Thursday, February 23, 2012

டி.வி.யில் சரிதா!

Posted by பால கணேஷ் Thursday, February 23, 2012
ன்று அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும்‌போதே ஆச்சரியம் காத்திருந்தது. அலங்கார பூஷணியாக (பூசணி இல்லங்க...) சிரித்த முகத்துடன் வரவேற்றாள் சரிதா. ‘‘என்னங்க... முகம் கழுவிட்டு வாங்க. பக்கோடாவும், கேரட் அல்வாவும் பண்ணிருக்கேன். தர்றேன்...’’ என்றாள்.

‘‘என்ன விசேஷம்? ஊர்ல மாடு கன்னு போட்டுட்டதா உங்கம்மாட்டருந்து லெட்டர் எதுவும் வந்ததா? இல்ல... உங்கண்ணன் மகன் அதிசயமா ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டானா?’’

‘‘எங்க பக்கத்து மனுஷங்களை வம்புக்கிழுக்கலைன்னா தூக்கமே வராதே உங்களுக்கு. அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. நான், லோசனி, கல்பனா, பார்வதி எல்லாரும் கயா டிவியில லூஸ்ஷாட் ப்ரோக்ராம்ல வரப் போறோம். நடிகை ‘கப்பு’வை நேர்ல பாக்கப் போறோம்ல... அதுக்காகத்தான்...’’

‘ஙே’ என்று விழித்தேன். ‘‘அடியேய்... ப்ரோக்ராம்ல வரணும்னு நீ முடிவு பண்ணிட்டாப் பத்தாது. அவங்க ஒத்துக்கணுமே...’’ என்றேன்.

‘‘தெரியும் எல்லாம். நாங்க நாலு பேரும் செலக்ட் ஆயிட்டதாவும், வர்ற வாரம் ரெகார்டிங்குக்கு வரணும்னும் இன்னிக்குத்தான் ஈ மெயில் வந்தது. ‘கப்பு’வை நேர்ல பாத்துப் பேசப் போறேனே...’’ என்றாள் பூரிப்பாக. ‘‘கப்புன்னா ‌எனக்கு ரொம்பப் பிடிக்கும்...’’

‘‘ரெண்டு மூணு நாளா நீ சரியாவே சோப் போட்டுக் குளிக்காததுலயே தெரியுது! பக்கத்துல வந்தாலே ‘கப்பு’தான்’’ என்றேன்.

என் தலையில் குட்டினாள் (நல்லவேளை... மெல்லமாகத்தான், செல்லமாகத் தான்!). ‘‘சும்மா கேலி பண்ணாதீங்க. இந்த புரோகிராமுக்கு லோசனிதான் அப்ளிகேஷன் எழுதிப் போட்டா....’’

‘‘யாரு, அந்த ‘விபரீத லோசனி’யா?’’

‘‘இப்படிப் பட்டப்பேரு வெச்சுக் கூப்பிடறதை விடுங்கன்னு எத்தனை தரம் ‌சொல்லிட்டேன். உங்களைல்லாம் உங்க ஃப்ரெண்ட் ஹேமாவை விட்டு நறுக்குன்னு குட்ட விட்டாத்தான் சரியா வரும்...’’ என்றாள் கோபமாக.

‘‘பின்ன என்னன்னு லோசனியைக் கூப்பிடறதாம்? நமக்குக் கல்யாணம் ஆன புதுசுல அவ வீட்டுக்கு நீ கூப்ட்டப்ப வந்து நான் பட்டபாடு மறக்க முடியுமா, என்ன...? அவ பாட்டுக்கு டி.வி. ‌ஷோவுக்கு ஸ்னேக்காவைக் கூட்டிட்டு வந்துடப் போறா... அப்புறம் புரோக்ராமை விட்டு ‘கப்பு’ ஓடிப் போய்டுவா...’’

‘‘அவ ஒண்ணும் அப்படில்லாம் பண்ண மாட்டா... நீங்களா எதுவும் கிளப்பி விடாதீங்க... அவ அதுக்கப்புறம் எத்தனை தடவை உங்ககிட்ட ஸாரி கேட்டா? நீங்கதான் மறுபடி அவ வீட்டுக்கு வரமாட்டேன்னுட்டிங்க...’’

‘இடைச் செருகலாய் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்:

லோசனி வீட்டுக்கு நாங்கள் விருந்துக்குப் போனபோது, அவள் கணவர் ராஜேந்திரனும் அவளும் அன்பாக வரவேற்றார்கள். என்னவள், அவள் தோழியுடன் சமையல் கட்டுக்குப் போய்விட, நான் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி, எதிரில் சோபாவில் அமர்ந்திருந்த ராஜேந்திரனோடு பேசிக் கொண்டிருந்தேன். திடீரென்று என் கண்கள் நிலைகுத்தி நின்றன. அது...?

‘‘பாம்... பாம்...’’ என்று பெரிய எழுத்தில் நான் அலறிய அலறலில் பக்கத்து ஃப்ளாட்காரர்கள் இரண்டு மூன்று பேர் ஓடி வந்தார்கள்.

‘‘எங்க சார் இருக்கு பாம்? யார் பாம் வெச்சது?’’

பேச வராமல் நடுங்கியபடி கை காட்டினேன்- ராஜேந்திரனின் தோளுக்கு அருகில் படமெடுத்து நின்றிருந்த பாம்பை. ‘‘இதுக்குத்தானா சார் இப்படிக் கத்தினீங்க? தெரிஞ்சிருந்தா நாங்க வந்திருக்க மாட்டோம்ல...’’ என்றுவிட்டு அவர்கள் போய் விட்டனர்.

‘‘என்ன வேணும் ஸ்னேக்கா?’’ என்று அதைக் கையிலெடுத்தா ராஜேந்திரன். ‘‘பயப்படாதீங்க. இது லோசனி வளர்க்கற செல்லம். நம்மளை ஒண்ணும் பண்ணாது. ஸ்னேக்கா... ஸாருக்கு ஹலோ சொல்லு...’’ என்று அதை என் பக்கமாக நீட்ட, அலறியடித்து, உளறிக் கொட்டி, கிளறிமூடி வெளியே ஓடிவந்து விட்டேன்... அஃப்கோர்ஸ் சரிதாவையும் இழுத்துக் கொண்டு.

ப்ளாஷ்பேக் ஓவர்!

‘‘நல்லவேளை... அவளுக்கு சிங்கம், புலில்லாம் வளர்க்கணும்னு தோணலை. இவளை ‘விபரீதலோ சனி’ன்னு கூப்பிடாம எப்படிக் கூப்பிடறதாம்? சரி, அவளை விடு... அந்தக் கல்பனா... அவ பேசறது கன்னடமாவும் இல்லாம, தமிழாவும் இல்லாம சங்கடமா இல்ல இருக்கும். ‘பகல்’ன்னு சொல்லச் சொன்னா ‘பகள்’ன்னு அழுத்தமா உச்சரிப்பா. வார்த்தைய முடிக்கும் போதெல்லாம் ஒரு ‘ஆமாவா’ வேற...’’

‘‘லோசனிக்கு ஜெனரல் நாலேட்ஜ் ஜாஸ்தி. அதனால அவ வேணும். அவ பேசறதை ‘கப்பு’ புரிஞசுப்பாங்க. அவங்க பேசற தமிழே அந்த லட்சணம்தானே...!’’ சிரித்தாள் சரிதா.

‘‘நீங்க ரெண்டு பேரும் சரி... அந்த பார்வதியை ஏன் புடிச்சே? டிவி சீரியலும், சினிமாவும் பாக்கறதைத் தவிர வேற ஒண்ணுமே தெரியாதே அதுக்கு?’’

‘‘அதான் செலக்ட் பண்ணினோம். எப்படியும் சினிமா பத்தி ஏதாவது கேள்வி வரும்ல? அப்ப அவ தேவைப்படுவா... வர்ற ஸண்டே ரெக்கார்டிங். நீங்க வேற எந்த கமிட்மெண்ட்டும் வெச்சுக்காதீங்க. என்கூட ஷோவுக்கு வர்றீங்க...’’ என்றாள் உத்தரவாக சரிதா. சரியென்று தலையாட்டினேன். (வேறு வழி?)

ஞாயிற்று்க்கிழமை காலையில் நான்கு தோழிகளும், நான்கு கணவர்களும், ஆறு குழந்தைகளுமாக வேனில் கிளம்பினோம். (சரிதா கேப்டன் என்பதால் வேன் ஏற்பாடு என் செலவில்... அவ்வ்வ்வவ்!)

டி.வி. ஸ்டேஷனில் நிகழ்ச்சி நடக்கும் ஹால் நன்றாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியைப் பற்றி விரிவாக லெக்சர் தந்துவிட்டு நடிகை ‘கப்பு’வை அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்தப் பெண்கள் வாயெல்லாம் பல்லாக அவளிடம் பேசினார்கள். ‘‘உங்க ஹஸ்பெண்ட்ஸை அறிமுகம் பண்ணி வைங்க’’ என்றாள் அவள். ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய, என் பக்கம் வந்த போது, நான் இந்தியில் ‘நலமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவள் வாயெல்லாம் பல்லாக ‘அச்சா பய்யா’ என்றாள்.

‘‘என்னங்க... இவ்வளவு வளர்ந்துட்டிங்க... உங்களப் போயி பையன்ங்கறா?’’ என்று என் காதைக் கடித்தாள் சரிதா.

‘‘அடியே... பையன் இல்லடி பய்யான்னா இந்தில சகோதரான்னு அர்த்தம்...’’ என்று அடிக்குரலில் விளக்கினேன்.

கப்பு அங்கிருந்து, ‘‘என்ன கேக்கறாங்க அவங்க..?’’ என்றாள். அப்போது என் நாவில் ஸெவன் அன்ட் ஹாஃப் இருந்திருக்க வேண்டும்... ஒரு கேள்வி கேட்டேன்.

‘‘ஆமா, நீங்க ஏன் ‘கப்பு’ன்னு பேரு வெச்சுக்கிட்டீங்க?’’

‘‘அதுவா? எங்கம்மா வெச்ச பேர் கற்பகவல்லி. ரொம்ப்ப ஓல்ட் பேஷன் நேமா இருக்கேன்னு சுருக்கி ‘கப்பு’ன்னு வெச்சுக்கிட்டேன். எங்கம்மா செல்லமா என்‌ன அப்டித்தான் கூப்டுவாங்க, யுநோ...’’ என்றாள்.

‘‘நல்லவேளை... உங்கம்மா உங்களுக்கு ‘குஸுமாம்பாள்’ன்னோ ‘மண்டோதரி’ன்னோ பேர் வெக்கலை. வெச்சிருந்தா எப்படிச் சுருக்கிருப்பீங்களோ...’’ என்றேன்.

வாய்விட்டுச் சிரித்து, ‘‘நாட்டி’’ என்று அருகில் வந்து தோளில் குத்தினாள். என்ன எழவு சென்ட்டைப் போட்டிருந்தாளோ... நிஜமாகவே ‘கப்பு’தான்!

நிகழ்ச்சி ஆரம்பமானது. பலியாடுகள் (அட, கணவர்கள்தான்) பார்வையாளர் காலரியில் அமர்ந்து கொண்டோம். சரிதா பாடுவதில் இப்போது கொஞ்சம் தேறிவிட்டதால் ஒரு பாட்டுப் பாடினாள். சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் யானை உடம்பை அசைப்பது போல உடலை லேசாக அசைத்து சரிதாவின் பாட்டுக்கு ஆடினாள் ‘கப்பு’. (இவளைவிட அழகாக சரிதா விடும் ‘பாட்டு’க்கு நான் வீட்டில் ஆடுவேனே...)

முதல் ரவுண்டிற்கு சரிதாவையு்ம், எதிரணி கேப்டனையும் அழைத்தாள் ‘கப்பு’. ‘உப்புமாவை ரவை இல்லாவிட்டால் வேறு எதையெல்லாம் வைத்துப் பண்ணலாம்?’ என்று அவள் கேட்க, சரிதா பஸ்ஸரை அழுத்தி, ‘‘சேமியா’’ என்றாள். போர்டு அதை முதல் எண் விடையாகக் காட்டிவிட, இவள் டீமின் அருகில் வந்து அதே கேள்வியை கல்பனாவிடம் கேட்டாள் கப்பு. ‘‘அவள்ள்’’ என்றாள் கல்பு. ‘‘அவள்ன்னு ‌சொன்னீங்கன்னா... எவள்?’’ என்று கப்பு, போர்டிடம் கேட்க அது ‘பாய்ங்ங்’ என்றுவிட எதிரணிக்கு பாயிண்ட் போனது. ‘‘அடிப்பாவி... அது அவல்டி, அவள் இல்ல’’ என்று இங்கு சரிதா மெல்லிய குரலில் சீறிக் கொண்டிருந்தாள். ‘‘ஆமாவா?’’ என்றாள் கல்பனா.

ஜெனரல் நாலெட்ஜ் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்கள் பதிலளித்த அழகு இருக்கிறதே...

கப்பு: ஆப்பில் பலம் கீல விலறது புவிஈர்ப்பு விசையினாலன்னு கண்டுபுடிச்ச வின்னானி யாரு?

சரிதா: (அடுத்த நொடியில்) எடிசன்! (நான் தலையிலடித்துக் கொண்டேன்.) போர்டு: நியூட்டன் என்றது.

கப்பு: சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக எந்த இனிப்பைப் பயன்படுத்துவார்கள்?

கல்பனா: வெள்ள்ளம்! (அனைவரும் சிரிக்க, போர்‌டு ‘வெல்லம்’ என்றது.)

இந்த லட்சணத்தில் இவர்கள் ‘அழகாக’ விளையாடி போட்டியைத் தோற்றுவிட, ‌நீட்டப்பட்ட மைக்கில் ‘எங்களுக்கு ப்ரொக்ராம்ல கலந்துக்கறதை விட ‘கப்பு’வைப் பாக்கறதுக்குதான் ஆசை. அதனால வருத்தமில்லை’ எனறு பேட்டி(?) வேறு தந்தார்கள். திரும்பி வருகையில் அனைவரும் ஹோட்டலில் சிற்றுண்டி(!) அருந்திவிட்டுத் திரும்பினோம். ஆக, சரிதா டி.வி.யில் தோன்றிய வகையில் எனக்கு ஆன செலவு எட்டாயிரம் ரூபாய்! அவ்வ்வ்வ்!

67 comments:

  1. நண்பரே,
    உங்க வீட்டில சொல்லி உங்களுக்கு
    திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க.
    எழுத்துக்களில் எத்தனை காந்தசக்தி.
    ஈர்க்கிறது போங்கள்....
    ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தலைவியை
    அப்படியே சரிதா என்ற பாத்திரத்தில் இயல்பாய்
    சொல்லியிருகீங்க..

    அட.. பாம்பு வளர்க்குறாங்களா..
    வந்தவங்களை விரட்டிவிட எப்படியெல்லாம்
    யோசிக்கிறாங்கப்பா..

    அந்த தொலைகாட்சி நிகழ்ச்சி நகைச்சுவையாக
    இருந்தாலும்.. தமிழைக் கொலை செய்வதை நாசூக்காக சொல்லியது மிக அருமை..

    அப்படியே ஒரு பாலச்சந்தர் படம் பார்த்தது போல
    இருந்தது.

    ReplyDelete
  2. கலக்கல்! ரொம்ப ஜாலிய இருந்து படிக்க. ஜெயா டீவில ஜாக்பாட் ஷோ ரெகுலரா பாக்கறீங்க போல இருக்கே. :)

    என் கசின்ஸ் மூவரும் பிறந்து, வளர்ந்ததே மைசூரில் தான். கன்னடகாரர்கள் 'அவுதா' (அப்படியா) என்ற வார்த்தையை வரிக்கு வரி உபயோகிப்பார்கள். அதுபோல இவங்க எங்ககிட்ட தமிழ்ல பேசும்போதெல்லாம் வரிக்கு வரி 'ஆமாவா' தான். எதுக்கு கேக்கணும்னு ஒரு அர்த்தமே இல்லாமல் எல்லாத்துக்கும் ஒரு 'ஆமாவா' என்பார்கள். நாங்க இதை வெச்சே அவங்களை பயங்கரமா ஓட்டுவோம். அதனால இந்த வார்த்தையை நீங்க கதைல சரியா, அழகா சேர்த்திருக்கறதை ரொம்ப ரசிச்சேன். இவ்வளவு சரியா இதை எழுதி இருக்கீங்களே 'ஆமாவா' போடற கன்னட-தமிழ் காரங்க உங்க வட்டத்திலேயும் இருக்காங்களா?

    ReplyDelete
  3. // ஸ்னேக்காவைக் கூட்டிட்டு வந்துடப் போறா...// என்றதும் ஸ்னேகாவைத்தான் குறிப்பிடுகிறீர்களோ என நினைத்தேன்! தொலைக்காட்சியில் நடைபெறும் ‘ஷோ’ வை நன்றாக நக்கல் செய்து இருக்கிறீர்கள்! இரசித்தேன்! நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
  4. நடுநடுவே அள்ளித் தெளித்திருக்கும் நகைச்சுவை சூப்பர்....

    கட்டிய யானை அசைவது.... :)

    நல்ல நகைச்சுவை பகிர்வு நண்பரே.... வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. @ மகேந்திரன் said...

    எழு்த்துக்களில் காந்த சக்தியா? முதல் வருகையாய் வந்து மிகப் பெரிய பாராட்டை அள்ளித் தந்த நண்பரே... என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  6. @ middleclassmadhavi said...

    படித்து ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  7. @ மீனாக்ஷி said...

    சென்னைல குடும்பத்தோட செட்டிலாகறதுக்கு முன்னாடி மேன்ஷன்ல நான் மட்டும் கொஞ்ச நாள் இருந்தேங்க. அப்ப என் ரூம்மேட் கிரன் பெங்களூர் ஆளு. அவனோட பேசற ஸ்டைலை ரசிச்சிருக்கேன். இப்ப உபயோகப்படுத்திக்கிட்டேன். ரசிச்சுப் பாராட்டியதற்கு என் இதய நன்றி தங்களுக்கு!

    ReplyDelete
  8. @ வே.நடனசபாபதி said...

    நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  9. @ வெங்கட் நாகராஜ் said...

    நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய நண்பருக்கு நனிசிறந்த பரிசுகள் தரலாம். எனினும் தொலைவிலிருப்பதால் அளிக்கிறேன்- என் இதயம் கனிந்த நன்றிதனை!

    ReplyDelete
  10. ஒரு கமல் படம் பார்த்தது போல் இருந்தது.
    [ பஞ்ச தந்திரம் என நினைக்கிறேன் ... ]
    உச்சரிப்புக் கொலைகளில்
    மனம் விட்டு சிரிக்க முடிந்தது.

    ReplyDelete
  11. கணேஷ்,முதல் வரியில் சிரிக்க ஆரம்பித்ததுதான் படித்து முடித்தபின் கூட நிறுத்த முடியவில்லை.பிரமாதம்.

    ReplyDelete
  12. @ ஸ்ரவாணி said...

    மனம் விட்டுச் சிரிக்க முடிந்ததா தோழி... அதுதான் நான் விரும்புவதும். உற்சாகமூட்டும் நற்கருத்துக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  13. @ RAMVI said...

    என் ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து ஆதரவு தரும் நீங்கள் ரசித்துச் சிரித்ததில் எனக்குக் கொள்ளை மகிழ்வு மேடம்.. என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  14. Versatile Blogger என்பதை நிரூபித்துவிட்டீர்கள். நாங்க எங்கள் ப்ளாக் சைடு பாரில் இருந்து அதை எடுத்து விடலாம் என்று தோன்றுகிறது. எங்களை விட உங்களுக்குத்தான் அது பொருத்தமான விருது!

    ReplyDelete
  15. @ kg gouthaman said...

    வ.வா.பி.ரிஷிப் பட்டம் எனக்கு! இத்தனை பெரிய பாராட்டுக்கு என்னைத் தகுதியாக்கிக் கொள்ள இன்னும் முயல்வேன். உற்சாக டானிக் அளித்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ஸார்...

    ReplyDelete
  16. விபரீதலோ சனி
    >>>>
    அட பேர் நல்லா இருக்கே. என் ஃப்ரெண்டுக்கு கிணத்து மேல இருந்து டைவ் அடிகச்சு நீந்தனும்னும்னா ரொம்ப பிடிக்கும். இப்பவும் ஆழமான கிணத்தை பார்த்தால் டபக்குன்னு குதிச்சு நீந்துவா. ஆனால், எனக்கு கிணத்தை எட்டி பார்க்கனும்னா கூட பயம். இனி அவளுக்கு இந்த பட்ட பேரை வச்சுதான் கூப்பிட போறேன். அவளுக்கு பேர் சூட்டிவிட்டு வரேன்

    ReplyDelete
  17. (இவளைவிட அழகாக சரிதா விடும் ‘பாட்டு’க்கு நான் வீட்டில் ஆடுவேனே...)
    >>>
    அதை வீடியோ படம் புடிச்சு ஒரு பதிவா தேத்துங்கண்ணா

    ReplyDelete
  18. இவளைவிட அழகாக சரிதா விடும் ‘பாட்டு’க்கு நான் வீட்டில் ஆடுவேனே..

    அழகான நடனத்திற்கும்,
    அருமையான நகைச்சுவைப் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  19. @ ராஜி said...

    தாராளமா கூப்பிடும்மா... அப்படியே ஐடியா தந்த அண்ணனுக்கும் ஏதாவது கிப்ட் அனுப்பிடு. ஹி... ஹி....

    ReplyDelete
  20. @ ராஜி said...

    அடாடா... இதல்லவா விபரீத யோசனை... நான எஸ்கேப்...

    ReplyDelete
  21. @ இராஜராஜேஸ்வரி said...

    என் ’நடன’த்தையும் நகைச்சுவையையும் ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  22. கலகல பேர்வழி நீங்கள் உங்க வீட்டுல உள்ள எல்லோரையும் கலாய் கலாய்னு கலாய்க்குறீங்க.அதுல பாம்பு மேட்டர் சூப்பர்.

    மனம் கவர் பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  23. //இந்தியில் ‘நலமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டேன்//

    கப்பு தமிழில் நலமாக இல்லையாமா....ஹிந்தியில்தான் நலமாக இருக்கிரார்களாமா...!

    //விபரீதலோ சனி//

    ஹா..ஹா...ஹா...

    ReplyDelete
  24. @ DhanaSekaran .S said...

    மனம் கவர்ந்த பதிவென்று பாராட்டிய நண்பனுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  25. @ ஸ்ரீராம். said...

    ரசித்துச் சிரித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  26. அண்ணே உங்கள் நகைச்சுவையுடன் கூடிய இந்த பகிர்வு சூப்பர்.இப்படி அடிக்கடி மன்னியை வலைப்பக்கம் கூட்டி வாங்க.

    சின்ன டவுட்டு?உங்கள் பதிவை எல்லாம் மன்னி பார்ப்பார்களா?



    ‘‘பயப்படாதீங்க. இது லோசனி வளர்க்கற செல்லம். நம்மளை ஒண்ணும் பண்ணாது. ஸ்னேக்கா... ஸாருக்கு ஹலோ சொல்லு...’’ என்று அதை என் பக்கமாக நீட்ட, அலறியடித்து, உளறிக் கொட்டி, கிளறிமூடி வெளியே ஓடிவந்து விட்டேன்... அஃப்கோர்ஸ் சரிதாவையும் இழுத்துக் கொண்டு.
    ///

    நல்ல ஐடியாதான்.இப்பவே ஒரு பாம்பாட்டிய பார்த்து நல்லதா கடிக்காத பாம்பாக பார்த்து ஒன்று வாங்கி வளர்க்கவேண்டும்.

    ReplyDelete
  27. :))))))))))

    //‌நீட்டப்பட்ட மைக்கில் ‘எங்களுக்கு ப்ரொக்ராம்ல கலந்துக்கறதை விட ‘கப்பு’வைப் பாக்கறதுக்குதான் ஆசை. அதனால வருத்தமில்லை’ எனறு பேட்டி(?) வேறு தந்தார்கள்.///

    ellathaiyum vida indha joke(!? fact?!!) thaam muthal mark :))))))

    ReplyDelete
  28. @ ஸாதிகா said...

    அட, சரிதாவுக்கு ஒரு ரசிகையா? ரொம்ப சந்தோஷப்படுவா. “மனைவியக் கேலி பண்ணி நகைக்சுவைக் கதைகள் எழுதப் போறேன், உன்னையே வெச்சுக்கவா” என நான் கேட்க, “நல்லது, வலையில வேற யாரையாவது வெச்சுக்காம என்னையே வெச்சுக்கறேங்களே, சந்தோஷம்” என்பது சரிதாவின் பதில். ஆகவே, கண்டிப்பா பாத்துச் சிரிக்கும் முதல் வாசகி...
    -என்னது... பாம்பு வாங்கப் போறியாம்மா... பாவம் உங்க வீட்டுக்காரர். அப்புறம் ‘விபரீத ஸாதிகா’ன்னு பேர் வெச்சுட்டு என் அட்ரசைத் தேடி கம்பெடுத்துட்டு வந்துடப் போறார், வேணாம் தங்கச்சி... விட்றும்மா[

    ReplyDelete
  29. @ Shakthiprabha said...

    கரெக்ட். இந்த மாதிரிப் பெண்கள் பிராக்டிகலாய் பேட்டி கொடுப்பதைப் பார்த்துச் சிரிச்சிருக்கேன். இதை ரசித்த உங்கள் ரசனைத் தன்மைக்கு ஒரு சல்யூட்டுடன் என் இதய நன்றி.

    ReplyDelete
  30. ரசிக்க ரசிக்க எழுதுகின்றிர்கள் ..

    ReplyDelete
  31. @ என் ராஜபாட்டை"- ராஜா said...

    ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  32. அடடே! நக்கல், நகைச்சுவை!நையாண்டி!

    இப்படியும் எழுத வருமா?

    அருமை! கணேஷ்

    சா இராமாநுசம்

    ReplyDelete
  33. @ புலவர் சா இராமாநுசம் said...

    சில சமயம் நகைச்சுவையையும் முய்ல்வது என் வழக்கம் ஐயா... தாங்கள் ரசித்துப் பாராட்டியதி்ல் அகமகிழ்வுடன் நன்றி நவில்கிறேன்.

    ReplyDelete
  34. நான் கொஞ்சம் லேட்டாவந்துட்டனோ. நல்லா காமெடி வருது உங்கள்க்கு. நீங்க சொல்வதுபோலத்தானே டி, வி ஷோக்கள் இருக்கு.

    ReplyDelete
  35. பிரமாதம்.. நகைச்சுவை பிரவாகம்!

    ReplyDelete
  36. ஹலோ....ஹலோ யாரு அந்தப்பக்கம்.நான் இந்தப்பக்கம்.என் பேரெல்லாம் அடிபடுது.என் ஃப்ரெண்டு தலை.நான் மட்டும்தான் குட்டலாம் செல்லமா.சொல்லிட்டேன் !

    பாம்பு வளர்க்கிற ஃப்ரெண்டெல்லாம் இருக்கிறாங்களா உங்களுக்கு.இனிக் கவனமாத்தான் இருக்கணும்பா !

    ஆப்பில் பலம் கீல விலறது புவிஈர்ப்பு விசையினாலன்னு கண்டுபுடிச்ச வின்னானி யாரு?

    அட...அட...அட தமில் கொஞ்சி விலையாடுதுங்கோ !

    ReplyDelete
  37. @ Lakshmi said...

    பல டி.வி. ஷோக்களைப் பாக்கும் போதெல்லாம் கேலி பண்ணனும்னு நினைக்கிறதுண்டு நான். இதுமூலமா ஆரம்பிச்சிருக்கேன். தங்களின் வருகைக்கும் நற்கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  38. @ bandhu said...

    வாவ்! சுருக்கமான வார்த்தைகளில் பெரிதளவான மகிழ்வு தந்த தங்களின் பாராட்டுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  39. @ ஹேமா said...

    இந்த மாதிரி ‘அலகு’ தமிழை டிவியில நிறையப் பேர் பேசறப்பல்லாம் கோபம் கோபமா வரும் எனக்கு. அதான் அப்படியே எழுதிட்டேன் ஃப்ரெண்ட்! பாம்பு வளர்க்கிற ஃப்ரெண்ட்லாம் எனக்குக் கிடையாதும்மா. என் பெட்டர்ஹாஃபுக்குத்தான். (என் ப்ரண்ட்ஸ்லாம் ரொம்ப நல்லவங்கப்பா). மகிழ்வளித்த வருகைக்கு என் மனம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  40. நகைச்சுவை முலாம் பூசப்பட்ட யதார்த்தத்தை ஒவ்வொரு வரியிலும் ரசித்தேன். நல்ல கற்பனை வளமும் நகைச்சுவை உணர்வும் உங்கள் படைப்புகளுக்கு ப்ளஸ்பாயிண்ட். தொடரட்டும் கலாட்டாக்கள். பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
  41. @ கீதமஞ்சரி said...

    கலாட்டாக்கள் தொடர வாழ்த்தி, பாராட்டிய தோழிக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  42. எப்பவும் போல ரசித்து வாசித்தேன்.
    ரசித்ததில் சில..
    "பாம்... பாம்..." என்று பெரிய எழுத்தில் நான் அலறிய அலறல்"
    "என்னங்க... இவ்வளவு வளர்ந்துட்டிங்க... உங்களப் போயி பையன்ங்கறா?"

    வலை மாற்றம் சிறப்பு..

    ஏனென்று தெரியவில்லை..எனது டாஷ்போர்டில் உங்களின் பதிவுகள் இரண்டு நாட்களாய்த் தெரியவில்லை.எனது பதிவுகள் தெரிகிறதா?ஆகையினால் தங்களின் கடந்த இரண்டு பதிவுகளுக்கும் உடனே வரமுடியவில்லை.உங்கள் தளத்தின் யூ.ஆர்.எல் டைப் பண்ணி பார்த்தபோதே பதிவிட்டிருந்தது தெரிந்தது.

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே.. எனக்கு உங்களின் பதிவுகளைக் காண முடிகிறது, தாங்க்ள் என் வலையை ஒருமுறை அன் பாலோ செய்து பின்னர் பாலோ செய்து பாருங்களேன்... ரசித்து வாசித்து, அதைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கும் வலையின் மாற்றத்தைப் பாராட்டியதற்கும் தங்களுக்கு நன்றிகள் பல...

      Delete
  43. கலக்கலா இருந்தது சார். பாம்பு வளர்க்கிறார்களா!!!!!!விபரீத லோசனி....
    நகைச்சுவை ஆரம்பம் முதல் முடிவு வரை பிரமாதமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ந்கைச்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  44. இந்த மாதிரி நகைச்சுவையில் நீங்க மன்னன்தான்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டினால் மனமகிழ்வுடன் உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

      Delete
  45. இது மாதிரி நையாண்டி எழுத்து தமிழில் அதிகம் காணவில்லை. ரசித்தேன். நகைச்சுவைக்குப் பிறகுதான் மிச்சதெல்லாம்.
    குஸுமா என்று எங்களுக்கு ஒரு சயன்ஸ் டீச்சர் உயர்நிலைப்பள்ளியில். காரணமே இல்லாமல் சிரிப்போம். டீச்சரை இப்போது நினைத்தால் பாவமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மேல்நிலைப் பள்ளி படிக்கும் போது குஞ்சப்பன் என்ற மாஸ்டர் கிளாஸ் எடுத்தார். அவர் பெயரைச் சுருக்கிக் கூப்பிட்டு சிரித்ததுண்டு. எழுதும் போது அனுபவமும் இயல்பாய் எப்படியோ இணைந்து விடுகிறது. நகைச்சுவையை நீங்கள் ரசித்ததில் மிக்க மகிழ்வு எனக்கு. நன்றி ஸார்!

      Delete
  46. முகப்பு ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  47. தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கேன். நேரம் கிடைக்கும்போது வந்து தொடரவும் அண்ணா
    http://rajiyinkanavugal.blogspot.com/2012/02/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. பாத்தேன்மா. ரொம்ப சந்தோஷம். அடுத்து தொடர்ந்துடறேன்...

      Delete
  48. அலங்கார பூசணி.. மறுபடி ரசித்துச் சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் படித்து ரசித்துச் சிரித்தீர்கள் என்பதில் எனக்கு மிகமிகமிக மகிழ்வு. மகிழ்வைத் தந்த உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  49. சார். அருமை. சூப்பரான் நகைச்சுவை. கிரேசி மோகன் நாடகம் பார்த்த மாதிரி இருந்தது. நிஜமாகவே வாய்விட்டு சிரித்தேன். அதுவும் இயல்பாய் உங்களுக்கு கைவந்திருக்கிற நகைச்சுவைச் சொல்லாடல் இருக்கிறதே. சுவையோ சுவை. எப்படி எப்படி செவன் அண்டு ஹாப் ஆ...ஹா..ஹா...சார்...நீங்கள் முயன்றால் கிரேசி மோகன் போலவோ அல்லது எஸ்.வி.சேகர் போலவோ நகைச்சுவை எழுத்தாளராகி விடலாம். நிஜமாகவே அருமையாக எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. என் மீதான அன்பால் உங்களின் அதீதப் புகழ்ச்சிக்கு நான் தகுதியானவனா தெரியவிலலை. ஆனால் உங்களின் அன்பும் பாராட்டும் மகிழ்வை அள்ளித் தருகிறது துரை. மிக்க நன்றி.

      Delete
  50. விருது கொடுத்த தங்களின் அன்புக்கு நன்றி. இந்த விருது எனக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது. நானும் ஐவருக்கு வழங்கி விட்டேன். ஆகவே தங்களின் அன்பையும் விருதையும் ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  51. உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. எஸ்தர்... என்னை மதித்து விருது வழங்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்விருது முன்பே இருமுறை எனக்குத் தரப்பட்டு விட்டது என்பதால் தங்களின் அன்பையும், விருதையும் மகிழ்வுடன் ஏற்று நன்றி நவில்கின்றேன்.

      Delete
  52. நகைச்சுவைகள் அட்டகாசம் சார் ! தளம் நன்றாக உள்ளது !

    ReplyDelete
    Replies
    1. தளத்தின் வடிவையும், நகைச்சுவையையும் ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  53. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  54. Mr. Ganesh
    I feel sorry for reading your article very lately. I feel how i missed this all these days. Now onwards, I will visit your blog regularly. Such blogs are really enjoyable than seeing the boring serials and programmes in television. Very nicely written making us to forget all other things around. Please keep it up.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube