Sunday, April 22, 2018

நினைவுக் குறிப்பிலிருந்து....

Posted by பால கணேஷ் Sunday, April 22, 2018
மாத நாவல்கள் - 1

1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி சானல்களும், கைபேசிகளும் நேரத்தைப் பிடுங்கிக் கொள்ளாத அந்த நாளில் அந்தத் தொடர்கதைகளைப் படித்து பைண்ட் செய்து வீட்டில் வைத்துக் கொள்வது வழக்கம். பின்னர் பதிப்பகங்களின் வெளியீடுகளாக வரும் அந்தக் கதைகளையும் சிலர் வாங்கித் தங்கள் வீட்டில் சேர்த்து வைப்பதுண்டு. ஆனாலும் பதிப்பகப் புத்தகங்கள் விலை அதிகம் என்று இருந்த காரணத்தால் (இன்றைய நம் விலைவாசியில், பதிப்பகப் புத்தகங்களின் தூக்கலான விலைக்கு நாம் பழகிவிட்ட நிலையில் அந்தப் புத்தகங்களின் தொகை நமக்கு அற்பமாகத்தான் தோன்றும்.) பலரால் வாங்க இயலாத நிலை இருந்தது.

அப்படிப் பதிப்பகப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்ள இயலாதவர்களின் மனக்குறையைப் போக்குவதற்கு அன்றையப் பதிப்பாளர்கள் வழிவகை செய்திருந்தார்கள். பிரபலமான நூல்களை உயர்தரத்தில் வெளியிடும் அதேசமயம், அவற்றை சற்றே தரமிறங்கிய காகிதங்களில் அச்சிட்டு மலிவுப் பதிப்பு என்றும் வெளியிடுவார்கள். புத்தகத்தின் விலையில் ஏறத்தாழ பாதி விலைக்கும் குறைவாகத்தான் இந்த மலிவுப் பதிப்புகள் இருக்கும். நுங்கம்பாக்கம் ’மங்கள நூலகம்’ நிறுவனம் வெளியிட்ட கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, எஸ்ஏபியின் ‘காதலெனும் தீவினிலே’, ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, தியாகராயநகர் அருணா நிலையம் வெளியிடட்ட ‘அகநானூறு’, ‘புறநானூறு’ உள்ளிட்ட பல நூல்களின் மலிவுப் பதிப்புகளை நான் படித்திருக்கிறேன். அவற்றில் சிலவற்றின் பிரதிகள் இன்றும் என்னிடம் உண்டு.

அப்போதுதான் அறிமுகமானது ‘ராணிமுத்து’ மாதநாவல் இதழ். (வருடம் 1967 என்பதாக நினைவு.) சிறந்த படைப்பாளர்களின் புகழ்பெற்ற படைப்புகளைத் துளியும் சுருக்காமல் அப்படியே மாதம் ஒரு நாவலாகத் தருவது என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது. நியூஸ் ப்ரிண்ட் என்கிற சாணித்தாளில்தான் அச்சிடப்படும். விலை ஒரு ரூபாய்தான். அந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் அடுத்து வரவிருக்கும் நாவல் பற்றிய அறிவிப்பிலேயே தெளிவாகச் சொல்லியிருப்பார்கள். ‘ரூ.5 மதிப்புள்ள இந்த நாவல் உங்களுக்கு ரூ.1க்குக் கிடைக்கும்’, ‘ரூ.3 மதிப்புள்ள இந்த நாவல் உங்களுக்கு ரூ.1 க்குக் கிடைக்கும்’ என்று. பக்க வரையறை கிடையாது. ஒரு புத்தகம் 270 பக்கம் இருக்கும், மற்றொன்று 175 பக்கம் அல்லது 126 பக்கம்கூட இருக்கலாம்.

பேப்பர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்தைப் படித்து ரசிக்க விரும்பிய வாசகர்களுக்கு மிகச் சௌகரியமான இதழாக அமைந்தது. நல்ல விற்பனையையும் பெற்றது. முதல் இதழாக அகிலன் எழுதிய ‘பொன்மலர்’ நாவலை வெளியிட்டார்கள். இரண்டாவதாக அறிஞர் அண்ணா எழுதிய ‘பார்வதி பி.ஏ.’ வெளியானது. தொடர்ந்து, பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘மாமியார்’, மு.வ. எழுதிய ‘அந்த நாள்’, கலைஞர் கருணாநிதியின் ‘வெள்ளிக்கிழமை’, ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’, சாண்டில்யனின் ‘ஜீவபூமி’, மாயாவியின் ‘வாடாமலர்’ லக்ஷ்மியின் ‘காஞ்சனையின் கனவு’, ரா.கி.ரங்கராஜனின் ‘ஒரே வழி’, தமிழ்வாணனின் ‘பாலைவனத்தில் பத்து நாட்கள்’ ...இப்படி கணக்கற்ற க்ளாஸிக் நாவல்கள் எளிமையான விலையில் கிடைத்தன.

பின்னாளில் க்ளாஸிக்குகளைக் கைவிட்டு புதிதாக எழுத்தாளர்களிடம் நாவல் வாங்கி வெளியிடப்பட்டது ‘ராணிமுத்து’வில். அப்போதும் 100க்குக் குறையாத பக்கங்கள் கொண்டதாக, எழுதுபவர்களுக்கு நிறைய ஸ்பேஸ் தரும் இதழாகவே இருந்தது. இப்போதைய ‘ராணிமுத்து’தான் அளவில் இளைத்து இன்றைய ‘ஜீரோ சைஸ்’ பெண்களைப் போல மிக ஒல்லியாகக் காட்சி தருகிறது.

தவிர ‘ராணிமுத்து’வுக்கு ஓராண்டு சந்தா கட்டினால் ஏதாவது ஒரு க்ளாஸிக்கை இலவசமாக அனுப்பித் தருவார்கள் என்றொரு ஸ்கீமும் இருந்தது. இன்னொரு சிறப்பம்சம், ஆரம்பம் முதலே ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் கலர்ஃபுல்லான அட்டைப்படங்களும், உள்ளே நான்கைந்து கறுப்பு வெள்ளைப் படங்களும் தாங்கித்தான் வெளிவரும். இப்போது அட்டைப்படம் திரை நட்சத்திரங்களைத் தாங்கி வந்தாலும், இன்றளவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உள் படங்கள் அதே ‘ஜெ’தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார் என்பது ‘ஜே’ போட்டுப் பாராட்ட வேண்டிய விஷயம். சாண்டில்யனின் ‘ஜீவபூமி’ அந்நாளில் திரைப்படமாக்கத் திட்டமிருந்ததால் அட்டைப்பட ஓவியத்தில் நடிகர்திலகம், பத்மியினியின் சாயலில் சாண்டில்யனின் நாயக, நாயகியை அவர் வரைந்திருந்தது இன்றும் நினைவில் பசுமையாக.

என் கல்லூரி நாட்களில் பழைய புத்தகக் கடைகளில் வாங்கித்தான் பல க்ளாசிக் நாவல்களை, குறிப்பாக சாண்டில்யனின் நாவல்களைப் படித்து ரசித்தேன். காலப் போக்கில் இரவல் வாங்கியவர்களும், வெள்ளமும் சாப்பிட்டது போக மிகச்சில பிரதிகளே நினைவுக்காக இப்போது என்னிடம் தங்கியிருக்கின்றன.

ராணிமுத்துவைத் தொடர்ந்து அதே காலகட்டத்தில் வேறு சில மாத நாவல்களும் துவங்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பல உண்டு. 

ட்யூரோசெல் பேட்டரி விளம்பரத்தில் வரும் முயல்களைப் போல அந்த மாதநாவல்களெல்லாம் காலப்போக்கில் நின்றுவிட்டன என்றாலும், ஜெயிக்கிற முயலாக ராணிமுத்து இன்றும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மற்ற மாதநாவல்களைப் பற்றி...


சிறிது இடைவெளி விட்டு... தொடரலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.

25 comments:

 1. வாவ்.... அப்பா நூலகத்திலிருந்து கொண்டு வந்த சில ராணிமுத்து நாவல்களையும் எதிர் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த நாவல்களையும் படித்ததுண்டு. ராணி முத்து இப்பவும் இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி.

  மற்ற மாத நாவல்கள் பற்றியும் சொல்லுங்கள்...

  ReplyDelete
 2. உங்களுடைய நினைவுக் குறிப்புகள், அந்நாளைய ராணிமுத்து வாசகராக நான் இருந்த நாட்களை நினைவு படுத்தி விட்டன. மாதம் ஒரு முத்து என்று, ஒரு ரூபாய்க்கு ஒரு நாவலை ராணிமுத்து வெளியிட்டது. மேலே நீங்கள் குறிப்பிட்ட அனைத்து ராணிமுத்து நாவல்களையும் காசு கொடுத்து வாங்கி படித்து இருக்கிறேன். நான் சேர்த்து வைத்து இருந்த ராணிமுத்து நாவல்கள் அனைத்தும் இரவல் கொடுத்தும், 1977 இல் வந்த திருச்சிக்கு வந்த வெள்ளத்திலும் போய்விட்டன.

  ReplyDelete
 3. வாசகர்களின் பொற்காலம் அது.

  ReplyDelete
 4. மாமியார்...
  பார், பார், பட்டணம் பார்...
  -இந்த புதினங்கள் படித்த ஞாபகம் இருக்கின்றது...

  தொடருங்கள்...

  ReplyDelete
 5. மாமியார்...
  பார், பார், பட்டணம் பார்...
  -இந்த புதினங்கள் படித்த ஞாபகம் இருக்கின்றது...

  தொடருங்கள்...

  ReplyDelete
 6. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ்US இல் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  https://www.tamilus.com

  – தமிழ்US

  ReplyDelete
 7. ஜெ.யின் ஓவியங்களை (1975-79)கல்லூரிக்காலம் முதல் ரசித்து வருகிறேன்.

  ReplyDelete
 8. அண்ணா இது உங்களின் முத்திரை பதிக்கும் பதிவு
  வாழ்த்துகள்

  ReplyDelete
 9. ராணி முத்துவில் வழுவழுப்பானது எது முட்டை/மொட்டை என்று புதிர்கள் வேறு வரும் இல்லையா?
  மணியனின் 'தேன் சிந்தும் மலர்', அநுத்தமாவின் 'கேட்ட வரம்' என்னும் கதைகளை படித்த ஞாபகம் இருக்கிறது. அதன் பிறகு மாலை மதியில் கணிசமாக நாவல்கள் படித்திருக்கிறேன்.

  ReplyDelete
 10. எனது பள்ளிப்பருவத்தில் 'ராணிமுத்து'வில் அட்டைப்படமாக வரும் பெண்களின் சில அழகிய அங்க அமைப்புகளைப் பார்த்து கிளுகிளுப்படைந்தவர்களில் உங்களைப்போலவே நானும் அடக்கம் என்று பணிவோடு தெரிவிக்கிறேன்.

  -இராய செல்லப்பா சென்னை

  ReplyDelete
 11. நா. நாகராஜன்June 4, 2018 at 9:14 PM

  பானுமதி அவர்களின் மாமியார் படித்து சிரித்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 12. அந்த நேரத்தில் லெண்டிங் லைப்ரரி
  நிறையப்பேரை இலக்கியம் படிக்க செய்தது/

  ReplyDelete
 13. ராணி முத்து தொடங்கிய வருடம் 1969. http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4497:-279-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

  ReplyDelete
 14. அருமையான கலெக்‌ஷன் பாலா ! தொடருங்கள்.

  ReplyDelete
 15. EverGreen Moments

  https://www.tamilinfotek.com/

  ReplyDelete
 16. //‘ஜீவபூமி’ அந்நாளில் திரைப்படமாக்கத் திட்டமிருந்ததால் அட்டைப்பட ஓவியத்தில் நடிகர்திலகம், பத்மியினியின் சாயலில் சாண்டில்யனின் நாயக, நாயகியை அவர் வரைந்திருந்தது இன்றும் நினைவில் பசுமையாக.// பத்மினி அல்ல; சரோஜாதேவி. அக்காலகட்டத்தில் சிவாஜி & சரோஜாதேவி நடிப்பில் ஜீவபூமி திரைப்படமாக வெளிவருவதாக விளம்பரங்கள் கூட வெளியாகியிருந்தன. அவற்றிலொரு காட்சியை அடிப்படையாகக்கொண்டுதான் ஓவியர் ஜெயராஜ் அந்த அட்டைப்படத்தை வரைந்திருந்தார்.

  ReplyDelete
 17. ராணிமுத்துவில் முன்பு வெளிவந்த "இன்னும் ஒரு தாஜ்மகால்" என்ற நாவல் பற்றி யாருக்காவது தெரியுமா? அந்நாவல் யாரிடமாவது உள்ளதா?

  ReplyDelete
 18. மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
  தமிழ் வயதுவந்தோர் கதை

  ReplyDelete
 19. குரும்பூர் குப்புசாமியின் 'பார் பார் பட்டணம் பார், ஏ .கே. பட்டுசாமி கான்ஸ்டபிள் கந்தசாமி புத்தகம் பகிரவும்.என்னிடம் இல்லை

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube