Thursday, August 30, 2012

பதிவர் திருவிழாவில் பி.கே.பி!

Posted by பால கணேஷ் Thursday, August 30, 2012

திவர் திருவிழாவில் திரு.பி.கே.பி. இணைய எழுத்தைப் பற்றியும். முதியோர் பற்றியும் செறிவான உரை நிகழ்த்தினார். அதன் விரிவாக்கம் விழாவைப் பார்க்காதவர்களுக்காக இங்கே. (என் வழக்கத்துக்கு மாறாக நீண்ட பதிவாக இருக்கும. பொறுமையுடன் படியுங்க நண்பர்களே)

மூத்த வலைப்பதிவாளர்களுக்கு மரியாதை, கவியரங்கம்னு இந்த நேரத்துல இந்த விழா இவ்வளவு சுறுசுறுப்பா போயிட்டிருக்கறதே பெரிய விஷயம். முக்கியமான ஒரு குடும்ப விழா இது. வலைப்பதிவர்களின் சங்கமம்ங்கறது இந்த வகையில இதான் முதல் விழான்னு நினைக்கிறேன். இந்த விழாவை அமைத்த அமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய கரகோஷத்தைத் தரலாம் நீங்க. இந்த விழா ஒரு முக்கியமான விழான்னு சொல்றதுக்கு காரணமான மற்றொரு விஷயம் என்னன்னா... துபாய்லருந்து, சிங்கப்பூர்லருந்துல்லாம வந்து கலந்துட்டிருககாங்கன்றது ரொம்ப பாராட்ட வேண்டிய விஷயம். மும்பைலருந்து, கோயமுத்தூர்லருந்து, மதுரைலருந்துல்லாம் வந்திருக்காங்க. பெண்கள் கிட்டத்தட்ட 20, 25 பேர் இருக்காங்கன்னு நினைக்கிறேன். 25 சதவீதம்! இவங்க ஒரு நாள் முழுக்க வலைப் பதிவாளர்களுக்கான விழாவுல வந்து கலந்துக்கிட்டிருக்காங்கன்னா அது விழாவின் வெற்றியாக எடுத்துக்கலாம்.

காலை நிகழ்ச்சிகள் எப்படிப் போச்சுன்னு எனக்குத் தெரியாது. அதுவும் நல்லாவே போச்சுன்னு பாலகணேஷ் சொன்னார். பதிவர்கள் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. அவர் முதல்ல அழைச்சப்ப, எத்தனை மணிக்கு நீங்க வர்றீங்க, பேசிட்டு நீ்ங்க வேணாப் போயிடலாம்னுதான் சொன்னார். ஆனா சபை நாகரீகம்னு ஒண்ணு இருக்கு. என்னைப் பொறுத்தவரை நானே வலைப்பதிவுகள்ல ஆர்வமுள்ள ஒரு ஆர்வலன். நான் அவர்கிட்ட என்ன ‌சொன்னேன்னா, என்னுடைய பகுதி நிகழ்ச்சி ஆரம்பத்துலருந்து கடைசி வரை நான் இருப்பேன்னு சொன்னேன். உங்க பங்கு முடிஞ்சதும் போயிடலாம்னு என் நேரத்துக்கு முக்கியத்துவம் தந்து சொல்லாதீங்க, நானும் ஒரு பார்வையாளனா... பேச்சாளனா இல்லை, பார்வையாளனா முழுக்க இருந்து பாக்கறேன்னு கேட்டுக்கிட்டேன். அதனால ஒரு மூணு மணி நேரம் செலவு பண்ணினது பெரிய விஷயம் இல்ல. சந்தோஷமா எல்லாத்தையும் ரிஸீவ் பண்ணிட்டிருந்தேன்.

ஒவ்வொருவரின் பேச்சிலும் பல தெறிப்புகள்! அவ்வளவு திறமைகள்! இவ்வளவு பேர் கவிதைகள் படிச்சாங்களே... அந்தக் கவிதைகள்ல உள்ள நயம்...எவ்வளவு ஆழம், அழுத்தம், நகைச்சுவை, கிண்டல், பணிவு அனுபவம்! இதையெல்லாம் வலையில பதிவு பண்ணத்தான் போறீங்க. அதுக்கான ஒரு சாம்பிள்தான் இந்த மேடைல காட்டினீங்க. ரொம்ப அருமையா இருந்துச்சு எல்லாரோட கவிதைகளும். அதுலயும் இந்தப் புத்தகத்தை (தென்றலின் கனவு) நான் வெளியிட்டேன்கறதால அதுலருந்து சில பகுதிகளைச் சொல்றதுதான் முறைன்னு நினைக்கிறேன். சசிகலா அவர்களுடைய தென்றலின் கனவு வலையில அவர் பதிவு செய்த கவிதைகளோட தொகுப்புன்னு சொன்னாங்க. நல்ல கவிதைகள் நிறைய இருக்கு. புரட்டினப்ப கண்ல பட்ட சில தெறிப்புகள் மட்டும் இங்க படிச்சுக் காட்டறேன்.

‘கோபம் வரத்தான் செய்கிறது’ ன்னு ஒரு கவிதை. தூங்கி விழித்து/மண்ணில் உருண்டு புரண்டு/ சண்டையிடும் மழலைகளைக் காணும் போதெல்லாம்/ கோபம்வரத்தான் செய்கிறது/ சண்டையே போடாத அக்காவின் மேல்! -அந்த சண்டையே போடாத அக்காவின் மேல்ங்கறதுலதான் ஒரு பன்ச், நல்ல ஒரு ரசனை இருந்தது. அதேபோல ‘அன்பைப் போல’ன்னு ஒரு கவிதை... எவர் தடுப்பினும்/வழியிலேயே நின்றுவிடப் போவதில்லை மழை/ உன்மீதான என் அன்பைப் போல! மழைய நாம எல்லாம் பாத்துக்கிட்டுத்தான் இரு‌க்கோம். அதை காதலோட கம்பைல் பண்ணி... மழை பெய்யறப்ப என்னதான் தடுத்தாலும் நிக்காதுல்ல...  அந்த அன்பைச் சொல்ற தாட் நல்லா இருந்துச்சு.

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்துல எதுவுமே பழைய சட்டை போட்டுட்டிருக்கற புது அம்சம். எதுவுமே பழசோட தொடர்ச்சி இல்லாம இல்ல. முந்தி கையெழுத்துப் பத்திரிகைன்னு ஒண்ணு நடத்தினோம். அப்பல்லாம் பத்திரிகைகள் ரொம்பக் கம்மி. நான் எழுத வந்தப்போ.... 77ல என் முதல் சிறுகதை! 77ல ஒரு நாலு, அஞ்சு பத்திரிகைதான். குமுதம், விகடன், கல்கி, கலைமகள்னு நாலைஞ்சு பத்திரிகைதான். இன்னிக்கு மாதிரி 50, 60ன்னு அந்த அளவுக்குல்லாம் இல்ல. ஸோ, அன்னிக்கு இருந்த எக்கச்சக்கமான எழுத்தாளர்கள்லாம் இந்தப் பத்திரிகைகள்லதான் எழுத முடியும். எல்லாருமே வெகுஜனப் பத்திரிகைகள்ல, பிரபல பத்திரிகைகள்ல எழுத முடியாதில்லையா? அப்ப தன்னுடைய திறமையை, தன்னுடைய படைப்பை, தன் கற்பனை நமைச்சலை வெளிப்படுத்தறதுக்கான ஒரு வழியா அந்தக் காலகட்டத்துல இருந்தது கையெழுத்துப் பத்திரிகை. எட்டு பக்க பேப்பரை எடுத்து கட் பண்ணி, அதுலயே ஒரு கார்ட்டூன், ஜோக்னு பத்திரிகை மாதிரியே ரெண்டு மூணு பேர் எழுதி, அதுக்கு ஒரு எடிட்டர், ஒரு சப்எடிட்டர், அதுக்கு ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னுட்டு அது ஒரு ப்ரைவேட் சர்குலேஷன்- ஒரு 25 பேருக்கு, 50 பேருக்கு. அந்த மாதிரி இருந்தது.

அதனுடைய ஒரு நீட்சி... அதனுடைய மிகப்பெரிய வளர்ச்சியின் ஒரு பகுதிதான் இந்த வலைப்பதிவுகள்! யோசிச்சுப் பாத்தா ஆச்சரியமாக்கூட இருக்கு. ஒரு நூறு வருஷத்துல விஞ்ஞானம் செய்திருக்கற ஒரு தாவல்! பல நூற்றாண்டுகளுக்கு முன்னால வாழ்ந்தவர்கள் இதையெல்லாம் அனுபவிக்காமயே போய்ட்டாங்களேங்கற ஒரு ஆதங்கம்கூட எனக்கு உண்டு. பொன்னியின் செல்வன்ல வந்தியத்தேவன் ஒரு ஓலைய எடுத்துக்கிட்டு ஒரு பாகம் பூரா போயிட்டிருப்பான். குந்தவை தந்த ஓலையக் குடுக்க ரெண்டாவது பாகம் வரை ஓடிட்டிருப்பான். இன்னிக்கு மாதிரி ஒரு ஸ்கைப் கால் இருந்திருந்தா... அருள்மொழிகிட்ட வந்தியத்தேவன் என்ன, குந்தவையே பேசியிருப்பா. அதுக்கு நடுவுல ஒரு தூதுவன் எதுக்கு? நல்லா யோசி்சசுப் பாத்தீங்கன்னா... அவங்க இழந்தையெல்லாம் நாம எவ்வளவு அடைஞ்சிருக்கோம்னு புரியும். நானே அனுபவிச்சிருக்கேன்.

ட்ரங்க கால்! பட்டுக்கோட்டையில எஸ்.டி.டி. வர்றதுக்கு ரொம்பக் காலம் ஆச்சு. ட்ரங்க் கால் புக் பண்ணிதான் பேசணும். போஸ்ட் ஆபீஸ் போய் எழுதிக் குடுக்கணும். ஏற்கனவே எழுதிக் குடுக்க ஆறேழு பேர் வரிசைல நின்னுட்டிருப்பான். ஏழாவது ஆளா, காரைக்குடில இந்த எண்ணுன்னு எழுதிக் குடுத்துட்டு உக்காந்திருக்கணும். அவங்கல்லாம் முடிக்கற வரைக்கும் எப்ப கூப்பிடுவாங்களோன்னு உக்காந்திருக்கணும். காரைக்குடி கால் புக் பண்ணிங்களா, இந்தாங்க பேசுங்கன்னு தந்ததும் ஹலோ அங்க நாராயணன் இருக்காருங்களான்னு கேட்டா, அவர் வெளில போயிருக்காருங்களேன்னு டொக்னு வெச்சுடுவாங்க.அவர் வெளில போயிருக்காருன்னு தெரிஞ்சுக்கறதுக்கு ரெண்டு மணி நேரம் உக்காந்திருக்கணும். அது ஒரு காலகட்டம் அப்படி இருந்திருக்கு. இன்னிக்கு விஞ்ஞானம், எலக்ட்ரானிக் மீடியா தந்திருக்கற வாய்ப்புகள் எவ்வளவு!

இங்க மூத்த பதிவர்கள்ன்னு அறிமுகப்படுத்தி, அவங்களையெல்லாம் கவுரவிச்சாங்களே... ரொம்பப் பெருமையாகவும், நெகிழ்ச்சியாவும் இருந்தது. அவங்கள்ல ஒருத்தர் பேசும்போது சொன்ன மாதிரி, ரிடையராயிட்டோம், வாழ்க்கையின் ஓய்வான ஒரு பகுதி, சும்மா பேப்பர் படிச்சுக்கிட்டு, வாக்கிங் போயிட்டு, வீட்டுக்கு சின்னச் சின்ன வேலை பண்ணிட்டு, பேரன் பேத்திகளைக் கொஞ்சிட்டு இருந்திடலாம்னு இல்லாமல்... இன்றைய இளைஞர்களோட போட்டி போடற விதமா... இன்னும் சொல்லப் போனா இந்த மூத்த பதிவர்கள் இளைஞர்களை விட பத்து மடங்கு பாராட்டப்பட வேண்டியவங்க. ஏன்னா, இளைஞர்கள் அனுபவத்தை இப்பதான் அனுபவிக்க ஆரம்பிச்சிருக்காங்க. சிந்தனையும் கற்பனையும்தான் இவங்க பதிவுல அதிகம் இருக்கும். ஆனா, முதியவர்களோட பதிவுகள்லாம் அனுபவச் சுரங்கங்கள்! அவை கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது. இன்னிக்கு யாரும் உக்காந்து கேக்கறதுக்குத் தயாரா இல்ல. இன்னிக்கு பல வீடுகள்ல வயசானவங்களோட பிரச்சனை என்னன்னா... ஒரு அஞ்சு நிமிஷம் எனக்கு ஒதுக்க மாட்டியா? யாரும் உக்காந்து பேசத் தயாரா இல்ல. ஒண்ணு கம்பெனிக்கு போகணும், வேலைக்குப் போகணும், ஸ்கூலுக்குப் போகணும், மத்த நேரத்துல அவங்களோட ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட், கேம்ஸ்க்கு போகணும், கராத்தே போகணும், தன்னை வளர்த்துக்கப் போகணும்னு எல்லாரும் ஆக்குபைடா இருக்காங்க.

ஸோ, இது இந்த முதியவங்களுக்கு கிடைச்சிருக்கற மிகப் பெரிய வரப்பிரசாதம். நீ வீட்ல கேக்க வேணாம்டா, லட்சம் பேர் வெளில கேக்கறான், போ... என்னுடைய எண்ணங்களை, என்னுடைய அனுபவங்களை படிக்கறதுக்கும், ரசிக்கறதுக்கும், பின்னூட்டம் போடறதுக்கும் நீ இல்ல... அறிமுகம் இல்லாத எவனெவனோ இருக்கான் -அப்படிங்கற நம்பிக்கையை அவங்களுக்குக் குடுத்திருக்கற இடம் இந்த வலையுலகம். அப்படித்தான அதை நான் பாக்கறேன். ரெண்டு மூணு ஜெனரேஷன் தாண்டி வந்தப்புறம் ஐக்யூ லெவல்ங்கறது இன்னிக்கு மாறி இருக்கு. ஒவ்வொரு ஜெனரேஷனுக்கும் அது அதிகரிச்சிட்டேதான் போகுது. ஒரு 20, 30 வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஐக்யூ லெவல் இன்னிக்கு இல்ல. இன்னிக்கு உள்ள ஐ க்யூ லெவல் வேற. திரைப்படம்னு எடுத்துக்கிட்டாக் கூட பத்து வருஷத்துக்கு முன்னாடி படத்துக்கான ட்ரீட்மெண்ட்டுங்கறது வேற, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி‌ வேற, இன்னிக்கு ட்ரீட்மெண்ட் வேற.. இப்படி மாறுது. யாருக்காக தயாரிக்கிறோமோ அந்த ஆடியன்ஸ் மாறுறாங்க. அந்த மாறுதலுக்கேற்றபடி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாத்திக்கிற அப்டேஷன்ங்கறது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்னிக்கு தே‌வைப்படுது.

எங்கம்மால்லாம் செல்போனை தொடறதுக்கே தயங்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு அந்த செல்போனை எப்படி இயக்கணும்னு கத்துக் கொடுத்ததுக்குப் பிறகு யாரையுமே டிபெண்ட் பண்ணாம, கிடைச்ச நேரத்துல மகன்களுடனும், மகள்களுடனும் பேசிட்டிருந்தாங்க. அவங்களோட கடைசிக காலத்துலல்லாம் அந்த செல்போன்ல பேசிட்டே இருந்தாங்க. அப்படி தன்னை நவீனப்படுத்திககறதுக்கு இன்னுமே நிறையப் பேர் தயாரா இல்லை. கம்ப்யூட்டர்ன்னா அது ஏதோ தொட்டா ஷாக் அடிச்சுடும்னு நினைக்கறவங்கல்லாம் இருக்காங்க. வலைப்பதிவர்களாகிய உங்களோட நோக்கம்ங்கறது அவங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தறதா இருக்கணும்னு நினைக்கிறேன். நீங்கள் உங்களுடைய அனுபவங்‌களையும், திறமைகளையும் இதுல வெளிப்படுத்தறதைத் தவிரவும் மத்தவங்களை இதுல ஈடுபடுத்தறதுக்கு என்ன பண்ணப் போறீங்க? அதற்கான சிந்தனைகளை யோசிக்கணும், அதற்கான வழிமுறைகளை யோசிக்கணும். கேன்வாஸிங் ஃபார் திஸ் மீடியா. நான் சொல்றது தனிப்பட்ட முறையில இந்த வலைப்பதிவைப் படிங்க, அந்த வலைப்பதிவைப் படிங்கன்னு நான் சொல்லலை.

வலைப்பதிவுங்கற ஒரு விஷயம் எதிர்காலத்துல ஆளும். இப்ப நாம பேப்பர்லெஸ் சொஸைட்டியை நோக்கித்தான் போயிட்டிருக்கோம். ரயில்வேயில கூட உங்க டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுக்காதீங்க, மொபைல்ல எடுத்துட்டு வாங்க, அது போதும்ங்கறாங்க. ஏன்னா பிரிண்ட் அவுட் எடுககறதை நிறுத்தினீங்கன்னா வருஷத்துக்கு இவ்வளவு பேப்பர் குறையும்கறாங்க. இங்க கூட ஒருத்தர் மொபைல்லதான் எழுதிட்டு வந்து படிச்சாரு. அப்படிதான் போயிட்டிருக்கு. அப்படி பேப்பர்லெஸ் சொஸைட்டில எலக்ட்ரானிக்ஸ்ல கிடைக்கக் கூடிய ஒரு புதிய தளம், அந்த புதிய தளத்தோட முதல் விழாவையே இன்னிக்குதான் ஆரம்பிச்சிருக்கீங்க. இது மூலமா ஒரு நல்ல விஷயத்தை எப்படி பொதுமக்களுக்கு பரப்பப் போறீங்க? ஏன்னா... ஆல்ரெடி ப்ளாக்கர்ஸ்னாலே ஒரு தனி மரியாதை இருந்துட்டிருக்கு.

திரைத் துறையைப் பொறுத்தவரைக்கும் கேபிள் சங்கர் என்ன விமர்சனம் எழுதறாருன்னு எத்தனை பேர் எதிர்பாத்துட்டிருக்காங்க தெரியுமா? ஜாக்கி சேகர் என்ன எழுதறார்னு பாக்கறாங்க. குறிப்பிட்டு பத்து பேரை... ஏன்னா பத்திரிகையில வந்து, அவங்க படம் பார்த்து எழுதறதுக்கே டைமாகும். இவங்க எப்பப் படம் பாக்கறாங்கன்னு தெரியலை. எல்லாப் படத்துக்கும் உடனே விமர்சனம் எழுதிடறாங்க. முந்திக்கறாங்க. இதெல்லாம் எழுதறது ‘என்கிட்ட திறமை இருக்கு. இதைப் பார்’ன்னு காட்டக்கூடிய விஷயம் இல்ல. ‘இது பதிவு, இது ஒரு அனுபவம், இது நான் கேட்டது, இது நான் உணர்ந்தது’ அப்படின்னு அந்தப் பதிவுக்கு கிடைக்கிறது நல்ல ஒரு மேடை.

நாம உடனே படிச்சுடறோம். குமுதத்துக்கோ, விகடனுக்கோ கதை அனுப்பிட்டு, அது ஆறு மாசம் கழிச்சு ஒரு குறிப்போட ‘தங்கள் கதையை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம், தொடர்ந்து எழுதிக் கொண்டிருங்கள்’ன்னு குறிப்போட வரும். அந்த ஸ்லிப்பை பாக்கறதுக்கே சந்தோஷமா இருக்கும்- ஆறு மாசம் கழிச்சு! இது உங்களுக்கு நீங்களே அமைத்துக் கொள்கிற மேடை! உங்களுக்கு நீங்களே எழுதிக் கொள்கிற ஒரு புத்தகம்! அப்படியொரு வாய்ப்பு இந்தக் காலகட்டத்துல கிடைச்சிருக்கு. இனி இந்த வலைப்பதிவுங்கற துறையை இன்னும் பெரிசா கொண்டு சென்று சேர்க்கணும்னு உங்களை கேட்டுக்கறேன். அதற்கான வழிமுறையை யோசிக்கற கூட்டங்களாக அடுத்தடுத்த கூட்டங்கள் இருக்கணும். நிறையப் பேருக்கு இந்த டெக்னிகல் ‘நோ ஹெள’  தெரியாம இருக்கலாம். அவங்களுக்கு ஒரு பயிற்சி கொடுக்கணும். நான் எப்படி ப்ளாக்குக்குள்ள வரணும், புதுசா துவங்கணும்னு நினைக்கறாங்கன்னா, நீங்க அவங்க வீட்டுக்கே போய் சொல்லிக் கொடுக்கலாம். அதற்கு ஒரு கமிட்டி அமைக்கலாம். இதெல்லாம் உங்களை வளர்த்துக்கறதுக்கு ஒரு அடுத்த கட்டமாக எடுத்துக்கணும்னு நான் கேட்டுக்கறேன்.

அதைத் தாண்டி, எல்லா விஷயத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கு. ஒரு அணுகுண்டு கண்டுபிடிச்சா அதுக்கு ஒரு பயன்பாடு ஒரு பக்கம்னா, அணுகுண்டோட அழிவைப் பத்தி சொல்லவே வேண்டியதில்லை. அதுமாதிரி... இதுல உள்ள மைனஸ்ன்னு பாக்கறப்ப, நான் என்ன ஃபீ்ல் பண்றேன்னா... தனி நபரைத் தாக்கறதுக்கான ஒரு களமா தயவுசெய்து இதைப் பயன்படுத்தாதீங்க. இதை அதற்கான ஒரு மேடையாகப் பயன்படுத்தறது அநாகரீகம்னு நான் நினைக்கறேன். நான் சில வலைகள்ல பாத்திருக்கேன். அதுவரைக்கும் நல்ல விஷயங்கள் வந்திருக்கும். ஒரு தனிநபரைக் குறிப்பிட்டு ஒரு நபரை விமர்சனம் பண்றதுக்காகப் பயன்படுத்தறாங்க. படைப்பை விமர்சியுங்கள்... படைப்பாளியை விமர்சிக்காதீர்கள்!  ஏன்னா எந்த ஒரு படைப்பாளியையும் தனி மனுஷனா நீங்க அணுகிப் பார்த்தால் அவன்கிட்ட குற்றம் குறைகள் இருக்கும். கண்ணதாசன் அவருடைய படைப்புகளுக்காக மட்டுமே மதிக்கப்படுகிறார்; தனிப்பட்ட வாழ்க்கையினால அல்ல!

அதுமாதிரி நான் கவனிச்ச இன்னொரு விஷயம் என்னன்னா... ஒரு பத்திரிகைக்கு படைப்பு அனுப்பினீங்கன்னா அங்க எடிட்டர்னு ஒருத்தர் இருக்கார். அந்த எடிட்டர் ஆட்சேபமான ஒரு விஷயத்தை, அன்பார்லிமென்ட்ரியான வார்த்தைகளை எடிட் பண்றதுக்குத்தான் அவர் உக்காந்திருக்கார். அதுதான் அவர் வேலை. ஒரு செய்தி மக்களுக்குப் ப‌ோயச் சேருகிற போது இப்படித்தான் போகணும்னு ஒரு வரைமுறை -சென்சார்ஷிப்- இருக்கு. இங்க சென்சார்ஷிப்ங்கறதை நீங்களே வகுத்துக்கணும். ஏன்னா, இதுக்கு இல்லை. அப்படி இதுக்கு இல்லைங்கறப்ப ஒரு சுய கட்டுப்பாடு, சுய சென்சார்ஷிப் - ஒரு நியாயம் - வேணும். சில தளங்கள்ல அன்பார்லிமென்ட்ரியான வார்த்தைகள் வருது. பெண்கள் எப்படிப் படிக்கறது? சொல்லுங்க... நீங்க இதுக்கு ‘யதார்த்தமா பேசறதைதானே எழுதறேன். யதார்த்தமான நிகழ்வுதானே’ன்னு சப்பைக்கட்டு கட்டாதீங்க. டீசன்ஸி லெவல்ன்னு ஒண்ணு இருக்கு. ‘‘இது என் பக்கம். இங்க என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்’’ங்கற ஒரு அலட்சியப் போக்கு வேண்டாம். கூடிய சீக்கிரத்துல உங்களைப் புறக்கணிச்சுடுவாங்க.  ‘இவர் இப்படி ஒரு வலைப்பதிவு எழுதறார். போய்ப் படி’ன்னு மத்தவங்க சொல்லும்படியாக உங்க வலைப் பக்கங்களை அமைச்சுக்கங்க. அந்த ஒரு பண்பாடு, நாகரீகம் வேணும்.

ஒருவனோட முகத்தைப் பார்த்ததும், அவன் பேச ஆரம்பிச்சதும் எப்படி அவங்க மேல ஒரு மதிப்பீடு வருதோ... அதைப் போல உங்கள் வலைப் பக்கம், உங்களைப் பற்றிய அடையாளம் காட்டுகிற ஒரு விஷயமா இருக்கு. அதை நீங்க மறந்துடக் கூடாது. நீங்க என்ன பதிவு பண்றீங்களோ, அதை வெச்சுத்தான் உங்க மேல மரியாதை இருக்கும். உங்கள் மேல ஒரு மதிப்பு- ஒரு கூட்டத்துல பாக்கறப்ப, ‘இவரா... இப்படி எழுதிட்டிருப்பாரே... இவர்தானே’ அப்படின்னு சந்தோஷத்தோட தேடி வந்து கை குடுக்கற மாதிரி இருக்கணும். ’இவரா... இவரைப் பாக்கவே கூடாது’ன்னு முகத்தைத் திருப்பிட்டுப் போகிற மாதிரி உங்க வலைப்பக்கத்தை அமைக்காதீர்கள்.

அப்புறம்... வலைப்பதிவுகளோட அருமை வெளியில நல்லாப் பரவிட்டிருக்குங்கறதுக்கு ஒரு சாம்பிள் என்னன்னா, இன்னிக்கு எந்தப் பத்திரிகைய எடுத்துக்கிட்டாலும் வலைப்பதிவுகள்லருந்து சில பகுதிகளை எடுத்துப் போடாமல் செய்யவே முடியாது. அந்த மாதிரி ஒரு கட்டத்துக்கு வந்துட்டாங்க. ‘வலையில் சுட்டவை’ ‘வலையில் எடுத்தவை’ன்னு பத்திரிகைல எழுதறவன் குறைஞ்சு போயிட்டான், இங்க எழுத ஆரம்பிச்சுட்டாங்கறதால நல்ல விஷயங்களைத் தேடறதுக்கு இவங்களே (பத்திரிகையாளர்கள்) பாக்க வேண்டியதா இருக்கு. பத்திரிகைகள்ல பாத்தா ஃபேஸ் புக்லருந்து, ட்விட்டர்லருந்து எடுக்கற மேட்டர்கள் வரிசையா இருக்கும். இனி யார் புதுசா பத்திரிகைய ஆரம்பிச்சாலும் ஜோக் போடறது, கவிதை போடறது மாதிரி, வலைப்பதிவுகள்லருந்து திரட்டி எடுத்த மேட்டர்களைப் போடறதும் ஒரு தவிர்க்க முடியாத அம்சமா மாறிடுச்சு. அந்த மாதிரி கவனிக்க வெச்சிருக்கீங்க. அது ஒருவரோட செயல் இல்ல... உங்க அத்தனை பேரோட ஒரு கூட்டு முயற்சி. அத்தனை பேரோட செயல்பாடுகள்தான் இந்தப் பக்கம் திரும்ப வெச்சிருக்கு. லட்சக்கணக்குல விக்கற பத்திரிகைகள்லாம் உங்களைத் தேடி வந்து மேட்டர் எடுத்துப் போடறாங்கன்னா, அது உங்களோட வலிமையை நீங்கள் புரிஞ்சுக்க வேண்டிய நேரம்.

அப்புறம்... இந்த சினிமா விமர்சனம் உடனுக்குடனே பண்ணிடறாங்கன்னு பாராட்டிச் சொன்னேன். அதுல சில விமர்சனங்கள் நடுநிலையா இருக்கறதில்லை. அதில நிறைய ஒரு சார்பு நிலை இருக்கு. சினிமா விமர்சனம்லாம் எல்லாரும் பண்ணியே ஆகணும்கற கட்டாயம்லாம் ஒண்ணும் கிடையாது. அதை பண்ணினாத்தான் கவனிக்கப் படுவோம்கற அவசியமும் கிடையாது. அதனால சினிமா விமர்சனம் எழுதறதுன்னு முடிவு பண்ணினால், சினிமா ரசனையுடன், சினிமாவைத் தெரிந்து எழுதுங்கள். சும்மா நானும் எழுதணும்னு எழுதாதீங்க. பல பதிவுகளை நான் படிச்சுட்டிருக்கேன் தொடர்ந்து படிக்கலைன்னாக் கூட ராண்டமா பாத்துட்டிருக்கேன். அப்படி கவனிச்சதுலதான் கேபிள் சங்கரை ‘ஊஞ்சல்’ இதழ்ல வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தணும்னு கேட்டுக்கிட்டேன். அவரும் 30, 40 பேரை அவங்க தளத்தின் பேரோட, தளத்திலுள்ள சிறப்பான‌ ஹைலைட்ஸைத் தொகுத்து அற்புதமா பண்ணிக் கொடுத்தாரு. அதெல்லாம் ஒரு ரெகக்னிஷன்தான். அதனால... சினிமா விமர்சனம்னு வரும்போது அதை முழுமையாக, ப்ளஸ் மைனஸ்களோட நடுநிலையா விமர்சனம் பண்ணுங்க.

வலையில நல்ல பல தெறிப்புகளை நான் பாக்கறேன். நான் பாத்த தளத்துலருந்து ஒரு குட்டிக் கதைய இங்க ‌சொல்றேன். ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்‌டோர்ஸ்க்கு ஒருத்தன் வர்றான். அவன் ‘அரைகிலோ பட்டர் வேணும்’னு கேக்கறான். விற்பனையாளன் பாத்துட்டு ‘ஒரு கிலோ பட்டர்தான் இருக்கு’ங்கறான். ‘இல்ல, எனக்கு அரைகிலோதான் வேணும்’கறான் அவன். ‘இல்லங்க, ஒரு கிலோ பாக்கெட்டாதான் இருக்கு. அதைப் பிரிக்க முடியாது அரைகிலோ தீர்ந்து போயிட்டதால, ஒரு கிலோ வேணும்னா வாங்கிக்கங்க’ங்கறான். ‘நான் கஸ்டமர். என்னை ஸாடிஸ்பை பண்ண வேண்டியது உன் கடமை. உன் மேனேஜரைக் கேளு. நான் ரெகுலரா வாங்கிட்டிருக்கேன். எனக்கு அரை கிலோதான் வேணும்’னு பிடிவாதம் பிடிக்கறான். சேல்ஸ்மேனுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. நேரா மேனேஜர்கிட்டப் போறான். ’’சார், ஒரு சாவுகிராக்கி, லூசு... ஒரு கிலோ பட்டர் இருக்கு, வாங்கிக்கோன்னா அரை கிலோ பட்டர்தான் வேணும்னு பிடிவாதம் பிடிக்கிறான்’’ அப்படின்னு சொல்லிட்டிருக்கும் போது பாத்தா, அந்த கஸ்டமர் பின்னாடியே வந்து நிக்கிறாரு. அவரைப் பாத்ததும் என்ன பண்றதுன்னு தெரியாம ஒரு செகண்ட் திகைச்சு்ட்டு, ‘‘அப்படிப் பண்றான் ஸார் ஒருத்தன். ஆனா இந்த ஜென்டில்மேன் இவர் அரை கிலோ வாங்கிக்கறேங்கறாரு. இப்ப நான் என்ன பண்ணட்டும்?’’ன்னு சொன்னான். ‘‘அப்புறம் என்னய்யா... இந்த ஜென்டில்மேன்தான் அரைகிலோ வாங்கிக்கறேங்கறாருல்ல... பிரிச்சுக் கொடுத்துடு’’ன்னாரு மேனேஜர்.

பிரிச்சுக் கொடுத்து அனுப்பினதும் அவனைக் கூப்பிடறார் மேனேஜர். ‘‘பரவால்லப்பா... நீ அந்த கஸ்டமரைப் பத்தி கமெண்ட் அடிச்சுட்டே. பின்னாடி அவரைப் பார்த்ததும் சடார்ன்னு பேச்சை அப்படியே மாத்திட்டியே. வெரிகுட்! நீ எந்த ஊர்லருந்து வர்றப்பா?’’ன்னு கேட்டார். ‘‘நான் மெக்ஸிகோலருந்து வர்றேன் ஸார். நிறைய ஃபுட்பால் டீம்களுக்கும், நிறைய ப்ராஸ்டிட்யூட்ஸ்க்கும் புகழ்பெற்ற மெக்ஸிகோவுலருந்து நான் வர்றேன் ஸார்’’ன்னான். மேனேஜர் முகம் சுருஙகிப் போச்சு. ‘‘என்ன ஸார்?’’ன்னான். ‘‘என்னய்யா நினைச்சுட்டிருக்க? என்னையே கிண்டலடிக்கிறியா? என் வொய்ஃப் மெக்ஸிகோவைச் சேர்ந்தவ. தெரியமா?’’ன்னார் கோபமா. அவன் சட்னு, ‘‘அப்படியா ஸார்? எந்த ஃபுட்பால் டீம் அவங்க’’ன்னு கேட்டான். அங்கயும் தன் ஸ்மார்ட்னஸ்ஸைக் காமிச்சான்கறதுதான் விஷயம்.

அந்த அளவுக்கு ஐக்யூ உள்ளவங்கதான் இன்னிக்கு இருக்கறாங்க. அந்த மாதிரி ஐக்யூ இருக்கறவங்க கிட்டதான் நீங்க வலைப்பதிவு எழுதிக்கிட்டிருக்கீங்க. அதனால, யார் படிக்கறாங்கங்கறதை மைண்ட்ல வெச்சுக்கிட்டு, பொறுப்புணர்ச்சியோட தொடர்ந்து செயல்படுங்கள். வாழ்த்துக்கள். என்னை அழைத்ததற்கு நன்றி! வணக்கம்!

Monday, August 27, 2012


பிரமிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகள் அளவு கடந்து போய்விட்டால் வாயில் பேசுவதற்கு வார்த்தைகள் வராது. என்ன சொல்வது என்றே தெரியாமல் திகைத்துத் தடுமாறி நிற்கும் நிலை ஏற்படும். அப்படித்தான்... நேற்று நடந்த பதிவர் திருவிழாவைப் பற்றி சுருக்கமாக சில வார்த்தைகள் எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்தால் மகிழ்வின் உச்சத்தில் வார்த்தைகள் ‌மனதுக்கு வசப்படாமல் விளையாட்டு காட்டுகின்றன. ஏனெனில் மகிழ்ச்சி என்கிற சொல்லை அதன் முப்பரிமாணத்தில் அனுபவிக்கிற வாய்ப்பு நேற்றுக் கிடைத்தது.

பதிவர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அனைவரும் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தாலும், ‘மைக்செட்காரன் வந்து சேரலையா இன்னும்’, ‘ஷீல்டுல்லாம் ரெடியாய்டுச்சாப்பா?’ ‘பேனர் கட்டியாச்சா?’ போன்ற கடைசி நிமிட டென்ஷன்கள் ஓடிக் கொண்டுதான் இருந்தன. காலையில் 9.30க்கு விழா துவங்கும் என்று போட்டிருந்தோம். காலை 8 மணி முதலே பதிவுலக நண்பர்கள் வரத் துவங்கி விட்டனர், நண்பர் ‘வசந்த மண்டபம்’ மகேந்திரன் அவைக்கு முதல் ஆளாக வந்து மகிழ்வைத் தந்தார். அநாயசமாக, ரசனைக்கு விருந்தாய் கவிதை படைக்கும் அந்த நண்பனை நேற்று பார்த்துப் பேசியதில் அளவிட இயலாத மகிழ்ச்சி எனக்கு.

வலையில் நாம் எழுதுவதை வலைப் பதிவர்கள் தவிர, வலைப்பதிவுகளில் எழுதாமலேயே படித்து போன் மற்றும் இ மெயில் மூலம் உற்சாகப்படுத்தும் விசிறிகள் நிறைய உண்டு அனைவருக்கும். அவர்களின் பிரதிநிதி நான் என்பது போல காலை 8 மணிக்கு அரங்கிற்கு வந்து உற்சாகமாய் விழாவில் கலந்து கொண்டார் சமீரா. பலரின் பதிவுகளை படித்து ஊக்குவிப்பவர் என்ற அறிமுகத்தோடு அவரை நான் மேடையில் பேசச் சொன்ன போது “எங்களைல்லாம் ஊக்குவிக்க மாட்டீங்களா மேடம்?“ என்று கிண்டலித்தார் கேபிள் சங்கர். (அம்மாம சமீரா... அவர்ட்டயும் ஊக்கு வித்துடும்மா... ஸாரி. ஊக்குவிசசுடும்மா) அடுத்தடுத்து ஒவ்வொருவராக வரவும் குறித்த நேரத்தில் விழாவை ஆரம்பித்துவிடுவது சுலப சாத்தியமாய்த்தான் இருந்தது. கோவை மற்றும் மதுரையிலிருந்து வந்திருந்த நண்பர்கள் அன்பைப் பரிமாறி மனதிற்கு மகிழ்வையும் நெகிழ்வையும் தந்தார்கள்.

பதிவர்கள் அனைவரும் அரங்கத்திற்குள் நுழைந்ததும் தங்களுக்குள் சுய அறிமுகம் செய்து கொண்டது ஒரு புறம் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. என்றாலும், மேடைக்கு அழைத்து ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொள்ளச் ‌‌சொன்னபோது அனைவரும் கவனத்தை அங்கே திருப்பி, கவனி்த்தது ரொம்பவே மகிழ்வான விஷயம். புலவர் சா.இராமானுசம், திரு.சென்னைப் பித்தன், வலைச்சரம் திரு.சீனா ஆகிய மூவரும் ‌முன்னிலை வகித்து காலை நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்தார்கள். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்ற பிரபல பதிவர்கள், புலவர் சா.இராமானுசம், சென்னைப் பித்தன், கணக்காயன் போன்ற மூத்த பதிவர்கள், சென்ற ஆண்டிலும் இந்த ஆண்டிலும் வலைப் பதிவைத் துவங்கி எழுத ஆரம்பித்திருக்கும் (என்போன்ற) குழந்தைப் பதிவர்கள் என அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டு பேசியது மனதிற்கு இதமாக இருந்தது. விழாவிற்கு வந்திருந்த சேட்டைக்காரன் அனைவருடனும் சகஜமாக அவருக்கே உரித்தான இயல்பான நகைச்சுவையுடன் பேசி மகிழ்ந்ததைப் பார்க்க நிறைவாக இருந்தது.

மதிய உணவிற்கான இடைவேளை அறிவித்ததும், சிறப்பு அழைப்பாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகரை அழைத்துவர அவர் இல்லாம் நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் என் அலைபேசி அலறியது. பேசியவர் புதுச்சேரியில் வசிக்கும் ‘சிந்தனைச் சிறகுகள்’ வலைப்பூவின் சாமுண்டீஸ்வரி பார்த்தசாரதி. நேரலை ஒளிபரப்பு ஏற்பாடு செய்திருந்ததன் மூலம் விழாவைக் கவனித்ததாகவும், சிறப்பாக விழா நடந்து கொண்டிருப்பதில் மகிழ்வைத் தெரிவித்து, விழாவுக்கு வந்திருக்கும் அனைவரும் தன் வாழ்த்துக்ளையும் தெரிவித்தார். அவருடைய பிறந்ததினம் என்பதால் நான் அவரை அகமகிழ்வுடன் வாழ்த்தினேன். நேரலை ஒளிபரப்பின் மூலம் நிறையப் பேர் ஆர்வமாக நம் விழாவை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி மனதில் நிரம்பியிருக்க, சிறப்பு அழைப்பாளருடன் அரங்கிற்குத் திரும்பினேன்.

உணவு இடை‌வேளைக்குப் பின் மதிய நிகழ்ச்சிக்கு 2.30க்கு கூட வேண்டும் என்று அனைவருக்கும் அறிவித்திருந்தோம். நண்பர்கள் அனைவரும் அதை மிகச்சரியாக நிறைவேற்றினார்கள். மீண்டும் அரங்கிற்கு அனைவரும் குன்றாத ஆர்வத்துடன் வந்துவிட, 2.30க்கு சரியாக மதிய நிகழ்வுகளை ஆரம்பிக்க முடிந்தது. மதிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சுரேகா அவர்களின் ஸ்பான்டேனியஸான பேச்சும், இயல்பான ந்கைச்சுவையும் கலந்த பேச்சு அரங்கை களைகட்டச் செய்தது.  மூத்த பதிவர்களை மேடையேற்றி அவர்களை கெளரவித்தது விழாக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. சிறப்பு அழைப்பாளர் பேசும்போது இந்த விஷயத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். கவிதைகள் என்கிற பெயரில் வீரிய விதைகளைத் தூவி கேட்பவரின் மனங்களைப் பறித்துச் சென்றார்கள் நம் பதிவுலகக் கவிஞர்கள். ‘தென்றல்’ சசிகலாவின் ‘தென்றலின் கனவு’ என்ற புத்தகம் இந்த அரங்கில் வெளியிடப்பட்டது அவருக்கு மட்டுமல்ல, பதிவர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.

அதன் பின் அற்புதமான உரையொன்றை நிகழ்த்தினார் சிறப்பு அழைப்பாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர். முதலில் விழாவுக்கு வரும்படி அவரை நான் அழைத்தபோதே, ‘‘பதிவர்கள் சந்திக்கப் போறீங்க. அங்க நான் வந்து எதைப் பத்திப் பேசறது?’’ என்று கேட்டிருந்தார். நான், ‘‘சார், நீங்க எழுத வநத விதத்தையும், .உங்க எழுத்தையும் பத்திப் பேசுங்க. எங்களில் நிறையப் பேர் உங்களின் வாசகர்கள்தான். அதனால ஆர்வமாக் கேப்பாங்க. நீங்க பாக்கற பதிவுலகத்தைப் பத்தியும் உங்க கண்ணோட்டத்துல பேசலாம்’’ என்று சொல்லியிருந்தேன். ஆனால் பி.கே.பி.யோ பதிவுலகின் சக்தியைப் பற்றியும், பதிவர்களாக இருப்பதன் ப்ளஸ் மற்றும் மைனஸ் ஆகிய அனைத்தையும் அலசிய தன் உரையின் மூலம் அனைவருக்கும் பிரமிப்பை அள்ளித் தந்து, அரங்கின் பலத்த கரகோஷத்தைப் பெற்றுக் கொண்டார்.

தலைவர் உரைக்குப்பின் கவிஞர் மதுமதி நன்றியுரைத்து விழா நிகழ்வு நிறைவுற்றதும் சிறப்பு விருந்தினரை வழியனுப்பி வைத்துவிட்டு வெளியூரிலிருந்து வந்திருந்த, கிளம்ப வேண்டிய அவசர(சிய)த்திலிருந்த நட்புகள் விடைபெற்றுச் சென்றுவிட மற்றவர்கள் நிறைய நேரம் மனம்விட்டுப் பேசிவிட்டுப் பிரிந்தோம். இப்படி அனைவரையம் சந்தித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதிலும், திருமதி. வல்லி சிம்ஹன் என்னை அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே அங்கீகரித்து அன்பைப் பொழிந்ததிலும் மகிழ்ச்சி நிரம்பியிருந்த மனது அன்று நடந்த ஒவவொரு நிகழ்வையும் ரீவைண்ட் பண்ணி சந்தோஷித்தபடி இருந்ததால் இரவு விழிகளை உறக்கம் தழுவ வெகுநேரமானது!

இது நாமே நடத்துகிற, நமக்கான விழா என்று மகிழ்வுடன் உணர்வுரீதியாக ஒன்றிணைந்து விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நெகிழ்வுடன், மனமகிழ்வுடன் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

Saturday, August 25, 2012

னிய நட்புகளுக்கு வணக்கம். இன்றைய இரவு விடிந்தால்,,, காலை சென்னையில் தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கி விடும். இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமிருப்பது விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டுமென்ற வேட்கையை அது அதிகரிக்கிறது

இந்தப் பதிவர் சந்திப்பில் இரண்டு விசேஷ அம்சங்கள் என்னவென்றால் இதுவரை முகம் காட்டாமல் ஒரு கேள்விக்குறியாக இருந்த சேட்டைக்காரன் முகம் காட்டி ஆச்சர்யக் குறியாக பரிமளிக்க இருக்கிறார். மற்றொரு வியப்பு... இதுவரை முகம் காட்டாமல் மறைந்திருந்த நல்ல கவிஞர் ஒருவர் கவியரங்கில் கவிதை வாசித்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார், உங்களனைவருக்கும் தெரிந்ததுதான் அவர் பெயர் : கேபிள் சங்கர் (மண்டபத்துக்குள்ள தக்காளி. முட்டைல்லாம் எடுத்துவர அனுமதி இல்லை. சொல்லிப்புட்டேன்)

மண்டபத்திற்கு வரும் வழி : சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள்  அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மேற்கு மாம்பலம்.  இதேபோல் செங்கல்பட்டு, தாம்பரத்திலிருந்து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் 17 என்று எண்ணிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம். இந்த நிறுத்தத்தில் இறங்கி  லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம். தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது)1 மணி நேரம் ஆகலாம்.

பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும்  பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.1 மணி நேரம் ஆகலாம். கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.15 நிமிடங்கள் ஆகும்.

தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். 10 நிமிடங்கள் ஆகும். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள்  25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம்.


பதிவர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பவை :  1. அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும். 2. மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும். 3. பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும். 4. ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.

முக்கிய நிகழ்வுகளாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை கீழே காணலாம்.


கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.தங்கள் வலைப்பக்கத்தில் இருந்த படியே நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.அதற்கான நிரலை எப்படி இணைப்பது என்பதை இங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம்.

வாருங்கள் தோழர்களே.. சென்னையில் சங்கமிப்போம்.

Friday, August 24, 2012

துக்கடா : வெட்டி மன்றங்கள்!

Posted by பால கணேஷ் Friday, August 24, 2012

திவர் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் செம்மையாக நடந்தேற வேண்டுமே என்கிற பயமும் பரபரப்பும் உச்சத்தில் இருக்கிறது. ‘‘ஒரு கல்யாணத்தை நடத்தறது மாதிரி திட்டமிட்டு செயல்படுகிறீர்கள்’’ என்று வல்லிசிம்ஹன் அம்மா பேசும்போது குறிப்பிட்டார்கள். மிகச் சரியான வார்த்தை! கல்யாண மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்வும் ஒரு கல்யாணம் போன்றதுதான்.

கல்யாணத்தை நல்லபடியாகச் செய்து முடித்து விருந்தினர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமே என்கிற ஒரே சிந்தனைதான் இப்போது! கருத்துப் பெட்டியில் கருத்திடும் ஒவ்வொருவருக்கும் தவறாமல் பதிலளிப்பது என்கிற என் வழக்கத்தை கடந்த இரண்டு மூன்று பதிவுகளாகச் செயல்படுத்த இயலாமல் நான் மனக்குறையுடன் தவிப்பதன் காரணமும் அதுவே. நிகழ்ச்சி தினம் நெருங்கி விட்டதால் கச்சேரி (பதிவு) செய்யலாம் என்று உட்கார்ந்தால் குரல் (சிந்தனை) ஒத்துழைக்கவில்லை. எனவே சில துக்கடாக்களைத் தூவி நிரவல் செய்கிறேன் இங்கே.

=======================================

டிகர்திலகம் சிவாஜிகணேசன் எவ்வளவு சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அவர் மிகச் சிறந்த பொய்யர் என்பதை இன்று நான் உணர்ந்தேன். ‘ஸன் லைப்’ தொலைக்காட்சியை இன்று காலையில் வைத்தபோது சிவாஜி இப்படி பாடிக் கொண்டிருந்தார்.

‘நடையா இது நடையா, ஒரு நாடகமன்றோ நடக்குது; இடையா இது இடையா, அது இல்லாதது போல் இருக்குது’

யாரைப் பார்த்துப் பாடினார்? அழகான வட்ட முகத்தையும், பூசணிக்காயையொத்த இடையையும் கொண்டிருந்த தேவிகாவைப் பார்த்து! இப்போது சொல்லுங்கள்... சிவாஜி பச்சைப் பொய்யரா இல்லையா? ஹி... ஹி...

=======================================

‘தனக்கு மிஞ்சித்தான் தானம்’ என்பதற்கு நான் ஒரு புது விளக்கம் கொடுக்கிறேன். எது உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமோ அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் இங்கே ‘தனக்கு’ என்று சொல்லியிருக்கிறார்கள். 

 தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து அதை தர்மத்துக்குச் செலவழிப்பதுதான் ‘தனக்கு மிஞ்சி தானம்’. நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாக இருந்தாலும், தானம் பண்ணும்படியாக செலவைக் கட்டுப்படுத்தி மிஞ்சும்படிப் பண்ண வேண்டும்.
                                                                   -ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்

=======================================
ட்டிமன்றங்கள் என்கிற விஷயங்களின் மீது எனக்குப் பெரிய மரியாதை கிடையாது. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் குன்றக்குடி அடிகளார், வாரியார் போன்றவர்கள் நடத்தியபோது கருத்துச் செறிவுடன், வாதங்களும் எதிர் வாதங்களுமாக ரசிக்க வைக்கும் பட்டிமன்றங்கள் நிறைய இருந்தன. சாலமன் பாப்பையா நடத்திய வரையில் இருந்த அந்த நிலைமை மாறி, இன்றைக்கு துணுக்குத் தோரணங்களைத் தொங்க விடும் வெற்று அலங்கார மண்டபங்களாக மாறிவிட்டன பட்டிமன்றங்கள்.

நான்கைந்து ஜோக்குகள், எதிரணியினரின் தனிப்பட்ட விஷயத்தைக் கூட கேலியாக மேடையில் பேசுதல் (வீட்ல பூரிக்கட்டையால அடி வாங்கினவருங்க இவரு) என்றெல்லாம் அவற்றின் தரம் இறங்கி, இன்றைக்கு ‘இடை ஆட்டுவதில் சிறந்தவர் அனுஷ்காவா, ஹன்ஸிகாவா’, ‘பதிவர்களில் சிறந்தவர் ஜாக்கி சேகரா, கேபிள் சங்கரா’ என்றெல்லாம் தலைப்பு வைத்து நடத்தப்படும் ஒரு நிலையை அடைந்து விட்டன. ஹோட்டலின் மெனு மாதிரி ஏதாவது விசேஷ தினங்கள் என்றால் ஒன்றரை மணி நேரத்தை விளம்பரங்களுடன் ஒப்பேற்ற பட்டிமன்றங்கள் என்பவை அத்தியாவசியமாகி விட்டன ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும். நான் இவற்றைப் பார்த்து நேரத்தை வீணாக்காமல் வெளியேறி விடுவேன். உங்களின் எண்ணம் இவ்விஷயத்தில் எப்படி?



Wednesday, August 22, 2012

சென்னையை கலக்கப் போகிறவர்கள்

Posted by பால கணேஷ் Wednesday, August 22, 2012
ணக்கம் நண்பர்களே...

நாம் அனைவரும் ஒன்றிணையும் பதிவர் சந்திப்பு தினம் வெகு அருகில் வந்து விட்டது. இங்கே விழாவில் கலந்து கொண்டு கலக்க இருக்கு்ம் நம் வலைத்தள உறவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளோம். இவர்கள் தவிர மற்றவர்களுக்கும் கலந்து கொள்ளவும் கவிதை பாடவும் விருப்பம் இருப்பின் நாளை மாலைக்குள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தும்படி வேண்டுகிறோம். சரியான முறையில் ஏற்பாடுகள் செய்ய அது மிக உறுதுணையாக இருக்கும்.


யகுளம் கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
 

ரேகா ராகவன்,சென்னை
 கேபிள் சங்கர்,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்
னை அகரன்(பெரியார் தளம்) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை  
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை 
மென்பொருள்பிரபு,சென்னை 
அமைதி அப்பா,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
சைத அஜீஸ்,துபாய் 
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 


மூத்த பதிவர்கள்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர் 
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
கணக்காயர்,சென்னை  

கவியரங்கில் பங்குபெறுவோர் 

சசிகலா(தென்றல்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
கணக்காயர்,சென்னை  

எங்களைத் தொடர்பு கொள்ள...

மதுமதி - 9894124021
ஜெயக்குமார் - 9094969686
பால கணேஷ் - 7305836166
மெட்ராஸ்பவன் - 9841611301

மின்னஞ்சல் முகவரி:

kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube