Monday, April 16, 2012

லகப் பொதுமறை என்றும் தமிழ்மறை என்று பலவாறாக தமிழர்களால் போற்றிக் கொண்டாடப்படும் திருக்குறளில் திருவள்ளுவர் இயற்றிய குறளொன்று...

யான் நோக்குஙகால் நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் (குறள் 1094)

‘‘நீ என்னை நேருக்கு நேராகப் பார்ப்பதாக இல்லையே. நான் உன்னைப் பார்த்தால் நீயோ மண்ணைப் பார்க்கிறாய். நான் ஆகாயத்தைப் பார்த்தால் அப்போது என்னைப் பார்ககிறாயே’ என்பது இந்தக் குறளின் பொருள். ‘வாழ்க்கைப் படகு’ங்கிற படத்துல கவிஞர் இதையே...

‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே...
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே...’’

என்று அழகாக குறளின் சாரத்தை திரைப்பாடலில் இறக்கி இருந்தார். ‌அந்தப் பொல்லாத கவிஞர் இதை மட்டுமா செய்தார்? ‘குறுந்தொகை’ நூலில் பதுமனார் என்ற புலவர் பாடியுள்ள இந்தப் பாடலில்...

நள்ளென்றன்றே யாமம், சொல் அவிந்து
இனிது அடங்கினரே மக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சா தானே

தலைவன் பொருள் தேடச் சென்றதால் தனியே இருக்கும் தலைவி, ‘‘இதோ ஊர் முழுவதும் உறங்குகிறது. இரவுப்‌ பொழுதும் (நள்ளென்று எந்த ஒலியுமற்று) உறங்குகிறது. அனைத்து உயிர்களும் இனிமையாகத் துயில்கின்றன. இந்த உலகில் தூங்காதிருப்பவள் நான் ஒருத்தி மட்டுமே...’’ என்று பாடுவதாகப் பொருள். இந்தப் பாடலின் கருத்தைச் சாறு பிழிந்து,

பூ உறங்குது, பொழுதும் உறங்குது
நான் உறங்கவில்லை நிலவே...
கானுறங்குது காற்றும் உறங்குது
கண்ணுறங்கவில்லை...

என்று ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படப் பாடலில் கொடுத்திருந்தார். சீவக சிந்தாமணியில் ஒரு பாடல் வரும :

சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலவார்
செல்வமே பேநால்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காயத்தவே

‘‘நற்கல்வி கற்ற சான்றோர்கள் நன்கு விளைந்த நெற்கதிரைப் போல தலைசாய்நது அடக்கமாக இருப்பார்கள். அதிலும் பச்சைப் பாம்பு கரு தாங்கியது போல சூலுற்று நெற்கதிராக வெளிவந்து கற்றவர் போலத் தலைசாய்ந்து இருக்கிறது’’ என்பது பாடலின் பொருள். இந்தப் பாடலின் சாற்றைப் பிழிந்து...

தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு - அதுபோல்
அறிவு .உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது ரோட்டிலே

என்று ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் ‘மனுஷனை மனுஷன் சாப்பிடறான்டா’ என்ற திரைப்பாடலில் எழுதினார் கவிஞர். குறுந்தெகையில் பெண்ணின் ஏக்க உணர்வாக வரும் ஒரு பாடல்...

யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயோடு கானலகத்தே
துறைவன் நம் ஊரானே
மறை அவர்ஆகி மன்றத்தஃதே

‘காதலனே, நானோ இந்தக் கடற்கரையில் இருக்கிறேன். நீயோ கடல்மேல் சென்றுள்ளாய். என் மனமோ நாம் சந்தித்த கடற்கரைச் சோலையிலேயே இருக்கிறது. நம் காதலைப் பற்றிய செய்தியோ இந்த ஊர் முழுவதும் பரவி உள்ளதே’ என்று வருந்திப் பாடுகிறாள் தலைவி. இந்தப் பாடலினை அப்படியே உருமாற்றி...

என்னை எடுத்து தன்னைக் கொடுத்து
போனவன் போனான்டி - தன்னைக் கொடுத்து
என்னை எடுக்க வந்தாலும் வருவான்டி...
போனவன் போனான்டி

என்று ‘படகோட்டி’ படத்தின் பாடலில் அழகுறத் தந்திருந்தார் கவிஞர்.

ப்போது எதற்கு இந்த திரைப் பாடல்களின் ஆராய்ச்சி என்று நினைக்கிறீர்கள், இல்லையா... காரணம் இருக்கிறது. சென்ற வாரம் பேருந்தில் நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரில் ஒருவர் தன் ஐந்து வயதுக் குழந்தையை தோளில் சுமந்தபடி நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை அருகிலுளளவர்களைப் பார்த்து சிரித்தது, பேசியது. பின் ‘வொய் திஸ் கொலை வெறிடி’ என்று தமிங்கிலீஷில் பாடியது. 

திடுக்கிட்டுப் போன எனக்கு, சங்ககாலப் பாடல்களை திரை இசையுடன் கலந்து கொடுத்த அந்த மகத்தான கவிஞர்களின் நினைவு வந்தது. இன்றைய திரை இசை இருக்கும் ஸ்டைலில் இப்படி சங்கப் பாடல்களின் சாறைக் கலந்து கொடுக்க வாய்ப்பு இல்லா விட்டாலும், நல்ல தமிழிலாவது எழுதித் தொலைக்கலாமே... ஏன் இப்படி ரணகொடூரமான தமிங்கிலீஷில் எழுதி வதைக்க வேண்டும், என்ற வருத்தம்தான் என்னுள். (உங்களைத் தவிர) யாரிடம் சொல்லி அழ...?

இதுபோன்ற பாடல்களைக் கேட்டு வளரும் பிற்காலத் தலைமுறைக்கு ‘நேத்து ராத்திரி யம்மா...’ என்ற போன தலைமுறைக் குத்துப்பாடல்கூட இலக்கியமாகத் தோன்றுமோ என்னமோ... ஒண்ணும் சொல்றதுக்கில்ல...!

76 comments:

  1. அந்த காலத்து பாடல்கள்
    உணர்வுமிக்க அர்த்தமுள்ளதாகவும் இருந்தது
    காலம் கண்டந்தும் சிரஞ்சீவியாய்
    வாழ்கிறது

    இற்றைய பாடல்கள்
    உணர்ச்சி வசங்கள்
    கவர்ச்சியிடையது ஆனால்
    ஆயுள் அற்றது

    சங்க இலக்கியமும்
    அய்யன் வள்ளுவன் குறளையும் அன்றியா பாடல்கள்
    காலத்தால் அழியாதது

    இன்று இசை என்ற பெயரில் சத்தமும்
    பாடல் என்ற பெயரில் கொச்சைகளும்

    ReplyDelete
    Replies
    1. இதுபோன்ற இனிமையான பாடல்களை ‘பொற்காலத் திரை இசை’ என்று சொல்லி மெகா டிவியில் காலையில் ‘அமுதகானம்’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறார்கள். எனக்கு மிகப் பிடிக்கும் அது. இந்த விஷயத்தை ரசித்துப் படித்து ஆதரவளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  2. வணக்கம்! அப்போது இருந்த பெரியவர்கள் “ சினிமா பார்த்து கெட்டுப் போகாதே “ என்று எந்த படத்தையும் ( நல்ல கருத்துள்ள படங்களைக் கூட ) பார்க்க விட்டதில்லை. இப்போது வீட்டுக்குள்ளே பார்க்கக் கூடாத காட்சிகளை குடும்பத்தோடு பார்க்கிறார்கள்! அதன் விளைவு குழந்தையின் கொலைவெறிப் பாடல்.
    அந்தக் கால திரைப் படப் பாடல்களின் இலக்கிய நயம் பற்றி, படங்களோடு, மேற்கோள்களோடு சுவையான ஒரு கட்டுரை!

    ReplyDelete
    Replies
    1. இலக்கிய நயத்தை ரசித்து மகிழ்ந்து கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  3. தங்கள் ஆதங்கமும் ஆசையும் மிகச் சரியே
    சில சமயங்களில் வார்த்தைகளை மீறி வருகிற இசை கூட
    மோசமானவார்த்தைகளைக் கவனிக்கவிடாது செய்துவிடுவதால்
    அது கூட தேவலாம் எனப் படுகிறது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மை. இரைச்சலான இசை சில சமயம் வரிகளைக் கேட்க விடாமல் செய்வதில் வசதியாகத்தான் இருக்கிறது. வித்தியாசமான கோணத்தைக் காட்டி வாழ்த்திய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. பாடல்களின் வரிகள் இளமையாக இருக்கிற வரை யார் மனதிலும் நிற்கும்/அதில் பழையதென்ன.புதியதென்ன?

    ReplyDelete
    Replies
    1. பெறருமையும் சிறுமையும் கவிநயத்தால்தான் அமையும். காலத்தை வென்று நிற்கும் என்கிறீர்கள்... நன்று. ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே!

      Delete
  5. பழசை நினைத்துப் பெருமூச்சு விடலாம்.இன்றைய நிலைக்காக வேதனைப் படலாம்!வேறென்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா! ஆதங்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஆறுதல்; மகிழ்ச்சி. அவ்வளவுதானே... வேறென்ன செய்துவிட இயலும்? தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  6. அருமையான அலசல்

    உண்மைதான் அன்று அர்த்தமுள்ளதாகவும் காது ஜவ்வை கிழிக்காத மெனமையான இசையுமாக பாடல்கள் அமைந்து இருக்கும்.

    இன்றோ நேர்மாறாக உள்ளது:(



    நான் மலரோடு தனியா ஏன் இங்கு வந்தேன் என்ற ரொமான்ஸ் பாடலாகட்டும்

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று என்ற தத்துவப்பாடலாகட்டும்

    போனால் போகட்டும்போடா என்ற சோகப்பாடலாகட்டும்

    இவை எல்லாம் காலங்கள் பல கட்ந்து மனித மனதில் நிலைத்து நிற்பது போல் இப்போதுள்ள பாடல்கள் நிலைத்து நிற்பதில்லை.

    கொச்சை வரிகளும்,எரிச்சலூட்டும் இசையும் பாடல்களை கேட்கவே பிடிக்கலே.

    ReplyDelete
    Replies
    1. நல்ல ரசனை ஸாதிகா. இதுபோல நாம் ரசித்ததை சொல்ல ஆரம்பி்த்தால் பல பதிவுகள் தேவைப்படும், இல்லையா? நான் சொல்ல விரும்புவது ஆங்கிலக் கலப்பின்றி நல்ல தமிழில் எழுத முடியாதா என்பதுதான். ரசித்துக் கருத்திட்ட தங்கைக்கு என் இதய நன்றி!

      Delete
  7. சில சமயங்களில் வார்த்தைகளை மீறி வருகிற இசை கூட
    மோசமானவார்த்தைகளைக் கவனிக்கவிடாது செய்துவிடுவதால்
    அது கூட தேவலாம் எனப் படுகிறது//அட இப்படி ஒன்று இருஇக்கா???????

    ReplyDelete
    Replies
    1. நானும்கூட ரமணிஸார் காட்டிய கோணத்தைப் பாத்து ஆச்சர்யம்தான் பட்டேன்மா! நல்லா சொல்லிருக்காரில்ல...

      Delete
  8. கி.பி:2055
    இடம்:சென்னை
    கணேஷின் இருபது வயது பேரன்...
    "சான்க் சீங்க் சுன்க்
    சிங்க் சாங்க் சொய்ங்"
    என்ற சமீபத்திய superhit தமிழ் பாடலை ரசித்துப்பாடிகொண்டே ஆடிக்கொண்டிருக்கிறான்.
    அருகில் இருக்கும் அவன் தந்தை(கணேஷின் மகன்) எரிச்சலுடன் முனகுகிறார்:
    "ம்ம்ம்.என்ன அபத்தம் இது!அந்தகாலத்தில் "வொய் திஸ் கொலை வெறிடி"என்று எவ்வளவு தெளிவாக பாட்டு எழுதினார்கள்!.இது எங்கு போய் முடியும் எனத்தெரியவில்லையே!!"
    அதை கேட்டு தன் வலைதளத்திற்கு வந்த 17154 ஆவது பின்னூட்டமான
    "உங்கள் "தனுஷ் அன்றும் இன்றும்-75" என்ற பதிவு மிக அருமை அண்ணா 76 எப்போ வரும் என ஆவலுடன் காத்திருக்கிறேன்"என்பதற்கு,
    "உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தங்கச்சி"என்று தன் 17155 ஆவது பதிலை தட்டிக்கொண்டிருக்கும் முதியவர் கணேஷ் புன்முறுவல் பூக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பரே... அழகாய் ஒரு உரைச்சித்திரம் தீட்டி, உங்கள் கருத்தை நயம்பட உரைத்திட்டீர். படித்து ரசித்து மகிழ்ந்தேன். தங்ளுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  9. அந்தக் காலத்துலயும் 'எலந்தப் பளம்...எலந்தப் பளம்' 'அயலோ பக்கிலியாமா' போன்ற பாடல்கள் இருந்தனவே.... இந்தக் காலத்திலும் "காலங்கார்த்தாலே மறைஞ்சி விடும் வெள்ளி நிலா போலே என்னைப் பார்த்தாலே ஒளிஞ்சிக்கிறியே....பொழுது சாஞ்சாலே தலைகுனியும் தாமரை பூப் போலே என்னைப் பார்த்தாலே வெக்கப் படறியே கண்ணே..." , "காதல் எனைக் கேட்கவில்லை...கேட்காததது காதல் இல்லை.." போன்ற வரிகளைக் கொண்ட பாடல்களும் இருக்கத்தானே செய்கின்றன...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம். ஆனால் கூடைப் பழங்களில் ஒன்றிரண்டு அழுகல் என்பது அன்றைய நிலை. கூடைப் பழங்களில் ஒன்றிரண்டுதான் சுவை என்பது இன்றைய நிலை.

      மாலை மணங்கமழ
      மெளவல் முகை விரியும்- எந்தை குன்றம்
      சாலை மணிக்குவளை
      காதலர்போல் கண் விழிக்கும்

      -என்ற பாட்டில மணம் வீசும் காட்டு மல்லிகையை ‘மெளவல்’ என்ற வார்த்தையில குறிப்பிட்டிருப்பாங்க. அதை வைரமுத்து ‘புன்னகையோ மெளவல் மெளவல்’ன்னு அழகா சொல்லியிருந்தார். இந்த வார்த்தைக்கு அர்த்தத்தை எத்தனை பேர் தேடிக் கண்டுபிடிச்சு ரசிசசிருப்பாங்கன்றீங்க? இப்படி நல்லது வந்தாலும் புறக்கணிக்கப்படுதேன்றதுதான் என் ஆதங்கம். ஸம்ஜே?

      நற்கருத்திட்ட உங்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      Delete
    2. எலந்தப் பயம் பாட்டு பெரிய இலக்கியம்ணே.. குறுந்தொகைல எய்தியிருக்காங்ணே. எடுத்துப் பாத்தப் பயங்களிலே இம்மா சைசு பாத்தியா - மாதிரி லைனுங்க அப்டியே வந்துகுதுணே.

      Delete
  10. தமிழுக்கே தமிழில் அர்த்தம் சொன்னாதானே புரிந்து கொள்ள முடிகிறது. இலக்கிய தமிழுக்கும் பேச்சுதமிழுக்கும் உள்ள வித்யாசம் புரிந்தால்தானே பாட்டை ரசிக்க முடியும்?.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்தான். அப்படி எளிமைப்படுத்திக் கொடுக்கறவங்க இப்ப இல்லையேன்றதுதான் என் ஆதங்கம். நீங்க சொன்ன மாதிரி தமிழுக்கே தமிழ்ல விளக்கம்தர வேண்டித்தான் இருக்கு. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  11. எல்லாக் காலங்களிலும் சில பாடல்கள் அப்படியும் இப்படியும் இருக்கத்தான் செய்கின்றன. நல்ல பாடல்கள் எத்தனை நாட்கள் ஆனாலும் நினைவில் இருக்கிறது. சுமாரான பாடல்களுக்கு வாழ்நாட்கள் குறைவுதானே.... :)

    பின் குறிப்பு: மோகன் குமார் பதிவு பார்த்து சென்னை வந்த போது சந்திக்க முடியவில்லை என எழுதி இருந்தீர்கள் எனது பக்கத்தில்.

    நான் வந்தது டிசம்பரில்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல பாடல்கள் சிரஞ்சீவித்துவம் பெற்றவை என்பது நிதர்சனமான உண்மை! அவரின் பதிவைப் படித்த போது போனவாரம் தான் நீங்கள் சந்தித்தது போன்ற தொனி இருந்தது. அதான் உடனே கேட்டேன். வருகைக்கும கருத்துக்கும் என் இதயம்நிறை நன்றி நண்பா!

      Delete
  12. இனி இப்படித்தான் பாடல்கள் வரும் அதனால்தான் நான் சினிமா பாரப்பதோ பாடலைக்கேட்பதோ பெரும் பாலும் இல்லை! சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. காலம் மாறாது. நாம்தான் பழகிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இல்லையா ஐயா... தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  13. எல்லா பாடல்களும் இல்லையே ஒருசில பாடல்கள்தான் இலக்கியங்களை தழுவி அமைகின்றது. எனக்கு நெடுநல் வாடை நடையில் பாடல்கள் எழுதவே விருப்பம் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. அந்த ஒருசில பாட்ல்களுக்கான முயற்சிகூட சமீப வருஷங்களில் இல்லையேம்மா எஸ்தர். அதான் என் வருத்தம். நல்ல பாடல்களை எழுதி அனைவர் மனங்களையும் நீ கவர என் வாழ்த்துக்கள் + ரசித்துக் கருத்திட்டமைக்கு என் நன்றிகள்!

      Delete
  14. வணக்கம் சார், நலமா ?
    நீங்கள் குறிப்பிட்ட சில பாடல்களை கேட்டு, வரிகள் ஒவ்வொன்றையும் ரசித்த அனுபவம் எனக்குண்டு சார்..இப்போது வரும் சில பாடல்களை நினைக்க வருத்தம் அளிக்கிறது.அந்தக் காலம் அந்த காலம்தான்..யாராலும் அழிக்க முடியாது.
    இலக்கிய தமிழை திரைப்பாடல்களோடு சேர்த்து விளக்கம் தந்த தங்களுக்கு எனது நன்றிகள் சார்.

    ReplyDelete
    Replies
    1. இலக்கியத் தமிழை அறிந்து நீங்கள் மகிழ்ந்ததில் நானும் மகிழ்ந்து நன்றி கூறுகிறேன் குமரன்!

      Delete
  15. அருமையான பதிவு அன்பரே..

    படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் அறியாத எத்தனையோ நல் இலக்கியல் பாடல்களை எனக்கு அறிமுகம செய்த முனைவரையா இதை ரசித்தேன் என்றதில் கொள்ளை கொள்ளையாய் மகிழ்கிறேன். தங்களுக்கு என் இதயம் நிறை நனறி!

      Delete
  16. அழகான கோர்ப்புகள் நண்பரே..
    பழைய பாடல்களின் இனிமையை
    சொல்லிச் சொல்லி மாளாது...
    அதுவும் அந்த இனிமையான மனதை வருடும்
    இசையுடன் கலந்து வருகையிலே..
    அப்படியே காற்றினில் மிதப்பது போல ஒரு
    உணர்வைக் கொடுக்கும்...

    " மாங்கல்யம் தந்துனானே"
    என்பதை...
    "நான் பேச நினைப்பதெல்லாம்
    நீ பேச வேண்டும் "
    அப்படின்னு எல்லோருக்கும் புரியும்படி
    விளக்கிய காலகட்டமல்லவா..

    நீங்கள் இங்கே பகிர்ந்திருக்கும் அத்தனை
    பாடல்களும் தேனில் ஊறிய பலாச் சுளைகள்...

    ReplyDelete
    Replies
    1. பாடல் வரிகளும், அதை விழுங்காமல் துணை நிற்கும் இசையும் எப்போதுமே ரசிக்கத் தக்கவைதானே மகேன்! தேனில் ஊறிய பலாச்சுளைகள் என்று அழகாய் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  17. பழைய பாடல்கள் கல்லில் எழுதியவை அது காலத்தால் புதையுண்டு போகலாம் அதை உங்களை போல உள்ளவர்கள் மீண்டும் வெளிக் கொணரலாம் அதை எல்லோரும் மீண்டும் ரசிக்கலாம். ஆனால் புதிய பாடல்கள் கடற்கரை மணலில் எழுதியவை அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் அதை அடுத்த பாடல் என்ற அலை கடலுக்குள் இழுத்து செல்லும் வரை.

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க. அடுத்த அலை வந்துவிட்டால் இவற்றைவிட அது மேலோங்கித்தான் விடுகிறது. அலைகளுக்கிடையில உள்ள முத்துக்களைத்தான் நாம எடுத்துப் பாதுகாக்கறோம். பிரமாதம் ந்ண்பா. தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  18. இந்தப் பதிவும் ஆதங்கத்தால் வந்த கொலைவெறிப்பதிவோ.பாருங்களேன் ஒரு குழந்தையின் மனதில் படிந்த இந்தக்கொலைவெறி இலக்கியங்களை முறியடித்திருக்கிறது.உச்சத்தைத் தொட்ட இந்தக் கொலைவெறி தமிழுக்குக் கிடைத்த வெற்றியா தோல்வியா,அழிவா ஆக்கமா....ஆதங்கம்தான் !

    ReplyDelete
    Replies
    1. தமிழ் படற பாட்டை நினைச்சு ஆதங்கம்தான் கொள்ள முடியும் ஃப்ரெண்ட்! வேறென்ன..? கொலை வெறி வந்து என்ன பண்ணிட முடியும் நம்மால...

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. நல்ல சுவாரசியமான டாபிக். அழகா எழுதி இருக்கீங்க. என்ஜாய் பண்ணி படிச்சேன். :) நன்றி!
    நீங்க ஆரம்பிச்சு வெச்ச அப்பறம் சும்மா இருக்க முடியல. நான் படிச்சது, கேள்விபட்டதெல்லாம் நினைவுக்கு வந்துது. அதுல சிலது எழுதிட்டேன்.

    'இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க' இந்த வரிகள் 'திரும்பி வா அறிவே திரும்பி' பாட்டுல 'இட்ட அடி சிவந்திருக்க, எடுத்த அடி கனிந்திருக்க' - அப்படின்னு.
    வரும். இது நாடோடி படத்துல TMS. சுசீலா பாடினது.

    ஆண்டாளோட பாட்டுல வர 'மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத'
    கண்ணதாசன் இந்த வரிகளை 'மனம் படித்தேன் உன்னை நினைப்பதற்கு' பாட்டுல 'மத்தளம் மேளம் முரசொலிக்க, வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க' அப்படின்னு அழகா சரணத்துல சேர்த்திருப்பார். இது கந்தன் கருணை படத்துல சுசீலா பாடினது.

    'யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும்' இந்த வரிகள் அழகா 'நானும் நீயும் யாரோ எவரோ, எவ்விதம் சேர்ந்தோம் இது என்ன புதிரோ' - அப்படின்னு PBS. சுசீலா பாட்டுல வரும்.

    'தோள் கண்டார் தோளே கண்டார், தொடுகழல் கமலன் அன்ன, தாள் கண்டார், தாளே கண்டார்' என்ற கம்பராமாயண வரிகள் அப்படியே அழகா
    'தோள் கண்டேன் தோளே கண்டேன், தோளில் இரு விழிகள் கண்டேன்' கொஞ்சம் மாத்தி பிரமாதமா கண்ணதாசன் எழுதி இருப்பார். இது இதயகமலம் படத்துல PBS. சுசீலா பாடினது.

    திருப்பாவைல வர 'குத்து விளக்கெரிய கொட்டுக்கால் கட்டில் மேல்' இந்த வரிகள் 'குத்து விளக்கெரிய, கூடமெங்கும் பூ மணக்க' அப்படின்னு ஆரம்பமா 'வாராதிருப்பாரோ வண்ண மலர் கண்ணன் அவன்' பாட்டுல வரும். இது பச்சை விளக்கு படத்துல TMS. சுசீலா பாடினது.

    சிவன் கோவில் திருநாவுக்கரசர் சந்நிதி பக்கத்துல 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன், மூர்த்தி அவனிருக்கும் வண்ணம்' - இந்த பாடல் செதுக்கி இருக்கும். இந்த வரியை பார்க்கும்போதெல்லாம் 'அன்றொரு நாள் அவனுடைய பேரை கேட்டேன், அடுத்த நாள் அவனிருக்கும் ஊரை கேட்டேன்' பாட்டுதான்
    எனக்கு ஞாபகம் வரும். நல்லவேளை உம்மாச்சி கண்ணை குத்தலை. :)

    Sorry! பின்னூட்டம் ரொம்பவே நீண்டு போச்சு. :)

    ReplyDelete
    Replies
    1. நீங்க குறிப்பிட்டதுல ‘யாயும் யாயும் யாராகியரோ’ சுசீலா பாட்டும், ‘அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டே’னும் எனக்குப் புதுசு மீனாக்ஷி. இந்தப் பதிவுல நான் குறிப்பிட்டது தவிர, நீங்க சொன்னது போகவும் இன்னும் நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். அந்த ரசனை இப்ப கம்மியாய்டுச்சு. இனி பாக்க முடியுமாங்கற வருத்தம்தான் எனக்கு. ரசிச்சுப் படிச்சதோட இல்லாம, பதிவின் தொடர்ச்சியென அழகிய கருத்துரை வழங்கிய உங்களுக்கு ‘நன்றி’ன்னு சும்மா வார்த்தைல சொல்றது கம்மி குருவே!

      Delete
  21. மீனாக்ஷி... கணேஷ் போலவே நீங்களும் அசத்தியிருக்கீங்க... கணேஷ் சொல்லியிருக்கும் விளக்கங்களில் எனக்கு யான் நோக்குங்கால் மட்டும்தான் தானாகத் தெரியும்... மற்றவை அட என்று நினைக்க வைத்தன. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களும் அப்படியே...

    கணேஷ் ..... முதலிலேயே இந்த விஷயத்தைச் சொல்லிப் பாராட்ட மறந்ததற்கு என்னை மன்னிக்கவும்! கண்ணதாசன் பற்றிப் படிக்கும்போது அவர் எடுத்தாண்டிருக்கும் இது போன்ற பாடல்கள் பற்றி ஆங்காங்கே படித்ததுண்டு... ஒரு இடத்தில் அவைகளைப் பற்றிப் படிக்கும்போது சுவை கூடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம். நானும் இதெல்லாம் ஆங்காங்கே படிச்சது, கேள்விப்பட்டதுதான். இது எல்லாம் ஒரே இடத்துல படிக்கும்போது ரொம்ப ரசிக்க முடியறது, நீங்க சொல்ற மாதிரி சுவை கூடறது. அதனாலேயே தேடி தேடி படிச்சதுல நினைவுல இருந்ததை இங்க எழுதிட்டேன். இன்னும் கூட நிறைய இது போல இருக்கு. 'கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல', ' பால் வண்ணம் பருவம் கண்டு', 'நாளாம் நாளாம் திருநாளாம்' இந்த பாட்டுல எல்லாம் கூட இது போன்ற சங்க இலக்கிய பாடலில் வந்த வரிகள் சேர்ந்திருக்கு. இன்னும் எழுத ஆரம்பிச்சா கணேஷ் 'இது யாரோட பதிவு' அப்படின்னு கேட்டுட போறார். இல்லையா கணேஷ்! :)

      Delete
    2. எதுக்கு ஸ்ரீராம் மன்னிப்பெல்லாம்... நீங்க ரசிச்சுப் படிச்சேன்னு சொன்னதே பெரிய விஷயம். இந்தப் பதிவுல நான் கண்ணதாசனை மட்டும் குறிப்பிடலை. படகோட்டி பாட்டை எழுதினது ‘வாலி’பக் கவிஞர். ரசித்து வாழ்த்திய உஙகளுக்கு... அதேதான்!

      Delete
    3. ஒரு நாளும் கேக்க மாட்டேன் மீனாக்ஷி! என் பதிவை நீங்க தொடர்ந்து நல்லவிதமா அழகா கொண்டு போறதுல சந்தோஷம்தான் படுவேன்!

      Delete
  22. எல்லாம் பணம் படுத்தும் பாடு என்பதைத் தவிர வேறென்ன சொல்லட்டும் கணேஷ் அண்ணா.

    மெட்டுக்குப் பாட்டு, பாட்டுக்கு மெட்டு என்றிருந்த காலம் போய் இன்று ”துட்டு”க்கு பாட்டும்,மெட்டும் என்றாகி விட்டது.

    ஆனாலும் ஒரு விசயம், ஐந்தாண்டுகளுக்கு முன் “மன்மத ராசா” ஒலிக்காத வாயில்லை. கேட்காத செவியில்லை. இன்று மன்மதராசா இருக்கும் இடமே தெரியவில்லை.

    இன்றும் கண்ணதாசன் அவர்களின் ‘உன்னை நான் பார்க்கும் போது...” எங்கேனும் தூரத்தில் ஒலித்தாலும், செவிப்புலனுக்கு வழிவிட்டு மற்ற நாற்புலன்களும் அமைதி காப்பதை, இந்த “ஒய் திஸ்” முறியடித்துவிடக் கூடுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தம்பி. மன்மத ராசா, ஓ போடு போன்ற பாடல்கள் இன்று நிலைக்கவில்லை தான். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு நன்றிகள் பல.

      Delete
  23. அருமையாக சொல்லி இருக்கீங்க ஆதங்கத்துடனும்.. பழையபாடல்களில் வார்த்தைகள் முன்னணியிலிருந்தன இப்போது வாத்தியங்கள்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாத்தியங்களின் இரைச்சல் நல்ல பாடல் வரிகளை அமுக்கி விடக் கூடாதென்று முன்னர் எண்ணினர். இப்போது வரிகளை விட வாத்தியங்களின் இரைச்சலே பெட்டர் என்றுகூடத் தோன்றுகிறதுக்கா. நற்கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  24. கணேஷ் சார்! நீங்க எழுதினது மிக மிகச் சரி. ஆனால் பாருங்கோ அவங்க எழுதினாங்க , பாடினாங்க.(ஐ மீன் கொலை வெறி)இதை ஆகா ஓகோ என்று ரசிச்சு ஏத்தி வெச்சு வாக்கு போட்டது மக்கள் தானே! குழந்தை எதுவுமே செய்யலையே!. நம்ம மக்கள் மூளை தான் திருந்த வேணும். மிக அருமையான மதிப்பீடு. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான். குழந்தைங்க எப்பவுமே தெய்வஙகள்தான். பெரியவங்கள் பண்றதைத் தானே அதுவும் செய்யும். நல்ல கருத்துரைத்த உங்களுக்கு நன்றிகள் பல...

      Delete
  25. இதையெல்லாம் சொன்னா? உஸ்ஸ் என்று பெருமூச்சுதான் விடுகிறார்கள். என்ன செய்வது?

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணும் செய்ய முடியாது பாலா... ஒருத்தருக்கொருத்தர் சொல்லி மனசை தேத்திக்க வேண்டியதுதான். நன்றி.

      Delete
  26. அண்ணா, எனக்க்கு கொலைவெறி பாடல் மிகப்பிடிக்குமே. நீங்க சொன்ன காலக்கட்டத்துலயே ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்டை சொக்குன்னு லோக்கல் தமிழில் பாட்டு வந்து செம ஹிட்டாச்சு. இந்த காலத்துலயும் இலக்கிய நயம் மிகுந்த பாடல் வருது. கொலைவெறி பாடல் ஒரு ரிலாக்சேசனுக்க்கு. (உங்க மனசை தொட்டு, என்கிட்ட மட்டும் சொல்லுங்க, கொலைவெறி பாடலை நீங்க ரசிக்கலையா?!)

    ReplyDelete
    Replies
    1. மனசைத் தொட்டுச் சொல்றதுன்னா... ஆங்கிலம் கலந்த எந்தப் பாடலும் எனக்கு எரிச்சலைத் தான் ஊட்டுதும்மா. அதனால இந்தக் கொலைவெறி பாட்டு எனக்கு கோபத்தைத்தான் தந்துச்சு. (முன்னால நாக்கமுக்க) அந்த ஃபீலிங்கைத்தான் பகிர்ந்துக்கிட்டேன். வா வாத்யாரே ஊட்டாண்டை பாட்டு மாதிரி இருந்தா எரிச்சல் வராது. அது சென்னைத் தமிழ். ஆங்கிலக் கலப்பில்ல... நன்றிம்மா.

      Delete
  27. செம் ப்ளட்.. எனக்கும் இதே ஆதங்கம் உண்டு என்ன பண்ண...???.வியாபாரிகள் எல்லாத்தையும் எடை போட்டு கூவி கூவி விற்கிறான்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  28. புதுசு கண்ணா புதுசு என்று சொல்லி சொல்லியே சாக்கடை நாற்றத்தோடும் வாழப்பழகிய மக்களுக்கு நாம் என்ன சொன்னாலும் புரியாதுங்க .

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய... நமக்கு நாமே பேசி ஆறுதல் படுத்திக்க வேண்டியதுதான் தென்றல்! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  29. ஆத்திச்சூடிய ராக் பண்ணினாங்க...ஓகே..கொலைவெறி எப்படி ஹிட் ஆச்சுன்னுதான் புரியலை!

    ReplyDelete
    Replies
    1. பாஸிட்டிவ் ஹீரோவை விட நெகடிவ் ஹீரோ எப்பவுமே ஈஸியா மனசில பதிஞ்சிடுவான். ஆனா நிலைக்க மாட்டான். அப்படித்தான் பாடல்களும். வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம்நிறை நன்றி சுரேஷ்!

      Delete
  30. I fully agree with your comments on the new wave of tamil cine songs. The only way to enjoy the old songs is, do not listen to the new ones. By listening to them you get your blood pressure increasing and nothing else. Even I used to compare Kannadasan with Vairamuthu. For example, Kannasaid lyrics : Naan Kadal Ennum Kavithai Thanthen Kattlinmele - Antha Karunaikku, Naan Parisu Thanthen Thottilin mele
    Vairamuthu lyrics : Kattil Aadamal Thottilgal Aadadu - Kanne Vetkathai Vittu Thallu
    Both Kattil and Thottile Samacharam - but you decide which has more literacy and makes our ears and heart to feel cool.

    ReplyDelete
    Replies
    1. நல்லாச் ‌சொன்னீங்க மோகன்! வைரமுத்துவையும் கண்ணதாசனையும் ஒப்புமை செய்தால் என் மனம் கண்ணதாசன் பக்கமே சாயும். அந்த ஒப்பற்ற கவிநயத்திற்குப் பின்தான் மற்றக் கவிஞர்கள் எல்லாருமே... நற்கருத்துக்கு நன்றி நண்பா!

      Delete
  31. “காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே,
    கனியிலே இனிப்பதென்னே?கண்ண பெருமானே,” என்ற பாரதியாரின் பாடல் கூட ,“கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
    காவியமோ ஓவியமோ கன்னி இளமானே” என்று அம்பிகாபதி திரைப்படத்தில் வந்தாலும் இன்றும் மனதை விட்டு அகலவில்லை என்பது உண்மை.

    கொலைவெறி போன்ற பாட்டுக்கள்(??) எல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் போன்றவை. இவைகள் அதிகநாள் இரசிகர் மனதில் நிலைத்து இருக்காது.எனவே நாம் இதுபற்றி கவலைப்படத் தேவையில்லை.

    நன்றாக ஆய்ந்து பதிவிட்டு இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பாரதியின் பாடல் இப்படி மாறியதா? புதிய விஷயத்தை அறியத் தந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  32. உங்களுடைய ஆதங்கம் மிகவும் சரியானது தான் சார். எவ்வளவோ நல்ல நல்ல பாடல்கள் இருந்தாலும், இது போன்ற பாடல்களும் வெளியாகி பிரபலமும் அடைந்து விடுகிறது. இதை சின்ன குழந்தைகளும் பாடுகிறது. வரிகளும் ஒன்றும் சொல்லும் படியாக இருப்பதில்லை....:(

    இங்க வடஇந்தியர்களின் கல்யாணம் என்றால் உடனே ”நாக்க முக்கா”, ”கொலைவெறி” இது தான் அலறுகிறது மீண்டும் மீண்டும். இரவு பதினொன்று பனிரெண்டு வரை..... ஒன்றும் சொல்வதற்கில்லை....

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆதரித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி தோழி!

      Delete
  33. என்னை எடுத்து தன்னைக் கொடுத்து - படகோட்டியில் வரும் பாடல் - எழுதியவர் வாலி, கண்ணதாசன் அல்ல.

    மனுஷன மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே - இப்பாடல் கண்ணதாசன் எழுதியது அல்ல. மருதகாசி எழுதியது.

    ReplyDelete
    Replies
    1. டியர் நாகராஜன்... நான் எந்தப் பாடல்களுக்குமே கவிஞர் பெயரை பதிவில் குறிப்பிடவில்லை. ஸ்ரீராமுக்கு நான் எழுதியிருக்கும் பதிலைக் கவனியுங்கள். படகோட்டி பாடலை எழுதியது வாலிபக் கவிஞர் என்றுதான் சொல்லியிருக்கிறேன். ‘மனுஷனை மனுஷன்’ பாட்டுத்தான் எனக்கு எழுதியவர் யாரென்று தெரியாதது. இப்போது தெரிந்து கொண்டேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  34. Replies
    1. ரசித்து மகிழ்ந்ததை ரத்தினச் சுருக்கமாகப் பாராட்டிய நண்பருக்கு என் இதய நன்றி!

      Delete
  35. தோள் கண்டார் தோளே கண்டார் = கம்பராமாயணம்
    தோள் கண்டேன் தோளே கண்டேன் = இதய கமலம் படத்தில் பி பி சீனிவாஸ் பாடிய பாடல். பாடலாசிரியர் கண்ணதாசன்?

    ReplyDelete
    Replies
    1. இன்னுமொரு அழகிய பாடலைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். (மீனாக்ஷி உங்களை முந்திட்டு சொல்லிட்டாங்க) ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  36. ரொம்ப நாள் ஆச்சு சகோ கணேஷ் நான் உங்கள் வலைத்தளம் வந்து. எனவே மன்னிக்கவும். :)

    இந்த இடுகை ரொம்ப அற்புதம். எப்பிடி பாடல்களை எல்லாம் கண்டுபிடிச்சீங்க. அரிய முயற்சி.வாழ்த்துக்கள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றிக்கா!

      Delete
  37. நடந்து போகும்போதும் பேருந்தில் போகும்போதும் நம் மனதில் எண்ணங்களும் நம்முடன் பயணிப்பது உண்மை.... நம் கண் பார்க்கும் நிகழ்வுகளை சட்டென மனம் படம் பிடித்துவிட்டு அதை அசைப்போட்டுக்கொண்டே இருக்கும்....

    உங்க கண் முன்னாடி ஒரு குட்டி குழந்தை வொய் திஸ் கொலவெறி பாடலை பாடியபோது எழுந்த சிந்தனைகளை அழகிய அலசலாக இங்கே தந்தது சிறப்பு கணேஷா... கண்டிப்பா அந்த குழந்தைக்கும் அந்த பாட்டுக்கும் நான் நன்றி சொல்லத்தான் வேண்டும்... இல்லன்னா உங்க சிந்தனையை இத்தனை அழகாக தூண்டி விட்டிருக்குமா? இல்லை இப்படி ஒரு அலசலை நாங்கள் காண தான் வாய்ப்பு கிடைத்திருக்குமா?

    இப்ப மட்டுமில்ல எப்பவும் காலத்தை வென்று நிலைத்து நிற்பது பழைய பாடல்கள் மட்டுமே.. புதிய பாடல்களில் ஒரு சிலது நம் மனதில் ரம்மியமாக இருப்பதும் உண்டு....

    பழைய பாடல்களை அழகாக திருக்குறளின் பொருளோடு ஒத்து போவதை நுணுக்கமாக கண்டுப்பிடித்து நீங்க போட்டிருப்பதை பார்த்தபோது பாராட்டாமல் இருக்கமுடியவில்லைப்பா...

    தேன் தேன் தேன்... உனை நானும் ரசித்தேன்... இது புதிய படத்தின் பாடல்
    இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் பெண்ணே.... இதுவும் புதிய பாடல் தான்...

    ஒரு கட்டத்தில் நான் புது திரைப்பட பாடல்கள் கேட்பதையே நிறுத்தி விட்டேன்... ஆனால் ஒரு தினம் என் மூத்த மகன் மெலோடியஸ் பாடல்கள் என்று செலக்டிவாக போட்டு கொடுத்ததில் தான் இது போன்ற மென்மையான மனதை வருடும் கானங்களை கேட்க நேர்ந்தது...

    பழைய பாடல்கள் என்னிக்குமே தேன் தான்... எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது.... இப்ப மட்டுமில்லாது எப்பவுமே நானும் என் வீட்டுக்காரரும் வண்டியில் போகும்போது பழைய பாடல்கள் கேட்டு ரசித்துக்கொண்டே தான் பயணிப்போம்...

    எல்லோரும் தான் பழைய பாடல்களை கேட்கிறோம் ரசிக்கிறோம்.. ஆனால் உங்களுக்கு மட்டும் அதை இத்தனை விலாவரியாக தொகுக்க முடிந்ததே.. அதுவே உங்க தனித்தன்மையை காட்டுகிறது கணேஷா... சிம்ப்ளி சுப்பர்ப்...

    அசத்தல் கணேஷா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube