Monday, December 5, 2011

சோறு கண்ட மூளி யார்?

Posted by பால கணேஷ் Monday, December 05, 2011
’சேர்ந்தே இருப்பது?’ என்று சி(வன்)வாஜி கேட்க, தருமி நாகேஷ் ‘வறுமையும், புலமையும்’ என்று பளிச் பதிலளிக்கும் திருவிளையாடல் காமெடியை பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சங்க காலத்தில் புலவர்களோடு வறுமையும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாய் இருந்திருக்கிறது. அரசனையோ, பணக்கார வள்ளல்களையோ பாடிப் பரிசில் பெற்றுத்தான் காலத்தை ஓட்ட வேண்டிய சூழலில் இருந்திருக்கிறார்கள். அப்படி நான் படித்த சங்ககாலப் புலவர்கள் இருவரைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

கி.பி. பதிநான்காம் நூற்றாண்டு. சோழ நாட்டில் ஒரு வேளாளர் தம்பதி வாழ்ந்து வந்தனர். சிவபெருமானை வணங்கி வேண்டிய அவர்களுக்கு ஈசன் திருவருளால் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், என்ன துரதிர்ஷ்டம்... ஒரு குழந்தைக்குப் பார்வை கிடையாது. மற்றொரு குழந்தையால் நடக்க இயலாது. இத்தம்பதியர் இது கண்டு மனமுடைந்து வருந்தியபோது, ஒரு பெரியவர், “இவர்கள் ஊனத்தை வென்று, ஞானம் அடைந்து, ஞாயிறு (சூரியன்) போல் உலா வருவார்கள்” என வாழ்த்தினாராம். ஆகவே முதலில் பிறந்தவருக்கு முது சூரியர் என்றும், அடுத்தவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெயரிட்டனர். (இருவரும் ஒன்றாகப் பிறந்தவர்கள் அல்ல, ஒன்றாக வாழ்ந்ததாலேயே இரட்டையர்கள் எனப் பெயர் பெற்றனர் என்றும் வரலாற்றில் கூறப்படுகிறது.)

அந்தப் பெரியவர் வாழ்த்தியது போலவே இருவரும் தமிழ் ஞானம் பெற்று பாடல்கள் இயற்றும் புலமை பெற்றனர். சிவபெருமான் மீது மாறாத பக்தி கொண்டு பல பாடல்களை இயற்றிய இவர்களை ‘இரட்டைப் புலவர்கள்’ என்று மக்கள் குறிப்பிட்டனர். நடக்க இயலாதவரை, பார்வையற்றவர் தோளில் தூக்கி வைத்துக் கொள்ள, அவரது வழிகாட்டலின் பேரில் பார்வையற்றவர் நடந்து செல்ல, தமிழகம் முழுவதும் பல ஊர்களுக்கும் சென்று ஆலய தரிசனம் செய்தும், தமிழ்ப் பற்று மிக்க வள்ளல்களைப் பாடி பரிசு பெற்றும் இருக்கிறார்கள். இவ்விதம் தங்களின் ஊனத்தை வென்றிருக்கிறார்கள். இந்த இரட்டைப் புலவர்கள் வெண்பாப் பாடல்களை நிறையப் பாடி இருக்கிறார்கள். பாடலின் முதல் இரண்டு அடிகளை ஒருவர் பாட, அடுத்த இரண்டு அடிகளை மற்றவர் பாடுவார். இதை வழக்கமாகவே வைத்திருந்தார்கள்.ருமுறை நெடுந்தொலைவு நடந்து வந்ததால் பசி மிகுந்திருக்க, இவர்கள் ஒரு ஊரை அடைந்து அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். அது பூஜை நேரம் என்பதால் பூஜைக்குரிய மணி ஓசைகள் கேட்கத் துவங்க, இருவரும் பூஜை முடிந்ததும் நைவேத்யப் பிரசாதம் கிடைக்கும் என்று மகிழ்வோடு அங்கே அமர்கின்றனர். அது பாடல் பெற்ற ஸ்தலமாக இருந்தாலும், கோயிலுக்கு முறையான வருமானம் இல்லாததால் ஷீணித் திருந்த ஆலயம். அதன் அர்ச்சகர் ஒரு வினோதமான காரியம் செய்தார்.
அடுப்பிலே சாதத்திற்குப் பதிலாக ஒரு செங்கல்லைச் சுட வைத்து, அதனை ஒரு தட்டில் எடுத்து அதன் மீது ஈரத் துணியைப் போர்த்த, அதிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு பொங்கலை தட்டில் வைத்து மூடியது போலக் காட்சியளித்தது அந்தச் செங்கல். அதை சிவனுக்குக் காட்டி, மணிகள், சங்கு ஆகியவை முழங்க பூஜை செய்தார் அர்ச்சகர். இதை நடக்க இயலாதவர் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது பார்வையிழந்த புலவர்,

தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா, நாங்கள் பசித்திருக்க நியாயமா?

-என்று பாட, நடக்க இயலாத புலவர்,

போங்காணும் கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல் சோறு கண்ட மூளி யார் சொல்?

-என்று பாடி முடித்தாராம். பாடலை முழுமையான வடிவத்தில் இப்போது படிக்கலாம்:

தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்க ஞாயமா? -போங்காணும்
கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
சோறுகண்ட மூளியார்? சொல்!

-இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.

-அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.

-புலவர்களுடன் வறுமையும், அத்துடன் நகைச்சுவை உணர்வும் சேர்ந்தே இருந்திருக்கிறது.

-தமிழ் மொழியின் மேல் ஆர்வம் கொண்ட வள்ளல்களும், மன்னர்களும் பலர் இருந்திருக்கிறார்கள்.


மற்றொரு சம்பவம்:

ஒரு சமயம், மதுரைக்குச் சென்று சொக்கநாதரை வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது பொற்றாமரைக்குளத்தில், பார்வை இழந்தவர் படியில் அமர்ந்து, துணி துவைத்துக் கொண்டு இருக்கையில், அவர் கை நழுவி, அந்தத் துணி சென்றுவிட்டது. அதைப் பார்க்க இயலாமல் தண்ணீரில் கைகளால் துணியைத் தேடித் துழாவிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடக்க இயலாதவர்,

'அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ'

என்றார். (அப்பு – தண்ணீர். தண்ணீரில் தினம் தினம் நாம் துணியினை தப்பினால் – தோய்த்தால், நம்மிடமிருந்து அந்தத் துணி தப்பியோட நினைக்காதோ என்கின்றார்). அதற்கு பார்வையற்றவர், தம்மிடமிருந்து துணி போய்விட்டது என்றுணர்ந்து, அதைப் பெரிதாக எண்ணாமல், பதிலுரைக்கின்றார்.

‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ'

(அந்தத் துணி கந்தலாகிவிட்டது. கிழிந்து விட்டது. கிழிந்த துணியிலும் ஆயிரம் ஓட்டைகள். துணி போனால் துயர் போனது என்று எடுத்துக்கொள்வோம்). ஆனாலும் இந்தப் பதிலில் திருப்தி அடைவில்லை முதுசூரியர். மறு கேள்வி கேட்கின்றார்.

'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?'

(கந்தலாகிய துணி என்றாலும் குளிர் தாங்குமாறு உபயோகப் படுத்தலாமே?) இதற்கு இப்படிப் பதில் சொல்கின்றார் இளஞ்சூரியர்:

'எண்ணாதீர், இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'

(கலிங்கம் – துணி. இந்தத் துணி போனால் என்ன, லிங்க ஸ்வரூபமாக விளங்கும் மதுரையில் உறையும் சொக்கநாதரே துணை) என்று பக்தியுடன் பாடுகின்றார்.  இங்கேயும் பக்தியுடன் சேர்ந்து அவர்கள் பெற்றிருந்த நகைச்சுவை உணர்வும் வெளிப்படுகிறது.

இந்த இரட்டைப் புலவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து பின் மரணமடைந்ததுகூட ஒரே நாளில் என்று படித்திருக்கிறேன். (ஒருவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியிலேயேகூட மற்றவர் இறந் திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியதுண்டு) அன்றைய காலத்தின் வாழ்க்கைச் சூழலையும், இன்றிருக்கும் வாழ்க்கை முறையையும் மனதில் சற்று ஓட்டிப் பார்த்தால் எத்தனை விஷயங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதையும், எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறோம் என்பதையும் நன்றாக உணர இயல்கிறது.

44 comments:

 1. மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்! இரட்டைப் புலவர்களின் மற்றைய பாடல்களையும் சுவை படத்தரலாமே?

  ReplyDelete
 2. அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு சிறப்பாக இருக்கு பாஸ்

  ReplyDelete
 3. ஆமாம் தலைவரே..

  சில விஷயங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம்.
  பல விஷயங்களை இழந்திருக்கிறோம்.

  ReplyDelete
 4. வே.நடனசபாபதி said...
  மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்! இரட்டைப் புலவர்களின் மற்றைய பாடல்களையும் சுவை படத்தரலாமே?

  -உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? இன்னும் நிறையப் பாடல்கள் உண்டு. அவ்வப்போது நிச்சயம் வழங்குகிறேன். நன்றி.

  ReplyDelete
 5. K.s.s.Rajh said...
  அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு சிறப்பாக இருக்கு பாஸ்.

  -தமிழ் இலக்கியமாச்சே... ரசிப்பாங்களோன்னு தயங்கிட்டேதான் போட்டேன். நீங்க ரசிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி ராஜ்!

  ReplyDelete
 6. * வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஆமாம் தலைவரே..
  சில விஷயங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம். பல விஷயங்களை இழந்திருக்கிறோம்.

  -கரெக்ட் கருன் சார்! அடுத்த பதிவுல என் மாணவப் பருவத்தைப் பத்திச் சொல்லும் போது இதை இன்னும் விரிவா அலசலாம்னு இருக்கேன். நன்றி!

  ReplyDelete
 7. * வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஆமாம் தலைவரே..
  சில விஷயங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம். பல விஷயங்களை இழந்திருக்கிறோம்.

  -கரெக்ட் கருன் சார்! அடுத்த பதிவுல என் மாணவப் பருவத்தைப் பத்திச் சொல்லும் போது இதை இன்னும் விரிவா அலசலாம்னு இருக்கேன். நன்றி!

  ReplyDelete
 8. தளத்திற்கு என் முதல் வருகை..வித்தியாசமான பதிவை படித்த திருப்தி..

  தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete
 9. அருமையான பதிவு.
  மிகவும் ரசித்துப் படித்தேன்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 10. மதுமதி said...
  தளத்திற்கு என் முதல் வருகை..வித்தியாசமான பதிவை படித்த திருப்தி..
  தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்..

  -தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நிச்சயம் வருகிறேன்...

  ReplyDelete
 11. Rathnavel said...
  அருமையான பதிவு. மிகவும் ரசித்துப் படித்தேன். மிக்க நன்றி.

  -அடடா... நீங்கள் ரசித்துப் படித்ததற்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 12. Rathnavel said...
  அருமையான பதிவு. மிகவும் ரசித்துப் படித்தேன். மிக்க நன்றி.

  -அடடா... நீங்கள் ரசித்துப் படித்ததற்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 13. வித்தியாசமான பதிவை படித்த திருப்தி கணேஷ் சார்...ரசித்துப் படித்தேன்...

  ReplyDelete
 14. ரெவெரி said...
  வித்தியாசமான பதிவை படித்த திருப்தி கணேஷ் சார்...ரசித்துப் படித்தேன்...

  -மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 15. சுவாரஸ்யமாய்ப் படித்தேன்.

  ReplyDelete
 16. ஆச்சர்யமாக உள்ளது,இந்தக் கதையும் பாடலும் முதல் முறை தெரிந்துகொள்கிறேன்.நல்ல பகிர்வு,.

  ReplyDelete
 17. இரட்டைப்புலவர்கள் பற்றிய செய்தி இதுவரை அறிந்திராதது.இந்த இரட்டைப் புலவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து பின் மரணசெய்தி கேட்டு அதிர்ச்சியிலேயேமடைந்ததுகூட ஒரே நாளில் என்று படித்திருக்கிறேன். (ஒருவர் இறந்த கூடய்று எனக்குத் தோன்றியதுண்டு) அன்றைய காலத்தின் வாழ்க்கைச் சூழலையும், இன்றிருக்கும் வாழ்க்கை முறையையும் மனதில் சற்று ஓட்டிப் பார்த்தால் எத்தனை விஷயங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதையும், எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறோம் என்பதையும் நன்றாக உணர இயல்கிறது.மிக உண்மை சகோ.

  ReplyDelete
 18. ஸ்ரீராம். said...
  சுவாரஸ்யமாய்ப் படித்தேன்.

  -மிக்க நன்றி ஸ்ரீராம் சார்...

  ReplyDelete
 19. thirumathi bs sridhar said...
  ஆச்சர்யமாக உள்ளது,இந்தக் கதையும் பாடலும் முதல் முறை தெரிந்துகொள்கிறேன்.நல்ல பகிர்வு,.

  -நீங்கள் ரசித்துப் படித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 20. இரட்டைப் புலவர்கள் பற்றிய அருமையான பகிர்வு.என்றோ படித்தை இன்றி நினைவூட்டி மகிழ்வித்தமைக்கு நன்றி கணேஷ்!

  ReplyDelete
 21. ஸாதிகா said...

  இரட்டைப்புலவர்கள் பற்றிய செய்தி இதுவரை அறிந்திராதது.இந்த இரட்டைப் புலவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து பின் மரணசெய்தி கேட்டு அதிர்ச்சியிலேயேமடைந்ததுகூட ஒரே நாளில் என்று படித்திருக்கிறேன். (ஒருவர் இறந்த கூடய்று எனக்குத் தோன்றியதுண்டு) அன்றைய காலத்தின் வாழ்க்கைச் சூழலையும், இன்றிருக்கும் வாழ்க்கை முறையையும் மனதில் சற்று ஓட்டிப் பார்த்தால் எத்தனை விஷயங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதையும், எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறோம் என்பதையும் நன்றாக உணர இயல்கிறது.மிக உண்மை சகோ.

  -வருகைக்கும் ஊக்கம் தந்த கருத்துக்கும் மிக்க நன்றி சிஸ்!

  ReplyDelete
 22. சென்னை பித்தன் said...
  இரட்டைப் புலவர்கள் பற்றிய அருமையான பகிர்வு.என்றோ படித்தை இன்றி நினைவூட்டி மகிழ்வித்தமைக்கு நன்றி கணேஷ்!

  -பள்ளி நாட்களில் நான் படித்திருக்கிறேன். வேறு என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று தேடியபோது கிடைத்ததை பகிர்ந்தேன். இன்னும் சில நல்ல பாடல்களும் எழுதியுள்ளனர். பின்னர் ஒரு பதிவாகப் பகிர எண்ணியுள்ளேன். நன்றி சார்!

  ReplyDelete
 23. இரட்டைப் புலவர்கள் பற்றிய தகவல்கள் (சில நான் அறிந்திராதவை) மிக பயனுள்ளதாக இருந்தது.

  பாராட்டுக்களூம், நன்றியும்.

  ReplyDelete
 24. சத்ரியன் said...
  இரட்டைப் புலவர்கள் பற்றிய தகவல்கள் (சில நான் அறிந்திராதவை) மிக பயனுள்ளதாக இருந்தது.
  பாராட்டுக்களூம், நன்றியும்.

  -தமிழ்க் கடலில் மூழ்கினால் இன்னும் நிறைய முத்துக்கள் கிடைக்கும் சத்ரியன். முடிந்தபோதெல்லாம் மூழ்குவோம். உங்களுக்கு என் நன்றி!

  ReplyDelete
 25. இரட்டை புலவர்கள் பற்றி அருமையான தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

  //இக்கலிங்கம் போனாலென்
  ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'//

  அருமையான வரிகள்.மனதை கவர்ந்தது பதிவு.
  நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 26. அருமையான பகிர்வு .மிக்க நன்றி
  வாழ்த்துக்கள் ஐயா ..

  ReplyDelete
 27. அருமையான பதிவு

  ReplyDelete
 28. RAMVI said...
  இரட்டை புலவர்கள் பற்றி அருமையான தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
  //இக்கலிங்கம் போனாலென்
  ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'//
  அருமையான வரிகள்.மனதை கவர்ந்தது பதிவு.
  நன்றி பகிர்வுக்கு.

  -உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 29. அம்பாளடியாள் said...
  அருமையான பகிர்வு .மிக்க நன்றி
  வாழ்த்துக்கள் ஐயா ..

  -என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 30. விக்கியுலகம் said...
  அருமையான பதிவு

  -உங்கள் வருகை எனக்கு மகிழ்வு தந்தது. என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 31. ஹும்....வறுமையில வாழ்ந்த அன்றைய சூரியர்களோடு இன்றைய இளஞ்சூரியனையும் முதுசூரியனையும் ஒப்பிட்டுப்பார்க்கிறேன்....

  ReplyDelete
 32. இரட்டைப் புலவர்களின் உடற்குறையை வென்றது தமிழ்ப்புலமை. அவர்கள் பாடிய பாடல்களில் நகைச்சுவையோடு பக்தியும், தமிழ்ச்சுவையும், வாழ்க்கையின் யதார்த்தமும் செறிவாகப் பொதிந்து இன்றும் நம்மை ரசிக்கவைக்கின்றனவே... பகிர்வுக்கு நன்றி கணேஷ் சார்.

  ReplyDelete
 33. சி.பி.செந்தில்குமார் said...
  ஹும்....வறுமையில வாழ்ந்த அன்றைய சூரியர்களோடு இன்றைய இளஞ்சூரியனையும் முதுசூரியனையும் ஒப்பிட்டுப்பார்க்கிறேன்....

  -சூப்பர் செந்தில்! உங்க கமெண்ட்டை மிக ரசித்தேன். நானும் உங்களோட சேர்ந்து பெருமூச்சு விடறேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 34. கீதா said...
  இரட்டைப் புலவர்களின் உடற்குறையை வென்றது தமிழ்ப்புலமை. அவர்கள் பாடிய பாடல்களில் நகைச்சுவையோடு பக்தியும், தமிழ்ச்சுவையும், வாழ்க்கையின் யதார்த்தமும் செறிவாகப் பொதிந்து இன்றும் நம்மை ரசிக்கவைக்கின்றனவே... பகிர்வுக்கு நன்றி கணேஷ் சார்.

  -உங்களின் வருகைக்கும், ரசித்ததற்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 35. வணக்கம் கணேஸ்.இன்றுதான் உங்கள் தளம் வருகிறேன்.தமிழால் நிரம்பியிருக்கிறது.சிலேடைச் சொற்கள் தமிழின் நுட்பமான அறிவைச் சொல்கிறது.வாசிக்க வாசிக்க அற்புதமாயிருக்கிறது.பாராட்டுக்கள் !

  ReplyDelete
 36. ஹேமா said...
  வணக்கம் கணேஸ்.இன்றுதான் உங்கள் தளம் வருகிறேன்.தமிழால் நிரம்பியிருக்கிறது.சிலேடைச் சொற்கள் தமிழின் நுட்பமான அறிவைச் சொல்கிறது.வாசிக்க வாசிக்க அற்புதமாயிருக்கிறது.பாராட்டுக்கள்!

  -முதல் வருகைக்கும், முத்தான கருத்துக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி ஹேமா மேடம்...

  ReplyDelete
 37. இந்த தலை சிறந்த புலவர்களை பற்றி முன்பே கேள்வியுற்றுள்ளேன் ஐயா..

  // 'எண்ணாதீர், இக்கலிங்கம் போனாலென்
  ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'//

  இந்த வரிகளை நான் என்றுமே மறந்தது இல்லை...

  ReplyDelete
 38. தமிழ்கிழம் said...
  இந்த தலை சிறந்த புலவர்களை பற்றி முன்பே கேள்வியுற்றுள்ளேன் ஐயா..
  // 'எண்ணாதீர், இக்கலிங்கம் போனாலென்
  ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'//
  இந்த வரிகளை நான் என்றுமே மறந்தது இல்லை...

  -உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
 39. பல அறிய தகவல்கள்.
  நன்றி சார்!

  ReplyDelete
 40. @ திண்டுக்கல் தனபாலன்

  -உங்கள் வ‌ருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்!

  ReplyDelete
 41. மிக சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற போது, ராஜ கோபுரத்தின் கீழே இருந்த கல்வெட்டு சொன்ன செய்தி; காஞ்சிபுரம் பச்சையப்பன் அவர்கள் ஒரு லட்சம் வராகன் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்து அதிலிருந்து வரும் வட்டிப் பணத்தில் (மாதத்திற்கு இருபது வராகன்) கோவிலின் செலவுகளை செய்யுமாறு பணித்திருக்கிறார். இதிலிருந்து நாம் அறிவது, அன்றைய வட்டி விகிதம் ௦.24 % (ஒரு ஆண்டுக்கு). இன்றைக்கு 12 %. இதன் பெயர் வளர்ச்சி!!!. ஆனால் அன்றிருந்த நிலையான வாழ்க்கை தரம் இன்றில்லை. பணம் துரத்தும் பந்தயத்தில் போதும் என்ற மனதையும் தொலைத்து விட்டோம்.

  எளிமையான, இனிமையான, மகிழ்வான புலவர்கள் / மனிதர்கள். பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 42. @ ரசிகன் said...

  -மிகமிகச் சரியான வார்த்தைகள் ரசிகன் சார்! சின்ன வயதில் பள்ளிப் பாடத்தில் இந்தப் புலவர்களின் பாடலைப் படித்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு தொகுப்பாக மற்ற கவிதைகளைப் படித்தபோது எனக்குத் தோன்றிய உணர்வுகளை என்னைவிட அழகான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள். என் இதய நன்றி!

  ReplyDelete
 43. இலக்கியத்திலிருந்து ஒரு அருமையான
  தகவல் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
  நமக்கெல்லாம் [ எனக்கு ] யாராவது மண்டப்பத்தில் இருந்து
  எழுதிக் கொடுத்தால் தான் உண்டு.

  ReplyDelete
 44. @ ஸ்ரவாணி said...

  இதைப் படித்ததன் மூலம் நீங்கள் விஷயங்கள் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நீங்கள் உங்களைக் குறைத்து மதிப்பிட்டுச் சொல்லிக் கொண்டாலும், நான் உயர்வாகவே மதிக்கிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube