Saturday, February 18, 2012

ஓடாத ரயில்! ஒளிரும் மர்மம்!

Posted by பால கணேஷ் Saturday, February 18, 2012
பேருந்துகளில் பயணிப்பதை விட ரயில் பயணங்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. கால்களை வசதியாக நீட்டக் கூட முடியாமல், அவசரமாக இயற்கை உபாதைகள் ஏற்பட்டால் அடக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன், எந்த நேரம் டிரைவர் விபத்தை ஏற்படுத்தி விடுவாரோ என்கிற சன்னமான பீதியுடன் பேருந்துகளில் பயணிப்பது என்னைப் பொறுத்தவரை நரகம். ரயிலில்... அதுவும் பகல் நேர ரயில்களில் பயணிப்பது என்றால் அப்படி ஒரு தனி குஷி எனக்கு!

கம்பார்ட்மெண்ட்களை இணைக்கும் பாதை வழியாக பல பெட்டிகள் தாண்டி ஒரு வாக்கிங் போய்விட்டு வரும் பழக்கம் உண்டு எனக்கு. ஒவ்வொரு ரயிலும் ஒரு தனி உலகமாகவே இயங்குகிறதோ என்று வியப்பேன். எத்தனை விதமான மனிதர்கள்! அம்மா கத்தக் கத்த, துறுதுறுவென்று இங்குமங்கும் ஓடும் சிறுமி, தன்னைச் சுற்றி ஓர் உலகம் இயங்குவதை அறியாமல் மொபைலில் வைத்த கண்ணையும் விரலையும் எடுக்காத இளம் பெண், எதிரில் படி்த்துக் ‌கொண்டிருக்கும் ஆசாமி எப்போது விகடன் புத்தகத்தை மூடுவான்... நாம் ‘எக்ஸ்க்யூஸ் மீ, கொஞ்சம் பாத்துட்டுட்த் தரேன்’ என்று கேட்கலாம் என்று காத்திருக்கும் பெரியவர், தொலைக்காட்சிக் கதையை பக்கத்தில் இருப்பவளிடம் பேசியபடி இருக்கும் மாமி... எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் ரயிலில்! முடிந்தவரை இப்படியான ரயில் பயணங்களையே நான் தேர்ந்தெடுப்பேன். எதிர்பாராத சில நல்ல நட்புகளும் எனக்கு ரயில் பயணங்களில் அமைந்தது உண்டு.

மீபத்தில் ரயில் பயணத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட ஒரு த்ரில்லர் நாவலைப் படித்தேன். அதைப் பற்றி இங்கே சொல்ல விரும்புகிறேன்.

ரோப்பாவுக்குக் குறுக்காக தனது மூன்று நாட்கள் பயணத்தைத் தொடங்குகிறது ஓரியண்ட் எக்ஸ்பிரஸ். பெல்கிரேடில் நின்றுவிட்டு கிளம்பும் அந்த ரயில் பயணத்தின் இரண்டாம் நாளில் எதிர்பாராமல் நிகழ்ந்த பனிப் பொழிவில் சிக்கிக் கொண்டு நடுவழியில் நகர இயலாமல் நிற்கிறது. இப்படிப் பனிப்பொழிவு ஏற்பட்ட வாரக் கணககில் ரயில்கள் சிக்கிக் கொள்வது உண்டு என்பதால் யாரும் பதற்றமடையவில்லை. ஆனால் அவர்களைப் பதற்றமடையச் செய்யும் ஒரு விஷயம் நடந்தேறுகிறது.

குளிர் காலத்தில் அதிகம் பேர் பயணிக்க மாட்டார்கள் என்பதால் காலியாக இருக்கும் அந்த ரயில் இம்முறை மட்டும் ஏனோ ஃபுல்லாக பயணிகளால் இருக்கிறது. ரயில் கம்பெனி டைரக்டர் பெளக்கும் துப்பறியும் நிபுணர் ஹெர்குல் பொய்ரெட்டும் அந்த ரயிலில் பயணிக்கின்றனர். பனிப்பொழிவில் சிக்கி ரயில் நகர இயலாத நிலையில் அதில் பயணித்த மில்லியனர் ஸைமன் ரேச்சட் உள்பக்கமாக பூட்டப்பட்ட தன் கம்பார்ட்மெண்ட்டுக்குள் ஒரு டஜன் முறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் படுகிறார். வெளியாட்கள் எவரும் வந்து கொன்றிருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான நிலையில், கொலைகாரன் ரயிலிலேயே பயணிக்கும் பயணிகளில் ஒருவன் அல்லது ஒருவள்தான்.

அந்தக் குற்றவாளி யார் என்ற பெரும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை கண்டுபிடிக்கும் பொறுப்பு பொய்ரெட்டின் தலையில் சுமத்தப்படுகிறது. போலீஸ் வரமுடியாது, மோப்ப நாய்கள் கிடையாது, வெளியுலகிலிருந்து எந்தத் தகவலும் பெற முடியாது. இப்படி ஒரு வினோத சூழ்நிலை!

-இப்படி ஒரு அழுத்தமான முடிச்சைப் போட்டுவிட்டு தன் "MURDER ON THE ORIENT EXPRESS" நாவலைத் தொடங்குகிறார் மர்மக்கதை மகாராணி அகதா கிறிஸ்டி. படிக்கும் ஆர்வத்தை ஏகமாக இது கிளறிவிட தொடர்ந்து படித்தேன்.

வழக்கைக் கையிலெடுக்கும் பொய்ரெட், ‌கொலை நடந்த இடத்திலிருந்து ஒரு துப்பு கண்டுபிடிக்கிறார். பின்னர் ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவரையும் விசாரிக்கிறார். அந்த விசாரணையில்தான் எவ்வளவு திடுக்கிடும் உண்மைகள் வெளிவருகின்றன! கொலையுண்டவனுக்குத்தான் எத்தனை விரோதிகள் அந்த ரயிலினுள்ளேயே இருந்துள்ளனர் என்கிற பிரமிப்பான விஷயங்கள் வெளிவருகின்றன. பிரயாணிகளில் ஒருவர் நியூயார்க் டிடெக்டிவ் ஏஜென்ஸியைச் சேர்ந்த துப்பறியும் நிபுணர் ஹார்ட்மேன் என்பதையும் பொய்ரெட் கண்டுபிடிக்கிறார். அவரது சாட்சியமும் கேசுக்குத் துணை நிற்கிறது. முடிவில் தர்க்கரீதியாக அலசி, எந்த ஒரு பாயிண்ட்டையும் மறுக்க இயலாதவாறு கொலை நிகழ்ந்த விதத்தை பொய்ரெட் விரிவாக விளக்கி நாவலை முடிக்கும் போது படிக்கும் நம் மனதில் எழும் உணர்வு: பிரமிப்பு!

நாவலின் ரத்தினச் சுருக்கம் தான் மேலே நான் தந்திருப்பது. அகதா கிறிஸ்டியின் நாவல்களைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் கதை முடிவதற்கு முன்னேயே குற்றவாளி யாராக இருக்க முடியும் என்பதை யூகித்துவிட முயல்வேன். ஒன்றிரண்டு கதைகளைத் தவிர மற்ற எல்லாக் கதைகளையும் நான் படித்து முடிக்கையில் ‘ஏமாந்தியா?’ என்னும் அகதாவின் கேலிச் சிரிப்பு என் காதுகளில் ஒலிக்கும். இந்த நாவலிலும் அப்படியே.

அகதா கிறிஸ்டி கண்ணி‌ வெடிகளைப் போல தன் நாவலினூடே குற்றவாளி யாராக இருககும் என்பதற்கான க்ளூக்களையும் அங்கங்கே தெளித்திருப்பார். அதைப் பற்றிக் கொண்டு கண்டுபிடிப்பதுதான் கஷ்டமான விஷயம். மூளைக்கு வேலைதரும், சுறுசுறுப்பூட்டும் விஷயமும் கூட! நாவலின் முடிவில் குற்றவாளியும், குற்றம் நிகழ்‌ந்த விதமும் அகதாவால் விவரிக்கப்படும் போது, அந்தக் கண்ணிவெடிகளை நாம் அறியும்போது, ‘அட!’ என்கிற பிரமிப்பு நிச்சயம் ஏற்படும். அந்த பிரமிப்பை எனக்குள் இந்த நாவலும் தரத் தவறவில்லை. அகதாவின் நாவல்கள் வரிசையில் இதற்கு இரண்டாம் இடம் தருவேன். முதல் இடம் 'AND THEN THERE WERE NONE' என்ற கதைக்கு.

படமாகப் பார்க்க விரும்புபவர்களுக்கு : ‘‘நாவல்கள் படிப்பதற்கெல்லாம் பொறுமை இல்லைப்பா’’ என்பவர் களுக்கு... இந்த 'MURDER ON THE ORIENT EXPRESS' கதை இரண்டு முறை திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. (1974 வெர்ஷன் மிக நன்றாக இருக்கும்)  'AND THEN THERE WERE NONE' படமும் திரைப்படமாகி உள்ளது. கூகிளாண்டவரிடம் தேடினீர்கள் என்றால் இரண்டு படங்களையும் டவுன்லோடு செய்து பார்த்து ரசிக்க முடியும்.

வாசிப்பு அனுபவம் விரும்புபவர்களுக்கு : ‘‘ஆங்கிலத்தில் நாவல்கள் படிப்பது என்னால் முடியாதுப்பா, அவ்வளவு பொறுமை கிடையாதுப்பா’’ என்பவர்களுக்கு... இவ்விரண்டு நாவல்களையும் கண்ணதாசன் பதிப்பகம் ‘ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்’ என்றும் ‘பிறகு அங்கு ஒருவர்கூட இல்லை’ என்றும் தலைப்புகளில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

பின் குறிப்பு: அண்மையில் நண்பர் தி‌ரு.வெங்கட் நாகராஜ் அவர்கள் தன் பதிவில் பஸ் பயணம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். எனக்கு ரயில் பயணம் ஏன் பிடிக்கும் என்பதை எழுதினாலென்ன என்று அதைப் படித்ததும் தோன்றியது. ரயிலைப் பற்றி எழுதும்போது இயல்பாக இந்த நாவலும் இணைந்து கொண்டது. ஒரு பதிவுக்கு வித்திட்ட (தேத்த உதவிய) நண்பர் வெங்கட்டுக்கு நன்றி!

52 comments:

  1. என் இனிய வணக்கம் ஐயா,
    இந்த நாவலை நிறைய கேள்விப்பட்டுள்ளேன்...படித்ததில்லை..ஆனால், 1974 ஆம் ஆண்டு வந்த படத்தை சமீபத்தில் பார்க்க கிடைத்தது..அருமையான படம்..அற்புதமான காட்சிக தொகுப்புகள், நடிப்பு என்று அத்தனையிலும் தூள் கிளப்பியது..Murder on the Orient Express (1974) - இந்த படத்தை பற்றி சில நாட்களாகவே எழுதி வருகிறேன்..இன்னும் முடித்தப்பாடில்லை..இன்னும் சில நாட்கள் ஆகும்...ஒரு நாள் நாவல் படிப்பேன்..அன்று தங்களது ஞாபகம் மனதை தட்டும்..அவ்வளவு சிறப்பான பதிவு.. எனது நன்றிகளோடு தங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  2. @ Kumaran said...

    என்ன பொருத்தம் குமரன்... நீங்கள் சொன்னபடி நானும் மிக ரசித்த ஒரு தென்கொரியப் படத்தைப் பற்றி பாதி எழுதி வைத்திருக்கிறேன் உங்களனைவருடனும் பகிர. இன்னும் இரண்டு பதிவுகளுக்குப் பின் அது வரும். தொடரும் உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  3. Irandu Novelkalume arumaiyanavai than. Pudhumaiyana muyarchi. Arumai Sago.

    ReplyDelete
  4. எனக்கும் உங்களைப் போலவே ரயில் பயணம்தான் பிடித்தமானது..அகதா கிறிஸ்டியைத் தெரியும்.ஆனால் பாருங்கள் இன்று வரை அவரது நாவலை படித்ததில்லை. யூகிப்புக்கே இடமில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.நீங்களும் சொல்கிறீர்கள். வாசிக்கிறேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  5. @ துரைடேனியல் said...

    கருத்திட்டு உற்சாகம் தந்தமைக்கு மிக்க நன்றி துரை.

    ReplyDelete
  6. @ மதுமதி said...

    நமக்குள் ஒற்றுமை இருப்பது கண்டு மகிழ்கிறேன். அகதாவின் கதைகளைப் படித்துப் பாருங்கள்... நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கும். உங்களுக்கு என் இதய நன்றி கவிஞரே!

    ReplyDelete
  7. இதுவும் உங்களின் ஒரு கேப்சூல் நாவல் போல் அமைந்து விட்டது.
    பார்க்கலாம். பதிவு தந்த தூண்டுதலில் பார்ப்பேனோ அல்லது படிப்பேனோ
    எனத் தெரியவில்லை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  8. நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் அதே காரணங்களினால் எனக்கும் ரெயில் பயணங்கள் அதிகம் பிடிக்கும்.

    அகதா கிறிஸ்டியின் இந்த நாவலை நான் படித்திருக்கிறேன்.உங்கள் பதிவை பார்த்ததும் மீண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  9. @ ஸ்ரவாணி said...

    இது ரத்தினச் சுருக்கமாச்சுதே! அதனால அறிமுகம்தான். கேப்ஸ்யூல் நாவலா நினைச்சுடாதீங்க! உங்கள் விருப்பம் போல படித்தாலும் சரி, பார்த்தாலும் சரி... நான் அடைந்த மகிழ்வை நீங்களும் அடைந்தால் போதும் ஃப்ரெண்ட்! நற்கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  10. பேருந்துகளில் பயணிப்பதை விட ரயில் பயணங்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. //
    உண்மைதான்.எல்லா சகல வசதிகளும் ரயில் பயணத்தில்தான் உண்டு.அதிலும் குடுபத்துடன் முழு கம்பார்ட்மெண்டையே புக் செய்து பயணிக்கையில் ,ரயிலின் தாலாட்டை அனுபவித்த படி,அரட்டை அடித்துக்கொண்டே,கொண்டுவந்த ஸ்நாக்ஸ்கள் கொறித்துக்கொண்டே பயணிக்கும் மகிழ்ச்சி அடடா...

    ReplyDelete
  11. @ RAMVI said...

    ஹையா! நீங்கள் ரயில் பயண ரசிகை என்பதில் கொள்ளை மகிழ்ச்சி மேடம் எனக்கு. இந்த நாவலின் நினைவுகளை உங்களுக்குள் எழுப்பியதிலும்தான். தொடர்ந்த உங்கள வருகைக்கும் உற்சாகப்படுத்துதலுக்கும் மனம் நிறைந்து நன்றி நவில்கிறேன்!

    ReplyDelete
  12. @ ஸாதிகா said...

    முழு கம்பார்ட்மெண்ட் புக் செய்யுமளவு பெரிய குடும்பம்(!). ரயிலின் தாலாட்டு, அரட்டை, ஸ்நாக்ஸ்... அடடா, மிக ரசித்திருக்கிறீர்கள் தங்கையே- என்னைப் போல! கொள்ளை மகிழ்வுடன் என் இதய நன்றி!

    ReplyDelete
  13. யூ ட்யூப்ல தேடிட்டே இருக்கேன்.கண்டிப்பா பார்க்கணும் ஃபிரெண்ட் !

    ReplyDelete
  14. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதே காரணங்களுக்காக எனக்கும் ரயில் பயணங்கள்தான் பிடிக்கும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது பிருந்தாவன் எக்ஸ்பிரசில் பயணம் செய்துவிடுவேன்.

    ReplyDelete
  15. அடடடடடடாஆஆ!
    கணேஷ் என்னுடைய மிக மிக மிக மிக மிக பிடித்த எழுத்தாளார் அகாதா க்ரிஸ்டி.
    எத்தனை புத்தகங்கள்!! அது படிக்கும் போது ஏற்படும் த்ரில்.......சொல்லில் வடிக்கவே
    முடியாது!

    படிக்கும் நம்மையும் அவருடனே சேர்ந்து டிடெக்டிவ் வேலை பார்க்க வைக்கும் திறன்
    வேறு யாருக்கு வரும்.

    எனக்கு நினைவில் என்றும் அழியாமல் நிற்கும் சில புத்தகங்கள்,
    lord edgware dies, A caribbean mystery, sparkling cyanide, 4.50 from paddington,
    a murder is announced, why didn't they ask evans.............தொடர்கிறது.......

    எனக்கு முதன் முதலில் பதின்ம வயதில் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர்.
    என்னுடைய 15 ஆம் வயது முதல் இவரை படித்துள்ளேன். "she" is what I call
    a mystery writer. இவரை படித்த பின், மன்னிக்கவும், தமிழ் க்ரைம் த்ரில்லர்கள் எதுவுமே
    ரொம்ப தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. (நான் நிறைய படித்ததும் இல்லை என்றாலும்)
    The first taste of tamizh crime novels, didn't give me the kick which agata gave.
    அதனால் தமிழ் க்ரைம் நாவல்கள் படிப்பது இல்லையென்றானது.

    மறுமொழியே பதிவைப் போல் ஆகிவிட்டது. I definitely got carried away. online la
    அகாதாவின் எழுத்தை மறுபடி ருசிப்பேன். அணுஅணுவாக......

    ReplyDelete
  16. மாதம் ஒருமுறை விமானப் பயணம் செய்யும் நான்
    இதுவரை என் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான்
    இரயில் பயணம் செய்திருக்கிறேன் நண்பரே...
    ஆனாலும் அந்த ஒருமுறையும் என் நெஞ்சில் இன்னும்
    பட்டாம்பூச்சி நினைவுகளாய்...

    நீங்கள் இங்கு குறிப்பிட்ட இரு நாவல்களையும் நான்
    படித்ததில்லை.. நேரம் வாய்க்கையில் படிக்கிறேன் நிச்சயம்..

    ReplyDelete
  17. பயணக் குறிப்பிடன் அது தொடர்புடைய சிந்தனையாக
    நாவலையும் இணைத்த விதமும்
    மிக மிக நேர்த்தியாக கதைச் சுருக்கம் சொன்ன விதமும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. நல்ல பதிவு... நன்றி..

    ReplyDelete
  19. @ ஹேமா said...

    நிச்சயம் பாருங்க ஃப்ரெண்ட். உங்களை ஏமாத்தாத சுவாரஸ்யம் இருக்கும். நன்றி!

    ReplyDelete
  20. @ kg gouthaman said...

    என் ரேஞ்சுக்கு இன்டர்சிட்டி, பல்லவன் இப்படி ட்ராவல் பண்ணுவேன். நீங்க ப்ருந்தாவனா? வெரிகுட்! ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  21. @ Shakthiprabha said...

    ஆமாங்க ஷக்தி! நானும் ஒரு துப்பறிவாளனாக மூளையைக் கசக்கிக் கொண்டு லாஜிக்கலா யோசிச்சதெல்லாம் அகதா‌ படிக்கும்போதுதான். Murder in Mesapadomia, Death in clouds... இன்னும் எனக்குப் பிடிச்சதைல்லாம் லிஸ்ட் போடணும்னா தனிப் பதிவே ‌போடணும். நமக்குள்ள இந்த ஒற்றுமையில மிக்க மனமகிழ்ச்சியோட உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
  22. @ மகேந்திரன் said...

    படித்துப் பாருங்கள் நண்பரே... பிடித்து விடும்! தங்கள் வருகைககும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  23. @ Ramani said...

    தங்களுக்குப் பிடித்திருந்தததில் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் நற்கருத்துக்கும் என் இதய நன்றி!

    ReplyDelete
  24. ரயில் பயணம் அருமை தான்.
    அருமையான விமர்சனம்.
    நன்றி.

    ReplyDelete
  25. @ Rathnavel Natarajan said...

    மனம் மகிழச் செய்த தங்களின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா!

    ReplyDelete
  26. பஸ் பயணமா??.. அது யாருக்குங்க வேணும். ரயிலுக்குத்தான் என் வோட்டும் :-)

    படமா எடுக்கும்போது நாவலோட ஜீவன் கொஞ்சம் சிதைக்கப்படுது. என்ன இருந்தாலும் வாசிக்கிற சுகம் தனி இல்லையா..

    ReplyDelete
  27. தி மிட் நைட் டிரைய்ன் திரைப்படம் இந்த கதையின் பாதிப்பு என நினைக்கிறேன்! நமக்கு ஆங்கில கதை புரிந்து கொள்ளும் அளவு ஒர்த் கிடையாது,தமிழில் படிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  28. @ அமைதிச்சாரல் said...

    சரியாகச் சொன்னீங்க மேடம்! என்னதான் அழகா எடுத்திருந்தாலும் நாவலோட ஜீவன் திரைப்படங்கள்ல வர்றது கஷ்டம்‌கறதுதான் என்னோட கருத்தும். வாசிப்பனுபவத்துக்கு இணையானது வேறொன்றில்லை! ரயில் பயண விஷயத்தில் என்னோடொத்தவர் தாங்கள் என்பதில் மகிழ்வுடன், தங்கள் வருகைக்கும் நற்கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  29. @ வீடு K.S.சுரேஸ்குமார் said...

    நான் மட்டும் என்ன பெரிய அறிவாளின்னு நெனச்சீங்களா? ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், அகதா கிறிஸ்டி மட்டும்தான் ஆங்கிலத்துல நான் படிச்சிருக்கேன். தமிழ்ல படிச்சாலும் சுவாரஸ்யம்தானே.. படித்து ரசியுங்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  30. ரயிலோ பஸ்ஸோ பயணங்கள் வெவ்வேறு விதங்களில் சுகமானவை. நாவல் குறிப்புகள் சுவாரஸ்யம். பட டவுன்லோட் சொன்னீர்கள் சரி, புத்தகத்துக்கும் பி டி எஃப் லிங்க் அல்லவா தந்திருக்க வேண்டும்??!!

    ReplyDelete
  31. இபடியான நாவல்,எழுத்தாளர் இருக்காங்கன்னு உங்க பதிவின் மூலம்தான் தெரிந்துகொண்டுள்ளேன்.ரயில் பயண அனுபவத்தோடு,நாவல்,திரைப்படம்னு தொடர்புடையதாய் பதிவு அமைந்திருப்பதை ரசித்தேன்.

    ReplyDelete
  32. அகதா கிறிஸ்டியின் நாவல்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் படித்தது இல்லை. "MURDER ON THE ORIENT EXPRESS என்ற நாவலைப்பற்றி எழுதி, அதை படிக்கும் ஆர்வத்தை தூண்டியமைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே!

    நீங்கள் Sir Arthur Conan Doyle என்கிற Sir Arthur Ignatius Conan Doyle அவர்களின் துப்பறியும் நாவல்களையும் படித்து இருப்பீர்கள். அதில் வரும் Sherlock Holmes என்ற துப்பறியும் நிபுணர் அநாசயமாக பல புதிர்களை அவிழ்ப்பதை படித்து அனுபவிக்கவேண்டும். அடுத்த பதிவில் Sherlock Holmes பற்றி எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  33. ரயில் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கும் ! நல்ல பதிவு சார் ! வாழ்க்கையே ஒரு ரயில் பயணம் போலத் தானே !

    ReplyDelete
  34. எனக்கும் பஸ் பயணம் ஒத்துக்குறதில்லை. 40கிமீக்குள்ள தான் பஸ் பயணம்லாம் ஓக்கே. அதுக்கூட ட்ரெய்ன் வசதி இல்லைன்னா மட்டும்தான்.

    ReplyDelete
  35. @ ஸ்ரீராம். said...

    சரிதான்... புத்தக லிங்க்குக்கு நான் எங்கே போவது? ஆர்வமாக நீங்க தேடிப் படிச்சுட்டு, எனக்கும் சொல்விங்கன்னுல்ல நினைச்சேன். ஹி... ஹி... மிக்க நன்றி ஸார்!

    ReplyDelete
  36. @ வே.நடனசபாபதி said...

    தர்க்க ரீதியாக யோசித்து, மர்மத்தை அவிழ்க்கும், கதாசிரியரின் புகழையும் மிஞ்சிய கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸைப் படிக்காமலா? படித்திருக்கிறேன். உங்கள் விருப்பபபடி எழுத முயல்கிறேன். நன்றி ஸார்!

    ReplyDelete
  37. @ திண்டுக்கல் தனபாலன் said...

    சூப்பர் தனபாலன் ஸார்! அவரவர் ஸ்டேஷன் வந்தால் இறங்கிப் போய் விடுகிறோம், இல்லை..! அருமையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  38. @ சி.பி.செந்தில்குமார் said...

    என் நண்பர்களில் பலர் என்னைப் போலவே இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி செந்தில்!

    ReplyDelete
  39. எனது ரயில் பயணத்தை நினைவூட்டிப்போகிறது சார்!
    அருமையான பதிவு!
    நாவலைப்பற்றியும் தெரிந்து கொண்டேன்!

    ReplyDelete
  40. @ Dew Drops said...

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்நத நன்றி!

    ReplyDelete
  41. ஆஹா... எனக்கும் ரயில் பயணம் மிகவும் பிடிக்கும். அப்பா ரயில்வேயில் பணிபுரிந்ததால் அந்தப் பாக்கியம் எனக்கு சிறுவயதில் நிறையவே உண்டு. கரிவிழுந்து கண்கசக்கி நின்றாலும் சன்னலோர இருக்கைக்காக நானும் தம்பியும் போட்டி போடுவதை இப்போது நினைத்தாலும் ஆனந்தமே.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள திரைப்படத்தைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். இன்னும் பல படங்கள் அகதா கிறிஸ்டியின் கதைகளைக் கொண்டவை பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் வெவ்வேறு வேறுபட்டக் களங்களில் மிகவும் ரசிக்கவைத்து எதிர்பாராத திருப்பங்களுடன் திடுக்கிடவும் வைக்கும்.

    பகிர்வுக்கு மிகவும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
  42. @ கீதமஞ்சரி said...

    ஆஹா... நான் குறிப்பிட மறந்த ரயில் அனுபவத்தை நீங்கள சொல்லியிருக்கிறீர்கள். கரி இன்ஜினில் ஓடிய ரயிலில் பயணித்த சுகமான மலரும் நினைவுகள் உங்களிடமும் உண்டா ஃப்ரெண்ட்! என் சின்ன வயசில் இன்ஜினுக்கு அடுத்த கம்பார்ட்மெண்டில் ஜன்னல் பக்கம உட்கார்ந்து வேடிக்கை பார்த்து, கன்னத்தி்ல் ஒரு கங்கு விழுந்து காயம்பட்ட அனுபவமெல்லாம் உண்டு. நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்! மீண்டும் அதை எனக்குத் தந்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  43. அட என்னால் உங்களுக்கு ஒரு பதிவு தேறிற்றா? நல்லது.

    பயணம் என்பது மிகவும் பிடித்த ஒன்று... ஓரிரவில் செல்லக்கூடிய இடங்களுக்கு பஸ் பயணம்....

    தில்லியில் இருந்து தமிழகம் வர ரயில் பயணம்.... ஒவ்வொரு ரயில் பயணமும் பல அனுபவங்கள் தந்து செல்கின்றன.... ரயில் பயணங்கள் பற்றி நான்கைந்து பதிவுகள் எழுதி இருக்கிறேன் முன்னர்... முடிந்தால் படித்துப் பாருங்கள்!!!!

    ReplyDelete
  44. @ வெங்கட் நாகராஜ் said...

    முடிந்தால் என்ன... அவசியம் தேடிப் படித்து விடுகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  45. எனக்கும் ரயில் பயணம் தான் பிடிக்கும். குளிர்சாதன வசதி இல்லாமல் ஸ்லீப்பர் தான் பிடிக்கும்.

    இந்த நாவல் தங்கள் எழுத்தில் இன்னும் சுவாரசியத்தை கூட்டுகிறது சார். கிடைக்கும் போது படிக்கிறேன்....

    நானும் சில பதிவுகளுக்கு முன்னர் தான் பிரயாண அனுபவங்கள் என்கிற தலைப்பில் இரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறேன். முடிந்த போது படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  46. @ கோவை2தில்லி said...

    வெங்கட் ஸார் மற்றும் உங்கள் வலைப்பூக்களுக்கு தாமதமாக வந்து சேர்ந்து கொண்ட விசிறியல்லவா நான். அதனால்தான் எனக்குத் தெரியவில்லை. விரைவில் படித்துவிட்டுத் தெரிவிக்கிறேன். உங்களின் ஆதரவிற்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  47. ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நாவல் இருக்கிறது விரைவில் பதிவிடுகிறேன். உங்கள் மதிப்புரையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தர வேண்டுகிறேன் ஐயா..

    பிறகு அங்கு ஒருவரும் இல்லை..என்னிடம் இல்லை. படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டியதற்கு மிக்க நன்றிகள்.

    இன்னும் இதுபோன்ற அநேக நூல்களுக்கு பதிவு மூலம் ஒரு அறிமுகம் தர வேண்டும் என்று விரும்புகிறேன். கேட்டுக்கொள்கிறேன்..

    அகதா நாவலை பற்றிய சுவாரசியமான பதிவுக்கு நன்றி..

    தமிழ்நேசன்

    ReplyDelete
    Replies
    1. தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே... மிக்க மகிழ்ச்சி + நன்றி.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube