பேரன்புடையீர், உங்களனைவருக்கும் இம்முறை யான் வெற்றியின் ரகசியம் யாதென விண்டுரைத்திட விழைகின்றேன்... அடச்சே... சரிதாவை வெறுப்பேத்தறேன்னு சுத்தத் தமிழ் பேசி அதுவே பழக்கமாயிடும் போலருக்கே... சரி, விடுங்க... முதல்ல கொஞ்சம் தத்துவங்கள், அப்புறம் கொஞ்சம் சிரிக்கலாம்... பின்னால வெற்றியின் ரகசியத்தைத் தெரிஞ்சுக்கலாம், சரியா...?
===============================================
மும்மத மொழிகள்
துடுப்புப் போடாமலேயே படகில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியுமா? பாடுபட்டு உழைக்காமலே வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற முடியுமா? சிலருக்குத்தான் அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கிறது. பலர் தங்கட்குக் கிடைக்கும் வேலையை விரும்புகிறார்கள். வேலை செய்து முடித்த பிறகு தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில் விழுவதற்கு முன்னால் அவரின் கூலியைக் கொடுத்திடு. -நபிகள் நாயகம்
நல்ல மரமானது கெட்ட கனியைத் தராது. அதேபோல கெட்ட மரம் நல்ல கனியைத் தருவதில்லை. யாரும் முள் செடிகளில் அத்திப் பழங்களைப் பறிக்க எண்ணுவதில்லை. அதேபோல நெருஞ்சி முள் செடியில் திராட்சைப் பழங்களைப் பறிக்கவும் முடியாது. நல்ல பெற்றோரிடமிருந்து நல்ல பிள்ளைகளே பிறப்பார்கள். இதனால் உலகம் நல்ல வழியில் முன்னேறும். வெளியில் வராத மறைபொருள் எதுவுமில்லை. மற்றவர்கள் அறியப்படாத ரகசியமும் இல்லை. நீங்கள் யாரும் அறியாமல் இருளில் பேசுவதாக நினைப்பது வெளிச்சத்தில் மற்றவரால் கேட்கப்படும். ஏனெனில் எல்லா இடத்திலும் ஆண்டவன் இருக்கிறார். -இயேசு கிறிஸ்து.
‘‘கடவுளைத் தாங்கள் கண்டிருக்கிறீர்களா? எனக்குக் காட்ட முடியுமா?’’ என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். முதலில் தன்னையே ஒருவன் எதிரே வைத்துப் பார்க்க வேண்டும். ‘உண்மையான நான் யார்?’ என்று கேட்டுக் கொண்டு தன்னையே காண முயல வேண்டும். அதற்கு வேண்டிய மனப்பக்குவம் அவனுக்குக் கிடைத்து விட்டால் தனக்கும் மூலமாக உள்ள கடவுளைக் காண முடியும். ‘நான்’ என்கிற அகந்தை தான் நமக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிறது. அது மறைந்து விட்டால் அங்கே எஞ்சியுள்ள நிஜ ஸ்வரூபமே கடவுள். -ஸ்ரீ ரமண மகரிஷி
===============================================
நாட்ல ரெண்டு மூணு பொண்டாட்டியக் கட்டினவன்லாம் ஜாலியா இருக்கான். ஒரே ஒரு சரிதாவக் கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே. அய்யூய்யய்யய்யோ.... ! அப்படி என்ன பண்ணியிருப்பான்னு தானே யோசிக்கறீங்க? சொல்றேன்...

போன வாரத்துல ஒரு நாள் அவகிட்ட, ‘‘சரி, ஜபல்பூர்ருந்து வந்திருக்கற என் ஃப்ரெண்டோ ஃபாமிலியை ஞாயித்துக்கிழமை லன்ச்சுக்கு வரச் சொல்லியிருக்கேன்னு சொன்னேன்ல... என்ன பண்ணப் போற நீ? நான் என்ன பண்ணனும்?’’ அப்படின்னு கேட்டேன். ‘‘நீங்க ஒண்ணும் பண்ணாம இருந்தாலே போதும்.. நான் பாத்துக்கறேன். இதோபாருங்க... மெனுவே ப்ளான் பண்ணிட்டேன்’’ன்னு சொல்லி ஒரு சீட்டுல எழுதி வெச்சிருந்ததைக் கொடுத்தாள்.
படிச்சதும் எனக்குத் தலை சுத்திடுச்சு. என்னத்தை எழுதியிருக்கா இவள்னு புரிஞ்சுக்கவே ரொம்ப நேரம் ஆச்சுது. உங்களுக்குப் புரியுதான்னு பாருங்க மக்கா...!
சரிதாவின் மெனு : 1) இழுAV, 2) ராய்Give, 3) Goளி, 4) பச்சரிசி சாதம், 5) முருங்Hand சாம்பார், 6) Eggபோகுது பொறியல், 7) கண்கள் Cream, 8) ஈDa.
===============================================
செல்லப்பா : உனக்கு ஒண்ணும் தெரியாதுடா, இது சாதாரணக் காதல் இல்லை, தெய்வீகக் காதல்!
கோபி : மண்ணாங்கட்டி! மூணு மணி நேரம் ட்ராமா பாத்திருக்கே காய்கறிக்காரியா அவ நடிச்சா. Just 3 Hours! அதுக்குள்ள காதலா? ஏதோ நல்லவேளை Social Drama போட்டோம். 3 மணில முடிஞ்சது. சம்பூர்ண ராமாயணம் போட்டிருந்தா நீ கல்யாணத்தையே முடிச்சிருப்பே போலருக்கே....
செல் : கண்டிப்பா.... அவ சீதையா நடிச்சிருப்பா!
கோபி : அப்போ உனக்கு No chance!
செல் : ஏண்டா?
கோபி : சீதைக்கும் அனுமாருக்கும் கல்யாணம் நடக்குமா? கொஞ்ச நேரம் பார்த்ததுமே லவ்? நான்சென்ஸ்!
செல் : காதல்ங்கறது ஒரு Govt. Busடா. கிடைக்கிற வரை கிடைக்காதா, கிடைக்காதான்னு காத்துக்கிட்டு இருப்போம். காதலிக்கும் அந்த மாதிரிதான் ஏங்கணும். பஸ் கிடைச்ச ஏறி உட்கார்ந்துட்டா எப்படா நம்ம இடத்துக்குப் போய்ச் சேருவோம்னு ஆயிடும். காதலி கிடைச்ச உடனே எப்பத்தான் கல்யாணம் பண்ணிப்போம்னு தவிப்போம். பஸ்ஸில் நம்ம இடத்துக்குப் போய்ச் சேர்ந்த உடனேயே, ‘சே! இதைவிட நடந்து வந்திருக்கலாமேன்னு தோணும். கல்யாணம் ஆனவுடனே, ‘சே! இதைவிட பிரம்மச்சாரியாவே இருந்திருக்கலாமேன்னு தோணும். Terminusக்கு போய்ச் சேர்ற பஸ்ஸை விட Break down ஆகற பஸ்தான் அதிகம். கல்யாணத்துல முடியற காதலைவிடப் பாதியில Break ஆயிடற காதல்தான் அதிகம்.
-‘மனம் ஒரு குரங்கு’ என்கிற ‘சோ’ எழுதிய நாடகத்திலிருந்து...
===============================================
என் நண்பர் ஒருவர் மின் மடலில் இரண்டு நண்பர்களின் கதை என்று சொல்லி இதை அனுப்பியிருந்தார். படிச்சதும் எனக்கு என்னாவும்னு அவருககு நல்லாத் தெரிஞ்சதால, அவரே கீழ தீர்வும் கொடுத்திருக்கார் பாருங்க...
2 friends named Mr. See & Mr. Saw did not see sea. 1 day Mr.See saw sea mr. Saw didnt see sea. see saw sea jumped in sea. see saw in sea saw saw see in sea. see saw both saw sea & both saw & see were happy to see sea.
I hope you have head ache now? cool down, no tension. Forward this to others and get relaxed, that is the remedy.
===============================================
அலுவலத்திலிருந்து வீடு திரும்பிய கணவன், வீடு பூட்டியிருப்பதைக் கண்டதும் ஆத்திரமாகச் சொன்னான்: ‘‘வரட்டும் அவள்...! இன்றைக்கு இரண்டில் ஒன்று கேட்டு விட வேண்டியதுதான்!’’ மனைவி ஷாப்பிங் செய்து, கை நிறைய பைகளுடன் சற்று நேரத்தில் வந்தாள். கண்டதும் கேட்டான்: ‘‘இரண்டு சாவிகளில் ஒன்றையாவது என்னிடம் கொடுத்து வைத்திருக்கக் கூடாதா நீ?’’ என்று. ஹி... ஹி... ஹி...
‘‘உங்களிடம் உள்ளதெல்லாம் ஒருநாள் கொடுத்துத் தீர வேண்டுவனவே!’’ அப்படின்னு ஒரு பழமொழியை கலீல் கிப்ரான்-ங்கற மேதை சொல்லியிருக்காருங்க. அவர் வீட்ல இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்தப்பா இந்த தத்துவம் அவர் மண்டையில உதிச்சிருக்குமோ? டவுட்டு! ஹி... ஹி... ஹி...
===============================================
ரைட்டு... அடுத்த பதிவுல சந்திக்கலாமா.... என்ன கேக்கறீங்க...? ஆங், மறந்துட்டேன். வெற்றியின் ரகசியத்தைக் கேட்டுச் சொல்லலாம்னு வெற்றியோட வீட்டுக்குப் போனா ‘‘அவன் ஊருக்குப் போயிருக்கான்பா, வர்றதுக்கு நாலு நாளாகும்’’னு அவங்கம்மா சொல்றாங்க. நான் என்னங்க பண்ணட்டும்? ஹி.... ஹி....