Saturday, December 31, 2011

கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்!

Posted by பால கணேஷ் Saturday, December 31, 2011
ழுத்தாளர் அகஸ்தியன் என்கிற கடுகு அவர்களின் இந்தக் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என் நண்பர், நலம் விரும்பி என்பதுடன், நகைச்சுவை(என்று நம்பி)யாக நான் எழுதும் விஷயங்களுக்கு எனக்கான உந்துசக்தியும் அவரே. http://kadugu-agasthian.blogspot.com என்ற தளத்திற்குச் சென்றீர்களானால் அவரது எழுத்துக் குழந்தைகளை ரசித்து மகிழலாம். அவரது அனுமதியுடன் இக்கதையை உங்களுக்கு வழங்குகிறேன். (புது வருஷத்துல புது மேட்டர்களோட சந்திக்கிறேன்.) உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த...
2012 - புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

         கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்!
                          -   கடுகு -

ன் அருமை மனைவி கமலாவுக்கு உள்ள எத்தனையோ நல்ல வழக்கங்களில் ஒன்று, தினமும் என்னைக் கேட்டு, எனக்கு இஷ்டமான சமையலைச் செய்வது. அதே சமயம் அவளுக்கு இஷ்டமான சமையலாகவும் அது அமைந்து விடும். எப்படி?

நேற்றுக் காலை நடந்த சம்பாஷணையை அப்படியே தருகிறேன். கமலாவின் நோஹௌவை யாவரும் தெரிந்து கொள்ளட்டும்!
  ‘‘ஏன்னா, உங்களைத்தானே, இன்னிக்கு என்ன சமையல் செய்யட்டும்? வீட்டில் கத்தரிக்காய்தான் இருக்குது. கூட்டு செய்யட்டுமா?’’ என்று கேட்டாள்.
   ‘‘கூட்டா கமலா... வேண்டாம். எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு செய்யேன்’’ என்றேன்.
   ‘‘எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்புதானே, செய்துடறேன். ஆனால் ஓண்ணு, அப்புறம் எங்கம்மா செய்யறமாதிரி இல்லைஅப்படி இப்படின்னு ஆடக் கூடாது’’

‘‘வாயைத் திறக்காமல் சாப்பிடறேன்!’’

‘‘இல்லே, இப்படித்தான் சொல்வீங்க, அப்புறம் ஆயிரம் நங்கு நடிப்பீங்க... எண்ணெய்க் குழம்பு சமாசாரமே வேண்டாம்.’’

‘‘அப்படியானால் கத்திரிக்காயைச் சுட்டுப் புளி மசியல் செய்யேன்.’’

‘‘ஐயோ மசக்கையே! கேஸ் அடுப்புலே கத்தரிக்காயைச் சுட முடியுமா? அதற்குக் கரி அடுப்பு வேணும். வருஷத்திலே ஒரு நாள் கத்தரிக்காயைச் சுடுவதற்கு நான் கரி அடுப்பையும் ஒரு மூட்டைக் கரியையும் கட்டிக் காப்பாத்த வேண்டுமா?... உங்க அக்கா சரோஜாதான் இன்னும் கரி அடுப்பை வெச்சுண்டு இருக்கா... ஆயிரம் சம்பாதிச்சாலும் கேஸ் அடுப்பு வாங்க அவளுக்கு மனசு வராது... அக்காகிட்டே சீராடப் போகும் போது தினமும் சுட்டு மசியல் பண்ணிச் சாப்பிட்டு விட்டு வாங்க...’’

‘‘போகட்டும் கமலா, பொடி போட்டுக் கறி பண்ணிடு. அட்டகாசமாய் இருக்கும்.’’

‘‘வீட்டைத் தலைகீழாத் திருப்பினால் கூட ஒரு பிடி தனியா கிடையாது. நானும் நாலு நாளாகத் தனியா வாங்கிண்டு வாங்கோன்னு கத்திண்டு இருக்கேன். தனியா, சேர்ந்தான்னு பேத்தல் சிலேடை ஜோக் அடிச்சுண்டு மசமசன்னு உட்கார்ந்துண்டு இருந்தால் எப்படி பொடி போட்டுக் கறி பண்றது?’’

‘‘இப்போ என்னைக் கடைக்குத் தொரத்தாதே, கமலா... அப்போ, கத்தரிக்காயை வெறுமனே வதக்கி வச்சுடு.’’

‘‘வெறும் வதக்கல்தானே, ஆகா, பண்ணிடறேன். ஆனால் உங்கள் பொண்ணு இருக்காளே, ராங்கிக்காரி! வாயிலே வெக்க மாட்டாள். நறுக்கா இலையிலேருந்து ஒதுக்கிடுவா... இந்தப் பிடிவாதமெல்லாம் அப்படியே உங்கம்மா தான். கல்யாணம் ஆன புதுசுலே இப்படித்-தான் வதக்கலை உங்க அம்மா இலையிலே போட்டுட்-டேன். அப்படியே விஷம் மாதிரி அதை ஒதுக்கி வெச்-சுட்டதும் இல்லாம ஒரு பாட்டுவேற பாடினாளே... எத்தனை வருஷமானாலும் மறக்குமா? அப்போ உங்கம்மா பாடினாள்... இப்போ உங்க பொண்ணு பாடுவா... தாராளமா வதக்கல் பண்றேன். பாட்டைக் கேட்கணும்னு என் தலையிலே எழுதியிருந்தால் அதை எந்த ரப்பராலும் அழிக்க முடியாது.’’

‘‘இதுக்காக ஏன் கண்ணைக் கசக்கறே, கமலா... கத்தரிக்காய் போட்டு மோர்க் குழம்பு பண்ணிவிடு.’’

‘‘ஐயோ... இந்த மனுஷருக்கு வர்ற யோசனையைப் போய் யாரிடம் சொல்வேன்! நேத்துச் சாயங்காலம் உங்க ஆபீஸ் பிரண்ட்ஸை இழுத்துண்டு வந்து காப்பி போடச் சொன் னீங்க... அதனால் நேத்து பால் ஷார்ட்... தயிர் தோய்க்கவே இல்லை. சாப்பிடறதுக்கே மோர், ஒன்ஸ்மோர் தான்! இந்த அழகில் மோர்க் குழம்பு, தயிர்ப் பச்சடி என்று சொல்றீங்க...!’’

‘‘விடு கமலா ரஸவாங்கி பண்ணிடேன்.’’

‘‘கோலி குண்டு சைஸ்லே கத்தரிக்காய் வாங்கிண்டு வந்திருக்கீங்க. நீள கத்தரிக்காயில்தான் பண்ண முடியும். குண்டு கத்தரிக்காயில் பண்ணால் வாயில் வைக்க வழங்-காது. எனக்கென்ன பண்ணிடறேன்...’’

‘‘ரஸவாங்கி வேண்டாம் கமலா. கத்தரிக்காய்க் கூட்டு பண்ணிடு’’

‘‘கத்தரிக்காய் கூட்டா... ஊம், உங்க இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு பண்றேன். உங்களுக்குப் பிடிச்சதைப் பண்றதை விட எனக்கு வேறு என்ன வேலை?’’

இப்படியாக நேற்று காலை என்’ (அதாவது கமலாவின்) இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு செய்தாள் கமலா!

61 comments:

  1. ஆஹா, சூப்பர் நகைச்சுவைக் கதையாயிற்றே அது? மீண்டும் படிக்கத் தந்ததில் சந்தோஷம்!
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    -ரசித்தற்கும், புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி தோழா. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. @ கே. பி. ஜனா... said...

    -நீங்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜனா சார்...

    ReplyDelete
  5. ஹா ஹா
    கடைசியில் அவர்கள் விருப்பப்படி தானா????
    இதுபோல சம்பவங்கள் நினைவில் வைத்துக்கொள்ளக்கொடிய
    அளவுக்கு அழகாக இருக்கும் நண்பரே.
    பொதுவாகவே வீட்டம்மாக்களுக்கு அவங்க செய்ததை சாப்பிட்டு
    குறைகூறாமல் ஒரு முறை நாக்கை சப்புகொட்டினாலே போதும்
    உச்சி குளிர்ந்து விடுவார்கள்.
    உங்க பாணியில் சம்பத்தை அழக்காக சொல்லியிருப்பது அருமை நண்பரே.

    ReplyDelete
  6. பொய் சொல்லாதீங்க.இது உங்க வீட்லதானே நடந்திச்சு.2012 ன் அன்பு வாழ்த்துகள் !

    ReplyDelete
  7. @ மகேந்திரன் said...

    -ஹய்யோ... என் பாணியில் சொல்லிருக்கேனா..? இதை எழுதினவர் கடுகு ஸார் மகேன். நான் எடுத்துப் போட்ருக்கேன். அவ்ளவ்தான். எல்லாப் புகழும் கடுகு ஸாருக்கே... அழகான உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றியும், என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  8. @ ஹேமா said...

    -நீங்க வேற... என் வீட்ல இவ்வளவு உரையாடல்லாம் நடக்காதுங்க ஹேமா... சமையலறை, குடும்பம் நடத்தறது இந்த மாதிரி சின்ன விஷயத்துல நான் முடிவு எடுத்துக்கறேன்... நாட்டுப் பிரச்னைகள்ல நீங்க முடிவெடுத்துக்கங்கன்னு என் மனைவி கல்யாணமானப்பவே சொல்லிட்டா... ஹி... ஹி...

    ReplyDelete
  9. தலைல குட்டுற மாதிரியா எழுதுறீங்க...

    அருமையா தோள்ள தட்டிக்கொடுக்கிற மாதிரி தான் எழுதுறீங்க.. எல்லாருக்குமே பயன் தரும்படி தான் இருக்கு உங்க பகிர்வு....

    படிச்சு பின் கருத்திடுவேன்பா...

    மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

    ReplyDelete
  10. @ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    -வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  11. @ மஞ்சுபாஷிணி said...

    -உங்கள் வருகைக்கும் என்னைத் தோளில் தட்டிக் கொடுத்துப் பாராட்டியதற்கும், புத்தாண்டு வாழ்த்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றிங்க!

    ReplyDelete
  12. கடுகு சிறுத்தாலும் காரம்போகாது அவர் கதை எல்லாம் பலதடவை படிச்சி சிரிப்பேன் கரெக்டா புத்தாண்டுக்கு சிரிக்க சிரிக்க இந்தக்கதை போட்டீங்க கணேஷ்!

    ReplyDelete
  13. இதுபோல கமலாவின் கதைகள் நிறைய படிச்சிருக்கேன் திரும்பவும் படிக்க தந்ததற்கு நன்றி
    இனிய ஆங்கில புத்தாண்டு நாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. ஹா ஹா ஹா ஹா அண்ணே, கிச்சன் கேபினேட்டை அசைக்க முடியாதுண்ணே நாமதான் அசைஞ்சி போகணும், ஒரு கூட்டுக்கு இம்புட்டு விவாதமா...? பாவமே உங்க மொத்த குடும்பத்தையும் இதுல இழுத்து விட்டுட்டாங்களே, அண்ணே நீங்க ரொம்ப பொருமைசாளிதான்...!!!!

    ReplyDelete
  15. நேரம் கிடைக்கும் பொழுது இந்த கதையை படிக்கிறேன்
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  16. :))))) நல்ல நகைச்சுவை. இந்த கதையை எப்பொழுதோ படித்த நினைவிருக்கிறது. மீண்டும் படிக்க வழங்கியதற்கு மிகவும் நன்றி. இது போன்ற கதைகளை படிப்பதே மிகவும் இனிமையான விஷயம். ரசித்து படித்தேன்.
    உங்களுக்கு என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. தேர்ந்தெடுத்து கதையை வழங்கி இருக்கிறீர்கள்..அருமை..

    ReplyDelete
  18. @ ஷைலஜா said...

    -உங்களுக்குத்தான் கடுகு ஸாரின் எழுத்துக்கள் ரொம்பப் பிடிக்குமே... நீங்க ரசிச்சதுல எனக்கு மகிழ்ச்சிக்கா.

    ReplyDelete
  19. Lakshmi said...

    -கமலா கதைகள்தானே எனக்கு ‘சரிதா’ கதைகள் எழுத இன்ஸ்பிரேஷனே! நீங்கள் படிச்சு ரசிச்சதுக்கு என் நன்றியும், இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  20. @ MANO நாஞ்சில் மனோ said...

    -ஆமாங்க நண்பரே... நான் ரொம்பவே பொறுமைசாலிதான்- கல்யாணத்துக்கப்புறம்! கல்யாணம் ஆனதுமே பொறுமை நிறைய வந்திட்டு. ஹி... ஹி...

    ReplyDelete
  21. @ suryajeeva said...

    -பாத்து நாளாச்சு சூர்யஜீவா ஸார்... நலம்தானே? உங்களுக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நிறைய வளத்தையும் நலத்தையும் வழங்கட்டும்னு வாழ்த்தறேன்...

    ReplyDelete
  22. @ மீனாக்ஷி said...

    -பிரபல எழுத்தாளரோட பிரபலமான கதையாச்சே. நிச்சயம் படிச்சிருப்பீங்க. புன்னகையோட புத்தாண்டு ஆரம்பிக்கணும்னுதான் மறுபடி போட்டேன். உங்களுக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. @ மதுமதி said...

    -பிடிச்சிருந்துச்சா கவிஞரே... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  24. ஹா.... ஹா... ஹ... இந்த பொம்மனாட்டிகளே இப்படித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க...

    ReplyDelete
  25. @ மரு.சுந்தர பாண்டியன் said...

    -ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  26. மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  27. @ கவிதை வீதி... // சௌந்தர் // said...

    -உங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் என் நன்றி + உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  28. புத்தாண்டில் நன்கு சிரிக்கவைத்துவிட்டீர்கள்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. @ மாதேவி said...

    -முதல் வருகைன்னு நினைக்கறேன். நல்வரவு. ரசித்ததற்கு நன்றியும், புது நட்புக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  30. கத்திரிக்காய் கூட்டு சூப்பர் அண்ணா

    ReplyDelete
  31. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  32. @ ராஜி said...

    -கூட்டை ரசித்த தங்கைக்கு நன்றியும், இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  33. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    இனிய அருமையான நகைச்சுவை வழியும்
    கதை!
    படிக்க வாய்ப்பு நல்கிய தங்களுக்கும், திருமிகு கதை எழுதிய நண்பருக்கும் நன்றி!

    ReplyDelete
  34. சுவாரசியமாக இருந்தது...

    ReplyDelete
  35. ஓஹோ அப்ப கமலாவின் வீட்டுக் காரரின்
    விருப்பபடித்தான் சமையல் நடந்ததா
    கமலா வீடும் நம்ம வீடு மாதிரித்தானா
    அசத்தலான கதை
    பகிர்வுக்கு நன்றி
    த.ம 9

    ReplyDelete
  36. @ புலவர் சா இராமாநுசம் said...

    -தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி + என் இனிய புததாண்டு வாழ்த்துக்கள் புலவரையா!

    ReplyDelete
  37. @ அகிலா said...

    -முதல் வருகைக்கு நல்வரவு தோழி! சுவாரசியமாக எழுதும் நீங்கள் இதை சுவாரசியம் என்று சொன்னதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  38. @ Ramani said...

    -இதத்தான் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ன்னு சொல்வாங்களோ ரமணி ஸார்... நீங்கள் ரசித்ததற்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  39. ‘கடுகு’ அவர்கள் ‘தாளித்து’ கொடுத்த கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்!' என்ற நகைச்சுவை கதையை கொடுத்து புத்தாண்டை வரவேற்ற, தங்களை கடுகுவின் எண்ணற்ற இரசிகர்களில் ஒருவன் என்ற முறையில் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  40. @ வே.நடனசபாபதி said...

    -தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  41. அது எப்படி நம்ம வீட்டுல நடக்குறதே கடுகு சார் வீட்டுலையும் நடக்குறது :)))))))))))

    ReplyDelete
  42. @ Shakthiprabha said...

    ஹா... ஹா... உங்க வீட்டுல மதுரை ஆட்சிதானா தோழி! ரசித்தற்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  43. மதுரையும் இல்லை சிதம்பரமும் இல்லை... :D ரெண்டும் உண்டு சில நேரம் ரெண்டும் இல்லை...நாங்க எல்லாம் தராசு சரிசம ஹிஹி..

    ஆனா கத்திரிக்கை கூட்டு விஷயத்தில் மட்டும் இப்படி தான் எங்க வீட்டுக் கதையும் :))))))))))

    ReplyDelete
  44. நல்ல நகைச்சுவை கணேஷண்ணா. கத்தரிக்காய் கூட்டு ”கடி”யோடு அசத்தல். எந்நாளும் பொன்னாளாக மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  45. @ Shakthiprabha said...

    ரைட்டு. சரிசமத் தராசை அறிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  46. @ அன்புடன் மலிக்கா said...

    -வாம்மா தங்கச்சி... நகைச்சுவையை ரசித்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் என் இதய நன்றி.

    ReplyDelete
  47. கணேஷ் சார் ,
    கடுகு வெடித்ததில் வயிறு வெடிக்குது.
    இந்த சாமார்த்தியத்தை எல்லாம் நான் இனிமே தான்
    மாமி கிட்ட [ சரி-தா மாமி கிட்ட இல்ல ] இருந்து கத்துக்கணும்.
    நல்ல வேளை, கடுகுக்கு 'வாங்கிபாத்' பிடிக்காதோ ?
    ரசவாங்கி கூகுளில் தேடல் இப்போ.

    ReplyDelete
  48. @ ஸ்ரவாணி said...

    சரி-தா மாமிக்கு கத்தரிக்காயே பிடிக்காது. அதனால கமலா மாமிட்டயே கத்துக்கலாம். ‘வாங்கி பாத்’னு ஒரு ஐட்டம் இருக்குங்களா மேடம்? ஒருவேளை என்னைப் போல கடுகு சாருக்கும் அது தெரிஞ்சிருக்காதோ என்னவோ... என்னை ஊக்கப்படுத்திய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  49. ஆமாங்க சார் ,
    கத்திரிக்காய் சாதம் ....கர்நாடகா spl ...
    இந்நேரம் இதை கூகுள் ல தேடி முடிச்சி
    MTR மசாலா வாங்கி 'வாங்கிபாத் ' செஞ்சு முடிச்சி
    ஒரு கை பாத்திருப்பீங்களே . நான் ரசவாங்கி தேடும் போது
    நீங்க கிராஸ் பண்ணத பாத்தேன் .
    கண்ணுக்கு கண் , பல்லுக்கு பல் ... சோ ,
    நன்றிக்கு நன்றி .....

    ReplyDelete
  50. @ ஸ்ரவாணி said...

    ஹய்யோடா... நான் க்ராஸ் பண்ணினதப் பாத்துட்டிங்களா? நல்ல தெளிவான பார்வைங்க உங்களுக்கு... (உஷாரா இருந்துக்க மக்கா நீயி) உடனே எம்.டி.ஆரைத் தேடினதும் வாஸ்தவம்தான். உங்களுக்கு மீண்டும் மீண்டும் என்... வேறென்ன நன்றிதான்!

    ReplyDelete
  51. ஹா ஹா.. நல்ல கதை.

    ReplyDelete
  52. கேஸ் அடுப்புலே கத்தரிக்காயைச் சுட முடியுமா?

    முடியுமே!

    ReplyDelete
  53. @ ரசிகன் said...

    படித்து, ரசித்துச் சிரித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி பிரதர்!

    ReplyDelete
  54. @ இராஜராஜேஸ்வரி said...

    அட! புதுத் தகவலா சொல்லியிருக்கீங்களே... (கேஸ் அடுப்புல கத்தரிக்காயைச் சுட முடியும்கறது) இந்த விஷயத்தை உடனே கமலா மாமிகிட்ட கன்வே பண்ணிடறேன். ரசிச்சுப் படிச்சுட்டு, இந்த விஷயத்தை பகிர்ந்துக்கிட்டதுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  55. வணக்கம் நண்பரே தங்களது வலைப் பதிவினை வலைசரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன் .நன்றி
    http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_02.html

    ReplyDelete
    Replies
    1. என் தளத்தையும் படித்து அறிமுகப்படுத்தியதில் மிக்க மனமகிழ்வுடன் என் நன்றியை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

      Delete
  56. அருமையான கதையை பகிர்ந்ததுக்கு நன்றி. கேஸ் அடுப்புல கத்திரிக்காயைச் சுடமுடியும்ன்னு கமலா மாமிக்குச் சொல்லிருங்க :-)

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube