மைக்கே என்றே எடுத்துக் கொள்கிறேன். உங்களுக்கும் என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  2. வர வர இந்த 'இன்ட்லி'யில ஓட்டுப் போடறது ஒரு பெரிய கலையாகி விட்டது! வோட்டுப் போட்டாலும் நம்பர் மாறுவதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அது மட்டுமா ஸ்ரீராம்? சில சமயம் பதிவை இணைச்சுட்டு வரும் போது 3 லைக்ஸ்ன்னு காட்டுது. ‌ஒரே குழப்பம்தான். எனக்கு வோட்டைவிட நீங்கல்லாம் சொல்ற கருத்துக்கள்தான் மிக முக்கியம்.

      Delete
  3. அட! ரொம்ப சீக்கிரம் வந்துட்டேனே! :)
    சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லாம சரியா தொடரும்னு போட்டுடீங்க. :)
    வாழ்க்கையே அனுபவத்தால ஆனதா ஆயிடுத்து. நல்லது கெட்டது ரெண்டுலேயுமே கத்துக்க வேண்டியதுதான் நிறைய இருக்கு. எல்லாத்தையும் சொல்லி கொடுக்கதான் காலமும் இருக்கே!

    ஊஞ்சல் இதழ்ல வந்த உங்க கதையையும் படிச்சேன். முடிவு நல்ல 'திக்'! அதை விட அந்த அட்ரஸ் இன்னும் 'திக்'. சைதாப்பேட்டை, சுப்பிரமணியன் தெரு No.65 -ல தான் நாங்க இருந்தோம். :)

    அம்மா, மேடம் இப்படி அடை மொழி இல்லாம என் பேரை எழுத மாட்டீங்களா கு.கு. ! :)
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அடடா... கதை எழுதும்போது நமக்குத் தெரிஞ்ச இடங்களை வைச்சு எழுதினா நல்லதுன்னு ஜாம்பவான் சுஜாதா சொல்லித் தந்திருந்தார். அதனால அந்த தெருப்பேரை வெச்சுக்கிட்டேன்- நானும் பல ஆண்டுகள் சைதாப்பேட்டை வாசியா இருந்ததால. இப்படி ஒரு ஒற்றுமையை நான் எதிர்பார்க்கலைங்க. கரெக்ட்... காலம் பல அனுபவங்களைத் தந்து நம்மைப் புடம்போடத்தான் செய்கிறது. அப்புறம்... நீங்க என் ஃப்ரெண்ட்! அதனால அம்மா, மேடம்னுல்லாம் அடைமொழியை இனிமே பயன்படுத்தலை. சரியா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    வாழ்வின் ஓட்டப்பாதையில் ஒருசில நண்பர்கள்
    அப்படி வந்துவிடுவதுண்டு..
    தங்களின் 'கல்யாணமாலை' அனுபவம் நிச்சயம் ஒரு
    பாடத்தி கற்றுக் கொடுத்திருக்கும். அதிலிருந்து மீண்டு
    அடுத்து என்ன செய்தீர்கள் என்று அரிய ஆவலுடன்......

    ஒவ்வொரு சூழ்நிலையிலும் பீனிக்ஸ் பறவை போல
    உயிர்த்தெழுந்து இருக்கிறீர்கள். .

    அனுபவம் இங்கே நீலாம்பரி பாடுகிறது நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. பல முறை பரமபதத்தில் பாம்பின் வாயில் அகப்பட்டு கீழே வந்து விடுவது போல, சறுக்கி விழுந்து கீழ்நிலைக்கு வந்து காயம் பட்டிருக்கிறேன். ஒவ்வொரு பாடமும் என்னை மேம்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அனுபவ நீலாம்பரியை ரசித்ததற்கு நன்றி மகேன்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  5. கே.பி சார்க்கு வலைப் பூ இருக்கா அண்ணா?, நீங்கள் அவரை பற்றி சொல்லும் போது அவர்கள் எழுத்தக்களை படிக்க ஆவல் வருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. இல்லை எஸ்தர். அவர் வலைப்பூ எதுவும் இதுவரை வைத்துக் கொள்ளவில்லை. அதனால் வலையில் படிக்க வாய்ப்பில்லை. என்ன செய்ய...! ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதய நன்றி + இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உனக்கும் உன் குடும்பத்தினருக்கும்!

      Delete
  6. நந்தன ஆண்டு நல்வாழ்த்துக்கள் கணேஷ்!
    உங்களுக்கு கூட ஒருவன் துரோகம் செய்வானா என்ன?
    ம்ம்ம்.காலம் கலிகாலம்!!
    முகமூடி விளக்கம் அருமை..
    மோகன் உங்களை விலக்கியதோடு நின்றிருக்கலாம்.
    மொத்தத்தில் சத்யம் ஜொலிக்கிறது இந்த பதிவில்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைகளை மறைத்து என்ன ஆகப் போகிறது நண்பரே... நம் அனுபவம் மற்றவருக்காவது பாடமாக அமையுமல்லவா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்வான இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  7. //முகமூடிகளற்ற முகம் நமக்கு மட்டுமே என்பதுதான் வாழ்வில் பெரும்பாலானோரின் நிலை.// உண்மையான வார்த்தைகள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. ரசித்து்க் கருத்திட்டமைக்கு என் இதய நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய நந்தன தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா!

      Delete
  8. தொடர்ந்து படித்து வருகின்றேன். நன்றாக உள்ளது. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு நன்றி + என் உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கணேஷ்.
    வாழ்க்கை தரும் பாடங்கள் அனுபவித்துதான் தேற வேண்டும். இனி எல்லாம் சுகமே.

    ReplyDelete
    Replies
    1. ஆம். பாடங்கள் ஒவவொன்றும் என்னை மேம்படு்த்தியே வந்துள்ளன. உங்களுக்கு என் இதய நன்றி + உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      Delete
  10. நடை வண்டி எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணிக்கிறது
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நடை வண்டி எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணிக்கிறது
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டியைப் பாராட்டிய தங்களுக்கு என் நன்றி மற்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      Delete
  12. தங்கள் வாழ்வில் கொண்ட கண்ட மேடு பள்ளங்கள்!அரியன!அதையும் சுவைப்படச் சொல்வது உங்களுக்குக் கைவந்த கலை!முன்னரே வந்தேன் வாக்கிட்டேன் மறுமொழியும் எழுதி வெளியிட்டேன் ஆனால் போகவில்லை ! சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. எனக்காக மீண்டும் வந்து கருத்திட்டு வாழ்த்தியதற்கு நன்றி ஐயா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  13. //அவர் சொல்லியிருந்த ஒரு ‘விஷயம்’ நினைவுக்கு வர, உடனே அவரின் வீட்டைத் தேடி ஓடினேன்.//
    அது என்ன என்று அறிய அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் தொடர்கிறேன். நன்றி நண்பரே. தங்களுக்கு என் உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  14. பொதுவாக நாமெல்லாம் நான்கைந்து முகமூடிகள் அணிந்துதான் மற்றவர்களுடன் பழகுவோம். ஒரு முகமூடி கழற்றிய முகம் நண்பர்களுக்கு, இரண்டு முகமூடி கழற்றிய முகம் மனைவிக்கு, ஒரு மூகமூடியுடன் இருக்கும் முகம் பெற்றோருக்கு, முகமூடிகளற்ற முகம் நமக்கு மட்டுமே என்பதுதான் வாழ்வில் பெரும்பாலானோரின் நிலை. எந்த முகமூடியுமின்றி நான் பழகும் ஒருவர் பி.கே.பி. அவரும என்னிடம் அப்படியே.
    வாழ்வின் பல கோணங்களை விளக்கும் நடை வண்டி பிரமாதம் பிரமாதம் ....அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தைப் பாராட்டி உற்சாகமளிக்கும் தென்றலுக்கு என் இதயம் நிறை நன்றி மற்றும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  15. வணக்கம்!

    // நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகமிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத் தந்தான் அந்த நல்லவன் //

    எல்லோருக்கும் நண்பர்களால் ஏற்படும் சோதனை உங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை!

    எனது உளங் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை இளங்கோ. கசப்பையை நினையாமல் தாண்டி வந்தால்தான் வாழ்வில் அமைதி கிட்டும். நன்றி + உங்களுக்கும் என் இதயம்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  16. Nadai Vandi Nanraga Oodi Kondu irukkirathu Aduthatu Enna Enra Avalai Thoondukirathu. Ungallukkum Ungal Kudumbathirkum Iniya Puthandu Valthukkal. Please remember one proverb Ganeshji "EXPERIENCE IS THE GREATEST TEACHER IN THE WORLD"

    ReplyDelete
    Replies
    1. சரியான வார்த்தை சொல்லியிருக்கீங்க மோகன்! அதைவிடச் சிறந்த ஆசான் வேறெதுவும் இல்லைதான்! தங்களுக்கு என் இதய நன்றி + தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  17. இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் ஃப்ரெண்ட் !

    உங்கள் அனுபவம் மிக்க எழுத்து உங்களோடு எம்மை இழுத்து வைக்கிறது.எத்தனை அனுபவம்.முகமூடிபற்றிச் சொன்னது உச்சம் !

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நந்தன வருட நல்வாழ்த்துக்கள். பிறக்கும் இந்தப் புதுவருடம் உங்களுக்கு மகிழ்வை மட்டுமே தரட்டும் என வாழ்த்துகிறேன் ஃப்ரெண்ட்! என் எழுத்தைப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  18. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகமிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத் தந்தான் அந்த நல்லவன்)
    >>>
    விடுங்கண்ணா. தேள் கொட்டுவது இயல்பு. ஒவ்வொருவரையும் மனசுக்குள் புகுந்து பார்த்து நட்பு கொள்ள முடியாது. நாம் நம் வரை ஒழுக்கமாய் இருந்தாலே போதும்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரி தங்கையே. தேள் என்று அறியாமல் கையை நீட்டியது என் பிழையன்றோ... எது நடக்க வேண்டுமோ அது நடந்தது என்று எடுத்துக் கொண்டு இப்போது ஒழுங்காக, சரியாகச் சென்று கொண்டிருக்கிறேன்.

      Delete
  19. இனிய நந்தன வருட வாழ்த்துகள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த மனமகிழ்வோடு உனக்கும் உன் குடும்பத்தில் அனைவருக்கும் என் உளம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  20. உங்களுக்கு இவ்வள்வு அனுபவம் கிடைத்ததுதானே எழுத்துலகில் இவ்வளவு சுவாரசியமாக எழுத தூண்டி இருக்கு. எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்கவேண்டியதுதான், இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்! எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டால்தான் வாழ்வில் சோர்வின்றி மேற்செல்ல முடியும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம்நிறை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  21. முகமூடி அணிந்து வரக்கூடிய உலகம் இது. அதனால் யார் முகமூடி அணிந்து இருக்கிறார்கள் அணீயவில்லை என்பதை அறிவது கடினம். முடிந்த வரையில் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில சம்யங்களில் ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏமாறக்கூடிய வாய்ய்ப்பு இருக்கிறது. அனுபவம்தாம் உண்மையான படிப்பினையை கொடுக்கிறது.

    கணேஷ் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. படிப்பினையை நிறையவே பெற்றவன் நான். தங்களுககும் என் உளம்கனிந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  22. மனங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கணேஷ்.

    நட்பின் துரோகம் என்றுமே மனம் விட்டு அகலாது. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க எமக்கும் ஒரு எச்சரிக்கை. முகமூடி பற்றிய உங்கள் கண்ணோட்டம் நூறு சதம் உண்மை. மிகவும் ரசித்துப் படித்தேன். அடுத்தப் பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். மற்றவர்களின் மோசமான அனுபவங்கள் நமக்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். தான் பட்ட கஷ்டத்தை பிறர் படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள்தானே... அடுத்த பகுதிக்காய் ஆவலுடன் காத்திருக்கும் என் தோழிக்கு உளம் நிறை நன்றி மற்றும் இனிய நந்தன தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  23. ரசிக்கும்படியாய் இருக்கிறது தொடர். வேலையில்லாமல் இருப்பது கடினமான சூழ்நிலை. இந்த வேளையில் துரோகமும் நிகழ்ந்து விட்டால் கஷ்டம்தான். பி.கே.பி.யுடனான உங்களது நட்பு அதிசயிக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. துரோகத்தின் ‌வலியை விட, வேலையற்றிருப்பது வேதனை அல்ல துரை. நட்பை அதிசயிக்கும் உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றி மற்றும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  24. அருமையான அனுபவக் கட்டுரை..மிக நன்றாக எழுதியுள்ளீர்கள் ஐயா..வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி + தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  25. கதை வாசித்தேன் தொடருங்கள். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. கதையல்ல சிஸ்டர்! உண்மை அனுபவங்கள் இவை. படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி மற்றும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  26. ஒரு கதை போல படித்தாலும் உங்கள் வாழ்வின் போராட்டங்களை நீங்கள் அனுபவித்து மீண்ட சாதனைக்கு சல்யூட்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்,

      Delete
  27. சுவாரஸ்யமான தகவல்கள்.தொடருங்கள்.உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த தங்கைக்கு நன்றியும், என் உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்.

      Delete
  28. நண்பர்களின் மரணத்தை விடவும் நட்பின் மரணம் அத்தனை சுலபமாக சீரணிக்க இயலாது. அதன் வலி ஆழமாக புரையோடி இருக்கும். ஆனால் அந்த அனுபவம் கொடுத்த பாடம் அதையும் விட வலிமையானது. முற்றிலும் அந்த வலியிலிருந்து மீண்டெழுந்து அந்த கசப்பை புறந்தள்ளி விடுங்கள்!

    இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!

    ReplyDelete
    Replies
    1. ஆம். ஒருவாறாக இப்போது அந்தக் கசப்பைப் புறம் தள்ளி மீண்டு விட்டிருக்கிறேன். தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      Delete
  29. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மாதேவி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      Delete
  30. அருமையான பதிவு

    Post is available now in
    http://tamil.dailylib.com

    To get vote button
    http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/


    நன்றி
    தமிழ் போஸ்ட்

    ReplyDelete
  31. நண்பனின் தேர்வில் நல்ல கவணம் இல்லாவிட்டால் நீதிமன்றம் வரை அலையும் துயரம் வரும் என்றதைச் சொல்லும் நடைவண்டியில் நானும் தொடர்கின்றேன்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன்! நடைவண்டிப் பயணத்தில் நீங்களும் தொடரும் சந்தோஷத்துடன் என் இதயம்நிறை நன்றி உங்களுக்கு!

      Delete
  32. அண்ணா கைபேசியில் ஐபோனில் இருந்து உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்ட்ம் போட முடியாமல் இருக்கு தயவு செய்து மாற்றம் செய்யுங்கள் அன்பு வேண்டு்கோள்! கணனியில் இருப்பது குறைவு !

    ReplyDelete
    Replies
    1. அதற்கு என்ன செய்யணும்னு தெரியலை நேசன்! நண்பர்கள்ட்ட விசாரிச்சு அடுத்த பதிவுக்குள்ள சரி பண்ணிடறேன். ஓ.கே!

      Delete
  33. (நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகமிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத் தந்தான் அந்த நல்லவன்) உண்மை தான்

    // சொல்லிடலாம்னா ‘தொடரும்’ போடற இடம் வந்துடுச்சே... எனவே....//

    அடுத்த கட்டத்திற்கான விதையை அழகாகத் தூவுகிரீர்கள்

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube