இந்தச் சிரிப்பரங்கத்துல எல்லாரும் சொல்ற நகைச்சுவைகளைக் கேட்டவாய்விட்டுச் சிரிச்சுட்டுப் போக வந்த என்னை சிறப்பு விருந்தினரா மேடையேத்தி எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்துட்டார் சிரிப்பானந்தா. பத்தாததுக்கு சிறப்பு விருந்தினர் சிரிப்புரை ஆற்றுவார்னு மைக்கை வேற கைல கொடுத்து ‘ஙே’ முழிக்க வெச்சுட்டார். எனக்கு நகைச்சுவை அவ்வளவா வராதுங்க. சரி, ஏதாவது ஜோக் சொல்லி சமாளிக்கலாம்னா சட்னு ஜோக் எதுவும் நினைவுக்கு வரலை. அதனால மொழியைக் கையாள்வது பத்தி உங்ககிட்ட பேச விரும்பறேன்.
எந்த மொழியிலயும் வார்த்தைகளை சரியாக் கையாளணுங்க. ஒரு வார்த்தை... சிலசமயம் ஒரு எழுத்தை மாத்திப் போட்டாலும்கூட அர்த்தமே மாறிடற அபாயம் இருக்கு. அதும் தமிழ்மொழியைப் பொறுத்தவரை மிக ஜாக்கிரதையா இருக்கணும் வார்த்தை அமைக்கறதுல. நான் சின்னப்பையனா இருக்கறப்ப பக்கத்து வீட்டுல இருந்த அங்கிள் அந்த ஏரியாவுக்கு மட்டும் ஒரு சிறு பத்திரிகை நடத்திட்டிருந்தார். ஒரு இஷ்யூல ‘மேலத்தெரு ராமநாதன் இறந்து விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்’னு அஞ்சலி செய்தி போட்டிருந்தார். அடுத்தநாளே புத்தகமும் கையுமா சாட்சாத் அந்த ராமநாதனே இவர் வீட்டுக்கு வந்து கன்னாபின்னான்னு கத்தறார். கடைசில ஒருவழியா சமாதானமாகி அடுத்த இஷ்யூல மறுப்பு வெக்கறதுன்னு முடிவாச்சு. இவர் மறுப்பை இப்படி வெச்சாரு- ‘மேலத்தெரு ராமநாதன் இறந்து விட்டார் என்று சென்ற இதழில் வந்த செய்தி தவறானது. அவர் இறக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ பாருங்க.... ‘மேலத்தெரு ராமநாதன் இறந்து விட்டார் என்று சென்ற இதழில் வந்த செய்தி தவறானது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் இறக்கவில்லை.’ அப்படின்னு வந்திருக்கணும்.
இப்படித்தாங்க ஒரு வார்த்தை மாறினாகூட பிரச்னையாய்டும். வயதான ஒருத்தர் பஸ்ல போய்ட்டிருந்தார். அவர் கைல அவர் மகன் குடுத்துட்டுப் போன ஒரு அப்ளிகேஷன் இருந்தது. ‘இதுல என் போட்டோ மட்டும் ஒட்டி போஸ்ட் பண்ணிடுங்க‘ன்னு பையன் சொல்லியிருந்ததால அடையாளமா போட்டோவையும் அப்ளிகேஷனோட பிடிச்சிட்டிருந்தாரு. அப்ப பஸ்ல ஒருத்தன் இடிக்கவும் போட்டோ கை நழுவி கீழ விழுந்து ஒரு பெண்ணோட காலடில போய் விழுந்துருச்சு. இவர் கீழகுனிஞ்சு அந்தப் பெண்கிட்ட, “உங்க சேலையக் கொஞ்சம் மேல தூக்குங்க. நான் போட்டோ எடுத்துக்கறேன்”ன்னாரு. “உங்க சேலையக் கொஞ்சம் மேல தூக்குங்க. நான் கீழ கிடக்கற என்னோட போட்டோ எடுத்துக்கறேன்” அப்படின்னு சொல்லியிருக்கணும். ‘கீழ கிடக்கற என்னோட’ங்கற வார்த்தைய அவர் சேர்க்காம விட்டதால பாவம்... தர்மஅடி தாங்க கிடைச்சது.
இப்படித்தாங்க ஒருத்தர் தனக்கு பூர்விக சொத்தா இருந்த வீட்டை விக்கறதுக்காக சொந்த கிராமத்துக்குப் போனாரு. சொந்த கிராமம்னு பேரே தவிர, பிறந்ததுலருந்து சிட்டிலயே வளர்ந்தவரு அவரு. கிராமம் அவருக்குப் புதுசு. போன வேலை முடிஞ்சதும் கிளம்பலாம்னு பாத்தா, அடுத்த நாள்தான் பஸ்ன்னுட்டாங்க. நைட் தங்கறதுக்கு அந்த கிராமத்துல லாட்ஜும் இல்ல. யார் வீட்லயாவது அனுமதி வாங்கிட்டுத் தங்கிக்கங்கன்னுட்டார் மணியக்காரர். ஒரு வீட்ல கதவைத் தட்டி நிலைமையச் சொல்லி அனுமதி கேட்டாரு. “மன்னிச்சுக்கங்க. இந்த வீட்ல வயசுப் பொண்ணுங்க இருக்காங்க. வேற இடம் பாத்துக்கங்க”ன்னு பதில் வந்துச்சு. அடுத்தடுத்த ரெண்டு வீடுகள்லயும் இதே நிலைமைதான். இவர் உடனே சுதாரிச்சுக்கிட்டு அதுக்கடுத்து கதவைத் தட்டின வீட்ல, “இந்த வீட்ல வயசுப் பொண்ணுங்க இருக்கா?”ன்னு முதல்ல கேட்டாரு. வீட்டுக்காரர், “ஏன் கேக்கறீங்க?”ன்னு கேட்க, “இல்ல... இன்னிக்கு நைட் இங்க தங்கலாமான்னு கேக்கத்தான்...” அப்படின்னு இவர் பதில் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டார் நல்லா.
தமிழ்லதான் இப்படின்னு இல்லீங்க... மத்த மொழிகள்லயும் இதுமாதிரி பிரச்னைகள் வரும். அதும் வேற மொழிய அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு பேசறது ரொம்பவே ஆபத்துங்க. என் நண்பர் ஒருத்தர் புதுடில்லி போறதுக்காக டிரெய்ன் ஏறினார். அவருக்குத் தெரிஞ்ச நண்பர் அங்க கன்னத்துல கைய வெச்சுட்டு உக்கார்ந்திருந்தார். எதிர் வரிசையில ஒரு சிங் தம்பதி. இவர் நண்பரை குசலம் விசாரிச்சுட்டு, “ஏன் கன்னத்துல கை வெச்சுட்டிருக்கீங்க”ன்னு கேக்க... அவர் சொன்னாரு, “இந்த சிங் பொம்பளை அறைஞ்சுட்டா...”ன்னு. “ஏன்யா?”ன்னு இவர் கேக்க... “டில்லிலருந்து வரும்போது இவங்க என் கம்பார்ட்மெண்ட்லதான் வந்தாங்க. இப்பவும் எதேச்சையா என் கம்பார்ட்மெண்ட்ல எதிர் சீட் அமைஞ்சதும் ஸ்மைல் பண்ணாங்க. ‘என்ன அதுக்குள்ள டில்லி திரும்பறீங்க‘ன்னு கேட்டாங்க...”ன்றப்ப இவர் குறுக்கிட்டு, “தமிழ்லயா கேட்டாங்க?”ன்னார். “இல்லீங்க. இந்திலதான் கேட்டாங்க. நான் புரிஞ்சுகிட்டேன். நமக்கும் கொஞ்சம் இந்தி தெரியும்ல...”ன்னாரு இவரு. “சரி, எதுக்கு அடிவாங்கினே... அதச்சொல்லு”ன்னு இவர் கேக்க, “வேலை முடிஞ்சிருக்கு. அப்பறம் என்ன?ன்னு நான் இந்தில பதில் சொன்னேன். அதுக்குப் போய் பளார்னு அறைஞ்சுட்டாய்யா...”ன்னாரு. “ஸம்திங் ராங். நீ இந்தில சொன்ன வார்த்தைய அப்படியே சொல்லு...”ன்னு இவர் சந்தேகமாக் கேக்க... “ஒண்ணுமில்லப்பா.. ‘ஜோலி கே பீச்சே க்யா ஹை’ன்னு சொன்னேன். அவ்ளவ்தான்...”அப்படின்னாரு அறை வாங்கினவரு.
பாத்தீங்களா.... மொழிங்கறது மனுஷனுக்கு எத்தனை சிறப்பானதுன்னு இப்பப் புரிஞ்சுதுங்களா நல்லா... அதனால நீங்க, நான் எல்லாருமே நல்லா யோசிச்சு பேசறது, எழுதறது எல்லாத்துலயும் மொழியைச் சரியாக் கையாளணும்னு கேட்டுக்கிட்டு எனக்குப் பேச வாய்ப்புத் தந்த சிரிப்பானந்தாவுக்கும், என் பேச்சை பொறுமையாக் கேட்டு சிரிச்ச உங்களுக்கும் நன்றிகூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
.....ஜூன் எட்டாம் தேதி அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் நான் பேசிய... ஸாரி, எதிர்பாராம பேச வைக்கப்பட்ட உரை இது. பிடிச்சிருக்கா உங்களுக்கு?
.jpg)


















