Monday, April 28, 2014

புத்தம் புதிய புத்தகமே..!

Posted by பால கணேஷ் Monday, April 28, 2014
மீபத்தில் விஷால் நடித்து ‘நான் சிகப்பு மனிதன்’ என்றொரு படம் வந்திருக்கிறது, பார்த்தீர்களா? அதில் ‘நார்கோலெப்சி’ என்கிற வியாதியால் பாதிக்கப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பார்கள். அதாவது கோபம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகள் தாக்கினால் தூங்கத் தொடங்கி விடுவார். அதுபோல ‘புததகாலெப்சி’யால் பாதிக்கப்பட்ட நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன். அதாகப்பட்டது... ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு சில பக்கங்களைப் படித்தால் போதும்... கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்து உறங்கத் தொடஙகி விடுவார்கள். சிலசமயம் அந்தப் புத்தகங்களின் மேலேயே விழுந்துகூட... இதைத்தான் ‘விழுந்து விழுந்து படிக்கிறான்’ என்று சொல்வார்களோ என்றுகூட எனக்கொரு சந்தேகம் உண்டு ஸ்வாமி. ஹி... ஹி... ஹி...!

‘அவர்கள் அப்படித் தூங்கினால் உனக்கென்னய்யா பிரச்னை?’ என்று கேட்பீராயின்... அது நான் இரவல் தந்த புத்தகமாக இருந்து என்னிடம் திரும்பி வருமபோது அதன் கதியைப் பார்த்தால் பணம் கொடுத்து வாங்கிய என் கண்ணீரில் ரத்தமே வரத்தானே செய்யும் ஐயா...? புத்தகங்கள் வாங்குவதற்கு மூக்கால் அழுது கொண்டே பணம் தந்தவர்கள் - முன்பு அண்ணி, இப்போது மனைவி - நான் கண்ணால் ஜலம் விட்டு அழுவதைச் சகிப்பரோ? அதிலும் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டால் வருகிற தூக்கமும் பறந்து விடுகிற என் குணவிசேஷத்தைப்  புரிந்தவர்களாயிற்றே...! 

இந்த இரவல் வாங்குகிற பேர்வழிகளிடம் இன்னொரு பொதுப் பழக்கமும் உண்டு. புத்தகத்துடனேயே புக் மார்க் வைத்துக் கொடுத்தாலும்கூட அதை உதாசீனம் செய்து, தான் அதுவரை படித்த பக்கத்தை முக்கோணமாக மடித்து வைத்து விட்டு பிறிதொரு சமயம் எடுத்துப் படிப்பதில் அப்படியொரு ஆனந்தம். என்னுடைய பல புத்தகங்கள் இத்தகைய ஆசாமிகளால் ஓரங்களில் ரணகாயப்பட்டு, நான் படிக்கையில் முக்கோணங்களாக உதிர்ந்து சிற்சில வார்த்தைகளும் அத்துடன் கிழிந்து போய்... போகையில் பயில்வான் ரங்கநாதன் மாதிரி ஸ்ட்ராங்கர்க இருந்த அவை திரும்புகையில் ஓமக்குச்சி நரசிம்மனாக மாறியல்லவா வருகின்றன?

“உங்களுக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் எப்போதிருந்து ஏற்பட்டது?” என்று யாரையேனும் கேட்டுப் பாருங்கள்... ‘காலேஜ் டேஸ்லயிருந்து’ அல்லது ‘ஸ்கூல் டேஸ்லருந்து’ என்பார்கள். உண்மையில் புத்தகம் படிக்கும் பழக்கம் இன்றைய எல்,கே,ஜி (அ) அன்றைய முதல் வகுப்பிலிருந்தேயல்லவா ஆரம்பிக்கிறது? பாடப் புத்தகங்களை எல்லாம் யாரும் புத்தகக் கணக்கில் சேர்ப்பதில்லை போலும்... என்ன கொடுமை சரவணன்? நான் சொல்ல வந்த ஒரு விஷயத்தை விண்டுரைத்துவிட்டு மற்றதற்குப் போகலாம், ஒரு புத்தகம் என்னவெல்லாம் மாயம் செய்யும் தெரியுமா...? அறிஞர் அண்ணா போன்ற மேதைகள் படித்த புத்தகங்கள் அவர்களின் அறிவை வளர்த்திருக்கின்றன... அதைப் போல இன்றும் பலர் பலன் பெற்றிருக்கக் கூடும். ஆனால் நான் சொல்வது பொதுவான வெகுஜன மக்களைப் பற்றி ஐயா... நானறிந்த வரையில் ஒரு மனிதனைப் பொய் சொல்ல வைக்க புத்தகங்களைப் போன்ற சிறந்த சாதனம் வேறு ஒன்றில்லை.

புத்தகங்களைப் படித்து ரசித்துவந்த நான் அத்துடன் நின்றிருக்கலாம். விதி யாரை ஐயா விட்டது...? ‘சரிதாயணம்’ என்ற புத்தகத்தை நாஆஆனே எழுதி வெளியிட்டேன். அதைக் கடைகளில் விறறதைத் தவிர சில வி.ஜ.பி.க்களிடமும் நண்பர்களிடமும் தந்து படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். நண்பர்களில் சிலர் (வேறுவழி? அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கே!) படித்துவிட்டு கருத்துச் சொன்னார்கள்.. மற்றையோரெல்லாம்... “எங்க ஸார்...? டயமே கிடைக்கறதில்லை... அடுத்த மாசம் என் சித்தி பெண் கல்யாணம் வருதில்ல... அது முடிஞ்சதும் தான் படிக்கணும்...” என்றும் அடுத்த மாதம் ச்ந்தித்தால், “எலெக்ஷன் டூட்டி போட்ருக்கான் பிரதர்... நீங்க நல்லா எழுதியிருப்பீங்க(?) அதனால் இந்த அமளியெல்லாம் ஓய்ஞ்சதும் படிக்கலாம்னு இருக்கேன்” என்றும் விதவிதமாகப் பொய் சொல்கிறார்கள். மற்றும் சிலரோ... “உங்க புத்தகத்தை எங்க பெரியப்பா வாங்கிண்டு போனார். படிச்சுட்டு ரொம்ப நல்லாருக்குன்னு அவரோட ஒண்ணு விட்ட தம்பியோட மச்சினருக்கு படிக்கக் கொடுத்திருக்காராம். வந்ததும் படிக்கணும்” என்பர்.. இவ்விதம் டிசைன் டிசைனாக பொய்களைக் கேட்டாலும், இப்படியாவது என் புத்தகம் ஊர் சுற்றுகிறதே என்று (அல்ப) திருப்திப்பட்டுக் கொள்கிறேன் நான்,

எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம் நண்பனாகப் பழக ஆரம்பித்த புதிதில் ஒருமுறை அவரிடம். ”உங்களோட ‘எவரெஸ்ட் தொட்டுவிடும் தூரம்தான்’ புக் ஒண்ணு கொடுங்க ஸார்... படிச்சுட்டுத் தரேன்” என்றேன். அவர். “என்கிட்ட அதோட காப்பி ஒண்ணுகூட இல்ல கணேஷ். ரிலேடிவ்ஸும் ப்ரண்ட்ஸும் படிக்க கேக்கறப்ப குடுததுடறேன். என்கிட்ட புத்தகம் வாங்கிட்டுப் போனவர்கள் வாங்கிட்டுப் போனவர்களே... ஒண்ணுகூட திரும்பி வந்ததில்லை” என்றார். புத்தகங்களைப் படிக்க வாங்கிச் சென்று அதைச் சொந்தமாக்கிக் கொள்வதில் இருக்கும் குஷி என்னவாக இருக்கும் என்பது எனக்குப் புரியத்தான் இல்லை. பின்னாளில் என்னிடம் சாண்டில்யனின் ‘நீலரதி’ நாவலை இரவல் வாங்கிச் சென்ற ஒரு நண்பரை தொடர்ந்த (அவரின்) வெளியூர்ப் பயணங்களால் அடுத்த ஆண்டுதான் சந்திக்க நேர்ந்தது. அப்போது புத்தகங்களைப் பற்றி பேச்சு வருகையில். “நல்ல நல்ல புத்தகங்கள்தான் ஸார் நம்ம சொத்து. நான் நிறையச் சேத்து வெச்சிருக்கேன், நீங்க சாண்டில்யனோட ‘நீலரதி’ படிச்சிருக்கீங்களோ... சூப்பரான கதை. என்கிட்ட இருக்கு. வேணா எடுத்துட்டுப் போயி படிங்க” என்றார் கூலாக. அவ்வ்வ்வ்! அந்த பிரகஸ்பதி புத்தகத்தை இரவல் வாங்கினதையே மறந்துடுச்சா. இல்ல... பண்ணன்டு வருஷம் (தானே?) குடியிருந்தா அவனுக்கே வீடு சொந்தம்னு சொல்ற மாதிரி ஒரு வருஷம் தன்கிட்ட இருந்ததால தன் புத்தகமா கன்வர்ட் பண்ணிக்கிச்சோ தெரியல....

இப்படி எந்தப் புத்தகத்தையும் படிக்காமலேயே படித்ததாக பீலா விட்டுக் கொள்வதற்காக இரவல் புத்தகங்களாக தன் மேஜையில் அடுக்கி வைத்திருக்கும் பேர்வழிகள் ஒரு ரகம் என்றால்... புத்தகங்களை விற்பனை செய்பவ்ர்கள் இருக்கிறார்களே... அவர்கள் தனிரகம். நிலையான ஒரு வேலை இல்லாமல் மதுரையில் வாழ்ந்த நாளில் பணப்பற்றாக்குறை நிரந்தரம் என்கிற காரணத்தால்.. நியூசினிமாவுக்குப் பின்புறம் உள்ள சந்தில் போய் பழைய புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை கைக்கொண்டிருந்தேன். அந்தப் புத்தகம் விற்கும் ஆசாமிகள் இருக்கிறார்களே... புததகங்களை மட்டுமா எடை போடுகிறார்கள்..? ஓரிரு முறை சென்று வந்ததிலேயே என்னைக் கண்டதும். என் ரசனைக்குத் தீனி போடும் புத்தகங்களை தனியாக எடுத்துக் கைகளில் திணிப்பார்கள். வாங்காமல் வர முடியாது உண்மையில் அரிய பல பொக்கிஷப் புத்தகங்களை அங்கிருந்து நான் கைப்பற்றியிருக்கிறேன். இன்றைக்கு அந்தக் கடைகளெல்லாம் வழக்கொழிந்து விட்டன - வாரப்பத்திரிகைகளில் தொடர்கதைகள் வழக்கொழிந்து விட்டதைப்போல! 

புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்கின்ற சுகத்தை யானும் அனுபவிக்க வேண்டி நண்பர்களிடமிருந்து ஓரிரண்டு புத்தகங்களை வாங்கி வந்ததுண்டு. அதென்னமோ எனக்கென்று ஒரு ராசி பாருங்கள்... நான் கொடுக்க வேண்டியவர்களெல்லாம் கரெக்டாகக் கேட்டு வாங்கி விடுகிறார்கள்... எனக்குக் கொடுக்க வேண்டியவர்கள் மட்டும் கொடுக்கிறார்கள் - அல்வா! அவ்வ்வ்வ்!  போகட்டும்... அவர்களால் அல்லவோ ‘புத்தகத்தை வாங்கினா ஒழுங்காப் படிச்சுட்டுக் கொடுத்துடுவான் கணேஷ்’ என்கிற நற்பெயரைப் பெற்றிருக்கிறேன். அதற்காகவேனும் அவர்கள் மகாராஜன்களாக இருக்கட்டும்!

மேற்சொன்ன விஷயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க... புத்தகங்களால் அவை படிக்கப்படுபவருக்கு உதவுவதைத் தவிர பிஸிக்கலாக என்னென்ன உபயோகங்கள் இருக்கின்றன தெரியுமா..? சுமார் அறுநூறு பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்தை அதன் மேலே துண்டை விரித்து என் நண்பர் ஒருவர் தலையணையாகப் பயன்படுத்தி அனந்த சயனத்திலிருக்கும் பெருமாள் போலப் பள்ளி கொண்டதை நான் கண்டதுன்டு. பிறிதொரு சமயம் அதேபோன்ற கனமானதொரு புத்தகத்தை ஏவுகணையாகப் பயன்படுத்தி சரிதா என்னைத் தாக்கியபோது அதிலிருந்து நான் தப்பியதுண்டு, ஒருசிலரோ... காகிதங்கள் பறக்காமலிருக்க புத்தகங்களை பேப்பர் வெயிட்டாகக் கருதி உபயோகப்படுத்தியதையும் கண்டதுண்டு. சமீபத்தில் என் நண்பரொருவர் வீட்டிற்குச் சென்றபோது புத்தகங்களின் மற்றொரு பயனையும் கண்ணாரக் கண்டு ஆனந்திக்க நேர்ந்தது ஐயா... அவர் அமர்ந்திருந்த சேருக்கு எதிரில் கம்ப்யூட்டர் இருந்த டேபிளின் நான்கு கால்களில் ஒன்றின் கீழ்ப்புறம் உடைந்து விட்டிருக்க... அதற்கு நான்கு புத்தகங்களை வைத்து அண்டைக்கொடுத்து நாற்காலியை நிமிர்த்தி வைத்திருந்தார் நண்பர்! அவ்வ்வ்வ்!

புததகங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் நாளெல்லாம் புலம்ப, ஸாரி, பேசக் கூடிய ஆசாமி நான்,. ஆனால் நீங்கள் பொறுமையிழந்து புத்தகத்தாலேயே அடிக்கக்கூடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஊசி (பின்) குறிப்பு : தற்சமயம் தேவன் அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்றைப் படித்து வருகிறேன். அதில் அவர் எழுதியிருப்பது போன்ற அக்கால நடையிலேயே ஒரு கட்டுரை எழுதிப் பார்த்தாலென்ன என்ற (விபரீத) ஆசையின் விளைவே மேலே நீங்கள் படித்தது. கான தேவனாடக் கண்ட வான்கணேஷ்! ஹி.... ஹி... ஹி...!

74 comments:

  1. தங்களின் அனுபவங்கள் அனைத்தையும் நானும் அனுபவித்துள்ளேன் நண்பரே.
    பழைய புத்தகக் கடையினைப் பற்றி தாங்கள் கூறியது உண்மையிலும் உண்மை. அது ஒரு தங்கச் சுரங்கம்தான்.

    ReplyDelete
    Replies
    1. என்னை ஆமோதித்து ஊக்கம் தந்த உங்களுக்கு உளங்கனிந்த நன்றி.

      Delete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  3. உங்களிடமிருந்து பல நாட்களுக்கு முன்பு வாங்கிய எப்படி கதை எழுதுவது, ஒரு கிராம் துரோகம் ஆகிய இரண்டு புத்தகங்களும் என்னிடம்தான் இருக்கின்றன வாத்தியாரே. சீக்கிரம் படித்துவிட்டு கொடுக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. புத்தகத்தைப் பத்தின பொதுவான கட்டுரையா எழுதினா இப்படியா பப்ளிக்ல ஸ்டேட்மெண்ட் விட்டு நீ ஸ்கூல் பையன்கறத நிரூபிக்கறது? எனக்கொண்ணும் அவசரமேயில்ல லேய்...

      Delete
    2. நண்பா, ஒரு கிராம் துரோகம் என்னுடையதுன்னு நினைக்கிறேன்.. :)

      Delete
    3. ஆரியக்கூத்தாடினாலும் கோவை ஆவி... புக்குல கண் வையடா கோவை ஆவி... நீங்க சொன்னது சரிதேங் ஆவி. உம்ம புக் உமக்கே வந்திரும்.

      Delete
  4. நீங்கள் சொல்வது சரி தான்... புத்தகம் நொந்து நூடுல்ஸாக திரும்பி வந்தா[ல்]லும், ஆழ்ந்து படித்துள்ளார்கள் (நம்புவோம்) எனும் திருப்தி தான்...

    ஸ். பை. அவர்களின் நேர்மை பிடிச்சிருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.

      Delete
  5. # கான தேவனாடக் கண்ட வான்கணேஷ்! ஹி.... ஹி... ஹி.#
    நாங்க 'மானாட மயிலாட' மட்டும் ரசிக்கிறவங்க இல்லை ,அதோட நடுவர்களையும் ரசிக்கிறவங்க ...இந்த வான்கோழி ஆட்டமும் பேஷ் பேஷ் நல்லாயிருக்கு!
    நம்ப மதுரை பழைய புத்தகக் கடையில் முன்பு போல் நமது ரசனைக்குரியவை கிடைப்பதில்லை ,முழுக்க முழுக்க இஞ்சினியரிங் ,கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மட்டும்தான் !
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. மதுரை மட்டுமில்லை பகவர்ன்ஜீ... நெல்லையில் ரெட்டையடுக்கு பாலத்திற்கு கீழே, திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் என்று பல பேவரைட் பழைய புத்தகக்டைகள் வைத்திருந்தேன். எதுவும் இன்றில்லை. எல்லாம் நீங்க சொன்ன மாதிரி பாடபுத்தக கடைகளாக மாறிவிட்டன. வாட் டு டூ..? இந்த வான்கோழி ஆட்டத்தையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. டீக் கடையாண்ட பேப்பரு பாக்றதுதாம்பா (நல்லா நோட்டு பண்ணிக்க வாத்யாரே... பாக்றதுதான்... படிக்றது இல்ல) நம்ப லெவலு புக் படிப்பு...! இனிமே காண்டி "இந்த புக் இன்னார்ட்ட இர்ந்து சுட்டுக்கினது..." ன்னு அல்லா பேஜுலயும் எய்தி வுட்ருபா...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. அய்... இது நல்ல ரோஜனையாக் கீதே... படா டாங்ஸுப்பா...!

      Delete
  7. நல்ல நடை கணேஷ். புத்தகங்கள் மனைவி மாதிரி - அதை யாரிடமும் தருவதில்லை என என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்..... :))

    அது சரி - நான் உங்க கிட்ட ஏதாவது புத்தகம் வாங்கி திருப்பி தரவில்லை எனில் சொல்லி விடுங்கள். தந்து விடுகிறேன்! :))))))

    ReplyDelete
    Replies
    1. நல்லாச் சொல்லியிருக்காரு நண்பரு. நம்ம அரசன் புத்தகங்களை காதலிகள்னு சொல்வாரு தெரியுமா? எனக்கு நீங்க எதுவும் தர வேண்டியதில்ல... ஹி... ஹி... ஹி... மிக்க நன்றி.

      Delete
  8. //என்ன கொடுமை சரவணன்// சரவணனை சரவணராக ப்ரொமோட் செய்தாயிற்று வாத்தியாரே :-)

    //நான் கொடுக்க வேண்டியவர்களெல்லாம் கரெக்டாகக் கேட்டு வாங்கி விடுகிறார்கள்... எனக்குக் கொடுக்க வேண்டியவர்கள் மட்டும் கொடுக்கிறார்கள் - அல்வா! // சேம் பிளட் வாத்தியாரே

    ஹா ஹா நினைச்சேன் இதுல எதோ டகால்டி இருக்குன்னு.. நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. //சரவணனை சரவணராக ப்ரொமோட் செய்தாயிற்று வாத்தியாரே :-)//

      ஸ்கூல் பையனை ஸ்பை என்று ப்ரொமோட் செய்தது போலவா? ஹிஹிஹி...

      Delete
    2. ஸ்கூல்பையன் ஸ்.பை. ஆனது பரிணாம வளர்ச்சிப்பா... ஹெஹ்ஹெஹ்ஹெ...! டகால்டி எதுவும் இல்ல சீனு... இது சும்மா உட்டாலக்கடி.

      Delete
  9. 1997-98ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள பாலத்துக்கு அடியில் சில பழைய புத்தகக்கடைகளில் நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். பாதி விலைக்கு நிறைய நாவல்கள் அள்ளிச் சென்றிருக்கிறேன். இப்போது அந்தக் கடைகள் இருக்கின்றனவா தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அந்த ரெட்டையடீக்குப் பாலத்தின் கீழேயும் ரயில்வே ஸ்டேஷன் எதிரிலும் நானும் நிறையப் புத்தகங்களை கைப்பற்றியதுண்டு ஸ்.பை. இப்போதும் அவை இருக்கின்றன. இருந்தாலும் பொக்கிஷங்கள் எதுவும் கிடைக்காது. பெரும்பாலும் பாடப்புத்தகங்கள்தான். பழைய சிறப்பு போய் நானாச்சு.

      Delete
  10. //பாலத்துக்கு அடியில் சில பழைய புத்தகக்கடைகளில் நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்.//

    பாவம் அந்த வியாபாரி. பாலத்துக்கு கீழிருக்கும் ரோட்டில் விற்காமல் எதற்கு பாலத்துக்கு அடியில் தொங்கிக்கொண்டு வியாபாரம் செய்தாரோ? என்னே இறைவனின் சோதனை.

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு!என்னவோ,வாங்கிச் செல்லும் ஆசாமிகள்(!)படித்துப் பயன் பெற்றால் போதும் என்று நினைத்து,ஆசுவாசப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் நண்பரே... பல நேரங்களில் அப்படித்தான் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேர்கிறது. படித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  12. //எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம் நண்பனாகப் பழக ஆரம்பித்த புதிதில் ஒருமுறை அவரிடம். ”உங்களோட ‘எவரெஸ்ட் தொட்டுவிடும் தூரம்தான்’ புக் ஒண்ணு கொடுங்க ஸார்... படிச்சுட்டுத் தரேன்” என்றேன். //


    எங்காவது கி​டைத்தால் ​தெரிவிக்கவும்... கிட்டத்தட்ட இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊர் நூலகத்தில் வாசித்தது. இப்​போது ப​ழைய புத்தக க​டை, ​​சென்​னை புத்தக காட்சி வ​ரை ​தேடி வருகி​றேன். கி​டைக்கவில்​லை.

    ReplyDelete
    Replies
    1. அட... என்னைப் போல் ஒருவன்..! நானும் அதை வேட்டையாடித்தான் வருகிறேன். சிக்கினால் நிச்சயம் தெரிவிக்கிறேன் நண்பரே... மிக்க நன்றி.

      Delete
  13. ஹஹஹா.. உங்க ஞாபகார்த்தமா வச்சிருப்பாங்க ஸார்.. அது சரி நான் கூட உங்க கிட்ட ஏதோ வாங்கி வந்ததா ஞாபகம்.. ;-)

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா? :)

      Delete
    2. ஞாபகார்த்தமா... இப்படிக்கூட பார்க்கலாம் போலருக்கு இந்த விஷயத்தை.. பட் உன்கூட எப்பவும் நானே இருக்கறதால ஞாபகார்த்தம் தேவைப்படாது கண்டுக்கினியா ஆவி?

      Delete
  14. அண்ணா இதே போன்ற அனுபவம் எனக்கும் நிறைய உண்டு... இரவல் கொடுத்த ஒரு புத்தகம் நெருப்புக்கு இரையான அனுபவமும் உண்டு... என்ன செய்ய எதுவும் செய்யவோ சொல்லவோ இயலவில்லை :(

    ReplyDelete
    Replies
    1. ஒரு புத்தகத்துக்கா இத்தனை ஆர்ப்பாட்டம் என்று கேட்பார்கள். எதுவும் செய்யத்தான் முடிவதில்லை ப்ரியா... மகிழ்வுதந்த வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைய நன்றி.

      Delete
  15. இரவல் கொடுத்து நான் தொலைத்த நூல்கள் ளராளம்!

    ReplyDelete
    Replies
    1. அடாடா... உங்களின் அனுபவத்திலும் இதே நிகழ்ந்துள்ளதா...? விந்தைதான் ஐயா... மிக்க நன்றி.

      Delete
  16. //கான தேவனாடக் கண்ட வான்கணேஷ்....// நன்றாகவே ஆடியிருக்கிறீர்கள்! புத்தகங்களின் பயன்கள் அதுவும் கடைசியில் சொன்ன (நாற்காலியின் நான்காவது கால்!) கொஞ்சம் ஓவர் என்றாலும் (அவர் செய்தது) வாய்விட்டு சிரிக்க வைத்துவிட்டது.
    அனாயாசமான நகைச்சுவை!

    ReplyDelete
    Replies
    1. அனாயாசமான நகைச்சுவை என்று சொல்லி இந்த வான்கோழி ஆட்டத்தை ரசித்து என் எழுத்துக்குத் தெம்பூட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  17. புத்தகம் படிக்கத் தொடங்கினால் தூக்கம் வருகிற ஜாதி நான்! உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. மதுரை நியூ சினிமா தியேட்டர் சுற்றி எத்தனை ப.பு. கடை இருக்கும்! நான் இரவல் புத்தகம் வாங்கினாலும் திருப்பிக் கொடுத்து விடுகிற ஜாதி!

    ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது உங்கள் பதிவு தலைப்பைப் படித்து...

    "புத்தம் புதிய புத்தகமே... உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்.."

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாரும் ச.தேவியும் விழுதுகளில் ஊஞ்சலாடியபடி பாடும் அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் ஸ்ரீ. புத்தகங்களைப் பற்றி எழுதலாம் என்று துவங்கியதுமே அந்தப் பாட்டு தலைப்பாக மனதில் வந்து நின்றது. என் அலைவரிசையில் என்றும் நீங்கள் இருப்பதில் கொள்ளை கொள்ளையாய் மகிழ்வுடன் நன்றி.

      Delete
  18. நாம் எழுதிய புத்தகங்களைப் படித்துக்கருத்துக் கூறுவார்களென்று எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நானும் உங்கள் புத்தகத்தை வாங்கி வைத்து இன்னும் படிக்காமல் உங்களுக்கு ஏமாற்றத்தைத் தந்த பாவியாகவல்லவா ஆகிவிட்டேன். விரைவில் படிச்சுட்டு கருத்து சொல்றேன் ஐயா... மிக்க நன்றி.

      Delete
  19. ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள், அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்.
    - அரேபியப் பழமொழி

    ReplyDelete
    Replies
    1. இனி நான் பெரிய முட்டாளாக நடந்து கொள்ளப் போவதில்லை... அதுசரி... இப்படி என்னை மறைமுகமாத் திட்டணும்னு எத்தனை நாளாத் திட்டம் தம்பீ?

      Delete
  20. http://kathirvalaipoo.blogspot.in/2014/04/blog-post_22.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன். புத்தக மொழிகளை மிக ரசித்தேன். கருத்திட்டேன்.

      Delete
  21. // ‘புததகாலெப்சி’யால் // பு"த்"தகாலெப்சி’யால் ?

    //ஸ்ட்ராங்கர்க // ஸ்ட்ராங்காக ?

    நிறைய இடங்களில் மெய்யெழுத்துப் பிழைகள் தெரிகின்றதே அண்ணா ... வேண்டுமென்றேவா ? இல்லை கவனிக்கவில்லையா ?

    //அதில் அவர் எழுதியிருப்பது போன்ற அக்கால நடையிலேயே ஒரு கட்டுரை// - இதுதான் பதிலா ?









    ReplyDelete
    Replies
    1. இல்லை ஜீவன்... இன்று பதிவிடும் எண்ணம் இல்லாமல் நேற்று ஸ்.பை.யை சந்தித்தபோது அவர் என்னிடமிருந்து பதிவை எதிர்பார்ப்பதாகச் சொன்னார். சரி, நம்ம பயலோட நம்பிக்கையை கெடுக்க வேணாமேன்னுட்டு நைட் இந்த விஷயத்தை யோசிச்சு டைப்பினதுல தூக்கக் கலக்கத்துல இப்படி மெய்யெழுத்துப் பிழைகள் நேர்ந்துட்டுது. இனி உஸாரா இருப்போம்ல... சுட்டியதற்கு மிக்க நன்றி.

      Delete
  22. புத்தகம் வாசிப்பது , புத்தகம் படிப்பது எது சரி ?

    அல்லது வாசிப்பதற்கும் , படிப்பதற்குமான வேறுபாடு என்னவென்று யாரேனும் சொலுங்களேன் ...

    @ கும்மி பாய்ஸ்

    மேலே நான் போட்டிருக்கும் அனைத்து ஊசி ஊட்டங்களும் கலாய்த்தலுக்காக போடப்பட்டதல்ல ... ஆகையால் கும்மிவிடாதீர்கள் please :)

    ReplyDelete
    Replies
    1. படித்தல், வாசித்தல் இரண்டுமே ஒரே செயலைக் குறிக்கும் வார்த்தைகள். படித்தல் என்பது மேலோட்டமாகப் படித்துவிட்டுக் கடந்து சென்று விடுதல்... உதா. மாத நாவல்கள். வாசித்தல் என்பது படித்துவிட்டு அதன் கருத்தை மனதில் பதித்துக் கொள்ளுதல். உதா. திருக்குறள். இந்த விளக்கம் நானா யோசிச்சப்ப தோணிச்சு. கரீக்ட்டான்னு கேட்டா தெரியாதுப்பா. மிக்க நன்றி.

      Delete
    2. படித்தலுக்கும் வாசித்தலுக்கும் பல வித்தியாசங்கள் ஜீவன் ஜீ. Difference between studying and reading is the result of படித்தல் மற்றும் வாசித்தல். பாட புத்தகத்தை படிக்க முடியுமே தவிர வாசிக்க முடியாது. கதை புத்தகத்தை வாசிக்க முடியுமே தவிர படிக்க முடியாது. படித்தல் மனனம் செய்தல். வாசித்தல் - உறு தட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதைப்போலவே இசையை கேட்டலுக்கும் கவனித்தலுக்கும் இருக்கும் வித்தியாசம். Are you hearing songs or listening songs...? you can do any one at a time not both.

      பால கணேஷ் ஜீ சொன்னது தலைகீழ். மாற்றிபோட்டால் உத்தமம்.

      Delete
    3. இந்த விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை!ஏனெனில்,இரண்டுமே நாம் கற்கும் போது செய்வது தான்.வாசிப்பு என்றொரு பாடமே இருக்கிறது/இருந்தது.ஒரு பத்தியை வகுப்பறையில் ஆசிரியர் வாசிக்க சொல்வார்.இடை நடுவில் நிறுத்தி விளக்கம் கொடுப்பார்.///படிப்பது.....வீட்டில்/வகுப்பறையில் ஆழமாக நமக்குள்,நாமே ஊன்றிப் படித்து,மூளைக்குள் ஏற்றுவது.இரண்டுமே ஒரே பொருள்.இயக்கங்கள் வேறு.////இதனை விடவும்,நீங்கள் கூறிய மேலோட்டமாகப் படித்துவிட்டுக் கடந்து சென்று விடுதல்............என்பதை நாம் 'மேய்வது' என்று சொல்வோம்.அதாவது,ஒரு பசு எப்படிப் "புல்" மேய்கிறதோ அப்படி என்று பொருள் கொள்ளலாம்!Ha!Ha!!Haa!!!

      Delete
  23. இரவல் கொடுத்த புத்தகங்கள் எல்லாமே காந்தி கணக்கில் சேர வேண்டியது தான்.. கணேஷ் சார் , புத்தகத்தை எப்படியெல்லாம் உபயோகப்படுகிறது என்று நீங்கள் சொல்வது நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்துக் கருத்திட்டு மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  24. //உங்களுக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் எப்போதிருந்து ஏற்பட்டது?” என்று யாரையேனும் கேட்டுப் பாருங்கள்... ‘காலேஜ் டேஸ்லயிருந்து’ அல்லது ‘ஸ்கூல் டேஸ்லருந்து’ என்பார்கள். உண்மையில் புத்தகம் படிக்கும் பழக்கம் இன்றைய எல்,கே,ஜி (அ) அன்றைய முதல் வகுப்பிலிருந்தேயல்லவா ஆரம்பிக்கிறது?//
    அஃமார்க் மின்னல் வரிகள்
    ரசித்து படித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததைக் குறிப்பிட்டுப் பாராட்டி மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி முரளி.

      Delete
  25. எனக்கும் புத்தகம் இரவல்கொடுத்து பறிபோனகதை இருக்கு. உங்க வரிகள் எல்லாம் ரசிச்சேன் கணேஷ்...

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தை ரசித்து எனர்ஜி டானிக் தந்த அக்காவுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  26. அருமையான பகிர்வு கணேஷ் ஐயா.

    நான் புத்தகங்கள் வாங்கியதும் முழுமையாக ஒரு முறை வாசித்து விடுவேன். பிறகு யார் கேட்டாலும் கொடுத்துவிடுவேன்.
    ஆனால் நான் எழுதிய ஆறு புத்தகங்களில் மூன்று என்னிடமே இல்லை. யாரிடமாவது இருந்தால் சற்று கொடுங்களேன்.... என்று கேட்டாலும் கிடைக்கவில்லை. பிரசுரத்திலே கேட்டாலும் கிடைக்கவில்லை..... ம்ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. அடாடா... மூன்று புத்தகங்கள் உங்களிடமே காப்பி இல்லை என்பது வியப்புதான். என்க்குக் கிடைத்தால் சொல்கிறேன் அருணா... மடித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  27. வாவ்... ரொம்ப நகைசுவையோட நிறையபேர வாரிடீங்க!!! நாமும் புத்தகம் கொடுத்து வாங்காம இப்போ மறந்தும் போயிருக்கேன் ....

    இந்த பதிவை பார்த்ததும் உங்க பழைய புத்தக கடன் எல்லாம் பைசல் ஆகபோகுது பாருங்க!!!

    ReplyDelete
  28. புத்தகம், வாசிப்பு, இரவல் என்று சுற்றி சுற்றி புத்தகங்களை மையமாக வைத்து ஒரு சுவாரசியமான பதிவு. பலருக்கும் பொதுவான சில அனுபவங்களால் இன்னும் சுவாரசியக் கூடுதல். வான்கணேஷின் எழுத்துநடையை நானும் ரசித்தேன். பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
  29. நல்ல பதிவு ஜி.. நமது புத்தகத்தை கண் முன்னே அட்டையை மடித்து அடுத்தவர் படிக்கும் போது மிகவும் வலித்திருக்கிறது...

    ReplyDelete
  30. After reading this post, one incident struck my mind immediately. Some years back, one student was arrested here for having a mini library in his house comprising of valuable books stolen from the local university library.

    ReplyDelete
  31. ஆமாம்.... நானும் என் சிறு வயதில் பழைய புத்தகக்கடையில் நிறைய புத்தகங்கள் பாதி விலையில் வாங்கியிருக்கிறேன். இப்போது அந்தக் கடைகளெல்லாம் இல்லை. கிளறிய நினைவுகள்

    ReplyDelete
  32. இந்த அனுபவங்கள் இல்லாதவங்களே கிடையாதுனு நினைக்கிறேன். இப்போச் சென்னையிலிருந்து ஶ்ரீரங்கம் வரச்சே நானே என் புத்தக சேமிப்பில் இருந்து பல புத்தகங்களை மாம்பலத்தில் இருக்கும் ஒரு லென்டிங் லைப்ரரிக்குக் கொடுத்தேன். :)

    ReplyDelete
  33. புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் வரும் தூக்கமே எனக்குப் போயிடும். :))) இதைப் பலரும் நான் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்வதாக நினைச்சுட்டு இருக்காங்க. :))))

    தேவன் புத்தகங்கள் முழுதும் படிங்க. தேவனின் நகைச்சுவை அருமையாக இருக்கும். ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ஶ்ரீமான் சுதர்சனம்(பொதிகையில் தொடராகவும் வந்தது), மிஸ்டர் வேதாந்தம், (தொடராகப்பொதிகையில் வந்தது, சொதப்பல், எல்லாம் சித்ராலயா தயாரிப்புத் தான், சிவி.ராஜேந்திரன் இயக்கம்னு நினைவு) லக்ஷ்மி கடாக்ஷம், கல்யாணி, மிஸ் ஜானகி, கோமதியின் காதலன், சிஐடி சந்துரு, புகழ் பெற்ற துப்பறியும் சாம்பு, ராஜத்தின் மனோரதம், சுந்துவுக்கு எழுதிய கடிதங்கள், மல்லாரி ராவ் கதைகள்னு இருக்கு.

    ReplyDelete
  34. புத்தகம் வாசிப்பது என்பது தென்மாவட்ட வட்டாரச் சொல், படித்தல் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தது. மதுரையில் எல்லாம் இப்போதும் புத்தகம் வாசிக்கத் தான் வாசிப்பாங்க. :)))))

    ReplyDelete
    Replies
    1. அதே போல மதுரையில் பாட்டெல்லாம் படிப்பாங்க... பாட மாட்டாங்க...!!! :))))

      Delete
    2. அட, ஆமாங்க, பாண்டி நாட்டிலேயே பாட்டுப் படிக்கத் தான் செய்வாங்க. :)

      Delete
    3. தமிழகத்தின் பெரும்பாலான நூலகங்களில் மெளனமாக வாசிக்கவும் என்று தான் எழுதபட்டிருக்கும், எல்லா தொலைகாட்சிகளிலும் செய்திகள் வாசிப்பது என்று தான் தொடங்குகிறார்கள். வட்டார வழக்கையும் தாண்டிய சொற்கள் இவை என்றே கருதுகிறேன்.. வட்டார வழக்கால் பயன்பாடு மருவி விட்டது. எனக்கு இவ்விவாதம் நல்லதொரு தேடல்.

      Delete
  35. பாலகணேஷர்,

    வாசிப்பு, படித்தல் இரண்டுமே வடமொழி மூலச்சொல் கொண்டவை என்கிறார்கள்..

    padhana - என்றால் இந்தியில் படித்தல் ,அதில் இருந்து தான் தமிழில் வந்துள்ளது.

    vasagam - வார்த்தை - வாசிப்பு என அதுவும் வடமொழியே.

    திருவாசகம் போன்ற பக்தி இலக்கியக்காலங்களில் வடமொழி தமிழில் கலந்து உருவானவை , இச்சொற்கள்.

    சங்கத்தமிழில் , படிப்பதை ஓதுதல் என்றே சொல்கிறார்கள்,

    அவ்வையார்,

    ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் , ஓதுதல் ஒழியேல் என்கிறார்.

    நச்சினார்க்கினியர் ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ்செய்தல் என அரசனுக்கு உரிய ஐவகை கடமைகளில் 'ஓதுதல்" -படித்தல் செய்ய வேண்டும் என்கிறார்.

    ReplyDelete
  36. அப்புறம் வாசிப்பு எனில் பார்த்து,உச்சரித்து ,பொருட்கொள்ளல் ஆகுமாம்

    வாய்விட்டு படிப்பது வாசிப்பு.

    படிப்பது என்பது கற்பிப்பதை"படிப்பது'

    ஆனால் பொழுது போக்காக படிப்பதை சொல்லவும் வேறு சொல் இல்லை அவ்வ்.

    தமிழில் படி என்ற சொல் பல பொருளில் புழங்கி வருது,

    படி -ஸ்டெப்ஸ்

    படி -நகல்,பிரதி

    படி - அலவன்ஸ் - பஞ்சப்படி

    படி - அளக்கும் ஒரு கலம், ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம் ,ஒரு படி நிச்சயம் -))

    படி- read

    read - படி என்பது வடமொழி வகையில் மூலம் இருக்கு.

    padhna ,பாட சாலா போன்ற வடச்சொற்கள் உள்ளதை காணலாம்.

    ReplyDelete
  37. விட்டுப்போச்சு,

    வடமொழி pustak - என்பதே தமிழில் புத்தகம் ஆனது, தமிழில் நூல் ,பனுவல்,ஏடு ஆகியவையே புத்தகத்தினை குறிக்கும்.

    ReplyDelete
  38. ம். எனக்கும் பல புத்தகத்தை இரவல் கொடுத்து வாரக்கணக்கில் காத்திருந்தும் வாராக்கணக்கில் சேர்ந்த புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம். இப்போதெல்லாம் புதிய புத்தகங்கள் வாங்கினால். வாய்தவறி கூட இந்த புக் வாங்கியிருக்கிறேன் என்ற சொல்வதில்லை. புத்தகங்கள் படிப்பதற்குத்தானே என்று நினைத்து கொடுத்தால் அது ஒன்வே ஆகிவிடுகிறது. நல்ல பதிவு. ரசித்தேன் ஐயா..

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube